அன்னியச் செலாவணி கையிருப்பு “நீர்க்குமிழியா’?
உ .ரா. வரதராசன்
“இந்திய நாட்டின் பொருளாதாரம் இமயமென உயர்ந்து நிற்கிறது’ என்று வளர்ச்சியின் பரிணாமங்களை வியந்து போற்றுகிற ஆட்சியாளர்களும் வல்லுநர்களும் அதற்கான சான்றாகச் சுட்டிக்காட்டுவது நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு பற்றிய புள்ளிவிவரங்களாகும்.
உலகமய, தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து அமல்படுத்தத் தொடங்கியது 1991 ஆம் ஆண்டில்தான். அந்த ஆண்டு மார்ச் இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் அன்னியச் செலாவணிக் கையிருப்பாக இருந்த தொகை 580 கோடி அமெரிக்க டாலர் மட்டுமே. இது படிப்படியாக உயர்ந்து 2007 மார்ச் இறுதியில் 19,920 கோடி டாலராக ரிசர்வ் வங்கியில் அம்பாரமாகக் குவிந்து கிடப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியதற்குப் பிரதான காரணங்களாகச் சொல்லப்பட்டவற்றில் ஒன்று, நாடு சந்தித்த அன்னியச் செலாவணி நெருக்கடி. மறைந்த சந்திரசேகர் பிரதமராக இருந்த காலகட்டத்தில், அன்னியச் செலாவணி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு வேறு வழியில்லாமல், மத்திய அரசு ரிசர்வ் வங்கியிலிருந்த தங்கத்தை டன் கணக்கில் எடுத்துக்கொண்டு போய் இங்கிலாந்து (மத்திய) வங்கியில் அடமானம் வைக்க நேரிட்டது என்பது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்திய நிகழ்வு. அந்த நிலைமை இப்போது தலைகீழாய் மாறியிருக்கிறது என்பதையே தற்போதைய அன்னியச் செலாவணிக் கையிருப்பு விவரங்கள் உணர்த்தும் நிலவரம்.
மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில், இது மிகவும் திருப்திகரமானதொரு நிலைமை என்றே தோற்றமளிக்கலாம். இதை அளவுகோலாகக் கொண்டால், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பெரும் வெற்றியை நம் நாட்டுக்குத் தேடித் தந்துள்ளதாகவே முடிவுக்கு வரத் தோன்றும். ஆனால், இந்தக் கையிருப்பின் கணக்குகளை சற்றுக் கருத்தூன்றிப் பரிசீலித்தால், கவலையே மிஞ்சுகிறது.
1991 முதல் 2007 வரையிலான 16 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் நமக்குச் சாதகமான பலன்கள் விளைந்தனவா என்பது முதலில் பார்க்க வேண்டிய கணக்கு.
- 1990 – 91ஆம் ஆண்டில் நமது இறக்குமதிகளின் மொத்த மதிப்பு ரூ. 50,086 கோடி;
- ஏற்றுமதிகளின் மதிப்பு ரூ. 33,152 கோடி மட்டுமே.
- நிகர பற்றாக்குறை ரூ. 16,934 கோடி!
- இது டாலர் கணக்கில் 944 கோடி.
- இதுவே, 2005-06ஆம் ஆண்டில் ரூ. 2,29,000 கோடி பற்றாக்குறையாக உயர்ந்தது;
- டாலர் கணக்கில் இந்தப் பற்றாக்குறை 5,184 கோடியாகும்.
கடந்த பதினாறு ஆண்டுகளில் ஓர் ஆண்டில்கூட நம் நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பு, இறக்குமதி மதிப்பைவிடக் கூடுதலாக இல்லை என்பதுதான் புள்ளிவிவரங்கள் கூறும் உண்மை.
இந்தப் பதினாறு ஆண்டுகளில் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட நிகர பற்றாக்குறை – ஏற்றுமதியை விஞ்சிய இறக்குமதியால் சந்திக்க வேண்டிய சுமை – 3,410 கோடி டாலர் என்று ரிசர்வ் வங்கிக் கணக்கு கூறுகிறது. (ரூபாய் மதிப்பில் இன்றைய நிலவரப்படி இது 1,37,000 கோடி ரூபாய் பற்றாக்குறையாகும்!)
இப்படியிருக்கையில், நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு மட்டும் உயர்ந்து கொண்டே இருப்பது எப்படி என்ற கேள்வி எழுவது இயல்பே!
சர்வதேச ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தக நிலவரம் நமக்குச் சாதகமாக அமையாத பின்னணியில், நம் நாட்டின் ஆட்சியாளர்கள் அன்னியச் செலாவணி வரத்தைக் குறியாகக் கொண்டு, நிதித்துறை சீர்திருத்தங்கள் பலவற்றையும் அமலாக்கி வந்துள்ளனர்.
இதன் முதல் கட்டமாக 1991 ஆம் ஆண்டு தொடங்கி நமது நாட்டுப் பொருளாதாரத்தின் சகல துறைகளும் – பாதுகாப்புத்துறை உள்பட – அன்னிய முதலீட்டுக்காகத் திறந்துவிடப்பட்டு வந்துள்ளன. புதிதாகத் தொழில் தொடங்க நூற்றுக்கு நூறு சதவீத முதலீட்டுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் தொழில் நிறுவனங்களை விலைபேசி கையகப்படுத்துவதற்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டது.
