Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for திசெம்பர் 29th, 2007

Is educational credential required for people’s representatives? – D Purushothaman

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

பள்ளி இறுதிவகுப்பைக்கூட எட்டாத எம்.பி.க்கள்!

டி. புருஷோத்தமன்

எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் கூட குறைந்தபட்சம் பள்ளி இறுதிவகுப்பு வரையிலாவது பயின்று இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

ஆனால் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் பள்ளி இறுதிவகுப்புவரை கூட பயிலாதவர்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். 60 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித குறைந்தபட்ச கல்வித் தகுதியையும் நிர்ணயிக்காததால் இந்த அவலநிலை.

பள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாத எம்.பி.க்கள் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளிலும் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியில் இத்தகைய எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முகமது சாஹித், ரமேஷ் துபே, பாய் லால் ஆகிய மூவரும் பள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாதவர்கள். இதேபோன்று சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த ஹரி கேவல் பிரசாத்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுரேந்திர பிரகாஷ் கோயலும் இப்பட்டியலில் அடங்குவர்.

மேற்குவங்கத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் செüத்ரியும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரசேகர் துபேயும் இதேபோன்று பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள்தான்.

கேரளம் கல்வியறிவு பெற்ற முதன்மை மாநிலம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அங்கு கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரவீந்திரன், பள்ளி இறுதிவகுப்பை முடிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

மகாராஷ்டிரத்தில் பாஜகவை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், சிவசேனை கட்சியை சேர்ந்த மோகன் ரவாலேயும் இந்தப் பட்டியலில் அடங்குவர். இவ்விஷயத்தில் பிற கட்சிகளுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பாஜகவும் சிவசேனையும் நிரூபித்துள்ளன.

ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவதார் சிங் பதானாவும், ஆத்ம சிங் கில்லும் பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள். அசாமில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோனிகுமார் சுபாவும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த பாலிராம் காஷ்யப்பும் இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்கள்தான்.

குஜராத்தில் பாஜகவை சேர்ந்த சோமாபாய் கந்தலால் கோலி பட்டேல் பள்ளி இறுதிவகுப்புவரை பயிலாதவர்.

ஆனால் மேற்குறிப்பிட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் சிகரம் வைத்தாற்போல, தொடக்கப்பள்ளி வரை மட்டுமே பயின்றவர் பாஜகவை சேர்ந்த மகேஷ் குமார் கோனோடியா!

பிகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் மன்ஜியும், லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சூரஜ் சிங்கும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த கைலாஷ் பைத்தா ஆகியோரும் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்தான்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயரிய கல்வித்தகுதியைப் பெற்றிருந்தால்தான் விவாதங்களில் உரியமுறையில் பங்குகொண்டு தங்களது கருத்துகளை வலுவான முறையில் எடுத்துக்கூற இயலும். இல்லாவிடில் எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் அவையை விட்டு வெளிநடப்புச் செய்ய என்பதே தாரக மந்திரமாகிவிடும்.

பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 36 லட்சம் கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் திட்ட இலக்குகளை எட்ட கல்வித்தகுதி மிக்க எம்.பி.க்கள் மிக அவசியம் என்பதை எவரும் மறுக்க இயலாது.

துவக்கத்தில் மில்லியன்கள், கோடிகள், பின்னர் பில்லியன்கள், இறுதியாக டிரில்லியன்கள் என அரசின் வரவு-செலவுத் திட்டங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. போதிய கல்வியறிவு இல்லாத காரணத்தால் இதைப்பற்றிய பொருளாதார விவரங்களை அறிய முடியாமல் இத்தகைய எம்.பி.க்கள் அவதிப்படுகின்றனர். நாடாளுமன்ற விவாதங்களில் தீவிரமாக பங்கேற்க இயலாமல் சிரமப்படுகின்றனர்.

