Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for திசெம்பர் 10th, 2007

Asian Human Rights Commission (AHRC) urges foreign intervention in Sri Lanka

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2007

சர்வதேச மனித உரிமைகள் தினம்: இலங்கையில் நாடுதழுவிய நிகழ்ச்சிகள்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை இலங்கையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு கூட்டங்களும், கருத்தரங்குகளும், கண்டன-கவனயீர்ப்பு ஊர்வலங்களும் நடந்தன.

மேலக மக்கள் முண்ணணி தலைமையிலான மக்கள் கண்காணிப்புக் குழு ஒழுங்கு செய்திருந்த ஊர்வலம் ஒன்றும் இன்று கொழும்பில் இடம்பெற்றிருக்கிறது.

கடத்தப்பட்டு காணாமல்போனோரின் உறவினர்கள், தடுப்புச் சிறைகளிலும், பொலிஸ் நிலையங்களிலும் அண்மையில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருப்போரின் உறவினர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சு, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் இன்று சிறிலங்கா பவுண்டேஷன் இன்ஸ்டிடியூட்டில் நடத்தப்பட்ட நிகழ்வில் ஐ.நா அமைப்பின் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் மற்றும் விசேட அதிதிகள் கலந்துகொண்டனர்.

 

இதில் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருக்கிறார்.

இங்கு உரையாற்றியுள்ள அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பில் மூன்றாம், நான்காம் சரத்துக்களில் மனித உரிமைகளின் சுதந்திரம் குறித்து குறிப்பாக தெரிவிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், சுதந்திரம், பக்கச்சார்பின்மை, நீதித்துறையின் ஆளுமை என்பன மனித உரிமைகள் பேணப்படுவதற்கு மிகவும் அவசியமான அம்சங்கள் என்று தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, போரினால் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறப்படுவதையும், போரினால் மனித உரிமைகளை ஏற்படுத்த முடியும் என்று கூறப்படுவதையும் நிராகரித்துப் பேசினார்.

இதற்கிடையில் இங்கே லண்டனிலும் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக இலங்கைத் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்பு மையம் என்னும் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.


மட்டக்களப்பில் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட ஊர்வலம்

 

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில், யுத்த சூழ்நிழல் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் மீள்குடியமர்த்தப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளியிடுத்தும் வகையில் திங்கட்கிழமை பேரணி ஒன்று நடந்துள்ளது.

இந்தப் பேரணிகளிலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்திலும், பெரும் எண்ணிக்கையினர் கலந்து கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இடம்பெயர்ந்திருந்த மற்றும் மீள்குடியமர்த்தப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் வகையிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சிக்கும் வகையிலும் பேரணிகளில் கலந்து கொண்டவர்கள் வாசக அட்டைகளை ஏந்திச் சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பேரணி சென்ற வீதிகளில், வழமைக்கு மாறாக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுக் கூட்டத்தில் ஈ.பி.டி.பி., பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எஃப்-பத்மநாபா அணி பிரதிநிதிகளும் பங்குபெற்றனர்.

அவர்கள் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டினையும் விமர்சித்து உரையாற்றினர்.

கூட்ட முடிவில், மக்களின் தேவைகளை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் கையளிக்கும் முகமாக ஒரு மனு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மகேசன் அவர்களிம் கையளிக்கப்பட்டது.


வடக்கு இலங்கையில் வன்முறை வலுக்கிறது

இலங்கையின் வடக்கே ஞாயிறன்றும் திங்களன்றும் நடைபெற்ற மோதல்களில், 26 விடுதலைப் புலிகளும் ஒரு இராணுவச் சிப்பாயும் கொல்லப்பட்டுள்ளதாகவும், 10 இராணுவ வீரர்கள் காயமடைந்ததுள்ளதாகவும் இலங்கை அரசின் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

மணலாறு பகுதியில் தமது பிரதேசத்துக்குள் முன்னேற முயன்ற இராணுவத்தினரின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பெரியதம்பனனைப் பகுதியில், நேற்று முந்தினம் கொல்லப்பபட்ட விடுதலைப் புலிகளில், நல்ல நிலையில் உள்ள ஆறு சடலங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலமாக அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற வன்செயல்களில், மட்டக்களப்பு மாவட்டம் பிள்ளையாரடியில், ஞாயிறு இரவு இரண்டு யுத்த அகதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுளனர் எனவும், துப்பாக்கிச் சூட்டுடன் ஒரு சடலம் கண்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


Posted in AHRC, Batticaloa, Displaced, Eelam, Eezham, EPDP, EPRLF, HR, Human Rights, IDP, LTTE, Manalaar, Manalaaru, Manalar, Manalaru, Padhmanaba, Padhmanabha, Padmanaba, Padmanabha, Pathmanaba, Pathmanabha, plot, Refugees, Sri lanka, Srilanka, Vanni, Violence, Wanni, War | Leave a Comment »

Pension will exceed the Salaries – Government Job retirees pension income

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2007

ஊதியத்தை மிஞ்சும் ஓய்வூதியம்

புதுதில்லி, டிச. 9: அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை கணிசமாக அதிகரித்து வருகிறது.

2006-07 நிதியாண்டில் 39,074 கோடி ரூபாயை ஓய்வூதியமாக வழங்கியுள்ளது மத்திய அரசு.

இதே நிதியாண்டில் தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு 40,047 கோடி ரூபாய் ஊதியம் வழங்கியுள்ளது மத்திய அரசு.

இதேநிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் ஊதியத் தொகையை விட ஓய்வூதியத்தொகை பலமடங்கு அதிகரித்து விடும் என்று கணக்கு தணிக்கை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தொகை ஆண்டுக்கு 5.47 சதவீதமாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஓய்வூதியத்தொகை ஆண்டுக்கு 16.20 சதவீதமாக அதிகரித்து வருகிறது.

இந்தியர்களின் ஆயுள்காலம் அதிகரிப்பு, ஓய்வு வயதை அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் ஓய்வூதியத்துக்கான செலவு அதிகரித்து கொண்டே செல்வதாக கணக்கு தணிக்கை தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2001 புள்ளி விவரப்படி மத்திய அரசு நிறுவனங்களில் 38 லட்சத்து 76 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றினர். இந்த எண்ணிக்கை 1995-ல் 39 லட்சத்து 82 ஆயிரமாக மட்டுமே உயர்ந்தது.

ஆனால் 1999-2000 நிதியாண்டில் 38 லட்சத்து 3 ஆயிரமாக இருந்த ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை, 2006-07-ல் 45 லட்சத்து 5 ஆயிரமாக அதிகரித்தது.

இந்நிலையில், ஓய்வூதிய செலவைக் குறைப்பது குறித்து ஆராய 6-வது ஊதிய கமிஷன் சிறப்புக் குழுவை நியமித்துள்ளது.

இக்குழு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தனது பரிந்துரைகளை சமர்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Posted in 401(k), 58, 65, Babyboomers, Budget, Economy, employee, Employment, Factor, family, Finance, Forecasting, Generation, Govt, Impact, Income, Inflation, Jobs, Monetary, Money, Multiply, pension, Poor, Projection, Reduction, Retirement, Rich, Rupees, safety nest, Salary, Savings | Leave a Comment »

Water supply & distribution in Tamil Nadu – Inter-state relations, Dam Construction, Rivers

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2007

மூன்று பக்கமும் துரோகம்; ஒரு பக்கம் கடல்!

கே. மனோகரன்

தமிழகம்போல இன்று தண்ணீருக்காகத் தவித்து நிற்கும் மாநிலம் இந்தியாவில் வேறொன்று இருக்க முடியாது.

கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகின்றன. நமக்குப் பரந்து விரிந்து கிடக்கும் ஒரே நீர்ஆதாரம் கடல்தான். தாகத்துக்கு கடல்நீரைக் காய்ச்சிக் குடிக்கலாம். ஆனால் விவசாயம் செய்ய முடியுமா?

தண்ணீருக்காக கர்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களுடன் மல்லு கட்டுவதற்கே ஆண்டுகளை இழந்ததுடன், இருக்கும் ஏரி குளங்களையும் நாம் பாழாக்கி இழந்து வருகிறோம்.

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது பூண்டி நீர்த்தேக்கம். குசஸ்தலை ஆற்றிலிருந்துதான் இந்த நீர்த்தேக்கத்துக்குத் தண்ணீர் வரவேண்டும். இந்த ஆறு பள்ளிப்பட்டில் இருந்து ஆந்திர மாநில எல்லையில் 12 கி.மீ. தூரத்தில் தொடங்குகிறது.

அங்குள்ள அம்மபள்ளி என்ற இடத்தில் 1975-ம் ஆண்டு தொடங்கி 1982-ம் ஆண்டு வரை இருமலைகளையும் இணைத்து அணை கட்டும் பணி நடந்தது. ஆனால் இப்படி ஓர் அணை கட்டப்படுவதுகூட தெரியாமல் தமிழக அரசு அமைதியாக இருந்தது. அதன் பிறகு குசஸ்தலை ஆறு தமிழகத்துக்குத் தண்ணீர் தரவில்லை. தலைவலி தந்தது. வறண்டுபோனது பூண்டி நீர்த்தேக்கம்.

குசஸ்தலை ஆறு தடைபட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயம் குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை. சென்னை நகரின் குடிநீர் தேவையைப் பற்றித்தான் கவலைப்பட்டது. ஆந்திர அரசுடன் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதில் பல கோடிகளை தமிழக அரசிடம் பங்குத்தொகையாகப் பெற்ற ஆந்திர அரசு, அந்த நிதியில் சித்தூர், கடப்பா போன்ற வறட்சியான மாவட்டங்களில் ஏற்கெனவே உள்ள ஏரிகளைப் புனரமைத்தும், மிகப்பெரிய ஏரியான பிச்சாட்டூர் ஏரியை சீரமைத்தும், புதிய நீர்த்தேக்கங்களையும் கட்டி கால்வாய்கள் மூலம் இணைத்து தன்னை வளப்படுத்திக் கொண்டது.

சென்னைக்கு தண்ணீர் தருவதாகச் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் “ஜீரோ பாய்ண்ட்’ எனப்பட்ட கண்டலேறு வரை தண்ணீர் வந்ததே தவிர சென்னைக்கு வரவில்லை. இதனால் தவிர்க்க முடியாமல் புதிய வீராணம் திட்டத்தை தமிழகம் செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோல் பாலாற்றுக்கு முதல் பாதிப்பை ஏற்படுத்தியது கோலார் மாவட்டத்தில் உள்ள பேத்தமங்கலா நீர்த்தேக்கம். கர்நாடகம் படிப்படியாக அதன் கொள்ளளவையும் அதிகரித்துக் கொண்டே சென்றதால் பாலாற்றின் நீர்வரத்து குறைந்து போனது.

