Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

MG Ramachandran: Politics, Cinema, Personality – MGR Biosketch by Panruti Ramachandhran

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

மறைந்தும் மறையாத தலைவர்

பண்ருட்டி ராமச்சந்திரன்

எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம்தான் இருந்தது.

அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்ற பிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. அவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் இதை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

ஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். திருச்சியை அடைந்த பிறகு எம்.ஜி.ஆர். ஒரு பரீட்சையில் இறங்கினார். காரில் போகும்பொழுதே தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் கழற்றி வைத்துவிட்டார். வழிநெடுக கூடியிருந்த மக்கள் எம்.ஜி.ஆர். எங்கே என்று தேடினார்களேயொழிய ஆர்ப்பரிக்கவில்லை. பிறகு மேலூரை நெருங்கியபொழுது தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து கொண்டார். உடனே வழக்கம்போல் இருபுறமும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் உடனே என்னிடத்தில் “”என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக்கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்” என்று சொல்லி சிரித்தார்.

“புகழ்பெற்ற நடிகராக விளங்குவதால் மக்கள் செல்வாக்கா’ என்று கேட்டேன். அதற்கு அவர், “நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால் மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப் பெற முடியும். அதற்கு மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கவேண்டும்’ என்றார்.

நடிகர்கள் நாடாள ஆசைப்படுவது நியாயமா என்று கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதில்.

எம்.ஜி.ஆர். மக்களை எவ்வாறு நேசித்தாரோ, அதேபோல் மக்களும் அவரை நேசித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக அவர் நோய்வாய்ப்பட்டபொழுது ஜாதி, மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இறைவழிபாடு நடத்தியது இதுவரை வரலாறு காணாத காட்சியாகும். “”நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” என்ற பாட்டு ஒலி நாடு முழுதும் கேட்காத நாளில்லை.

1984-ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கிறாரா? உணர்வுடன் இருக்கிறாரா? என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் தமிழக மக்கள் சிறிதும் தயக்கமின்றி அவரை வெற்றிபெறச் செய்தனர்.

அமைச்சரவைக் கூட்டத்திலும்கூட எந்தத் திட்டங்கள் ஆனாலும் பட்ஜெட்டுகள் போடுவது என்றாலும் பாமர மக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பார்த்தே ஒப்புதல் தருவார். “மத்திய, மாநில அரசுகளுக்கு வரவு, செலவில் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களின் மீது வரிபோடலாம் அல்லது வங்கிகள் மூலம் கடன் பெறலாம். ஆனால் குடும்பஸ்தனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அவன் எங்கே போவது? ஆகவே அரசின் திட்டங்கள் பாமர மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் அமைய வேண்டும்’ என்பார்.

அரிசி விலையையும், பஸ் கட்டணத்தையும் உயர்த்த ஒப்புக்கொள்ள மாட்டார். குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், சிறு விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் போன்ற பல திட்டங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை. அரசின் நிதிநிலை சரியானால் போதும் என்ற கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. அதனாலேயே அவரது ஆட்சி ஏழைகளின் ஆட்சியாகத் திகழ்ந்தது.

ஒருமுறை அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றார். இது எம்.ஜி.ஆரே சொன்னது. அண்ணா வழக்கம்போல் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்தார். எம்.ஜி.ஆர். பின் சீட்டிலிருந்தார். பெரம்பலூருக்கு அப்பால் சென்றபொழுது காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அப்பொழுது அந்தப் பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் காரிலிருந்த கொடியைப் பார்த்துவிட்டு நேராக முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த அண்ணாவிடம் அவர் அண்ணா என்று தெரியாமல், எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேட்டார்கள். அதற்கு அறிஞர் அண்ணா கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இதோ பின்னால் இருக்கிறார் என்று அடையாளம் காட்டினார்.

எம்.ஜி.ஆர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனாராம். அண்ணா எத்தகைய தலைவர் என்பதையும் தன்னோடு இருப்பவர்கள் தன்னைவிடச் செல்வாக்காக இருக்கும்பொழுது பொறாமைப்படுவதற்குப் பதிலாகப் பெருமைப்பட்டவர் என்றும் குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர். இறுதிவரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணம் அறிஞர் அண்ணா என்றால், தகுதியான வாரிசுக்கு இலக்கணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான்.

