Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for திசெம்பர் 17th, 2007

Orient-Express snubs Tata, says Indian tag tacky: Is India Bad for Jaguar?

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

வெள்ளையர்களின் நீங்காத நிறவெறி

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

அக்ரஹாரத்தில் கழுதை : டாடா, ஜகு�

எங்கும் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை வியாபித்து நிற்கிறது என்று நாம் மார்தட்டிப் பேசிக் கொள்கிறோம்.

ஆனால், இத்தகைய காலகட்டத்திலும் “வெள்ளையர்களே அனைத்திலும் உயர்ந்தவர்கள்; வெள்ளையர் அல்லாதோர் கீழேதான்’, என்று மற்றவர்களை மட்டந்தட்டும் நிறவெறிக் கொள்கை சர்வதேச நிதி மற்றும் வர்த்தக அமைப்புகளில் தலைதூக்கி நிற்கிறது.

நிறவெறிக் கொள்கை ஊறிவிட்ட உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

உருக்குத் தொழில் உலகின் மன்னர் என்ற பெருமையாகப் பேசப்படும் வெளிநாடு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டலும் இந்த நிறவெறிக் கலாசாரத்தால் பாரபட்சமாக நடத்தப்பட்டவர்தான்.

ஐரோப்பாவில் இயங்கும் ஆர்சலர் என்ற நிறுவனத்தின் உரிமையை தனது கட்டுக்குள் கொண்டுவர அவர் முயன்றார். ஆனால் வெள்ளையர் அல்லாத ஒருவரது பணம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் நிராகரித்து விட்டார்.

ஆனால் பிற்பாடு, தான் சொன்ன வார்த்தை தவறானது என்பதை அந்த நிர்வாகியே உணர்ந்து, மாற்றிக் கொண்டார் என்பது வேறு கதை. பின்னர் அந்த நிர்வாகியின் எதிரிலேயே ஆர்சலர் நிறுவனம் ஆர்சலர்-மிட்டல் என்று மாறியதும் வேறு விஷயம்.

இன்னொரு சம்பவம் அமெரிக்காவைச் சேர்ந்த சொகுசு ஹோட்டல் நிறுவனமான ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தொடர்பானது ஆகும்.

இந்த ஹோட்டலுடன் கூட்டு வைக்க டாடா நிறுவனம் ஆசைப்பட்டது. ஆனால் நிறவெறியில் ஊறிய அதன் தலைமை நிர்வாகம், டாடாவின் ஆசையை நிராகரித்து கேலியும் கிண்டலும் செய்தது.

“சொகுசின் மொத்த உருவகமாகத் திகழும் எமது பிராண்டை உங்களது பிராண்டுடன் சேர்ப்பதால் எங்களது பிராண்டின் நற்பெயர் என்னாவது’ என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி குத்தலாகப் பேசினார்.

இப்படி அவர் பேசியதற்குக் காரணம் கூட்டுவைக்கும் யோசனை வேண்டாம் என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டும் மீண்டும் அதற்காக டாடா நிறுவனம் முயற்சி மேற்கொண்டதே ஆகும். இப்படி டாடா நிறுவனம் செய்தது தம்மை அவமதிப்பு செய்வதாகக் கருதிவிட்டார் ஓரியண்ட் எக்ஸ்பிரஸின் தலைமை நிர்வாகி பால் வொயிட்.

இன்னொரு சம்பவத்தை இனி பார்ப்போம்.

போர்டு லக்சுரி மாடல் கார் உற்பத்தி நிறுவனத்தை வாங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முயற்சி செய்தது. அதை அறிந்த அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவர் கடந்த வாரம் பொங்கி எழுந்தார். இதை அமெரிக்க மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.

இத்தகைய சம்பவங்களை குப்பைகள் என்று ஒதுக்கி, கேலிக்கூத்துகள் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். டாடா பிராண்ட் என்றாலே தனி மவுசுதான். இதை உலகமே நன்கு அறியும்.

எத்தனையோ இந்தியர்களை அமெரிக்க மக்கள் கனிவுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய நிதி நிறுவனம் சிட்டி குரூப். இதன் தலைவராக விக்ரம் பண்டிட்டை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதுபோல் அமெரிக்காவின் தேசிய உணர்வுக்கு அடையாளமாக திகழும் பெப்சி நிறுவனத்தின் தலைவராக இந்திரா நூயி அமர்ந்துள்ளதையும் அந்நாட்டு மக்கள் ஏற்கத்தானே செய்தனர்.

இவர்களுக்கு முன்பாக கியூலெட்-பக்கார்ட் நிறுவனத்தின் பொது மேலாளாராக ராஜீவ் குப்தா, எடி அண்ட் டி நிறுவனத்தின் தலைவராக அரூண் நேத்ரவலி, மெக்கன்சி நிறுவனத்தின் தலைவராக ரஜத் குப்தா போன்றோர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

ஸ்டான்சார்ட் நிறுவனத்தை ராணா தல்வார் தலைமை ஏற்று நடத்துகிறார்.