கர்நாடகத்துக்கும், தமிழக எல்லைக்கும் இடையில் பாலாற்றுக்கு வரும் உபநதிகளான மல்லிநாயக்கனஹள்ளி ஆறு, பெட்மடு ஆறு ஆகியவற்றின் குறுக்கே தலா 4 ஏரிகளை ஆந்திர அரசு கட்டிவிட்டது. இதேபோல் தமிழக எல்லையின் 3 கி.மீ. தூரத்தில் 2000-ம் ஆண்டில் பாலாற்றின் உப நதியான மண்ணாற்றின் குறுக்கே பெரியபள்ளம் என்ற இடத்தில் ரூ. 65 லட்சத்திலும், அதே நேரத்தில் எல்லையின் சில நூறு அடிகள் தூரத்தில் பிரம்மதேவர் கொல்லை என்ற லட்சுமிபுரத்தில் ரூ. 1.20 கோடியில் இருமலைகளை இணைத்து ஆந்திர அரசு அணைகளை கட்டியது.

இவற்றுக்கு எவ்வித எதிர்ப்பும் தமிழக அரசு தெரிவிக்காமல் இருந்ததன் விளைவுதான் தற்போது குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே பெரிய அளவிலான அணை கட்டுவதற்கு ஆந்திர அரசுக்கு தைரியத்தைக் கொடுத்துள்ளது.

ஆனால் தமிழக அரசு புதிய அணைத் திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என்று விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலங்களில் காவிரி வடிகாலில் கிடைக்கும் கூடுதல் நீர் சராசரியாக 30 டி.எம்.சி. கடலில் வீணாகக் கலக்கிறது. இந்த தண்ணீரில் மட்டுமே 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யலாம்.

ஆளியாறு மூலம் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரையே கொடுக்காத கேரளம், முல்லைப் பெரியாறு அணையில் முரண்டு பண்ணிக்கொண்டு வருகிறது. சிறுவாணி அணைக்கு வரும் நீரின் அளவு குறையும் வகையில், அதன் துணைநதிகளை தனியார் குடிநீர் ஆலைகளுக்கு தாரை வார்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது கேரளம்.

காவிரியை தமிழகத்தின் வாய்க்கால் போலக் கருதி, மிகைநீரை மட்டுமே வழங்குகிற திட்டத்தை கர்நாடகம் எப்போதோ தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறது.

தமிழகத்துக்கான நீர் ஆதாரங்கள் அனைத்தையும் இந்த மூன்று மாநிலங்களும் மறித்துக் கொண்டு வருகின்றன.

இழந்த தண்ணீரைப் பெற முடியாவிட்டாலும், கிடைக்கும் நீரையாவது உருப்படியாகப் பயன்படுத்தவும், பாதுகாக்கவும் அரசு முன்வர வேண்டும். இல்லையேல், தமிழர்களின் கண்ணீரால் கடல் நீர் மேலும் கரிக்கும்.

————————————————————————————————————————–
பாலாற்றில் விளையாடும் அரசியல்!

ஆர். ராமலிங்கம்
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு விரைவில் அணை கட்டத் தொடங்கும் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உறுதிபட கூறியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், குப்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.

அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றிய விவரம் கண்ணுக்கெட்டியதூரம் வரை தெரியவில்லை. தமிழக முதல்வரும் இவ்விஷயத்தில் நம்பிக்கையூட்டும் தகவலை இதுவரை தெரிவிக்கவில்லை.

இதை எதிர்க்கட்சிகள் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, பாலாறு விவகாரத்தில் ஆளும் திமுக அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது என்ற ரீதியில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியைத் தவிர பிற தோழமைக் கட்சிகளும் இதற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றன.

கர்நாடக மாநிலம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு அந்த மாநிலத்தில் 40 கி.மீ. தூரமும் ஆந்திரத்தில் 31 கி.மீ. தூரமும், தமிழகத்தில் 222 கி.மீ. தூரமும் பயணிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளாக, அவ்வப்போது பெய்யும் கனமழைதான் தமிழக பகுதியில் உள்ள பாலாற்றுப் படுகையை ஈரப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகளில் 6 முறை மட்டுமே பாலாற்றில் நீர்வரத்து இருந்துள்ளது.

பாலாற்றின் குறுக்கே கர்நாடக அரசு பேத்தமங்கலத்தில் அணை கட்டியுள்ளது. அந்த மாநிலம் வெளியேற்றும் உபரி நீரை 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டி ஆந்திர அரசு நீர்நிலைகளை நிரப்பி வருகிறது.

மழைக் காலங்களில் அதிர்ஷ்டவசமாக ஆந்திர எல்லையில் இருந்து ஒருசில தினங்கள் வரும் நீருக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. கணேசபுரம் என்ற இடத்தில் ஆந்திர அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதனால் பாலாறு பொய்த்துவிடுமே என தமிழகத்தின் வடமாவட்ட மக்களின் அச்சப்படுகின்றனர்.

தற்போது மணல் சுரண்டல், நீர்வளம் பறிபோதல், தோல் தொழிற்சாலைகளும் உள்ளாட்சி அமைப்புகளும் கழிவுநீரை வெளியேற்றுவதால் படுகை மாசுபடுதல் போன்ற மும்முனைத் தாக்குதலில் தமிழக பாலாற்றுப் பகுதி சிக்கியுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில் 1892-ல் தமிழகத்தில் பாயும் 12 ஆறுகளுக்கு நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. அவற்றில் பாலாறும் இடம் பெற்றுள்ளது.