இரண்டாவதாக 1993 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொழில் முதலீட்டுக்கு மட்டுமன்றி, பங்குச் சந்தை வர்த்தகத்திலும் அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் நுழைய அனுமதிக்கப்பட்டன.
இந்த இரண்டு வகையிலும், பன்னாட்டு நிதி மூலதனம் நம் நாட்டுக்கு வருவதற்கு ஊக்கம் அளிப்பதற்காக அடுக்கடுக்கான சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன.
இவற்றில், முதல் வகையில் நேரடித் தொழில் முதலீடுகளாக வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, இரண்டாவது வகையில், பங்குச் சந்தை வர்த்தகத்திற்காக வந்த தொகைகள் பல மடங்காகும்.
நேரடித் தொழில் முதலீட்டிலும், புதிய தொழில்களைத் தொடங்க வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, உள்நாட்டு நிறுவனங்களை கபளீகரம் செய்வதற்காக வந்த மூலதனமே மிகுதியாகும்.
இரண்டாவது வகையாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் (சூதாட்டத்தில்) நுழைந்துள்ள அன்னிய மூலதனத்தின் வளர்ச்சி திகைப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இதற்கு அனுமதி வழங்கப்பட்ட 1993 ஆம் ஆண்டில், அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் இந்தியாவின் பங்குச் சந்தையில் ஈடுபடுத்திய தொகை 83 கோடி அமெரிக்க டாலர்கள். இதுவே 2007 மார்ச் இறுதியில் 5200 கோடி டாலர்களாக “விசுவரூபம்’ எடுத்தது! இப்படி மூலதனக் கணக்கில் வரவாக வந்த அன்னியச் செலாவணிதான் ரிசர்வ் வங்கியில் ஏகபோகமாக குவிந்து நிற்கிறது!
இதற்கு விலையாக நமது நாடு கொடுத்தவை ஏராளம், ஏராளம்!
இந்த அன்னிய மூலதன வரவுக்கு எந்தக் கட்டுப்பாடும், நிபந்தனையும் கிடையாது. அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் கொண்டு வரும் நிதி மூலதனத்தின் உண்மையான சொந்தக்காரர்கள் யார் என்று தெரிவிக்க வேண்டியது கட்டாயமில்லை!
இந்த முதலீடுகள் கொழிக்கும் லாபத்துக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு உண்டு. இதற்காக மொரிஷியஸ் நாட்டோடு பாஜக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டு, அந்த நாட்டின் வழியாக வந்து போகும் அன்னிய மூலதனம் எந்த வரிவிதிப்புக்கும் உட்படாது. (இதை மறுபரிசீலனை செய்வோம் என்று குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் கூறியுள்ள இன்றைய மத்திய அரசு, கடந்த மூன்றரை ஆண்டுகளாக இதைக் கண்டுகொள்ளவே இல்லை!)
இந்த அன்னிய மூலதனம்தான் நமது நாட்டின் பங்குச் சந்தையை ஆட்டிப் படைக்கிறது. இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனங்களில் 30 கம்பெனிகளின் பங்குகளின் விலை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் “சென்செக்ஸ்’ குறியீடு ஒரு மாயாஜால விளையாட்டாக மாறியுள்ளது.
1990 ஜனவரியில் 1000 என்று இருந்த சென்செக்ஸ் புள்ளிகள் 2004 ஆம் ஆண்டு வரை 7000 புள்ளிகளுக்குக் கீழாகவே இருந்தது. 2005 ஜூன் மாதம் 7000 புள்ளியை எட்டிப்பிடித்த சென்செக்ஸ், இப்போது 20,000 புள்ளிகள் வரை நாலு கால் பாய்ச்சலில் எகிறிக் குதித்துள்ளது! இதன் ஏற்ற இறக்கங்களில் பல லட்சம் கோடி ரூபாய்கள் நாள்தோறும் ஒரு பிரிவினருக்கு லாபமாகவும், இன்னொரு பிரிவினருக்கு இழப்பாகவும் பரிமாற்றமாகின்றன.
சென்செக்ஸ் பற்றி நாட்டின் நிதியமைச்சர் ப. சிதம்பரம் “சில நேரங்களில் வியப்பாகவும், சில நேரங்களில் கவலையளிப்பதாகவும்’ இருக்கிறது என்று அண்மையில் கூறியிருந்தார். அதைத் தாண்டி இந்த “மாயா பஜார்’ விளையாட்டைக் கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி சிந்திக்கக்கூட அரசு மறுப்பதுதான் வேதனை!
எனவேதான், அரசுத் தரப்பில் ஆர்ப்பரிப்போடு பேசப்படுகிற அன்னியச் செலாவணிக் கையிருப்புப் பெருக்கம், பொருளாதார வளர்ச்சிக்கு அளவுகோல் அல்ல; அது சோகை பிடித்த பொருளாதார நீரோட்டத்தின் மேற்பரப்பில் தென்படும் நீர்க்குமிழி போன்றதே!
பொருளாதாரச் சீர்திருத்தங்களின் எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல – ஆதரவாளர்களே ஆழ்ந்த கவலையோடு பரிசீலிக்க வேண்டிய நிலைமை இது!
(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)