மேலும் பென்டியம் சிப்பை உருவாக்கிய வினோத் டாம், ஹாட்மெயிலை நிறுவிய சபீர் பாடியா ஆகியோரும் இந்தியர்கள்தான்.

அறிவாற்றல் என்று வரும்போது வெள்ளையர் அல்லாதோரை விரும்புகிறார்கள் வெள்ளையர்கள். அப்போது, நன்மதிப்பு பற்றிப் பேசுவதில்லை. நிறவெறி என்று வரும்போது அவர்களின் மூர்க்கத்தனம் வெளிப்பட்டு விடுகிறது.

அமெரிக்கத் தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் கூட தான் யார் என்பதை காட்டிவிடுகிறார்கள். அண்மையில் கேசவன் என்ற விஞ்ஞானி விசாவுக்காக சென்னையில் உள்ள தூதரகத்துக்குச் சென்றிருந்தார். கொளுத்தும் வெயிலில் அவர் ஒரு மணி நேரம் வெளியில் காத்திருக்க நேர்ந்தது.

பின்னர், உள்ளே சென்றதும் 2 மணி நேரம் காத்திருந்தார். “உங்களிடம் ஆலோசனை நடத்த அவசியம் இல்லை. இந்த வினாத்தாள் பட்டியலை நிரப்பித்தாருங்கள்’ என்று மட்டும் அவரிடம் கூறியுள்ளனர்.

மற்றொரு விஞ்ஞானியான கோவர்தன் மேத்தாவுக்கும் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. தனது ஆராய்ச்சியைப் பற்றி மறைத்துவிட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டு அவருக்கு விசா நிராகரிக்கப்பட்டது.

இத்தகைய குளறுபடிகளுக்கு நம்மையேதான் நாம் நொந்து கொள்ளவேண்டும்.

அண்மையில் அமெரிக்காவின் செயல்பாடு பற்றி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூட வேதனையுடன் பேசினார்.

அமெரிக்காவில் கிளைகள் திறக்க இந்தியாவைச் சேர்ந்த வங்கிகள் விரும்பினால் அவை மீது அமெரிக்கா பாரபட்சம் காட்டுகிறதாம்.

இப்படிப் புகார் கூறுவதால் அவர்கள் மசிந்து விடுவார்களா என்ன? இந்தியாவில் தொழில் நடத்த வரும் அவர்களை இங்கும் அங்கும் என அலைகழித்தால் எல்லாம் சரியாகிவிடும். இது நடக்குமா?

இது குழம்பிப்போன உலகம். மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை நாமும் அவர்களுக்குச் செய்ய வேண்டும். அப்போது மரியாதை தானாகவந்து சேரும்.

கொடுக்கும் வழியிலேயே நாமும் திருப்பிக் கொடுப்போம்.

தமிழில்: ஜி. கணபதி

Posted in acquisition, Analysis, Arcelor, Auto, Automobile, Banks, Brand, Capitalization, Cars, CEO, Citi, CxO, Discrimination, Economy, England, Equity, Finance, Ford, Govt, Hotels, Image, India, Jaguar, Law, Luxury, M&A, Manufacture, Manufacturing, markets, Mergers, Mittal, MNC, NRI, Offshoring, Orient Express, Outsourcing, Private, Protection, Public, racism, Reverse, Rich, rules, Shares, Steel, Stocks, Supremacy, TATA, Tax, Wealthy, White | Leave a Comment »

Leena Manimekalai: Chennai Loyola College & Thupatta Police

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

துப்பட்டாவில் படபடக்கும் தமிழ்க் கலாசாரம்

லீனா மணிமேகலை

அறிவும் ஆற்றலும் கொண்ட பெண் இந்த சமூகத்தில் தனிமனிதராக மதிக்கப்படுகிறாரா என்ற கேள்விக்கு “இல்லை’ என்று சொல்லவேண்டிய இடத்தில்தான் நாம் இப்போதும் இருக்கிறோம்.

பெண்ணின் இருப்பு வெறும் உடலாகவே கணக்கிடப்படுகிறது. இந்திய – குறிப்பாக – தமிழ்ச் சமூகத்தின் கலாசார நடவடிக்கை என்பது பெண்ணுடல் மீதான கண்காணிப்பாகவும் விசாரணையாகவுமே குறுகிக் கிடக்கிறது.

சமூகம், முதலில் தனது அதிகார இயந்திரங்களான மதத்தையும் சாதியையும் கொண்டு பெண்ணின் விருப்பங்களையும் தேர்வுகளையும் கட்டுப்படுத்துகிறது. அடுத்ததாக கற்பு / தாய்மை போன்ற கற்பிதங்களால் பெண்ணின் காதல் / காமம் ஆகிய உணர்வுகளைக் கட்டமைக்கிறது.

தொடர்ச்சியாக குடும்பம், உழைக்குமிடம் தவிர்த்த பெண்ணின் வெளியையும் மறுதலிக்கிறது. இந்த வரையறையிலிருந்து விலகி தனித்த அடையாளத்துடன் ஒரு பெண் தனக்கென பாதையை வகுத்துக்கொள்ள முற்படும்போது அது குருட்டுச்சந்தாகவே முடிகிறது என்பதுதான் கசப்பான உண்மை.

சமீபத்தில் சென்னை லயோலா கல்லூரியில் காட்சி ஊடகவியல் துறையினர், “கனாக்களம் – 2007′ என்கிற கருத்தரங்கின் கலந்துரையாடலில் “சினிமாவும் சமூகமும்’ என்னும் தலைப்பில் என்னைப் பேச அழைத்திருந்தனர். காலை பத்து மணியளவில் கல்லூரி வாசலை அடைந்த என்னை நிறுத்திய கல்லூரியின் காவலர்கள், அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டனர். நான் அழைப்பிதழைக் காட்டினேன்.

“உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் ஜீன்ஸýம் குர்தாவும் அணிந்திருக்கிறீர்கள் – துப்பட்டா அணியவில்லை’ என்றார்கள். ஒரு நிமிடம் எனக்குத் தலைசுற்றியது; நான் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேனா அல்லது தாலிபான்களின் ஆப்கானிஸ்தானில் இருக்கிறேனா என்ற இடக்குழப்பம் ஏற்பட்டது.

கிணுகிணுத்த கைபேசியைத் தட்டினால் அமைப்பாளர்கள், “சிறிது நேரம் பொறுங்கள், நாங்கள் வந்துபேசி அழைத்துச் செல்கிறோம்’ என்றார்கள். நிமிடங்களில் ஒரு மாணவி ஓடிவந்து கறுப்புத் துப்பட்டாவைத் தந்து “இதை அணிந்துகொண்டு உள்ளே வாருங்கள்’ எனக் கெஞ்சும் தொனியில் கேட்டபோது எனக்குச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.

“”சுதந்திரமாக ஆடையணிந்துகூட வரமுடியாத இடத்தில், சுதந்திரமான சினிமாவை நேசித்துப் பணியாற்றிக் கொண்டிருக்கும் எனக்கு எந்தப் பணியும் இல்லை” என்று மட்டும் குறிப்பிட்டுவிட்டுத் திரும்பிவிட்டேன்.

அழைப்பிதழில் இடம்பெற்றிருந்த மற்ற பேச்சாளர்களான பாலுமகேந்திரா, பாமரன், ஞாநி, வசந்தபாலன், எஸ். ராமகிருஷ்ணன், லெனின், அஜயன்பாலா ஆகியோர் ஆண்களாக இருந்ததால், அவர்களுக்குத் துப்பட்டா பிரச்னை இருந்திருக்காது என்று சிந்தனை ஓடியது.

கல்வி நிலையங்கள் தமிழ்க் கலாசாரத்தைத் துப்பட்டாவில் கட்டிக்காக்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டனவா என்று கடுங்கோபம் வந்தது. பதினெட்டு வயதில் தங்கள் நாட்டை யார் ஆள வேண்டும் என்று முடிவு செய்யும் ஓட்டுரிமை பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்குத் தங்களுக்கான உடையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுப்பதையே பல தளங்களில் நான் எதிர்த்துப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன்.

எழுத்தும் சினிமாவுமாக விடுதலையைப் பற்றிய சிந்தனையையும் படைப்புகளையும் மட்டுமே சுவாசித்துக் கொண்டிருக்கும் என்னை, நிகழ்ச்சிக்கு விருந்தினராக அழைத்து, துப்பட்டாவைக் கொடுத்து, என் இருப்பையே கேள்விக்குறியாக்கிவிட்ட லயோலா கல்லூரி எனக்கு என்ன பதில் வைத்திருக்கிறது?

ஒவ்வோர் ஆண்டும் தரத்தின் அடிப்படையிலான சர்வேக்களில், இந்தியாவின் சிறந்த கல்லூரிகளின் தரவரிசையில் ஐந்து முதல் பத்தாம் இடத்திற்குள் ஸ்டார் தகுதியில் இடம்பிடிக்கும் லயோலா கல்லூரி, தனி மனித உரிமைக்குத் தரும் மரியாதையில் எந்த இடத்தில் தன்னை நிறுத்திக் கொள்கிறது?

பல கல்லூரிகளில் நடைமுறையிலிருக்கும் பெண்களுக்கான உடை பற்றிய கோட்பாடுகளின் வரலாறு மிக சுவாரஸ்யமானது. கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள், மாணவிகளின் உடை விஷயத்தால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்-படிப்பிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. அதனால் கல்லூரி மேலாண்மை மாணவிகளின் உடைகளில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்களாம். உடனே கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்குத் துப்பட்டா கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறது; ஜீன்ஸிற்குத் தடா போட்டிருக்கிறது என்று கேள்வி.

