Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for திசெம்பர் 28th, 2007

Ayurvedha Corner: How to overcome hiccups & Sore Throat: Asthma, Infections

Posted by Snapjudge மேல் திசெம்பர் 28, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆஸ்துமாவுக்கு ஆவிச் சிகிச்சை!

எனக்கு வயது 75. தொடர்ச்சியாக விக்கல் வந்து கொண்டேயிருக்கிறது. தொண்டையில் எரிச்சல் உள்ளது. இதற்கு ஆயுர்வேத மருந்து கூறவும்.

விக்கலும் மூச்சிரைப்பும் (ஆஸ்துமா) ஒரே வகையைச் சார்ந்தவை என்று சரக ஸம்ஹிம்தை எனும் ஆயுர்வேத நூலில் காணப்படுகிறது. இவ்விரு உபாதைகளும் வருவதற்கான 21 காரணங்களை சரகர் கீழ்காணும் வகையில் குறிப்பிடுகிறார்.

1. தூசி, புகை, குளிர்காற்று ஆகியவற்றை அடிக்கடி சுவாசிக்க நேரிடுதல்.

2. வீட்டில் தரை மற்றும் சுற்றுப்புறம் குளிர்ச்சியாக இருத்தல், குளிர்ந்த நீரை குடிக்கவும் குளிக்கவும் பயன்படுத்துதல்.

3. உடற்பயிற்சி, உடலுறவு, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தன் உடல் வலிமைக்கு மீறி செய்தல்.

4. வறட்சி தரும் உணவுப் பண்டங்களை அதிகம் உட் கொள்ளுதல்.

5. முன் உண்ட உணவு செரிக்கும் முன்னரே அடுத்த உணவை சிறிய அளவிலோ அல்லது அதிகமாகவோ சாப்பிடுதல்.

6. வயிற்றில் மப்பு நிலை- அஜீரண நிலையை உதாசீனப்படுத்துதல்.

7. மலச்சிக்கலும் குடலில் காற்றும் அதிகரித்த நிலை.

8. உடல் வறட்சி;

9. அதிக பட்டினி.

10. உடல் பலஹீனம், மர்ம உறுப்புகளில் அடிபடுதல்.

11. ஒவ்வாமை உணவுகளைச் சேர்த்துச் சாப்பிடுதல். உதாரணமாக இட்லியுடன் பால், தயிர்வடை சாப்பிட்ட பிறகு காப்பி குடித்தல்.

12. பேதி மருந்து சாப்பிட்டு குடலை சுத்தம் செய்து கொள்கிறேன் என்று எண்ணி அதிக அளவில் மலக்கழிவை ஏற்படுத்தி உடலை பலஹீனமாக்கிக் கொள்ளுதல்.

13. முன்பு ஏற்பட்ட பேதி, காய்ச்சல், வாந்தி, இருமல், காசநோய், ரத்தக் கசிவு நோய், காலரா, ரத்த சோகை, விஷ உபாதை போன்றவற்றின் பின் விளைவால்.

14. உணவில் அடிக்கடி அவரைக்காய், உளுந்து, நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளுதல். மாடு சாப்பிடும் புண்ணாக்கைச் சாப்பிடுதல்.

15. மாவுப் பண்டம், குடலில் வாயுவை அதிகப்படுத்தும் கடலை, மொச்சை, கிழங்குகள், குடல் எரிச்சலைத் தூண்டும் கரம் மசாலா, ஊறுகாய், எளிதில் செரிக்காத உணவு வகைகளை அதிகம் சாப்பிடுதல்.

16. நீர் மற்றும் குளிர்ச்சியான நிலத்தைச் சார்ந்த மாமிச உணவுகளை அதிகம் சாப்பிடுதல்.

17. தயிர், பாலைக் கொதிக்க வைக்காமல் சாப்பிடுவது.

18. வெல்லம், கரும்புச்சாறு போன்ற குடலில் பிசுப்பிசுப்பைத் தோற்றுவிக்கும் வகையறாக்களை விரும்பிச் சாப்பிடுதல்.

19. கபத்தின் சீற்றத்தை அதிகப்படுத்தும் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை ஆகியவற்றை எந்நேரமும் சாப்பிடுதல்.

20. தொண்டை மற்றும் நெஞ்சுக்கூட்டில் அடிபடுதல்.

21. உடல் உட்புற குழாய்களில் ஏற்படும் பல வகையான அடைப்புகள்.

மேற்குறிப்பிட்ட காரணங்களின் விளைவாக நெஞ்சுப் பகுதியிலுள்ள வாயுவின் சீற்றம் மூச்சுக் குழாய்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி கபத்தைச் சீற்றமடையச் செய்கிறது. இந்த வாயு- கபத்தின் சீற்றமே விக்கல் மற்றும் ஆஸ்துமா நோய்களுக்கு மிக நெருங்கிய காரணமாக இருக்கின்றன.

பிராண- உதக- அன்னவஹ ஸ்ரோதஸ் எனப்படும் மூச்சு, நீர், உணவை ஏந்திச் செல்லும் குழாய்களில் ஏற்படும் பாதிப்பை விக்கலாக உருவாக்கி பெரும் உபாதையைத் தோற்றுவிக்கிறது.

தேகராத தைலம் எனும் மூலிகைத் தைலத்தை முன் கழுத்து, நெஞ்சுக்கூடு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள எலும்புகளுக்கு நடுவே வெதுவெதுப்பாகத் தடவி, பிரஷர் குக்கரின் உள்ளே ஆமணக்கு, நொச்சி, புங்கை, யூகாலிப்டஸ்,கல்யாண முருங்கை போன்ற இலைகளைப் போட்டு தண்ணீர்விட்டு கொதிக்க விடவும். குக்கரின் மேலே உள்ள குழாய் வழியாக வரும் நீராவியை ஒரு ரப்பர் குழாயின் வழியாக, நெஞ்சில் எண்ணெய் தேய்த்துள்ள பகுதிகளில் இதமாகப் படுமாறு செய்ய, நன்கு வியர்வையை உண்டாக்கும். இதன் மூலம் நெஞ்சினுள்ளே கபம் உருகி, வாயுவின் தடை நீங்க உதவிடும். வாயுவின் சீரான செயல்பாடு தங்கு தடையின்றி நடைபெற இந்தச் சிகிச்சை தங்களுக்கு உதவக்கூடும்.

அதன் பிறகு பார்லி அரிசியில் சிறிது நெய் பிசறி தணலில் போட, அதிலிருந்து வரும் புகையை வாய் வழியாக உள்ளே இழுத்து வெளிவிட, மூச்சுக் குழாயின் உட்புறச் சுவர்களில் படிந்துள்ள கபம் வரண்டு விடுவதால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிராணவாயுவின் தடை நீங்கி விக்கல் குணமடைய வாய்ப்புள்ளது.

காலை உணவாக முருங்கை இலையை தண்ணீர்விட்டு நன்கு கொதிக்கவிட்டு, வடிகட்டி, கஞ்சிபதத்தில் சிட்டிகை இந்துப்பு கலந்து சாப்பிட நல்லது.

பழைய அரிசி, கோதுமை, பார்லி போன்றவை சாப்பிட நல்லது.

காலையில் வெறும் வயிற்றில் தசமூலசட்யாதி எனும் கஷாயம் சாப்பிட உகந்தது. தங்களுக்கு தொண்டை எரிச்சல் மாற நெல்லிக்காய் சூரணம் 5 கிராம் எடுத்து ஒண்ணரை ஸ்பூன் (7.5 மிலி) தாடி மாதி கிருதம் எனும் நெய் மருந்தைக் குழைத்து அதில் 1/2 ஸ்பூன் தேனும் கலந்து காலை இரவு உணவுக்குப் பிறகு நக்கிச் சாப்பிடவும். ஒரு வாரம் முதல் 21 நாட்கள் வரை சாப்பிடலாம்.

இரவில் படுக்கும் முன் சிட்டிகை வெல்லம் கலந்த சுக்குப் பொடி சாப்பிடவும்.

Posted in Alternate, Asthma, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, hiccups, Infections, medical, Throat | Leave a Comment »

Red pepper, chillies, bell-pepper, capsicum grossum – Mooligai Corner: Herbs & Naturotherapy

Posted by Snapjudge மேல் திசெம்பர் 28, 2007

மூலிகை மூலை: குடிவெறி நீக்கும் மிளகாய்!

சிறிய இலைகளையுடைய சிறுசெடி வகையைச் சேர்ந்தது மிளகாய்ச் செடி. காயும் பழமும் மிகவும் காரம் உள்ளவை. பச்சையான காய்கள், காய்கறி கடைகளிலும், உலர்ந்த பழம் மளிகைக் கடைகளிலும் கிடைக்கும். உணவில் காரத்துக்காகப் பயன்படுத்துவர். மூலநோய் இருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. வற்றலே மருத்துவக் குணம் உடையது. பசியைத் தூண்டவும் குடல்வாயுவை அகற்றவும் பயன்படுகிறது. தமிழகம் எங்கும் பயிரிடப்படுகிறது.

வேறு பெயர்கள்: மொளகாய், முளகாய்.

லத்தின் பெயர்: Capsium Firutesceans, Linn; Solonacea

மருத்துவக் குணங்கள்: மிளகாய் வற்றலை பழகிய மண்சட்டியில் 2 சொட்டு நெய்விட்டுக் கருக்கிய புளியங் கொட்டை அளவு கட்டிக் கற்பூரத்தைப் போட்டு அரை லிட்டர் நீரில் ஒரு கை நெற் பொரியும் சேர்த்துக் காய்ச்சி, இறக்கி வடிகட்டி 100 மில்லியளவு குடித்துவர, வாந்தி- பேதி நிற்கும்.

மிளகாய் வற்றல் 200 கிராம், மிளகு 100 கிராம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் பால், நல்லெண்ணெய் வகைக்கு அரை லிட்டர் சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒருமுறை தலைமுழுகிவர எந்த வகையான தலைவலியும் குணமாகும்.

மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 3 வேளை குடிக்க மார்பு நோய், வயிற்று நோய், செரியாமை, கழிச்சல், காய்ச்சலினால் காணும் வாந்தி நீங்கும்.

மிளகாயை அரைத்துத் துணியில் தடவி தோலின் மேல் போட்டு வைக்க, கொப்பளித்து வீக்கம் குறையும். தொண்டைக்கு வெளியில் பூச, தொண்டைக்குள் இருக்கும் கட்டிகள் உடையும்.

மிளகாயை பூண்டு மிளகோடு சம அளவாக எடுத்து சேர்த்து அரைத்து எண்ணெயுடன் குழைத்து மேல் பூச்சாக முதுகு, பிடரி முதலிய இடங்களில் உண்டாகும் நாள்பட்ட வலி, வீக்கங்களுக்குப் பூச குணமாகும்.

மிளகாய்ப் பொடியுடன் சர்க்கரை, பிசின் தூள் சேர்த்து உருண்டை செய்து வாயில் போட்டு மென்று சாப்பிட, தொண்டைக் கம்மல் குணமாகும்.

மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது இஞ்சிச் சாறு கலந்து குடிக்க வயிற்று உப்புசம் வயிற்றுவலி நீங்கும்.

மிளகாய், பெருங்காயம், கற்பூரம் சம அளவாக எடுத்து எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்து சுண்டைக் காயளவு மாத்திரை செய்து 3 வேளை கொடுக்க ஊழி நோய் குணமாகும்.

மிளகாய் செடி சமூலத்தை 200 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது இலவங்கப் பட்டைப் பொடியும், சர்க்கரை கலந்து குடிக்கக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, bell-pepper, capsicum, Capsium Firutesceans, chillies, chilly, Herbs, Linn, medical, Mooligai, Moolikai, Naturotherapy, Pepper, Red pepper, Solonacea | Leave a Comment »

Police arrest 2 French journalists for filming Sri Lanka military checkpoint: Rights group

Posted by Snapjudge மேல் திசெம்பர் 28, 2007

தென்னிலங்கையில் இராணுவச் சோதனைச் சாவடியை படம்பிடித்தாகக் குற்றம்சாட்டி பிரான்ஸ் ஊடகவியலாளர்கள் கைது

இலங்கையில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் காலி மாவட்டத்திலுள்ள பூசா தடுப்பு முகாமிற்கு செல்லும் வழியிலுள்ள இராணுவச் சோதனைச் சாவடியொன்றினை படம்பிடித்ததாகக் குற்றஞ்சாட்டி பிரான்ஸ் நாட்டு தொலைக்காட்சி நிறுவனமொன்றைச் சேர்ந்த இரண்டு பெண் ஊடகவியலாளர்கள், இலங்கைப் படையினாரால் கைதுசெய்யப்பட்டு ரத்கம பொலிசாரினால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இது குறித்து சுதந்திர ஊடக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், காலி மாவட்டத்திலுள்ள பூசா தடுப்பு முகாமிற்கு செல்லும் தமிழ்க் குடும்பம் ஒன்றினை படம்பிடிக்கும் நோக்குடன், பிரான்ஸ் 24 என்ற தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த இந்தப் பத்திரிகையாளர்களும், அந்த தமிழ்க் குடும்பத்துடன் அந்த முகாமிற்கு செல்லும் வழியில் ரத்கம எனும் பொலிஸ் பகுதியில் இந்த சம்பவம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாகத் தெரிவித்திருக்கிறது.

கிறிஸ்துமஸ் தினமான இன்று இந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், அவர்களுடன் சென்ற தமிழ் குடும்பத்துடன் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்ததையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டி தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தினை இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான செய்திகளை வெளியிட்டுவரும் வெளிநாட்டு ஊடகங்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல் என்று வர்ணித்துள்ள சுதந்திர ஊடக அமைப்பு, தமிழ்க்குடும்பம் ஒன்றை படம்பிடிப்பது சட்டவிரோதமான செயல் அல்ல என்றும் இவர்கள் மீதான விசாரணைகளைத் துரிதப்படுத்தி, இவர்கள் கூடிய சீக்கிரத்தில் விடுவிடுக்கப்பட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இந்தக் கைது தொடர்பாகக் கருத்துவெளியிட்ட உயர் பொலிஸ் அதிகாரியொருவர், பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திருப்பதுடன், அவர்கள் பத்திரிகையாளர்கள் என்பதற்கான ஆவணங்கள் எதனையும் தம் வசம் வைத்திருக்கவில்லை என்றும், படம்பிடிக்க அனுமதிக்கப்படாத இடங்களில் அவர்கள் படம்பிடித்ததனாலேயே கைதுசெய்யப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக கொழும்பின் சுதந்திர ஊடக இயக்கத்தைச் சேர்ந்த சிவகுமாரன் தெரிவிக்கும் கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்கலாம்.


திருகோணமலையில் மழையை அடுத்து வெள்ளம்; மக்கள் பரிதவிப்பு

இலங்கையில் வெள்ளம் – பழைய படம்

இலங்கையில் நாடளாவிய ரீதியில் பெய்த கடுமையான மழை தற்போது ஓரளவு ஓய்ந்துள்ள போதிலும், திருகோணமலை மாவட்டத்தில், மழையை அடுத்து காட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஈச்சலம்பற்று பிரதேச செயலர் பிரிவில் – குறிப்பாக வெருகல் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்து மாவடிச்சேனை பாடசாலையில் தஞ்சம் அடைந்துள்ளதாக பிரதேச
செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கே மட்டக்களப்பு மாவட்டத்துடனும், வடக்கே திருகோணமலையுடனும் வெருகல் பிரதேசம் போக்குவரத்தின்றி துண்டிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சியில், இவை குறித்த தகவல்களை தொகுத்துத் திருகோணமலை செய்தியாளர் ரட்ணலிங்கம் தொகுத்து வழங்கக் கேட்கலாம்.


வட இலங்கை மோதல்: 3 சிவிலியன்கள் கொலை

இலங்கை அரச படையினர்

இலங்கையின் வடக்கே வவுனியாவில் திங்கள் இரவு இடம்பெற்ற வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 3 சிவிலியன்கள் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியில் இரண்டு உழவு இயந்திரங்களில் மரக்குச்சிகளைக் களவாடி ஏற்றிவந்த இருவர் மீது குளக்கட்டு பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அந்த இருவரும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா செக்கடிபிலவு பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகள் இருவர், வீட்டிலிருந்த ஒரு குடும்பஸ்தரைத் தேடிவந்து, அவரை வீட்டிற்கு வெளியே அழைத்துச்சென்று சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதற்கிடையில் மன்னார், மற்றும் முகமாலை மோதல் முன்னரங்கப் பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் திங்களன்று இடம்பெற்ற மோதல்களின்போது 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், 5 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


3 வருடங்களாகியும் மட்டக்களப்பில் சுனாமியில் வீடிழந்தவர்கள் பலருக்கு நிரந்தர வீடில்லை – பெட்டகம்

படம் சுனாமி அகதி முகாம்

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 3 வருடங்களாகிவிட்ட நிலையில் பெரிதும் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் வீடுகளை இழந்திருந்த குடுமபங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொடர்ந்தும் நிரந்தர வீடுகளின்றி தற்காலிக கொட்டில்களிலேயே தங்கியிருக்கின்றனர்.

65 மீட்டர் கடலோர பிரதேசங்களில் வசித்து வந்த இக்குடும்பங்களுக்கு வேறு இடங்களில் நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

அதிகாரிகளின் தகவல்களின்படி, 65 மீட்டர் கடலோர பிரதேசத்திற்குள் வசித்த வந்த 4900 குடும்பங்களில் இதுவரை 2300 குடும்பங்களுக்கு மட்டுமே நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

அநேகமான பிரதேசங்களில் ஒரு பகுதியினருக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்டப்டுள்ள அதேவேளை சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடுகளை இழந்திருந்த 815 குடும்பங்களில் ஒரு குடும்பத்திற்குக்கூட இதுவரை நிரந்தர வீடு வழங்கப்டப்டவில்லை.

இதனை ஏற்றுக் கொண்டுள்ள பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பொருத்தமான காணிகளை தெரிவு செய்தல், மண் போட்டு நிரப்புதல் போன்ற சில காரணங்களினால் தமது பிரதேசத்தில் வீடமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி மீள்கட்டுமானப் பணிகளின் நிலை குறித்த பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


Posted in Boossa, Channels, Colombo, Conflict, Downpour, Eelam, Eezham, Environment, Floods, Freedom, Galle, LTTE, Media, MSM, Nature, Rains, Sinhalese, Sri lanka, Srilanka, Triconamalee, triconmalee, Trincomalee, Tsunami, TV, Vavuniya, Water, wavuniya | Leave a Comment »