Archive for நவம்பர் 27th, 2006
Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006
லண்டன் டைரி: லண்டன் இசைவிழா!
இரா. முருகன்
ஒரு பத்து வருடம் முன்னால், நம் ஊரில் பரபரப்பான பகுதியில் ஒரு கிரவுண்ட் இடம் சும்மா கிடந்தால் என்ன நடந்திருக்கும்? சடசடவென்று ஒரு நாலு மாடிக் கட்டடம் உயரும். கேபிள் டிவியின் விளம்பர நச்சரிப்புத் தாங்காமல் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் பந்து மித்திரர்களோடு அங்கே படையெடுப்போம். இருபது சதவிகித வட்டிக்கு பிக்செட் டெபாசிட். மாதம் ரெண்டாயிரம் ரூபாய்க்கு நகைச்சீட்டு என்று ஆரம்பித்துவிட்டு வெள்ளி முலாம் பூசிய வெங்கடாஜலபதி டாலர், காமாட்சி விளக்கு என்று எதையாவது பரிசாகப் பெற்று பெருமையோடு தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து சேருவோம். அப்புறம் மூன்று வருடம் கழித்து பனகல் பார்க் பெஞ்சில் கூட்டம் போட்டு, போட்ட பணத்தில் முப்பத்திரண்டு சதவீதமாவது கிடைக்க என்ன செய்யலாம் என்று ஆலோசிப்போம். ஒரு கிரவுண்ட் இல்லாமல் இருநூற்றெழுபத்தைந்து ஏக்கர் இப்படிச் சும்மா கிடந்திருந்தால்? அந்த மீட்டிங்கை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடத்த வேண்டியிருக்கும் என்பதைத் தவிர வேறே வித்தியாசம் இருந்திருக்காது.
லண்டனில் ஓர் இருநூற்றெழுப்பத்தைந்து ஏக்கர் செல்வச் செழிப்பு மிகுந்த கென்சிங்டன் பகுதியில் இருநூறு வருடத்துக்கு முன்னால் சும்மா கிடந்தது. அப்போது டிவியும் அதில் விளம்பரமும் இல்லாததாலும், பிரிட்டீஷ் அரச வம்சத்துக்கு இலவச காமாட்சி விளக்கு ஆசை இல்லாத காரணத்தாலும், கென்சிங்டனில் அந்தப் பெரிய நிலப்பரப்பை கொப்பும் குழையும் புல்தரையும் பூச்செடியுமாக மாற்றி, கென்சிங்டன் தோட்டம் என்று பெயர் சூட்டிவிட்டார்கள். ஒரு காலத்தில் இந்தியாவையும் சேர்த்த சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை ஆண்ட விக்டோரியா மகாராணி இந்தத் தோட்டத்தை அடுத்த கென்சிங்டன் அரண்மனையில்தான் பிறந்து வளர்ந்ததாக அறிவிப்புப் பலகை தெரிவிக்கிறது.
கென்சிங்டன் பூங்காவில் இப்படி ஓர் அறிவிப்புப் பலகை கூட விடாமல் படித்துக்கொண்டு நடந்துகொண்டிருக்கிறேன். ஓர் அரை டஜன் மோட்டா சர்தார்ஜிகள் உற்சாகமாகப் பேசிக்கொண்டு, அவ்வப்போது புல்தரையில் குட்டிக்கரணம் அடித்து எழுந்து நின்று முன்னால் நகர்ந்தபடி இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளும் ஒரு பெரிய நாயுமாக வந்த வெள்ளைக்காரத் தம்பதி குழந்தைகளை ஓடக்கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிடுகிறது. அவர்கள் சர்தார்ஜிகளையும் என்னையும் பார்க்கிற பார்வையில் நாங்கள் எல்லோரும் பிள்ளை பிடிக்கிறவர்கள் என்ற பலமான சந்தேகம் தெரிகிறது. குழந்தைகள் அடக்கமாக பூங்கா சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்து சாண்ட்விச் சாப்பிட ஆரம்பிக்க கட்டவிழ்த்து விட்ட அவர்களுடைய நாய் மண்ணில் புரண்டுவிட்டு எதிரில் கால்வாய்க்குள் புகுந்து ஒரு நிமிடம் நீந்தி, திரும்ப ஈரத்தோடு மண்ணில் புரள ஓடிவருகிறது. மேலே விழுந்து பிடுங்குவதுபோல் பாய்ந்த அந்த இங்கிலீஷ் நாயின் பரம்பரையை பஞ்சாப் பாஷையில் திட்டியபடி ஒரு சர்தார்ஜி, நாய்க்கார தம்பதியிடம் நல்ல இங்கிலீஷில் புகார் சொல்கிறார். “நீங்கதான் பாத்து நடக்கணும்’ அந்தம்மா சாண்ட்விச்சில் பாதியை விண்டு நாய்க்குக் கொடுத்துவிட்டு மீதியை வாயில் போட்டுக் கொள்கிறார்.