இதை விசாரித்துக் கொண்டிருக்கும்போது எனது தோழரும், பெண்ணிய சிந்தனையாளரும், எழுத்தாளருமான ஓவியா ஒரு வரலாற்று நிகழ்ச்சியை நினைவுபடுத்தினார். சுதந்திரத்திற்கு முன் நமது நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி, கல்லூரியில் அனுமதி கேட்டபோது மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் “ஒரு பெண் கல்லூரிக்கு வருவதா, எங்கள் பிள்ளைகள் கெட்டுப்போவார்கள் – நாங்கள் விண்ணப்பங்களைத் திரும்பப் பெறுவோம்’ என்று சொன்னார்களாம். அதைக் கேள்விப்பட்டு கலக்கமுற்ற தாளாளர், அன்றைய அரசுப் பிரதிநிதியான வெள்ளைக்கார கவர்னரிடம் முறையிட்டாராம்.

வெள்ளைத்துரை அதற்கு, “பரவாயில்லை, அந்தப் பெண் மட்டும் படித்தால் போதும், மாணவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்’ என்றாராம். அந்த வெள்ளைத்துரைக்குப் பாவம் நமது கலாசாரம் தெரியவில்லை. தவறு செய்துவிட்டார்! சுதந்திர இந்தியாவின் கல்லூரி நிறுவனர்கள் அந்தத் தவறைச் செய்வார்களா என்ன? அப்புறம் தமிழ்க் கலாசாரம், பண்பாடெல்லாம் என்னாவது?

பெற்றோர்களை தங்கள் பிள்ளைகளுக்குப் புலனடக்கம் கற்றுத்தரச் சொல்லியனுப்பாமல், மாணவிகளுக்கு உடைக் கோட்பாடுகளைப் பிறப்பிக்கிறார்கள். நிச்சயம் மாணவர்கள் அணியும் உடையில் நமது மாணவிகள் மனக்கிலேசம் அடைய மாட்டார்கள். அப்படியே இருந்தாலும், சிரிப்பையும் சிறுநீரையும்கூட சிறுவயதிலிருந்து அடக்கப் பழகியிருக்கும் நமது பெண்களுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்?

எது எப்படியோ, துப்பட்டாவை எடுத்துவந்து என்னை அணிந்துகொள்ளச் சொன்ன மாணவியின் முகம் என்னைத் தூங்கவிடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது. எப்படிப்பட்ட கோழைப் பூச்சிகளாக மாணவ சமுதாயத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்? “உனக்குச் சுதந்திரம் வழங்க மறுக்கும் சமூகத்திடம் எந்தச் சமரசமும் செய்து கொள்ளாதே’ என்று ஊக்குவிக்காத கல்வியால் பெண்ணுக்கு என்ன பயன் இருக்க முடியும்?

குடும்பம், கல்வி நிறுவனம், சமூகம் என எல்லா அமைப்புகளும் பெண்ணின் உடலை மனதைக் கண்காணிக்கும் காவல் நிலையங்களாகச் செயல்படுவதால் நட்டமடைவது பெண் மட்டுமல்ல, மொத்த சமூகமும்தான்.

அரசோ, ஆணையோ, நிறுவனமோ, ஏன் தனிமனிதனோ, உறவோ, வாழ்க்கைத் துணையோ, சினேகிதனோகூட எதன் பெயராலோ அதிகாரத்தைச் செலுத்தும்போது அதை ஏன் என்று கேள்வி கேட்க முடியாத பூஞ்சைக்காளான்களாக நம்மை உருவாக்கிக் கொள்வதற்கு கல்வி அவசியமே இல்லை. பேசாமல் மாடு மேய்க்கப் போகலாம்.

பெண் விடுதலை உடையில் இல்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதைவிட உண்மை ஆண் ஆதிக்கம் என்பது பெண்களின் உடை விஷயத்தில் இருக்கிறது என்பதுதான்.

பிரச்னை “துப்பட்டா’ அல்ல. பெண்களை துப்பட்டா போடச் சொல்லும் ஆண்களின் மனோபாவம். பாமரன்களும், அஜயன்பாலாக்களும், வசந்தபாலன்களும், ஞாநிகளும் இந்தச் சம்பவத்தை சட்டை செய்யாததிலிருந்தே அவர்களது சமூகத்தில் எப்படிப்பட்ட சிந்தனை நிலவுகிறது என்பது தெரிகிறது. இதுதான் பெருவாரியான ஆண்களின் மனநிலை என்பதே உண்மை.

கல்விக்கூடங்களும் சரி, தங்கள் வகுப்பறைகளை மூடிவிட்டு துப்பட்டா கடைகள் நடத்தலாம். கலாசாரத்தையும் காத்துக் கொள்ளலாம். வருமானத்தையும் பெருக்கிக் கொள்ளலாம். வேறென்ன செய்வது?

(கட்டுரையாளர்: கவிஞர், திரைப்பட இயக்குநர்)

Posted in Censor, Colleges, Culture, Dhupatta, Discrimination, Dress, Fashion, Females, Feminism, Freedom, Her, Heritage, Independence, Lady, Leena, Liberation, Loyola, Manimekalai, Police, She, Society, Thupatta, Woman, Women | 16 Comments »

Promoting the lesser known tourist spots: The Tamil Nadu Tourism Development Corporation (TTDC)

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

தமிழகத்தில் பிரபலமாகாத சுற்றுலாத் தலங்கள்- அரசு புது முடிவு

தமிழகத்தில் நன்கு அறிமுகமில்லாத 18 சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்த தமிழக அரசு புதிய முடிவு எடுத்துள்ளது.

இச் சுற்றுலாத் தலங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முன்வரும் தனியார் தொழில் அதிபர்களுக்கு ரூ. 1 கோடி வரை மானியம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

27.09.2007-அன்று இதற்கான உத்தரவை அரசு வெளியிட்டதாக சுற்றுலாத் துறை செயலர் வெ. இறையன்பு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியது: உதகை, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்கள் நன்கு பிரபலமானவை. ஆனால் அதைப்போல் நல்ல கோடை வாசஸ்தலங்கள் தமிழகத்தில் நிறைய உள்ளன இங்கு ஆண்டு முழுவதும் நல்ல தட்ப வெட்பம், சுற்றுச்சூழல் நிலவுகின்றன. ஆனால் இவை மக்களிடம் பிரபலமாகவில்லை.

தற்போது அரசு இதுபோன்ற 18 சுற்றுலாத் தலங்களை தேர்ந்தெடுத்து அவற்றை பிரபலப்படுத்த முடிவு செய்துள்ளது. இங்கு பயணிகள் தங்கிச் செல்லும் வகையில் ஹோட்டல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

பிரபலப்படுத்தவுள்ள சுற்றுலா தலங்கள்:

  1. பெரியபாளையம் மற்றும்
  2. பழவேற்காடு (திருவள்ளூர் மாவட்டம்),
  3. ஏலகிரி (வேலூர்),
  4. திருக்கடையூர்,
  5. வேதாரண்யம் மற்றும்
  6. தரங்கம்பாடி (நாகப்பட்டினம்),
  7. திருமணஞ்சேரி (தஞ்சை),
  8. சித்தனவாசல் (புதுக்கோட்டை),
  9. புளியஞ்சோலை (பெரம்பலூர்),
  10. தாரமங்கலம் (சேலம்),
  11. கொல்லிமலை மற்றும்
  12. ஒகேனக்கல் (தருமபுரி),
  13. பவானி கூடுதுறை (ஈரோடு),
  14. வால்பாறை (கோயம்புத்தூர்),
  15. மேகமலை (தேனி),
  16. சிறுமலை (திண்டுக்கல்),
  17. திருப்புடைமருதூர் (திருநெல்வேலி),
  18. திருப்பரப்பு (கன்னியாகுமரி).

மேற்கண்ட சுற்றுலாத் தலங்களில் பொழுதுபோக்கு பூங்காக்கள், கோல்ஃப் மைதானம், ரோப் கார், படகுத்துறை உள்ளிட்ட சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்தும் தொழில் முனைவோருக்கு மொத்த முதலீட்டில் 10 சதவீத மானியம், அதாவது ரூ. 1 கோடிக்கு மிகாமல் மானியம் வழங்கப்படும்.

மேலும், பாரம்பரிய மிக்க கட்டடங்களைப் பாதுகாப்பது, ஸ்டார் ஓட்டல்கள் கட்டுவது ஆகியவற்றுக்கும் மானியம் தரப்படும்.

புதிய சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்துவதன் மூலம் அப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பும், பொருளாதார முன்னேற்றமும் உறுதி செய்யப்படும்.

இந்த 18 சுற்றுலாத் தலங்களை காலண்டரில் அச்சடித்து வடமாநில ஹோட்டல்களுக்கும், சுற்றுலா வழிகாட்டிகளுக்கும் விநியோகிக்க உள்ளோம்.

மாஸ்டர் பிளான்

தமிழக சுற்றுலா துறையில் தனியார் துறையினரை ஈடுபடுத்தும் முக்கிய முடிவை கடந்த ஆண்டு அரசு வெளியிட்டது.

அதன்படி தமிழக சுற்றுலா மையங்களை வெளிநாட்டில் மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்த மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதி ஆண்டில் தமிழக சுற்றுலா துறை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ. 12 கோடி செலவிடப்பட்டது. இந்த ஆண்டு நவம்பர் வரை ரூ. 6 கோடி வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன என்றார் இறையன்பு.

