“நவீன இலக்கிய ரிஷி’
சு. நயினார்
எண்ணத்தையும் எழுத்தையும் உயர்வாகப் போற்றிய வல்லிக்கண்ணன் எழுதுவதும் சொல்வதும் போலவே இறுதிவரை வாழ்ந்தவர். இன்றைய ஆரவாரமிக்க உலகில் ஆடாமல் அமைதியான முறையில் ஓர் எழுத்துப் புரட்சியைத் தோற்றுவித்த படிப்பாளியும் படைப்பாளியுமாவார். இவர் சிரிக்காமல் சிந்தித்து தரமிக்க இலக்கியங்களைத் தமிழுலகிற்கு வழங்கியவர். வல்லிக்கண்ணன் தமிழ் இலக்கிய வகைமைகள் பலவற்றினுள் – வசனகவிதை, புதுக்கவிதை, நாடகம், சிறுகதை, புதினம், வாழ்க்கை, இலக்கிய வரலாறு, இதழியல், மொழிபெயர்ப்பு, குழந்தை இலக்கியம், கட்டுரை – தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தடம் பதித்தவர்.
கொள்கை – கோட்பாட்டிலிருந்து விலகாத வல்லிக்கண்ணன் எழுபத்தைந்து ஆண்டுகளாக இலக்கிய வாழ்வை மேற்கொண்ட “நவீன இலக்கியரிஷி’. இவர் மண்ணின் மனத்தைப் படைப்புகளாக்கினார். புதுக்கவிதை முன்னோடிகள் நால்வருள் ஒருவரான வல்லிக்கண்ணன், அறிவாளிகள் எதிர்பார்க்கும் உன்னதமான படைப்புகள் பலப்பல படைத்தவர். பணத்தையும் புகழையும் விரும்பாதவர். பாரதியின் பாடல்களை நாட்டுடைமையாக்குவதில் சமூகப் பொறுப்பாளியாகச் செயல்பட்ட இவரை எந்த இயக்கமும் ஒதுக்கியதில்லை எனலாம்.
இருபதாம் நூற்றாண்டு இலக்கிய மேம்பாட்டிற்கு இவர் செய்திருக்கும் பணி வரலாற்றில் சுட்டத்தக்கன. சாதி, மத, இன உணர்ச்சிக்கு அப்பாற்பட்ட வல்லிக்கண்ணன் எந்தவொரு நச்சு – நசிவு இயக்கத்திற்காக நின்று இயங்கியதும் – இயக்கியதும் இல்லை. இவர் எழுத்துச் செல்வராக இலக்கிய ரிஷியாக, கவிஞராக, சிறுகதை – புதின ஆசிரியராக, கட்டுரையாளராக, விமர்சகராக, இதழாசிரியராக, வரலாற்றாய்வாளராக, ஒப்பீட்டாளராக, மொழி பெயர்ப்பாளராக… பன்முகத் தன்மையில் தமிழ் இலக்கியப் போக்கினை உணர்த்திய விடிவெள்ளி! பேராண்மை மிக்கவர்! நல்ல நினைவாற்றல் மிக்க இவர் சிறு பத்திரிகைகளின் “தகவல் களஞ்சியம்’ எனில் மிகையன்று! ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு எழுதினாரில்லை! நடப்பியல் உண்மைகளை நயமாக எடுத்துக்காட்டவும் இவர் தயங்கினாரில்லை. நான்கு தலைமுறை எழுத்தாளர்களின் நிலைப்பாடுகளுள் “”வல்லிக்கண்ணனின் ஆளுமை வெளிப்பாடும் விலகல் மனோபாவமும்’ பலருக்கு வியப்பளிக்கும்.
இவருக்கு எவற்றினுள் பற்று ஏற்பட்டதோ அவை இவரது வெளிப்பாடாக மலர்ந்தன. புதுமை இலக்கியம் படைக்கும் எழுத்து, இளம் எழுத்தாளர்களை அரவணைப்பது, வரலாற்று நோக்கு (புதுக்கவிதை, சிற்றிதழ், வாசகர், விமர்சகர்கள் உரைநடை), மறுமலர்ச்சிப்போக்கு, எளிமையை விரும்புதல் போல்வனவற்றுடன் மிகுதியான பற்றுக் கொண்டவர்.
வல்லிக்கண்ணனின் பற்றின்மை: விளம்பரப்புகழ், பணம், மது, குடும்பவாழ்வு, அரசியல் சார்பு, மதம், திரையுலக வாழ்வு, ஜனரஞ்சகப் பத்திரிகை போன்றவற்றில் பற்றில்லாமல் விலகி இருந்த நிலை எண்ணற்குரியது; எவரிடத்தும் இத்தனைப் பற்றின்மைகளைக் காண்பதரிது!
பள்ளியிறுதி வகுப்பை முடித்து 1937-ஆம் ஆண்டில் அரசுப் பணியில் சேர்ந்த இவருக்கு எழுத முடியாத சூழல். அவ்வேலையை உதறித் தள்ளிவிட்டு எழுத்தையே வாழ்க்கையாக்கிக் கொண்ட வல்லிக்கண்ணன் ஒருபோதும் பிற்போக்கு இலக்கியவாதிகளின் தாக்கங்களுக்குட்பட்டு பணம் சம்பாதிக்க வேண்டும்; புகழ் பெற வேண்டும்; வசதியாக வாழ வேண்டும் என்று எண்ணியதோ – செயல்பட்டதோ இல்லை. தனிமரமாக நின்ற வல்லிக்கண்ணன் வறுமையிலே உழன்றாலும் செம்மையாக வாழ்ந்தார். இவர் யாரிடமும் கையேந்தாமல் கொள்கைப் பிடிப்புடன் – வைராக்கியத்துடன் வாழ்ந்த இலக்கியப்பித்தன். பாரதி, புதுமைப்பித்தன் வரிசையில் இவரும் இடம் பெறத்தக்கவராவார். இவரது முதல் பாகச் சுயசரிதம் பலருக்குப் பயனளிக்கும். இராசவல்லிபுரத்தில் 12-11-1920-இல் பிறந்த வல்லிக்கண்ணன் 10-11-2006-இல் இறந்துவிட்டார். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டி, அவரிட்டுச் சென்ற பணியினைத் தொடருவோமாக.