Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for திசெம்பர் 5th, 2007

Mine attack on bus in northern Sri Lanka kills at least 15, Wounds 38

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007

அநுராதபுரத்தில் பொதுமக்கள் பேருந்து மீது தாக்குதல்: 15 பேர் பலி

இலங்கையின் அநுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில் பொதுமக்கள் போக்குவரத்து பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளெமோர் கண்ணிவெடித் தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 25 பேர் காயமடைந்ததாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரத்தில் இருந்து பதவியா ஜானகபுரவுக்குச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தே இந்தத் தாக்குதலுக்கு உள்ளானதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கெப்பிட்டிக்கொல்லாவவில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் அபிமானிபுர என்ற இடத்திலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார முன்னதாக தமிழோசைக்குத் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் கெப்பிட்டிக்கொல்லாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


வட இலங்கையில் மோதல்கள் அதிகரிக்கின்றன: இரு தரப்பிலும் இழப்புகளும் அதிகரிப்பு

மோதல்கள் அதிகரித்துள்ளன
மோதல்கள் அதிகரித்துள்ளன

இலங்கையின் வடக்குப் போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அதிகரித்துச் செல்லும் மோதல்களில் இன்று மாத்திரம் குறைந்தது 7 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இந்த மோதல்களில் 30 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் உள்ள சின்னசிப்பிக்குளம் பகுதியில் படையினர் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில், 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள், படையினரின் எதிர்த்தாக்குதலில் முறியடிக்கப்பட்டதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இதே பகுதியில் பிற்பகல் 12.50 மணியளவில் உழவு இயந்திரம் ஒன்றில் பயணம் செய்த இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில், 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 2 சிப்பாய்கள் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.

மன்னார் அடம்பன் மேற்கு, முள்ளிக்குளம் பரப்பாங்கண்டல் மற்றும் நரிக்குளம் ஆகிய வெவ்வேறு இடங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான மோதல்களின்போது, 30 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

அதேவேளை மன்னார் நரிக்குளம், யாழ்ப்பாணம் முகமாலை, கிளாலி, நாகர்கோவில் ஆகிய முன்னரங்கப் பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களின்போது, 20 விடுதலைப் புலிகளும், 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இந்த மோதல்களில் 2 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் அது கூறுகிறது.

கிளாலி முன்னரங்க பகுதியில் நேற்று பிற்பகல் சுமார் ஒரு மணியிலிருந்து இரண்டு மணித்தியாலங்கள் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாக இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் தெரிவித்திருக்கின்றனர். இந்த மோதலில் 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ள போதிலும், தமது தரப்பில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும், தமது பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு இராணுவத்தினர் மேற்கொண்ட முயற்சி கடுமையான எதிர்த்தாக்குதலின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வவுனியாவில் தொண்டர் அமைப்பு பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

 

இதற்கிடையில், வவுனியா மாவட்டத்தில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் தமது பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி இன்று ஒரு நாள் அடையாள பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தனர்.

அடையாளம் தெரியாதவர்களின் அச்சுறுத்தல்கள், கப்பம் கோரி விடுக்கப்படும் எச்சரிக்கைகள் போன்றவற்றினால் இந்த பணியாளர்கள் அச்சமடைந்துள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மனித நேய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, சம்பந்தப்பட்டவர்கள், இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்கள் சுதந்திரமாக, அச்சமின்றி பணிகளில் ஈடுபடக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என வவுனியா மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் கோரியிருக்கின்றது.


மீண்டும் வவுனியாவுக்கு ரயில் சேவை

 

கடந்த ஒரு வார காலமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த இலங்கையின் வடபகுதிக்கான ரயில் சேவை உடனடியாக வழமைக்குத் திரும்பும் எனவும், ஜனாதிபதியின் அனுமதியோடு இதற்கான பணிப்புரை ரயில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டிருப்பதாகவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

இதனை உறுதி செய்த ரயில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், இரண்டு ரயில்கள் இன்றிரவு வவுனியாவை வந்தடையும் என்றும் நாளை காலை முதல் அனைத்து ரயில்களும் வழமைபோல வவுனியாவில் இருந்து கொழும்புக்குச் சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவித்தனர்.