Posted in Chithanavasal, Development, Hogenakal, Hogenakkal, Kollimalai, Pazhaverkadu, Periapalaiam, Periapalaiyam, Periyapalaiam, Periyapalaiyam, Places, Puliyancholai, spots, Tamil Nadu, Tharamangalam, Tharangambadi, Thirumanancheri, Thirumananjeri, Tourism, Tourist, Tourists, TTDC, Vaalparai, Valparai, Vedharaniam, Vedharaniyam, Vedharanyam, Vetharaniam, Vetharaniyam, Vetharanyam, Visit, Visitors, Yelagiri | 1 Comment »

Another Red Cross Staff Assassinated in Jaffna & Eelaventhan loses membership in Sri Lanka parliament

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

தவறு தன்னுடையதல்ல என்கிறார் ஈழவேந்தன்

இலங்கை நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த விடயத்தில் தான் ஒரு சூழ்நிலைக் கைதி என்றும் ஆகவே தனது நிலைமையை உணர்ந்து தனது கட்சித் தலைமைப்பீடம் தன்னை மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கும் என்று தான் நம்புவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.

தனது விடுமுறையை நீட்டிக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபையின் ஊடாக தான் ஒரு கடிதத்தை அனுப்பியதாகவும், ஆயினும், நாடாளுமன்ற பணியாளர் ஒருவர் வழங்கிய தவறான தகவல் காரணமாக அவர் அந்த கடிதத்தை கையளிக்காமல் விட்டுவிட்டதாகவும், அதனால்தான் இன்று தான் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்த நிலையில் தவறு தன்னுடையது அல்ல என்றும், குறிப்பிட்ட நாடாளுமன்ற அதிகாரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை (சிறியளவு தவறாயினும்) ஆகியோரின் தவறினாலேயே தான் தற்போது இந்த இக்கட்டான நிலைக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தின் இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு முன்னதாக நான்கு நாட்கள் தான் நாடாளுமன்றத்தில் சமூகமளித்திருந்து மூன்று உரைகளை ஆற்றியிருந்ததாகவும், ஆயினும் வாக்களிப்பு தினத்தன்றே தான் அதற்கு தடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தவிவகாரம் குறித்து ஈழவேந்தன் மற்றும் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே ஆகியோரது செவ்விகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


செஞ்சிலுவைச் சங்க ஊழியர் கொலை

யாழ் நகரப் பகுதி
யாழ் நகரப் பகுதி

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் கடந்த 14 ஆம் திகதி கடத்தப்பட்டு பின்னர் கைதடியில் சடலமாக நேற்று கண்டெடுக்கப்பட்ட செஞ்சிலுவைச் சங்க ஊழியராகிய 43 வயதுடைய சூரியகாந்தி தவராஜா கொல்லப்பட்டிருப்பதை சர்வதேச செஞ்சிலுவைக் குழு இன்று அறிக்கையொன்றின் மூலம் கண்டித்திருக்கின்றது,

இது குறித்து கருத்து தெரிவித்த சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் சார்பில் குரல் தரவல்ல அதிகாரியாகிய டாவிடே விக்னட்டி, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்டக் கிளையில் பல வருடங்களாக அவர் பணியாற்றி வந்துள்ளதுடன், மூன்று வருடங்களாக பருத்தித்துறை பிரிவின் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவராகவும் அவர் பணிபுரிந்துள்ளதாகத் தெரிவித்தார்.

தவராஜா கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினராலும் அதிகாரிகளினாலும் தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், இது, இந்த வருடத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாரதூரமான சம்பவமாகும் எனவும், இதனால், இலங்கை செஞ்சிலுவைச் சங்கமானது இன்று இலங்கையில் பணியாற்றும் செஞ்சிலுவைக் குழுவினர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்கள் பணியாற்றும் சூழல் குறித்தும் கவலையடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்தச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவில் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை சர்வதேச செம்பிறைச் சங்கம் கோரியிருக்கின்றது என்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் பேச்சாளர் டாவிடே விக்னட்டி தெரிவித்தார்.


Posted in Assassinations, Budget, dead, Eelam, Eelavendhan, Eelaventhan, Eezham, Eezhavendhan, Eezhaventhan, Jaffna, Killed, LTTE, Murder, NGO, Red Cross, RedCross, Sri lanka, Srilanka, UN, UNICEF, Volunteer, Volunteering, Volunteers | 1 Comment »

Book Review: TK Pattammal – Carnatic Legends – Nithya Raj (Kalki)

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

பட்டம்மாள் போட்ட பாதை – கல்கி (கர்னாடக இசை சிறப்பிதழ்)

கர்நாடக சங்கீத மேடையில், இன்று அரை டஜன் ஐச்வர்யாக்கள், ஒரு டஜன் காய்த்ரிகள், கால் டஜன் அம்ருதாக்கள், சங்கீதாக்கள், இன்னும் சாருலதாக்கள்… வண் ணமும் வனப்பும் விஷயதானமும் வழங் கிக்கொண்டிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் அஸ்திவாரம் போட் டவர், தமது எண்பத்தெட்டாவது வயதில் நம்மிடையே இசைபட வாழ்ந்து, சங்கீதக் கலையைக் கற்பித்து மகிழ்ந்துகொண் டிருக்கும் கான சரஸ்வதி டி.கே.பட்டம் மாள். பட்டம்மாளின் அம்மா ராஜம்மாள், ஒரு கல்யாணத்து நலங்கில் பாடியதைக் கூட பொறுக்காமல் அதட்டி நிறுத்தச் செய்துவிட்டார் அவருடைய மாமனார் – அதாவது டி.கே.பி. யின் தாத்தா. ‘குடும்பப் பெண்கள் சங்கீதம் பாடக்கூடாது – அதெல் லாம் தேவதாஸிகளின் பணி’ என்று ஆதிக் கமும் அனர்த்தமும் மிக்க சட்ட திட்டங்கள் நிலவிய காலம். ஆனால், குழந்தை பட்டாவுக்குப் பாட்டு வெகு இயல்பாக வந்தது.