அன்றைய மைசூர் மற்றும் மதராஸ் அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த ஒப்பந்தங்கள் 1952 வரை அமலில் இருந்தது. அன்றைக்கு சித்தூர் மாவட்டம், சென்னை மாகாணத்தில் இடம்பெற்றிருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் உருவானபோது சித்தூர் மாவட்டம் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் பாலாற்று நீர்வளத்தில் ஆந்திர மாநிலத்துக்கும் பங்களிக்கும் நிலை ஏற்பட்டது.

இருப்பினும் 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பாரம்பரிய உரிமை அடிப்படையில்தான் இன்றைக்கு தமிழகம் பாலாற்று பிரச்னையை அணுக வேண்டியுள்ளது.

இரு மாநில எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாலாற்று பிரச்னை பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இதில் பங்கம் ஏற்படாமல் இருப்பதற்கு, காவிரி நீர் பங்கீட்டை போன்று பாலாற்று நீரில் தனக்குள்ள பங்கீட்டு உரிமையை தமிழகம் நிலைநாட்டுவது ஒன்றே தீர்வாக அமையும்.

நதிநீர் பங்கீடு உரிமையை நிலைநாட்டுவதன் மூலம் பாலாற்று நீர்வரத்தில் 60 சதவீதத்தை தமிழகம் பெற வாய்ப்பு உள்ளது என்கின்றனர் விவசாயிகள்.

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, மத்திய அரசு 1956-ல் கொண்டு வந்த நதிநீர் வாரியச் சட்டத்தை பயன்படுத்த முடியும். தமிழக அரசு மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இச்சட்டத்துக்கு உயிரூட்டலாம்.

மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னை எழுந்தால் இச்சட்டத்தின்படி மத்திய அரசு ஒரு வாரியத்தை ஏற்படுத்த முடியும்.

அதன் மூலம் மாநிலங்களுக்கிடையே உள்ள நீர் பங்கீடு தொடர்பான பிரச்னைகளுக்கு தக்க அறிவுரையை வழங்க முடியும். புதிதாக நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ஒன்றையும் மாநிலங்களுக்கிடையே ஏற்படுத்த முடியும்.

தமிழக அரசியல் கட்சிகளிடையே மக்களின் பொதுப் பிரச்னைகளில் கூட ஒற்றுமையின்மை நிலவுவது உலகறிந்த உண்மை. இது அண்டை மாநிலங்களுக்கு பலமாக அமைந்துள்ளது.

பாலாறு விஷயத்தில் திமுக அரசும், எதிர்கட்சிகளும் ஒன்றையொன்று குறைகூறி அரசியலாக்குவதைத் தவிர்த்து ஒருங்கிணைந்த செயல்பாட்டில் இறங்கினால் மட்டுமே நதிநீர் பங்கீட்டில் அண்டை மாநிலங்களின் அடாவடித்தனத்தைத் தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நதிநீர் பிரச்னைகளில் தமிழகம் இக்கட்டான சூழலை நோக்கி நகர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உறுதியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

இதன் மூலம் பாலாற்று பிரச்னையில் மத்திய அரசும், நீதிமன்றமும் தலையிடுவதற்கான நெருக்கடியை தமிழகத்தால் ஏற்படுத்த முடியும்.

ஆர்ப்பாட்ட அரசியலைக் காட்டிலும், ஆரோக்கிய அரசியலே ஆபத்தைத் தடுக்க முடியும். தமிழக அரசியல் தலைவர்கள் சிந்திப்பார்களா?

—————————————————————————————————————–
மக்கள் திரள் போராட்டம்-காலத்தின் கட்டாயம்

பழ. நெடுமாறன்


தமிழ்நாட்டில் ஏரி, குளம், ஆறுகளுக்குப் பஞ்சம் இல்லை. காடுகள் அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் உண்டு. தென்மேற்குப் பருவ மழை, வட கிழக்குப் பருவ மழை ஆகிய இரு பருவ மழைகள் ஒருபோதும் பொய்த்ததில்லை. முப்புறம் கடலும் உள்நாட்டில் ஏராளமான கனிம வளங்களும் உள்ளன. உழைப்பதற்குச் சலிக்காத மக்களும் உண்டு. அறிவாற்றலுக்குப் பஞ்சமில்லை. இத்தனை வளங்களும் நிறைந்திருந்த தமிழ்நாடு இன்றைக்கு என்னவாகியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் வேதனையும் விரக்தியுமே மிஞ்சுகின்றன.

நீரில்லா ஆறுகள்

தமிழ்நாடு எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி மீள முடியாதபடி தவிக்கிறது. காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளை மதிப்பதற்கு கர்நாடகமும் கேரளமும் பிடிவாதமாக மறுக்கின்றன. பாலாற்றில் தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் வகையில் ஆந்திரம் தனது எல்லைக்குள் அணை கட்ட முற்பட்டுள்ளது.