உயர்கல்வி கற்றவர்கள் உயர் அதிகாரிகளாகப் பொறுப்பேற்று அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் பள்ளிப்படிப்பை கூட முடிக்காத அரசியல்வாதிகள் அவர்களை வழிநடத்தும் துர்ப்பாக்கியம் நமது நாட்டில் அதிகமாகவே நிகழ்ந்து வருகிறது. கல்விகற்ற அதிகாரிகள் சொல்வதை அரசியல்வாதிகள் சிறிதும் ஏற்பதில்லை. இதனால் ஐந்தாண்டுத் திட்டங்களின் முழுப்பலன்களும் மக்களைச் சென்றடைவதில்லை. ஏழ்மை இன்னும் தாண்டவமாடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

பல எம்.பி.க்கள் போதிய கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்துவருவதால் தாங்கள் செய்யும் குற்றச்செயல்களின் பாதிப்புகளை தாங்களே உணர்ந்துகொள்வதில்லை.

லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மன்ஜி. போதிய கல்வித்தகுதியற்ற இவர் எம்.பி. என்ற முறையில் செய்த குற்றச்செயல்கள் அனைவரையும் வெட்கித் தலைகுனியவைக்கக் கூடியதாகும். வெளிநாடுகளுக்கு போலி பெயர்களில் ஆள்கடத்தலில் வல்லவர் என்ற பெயருக்கு அவர் ஆளாகிவிட்டார்.

இதற்கும் ஒரு படி மேலே சென்று, தனது காதலியை மனைவி எனக் கூறி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது தில்லி விமான நிலையத்தில் கையும் களவுமாக பிடிபட்டார். (சட்டபூர்வமாக அப்பெண்ணை திருமணம் செய்யவில்லை என்ற போதிலும்) அந்தக் காதலியை விவாகரத்து செய்யவும் அவர் முயன்று வருகிறார்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது ஜமீன்தாரர்களும் தனவந்தர்களும் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளின் பிரமுகர்களும் தங்களது செல்வாக்கின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது மக்களிடம் போதிய விழிப்புணர்வும் இல்லை. ஆனால் தற்போது மக்களிடம் கல்வியறிவும் விழிப்புணர்வும் வேகமாக ஏற்பட்டு வருகிறது.

அரசு உயர்பதவிகளுக்கு எவ்வாறு உயரிய கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதைப்போன்றே இனி எம்.பி.க்களுக்கும் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.

100 கோடி மக்களின் பிரநிதிகளாக இருக்க வேண்டிய எம்.பி.க்களுக்கு போதிய கல்வித்தகுதி அவசியம் இருக்க வேண்டுமல்லவா? அரசியல்சாசனத்தில் உரிய திருத்தம் செய்து இதற்கான வழிவகைகளைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Posted in Bengal, Bihar, BJP, BSP, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Citizen, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), credentials, Education, Election, eligibility, Gujarat, Haryana, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Kamaraj, kamarajar, Kamraj, Kerala, Lalloo, Laloo, Lalu, maharashtra, MLA, MP, people, Polls, Purushothaman, Qualifications, Requirements, RJD, Shiv Sena, Shivsena, Teachers, Uthar Pradesh, Utharakand, Utharakhand, Utharanchal, Utharkhand, Utharpradesh, Uttar Pradesh, Uttarakand, Uttarakhand, Uttaranchal, Uttarkand, Uttarkhand, UttarPradesh, Uttrakand, Votes, WB, West Bengal, Yadav | Leave a Comment »

MG Ramachandran: Politics, Cinema, Personality – MGR Biosketch by Panruti Ramachandhran

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

மறைந்தும் மறையாத தலைவர்

பண்ருட்டி ராமச்சந்திரன்

எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம்தான் இருந்தது.

அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்ற பிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. அவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் இதை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

ஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். திருச்சியை அடைந்த பிறகு எம்.ஜி.ஆர். ஒரு பரீட்சையில் இறங்கினார். காரில் போகும்பொழுதே தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் கழற்றி வைத்துவிட்டார். வழிநெடுக கூடியிருந்த மக்கள் எம்.ஜி.ஆர். எங்கே என்று தேடினார்களேயொழிய ஆர்ப்பரிக்கவில்லை. பிறகு மேலூரை நெருங்கியபொழுது தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து கொண்டார். உடனே வழக்கம்போல் இருபுறமும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் உடனே என்னிடத்தில் “”என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக்கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்” என்று சொல்லி சிரித்தார்.

