தமது பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இலங்கை அரசிடம் வலியுறுத்தல்.
இலங்கையில் மனித நேய உதவி நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்களின் கௌரவம் மற்றும் பாதுக்காப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கான பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
செஞ்சிலுவைச் சங்கப் பணியாளரான சூரியகாந்தி தவராஜா அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்படமை குறித்து தனது கடுமையான கண்டனத்தை தனது மாதாந்த அறிக்கையில் வெளியிட்டுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், அந்தக் கொலை தொடர்பில் உடனடியாக, சுயாதீனமான மற்றும் பக்கசார்பற்ற புலன் விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.
இந்தக் கொலை தொடர்பாகவும் மனித நேயப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்தும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மிகுந்த கவலையடைந்துள்ளதாக, அந்த அமைப்பின் இலங்கைக்கான குழுவின் தலைவரான டூண் வடன்ஹோவ் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியமும் கண்டனம் தெரிவித்துள்ளது
![]() |
![]() |
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு கூட்டம் |
செஞ்சிலுவைச் சங்கத்தின் இந்தப் பணியாளரின் கொலையை ஐரோப்பிய ஒன்றியமும் அறிக்கை ஒன்றில் கண்டித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் மனித நேயப் பணியாளர்கள் மீது இலங்கையில் வெவ்வேறு சந்தர்ப்பங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், அங்குள்ள சூழ்நிலையில் உதவி நிறுவனப் பணியாளர்கள் பணியாற்றுவதில் சிரமம் அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளது.
மனித நேயப் பணியாளர்களை பாதுகாப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்தயும் இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தனது அறிக்கையில் கேட்டுள்ளது.
வடக்கில் நடக்கும் மோதல்கள் குறித்தும் கவலை
![]() |
![]() |
வடக்கில் மோதல்கள் தொடருகின்றன |
அதேவேளை மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடக்கும் மோதல்கள் அதிகரித்துள்ளதால் அங்கு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக தனது அறிக்கையில் கூறும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்தும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
கொழும்புத் தாக்குதல்களை அடுத்து பெருமளவில் தமிழர்கள் கைது செய்யப்பட்டது குறித்து தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கான சில உதவிகளையும் தாம் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், காணாமல் போதல்கள் மற்றும் சிறார்களைப் படைக்குச் சேர்த்தல் போன்றவை நாடங்கிலும் உள்ள மக்களை பாதிப்பதாகவும் அது கவலை வெளியிட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து ஓமந்தை சோதனைச் சாவடிப் பகுதியில் பொதுமக்களின் போக்குவரத்து தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக கட்டுப்பாடுகள், நோயாளர் அம்புலன்ஸ் வண்டிகள், மனிதநேய நிறுவனங்களின் பொருட்போக்குவரத்துக்கான வண்டிகள் ஆகியவற்றின் போக்குவரத்தையும் பாதித்ததாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
கிழக்குமாகாண வெள்ளம் காரணமாக பெருமளவு இடம்பெயர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டமை குறித்து தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள செஞ்சிலுவைச் சங்கம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 26400 பேர் இன்னமும் மீள்குடியேற்றப்படாமல், முகாம்களில் தங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை வடபகுதியில், மன்னார் மாவட்டத்தில் 21900 பேரும், வவுனியா மாவட்டத்தில், 10, 565 பேரும் இடம்பெயர்ந்து இன்னமும் தமது இருப்பிடங்களுக்கு திரும்ப முடியாமல் இருப்பதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.