பொருளாதார முன்னேற்றமும் வறுமை ஒழிப்பும்
இராம. சீனுவாசன்
அரசின் தலையீடு, பங்களிப்பு ஆகியவற்றைக் குறைத்து சந்தையின் செயல்பாட்டை விரிவுபடுத்துவது புதிய பொருளாதாரக் கொள்கையின் மையக் கரு.
இப் புதிய பொருளாதாரக் கொள்கை செயல்பாட்டின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சி அடைந்து வறுமையும் குறைந்துள்ளதாக அரசும், இக் கொள்கையில் நம்பிக்கையுள்ள அறிஞர்களும் கூறுகின்றனர்.
இதற்குச் சான்றாகக் குறிப்பிடப்படுவது வறுமை விழுக்காடு
- 1993 – 94ல் 36 சதவீதம் இருந்தது,
- 2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.
வறுமைக் கோட்டை நிர்ணயிக்கும் முறையும், வறுமை விழுக்காட்டை அளவிடும் முறையும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. “வறுமைப் புள்ளிவிவரங்களை’ அறிந்துகொள்வது பொருளியல் கூறுகளை ஆய்ந்தறிய உதவும்.
வறுமைக் கோட்டை அளவிடும் முறையை அறிவது அவசியமாகும். வறுமை என்பதற்கு எளிய இலக்கணம் ஒன்றை வரையறை செய்ய முடியாது. இதுபோல் வறுமையை அளவிடும் முறையும் மிகக் கடினமானது.
தனிநபர் அல்லது குடும்ப வருமானத்தின் அடிப்படையில் வறுமையை அளவிடும் முறை எல்லோரும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
வருமானப் பகிர்வு அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும் 40 சதவீத மக்கள் வறுமையில் இருப்பவர்கள் என்று 1970-களில் உலக வங்கி கூறியது. இதே காலகட்டத்தில் தான்டேக்கர்-ரத் என்ற இரண்டு இந்தியப் பொருளியல் அறிஞர்கள் மக்களின் நுகர்வு-செலவின் அடிப்படையில் “வறுமைக்கோட்டை’ நிர்ணயம் செய்யலாம் என்று ஆய்ந்து கூறினர். இதனை அடிப்படையாகக் கொண்டு பல ஆய்வுகள் இந்தியாவிலும் மற்ற வளரும் நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டன.
1993ல், மத்தியத் திட்டக் குழு வறுமைக் கோட்டைக் கணக்கிடும் முறையை வரையறை செய்தது. இந்தியாவில் தனி நபர் வருமானத்தை அளவிடுவது மிகக் கடினம். ஏனெனில், பல வழிகளில் வருமானம் பெறுவது, வருமானத்தின் ஒரு பகுதியை பொருளாகப் பெறுவது, உண்மை வருமானத்தைக் கூற மறுப்பது என பல காரணங்களைக் கூறலாம். இதனால், தனி நபர் நுகர்வுச் செலவு அடிப்படையில் “வறுமைக் கோடு’ நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஒருவர் தன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள ஒரு மாதத்திற்குச் செய்ய வேண்டிய நுகர்வுச் செலவைக் கண்டறிந்து அதனை “வறுமைக் கோடு’ எனலாம்.
- 1973 – 74ல் நகர்ப்புற வறுமைக் கோடு ரூ.56, இதனை நகர்ப்புறத் தொழிலாளர் பணவீக்கக் குறியீடு கொண்டு ஆண்டுக்காண்டு அதிகரித்து
- 2004 – 05ல் வறுமைக்கோடு ரூ.538 என்று கணக்கிடப்பட்டுள்ளது.
வறுமைக்கோட்டை வரையறை செய்வதில் உள்ள சிக்கல்களை பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களின் நுகர்வுச்செலவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மக்களின் மொத்த நுகர்வுச் செலவில் உணவுச் செலவு குறைந்து மற்ற உணவு அல்லாத (கல்வி, சுகாதாரம்) நுகர்வுச் செலவு உயர்ந்துள்ளது.
ஆனால், 1973ல் இருந்து நுகர்வுச் செலவு கணக்கெடுப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. உணவுப் பொருள்களின் விலைகளும், மற்ற பொருள்களின் விலைகளும் வெவ்வேறு அளவில் உயர்ந்துள்ளன. ஆனால், ஒட்டுமொத்த பணவீக்கம் மட்டுமே “வறுமைக்கோட்டை’ அளவிடுவதில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
வறுமை என்பது சொந்த நுகர்வுச்செலவு அளவை மட்டுமே பொருத்தது அல்ல. பொதுச் சொத்துகளை மக்களின் ஒரு பகுதியினர் பயன்படுத்த முடியாது (உதாரணமாக நீர், விறகு) என்ற நிலை ஏற்படும்போது அவர்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனையும் வறுமைக்கோடு வரையறை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.