“புகழ்பெற்ற நடிகராக விளங்குவதால் மக்கள் செல்வாக்கா’ என்று கேட்டேன். அதற்கு அவர், “நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால் மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப் பெற முடியும். அதற்கு மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கவேண்டும்’ என்றார்.

நடிகர்கள் நாடாள ஆசைப்படுவது நியாயமா என்று கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதில்.

எம்.ஜி.ஆர். மக்களை எவ்வாறு நேசித்தாரோ, அதேபோல் மக்களும் அவரை நேசித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக அவர் நோய்வாய்ப்பட்டபொழுது ஜாதி, மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இறைவழிபாடு நடத்தியது இதுவரை வரலாறு காணாத காட்சியாகும். “”நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” என்ற பாட்டு ஒலி நாடு முழுதும் கேட்காத நாளில்லை.

1984-ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கிறாரா? உணர்வுடன் இருக்கிறாரா? என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் தமிழக மக்கள் சிறிதும் தயக்கமின்றி அவரை வெற்றிபெறச் செய்தனர்.

அமைச்சரவைக் கூட்டத்திலும்கூட எந்தத் திட்டங்கள் ஆனாலும் பட்ஜெட்டுகள் போடுவது என்றாலும் பாமர மக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பார்த்தே ஒப்புதல் தருவார். “மத்திய, மாநில அரசுகளுக்கு வரவு, செலவில் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களின் மீது வரிபோடலாம் அல்லது வங்கிகள் மூலம் கடன் பெறலாம். ஆனால் குடும்பஸ்தனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அவன் எங்கே போவது? ஆகவே அரசின் திட்டங்கள் பாமர மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் அமைய வேண்டும்’ என்பார்.

அரிசி விலையையும், பஸ் கட்டணத்தையும் உயர்த்த ஒப்புக்கொள்ள மாட்டார். குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், சிறு விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் போன்ற பல திட்டங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை. அரசின் நிதிநிலை சரியானால் போதும் என்ற கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. அதனாலேயே அவரது ஆட்சி ஏழைகளின் ஆட்சியாகத் திகழ்ந்தது.

ஒருமுறை அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றார். இது எம்.ஜி.ஆரே சொன்னது. அண்ணா வழக்கம்போல் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்தார். எம்.ஜி.ஆர். பின் சீட்டிலிருந்தார். பெரம்பலூருக்கு அப்பால் சென்றபொழுது காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அப்பொழுது அந்தப் பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் காரிலிருந்த கொடியைப் பார்த்துவிட்டு நேராக முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த அண்ணாவிடம் அவர் அண்ணா என்று தெரியாமல், எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேட்டார்கள். அதற்கு அறிஞர் அண்ணா கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இதோ பின்னால் இருக்கிறார் என்று அடையாளம் காட்டினார்.

எம்.ஜி.ஆர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனாராம். அண்ணா எத்தகைய தலைவர் என்பதையும் தன்னோடு இருப்பவர்கள் தன்னைவிடச் செல்வாக்காக இருக்கும்பொழுது பொறாமைப்படுவதற்குப் பதிலாகப் பெருமைப்பட்டவர் என்றும் குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர். இறுதிவரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணம் அறிஞர் அண்ணா என்றால், தகுதியான வாரிசுக்கு இலக்கணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான்.

எம்.ஜி.ஆர். இளமையில் வறுமையைச் சந்தித்தவர். பொதுவாக, வறுமை கொடிது. இளமையில் வறுமை அதைவிடக் கொடியது. தனது அண்ணனும், தானும் சிறுவயதில் கும்பகோணத்தில் இருந்தபொழுது மூன்று நாள்கள் பட்டினி கிடந்ததாகவும் பரிதாபப்பட்டு எதிர்வீட்டைச் சேர்ந்த ஒரு தாய் கொஞ்சம் அரிசியை புரட்சித்தலைவரின் தாயிடம் தந்து குழந்தைகளுக்காவது கஞ்சி காய்ச்சி கொடுக்கும்படிச் சொன்னாராம்.