இதற்கிடையில் வவுனியா ஒமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய வன்னிப்பகுதிக்கு இடம்பெற்று வந்த பொதுப் போக்குவரத்து நடைமுறையில் படையினர் ஏற்படுத்தியிருந்த கட்டுப்பாடுகள் இன்று தளர்த்தப்பட்டதாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

வவுனியாவிலிருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்குச் செல்பவர்களை படையினர் அனுமதித்திருந்தார்கள் எனினும் வன்னிப்பகுதியில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய வவுனியாவுக்குள் வருவதற்குப் பொதுமக்கள் எவரையும் படையினர் அனுமதிக்கவில்லை.

இந்த கட்டுபபாடுகள் இன்று தளர்த்தப்பட்டிருக்கின்றன. இதனையடுத்து, விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய புளியங்குளம் பகுதியில் பலநாட்களாகக் காத்துக்கிடந்த பொதுமக்களில் ஒரு தொகுதியினர் இன்று வவுனியாவை வந்தடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.

இது பற்றி இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான பொதுப் போக்குவரத்து இன்று முதல் தொடர்ந்து வழமைபோல நடைபெறும் என அவர் கூறினார்.


Posted in Aid, Anuradapura, Anuradhapura, Anuradhapuram, Anurathapura, Attacks, Bribery, Bus, Corruption, dead, Economy, Eelam, Eezham, Extortions, Finance, Help, kickbacks, LTTE, Mannaar, Mannar, Mine, mines, Money, NGO, Rails, Railways, ransom, relief, Security, service, Sri lanka, Srilanka, Threats, Trains, Transport, Transportation, TRO, UN, UNESCO, Vanni, Vavuniya, Vawuniya, Volunteer, Volunteering, Wanni, wavuniya, Wawuniya, Wounded | Leave a Comment »

‘Indo-US accord on Nuclear deal is a must for growth’ – DMK chief Karunanidhi’s daughter Kanimozhi

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007

அணுசக்தி ஒப்பந்தம் அவசியத் தேவை!: கனிமொழி

புதுதில்லி, டிச. 4: அமெரிக்காவுடனான “123′ ஒப்பந்தம் நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை தரும் என்பதால் வரவேற்பதாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி செவ்வாய்க்கிழமை தனது கன்னிப் பேச்சில் குறிப்பிட்டார்.

கனிமொழி பேசியதாவது:

இந்த ஒப்பந்தம் போர் அல்லாத அணுசக்தி தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை தரும் என்பதோடு, அணுசக்தி பயன்பாட்டு ஒப்பந்தத்தினை நமது நாடு ஏற்கத் தேவையில்லாத நிலையும் ஏற்படும் என்று நானும் எனது கட்சியும் நம்புகிறோம்.

இதன் மூலம் கடந்த 33 ஆண்டுகளாக நம்மீது திணிக்கப்பட்ட தடைகளும் நீக்கப்படும் என்பது மட்டுமல்ல, ராணுவத்திற்கான அணுசக்தி திட்டத்தில் நமக்குள்ள சுதந்திரமும் பாதுகாக்கப்படும்.

சிலர் இது முறையற்ற ஒருசார்பு ஒப்பந்தம் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், “நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட்’ ஆகிய நாளிதழ்கள் அமெரிக்கா நமக்கு அதிகச் சலுகை வழங்கியுள்ளதாக கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இதுபோன்றதொரு ஒப்பந்தத்தை தம்மோடும் செய்து கொள்ள வேண்டுமென்ற பாகிஸ்தான் கேட்டிருக்கிறது. சீன ஏடுகளும் அமெரிக்கா அரசியல்வாதிகள் சிலரும் இந்தியாவை அணுசக்தி வல்லரசாக மாற்ற அமெரிக்கா முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது, இந்திய அரசு நமது நாட்டுக்கு நன்மை செய்திருப்பதாகவே தோன்றுகிறது.

இந்த 123 ஒப்பந்தம் குறித்த கருத்து வேறுபாடுகள், இந்த அரசாங்கத்தை வலுவிழக்கச் செய்து விடக் கூடாது; நிர்வாகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்று எங்கள் கட்சியின் தலைவர் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் முறையாக விவாதிக்கப்பட்டு சரியாக புரிந்து கொள்ளப்பட்டால், கவலைகள் நீங்கி கருத்தொற்றுமை ஏற்படும்.

2020 ஆம் ஆண்டில் சீனா அணு மின்நிலையங்களின் மூலம் 40000 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை தயாரிப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறது. நமக்கு 2020 ஆம் ஆண்டு வாக்கில் 20000 மெகா வாட் அணு உலைகள் மூலம் மின்உற்பத்தி செய்ய வேண்டுமென்கின்ற திட்டமிருக்கிறது. ஆனால், இந்த 123 ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், இந்த நிலையை எய்துவது கடினம்.

நமது நாட்டிலேயே உற்பத்தியாகும் தோரியத்தைப் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யலாம். ஆனால், அதற்குப் பல காலம் பிடிக்கும்.

அரசியல் மற்றும் ராணுவம் சார்ந்த பிரச்னைகள் தவிர சுற்றுச்சூழல் பிரச்னைகளும் இதில் அடங்கியுள்ளன. எரிசக்தியில் ஏறத்தாழ 85 சதவிகிதம் நிலக்கரி எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் மூலமாகத்தான் உற்பத்தியாகிறது. இந்த பொருள்களை எரிப்பதன் மூலம் ஆண்டொன்றுக்கு 23 பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடை நாம் நமது வாயு மண்டலத்திற்கு அனுப்பி வைக்கிறோம். அதாவது, வினாடிக்கு 730 டன் என்ற அளவில் கார்பன்-டை-ஆக்சைடு வெளியாகிறது.

சில சுற்றுச்சூழல் அறிஞர்கள், சூரிய ஒளி மற்றும் காற்றாலைகள் மூலமாக மின் உற்பத்தி செய்வது நன்மை தரும் என்று கருதுகிறார்கள். ஆனால், அவற்றால் நமக்குத் தேவையான அளவுக்கு மின்சாரத்தை வழங்க இயலாது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.

நான் இதுபோன்ற மின்உற்பத்தி நிலையங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை. அவை பயனுள்ளவை என்பதோடு மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால், அவை நமது தேவையில் ஒரு குறிப்பிட்ட சதவீதமே பங்கு வகிக்க முடியும்.

அணுமின் நிலையங்கள் ஆபத்தானவை என்கிற கருத்தும் வாதமாக வைக்கப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தி நிலையங்களின் விபத்துகள் நிலக்கரி சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துக்களைக் காட்டிலும் மிகக்குறைவான உயிரிழப்புக்களையே ஏற்படுத்தியிருக்கின்றன.

உலக அணுசக்தி வணிகம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், 123 ஒப்பந்தம்தான் அணுசக்தி தொழில்நுட்பத்தையும் அதற்கான கச்சா பொருளையும் நாம் பெறக்கூடிய வாய்ப்பினை உருவாக்கும். அதன் மூலம்தான் நாம் நம்முடைய மின்உற்பத்தி தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியும்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் விளைவாக நமக்குத் தேவையான எரிசக்தி கிடைக்கும் என்பது குறித்து பேசிய நான், ராணுவ அடிப்படையில் அமெரிக்காவோடு நாம் நெருங்க முடியும் என்ற கருத்தை வெளியிடவில்லை. புதிய நூற்றாண்டில் நுழைந்திருக்கும் நாம் நம்பிக்கையையும், சுய உறுதியையும் வளர்த்துக்கொண்டு நம்முடைய சுதந்திரத்தை இழக்காமல், கொள்கையிலும் செயல்பாட்டிலும் மற்ற நாடுகளோடு இணைந்து பணியாற்றும் வலிமை நமக்கு இருக்கிறது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த 123 ஒப்பந்தம் ராணுவ நிர்மாணங்களையும் உள்நாட்டுத் தேவைகளையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கும் உரிமையை நமக்கு வழங்கியிருப்பதால், நம்முடைய பாதுகாப்புத் தேவைகளில் நாம் எந்தவிதமான சமாதானமும் செய்து கொள்ளத் தேவையில்லை.

இந்த 123 ஒப்பந்தம் இந்திய, அமெரிக்க உறவை உறுதி செய்திருந்தாலும், அணுசக்தி தொழில்நுட்ப வணிகத்தில் நாம் மற்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

எனவே, இந்தியா அமெரிக்காவிடமிருந்து மட்டுமே அணுசக்தி தொழில்நுட்பத்தைத் பெறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதை அரசாங்கம் இந்த அவைக்கு தெளிவு படுத்த வேண்டும்.