இப்போது உள்ள “வறுமைக்கோடு’ செலவு மனிதனுக்கு எல்லா சக்திகளையும் அளிக்கக்கூடிய முழுமையான உணவுச் செலவுக்கு போதுமானதா என்ற ஐயப்பாட்டையும் பலர் முன்வைக்கின்றனர். இக் குறைகளை எல்லாம் நீக்கி புதிய அணுகுமுறையில் வறுமைக்கோட்டை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற சிந்தனை பலரால் முன்வைக்கப்படுகிறது.
வறுமை விழுக்காடு கணக்கிடும் முறையையும் அறிந்துகொள்வது அவசியமாகும். மத்திய அரசின் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தில் செயல்படும் ஒரு துறை “தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையம்’ ஆகும்.
இந்த மையம் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நுகர்வுச் செலவினங்களைத் துல்லியமாக அளவிட வேண்டுமெனில், நீண்ட கேள்விப் பட்டியல் தேவை. இதை புள்ளியல் துறை தயாரிக்கிறது.
1973 – 74, 1977 – 78, 1983, 1987 – 88, 1993 – 94, 1999 – 2000, 2004 – 05 ஆகிய ஆண்டுகளில் மக்களின் நுகர்வுச் செலவு மாதிரி கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.
கணக்கெடுப்பு நடத்தும்போது, ஒருவர் உணவுக்காக கடந்த 30 நாள்களில் எவ்வளவு செலவு செய்தார்; கல்வி, சுகாதாரம், துணி, படுக்கை, காலணி, மற்ற பொருள்களுக்குக் கடந்த ஓர் ஆண்டில் எவ்வளவு செலவு செய்தார் என்றும் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் ஒருவரின் ஒரு மாத நுகர்வுச் செலவு கணக்கிடப்படுகிறது.
மாத நுகர்வுச் செலவை பல தொகுதிகளாகப் பிரித்து (உதாரணம் 0- 225, ரூ. 225 – 255) ஒவ்வொரு தொகுதியில் எவ்வளவு மக்கள் உள்ளனர் என்று பகுக்கப்படுகிறது. இந்த பகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும், அதிலும் கிராமப்பகுதி, நகரப்பகுதி எனத் தனித்தனியாகக் கொடுக்கப்படுகின்றன. இதனைக் கொண்டு வறுமைக் கோட்டின் கீழ் எவ்வளவு பேர் உள்ளனர் என்று கணக்கிடப்படுகிறது.
வறுமை விழுக்காடு குறைந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். வறுமை விழுக்காடு 2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.
1993 முதல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்துக்கு அதிகமாக இருந்ததால் வறுமை விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா 9 சதவீத வருடாந்திர வளர்ச்சியை அடைந்தால் வறுமை விழுக்காடு 10 சதவீதத்தைவிடக் குறைவாக இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர்.
மகேந்திரதேவ் என்ற பொருளியல் அறிஞர்
- 1983 – 93 ஆகிய பத்தாண்டுகளில் வறுமை 9 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் அதிகப் பொருளாதார வளர்ச்சி அடைந்த
- 1994 – 2004 ஆகிய பத்து ஆண்டுகளில் வறுமை 7.8 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.
எனவே பொருளாதார வளர்ச்சி எல்லோருக்கும் குறிப்பாக ஏழைகளுக்குச் சமமாகச் சென்றடையவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார். மேலும் 1994 – 2004 காலத்தில் உணவுப்பொருள்களின் விலையேற்றம் குறைவாக இருந்ததுதான் வறுமை விழுக்காடு குறைந்ததற்கு முக்கியக் காரணம் என்றும் பலர் கூறுகின்றனர்.
- 2004 – 05ல் கிராம வறுமை விழுக்காடு 28 சதவீதமாகவும்,
- நகர வறுமை விழுக்காடு 25 சதவீதமாகவும் உள்ளது.
- மொத்தம் 30 கோடி பேர் வறுமையில் வாடுகின்றனர்.
- இதில் 22 கோடி நபர்கள் கிராமங்களிலும்
- 8 கோடி பேர் நகரங்களிலும் உள்ளனர்.
தேசிய வறுமை விழுக்காட்டை விட அதிக வறுமை விழுக்காடு உள்ள மாநிலங்கள் –
- பிகார்,
- சத்தீஸ்கர்,
- ஜார்க்கண்ட்,
- உத்தரப் பிரதேசம்,
- உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களாகும். இந்தியாவின் ஏழைகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பேர் இம் மாநிலங்களில் உள்ளனர். இவற்றில் மகாராஷ்டிரத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் அதிகப் பொருளாதார வளர்ச்சியை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி எல்லா மாநிலங்களிலும் சமமாகச் சென்றடையவில்லை. எனவே வறுமை ஒழிப்பும் எல்லா மாநிலங்களிலும் சம அளவில் ஏற்படவில்லை.
வறுமையை முழுமையாக வரையறை செய்ய, எவ்விதமான புள்ளிவிவரங்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும்? பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு பரவலாக்கி வறுமையைக் குறைக்க வேண்டும் ஆகியவை நம்முன் பல ஆண்டுகளாக உள்ள அறைகூவல்கள்.
(கட்டுரையாளர்: மாநில திட்டக்குழு உறுப்பினர்.)
———————————————————————————————-
ஏன் இந்த மௌனம்?
மத்திய அரசு 36 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இத்துடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 339 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான முறையான அனுமதி வழங்கப்பட்டு, அவற்றில் 126 மண்டலங்களை அட்டவணைப்படுத்தியும் இருக்கிறது. இவற்றில் தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்படும் ஆறு மண்டலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்துவரும் மத்திய அரசு, இன்னொருபுறம், இந்த மண்டலங்களுக்கான நிலத்தைக் கையகப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றி எந்தவித அரசாணையோ, வழிகாட்டுதலோ, சட்டமோ இயற்றாமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை.
சொல்லப்போனால், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (Rural Development Ministry்) நில ஆர்ஜிதச் சட்டங்களில் சில மாற்றங்களைச் செய்து, அதை மத்திய அமைச்சரவை விவாதித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அமைச்சரவையின் முடிவுகள் அறிவிக்கப்படாமல், மத்திய அரசு மௌனம் சாதிப்பதுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பிரச்னைக்குரிய விஷயமாக மாற்றி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். மேற்கு வங்காளத்தையும், மகாராஷ்டிரத்தையும் தொடர்ந்து விவசாயிகள் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது விரைவிலேயே எல்லா மாநிலங்களுக்கும் பரவ இருக்கும் ஆபத்து என்பது நிதர்சன உண்மை.
தரிசு நிலங்களில், இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து அந்த இடங்களில் தொழில்வளம் பெருக்கவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் பயன்படுத்தலாம். ஆனால், விளை நிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு ஆர்ஜிதம் செய்வது என்ன நியாயம்?
ஒரு தேசத்தின் இறையாண்மையும், பாதுகாப்பும் அந்த நாட்டின் உணவு உற்பத்தியில் இருக்கும் தன்னிறைவைப் பொருத்துத்தான் அமையும் என்பது சரித்திரம் நமக்குச் சொல்லித் தந்திருக்கும் பாடம். தொழில்மயமாக்குகிறோம் என்கிற பெயரில் விவசாயம் புறக்கணிக்கப்படுவதும், வேண்டுமென்றே அழிக்கப்படுவதும் தெரிந்தே படுகுழியில் விழுவதற்கு ஒப்பான செயல். இதை மத்திய அரசில் இருப்பவர்கள் உணர்வது அவசியம்.
எந்த நில ஆர்ஜிதத்திலும் அரசு தலையிடாமல், லாப நோக்கில் நிறுவப்படும் சிறப்புப் பொருளாதார மண்டல அமைப்பாளர்கள், விவசாயிகளிடம் நேரடியாகப் பேசி அவர்கள் கேட்கும் விலையைக் கொடுப்பதுதான் நியாயமாகத் தெரிகிறது. விவசாயிகளிடம் நிலத்தை வாங்கித் தனியாருக்குக் குறைந்த விலையில் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய அவசியம் அரசுக்கு என்ன இருக்கிறது என்பது புரியாத விஷயமாக இருக்கிறது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அரசின் கருவூலத்துக்கு எந்தவிதப் பங்களிப்பும் செய்யப்போவதில்லை என்பது மட்டுமல்ல, இங்கிருந்து உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் மத்திய அரசுக்கு நிதியிழப்பும் ஏற்படும் என்பதை நிதியமைச்சரே சுட்டிக்காட்டி இருக்கிறார். எந்தவித தொழிலாளர் சட்டங்களுக்கும் உட்படாத, அரசின் வரிகள் எதுவும் பாதிக்காத, ஒரு தனி சாம்ராஜ்யமாக இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைவது வருங்காலத்திற்கு நல்லதுதானா என்பதே விவாதத்துக்குரிய விஷயமாகத் தெரிகிறது.