அன்று அந்த எதிர்வீட்டுத் தாய் செய்த உதவியால் தான் இன்று உங்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர். கிடைத்துள்ளார் என்று அவரே கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த அனுபவத்தால் தான் தமிழ்நாட்டில் பிறக்கும் எந்த குழந்தையும் பட்டினி கிடக்கக்கூடாது என்றும் ஒருவேளையாவது உணவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கருதியதால்தான் சத்துணவுத்திட்டம் உதயமாயிற்று.

சத்துணவுத்திட்டம் கொண்டு வரவேண்டுமென்ற அவரது கருத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கூட சில அமைச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. இத்திட்டத்தால் பணம் செலவாகுமே தவிர பயன் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஊழல் பெருகும் என்றும் சொன்னார்கள். ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

மூக்கு என்று இருந்தால் சளிபிடிக்கத்தான் செய்யும்; ஒரு திட்டம் என்றால் சேதாரங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திட்டத்தைக் கைவிட வேண்டியது இல்லை என்று தீர்மானித்தோம்.

இந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவுத் திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கலாம் என்றார். அப்படி வழங்கினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லையே என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மூன்று நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று அனைத்து பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதால் சமத்துவம் ஏற்பட்டது. இரண்டு, படிக்கிற காலத்தில் பள்ளியில் பிள்ளைகளுடைய இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. மூன்றாவது, சவலைப்பிள்ளைகள் என்ற நிலையை மாற்ற இன்று முட்டை வழங்குவது வரை அது சத்துணவாக ஆக்கப்பட்டுள்ளது.

“”ஆளும் வளரணும், அறிவும் வளரணும் – அதுதாண்டா வளர்ச்சி”, என்பது எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாட்டு.

நல்ல சிந்தனையோடு நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நற்காரியங்களுக்குத் தெய்வமும், மடியை வரிந்து கட்டிக்கொண்டு முன்னே ஓடிவந்து துணைசெய்யும் என்பார் திருவள்ளுவர். 1983-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் சென்றபொழுது எம்.ஜி.ஆர். பெயரை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தியாவின் சார்பில் சென்றதால் ஒரு மாநில முதலமைச்சர் பெயரைப் பதிவு செய்ய முடியாது என்று எனக்குத் தெரிவித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஐ.நா. சபையில் உலக உணவுதினம் கொண்டாட வேண்டி வந்தது. அதில் அப்பொழுது இருந்த 101 அணிசாரா நாடுகளின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

உலக உணவு தினத்தில் அணிசாரா நாடுகள் சார்பில் இந்தியா கலந்துகொள்ள அழைக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் ஐ.நா.சபையில் கலந்துகொண்ட எங்களுக்குத் தலைவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இருந்தார். அடுத்த நிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இருந்தார். இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் நான் இருந்தேன்.

உலக உணவு தினத்தன்று இந்திரா காந்தியும், நரசிம்மராவும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். ஆகவே, இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உணவு தினம் என்பதால் சத்துணவுத் திட்டத்தைப்பற்றி ஐ.நா. சபையில் விரிவாகப் பேசினேன். உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதை கைதட்டி வரவேற்றனர். எம்.ஜி.ஆர். பெயரும் ஐ.நா. சபையில் இடம்பெற்றது.

முயற்சி என்னுடையது என்றாலும் அதற்குரிய வாய்ப்பு இயற்கையாக அமைந்தது புரியாத புதிர் தானே!