பள்ளிக்கூட நாடகம், போட்டிகளில் பாடி, வெற்றி பெற, பட்டாவின் போட்டோ பேப்பரில் பிரசுரமானபோது, அப்பா தாமல் கிருஷ்ணசாமி அய்யர் வெல வெலத்துப் போனார்! ‘பெண்ணுக்குக் கல்யாணம் நடக்குமா?’

பட்டம்மாளுக்குக் கல்யாணமும் ஆயிற்று; அவரது சங்கீதமும் தழைத்து வளர்ந்தது. ஈசுவர அய்யரைத் திருமணம் செய்துகொண்ட பிறகும் தாமல் கிருஷ்ண சாமி அய்யர் பட்டம்மாள் (டி.கே) என்றே அவரது பெயர் நீடித்தது.

அன்று பட்டம்மாள் போராடி மேடை ஏறியதனால்தான் இன்று சுதாக்களுக்கும் ஜெய்ஸ்ரீகளுக்கும் ஐச்வர்யாக்களுக்கும் பாதை சுலபமாகியிருக்கிறது.

சங்கீத உலகில் அழகும் அமைதியும் மிக்க ஒரு சகாப்தத்தைப் படைத்த டி.கே.பி. கடந்து வந்த பாதை என்ன? அதன் வளைவு – நெளிவுகள், ஏற்ற – இறக்கங்கள், சுக – துக்கங்கள் என்று ஆராய்ந்து அழகான நூல் ஒன்றை வெளியிட்டிருக் கிறது பாரதிய வித்யா பவன். அற்புதமான, அரிய புகைப்படங்கள் வரலாற்றுப் பதிவு களாக இடம் பெற்றுள்ள இந்நூல், உயர்ரக தாளில் அச்சிடப்பட்டுக் கரம் கூப்பிச் சிரிக்கும் டி.கே.பி.யின் கனிந்த முகத்தை அட்டையில் தாங்கி, உடனே எடுத்துப் படிக்கத் தூண்டுகிறது.

நாற்பத்து நான்கு ஆண்டுகளாக டி.கே.பி. வீட்டில் சமையல் செய்து வரும் கிருஷ்ணமூர்த்தி, மலேஷியா விலிருந்து வந்துள்ள சீன சிஷ்யர் சோங் சியூ சென் (இவ ருக்கு சாய் மதனா என்று பெயர் மாற்றம் செய்துள்ளார் டி.கே.பி…) என்று குட்டி சுவாரஸ் யங்கள்…

டி.கே.பி.யுடன் பாடுவதற் காக, தம்பி டி.கே.ஜெயராமனும் மருமகள் லலிதா சிவகுமாரும் எவ்வாறு தங்கள் சுருதியை மாற்றிக்கொண் டார்கள் என்பது போன்ற தீர்க்கமான விஷயங்கள்…

புத்தகத்தைச் சுவாரஸ்யமாகத் தொகுத்து எழுதியிருக்கிறார் நித்யா ராஜ். விஷய கனம் டி.கே.பி.யின் பல்லவி அளவுக்கு இருக்க, ஆங்கில மொழி நடைமட்டும் சர்வதேச தரத்தில் அமையாதது சற்றே நெருடல்.

(தொடர்புக்கு: பாரதிய வித்யா பவன், கோயமுத்தூர் கேந்திரா, 352, ஈ.ஆ. சாலை, ஆர்.எஸ்.புரம், கோவை – 641 002.)

Posted in Biosketch, Books, Carnatic, Faces, Females, Kalki, Ladies, Legends, Margazhi, Margazi, music, Nithiyashree, Nithiyasri, Nithyashree, Nithyasri, Pattammaal, Pattammal, people, Performers, Reviews, Shows, Singers, Stage, TKP | 2 Comments »

Saravana Bhawan Annachi Rajagopal lawsuit: Justice System & Power – Law and Order

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

நீதிக்குச் சவால்?

சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. ஆனால், அதைப் பற்றி யாருமே கவலைப்படுவதாகத் தெரியவில்லை என்பது மட்டுமல்ல, பத்திரிகைகளும் பெரிய முக்கியத்துவம் தரவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் மீது தொடரப்பட்ட கொலை வழக்கில் அவருக்குப் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது செஷன்ஸ் நீதிமன்றம். இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார் சரவணபவன் அதிபர் ராஜகோபால். மேல்முறையீடு பரிசீலனையில் இருப்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், தனது தண்டனையை எதிர்த்து ராஜகோபாலனும், அவரது தண்டனையை உறுதிப்படுத்தக் கோரி அரசும் தொடர்ந்திருக்கும் மேல்முறையீடு மனுக்கள் மீது விசாரணை நடைபெறாமல் தள்ளிப் போடப்படுகிறது. அதற்குக் காரணம் என்ன தெரியுமா? எந்த நீதிபதிகளிடம் இந்த முறையீடுகள் விசாரணைக்கு வந்தாலும், அவர்கள் மிரட்டப்படுவதால் நீதிபதிகள் வழக்கை விசாரிக்க முன்வருவதில்லை என்பதுதான்.

இதற்கு முன்பு நீதிபதிகள் டி. முருகேசன் மற்றும் கே.என். பாஷா ஆகியோரால் மறுக்கப்பட்டு, நீதிபதிகள் பி.டி. தினகரன், ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு மாற்றப்பட்டு அவர்களும் விசாரிக்க மறுத்துவிட்ட நிலையில், இப்போது நீதிபதிகள் டி. முருகேசன், பெரிய கருப்பையா இருவரின் நீதிமன்றத்தில் மனுக்கள் விசாரணைக்கு வந்தன.

மிகுந்த தயக்கத்துடன் இந்த வழக்கை விசாரிக்க முன்வந்த தங்களுக்குப் பல வழிகளில் மிரட்டல்கள் வருவதால், தாங்கள் விசாரிக்க விரும்பவில்லை என்றும், வேறு நீதிபதிகளை வைத்து விசாரித்துக் கொள்ளும்படியும் தலைமை நீதிபதிக்கு அவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். “”இந்த வழக்கைச் சுதந்திரமாக விசாரிக்க முடியவில்லை. நீதித்துறை சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எங்கள் குடும்பத்தினருக்கு ஆபத்து என்று மிரட்டல் வரும்போது நாங்கள் எப்படிச் சுதந்திரமாகச் செயல்பட முடியும்? அதனால், இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க விரும்பவில்லை” என்று நீதிபதிகள் டி. முருகேசனும், பெரிய கருப்பையாவும் கருத்துத் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது.

சுதந்திரமாக நீதிபதிகள் செயல்பட முடியவில்லை என்று நீதிபதிகளே கூறும்போது, அதில் நிச்சயமாக உண்மை இருக்கும். இதற்கு முன் இரண்டு நீதிமன்றங்கள் இதே வழக்கைத் தங்களால் விசாரிக்க இயலவில்லை என்று ஒதுங்கிக் கொண்டதற்குக் காரணம் அச்சுறுத்தல்கள்தான் என்று கருத இடமுண்டு. உயர் நீதிமன்ற நீதிபதிகளே அச்சுறுத்தப்படுகிறார்கள் என்று சொன்னால், அந்த அளவுக்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது என்று அர்த்தமா?

உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு மிரட்டல் கடிதங்களை எழுதுவது, தொலைபேசியில் அச்சுறுத்துவது என்று துணிந்து செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்குப் பணபலம் மட்டுமல்லாமல், அதிகார வர்க்கத்தின் முழுமையான ஆசியும், ஆதரவும் இருக்கும் என்று நிச்சயம் நம்பலாம். ஆட்சியாளர்களின் ஆதரவுடன், நீதிபதிகளை மிரட்டத் தொடங்கும் இத்தகைய போக்கு வளர்ந்தால் அதன் விளைவுகள் எத்தகையதாக இருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

இதுவரை பல வழக்குகளில் சாட்சிகள் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சினிமாவில் மட்டும்தான் அதிகாரத்தில் உள்ளவர்களின் துணையோடு காவல்துறையினரும், நீதிபதிகளும் அச்சுறுத்தப்படும் சம்பவங்களைப் பார்த்திருக்கிறோம். இப்போது நிழல் நிஜமாகிறதோ என்கிற ஐயப்பாட்டை சமீபத்திய சம்பவம் உறுதிப்படுத்துகிறது.

நீதிபதிகளை அச்சுறுத்தியது யார் என்பதை உடனடியாகக் கண்டறிந்து அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படாவிட்டால், இத்தகைய போக்கு நீதித்துறையை சீர்குலைத்து தமிழகத்தில் தாதாக்கள் சாம்ராஜ்யம் ஏற்பட வழிவகுத்துவிடும். ஆட்சியாளர்களின் அசட்டை அவர்களுக்கேகூட ஆபத்தாக முடியும் என்பதை அவர்கள் உணர வேண்டும். தேவை, நீதிக்கும், நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு!

Posted in Annachi, Bribery, Bribes, Corruption, Courts, Jeevajothi, Jeevajothy, Justice, kickbacks, Power, Restaurant, Saravana, Saravana Bhavan, Saravana Bhawan | 1 Comment »