கென்சிங்டன் பூங்காவில் இருந்து வெளியே வரும்போது பிரம்மாண்டமாக முன்னால் நிற்கிறது ராயல் ஆல்பர்ட் அரங்கம். இறந்துபோன தன் கணவர் ஆல்பர்ட் இளவரசர் நினைவாக விக்டோரியா மகாராணி கட்டியது. இந்திரா காந்தி சர்க்கார் தில்லியில் கவிழ்ந்து அல்பாயுசாக ஜனதா அரசு ஆட்சிக்கு வந்து குஷியாக உள்குத்து நடத்திக் கொண்டிருந்த 1977-ல் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய இந்த ராயல் ஆல்பர்ட் ஹாலில் மேற்கத்திய சாஸ்தீரிய சங்கீத நிகழ்ச்சியிலிருந்து, ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட விழா, அரசியல்வாதிகள், அறிவியல் துறை அறிஞர்களின் சொற்பொழிவு என்று எத்தனையோ இந்த நூற்று முப்பது வருடத்தில் நடந்திருக்கிறது. தற்போது வருடா வருடம் பிரிட்டீஷ் ஒலி, ஒளிபரப்பு நிறுவனமான பி.பி.சி கோடைகால இசைவிழாவான ப்ராம் என்ற ப்ரொமனேட் விழா நடத்துகிறது இங்கேதான்.
ப்ரொமனேட் என்றால் நடந்துகொண்டே இசை கேட்கிறது என்று பொருளாம். ஆல்பர்ட் ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடக்கமுடியாது. ஆனாலும் அரங்கத்தில் நின்றபடிக்கு இசை நிகழ்ச்சியை ரசிக்கலாம். ஒருத்தருக்கு ஒரு டிக்கெட்டுக்கு மேல் கண்டிப்பாக வழங்கப்படமாட்டாது.
நீண்ட க்யூவில் நின்று அன்றைய ப்ராம் நிகழச்சிக்கான நுழைவுச்சீட்டுக்காகக் காத்திருக்கிறேன். பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த இசைக்குழு மேற்கத்திய இசைமேதை மோசர்ட்டின் இருநூற்றைம்பதாவது பிறந்த ஆண்டு நிறைவை ஒட்டி முழுக்க மோசர்ட் இசையமைத்த படைப்புகளை வழங்கும் நிகழ்ச்சி. நாலைந்து வெள்ளைக்காரர்கள் சுறுசுறுப்பாக பிளாக்கில் டிக்கெட் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். சாஸ்திரீய சங்கீதத்துக்கு பிளாக்கில் டிக்கெட் விற்பதை முதன்முதலாக ஆச்சரியத்தோடு பார்க்கிறேன்.