இந்த 123 ஒப்பந்தம் தானாக உருவாகவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு வித்திட்ட பாரதிய ஜனதா கட்சி, அமெரிக்காவோடு அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கிய நேரத்தில் நம்முடைய வளர்ச்சித் திட்டங்களுக்கு மிக முக்கியமானது என்று கருதியே பேச்சு நடத்தியது. இந்த நாட்டின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைப் பாதுகாக்க உருவாகியுள்ள கௌரவப் பட்டியலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரையும் இணைத்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார் கனிமொழி.

Posted in 123, Accord, America, Atom, Atomic, BJP, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), daughter, deal, DMK, Electricity, Growth, Indo-US, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Nuclear, Power, US, USA | 1 Comment »

Telugu Actor Chiranjeevi to launch new political party in Andhra Pradesh

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007


நடிகர் சிரஞ்சீவி, அடுத்த மாதம் புதிய கட்சி தொடங்குகிறார்?
ஆந்திராவில் பெரும் பரபரப்பு

நகரி, டிச.5-

நடிகர் சிரஞ்சீவி புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியானதால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார்

தெலுங்கு திரை உலகில் இருந்து ஆந்திர அரசியலுக்குள் நுழைந்து வெற்றிக்கனி பறித்தவர் என்.டி.ராமாராவ். அவர் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திர அரசியலில் முக்கிய சக்தியாக விளங்கி வருகிறது. இதனை தொடர்ந்து, லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி, பிரபல நடிகை ரோஜா என ஏராளமான திரை உலக பிரபலங்கள் ஆந்திரா அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார். சமீப காலமாகவே இது குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியான போதிலும் இதுவரை அவர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அரசியலில் குதித்தால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து அவர் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

கம்ïனிஸ்டு தலைவர்கள்

ஆந்திராவில் நாயுடு மற்றும் ரெட்டி இனத்தை சேர்ந்தவர்களே தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால் அந்த இனத்தவர்களே பயன் பெறுவதாக பிற இனத்தை சேர்ந்தவர்கள் கருதுகின்றனர். எனவே பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட இனத்தவர் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவு சிரஞ்சீவிக்கு கிடைக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அதே நேரத்தில் மார்க்சிஸ்டு தலைவர் ராகவலு மற்றும் இந்திய கம்ïனிஸ்டு தலைவர் நாராயணா ஆகியோர் சிரஞ்சீவியை சந்தித்து பேசினர்.

எனவே சிரஞ்சீவி புதிய கட்சியை தொடங்கினால் அவரது தலைமையில் மூன்றாவது அணி அமையும் வாய்ப்பும் உருவாகும். இதற்கிடையே சிரஞ்சீவியின் சகோதரரான நடிகர் பவன் கல்யாண், பகுஜன் சமாஜ் கட்சியுடன் பேசி வருகிறார். கட்சி ஆரம்பித்தால் மக்கள் மத்தியில் ஆதரவு எப்படி இருக்கும் என்பது குறித்து நெருங்கிய பத்திரிகையாளர்களிடம் சிரஞ்சீவியின் நண்பர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

மைத்துனர் ஆர்வம்

புதிய கட்சி தொடங்கும் விஷயத்தில் சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்து, சகோதரர் பவன் கல்யாண் ஆகியோர் தீவிரமாக இருக்கின்றனர். எனவே புதிய கட்சி தொடங்குவது குறித்து சிரஞ்சீவி நேற்று அறிவிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் அவ்வாறு எந்த அறிவிப்பையும் சிரஞ்சீவி வெளியிடவில்லை. எனினும் எந்த நேரத்திலும் தொலைக்காட்சியில் தோன்றி அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறப்படுவதால் அவரது ரசிகர்கள் எதிர் பார்ப்புடன் காத்திருக்கின்றனர். டி.வி. சேனல்களும் சிரஞ்சீவியை சுற்றி வருகின்றன. இதற்கிடையே, ஜனவரி மாதத்தில் முறைப்படி புதிய கட்சியை தொடங்குவார் என்று சிரஞ்சீவியின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.


முந்தைய சிரஞ்சீவி செய்திகள்:1. Andhra Pradesh Cinema Politics – Mohan Babu & Chiranjeevi refuse to accept awards from Congress CM « Tamil News: “தெலுங்கு பட விழாவில் நடிகர் சிரஞ்சீவி மீது மோகன்பாபு பாய்ச்சல்: இருவரும் விருது பெற மறுப்பு”

2. ‘Desamuduru’ hero Allu Arjun gets robbed by fans « Tamil News: “ரசிகர்கள் போல் முற்றுகை: நடிகரின் நகைகளை பறித்த திருடர்கள்”

3. Chiranjeevi’s second daughter weds secretly « Tamil News: “நடிகர் சிரஞ்சீவியின் மகள் காதல் திருமணம்: குடும்பத்தினர் மிரட்டுவதாக புகார்”

4. Telugu Actor Chiranjeevi’s brother Pawan Kalyan refuses to give Alimony « Tamil News: “வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக புகார்: நடிகர் சிரஞ்சீவி தம்பிமீது மனைவி வழக்கு”

Posted in Andhra, Andhra Pradesh, AP, Chandrababu, Chandrababu Naidu, Chanthirababu, Chanthirababu Naidu, Chanthrababu, Chanthrababu Naidu, Cinema, CM, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Eenadu, Election, Films, Media, MGR, Movies, MSM, Muslim, Naidu, Nayudu, NTR, Party, Pavan, Pavan kalyan, Pawan, Polls, Reddy, Roja, Sun, Superstar, TDP, Telugu, Telugu Desam, Tollywood, TV, voters, Votes | Leave a Comment »

Indian coins converted into razor bladed – Monetary value

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007

பிளேடாகும் ரூபாய் நாணயங்கள்

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், டிச. 4: தமிழகம் முழுவதும் ரூ.1 மற்றும் ரூ.2 நாணயங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கான காரணம், இந்த நாணயங்களை உருக்கி பிளேடுகள் தயாரித்து விற்பனை செய்து சிலர் அதிக லாபம் ஈட்டி வருவதாக தற்போது அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி தயாரித்து வெளியிடும் சில்லறை நாணயங்கள் பிளேடுகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

ரிசர்வ் வங்கி வெளியிடும் நோட்டுகள் போன்று சில சமூக விரோதிகள் கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்டு வருகின்றனர். இந் நிலையில் சில்லறை நாணயங்களைக் கொண்டு பிளேடு தயாரித்து லாபம் ஈட்டும் தொழில் தமிழகத்தில் பல இடங்களில் நடந்து வருகிறது.

இதனால் மொத்தமாக சில்லறை நாணயங்கள் கூடுதல் விலைக்கு சேகரிக்கப்பட்டு மூட்டை, மூட்டையாக வாங்கிச் செல்லப்படுகிறது.

மத்திய ரிசர்வ் வங்கி, நாணயங்களில் வெள்ளி கலந்து வெளியிட்டது. வெள்ளிக்கு நல்ல விலை கிடைப்பதால் அதை அறிந்த கும்பல், நாணயங்களை உருக்கி வெள்ளியைப் பிரித்து ஆபரணங்கள் தயாரிக்கப் பயன்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரிசர்வ் வங்கி, துருப்பிடிக்காத சில்வர் (ஸ்டெயின்லஸ் ஸ்டீல்) மூலம் நாணயங்களைத் தயாரித்தது.

இந்த சில்வர் நாணயங்களை உருக்கி குறிப்பாக தமிழகத்தில் சேலம், நாமக்கல், கோவை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட நகரங்களில் கொலுசு மற்றும் வெள்ளி ஆபரணங்கள் தயாரிக்கும் சில கும்பல்கள் பிளேடு தயாரித்து தற்போது விற்பனை செய்து வருகிறது.

ரூ.1 நாணயத்திலிருந்து 8 பிளேடுகளும், ரூ.2 மற்றும் ரூ.5 நாணயங்களிலிருந்து 10 பிளேடுகளும் தயாரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த பிளேடுகளை சில்லறை விலையில் ஒரு பிளேடு ரூ.1 முதல் ரூ.1.50 வரை பெரிய மற்றும் சிறிய நகரங்களில் சலூன்களில் மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1 நாணயத்திலிருந்து குறைந்தது ரூ.8 லாபம் கிடைக்கிறது.

இதனால் இந்த வியாபாரிகள் ரூ.100-க்கான சில்லறை நாணயங்களை ரூ.110 கொடுத்து வாங்கிச் சேகரித்து மூட்டை மூட்டையாக கொண்டு செல்கின்றனர்.

சமீபத்தில் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள சில்லறை நாணயங்களை போலீஸôர் பிடித்தனர்.