(கட்டுரையாளர்: அவைத்தலைவர், தேமுதிக)

Posted in Actors, ADMK, AIADMK, Anjali, Anna, Assembly, Biography, Biosketch, Children, Cinema, CM, DMDK, DMK, dynasty, EVR, Films, Food, Free, Freebies, Heartthrobs, Hero, Heroes, Incidents, Indhra, Indira, Indra, Iruvar, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kids, King, KK, Life, Manifesto, Meals, Memoirs, MGR, Midday Meals, Monarchy, Movies, Notes, Nutrition, Panruti, Periyar, Personality, Politics, Poor, PVNR, Ramachandhran, Ramachandran, Ramachanthiran, Ramachanthran, Rao, UN, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth | Leave a Comment »

Colombo withdraws security – Tamil MP Mano Ganesan alleges ‘threat to life’, may flee Sri Lanka

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

விடுதலைப் புலிகளும், கருணா குழுவினரும் தொடர்ந்து சிறார்களை சேர்ப்பதாக ஐ.நா கூறுகிறது

இலங்கையில் விடுதலைப் புலிகளும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணா குழுவினரும், தொடர்ந்து சிறார்களை கடத்தி அவர்களை சண்டையிட பயன்படுத்துவதாக ஐ.நா கூறியுள்ளது.

சிறார்களை சண்டையிட பயன்படுத்துவது குறைந்து இருந்தாலும், கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த இரு குழுவினரும் நூற்றுக்கணக்கான சிறுவர்களை சேர்த்துள்ளதாக ஐ.நா கூறுகின்றது.

ஐ.நா அதிகாரிகள் முன்னிலையில் சிறார்களை விடுவித்த ஒரு சில நாட்களிலேயே அவர்களை மீண்டும் சேர்த்து கருணா குழுவினர் அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாகவும் ஐ.நா கூறியுள்ளது.

 


பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடு செல்வதாக கூறுகிறார் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்

கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினறும், மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், தற்காலிகமாக வெளிநாடு ஒன்றுக்கு செல்ல முடிவெடுத்துள்ளார்.

இலங்கையில் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கிறது என்று காவல் துறையின் புலனாய்வுத் தறை கூறிய பிறகும் தன்னுடைய பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாகத் தெரிவிக்கும் மனோ கணேசன், இதையடுத்து தற்காலிகமாக இலங்கையை விட்டுச் செல்ல முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாகக் கூறிய இலங்கை அமைச்சர் கெஹ்லியா ரம்புக்வல்ல அவர்கள், கூடுதல் பாதுகாப்பு கோரி மனோ கணேசன் அளித்த மனு பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

 


Posted in Abductions, Colombo, dead, disappearances, Eelam, Eezham, extra-judicial, extra-judicial killings, Freedom, Ganesan, HR, Human Rights, Killed, killings, Life, LTTE, Mahinda, Mahinda Rajapaksa, Mano, Mano Ganesan, MP, Murder, Prabhakaran, Rajapaksa, Security, Sri lanka, Srilanka, Tamils, Threat, Velupillai, Velupillai Prabhakaran | Leave a Comment »

Interview with ‘Ramanujan’ Documentary filmmaker MV Bhaskar – Dinamani Kathir

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

ஆவணம்: “”கலையும் அறிவியலும் கலந்த இடம்தான் கோவில்!”

சமூகத்தில் பிரமிக்கதக்க சாதனைகளைச் செய்திருப்பவர்களைப் பாருங்கள். பெரும்பாலும் சப்தமே இல்லாமல் வேலை செய்து கொண்டிருப்பவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் எம்.வி. பாஸ்கர் – பன்முக ஆளுமை.

விளம்பரத் துறையில் பாஸ்கருடைய பணிகள் சர்வதேச அளவிலான விருதுகளை அவருக்குப் பெற்றுத் தந்திருக்கின்றன. அவருடைய “ராமானுஜன்’ ஆவணப் படம், கணித மேதை ராமானுஜன் பற்றிய காட்சிப் பதிவுகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. யேல் பல்கலைக்கழகத்துக்காக அவர் செய்த “ஊர்’ விவரணப் படம் தமிழ் மரபின் ஆதார வேர்களைத் தேடிச் சென்றது. பழங்குடியின மக்களின் கலாசாரத்தை, அவர்களுடைய வாழ்வியலைப் பதிவு செய்த “ட்ரைபாலஜி’ ஆவணப் படத்தில் அவருடைய பங்களிப்பு முக்கியமானது.

