ஜெ., அதிரடி… நடராஜன் அதிர்ச்சி…
நடராஜன் ஆதரவாளர்களாக இருந்துவரும் அ.தி.மு.க.,வினர் மீது சில தினங் களாக கத்தி பாய்ந்து வருகிறது. கரூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சமீபத்தில் நீக்கப்பட்டனர். அதை தொடர்ந்து திருச்சியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நுõற் றாண்டு விழாவில் நடராஜனுடன் கலந்து கொண்ட அ.தி.மு.க.,வினர் 12 பேர் நீக்கப்பட்டனர்.
நடராஜனின் நிழலாக இருக்கும் சினிமா பாடலாசிரியர் சினேகன் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் நீக்கப்பட் டுள்ளனர். அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கும் “நம்பர் 2′ என்றழைக்கப்படும் சசிகலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சசிகலாவின் இடத்தை அவரது அண்ணி இளவரசி கைப்பற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாகவே கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
நடராஜனுக்கு அ.தி.மு.க.,வில் மறைமுகமாக செல்வாக்கு இருந்து வருவதால் அவரைப் பிடித்து கட்சியில் முக்கிய பதவிகளை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க.,வினர் அவருடன் தொடர்பு வைத்து வருகின்றனர். அவர் மூலம் பதவிகள் வாங்கியவர்களும் உண்டு. அந்த வகையில் தொடர்பு வைத்தவர்கள் தற்போது நீக்கப்பட்டு வருவதால் அ.தி.மு.க.,வினர் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்
. ராஜன் செல்லப்பா மாவட்டச் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கே நடராஜனும் ஒரு காரணமாக இருந்தார் என்று அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர். நடராஜன், மதுரையில் நடைபயணம் சென்றபோது அவருக்கு ராஜன் செல்லப்பா முழுமையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதன் எதிரொலியாக நடராஜன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை மாவட்டச் செயலர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக ஒருதரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆனால், தற்போது அவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் நீக்கப்பட்டுள்ளதால், அ.தி.மு.க.,வினர் செய்வதறியாது திகைக்கின்றனர்.
“அவருடன் தொடர்பு வைக்காததால் சிலரது பதவி காலியாகிறது. தொடர்பு வைத்ததால் சிலரது பதவி காலியாகிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை’ என்று அ.தி.மு.க.,வினர் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்சியில் ஏற்பட்டுவரும் அதிரடி மாற்றங்களால் நடராஜன் தனது ஆதரவாளர்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். அதே சமயம் மிகவும் நெருக்கமானவர்களிடம் தொலைபேசி மூலம் பேசி தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.