மட்டக்களப்பு உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் கட்சிகள் கூட்டணி
![]() |
![]() |
ஈ.பி.ஆர.எல். எப்.பத்மநாபா அணியின் தேசிய அமைப்பாளர் இரா.துரைரட்னம் |
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படவிப்பதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதையடுத்து 4 தமிழ் கட்சிகள் இத்தேர்தலில் கூட்டாக போட்டியிட கொள்கையளவில் இணக்கம் கண்டுள்ளன.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி; புளொட் ,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி ஆகிய கட்சிகளிடையே இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இது பற்றிய இறுதி தீர்மானம் எதிர் வரும் தினங்களில் வெளியாகும் என்றும் அக்கட்சிகள் தெரிவிக்கின்றன.
ஈ.பி.ஆர்.எல். எப்.பத்மநாபா அணியின் தேசிய அமைப்பாளர் இரா.துரைரட்னம் இது பற்றி கூறுகையில், இக்கட்சிகளிடையே கொள்கை ரீதியாக சில முரன்பாடுகள் காணப்பட்டாலும் இது தேர்தல் ரீதியான கூட்டு என்று குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் நடத்தக் கூடிய சூழ்நிலை தற்போது இல்லா விட்டாலும் அதற்காக தேர்தலிலிருந்து ஒதுங்கி விடமுடியாது என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர்களே பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மாவட்டத்திற்கு திரும்ப முடியாத நிலையில் கொழும்பில் தங்கியிருக்கம் போது தமிழ் தேசிய கூட்டமைப்பினால் எப்படி வேட்பாளர்களை நிறுத்த முடியும் என வினா எழுப்பும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீ.அரியநேத்திரன், இத்தேர்தல் தொடர்பாக தமது கட்சி இது வரை முடிவெடுக்கவில்லை என்றார்.
இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்
![]() |
![]() |
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் வடக்கே கிளாலி மற்றும் மன்னார், மணலாறு பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 5 விடுதலைப் புலிகளும் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
கிளாலி இராணுவ முன்னரங்க பகுதியில் இடம் பெற்ற சண்டைகளில் 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதுடன், 3 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும், மணலாறு பகுதியில் நடைபெற்ற மோதலில் 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், மன்னார் அடம்பன் பகுதியில் இராணுவச் சிப்பாய் கொல்லப்பட்டதாகவும் வவுனியா போர் முனையில் 2 இராணுவத்தினர் காயமடைந்ததுடன், மன்னார் நகரப்பகுதியில் சனிக்கிழமை இரவு விடுதலைப் புலிகள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் 2 பொலிசார் காயமடைந்ததாகவும், அந்த ஊடகத் தகவல் மையம் விபரம் தெரிவித்திருக்கின்றது,
யாழ் குடாநாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு புதுவருடத்தை முன்னிட்டு திங்கட்கிழமை இரவு விலக்கப்பட்டிருக்கும் என யாழ் பிராந்திய இராணுவத் தலைமையகம் அறிவித்திருக்கின்றது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இரண்டு தினங்கள் யாழ் குடாநாட்டில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது,