இலங்கை வெளியுறவுத்துறையிடம் தெரிவிக்காமல் யுனிசெஃப் தூதுவர் புலிகளைச் சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் யுனிசெஃப்பின் இலங்கைக்கான புதிய வதிவிடத் தூதுவர் பிலிப்பே டுவாமெல்லே கடந்தவாரம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சிக்குச் சென்று அந்த அமைப்பின் தலைவர்களுடனான சந்திப்பினை தமது அமைச்சுக்கு அறிவிக்காது மேற்கொண்டார் எனக் குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை வெளிநாட்டமைச்சு, திங்களன்று அவரை தனது அமைச்சிற்கு அழைத்து இது குறித்த கண்டனத்தினையும் வெளியிட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது.
இது குறித்து இலங்கை வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்றில், வெளியுறவுச் செயலர் பாலித கொஹென இவருடனான இந்தச் சந்திப்பின்போது, வெளிநாட்டு இராஜதந்திரிகளோ அல்லது உயர்பிரதிநிதிகளோ இலங்கையின் வடமாகாணத்திலுள்ள கட்டுப்பாடற்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்வது குறித்து தற்போது வெளிநாட்டமைச்சு அமுல்படுத்திவரும் நடைமுறைகளை, யுனிசெஃப்பின் இலங்கைக்கான புதிய வதிவிடத் தூதுவர் பிலிப்பே டுவாமெல்லே கடைப்பிடிக்கவில்லை என்பதைனைச் சுட்டிக்காட்டி, தனது அதிருப்தியினையும், கண்டனத்தினையும் வெளியிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான இவ்வாறான சந்திப்புக்களை விடுதலைப்புலிகள் அமைப்பினர் தமது பிரச்சார நடவடிக்கைகளுக்கு சாதகமாகப் பயன்படுத்துவதனால், வெளிநாட்டமைச்சு அமல்படுத்திவரும் இவ்வாறான நடைமுறைகளை யுனிசெஃப்பின் இலங்கைக்கான புதிய வதிவிடத் தூதுவர் பிலிப்பே டுவாமெல்லே மீறி நடந்திருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றும் இலங்கையின் வெளியுறவுச் செயலர் பாலித கொஹென அவரிடம் தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து வெளியுறவு அமைச்சின் செயலரிடம் பதிலளித்த பிலிப்பே டுவாமெல்லே, கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கையில் தனது பதவியினைப் பொறுப்பேற்றுக்கொண்ட தான், வெளிநாட்டமைச்சின் இந்த புதிய நடைமுறைகள் குறித்து அறிந்து வைத்திருக்கவில்லை என்றும், தனது விஜயம் குறித்து இலங்கைப் பாதுகாப்பு அமைச்சினுடனான கலந்துரையாடலின் பின்னரே தான் இந்த விஜயத்தினை மேற்கொண்டதாகவும் இலங்கையின் வெளியுறவுச் செயலரிடம் தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் புலிகள் சிறார்களை தமது படைகளில் சேர்ப்பது தொடர்பில் யுனிசெஃப்பிற்கும், புலிகள் அமைப்புக்கும் இடையில் இடம்பெற்று வரும் வேலைத்திட்டத்தின் வளர்ச்சியினை அவதானிப்பதற்காகவும், அங்கு பணியாற்றும் யுனிசெஃப் அமைப்பின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைகளை நடாத்துவதற்காகவுமே தான் கிளிநொச்சிக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்ததாக அவர் தனது பக்க விளக்கத்தினை முன்வைத்தாகவும் இலங்கை வெளிநாட்டமைச்சு தெரிவித்திருக்கிறது.
இவ்விவகாரம் குறித்து இலங்கையிலுள்ள யுனிசெஃப்ன் அமைப்பின் தலைமை தொடர்பு அதிகாரி கோர்டன் வெய்ஸ் தமிழோசையில் வெளியிட்ட கருத்துக்களை நேயர்கள் கேட்கலாம்.
வட இலங்கை வன்முறையில் விடுதலைப் புலிகள் 24 பேர், படையினர் 2 பேர் பலி: இலங்கை இராணுவம்
இலங்கையின் வடக்கே நாகர்கோவில், முகமாலை, பொன்னாலை, வவுனியா மற்றும் மன்னார் உயிலங்குளம், பரப்பாங்கண்டல், மாந்தை, நரிக்குளம் போன்ற இராணுவ முன்னரங்கப் பகுதிகளில் திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 24 விடுதலைப் புலிகளும், இரண்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
நாகர்கோவில், முகமாலை பகுதிகளில் செவ்வாயன்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் இன்று காலை நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, செவ்வாய் அதிகாலை வவுனியா செட்டிகுளம் வீரபுரம் பகுதிகளில் இராணுவத்தினரின் 20 பேர் கொண்ட சிறிய முகாம் ஒன்றை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்ததாகவும், இதில் 5 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மின்னஞ்சல் வழியாக தெரிவித்திருக்கின்றார்.
இங்கிருந்து ஆயுதத் தளவாடங்கள் தங்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் முகாம் எரியூட்டப்பட்டதாகவும் தங்கள் தரப்பில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும் இளந்திரையன் கூறியிருக்கின்றார்.
எனினும் வவுனியா உலுக்குளம் பகுதியில் விடுதலைப் புலிகள் செவ்வாய் அதிகாலை இராணுவ காவலரண் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்து சில ஆயுதத் தளபாடங்களைக் கைப்பற்றித் தப்பிச்சென்றுள்ளதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. இதனையடுத்து, அப்பகுதியில் தப்பியோடிய விடுதலைப் புலிகளைக் கண்டு பிடிப்பதற்காகத் தேடுதல் நடவடிக்கையொன்று நடத்தப்பட்டுள்ளது.
திங்களன்று யாழ்ப்பாணம் முகமாலை பிரதேசத்திலும் மன்னார் பிரதேசத்தின் இராணுவ முன்னரங்கப் பகுதிகளிலும் இடம்பெற்ற சண்டைகளில் 18 விடுதலைப் புலிகளும் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
இதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் அடையாளம் தெரியாதவர்களினால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் எஸ்.தவராஜாவின் உடல் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.