இந்த மூன்று ஆறுகளின் மூலம் தமிழ்நாட்டில் இருபது மாவட்டங்கள் பயன் அடைந்து வந்தன. ஆனால் இப்போது இந்த மாவட்டங்கள் பாசனத்திற்குரிய நீரை இழந்து வறண்ட பகுதிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மூன்றில் இரண்டு பங்கு மாவட்டங்கள் வறண்ட பகுதிகளாக மாறினால் உணவுக்காக பிற மாநிலங்களிடம் தமிழகம் கையேந்தி நிற்கக்கூடிய நிலைமை உருவாகிவிடும்.

விவசாயத்திற்கும் குடிப்பதற்கும் போதுமான நீரில்லாமல் நாம் தவிக்கும்போது, ஆறுகளிலும் நிலத்தடியிலும் எஞ்சியுள்ள சிறிதளவு நீரையும் உறிஞ்சி எடுத்து விற்பனைப் பொருளாக “கோகோ கோலா’, “பெப்சி’ போன்ற அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் அவலமும் நடைபெறுகிறது.

நகர்ப்புற மக்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கே குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயச் சூழலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

மணல் கொள்ளை

அண்டை மாநிலங்களின் வஞ்சனையால் வறண்டுவிட்ட இந்த ஆறுகளிலிருந்து மணல் மிக எளிதாகக் கொள்ளை அடிக்கப்படுகிறது. எந்த மாநிலங்கள் நமக்குத் தண்ணீர் தர மறுக்கின்றனவோ அதே கேரள மாநிலத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் லாரிலாரியாகத் தமிழக ஆற்று மணல் கொண்டு செல்லப்படுகிறது. மணல் கொள்ளை அடிப்பதற்கு வசதியாக இந்த ஆறுகளில் நீரோட்டம் இல்லாமல் அண்டை மாநிலங்கள் செய்து விட்டனவோ என்றுகூட சந்தேகம் எழுகிறது. இந்த ஆறுகள் வறண்டு போவதைப் பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் தமிழக அரசு இருப்பதற்கு இந்த மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பவர்கள் சென்ற ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி ஆளும் கட்சியினரே என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தமிழகத்தின் மற்ற ஆறுகளிலும் ஓடைகளிலும் மணல் அடியோடு சுரண்டப்படுகிறது. இந்த நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் தமிழக ஆறுகளின் இரு பக்கமும் உள்ள கிணறுகளும் நீரூற்றுகளும் வறண்டு போய் மக்கள் குடிநீருக்காக அவதிப்படும் நிலை உருவாகிவிடும். மேலும் இந்த ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள், பாலங்கள் ஆகியவை மணல் கொள்ளையின் விளைவாக பலவீனம் அடைந்து இடியும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அண்மையில் சென்னைக்கு அருகே காரனோடை பாலம் இடிந்து விழுந்ததற்கு மணல் கொள்ளையே காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறையும் ஏரிகள்

ஆறுகளின் கதி இதுதான் என்றால் தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி சுருங்கி வருகின்றன. பல ஏரிகள் உண்மையிலேயே காணாமல் போய்விட்டன. தமிழ்நாட்டில் சிறியதும் பெரியதுமான 39 ஆயிரம் ஏரிகள் உள்ளன. தமிழக நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதிக்கு இந்த ஏரிகள் பாசன வசதி அளித்து வந்தன. இவற்றின் மூலம் பத்து லட்சம் ஹெக்டேர்கள் பயன் பெற்றன.

1980-ஆம் ஆண்டில் இந்த ஏரிகளின் பாசன வசதிகளை நவீனமயப்படுத்துவதன் மூலம் மேலும் 54 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பயன் பெறும் என மதிப்பிடப்பட்டது. இத்திட்டத்திற்கு சுமார் ரூ. 200 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டபோது அந்தத் தொகையை ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு தருவதாக ஒப்புக்கொண்டு இதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. 27 ஆண்டுகள் கழிந்த பிறகும் இந்த வேலைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இது ஏன் என்பதை ஆராய்ந்தால் திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்.

தமிழ்நாட்டில் 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவுள்ள ஏரிகளைப் பொதுப்பணித்துறையும் அதற்குக் குறைவாக உள்ள ஏரிகளை ஊராட்சி ஒன்றியங்களும் நிர்வகித்து வருகின்றன. இவை தவிர அணை நீரைப் பெற்று பாசனம் செய்யும் 100 ஏக்கருக்கும் குறைவான சில ஏரிகளையும் பொதுப்பணித்துறை நிர்வகிக்கிறது. பொதுப்பணித்துறையின் கீழ் 12 ஆயிரம் ஏரிகளும் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 27 ஆயிரம் ஏரிகளும் உள்ளன.

கடந்த நாற்பதாண்டுகளில் இந்த ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. ஏரிகளில் மட்டுமல்ல; ஏரிகளுக்கு மழை நீரைக் கொண்டு வரும் பகுதிகளும் ஏரியிலிருந்து நீரை நிலங்களுக்குக் கொண்டு செல்லும் கால்வாய்களும்கூட ஆக்கிரமிப்பிலிருந்து தப்பவில்லை. இதன் காரணமாக பல ஏரிகள் முற்றிலுமாக காணாமல் போய்விட்டன. தனி நபர்கள் ஆக்கிரமித்த ஏரிகளை விட அரசுத் தரப்பில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகள் இன்னும் அதிகமாகும். நீதிமன்ற அலுவலகங்கள், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள், தாலுகா அலுவலகங்கள், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் வளாகங்கள், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், சமுதாயக் கூடங்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள் என அரசின் பல்வேறு துறை சார்ந்த கட்டடங்கள் ஏரிகளுக்குள்ளாகவே கட்டப்பட்டுள்ளன.

ஏரிகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. ஆனால் அந்த உயர் நீதிமன்றத்தின் கட்டடமே உலகநேரி கண்மாயில் கட்டப்பட்டுள்ளது என்பது வேதனையான உண்மை.

ஊராட்சி ஒன்றியங்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்த 27 ஆயிரம் கண்மாய்களில் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றின் எல்லைகள் சுருங்கி அழிந்து வரும் அபாயம் உள்ளது. ஏரிகளிலும் கண்மாய்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றிச் சீரமைக்கவும் அதன் நீர் வழி எல்லைகளை வகுக்கவும் அண்மையில் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்தச் சட்டம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை ஆக்கிரமித்திருப்பவர்களை வெளியேற்றும் அதிகாரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கோ அல்லது ஊராட்சித் தலைவர்களுக்கோ இல்லை.

ஆக்கிரமிப்புகள் திடீரென்று ஓரிரு நாள்களில் நடைபெற்றுவிடவில்லை. ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் கையூட்டுப் பெற்றுக் கொண்டோ அல்லது அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு அஞ்சியோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு கடமை தவறிய இந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து உயர் நீதிமன்ற ஆணையில் எதுவும் கூறப்படவில்லை என்பது திடுக்கிட வைக்கும் உண்மையாகும்.

காடுகள் அழிப்பு

1967-ஆம் ஆண்டுக்கு முன், தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் காடுகள் 23 விழுக்காடாக இருந்தது. இப்போது தமிழகக் காடுகளின் பரப்பளவு என்பது 17 விழுக்காடாகும். 6 விழுக்காட்டிற்கு மேற்பட்ட காடுகள் வெட்டப்பட்டுவிட்டன. காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படுகின்றன. இவற்றைக் கண்காணிக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகளின் ஊழலால் இது நடைபெறுகிறது. அரசியல்வாதிகளின் ஒப்புதல் இல்லாமல் இது நடைபெறாது. இதன் விளைவாக பருவ மழை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது. மலையின் அடர்ந்த காட்டில் உற்பத்தியாகும் ஆறுகள் வற்றத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் கடற்கரை 1000 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ளது. பல இடங்களில் கரையோரமாக அலையாற்றுக் காடுகள் இருந்தன. தென் மாவட்டங்களில் கடற்கரை நெடுகிலும் தேரிகள் என அழைக்கப்படும் மணற்குன்றுகள் இயற்கையாக அமைந்திருந்தன. ஆனால் இந்தக் காடுகளையும் மரம் வெட்டுபவர்கள் விட்டு வைக்கவில்லை. மணற்குன்றுகளையும் சிதைத்து விட்டார்கள். இதன் விளைவாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சுனாமி அலைகள் வீசியபோது அவற்றைத் தடுக்கும் அலையாற்றுக் காடுகளும் தேரிகளும் இல்லாததன் விளைவாக பேரழிவு ஏற்பட்டது.

மோதல் சாவுகள்

காவல்துறை மக்களை வேட்டையாடும் துறையாக மாறிவிட்டது. ஆளும் கட்சியினரின் ஏவல்படையாக காவல்துறை மாற்றப்பட்டு நீண்ட நாள்களாகிவிட்டது. ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுகின்றன. ஊடகங்களுக்கு எதிரான பல்வேறு வகையான அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன.

சொல்லாமலேயே மற்றொரு பெரும் கொடுமை தமிழகத்தில் தங்குதடையின்றி அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியிலும் தி.மு.க. ஆட்சியிலும் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் மோதல் சாவுகள் என்ற பெயரில் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் சமூக விரோதிகள் எனக் குற்றம்சாட்டி இந்தக் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்க காவல்துறை முயல்கிறது. அது உண்மை என்று வைத்துக்கொண்டால் கூட, குற்றம் சாட்டப்பட்டவர்களை முறையாக நீதிமன்றத்தில் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தண்டனை வழங்கும் அதிகாரத்தையும் நீதிமன்றங்களிடமிருந்து காவல்துறை, தானே பறித்துக் கொண்டது. இந்தக் குற்றவாளிகளை உருவாக்கி வளர்த்துவிட்டதில் அரசியல் கட்சிகளுக்குப் பெரும் பொறுப்பு உண்டு. அதில் சமபங்கு காவல் துறைக்கும் உண்டு.

தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம், கந்து வட்டி, கட்டைப் பஞ்சாயத்து ஆகியவற்றின் மூலம் ஏழை எளிய மக்களும் நடுத்தர மக்களும் ஆட்டிப் படைக்கப்படுகிறார்கள் – சுரண்டப்படுகிறார்கள். அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், சமூகவிரோதிகள் ஆகிய முத்தரப்பு கூட்டு உருவாகி மேற்குறிப்பிடப்பட்ட மூன்று அக்கிரமங்களையும் தங்குதடையின்றி நடத்துகிறது.

மீறப்படும் சட்டமன்ற மரபுகள்

சட்டமன்றத்தில் இந்த அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வருபவர்கள் பேச முடியாதபடி தடுக்கப்படுகின்றனர். வெவ்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லி அரசுக்கு எதிராக யாரும் எதுவும் கூறிவிடாதபடி தடுக்க முயற்சி வெளிப்படையாகவே நடத்தப்படுகிறது.

ஆளும் கட்சிதான் இவ்வாறு சட்டமன்ற மரபுகளைத் துச்சமாகக் கருதி மதிக்காமல் போனால் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அவ்வாறே நடந்து கொள்கிறது. எதிர்க்கட்சித் தலைவியான ஜெயலலிதா சட்டமன்றத்திற்கு பெரும்பாலும் வருவதே கிடையாது. வெளியே இருந்து கொண்டு ஆளும் கட்சியை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிடுவதோடு தன் ஜனநாயகக் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறார். அவர் முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு. கருணாநிதியும் சட்டமன்றக் கூட்டத்தை அறவே புறக்கணித்தார். முதலமைச்சராக இருந்தால்தான் சட்டமன்றத்திற்கு வருவது. இல்லையேல் வருவது தங்கள் கௌரவத்திற்கு இழுக்கு என்று இருவருமே கருதுகிறார்கள். சட்டமன்ற ஜனநாயகத்தை உண்மையிலேயே இவர்கள் மதிப்பவர்களாக இருந்தால் சட்டமன்ற கூட்டங்களில் தவறாது கலந்துகொள்ள வேண்டும். முடியவில்லை என்றால் தங்கள் பதவியை விட்டு விலகி வெளியேற வேண்டும்.

மக்கள் போராட்டம்

சட்டமன்ற மரபுகள் துச்சமாக மதிக்கப்பட்டு மக்கள் பிரச்னைகள் பற்றி அங்கே பேச முடியாத நிலைமையில் வெளியில் மக்கள் போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. மத்திய – மாநில அரசுகளின் ஜனநாயக விரோதப் போக்குகளையும் ஒடுக்குமுறைகளையும் சர்வாதிகார சட்டங்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது எழுந்துள்ளது.

பதவிகளைக் காப்பாற்றுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தேர்தலுக்குத் தேர்தல் கொள்கையற்ற கூட்டணிகளை அமைத்துக்கொள்ளும் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

தமிழக அரசியல் சீர்கேடுகளை எதிர்த்தும் மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்தும் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் மக்கள் திரண்டு எழுந்து போராட முன்வர வேண்டும். அந்தந்த ஊரில் இந்த அநீதிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து போராடினால், எத்தகைய அடக்குமுறையாலும் அப்போராட்டத்தை ஒடுக்க முடியாது.

1965ஆம் ஆண்டில் இந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழக மாணவர்கள் ஒன்றுபட்டு நடத்திய போராட்டம் வரலாறு காணாத மக்கள் திரள் போராட்டமாக நடைபெற்றது. இந்தியை எதிர்த்த திராவிடக் கட்சிகள்கூட அந்தப் போராட்டத்தோடு தங்களை இணைத்துக் கொள்ள முன்வராமல் பதுங்கின. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் அறிஞர்களான கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் சி. இலக்குவனார், பெருஞ்சித்திரனார் போன்றவர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்களே நடத்திய இந்தப் போராட்டம் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. 1970களின் பிற்பகுதியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாராயணசாமி நாயுடுவின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு அனைத்து விவசாயிகளின் ஆதரவும் கிடைத்தது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் விவசாயிகள் ஒன்றுபட்டுப் போராடினார்கள். 1975ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராகவும் ஜனநாயகத்தைக் காக்கவும் ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கம் தொடங்கியபோது மக்கள் பேராதரவு அளித்தனர். பெரும் தியாகசீலரும் தன்னலமற்றவருமான அவரை மக்கள் நம்பினார்கள். மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி இந்திராவின் சர்வாதிகார ஆட்சியை அகற்றி மீண்டும் ஜனநாயக ஆட்சியை அவர் நிலைநாட்டினார்.

மேற்கண்ட போராட்டங்களில் மக்கள் தாமாகவே முன்வந்து கொதிப்புணர்வுடன் போராடினார்கள். இந்த மக்கள் திரள் போராட்டங்களின் விளைவாகத்தான் ஆட்சியாளர்கள் அடிபணிய நேரிட்டது என்பதை நாம் மறக்கக் கூடாது. நாடு பூராவிலும் உள்ள மக்கள் ஒன்றுபட்டு திரண்டு எழுந்து போராடுவதென்பது அத்தனை எளிதானதல்ல. மக்கள் தங்கள் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்ச ஊழல், கள்ளச் சாராயம், மணல் கொள்ளை, ஏரிகள் ஆக்கிரமிப்பு, காடுகள் அழிப்பு, காவல் துறையின் காட்டாட்சி மற்றும் சமூகக் கேடுகளை எதிர்த்து அந்தந்தப் பகுதிகளில் மக்கள் திரள் போராட்டங்களை நடத்த வேண்டும். இந்தப் போராட்டங்கள் ஒரு கட்டத்தில் நாடு தழுவிய பெரும் போராட்டமாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

மக்களுக்கு விழிப்புணர்வையும் ஊட்டி அவர்களைத் திரட்டி இத்தகைய வேண்டாத சக்திகளை எதிர்த்துப் போராட முயற்சி எடுக்க வேண்டிய கடமை தன்னலமற்ற மக்கள் தொண்டர்களுக்கு உண்டு.

ஜனநாயகச் சிதைவு, தமிழ்நாட்டின் உரிமைகளை இழந்து நிற்றல் போன்றவற்றிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டுமானால் தமிழக மக்களைத் திரட்டி மக்கள் திரள் போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை. மக்கள் திரள் போராட்டம் நமது கடமை மட்டுமல்ல. வரலாற்றுக் கட்டாயமும் ஆகும்.