விசாரணையில் அந்த நாணயங்கள் திருச்சியைச் சேர்ந்த தனியார் ஜுவல்லரி மற்றும் பாத்திரக்கடை உரிமையாளர் கொண்டு சென்றார் என்று கூறப்பட்டது. அந்த உரிமையாளர் சென்னையில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கி கிளையில் சில்லறை நாணயங்களை வாங்கி வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

எனவே மத்திய ரிசர்வ் வங்கி, சில்லறை நாணயங்களை மொத்தமாக வழங்குவதற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும் நாணயங்களை உருக்கி பிளேடு தயாரிப்பதை மத்திய புலனாய்வுத் துறை மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Posted in babrers, blades, Coins, Consumer, Conversion, Criminals, Customer, Finance, markets, Metal, Metallurgy, Monetary, Money, Paisa, razor, RBI, retail, Rupee, Rupees, Rupya, Salon, Saloon, Shave, Thirupathi, Thirupathy, Tirupathi, Tirupathy, tonsure | 1 Comment »

Sandalwood smuggler Veerappan’s Area: Encroachments in Sathiyamangalam – Losing ones native lands to power, money & politics

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007

வீரப்பன் காட்டை குறிவைக்கும் அரசியல்வாதிகள்!

பீ.ஜெபலீன் ஜான் ஆர்.சிவக்குமார் டி.சாம்ராஜ்

ஈரோடு, கோவை மாவட்டத்தில் பிரதானக் கட்சிகளில் முக்கிய பொறுப்பை வகித்த, வகிக்கும் அரசியல்வாதிகள், மற்றும் சத்தி தொகுதியில் இதுவரை இருந்த எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோருக்கு சத்தி வனப் பகுதியில் பண்ணைத் தோட்டங்கள் உள்ளன.

ஈரோடு, டிச.4: சந்தன கடத்தல் வீரப்பனுக்கு புகலிடமாக இருந்த சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அரசியல்வாதிகள் வளைத்துப்போட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு போட்டியாக அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியத் தொழிலதிபர்களும் நிலத்தை வாங்கி வருவதால் பழங்குடியினரின் பாரம்பரிய விளைநிலங்கள் முற்றிலும் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தி வனப்பகுதியில் தாளவாடி, கடம்பூர், ஆசனூர், பர்கூர் உள்ளிட்ட இடங்களில் ஒருகாலத்தில் வீரப்பன் கால்படாத இடமே இல்லை என்று சொல்லும் நிலை இருந்தது.

அப்போது இப் பகுதியில் பழங்குடியினர் தவிர பிற மக்கள் நடமாட்டம் அறவே இருந்ததில்லை.

வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு சில மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறியது. மன இறுக்கத்தைப் போக்கும் இயற்கைச் சூழல், உடலை சிலிர்ப்பூட்டி மகிழ்ச்சி தரும் மிதமான குளிர் போன்ற சிறப்பு அம்சங்களால் இப் பகுதி அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய தொழிலதிபர்களின் கண்பார்வையில் பட்டது.

தங்களது அரசியல் செல்வாக்கு, ஆள்பலம், பண பலம் ஆகியவற்றைப் பயன்படுத்திய இவர்கள், பண்ணைத் தோட்டம், விருந்தினர் இல்லம், ஓய்வு இல்லம் உள்ளிட்டவற்றை மலைப் பகுதியில் உருவாக்கினர்.

இந்நிலை இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஈரோடு, கோவை மாவட்டத்தில் பிரதானக் கட்சிகளில் முக்கிய பொறுப்பை வகித்த, வகிக்கும் அரசியல்வாதிகள், மற்றும் சத்தி தொகுதியில் இதுவரை இருந்த எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோருக்கு சத்தி வனப் பகுதியில் பண்ணைத் தோட்டங்கள் உள்ளன. ஒருபுறம் அரசியல்வாதிகள் என்றால் மற்றொருபுறம் முக்கியத் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளால் பழங்குடியினர் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.

வீரப்பன் காட்டுப் பகுதியில் ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் பகுதி தொழிலதிபர்களின் ஓய்வு இல்லங்கள், பண்ணைத் தோட்டங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆசனூரில் பல ஏக்கர் வாங்கியுள்ளார். தொலைதூரத்தில் இருக்கும் தொழிலதிபர்களைக்கூட கவர்ந்து இழுக்கும் இடமாக வீரப்பன் காடு மாறிவிட்டது.

