Is educational credential required for people’s representatives? – D Purushothaman
Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007
பள்ளி இறுதிவகுப்பைக்கூட எட்டாத எம்.பி.க்கள்!
டி. புருஷோத்தமன்
எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் கூட குறைந்தபட்சம் பள்ளி இறுதிவகுப்பு வரையிலாவது பயின்று இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
ஆனால் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் பள்ளி இறுதிவகுப்புவரை கூட பயிலாதவர்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். 60 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித குறைந்தபட்ச கல்வித் தகுதியையும் நிர்ணயிக்காததால் இந்த அவலநிலை.
பள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாத எம்.பி.க்கள் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளிலும் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியில் இத்தகைய எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முகமது சாஹித், ரமேஷ் துபே, பாய் லால் ஆகிய மூவரும் பள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாதவர்கள். இதேபோன்று சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த ஹரி கேவல் பிரசாத்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுரேந்திர பிரகாஷ் கோயலும் இப்பட்டியலில் அடங்குவர்.
மேற்குவங்கத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் செüத்ரியும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரசேகர் துபேயும் இதேபோன்று பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள்தான்.
கேரளம் கல்வியறிவு பெற்ற முதன்மை மாநிலம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அங்கு கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரவீந்திரன், பள்ளி இறுதிவகுப்பை முடிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
மகாராஷ்டிரத்தில் பாஜகவை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், சிவசேனை கட்சியை சேர்ந்த மோகன் ரவாலேயும் இந்தப் பட்டியலில் அடங்குவர். இவ்விஷயத்தில் பிற கட்சிகளுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பாஜகவும் சிவசேனையும் நிரூபித்துள்ளன.
ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவதார் சிங் பதானாவும், ஆத்ம சிங் கில்லும் பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள். அசாமில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோனிகுமார் சுபாவும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த பாலிராம் காஷ்யப்பும் இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்கள்தான்.
குஜராத்தில் பாஜகவை சேர்ந்த சோமாபாய் கந்தலால் கோலி பட்டேல் பள்ளி இறுதிவகுப்புவரை பயிலாதவர்.
ஆனால் மேற்குறிப்பிட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் சிகரம் வைத்தாற்போல, தொடக்கப்பள்ளி வரை மட்டுமே பயின்றவர் பாஜகவை சேர்ந்த மகேஷ் குமார் கோனோடியா!
பிகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் மன்ஜியும், லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சூரஜ் சிங்கும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த கைலாஷ் பைத்தா ஆகியோரும் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்தான்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயரிய கல்வித்தகுதியைப் பெற்றிருந்தால்தான் விவாதங்களில் உரியமுறையில் பங்குகொண்டு தங்களது கருத்துகளை வலுவான முறையில் எடுத்துக்கூற இயலும். இல்லாவிடில் எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் அவையை விட்டு வெளிநடப்புச் செய்ய என்பதே தாரக மந்திரமாகிவிடும்.
பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 36 லட்சம் கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் திட்ட இலக்குகளை எட்ட கல்வித்தகுதி மிக்க எம்.பி.க்கள் மிக அவசியம் என்பதை எவரும் மறுக்க இயலாது.
துவக்கத்தில் மில்லியன்கள், கோடிகள், பின்னர் பில்லியன்கள், இறுதியாக டிரில்லியன்கள் என அரசின் வரவு-செலவுத் திட்டங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. போதிய கல்வியறிவு இல்லாத காரணத்தால் இதைப்பற்றிய பொருளாதார விவரங்களை அறிய முடியாமல் இத்தகைய எம்.பி.க்கள் அவதிப்படுகின்றனர். நாடாளுமன்ற விவாதங்களில் தீவிரமாக பங்கேற்க இயலாமல் சிரமப்படுகின்றனர்.
உயர்கல்வி கற்றவர்கள் உயர் அதிகாரிகளாகப் பொறுப்பேற்று அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் பள்ளிப்படிப்பை கூட முடிக்காத அரசியல்வாதிகள் அவர்களை வழிநடத்தும் துர்ப்பாக்கியம் நமது நாட்டில் அதிகமாகவே நிகழ்ந்து வருகிறது. கல்விகற்ற அதிகாரிகள் சொல்வதை அரசியல்வாதிகள் சிறிதும் ஏற்பதில்லை. இதனால் ஐந்தாண்டுத் திட்டங்களின் முழுப்பலன்களும் மக்களைச் சென்றடைவதில்லை. ஏழ்மை இன்னும் தாண்டவமாடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
பல எம்.பி.க்கள் போதிய கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்துவருவதால் தாங்கள் செய்யும் குற்றச்செயல்களின் பாதிப்புகளை தாங்களே உணர்ந்துகொள்வதில்லை.
லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மன்ஜி. போதிய கல்வித்தகுதியற்ற இவர் எம்.பி. என்ற முறையில் செய்த குற்றச்செயல்கள் அனைவரையும் வெட்கித் தலைகுனியவைக்கக் கூடியதாகும். வெளிநாடுகளுக்கு போலி பெயர்களில் ஆள்கடத்தலில் வல்லவர் என்ற பெயருக்கு அவர் ஆளாகிவிட்டார்.
இதற்கும் ஒரு படி மேலே சென்று, தனது காதலியை மனைவி எனக் கூறி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது தில்லி விமான நிலையத்தில் கையும் களவுமாக பிடிபட்டார். (சட்டபூர்வமாக அப்பெண்ணை திருமணம் செய்யவில்லை என்ற போதிலும்) அந்தக் காதலியை விவாகரத்து செய்யவும் அவர் முயன்று வருகிறார்.
நாடு சுதந்திரம் அடைந்தபோது ஜமீன்தாரர்களும் தனவந்தர்களும் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளின் பிரமுகர்களும் தங்களது செல்வாக்கின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது மக்களிடம் போதிய விழிப்புணர்வும் இல்லை. ஆனால் தற்போது மக்களிடம் கல்வியறிவும் விழிப்புணர்வும் வேகமாக ஏற்பட்டு வருகிறது.
அரசு உயர்பதவிகளுக்கு எவ்வாறு உயரிய கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதைப்போன்றே இனி எம்.பி.க்களுக்கும் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.
100 கோடி மக்களின் பிரநிதிகளாக இருக்க வேண்டிய எம்.பி.க்களுக்கு போதிய கல்வித்தகுதி அவசியம் இருக்க வேண்டுமல்லவா? அரசியல்சாசனத்தில் உரிய திருத்தம் செய்து இதற்கான வழிவகைகளைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
மறுமொழியொன்றை இடுங்கள்