இந்த வேலையை நாம் செய்யாமல் நமது சந்ததியினர் செய்யட்டும் என்று விட்டுவிடுவோமானால் எதிர்காலத் தலைமுறை நம்மை ஒருபோதும் மன்னிக்காது.

Posted in Agreements, Agriculture, Alliance, Andhra, AP, Bengaluru, Bethamangala, Blind, Border, Cauvery, Center, Chennai, Construction, Dam, Distribution, DMK, Drink, Drinking, Drinking Water, Farming, Farmlands, Flood, Flow, Govt, Inter-state, Interstate, Intrastate, Karnataka, Kaveri, Kerala, Krishna, Kuchasthalai, Kusasthalai, Lakes, Limits, Madras, Management, Mullai, Mullai Periyar, Mullai Periyaru, Mysore, Nature, Nedumaaran, Nedumaran, Paalar, Paalaru, Palar, Palaru, peasants, Periyar, Periyaru, Pethamangala, Pichathoor, Pichathur, Pichatoor, Pichatur, Politics, Poondi, reservoir, River, Rivers, Sea, Shortage, State, Storage, Supply, Tamil Nadu, TamilNadu, TMC, TN, Waste, Water | Leave a Comment »

Dec 8 – LTTE, Eezham, Batticaloa, Sri Lanka – News & Updates: BBC Tamil

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2007

இலங்கை அரசின் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்கிறது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்

இலங்கையின் கிழக்கே முஸ்லீம்களின் நிலங்களைப் பறித்து பெரும்பான்மை மக்களுக்கு வீடுகளை கட்டவும், காடுகளை வளர்க்கவும், இலங்கை அரசு எடுத்து வரும் முடிவை கைவிடாவிட்டால், அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ள நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி, தமக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும் மீறி இவ்வாறான செயல்களில் இலங்கை அரசு ஈடுபடுவதாக தெரிவித்தார்.

கிழக்குப் பகுதியில் முஸ்லீம்களின் நிலங்கள் மட்டுமல்லாமல், இந்து கோவிலுக்கு உரிமையான இடத்தையும் அரசு இவ்வாறு பெரும்பான்மை மக்களுக்கு பிரித்துக் கொடுத்துள்ளது எனவும் ஹஸன் அலி சுட்டிக் காட்டினார்.

வரும் 14 ஆம் தேதி அன்று வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் போது அதற்கு ஆதரவாக வாக்களிப்பதா அல்லது எதிர்த்து வாக்களிப்பதா என்பது குறித்து கட்சியின் உயர்மட்டக் குழு ஞாயிறு இரவு கூடி முடிவு செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.

 


இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள மருத்துவர்கள் கணிசமான அளவு நியமனம்

மட்டக்களப்பு மருத்துவமனை
மட்டக்களப்பு மருத்துவமனை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச வைத்தியசாலைகளில்
சேவையாற்ற இம்முறை கணிசமான அளவு சிங்கள மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

புதிதாக நியமனம் பெற்றுள்ள தமிழ் மருத்துவர்களில் பலரும்
இம்மாவட்டத்தில் சேவையாற்ற முன்வராமையே இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 38 மருத்துவர்களில் 32 பேர் சிங்களவர்கள் எனக் கூறும் சுகாதார அமைச்சு அதிகாரிகள் போதனா வைத்தியசாலைக்கும் அண்மையில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட பிரதேச வைத்தியசாலைகளுக்கும் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அச்சத்துடனேயே சேவையாற்ற தான் இங்கு வந்ததாகக் கூறும் வாகரை வைத்தியசாலையில் சேவையாற்றும் டாக்டர் சிந்தக ஹிமால் புஞ்சிஹேவா தொடர்ந்தும் அச்சத்துடனேயே இருப்பதாக குறிப்பிடுகின்றார். வாகரை வைத்தியசாலையில் போதியளவு வசதிகள் இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

குறிப்பிட்ட வைத்தியர்கள் நியமனங்கள் இம்மாவட்டத்திலுள்ள வைத்தியர்கள் பற்றாக்குறைக்கு தீர்வாக அமையாது என சுட்டிக்காட்டும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம், அண்மையில் மீள் குடியேற்றம் இடம்பெற்ற பிரதேசங்களில் இவ் வைத்தியர்கள் தங்கியிருந்து சேவையாற்ற தயங்குவதாகவும் குறிப்பிடுகின்றார்.


இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்களில் 22 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல்களின்போது 3 இராணுவத்தினர் காயமடைந்து அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக இராணுவம் கூறியிருக்கின்றது,

மன்னார் பெரியதம்பனை, குறிசுட்டகுளம், வவுனியா கள்ளிக்குளம், யாழ்ப்பாணம் கிளாலி ஆகிய இராணுவ முன்னரங்க பகுதிகளிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மன்னார் இலந்தைமோட்டை பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10 கிலோ நிறைகொண்ட கிளேமோர் கண்ணிவெடியும் கைப்பற்றப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரும் மேல் விசாரணைகளுக்காக மன்னார் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

கடந்த சில தினங்களாகவே வடக்குப் போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

Posted in Batticaloa, Budget, doctors, Eelam, Eezham, Hospitals, LTTE, Medicine, News, Sri lanka, Srilanka, Updates | Leave a Comment »