எம்.ஜி.ஆர். இளமையில் வறுமையைச் சந்தித்தவர். பொதுவாக, வறுமை கொடிது. இளமையில் வறுமை அதைவிடக் கொடியது. தனது அண்ணனும், தானும் சிறுவயதில் கும்பகோணத்தில் இருந்தபொழுது மூன்று நாள்கள் பட்டினி கிடந்ததாகவும் பரிதாபப்பட்டு எதிர்வீட்டைச் சேர்ந்த ஒரு தாய் கொஞ்சம் அரிசியை புரட்சித்தலைவரின் தாயிடம் தந்து குழந்தைகளுக்காவது கஞ்சி காய்ச்சி கொடுக்கும்படிச் சொன்னாராம்.

அன்று அந்த எதிர்வீட்டுத் தாய் செய்த உதவியால் தான் இன்று உங்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர். கிடைத்துள்ளார் என்று அவரே கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த அனுபவத்தால் தான் தமிழ்நாட்டில் பிறக்கும் எந்த குழந்தையும் பட்டினி கிடக்கக்கூடாது என்றும் ஒருவேளையாவது உணவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கருதியதால்தான் சத்துணவுத்திட்டம் உதயமாயிற்று.

சத்துணவுத்திட்டம் கொண்டு வரவேண்டுமென்ற அவரது கருத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கூட சில அமைச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. இத்திட்டத்தால் பணம் செலவாகுமே தவிர பயன் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஊழல் பெருகும் என்றும் சொன்னார்கள். ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

மூக்கு என்று இருந்தால் சளிபிடிக்கத்தான் செய்யும்; ஒரு திட்டம் என்றால் சேதாரங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திட்டத்தைக் கைவிட வேண்டியது இல்லை என்று தீர்மானித்தோம்.

இந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவுத் திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கலாம் என்றார். அப்படி வழங்கினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லையே என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மூன்று நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று அனைத்து பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதால் சமத்துவம் ஏற்பட்டது. இரண்டு, படிக்கிற காலத்தில் பள்ளியில் பிள்ளைகளுடைய இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. மூன்றாவது, சவலைப்பிள்ளைகள் என்ற நிலையை மாற்ற இன்று முட்டை வழங்குவது வரை அது சத்துணவாக ஆக்கப்பட்டுள்ளது.

“”ஆளும் வளரணும், அறிவும் வளரணும் – அதுதாண்டா வளர்ச்சி”, என்பது எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாட்டு.

நல்ல சிந்தனையோடு நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நற்காரியங்களுக்குத் தெய்வமும், மடியை வரிந்து கட்டிக்கொண்டு முன்னே ஓடிவந்து துணைசெய்யும் என்பார் திருவள்ளுவர். 1983-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் சென்றபொழுது எம்.ஜி.ஆர். பெயரை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தியாவின் சார்பில் சென்றதால் ஒரு மாநில முதலமைச்சர் பெயரைப் பதிவு செய்ய முடியாது என்று எனக்குத் தெரிவித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஐ.நா. சபையில் உலக உணவுதினம் கொண்டாட வேண்டி வந்தது. அதில் அப்பொழுது இருந்த 101 அணிசாரா நாடுகளின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

உலக உணவு தினத்தில் அணிசாரா நாடுகள் சார்பில் இந்தியா கலந்துகொள்ள அழைக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் ஐ.நா.சபையில் கலந்துகொண்ட எங்களுக்குத் தலைவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இருந்தார். அடுத்த நிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இருந்தார். இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் நான் இருந்தேன்.

உலக உணவு தினத்தன்று இந்திரா காந்தியும், நரசிம்மராவும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். ஆகவே, இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உணவு தினம் என்பதால் சத்துணவுத் திட்டத்தைப்பற்றி ஐ.நா. சபையில் விரிவாகப் பேசினேன். உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதை கைதட்டி வரவேற்றனர். எம்.ஜி.ஆர். பெயரும் ஐ.நா. சபையில் இடம்பெற்றது.

முயற்சி என்னுடையது என்றாலும் அதற்குரிய வாய்ப்பு இயற்கையாக அமைந்தது புரியாத புதிர் தானே!

(கட்டுரையாளர்: அவைத்தலைவர், தேமுதிக)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: