தேவை-பாதுகாப்பான தெருக்கள்!
நாய் மனிதனைக் கடித்தது செய்தியல்ல…மனிதன் நாயைக் கடித்தால் அதுதான் செய்தி என்று செய்தி பற்றிய இலக்கணம் சொல்வதுண்டு. நமது யதார்த்த வாழ்க்கை, இந்த இலக்கணங்களையெல்லாம் தகர்த்துவிடுகிறதல்லவா? இன்றோ நாய் மனிதனைக் கடித்ததே முக்கிய செய்தியாகிவிட்டது. சில தினங்கள் முன்பு உதகையின் கோத்தகிரிப் பகுதியில் ஒரு பள்ளிச் சிறுவன் தெருநாய்க் கூட்டத்தின் கொலைவெறித் தாக்குதலால் உடலெங்கும் கடும் காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் செய்தி வெளியானபோது நம்மில் பலர் திடுக்கிட்டிருப்பார்கள்.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து அச் சிறுவனின் உடல் நலம் குறித்து மூன்று வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கும் குன்னூர் நகராட்சி ஆணையருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவரும் நீதிபதியுமான வெங்கடாசல மூர்த்தி அடங்கிய பெஞ்ச் பிறப்பித்துள்ளது.
தெருநாய்க் கூட்டங்களால் மனித உயிர்களுக்கு ஆபத்து நேரும் நிலை ஏற்பட்டது எவ்வாறு? இதற்கு யார் பொறுப்பு? நாய்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டியது உள்ளாட்சி அமைப்புகள் அல்லவா என்று கேட்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மீதும் குற்றம் சொல்ல முடியாது. காரணம் தெருநாய்களைப் பிடிக்கவும் கொல்லவும் நீதிமன்றத் தடைகள் உள்ளன.
இப்படித் தடைபெற்றுள்ள பிராணி நலச் சங்கங்கள் தெரு நாய்களின் தொல்லையைத் தவிர்க்க அவற்றுக்குக் கருத்தடை செய்வதையும் வெறிநோய்த் தடுப்பு ஊசி போடுவதையும் பரிந்துரை செய்கின்றன. ஆனால் இன்று சென்னை நகரின் சந்துகளில் ராஜாங்கம் நடத்தும் லட்சக் கணக்கான நாய்கள் அனைத்துக்கும் இப்படி ஊசி போட சாத்தியப்படுமா என்று தெரியவில்லை. இதனிடையே மழைக்கால இருளில் இரவுப் பணி முடிந்து போவோர் தொடங்கி பள்ளிக் குழந்தைகள் வரையில் நாய்க்கடிபடும் சம்பவங்கள் அதிகரித்தவாறே உள்ளது கவலைக்குரியது. இந்தப் பிரச்சினையின் ஒரு தீவிர முகம்தான் கோத்தகிரியில் பள்ளிச் சிறுவன் நாய்க்கூட்டங்களால் கடிபட்ட சம்பவம்.
நம் நாட்டைக்காட்டிலும் நாய் வளர்ப்பு மற்றும் செல்லப் பிராணி வளர்ப்பில் அதிக முனைப்புக் காட்டும் வெளிநாடுகள் அனைத்திலும் இந்தத் தெருநாய்ப் பிரச்சினை இல்லை. அந்த நாடுகள் இப்பிரச்சினையை எப்படித் தீர்த்தன என்பதை நமது உள்ளாட்சி நிர்வாகிகள் கவனித்துக் கற்று அறியலாம். லைசென்ஸ் இல்லாத தெரு நாய்களைப் பிடித்துச்சென்று அவற்றை தனியார் பிராணி நல அமைப்புகளின் கண்காணிப்பில் பராமரிப்பதன் மூலம் நம் தெருக்களைப் பாதுகாப்பானதாக ஆக்கலாம்.
தெரு நாய் பிரச்சினையில் இன்னொரு கிளைப் பிரச்சினையும் உள்ளது. அது வெறிநாய்க் கடி மருந்துக்கு அவ்வப்போது ஏற்படும் தட்டுப்பாடு. சமீபத்தில் கூட பொன்னேரி அரசு மருத்துவமனையில் வெறிநாய்க்கடிக்கு மருந்து இல்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது. இன்று தமிழகத்தில் காணப்படும் தெருநாய்ப் பெருக்கத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கும் போது வெறிநாய்க்கடி தடுப்பு மருந்துக்குத் தட்டுப்பாடில்லாமல் பார்த்துக் கொள்வது அவசர அவசியமாகும்.
பெரும்பாலும் நகரம், புறநகரங்கள் சார்ந்த இந்த முக்கியப் பிரச்சினை பற்றி பேசும் போது இதே போன்ற கிராமப் பிரச்சினை ஒன்றையும் இங்கு மறக்காமல் சொல்லியே ஆக வேண்டும். அது, ஆண்டுதோறும் அதிக அளவில் பாம்புக் கடிக்குப் பலியாகும் கிராம மக்கள் பற்றியது. இச்சாவுகளுக்குப் முக்கிய காரணம் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார மையங்களில் பாம்புக் கடிக்கான மருந்து தயார் நிலையில் இல்லாமையே. இம் மையங்களில் இந்த மருந்துக்குத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வதுடன், அவை இங்கு இருப்பதை உறுதி செய்யும் வகையில் கண்டிப்பான விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்.