முல்லை பெரியாறு: பிரச்சினைக்குத் தீர்வு
சி.எஸ். குப்புராஜ்
பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 அடி வரை உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும் கூட கேரள அரசு அதனை ஏற்க மறுத்துவிட்டது. கேரள அரசு மறுபடியும் உச்ச நீதிமன்றத்தினை அணுகியபோது, பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டது.
இதற்கிடையில் கேரள முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும், சகல கட்சி உறுப்பினர்களும் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து ஒரு மனு அளித்துள்ளார்கள். அதில் இப்போதிருக்கும் அணையில் 136 அடிக்கு மேல் நீர்மட்டத்தினை உயர்த்தினால் கேரளத்திற்கு ஏற்படக்கூடிய தீமைகளை எல்லாம் மிகைப்படுத்திக் கூறிய பின் அத் தீமைகளைத் தவிர்ப்பதற்குச் சில வழிமுறைகளைக் கூறி இருக்கிறார்கள்.
அவற்றில் ஒன்று, தமிழ்நாடு இந்தப் பழைய காலத்து அணைக்குப் பதிலாக ஒரு புதிய அணை கட்டிக் கொள்ளட்டும். அதற்கு நாங்கள் 1979-80 ஆம் ஆண்டுகளில் நடந்த பேச்சுவார்த்தைகளின்போதே சம்மதம் தெரிவித்துள்ளோம். தமிழ்நாடு ஒன்றுமே செய்யவில்லை. இப்போதாவது அதனை உடனே செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அம் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தமிழ்நாடு ஏற்றுக்கொண்டால் இப்போதிருக்கும் அணையினை ஒட்டினாற்போல அதன் கீழ்ப்புறத்தில் தற்காலத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய அணை கட்டிக் கொள்ளலாம். நில அதிர்வுகள் ஏற்படுவதாகக் கூறி பயமுறுத்துகிறார்களே, அவற்றையும் தாங்கும்படியாக அந்தப் புது அணையினை வடிவமைத்துக் கொள்ளலாம். அவ்வாறு புதிய அணை கட்டிவிட்டால் அதில் 152 அடி வரை பயமின்றி தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம். இப்போது இருக்கும் அணை நீரில் மூழ்கிப் போகும்படி விட்டு விடலாம்.
இந்தப் புதிய அணையினை வடிவமைக்கவும், கட்டி முடிக்கவும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் ஆகலாம். கேரள அரசு இடைஞ்சல் ஏதும் செய்யாமல் ஒத்துழைக்குமானால் இது சாத்தியமாகும். இதற்குப் பல கோடி ரூபாய்கள் செலவாகும். இந்தச் செலவினை ஈடுகட்ட, சில புதிய வசதிகளைத் தமிழ்நாடு பெற வேண்டும்.
இரண்டாவது சுரங்கம் (Tunnel): இப்போது இருக்கும் டன்னல், அதிகப்படியாக வினாடிக்கு 1800 கன அடிதான் செலுத்தக் கூடியதாக இருக்கிறது. இதற்கு ஏற்ப நீர் மின் நிலையத்தில் 35 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நான்கு ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் வினாடிக்கு 400 கன அடி வீதம் மொத்தம் 1600 கன அடி பயன்படுத்தக் கூடியனவாக அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரினைக் கணக்கெடுத்துப் பார்த்தால் சராசரியாக விநாடிக்கு 5000 முதல் 6000 கன அடி வரை தண்ணீர் வருகிறது. எனவே இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளதைப் போன்ற நெருக்கடிகளும், சங்கடங்களும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் மற்றுமொரு டன்னல் தேவைப்படுகிறது.
1955-ம் ஆண்டு பெரியாறு மின் நிலையம் அமைப்பதற்கு ஆய்வுகள் மேற்கொண்ட போது இரண்டாவது டன்னல் அமைப்பதற்கான கூறுகள் ஆராயப்பட்டன. ஆனால் இருக்கும் டன்னலையே மேம்பாடுகள் (Improvement) செய்து அதன் திறனை வினாடிக்கு 1400 கன அடியிலிருந்து 1800 கன அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, இரண்டாவது டன்னல் யோசனை கைவிடப்பட்டது. இப்போது அதற்கு அவசியம் ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது டன்னல் வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் செலுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படலாம். இப்போதிருக்கும் டன்னலில் அடிமட்டம் + 104 அடியாக உள்ளது. இதனால் அணையில் உள்ள நீரின் பெரும்பகுதி பயனற்றதாக (Dead Storage) போய் விடுகிறது. மொத்த கொள்ளளவாகிய 15.54 டி .எம்.சி.யில் 5.04 டி .எம்.சி. வீணாகிறது. 10.5 டி .எம்.சி. தான் பயன்படுகிறது. எனவே இரண்டாவது டன்னலின் அடிப்பாகத்தினை +80 அடியாக அமைத்துக் கொள்ளலாம். வீணாகப் போகும் நீரில் ஒரு பகுதியைப் பயன்படுத்தலாம்.
இரண்டாவது மின் நிலையம்: இரண்டாவது டன்னலின் மூலம் கிடைக்கும் வினாடிக்கு 3000 கன அடி தண்ணீரினைப் பயன்படுத்துவதற்கு இரண்டாவது மின் நிலையம் அமைக்கப்படுதல் வேண்டும். அதில் 60 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து ஜெனரேட்டர்கள் அமைக்கப்படலாம். 300 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கிடைக்கும்.
இரண்டாவது நீர்த்தேக்கம்: இப்போதுள்ள வைகை நீர்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவு 6.8 டி.எம்.சி.தான் உள்ளது. வடமேற்குப் பருவக்காற்று மூலம் மழை வந்து வைகை அணை நிரம்பும்போதுதான் பெரியாறு அணையின் நீரினையும் பெற வேண்டியுள்ளது. கூடுதலாகத் தண்ணீர் வரும்போது இந்தக் கொள்ளளவு போதாது. எனவே புதியதோர் நீர்த்தேக்கம் 8 டி.எம்.சி. கொள்ளளவுடன் அமைக்கப்படுதல் வேண்டும். வைகை அணையின் மேற்புறத்தில் இதற்கான இடத்தினைத் தேர்வு செய்திடல் வேண்டும்.
இவ்வாறு இரண்டாவது டன்னல், இரண்டாவது நீர் மின் நிலையம், இரண்டாவது நீர்த்தேக்கம் ஆகியவற்றினை அமைத்தால் மட்டுமே, பெரியாறு அணையினை ஒட்டினாற்போல் புதிய அணை கட்டுவதற்கான செலவினை நியாயப்படுத்த முடியும். எனவே இந்த நான்கு அமைப்புகளையும் ஒரு தொகுப்பாக நிறைவேற்ற ஒப்புக்கொண்டால், இந்தச் சிக்கலான பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண முடியும்.