சுமார் 30 ஏக்கர், 50 ஏக்கர் என வாங்கியுள்ள தொழிலதிபர்கள், வார விடுமுறை நாள்களில் இங்கே தங்கியிருந்து இரவு நேரங்களில் தங்களது நிலத்துக்குள்ளேயே மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதை பொழுதுபோக்காக வைத்துள்ளனர் என்பது பழங்குடியினரின் பிரதான குற்றச்சாட்டு.

ஈரோடு மாவட்டத்தில் ஏற்கெனவே பணியாற்றிய ஆட்சியருக்கு, ஆசனூரில் பல ஏக்கர் நிலம் உள்ளது என்கின்றனர் பழங்குடியினருக்காக போராடிவரும் தன்னார்வ அமைப்பினர்.

அதுபோல பவானிசாகர் அருகே நரிக் குறவருக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலத்தை முன்னறிவிப்பு இன்றி ஆக்கிரமித்ததாக பிரதான எதிர்க்கட்சி அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழ்நாடு பழங்குடியினர் சங்க மாவட்ட அமைப்பாளர் எஸ்.மோகன்குமார் கூறியது:

ஈரோடு மாவட்ட பழங்குடியினருக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை குடும்பத்தில் ஏதாவது ஒரு வாரிசுதாரர்களிடம் மட்டும் கையெழுத்துப் பெற்றுவிட்டு மற்றவர்களின் கையெழுத்தை போலியாக போட்டு ஆக்கிரமிக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் பலத்துக்கு சமமாக பழங்குடியினரால் ஈடுகொடுக்க முடியவில்லை.

பழங்குடியினரின் நிலங்களுக்கு பட்டா இல்லாததும், அவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததும் நிலத்தை அபகரிப்பவர்களுக்கு சாதகமாக மாறிவிடுகிறது. இதைத் தடுக்க தனிச்சட்டம் தேவை என்றார் மோகன்குமார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் த.உதயச்சந்திரன் கூறியது:

பழங்குடியினர் இடங்களை வேறு நபர்கள் வாங்குவதைத் தடுக்க போதிய சட்டங்கள் இல்லை. இருப்பினும் நிலத்தை அபகரிப்பது, சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

வீரப்பன் காட்டில் களைகட்டும் ரியல் எஸ்டேட் தொழில்

பீ.ஜெபலீன் ஜான் ஆர்.சிவக்குமார் டி.சாம்ராஜ்

ஈரோடு, டிச.5: சந்தன வீரப்பன் காட்டில் ரியல் எஸ்டேட் தொழில் களை கட்டியுள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 ஆயிரமாக இருந்த ஒரு ஏக்கர் நிலம் இப்போது ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனையாகிறது.

“”உதகை, முதுமலை போல வெகுவிரைவில் இதுவும் சுற்றுலாத்தலமாக விளங்கும். விரைவில் பலமடங்கு விலை உயரும்” -இது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வைத்துள்ள விளம்பரத் தட்டிகளில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்.

வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் இதுபோன்ற பல்வேறு கவர்ச்சிகர வாசகங்கள் அடங்கிய தட்டிகள் மைசூர் பிரதான சாலைகளில் காணப்படுகின்றன.

தங்கும் விடுதி, ரிசார்ட் போன்றவற்றில் இரு நாள்கள், ஒரு வாரம் என தங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு, மிதமான குளிர் பிரதேசமான இப் பகுதி மிகவும் பிடித்ததாக மாறி வருகிறது.

சொந்தமாகத் தங்கும் விடுதி கட்டிக்கொண்டால் என்ன? என்ற ஆசை எழும் சுற்றுலாப் பயணிகளை எளிதில் கவர்ந்து விடுகின்றனர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர். தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு ஏதுவாக 15 சென்ட், 20 சென்ட் எனத் தரம் பிரித்து நிலங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தாளவாடி, கடம்பூர் பகுதியில் கிட்டத்தட்ட 70 சதவீதம் இடம் பழங்குடியினர் வசமிருந்து கைமாறிவிட்டது என்கின்றனர் பழங்குடியினர் நல போராட்ட அமைப்பினர். இப்போது ஆசனூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

இப் பகுதியில் ஒரு சென்ட் இடம் ரூ.18 ஆயிரம் (பிரதான சாலையில் இருந்து 2 கி.மீ. உள்பகுதியில்) முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கோவை, திருப்பூர் ரியல் எஸ்டேட் நிறுவனங்களே இங்கு பெரும்பாலும் நில விற்பனையில் ஈடுபட்டுள்ளன.