லாபகரமாக இல்லாத விவசாய நிலங்களும், தரிசு நிலங்களும் தொழில்வளத்தைப் பெருக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம், லாபகரமாக விவசாயம் நடக்கும் இடங்களைத் தொழிற்சாலைகள் அமைக்கப் பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும். நில ஆர்ஜிதம் செய்யும்போது, சம்பந்தப்பட்ட விவசாயிக்கோ, உரிமையாளருக்கோ நியாயமான விலை கொடுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் வேலைவாய்ப்பு முன்னுரிமையும், சொல்லப்போனால் அந்த நிறுவனங்களில் பங்கும் (Shares) தரப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் இயற்றியபோதே இதையெல்லாம் சிந்தித்து செயல்பட்டிருக்க வேண்டும். இத்தனை எதிர்ப்புக்குப் பிறகும் எந்தவித வரைமுறையும் விதிக்காமல், முறையான அறிவிப்பும் இல்லாமல் மத்திய அரசு மௌனம் சாதிப்பது அரசின் நோக்கத்தையே சந்தேகப்பட வைக்கிறது.
————————————————————————————————–
சரியான நேரத்தில் சரியான யோசனை
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் நடைபெறும் கேலிக்கூத்துகளுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஆளும்கட்சி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.
அதைத்தான், சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பற்றிய ஆய்வு நடத்தி, சமீபத்தில் அறிக்கையும் சமர்ப்பித்திருக்கும் நாடாளுமன்றக் குழுவும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தக் குழுவின் அறிக்கை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற ஆலோசனையையும் கூறியிருக்கிறது என்பதுதான் குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.
இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்கிற யோசனை சீனாவைப் பார்த்து ஏற்பட்ட விஷயம். கம்யூனிச நாடான சீனாவில், நிலங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் என்பதால் நிலத்தைப் கையகப்படுத்துவம் சிரமமில்லை; இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பது என்பதும் கடினமான விஷயமல்ல. மேலும், அந்நிய கலாசாரத்தின் தாக்கம் பொதுவுடைமை நாடான சீனா முழுவதிலும் பரவிவிடக் கூடாது என்கிற எண்ணத்தின் அடிப்படையில் ஏற்பட்டதுதான் இந்தத் திட்டம். இந்தியாவின் அரசியல் அமைப்புக்கும் நமது கொள்கைகளுக்கும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பொருந்துமா என்பதே சந்தேகம்.
நாடாளுமன்ற கமிட்டி சொல்லியிருப்பது போல் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதன் மூலம், விவசாயத் துறையின் அழிவில் நாம் தொழில் வளத்தைப் பெருக்க முயலுகிறோம் என்பதுதான் உண்மை நிலை. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்கள் குறைந்த விலைக்கு அரசால் பெறப்பட்டு, தனிநபர்களுக்கு வழங்கப்படுகின்றன. அப்படிப் பெறப்பட்ட இடத்தில், தொழிற்சாலைகள் 40% மட்டும்தான் இருக்கும். 20% இடத்தில் உணவகங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவை அமையும். மீதி 40% இடமும் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு அதிக லாபத்துக்குப் பொதுமக்களுக்கு விற்கப்படும். மொத்தத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் அடிப்படை நோக்கம் “ரியல் எஸ்டேட்’ என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.
விவசாய நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றை ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யப்போகும் தனியாருக்கு அரசும் அதிகாரிகளும் ஏன் உதவ வேண்டும் என்பதுதான் பரவலான கேள்வி. அதுமட்டுமல்ல, இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் லாபம் ஈட்டித் தரும் பகுதிகளில்தான் நிறுவப்படுகின்றவே தவிர, பின்தங்கிய மாவட்டங்களில் நிறுவப்படுவதில்லை என்பதையும் நாடாளுமன்ற கமிட்டி சுட்டிக்காட்டியிருக்கிறது.
இந்த அறிக்கையில் குறிப்பிடும்படியான இன்னொரு விஷயம் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு பற்றியது. அந்நியச் செலாவணி ஈட்டித்தரப்போகிறார்கள் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக, அரசு தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய எல்லா வருமானங்களையும் இழக்க வேண்டுமா என்பதுதான் அது. தனிநபர் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்க, அரசு தனக்கு வரவேண்டிய வரி வசூலை நஷ்டப்படுத்திக்கொள்வது மட்டுமல்ல, ஏழை விவசாயிகளையும் நஷ்டப்படவைக்க வேண்டிய அவசியம் என்ன என்கிறது அந்த அறிக்கை.
சமச்சீரான பொருளாதார, தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில் அரசு நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் நலனை முன்னிறுத்தி மட்டும்தான் அரசின் செயல்பாடுகள் இருத்தல் வேண்டும் என்று கூறியிருக்கும் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சரியான நேரத்தில் சரியான ஆலோசனை. அரசு இப்போதாவது விழித்துக்கொண்டால் நல்லது!
————————————————————————————————–