பிளாக்கில் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஒயிட்டிலேயே கிடைத்துவிடுகிறது டிக்கெட். ஐந்தே பவுண்ட்தான் செலவு. மூவாயிரம் பேர் நிற்கிற பெரிய அரங்கத்தில் புகுந்து நானும் நின்றபடி மேடையைக் கவனிக்கிறேன். பிபிசி டெலிவிஷன் காமிராக்கள் அவை பக்கம் திரும்பி அழகான வெள்ளைக்காரப் பெண்களைத் தேடிக்கொண்டிருக்க, நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. சாவு நிகழ்ந்தபோது வாசிக்க ஏதுவாக மோசர்ட் எழுதிய மேசானிக் ப்யூனரல் மற்றும் ரெக்யூம் என்ற இரண்டு படைப்புகள் மேடையேற்றப்படும் என்று அறிவிப்பு தொடர்கிறது.
இருபது வயலின், ஏழெட்டு புல்லாங்குழல், டிரம்பெட், வெள்ளைச் சீருடை அணிந்த பத்து பாடகர்கள், அக்கார்டியன், பியானோ என்று மேடை நிறைந்து சோகமயமான இழவு இசையைப் பொழிய இசைக்குழு நடத்துனர் ஆவேசமாகக் கையை இப்படியும் அப்படியும் அசைத்து இன்னும் உற்சாகமோ சோகமோ படுத்துகிறார். என் பக்கத்தில் ரெக்சின் பையைப் காலடியில் வைத்துவிட்டு ஒரு வெள்ளைக்கார முதியவர் இசைக்குறிப்பு எழுதிய புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொண்டு இசைக்குழு கூடவே மெல்ல வாய்க்குள் பாடியபடி சங்கீதத்தில் முழ்கியிருக்கிறார்.
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது, “”தனிப்பாடல் பாடகிகள்லே ரெண்டு பேர் ஸ்ருதி சேராமக் கஷ்டப்படுத்திட்டாங்க. பின்வரிசை ரொம்ப சுமார்தான்” என்றபடி பக்கத்தில் நடந்தவரிடம் சொன்னபடி வந்தவர் கூறியது அட்சரம் பிசகாமல் அடுத்த நாள் கார்டியன் பத்திரிகை இசை விமர்சனத்தில் வந்திருந்தது.
“”போன மாதம் ப்ராம் நிகழ்ச்சிக்கு லண்டனில் கச்சேரி செய்ய வந்திருந்த கர்னாடக சங்கீத வித்துவான் மணக்கால் ரங்கராஜனைக் கூட்டிப் போனேன்” என்று நண்பர் லண்டன் பத்மநாப ஐயர் சொல்கிறார். சென்னை சங்கீத சீசனில் சபா எதிலும் தட்டுப்படாத மணக்கால் லண்டனில் அண்மையில் அவை நிறைந்த இரண்டு கச்சேரி நடத்தி இருக்கிறார் என்பதை அறிந்து இன்னொரு தடவை ஆச்சரியப்படுகிறேன்.
அடுத்த ஆண்டு டிசம்பர் சங்கீத விழாவில் மேலும் ஆச்சரியகரமாக, லண்டன் ப்ராம் போல் பிரெஞ்சி இசைக்குழு சென்னை மியூசிக் அகாதமியில் மோசர்ட் இசை நிகழ்ச்சி நடத்தலாம். அல்லது லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் நித்யஸ்ரீ கச்சேரிக்கு வெள்ளைக்காரர்கள் ப்ளாக்கில் டிக்கெட் விற்கலாம். இது எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் ஆச்சரியமாக, அகாதமிக்காரர்கள் மணக்கால் ரங்கராஜனுக்கு சங்கீத கலாநிதி பட்டம் வழங்க முடிவெடுக்கலாம்.
Posted in BBC, Era Murugan, Humor, Ira Murukan, Iraa Murugan, Kensington Gardens, London Diary, London Iyer, Mathalarayar, Mozart, music, Orchestra, Padmanabha Iyer, Performance, Raayarkaapiklub, Sangeetha Kalanithi, Sangitha Kalanidhi, Summer, Symphony, Tamil Literature, Travel Notes, UK | 1 Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006
மூலிகை மூலை: அந்தரத் தாமரை
விஜயராஜன்
அடுக்கு அடுக்காய் வைத்தாற்போல இலைகளைக் கொண்டது அந்தரத் தாமரை. நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறு செடி இனமாகும். காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது. இலைகளே மருத்துவக்குணம் உடையவை. உடலிலுள்ள வெப்பத்தைத் தணித்தும், தாகத்தை அடக்கியும், தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகவும் பயன்படுகின்றது. தமிழகம் எங்கும் குளம், குட்டைகளில் தானாகவே வளர்கின்றது.
வேறுபெயர்கள்: அவை, ஆகாயமூலி, ஆகாயத்தாரை.
ஆங்கிலத்தில்: Pistia Steteotes, Linn, Areceae.
மருத்துவக் குணங்கள்:
அந்தரத் தாமரை இலையைச் சுத்தமாகத் தேய்த்துக் கழுவி சாறு பிழிந்து 20 மில்லியளவு எடுத்து அதில் சிறிதளவு வெங்காயத்தைச் சாறு பிழிந்து 2 வேலை குடித்து வர சொருக்கு மூத்திரம் கட்டுப்படும்.
அந்தரத் தாமரை இலையை அரைத்துக் கரப்பான், தொழுநோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டிவர விரைவில் ஆறும்.
அந்தரத் தாமரை இலையை அரைத்து ஆசன வாயில் வைத்துத் தொடர்ந்து கட்டிவர வெளிமூலம், ஆசனக்குத்தல் குணமாகும்.
அந்தரத் தாமரை இலையைச் சாறு பிழிந்து 100 மில்லியளவு எடுத்து அத்துடன் சிறிது எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து இளஞ்சூடாகக் காய்ச்சி சூடு பொறுக்கும் அளவு துணியில் தொட்டு வெளிமூல முளைப்பு, மூல வலி, மூல எரிச்சல் போன்றவற்றிற்கு ஒற்றடம் கொடுக்கக் குணமாகும்.
அந்தரத் தாமரை இலையை மட்டும் அரைத்து தொழுநோய் புண் உள்ளவர்கள் அதன் மீது போட்டு வர ஆறும்.
அந்தரத் தாமரை இலையை 2 கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் மீது இந்த இலையின் விழுதை வைத்துக் கட்ட ஆறும்.
அந்தரத் தாமரை இலைச்சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் 1 லிட்டர் சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத்தூள், வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி வகைக்கு 10 கிராம் எடுத்து இடித்துப் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒரு முறை தலைமுழுகி வர உடல் சூடு, கண் எரிச்சல், மூல நோய் குணமாகும்.
அந்தரத் தாமரையிலையை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி, கருங்குறுவை அரிசி மாவும் சம அளவாக எடுத்து கலந்து பிட்டவியல் செய்து எடுத்து நல்லெண்ணைய் விட்டுப் பிசைந்து 3 கரண்டியளவு சாப்பிடவும். அத்துடன், மாதுளங் கொழுந்தை காடியில் அவித்து மூலத்தில் வைத்துக் கட்டினால் மூலமுளை விழுந்து விடும்.
Posted in Allopathy, Areceae, cure, Disease, Doctor, Herbs, Homeopathy, Infection, Linn, medical, Medicine, Mooligai, Natural Therapy, Pistia Steteotes, unaani | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006
திரைக்கதிர்: திரு-வா? குரு-வா?
மனோஜ் கிருஷ்ணா :: “திருவிளையாடல் ஆரம்பம்’ – தனுஷ், ஸ்ரேயா
“தேவதையைக் கண்டேன்‘ படத்தையடுத்து தனுஷ்-பூபதிபாண்டியன் இணையும் இரண்டாவது படம் “திருவிளையாடல் ஆரம்பம்’. படத்தைத் தொடங்கியபோது தலைப்பை மாற்ற வேண்டும் என்று சிவாஜிமன்றத்தினர் சார்பில் பல சர்ச்சைகள் எழுந்தன. இன்னும் எதிர்ப்பு உள்ளதா? படத்தின் தற்போதைய நிலைமை என்ன? என்று இயக்குநர் பூபதிபாண்டியனிடம் கேட்ட போது…
“”படப்பிடிப்பு தொடங்கும்போது டைட்டிலை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் சிலர் சர்ச்சையைக் கிளப்பிவிட்டார்கள். ஹீரோவின் பெயர் திருக்குமரன். சுருக்கமாக திரு. காதல் நிறைவேறுவதற்காக அவர் செய்யும் விளையாடல்களே திரைக்கதை. இந்த உண்மை உணர்த்தப்பட்ட பிறகு பெயர் சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்தது. இப்போது படம் திரைக்கு வரத் தயாராக இருக்கிறது.
திரு நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவன். ஸ்ரேயா பணக்கார வீட்டுப் பெண். இவர்களிருவருக்கும் காதல். ஸ்ரேயாவின் அண்ணன் குரு. திரு-வா? குரு-வா? என்ற மனப்போராட்டத்தில் இருக்கும் ஸ்ரேயா இறுதியில் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் கதை.
இந்தப் படத்தில் தனுஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் திரையில் தோன்றும் காட்சிகளிலெல்லாம் விசில் பறக்கும். எப்போது தொடங்கியது; எப்போது முடிந்தது என்று ரசிகர்கள் நினைக்கும் அளவிற்கு படம் விறுவிறுப்பாகச் செல்லும்.
இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசம் இவை எதுவுமின்றி குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து பார்க்கும்படி காமெடியாகவும், கலகலப்பாகவும் படத்தை இயக்கியுள்ளேன்” என்றார்.
Posted in Bhoopathy Pandiyan, Devathayai Kanden, Dhanush, Shreya, Sreya, Sriya, Tamil Cinema, Tamil Film, Tamil Movies, Thanush, Thiruvilaiyaadal Aarambam, Thiruvilaiyadal | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006
தமிழருக்கு தனி நாடே வழி என்கிறார் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று விடுதலைப் புலிகளுடைய வருடாந்திர மாவீரர் நாள் உரையில் கடந்த ஓராண்டாக வடக்கு கிழக்கில் நடைபெற்று வரும் நிகழ்வுகள், சமாதான வழிமுறையில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நிலைப்பாடு, தங்கள் இயக்கம் எடுத்துள்ள நிலைப்பாடு பற்றி விளக்கிக் கூறியிருக்கிறார்.
இலங்கை அரசாங்கம் கடந்த ஓராண்டாக எடுத்து வந்த நடவடிக்கைகள் தங்களுக்குத் திருப்தியைத் தரவில்லை, இவர்களின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவவில்லை எனவும் இது குறித்து தங்களுடைய நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்ட பிரபாகரன் அவர்கள்,
“சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு என்பதைத்தவிர வேறு ஒரு தெரிவினையும் விட்டு வைக்கவில்லை. எனவே எமது விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தினையும், நீதியினை மதிக்கும் உலக நாடுகளையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். விடுதலைக்கான பாதையின் தமது பயணத்தினை மீளவும் தமிழர்கள் ஆரம்பித்திருக்கின்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில் உலகத் தமிழினத்திடமிருந்து தொடர்ச்சியான ஆதரவினையும் உதவியையும் நாம் வேண்டி நிற்கின்றோம்,” என்றார்.
பிப்ரவரி மாதம் 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குமிடையே கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் எப்படி செயலிழந்து போனது என்பதைக் குறிப்பிட்ட பிரபாகரன்
“தனது படைபலத்தினைப் பயன்படுத்தி தமிழ்த் தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கலாம் என ராஜபக்ச அரசு எண்ணுகின்றது. தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து, அரைகுறைத் தீர்வை தமிழர்மீது திணிப்பதற்கு அது விரும்புகின்றது. ராஜபக்ச அரசின் இந்தத் தந்திரோபாயத்தினால்தான், யுத்தநிறுத்த ஒப்பந்தம் செயலிழந்துபோய்க் கிடக்கின்றது. எமது நிலைகள் மீது தாக்குதல்களை நடாத்துவோம் என வெளிப்படையாகவே அறிவித்துவிட்டு, நடாத்திவரும் ராஜபக்ச அரசு இந்த யுத்தநிறுத்த ஒப்பந்தத்திற்குரிய ஈமக்கிரிகைகளை செம்மையாகச் செய்திருக்கின்றது” என்று குறிப்பிட்டார்.