மலைப் பகுதியில் இருக்கும் மக்களிடம் ஆசை வார்த்தை காட்டி மலிவு விலையில் இடத்தை வாங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், சுற்றுலாப் பயணிகளிடம் விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.

மலைப்பகுதி மக்களிடம் இருக்கும் நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கைமாற்ற இப் பகுதிகளில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் துணைபோகின்றனர் என்பது பழங்குடியினர் நலப் போராட்ட அமைப்பினரின் பிரதான குற்றச்சாட்டு.

தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்க மாநிலத் தலைவரும், நீதிபதி சதாசிவம் கமிஷன் அறிக்கை வெளிவரக் காரணமாக இருந்தவருமான வி.பி.குணசேகரன் கூறியது:

விற்பனைக்காகக் காத்திருக்கும் மனைகள்.

தாளவாடி, கடம்பூர் பகுதியில் கிட்டத்தட்ட 70 சதவீதம் இடம் பழங்குடியினர் வசமிருந்து கைமாறிவிட்டது என்கின்றனர் பழங்குடியினர் நல போராட்ட அமைப்பினர். இப்போது ஆசனூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

மலைப்பகுதி மக்களின் நிலத்தை, சமவெளி மக்கள் ஆக்கிரமிப்பதால் பழங்குடியினரின் உரிமை, வேலைவாய்ப்பு பறிபோகிறது. தாளவாடி, கடம்பூர், ஆசனூர் பகுதியில்தான் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வந்தது. இப்போது பர்கூர் மலைப் பகுதியையும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் குறிவைத்துவிட்டனர்.

பிகார், மத்தியப்பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் பழங்குடியின நிலங்களை பிறர் ஆக்கிரமிப்பதைத் தடுக்க தனிச்சட்டம் உள்ளது. இதுபோன்ற சட்டம் தமிழகத்திலும் தேவை. 1996-ல் அப்போதைய வனத்துறை அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் செய்த பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார் குணசேகரன்.

இது குறித்து மாநில வனத்துறை வாரிய உறுப்பினரும், மாவட்ட கெüரவ வனஉயிரின காப்பாளருமான ப.கந்தசாமி கூறியது:

தென்னிந்தியாவிலேயே அதிகமாக சத்தியமங்கல வனத்தில்தான் யானைகள், புலிகள், காட்டுமாடுகள், கடமான், புள்ளிமான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள், பல்வேறு ரக பறவைகள் காணப்படுகின்றன. சத்தி வன அழிவுக்குக் காரணமே ரிசார்ட்கள் மற்றும் தங்கும் விடுதிகள்தான். மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் வனவிலங்கள் எண்ணிக்கை குறையத் துவங்கிவிட்டது. வனப் பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்றுவது தவறான நடவடிக்கை. வனப்பரப்பு குறைவது மனித இன அழிவுக்கு துவக்கமாக மாறிவிடும் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இதற்குத் தீர்வாக இருக்கும் என்றார் கந்தசாமி.

சமவெளிப் பகுதிகளை வளைத்துப்போட்டு நிலத்துக்கு செயற்கை விலையேற்றத்தை ஏற்படுத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் அடுத்த இலக்கு, மலைப் பகுதியாக மாறியுள்ளது. பழங்குடியினர் மட்டுமன்றி வன உயிரினத்தையும் காப்பாற்ற இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

Posted in abuse, Acres, ADMK, Agriculture, AIADMK, Assets, Bargoor, Bargur, barkoor, Don, encroachments, Environment, Erode, Estate, Farming, Farmlands, Forest, Govt, Guesthouses, Jaya, Jeya, JJ, Land, MLA, MP, Natives, Plants, PMK, Politics, Power, Real Estate, Representatives, Resorts, Sandal, Sandalwood, Sathiamangalam, Sathiyamangalam, Sathyamangalam, Sathyamankalam, SC, Sightseeing, smuggler, ST, Tourists, Tours, Travel, Travelers, Trees, Tribals, Village, Villager, villagers, Villages, Woods | Leave a Comment »