உலக தமிழினத்திடம் இருந்து தொடர்ச்சியாக ஆதரவினையும் உதவினையும் எதிர்பார்த்துள்ளோம் – விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்
விடுதலைப் புலிகள் தலைவரின் அனைத்து கருத்துக்களிலும் ஏமாற்று தன்மை தெரிகிறது – இலங்கை அரசு
 |
 |
கெஹெலிய ரம்புக்வெல்ல |
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரைத் தொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு பேசவல்லவராக கெஹலிய ரம்புக்வெல்ல,
பிரபாகரன் அவர்களின் இன்றைய கருத்துக்களை கடந்த காலங்களில் பலமுறை கேட்டு விட்டோம் என்றும், கடந்த ஆண்டு , விடுதலைப்புலிகளின் தலைவர் தனது மாவீரர் நாள் உரையில், மஹிந்த ராஜபக்சவை ஒரு யதார்த்தமான அரசியல் தலைவர் என்று அறிமுகப்படுத்தி , அவருக்கு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு ஆண்டு கால் அவகாசம் கொடுப்பதாகக் கூறினார். ஆனால், கடந்த ஆண்டு மாவீரர் தின உரை நிகழ்த்திய இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அவர் வன்முறையை அதிகரிக்க ஆரம்பித்து விட்டார். இது அவரது ஏமாற்றும் தன்மை மற்றும் பயங்கரவாதத்தன்மையின் ஒரு தெளிவான அடையாளம் என்று கூறினார்.
மேலும் விடுதலைப்புலிகளின் தலைவர், திம்புவிலிருந்து ஜெனீவா வரை அமைதிப்பேச்சுவார்த்தைகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். திம்புவிலிருந்து ஜெனீவா வரையிலான காலகட்டத்தில்தான், உலகெங்கிலும் உள்ள புத்த மதத்தினர் வழிபடும் தலதா மாளிகை தாக்குதலுக்கு உள்ளானது. அந்த காலகட்டத்தில்தான, முஸ்லீம் பள்ளிவாசல் தாக்குதலில், அப்பாவி முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். எனவே, அவரது இந்த அனைத்துக் கருத்துகளிலும் இந்த ஏமாற்றும் தன்மை நன்றாக வெளிப்படுகிறது என்றும் கூறினார் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு பேசவல்ல கெஹலிய ரம்புக்வெல்ல.
இதற்கிடையே, இந்த உரை தற்போதைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் அணுகுமுறை எவ்வாறு இருக்கப் போகிறது எனக் கோடிட்டு காட்டுகிறது எனக் கூறும் இலங்கை பகுபாய்வாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், தனி அரசு தான் ஒரே தீர்வு என்கிற கருத்து, சர்வதேச சமூகத்தை பொறுத்த வரையில் அவர்கள் இலங்கையில் ஒரு சமாதான முயற்சியை மேற்கொண்ட முயற்சிகளை பார்க்கின்ற போது அது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத்தான் அளிக்கிறது எனவும் கூறுகிறார்.
மேலும், வெளிநாட்டிலுள்ள தமிழீழ ஆதரவாளர்கள் போரை விரும்பினாலும், இலங்கை தீவில் போரின் உக்கிரத்தை நேரடியாக எதிர்கொள்ளும் மக்கள் இதனை விரும்ப மாட்டார்கள் எனவும் அவர் கூறுகிறார்.
Posted in BBC, Eezham, Keheliya Rambukwella, LTTE, Sri lanka, Srilanka, Tamil independence, Velupillai Prabhakaran | 1 Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006
இந்தியாவில் சில்லறை விற்பனைத் துறையில் அமெரிக்க நிறுவனம்
 |
 |
இந்திய சந்தையில் நுழையும் வால்மார்ட் நிறுவனம் |
பாரதி என்னும் இந்திய வணிக நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடி நிறுவனமான வால் மார்ட் நிறுவனம், இந்திய சில்லறை விற்பனைச் சந்தையில் நுழைவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவெங்கிலும் பல நூற்றுக்கணக்கான கடைகளைத் திறக்கப் போவதாக இந்த இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக இந்திய சில்லறை விற்பனைத்துறை இருப்பதாகவும், 2015 ஆம் ஆண்டளவில் அது இருமடங்காக வளர்ந்து, 630 பில்லியன் டொலர்களாக வளரும் என்றும், நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவின் சில்லறை விற்பனை துறையில் பெரும்பகுதி சிறிய மற்றும் குடும்ப வர்த்தகமாக நடத்தப்படும் கடைகளாக திகழ்கின்றன. அத்துடன், இத்தகைய பெரிய நிறுவனங்கள் இந்தத் துறையில் நுழையும் தறுவாயில் இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது வர்த்தக நிறுவங்களை தொடர்ந்து நடத்த சிரமப்படுவார்கள் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
Posted in Bharti, India, Mukesh Ambani, Reliance, retail market, Sunil Bharti Mittal, TESCO, Walmart | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006
“மஞ்சள் துண்டு யார் அணியலாம்’ கருணாநிதி விளக்கம்
சென்னை, நவ. 27: முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மஞ்சள் துண்டு அணிவது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
“சேறு படிந்த சிந்தனைகளும் நிறைந்த ஏமாற்றும் துணிவும் கொண்டவன் மஞ்சள் ஆடை அணிவது பொருந்தாது என்றும், தன்னியல்பை ஆள்பவன் எவனோ, ஒளியும் தெளிவும் உண்மையுமானவன் எவனோ அவன் மஞ்சளாடை அணியலாம் என்று புத்தர் சொன்னதாக “ஓஷோ’ வின் “தம்மபதம்’ எனும் நூலில் குறிப்பிட்டிருப்பதை நான் பல தடவை சுட்டிக்காட்டியுள்ளேன்’ என்று கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.
ராகு காலத்தில் திறப்பு: தாம் திரை மறைவில் கடவுளை வணங்குவதாக ஒரு பேட்டியில் வந்துள்ளதை சுட்டிக்காட்டி, தாம் பகுத்தறிவுவாதி என்பதற்கு யாரும் சான்றிதழ் தர வேண்டியதில்லை என்று கடுமையாக கூறியுள்ளதோடு, பலர் வேண்டாம் என்று கூறிய பிறகும் புழல் மத்திய சிறையை ராகு காலத்தில் திறந்து வைத்ததாக கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Posted in Buddhar, Buddhism, Correctional facility, Ema gandam, Faith, Image, Jail, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Manjal, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Play of words, Politics, Quote, Rahu Kalam, Religion, Spiritual, Superstition, Yellow | 1 Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006
பழம்பெரும் நடிகை வரலட்சுமி காலமானார்
சென்னை, நவ. 27 உடல்நலக் குறைவு காரணமாக பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகை ஜி. வரலட்சுமி (80) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது மகள் கனகதுர்கா வீட்டில் அவர் காலமானார்.
- அண்ணி,
- குலேபகாவலி,
- நான் பெற்ற பிள்ளை,
- நல்ல தங்காள்,
- அரிச்சந்திரா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இவரது கணவர் கே.எஸ். பிரகாஷ் ராவ் “வசந்த மாளிகை’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Posted in Anjali, Biosketch, Lifesketch, Memoirs, Tamil Actress, Tamil Cinema, Tamil Film, Tamil Movies, Telugu Cinema, Tollywood, Varalakshmi | 1 Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006
போலி பி.டி. பருத்தி விதையால் ஏற்பட்ட நஷ்டமே விதர்பா விவசாயிகள் தற்கொலைக்கு காரணம்!
புதுதில்லி, நவ. 27: மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் போலியான பி.டி. ரக பருத்தி விதைகளை பயிரிட்டதன் விளைவாக ஏற்பட்ட நஷ்டத்தால் தான் விவசாயிகள் பெருமளவில் தற்கொலை செய்து கொண்டதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தாண்டில் விதர்பா, மற்றும் மாநிலத்தின் மற்றப் பகுதிகளிலும் மொத்தம் 746 விவசாயிகள் (கேரளாவில் 52) தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெருத்த சர்ச்சையை கிளப்பியது. பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சம்பவ இடங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும், விதர்பா பகுதிக்கென தனி நிவாரண உதவிகளை பிரதமர் அறிவித்தார். அதேபோல, மகாராஷ்டிர மாநில அரசும் விவசாயிகளுக்கு பல்வேறு கடன் திட்டங்களை அறிவித்திருந்தது.
மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய விவசாயமே பருத்தி தான். அதனால், தான் மும்பை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவன ஆய்வு: விவசாயிகள் தற்கொலை கொண்டது ஏன் என்பது குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய வேளாண் அமைச்சகம் நாகபுரியில் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, இப் பகுதியில் ஆய்வினை மேற்கொண்ட இந்நிறுவனம் அதன் அறிக்கையை வேளாண் அமைச்சகத்திடம் அளித்தது.
அதில், போலியான பி.டி. ரக பருத்தி விதைகளை விநியோகம் செய்ததால் அவற்றை நம்பி பயிரிட்ட விவசாயிகள் பெருமளவு நஷ்டத்தை சந்திக்க வேண்டியதாயிற்று. பருத்தி பயிரிட வாங்கிய கடன்களை கட்ட முடியாமலும், மறுபடியும் பயிரிட முடியாமலும் ஏற்பட்ட மன உளைச்சலால் தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 சதவீதம் போலியானவை: குறிப்பாக, பயிரிட்ட பருத்தியில் 20 சதவீத விதைகள் பி.டி. விதைகளே அல்ல என்றும் தெரிய வந்துள்ளது. மற்ற 60 சதவீத விதைகள் கலப்பட விதைகள் என்றும், மீதி 20 சதவீத விதைகள் தான் தரமான விதைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பருத்தி பயிரிடும் விவசாயிகள் போலியான விதைகளை கண்டறியும் விதத்திலான கருவிகளை அளிக்குமாறு மாநில அரசை மத்திய வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் 11 விவசாயிகள் தற்கொலை
நாகபுரி, நவ. 27: மகாராஷ்டிரத்தில் கடன்சுமை காரணமாக மேலும் 11 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
விதர்பா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்த தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.
இத்துடன், கடந்த ஜூனிலிருந்து அப்பகுதியில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது.
இத் தகவலை அப்பகுதியில் செயல்படும் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.
Posted in Agriculture, Bollgard worm, Bt paddy, BT Rice, Central Institute for Cotton Research, Cotton, Farmers, Genetic Crops, ICAR, Kerala, maharashtra, Monsanto, Nagpur, peasants, Suicide, Vidarba, Vidarbha, Vidharbha | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: 14 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கக் கூடாது
புதுதில்லி, நவ. 27: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஒரு வழக்கில் அதிகபட்சம் 14 ஆண்டுகளுக்கு மேல், சிறை தண்டனை விதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குற்றவாளிக்கு அந்த மாநில உயர்நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்திருந்தது. மூன்று குற்றங்களில் தொடர்புடைய அவருக்கு மொத்தமாக இந்த தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதை ஆட்சேபித்து அக்குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா, மார்க்கண்டேய கட்ஜு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து அளித்த தீர்ப்பு விவரம்:
ஆயுள் தண்டனையை தவிர பிற தண்டனைக் காலம் அதிகபட்சம் 14 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது. பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்புடைய ஒரு வழக்கில் குற்றவாளிக்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் அளவுக்கே சிறை தண்டனை விதிக்கலாம். மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது தவறாகும்.
Posted in 14, 20, Court, Imprisonment, India, Jail, Judge, Law, Life sentence, MP, Order, Police, RI, Supreme Court | Leave a Comment »