“”கலையும் அறிவியலும் சந்திக்கும் இடங்கள் எனக்கான தளங்கள்” எனக் குறிப்பிடும் பாஸ்கர், தமிழில் அதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு சிலரில் குறிப்பிடத்தக்கவர்.

மறைந்து கொண்டிருக்கும் சுவரோவியங்களைப் பதிவுகளாக்கி அடுத்தத் தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்.

ஒரு வரலாற்று ஆய்வாளனின் வேட்கையோடு கலை, அறிவியல், இசை, ஒளிப்பதிவு, இயக்கம், மின்பதிப்பு எனப் பல்வேறு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் பாஸ்கரைப் பற்றி எழுதுவதைவிடவும் முக்கியமானது அவரிடம் பேசுவது. தமிழில் பாஸ்கரைப் பற்றிய முதல் பதிவு இது. இனி பாஸ்கருடன்…

வெவ்வேறு துறை அறிமுகம் பலமா, பலகீனமா?

பலம்தான். ஒரே விஷயத்தைத் திரும்பத்திரும்ப செய்வது அயர்வையே தருகிறது. மாறாக வெவ்வேறு விஷயங்கள் மீதான ஈடுபாடு, நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது. தவிர, ஒரு துறையில் பெற்ற அனுபவம் மற்றொரு துறையில் ஏதேனும் ஒரு வகையில் உதவும். அதுவே உங்களை வித்தியாசப்படுத்தவும் செய்யும்.

விளம்பரப் படமும் ஆவணப் படமும் இருவேறு உலகங்கள். உங்களிடம் இவை இரண்டையும் இணைத்தது எது?

ஒரு படைப்பாளி எத்தனை ஈடுபாட்டுடன் செய்தாலும் விளம்பரங்கள் பிறருடைய திருப்தியையே முதல் நோக்கமாகக் கொண்டவை. மிகைப்படுத்தலும் போலித்தனமும் அங்கு அதிகம். தொடக்கக் காலத்திலிருந்தே இது என்னை அழுத்திக் கொண்டிருந்தது. நாம் செய்ய வேண்டிய காரியங்கள் வேறு என்பதை நன்கு உணர்ந்திருந்தேன்.

இந்நிலையில்தான், ராமானுஜத்தின் நூற்றாண்டையொட்டி அவர் பற்றிய ஆவணப் படத்தை இயக்கினேன். அப்போது அது எனக்குத் திருப்தி அளிப்பதாக இருந்தது.

ஓர் இடைவெளிக்குப் பின்னர், “ட்ரைபாலஜி’ செய்தோம். ஒரிஸôவில் வாழும் பழங்குடி இன மக்களின் கலாசாரம் குறித்த பதிவு அது. அதன் பின்னர், “ஊர்’. பேராசிரியர் இ. அண்ணாமலை எனக்கு அளித்த வேலை அது. வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் நமது கலை, கலாசாரம், பாரம்பரிய மரபுகள் பற்றிய ஓர் அறிமுகமாகவே அப்பணியைச் செய்தோம்.

நவீன வாழ்வு பழங்குடிகளைப் பாதித்திருக்கிறதா?

பழங்குடிகள் குறித்த நமது பார்வை மலிவானவை. பழங்குடிகளில் இன்றைய நவீன வாழ்வின் அனைத்து வசதிகளோடும் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்; தன் ஆதி அடையாளம் மாறாமல் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

பணம் இல்லாத ஒரு வாழ்வை ஒரு கணமேனும் நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா? ஆனால், பணமே இல்லாத ஒரு வாழ்க்கை அவர்களுக்குச் சாத்தியமாகி இருக்கிறது. அவர்களுடைய வீடுகளை அவர்களே கட்டுகிறார்கள். அவர்களுடைய உணவை, உடைகளை அவர்களே தேடிக் கொள்கிறார்கள். அவர்களுடைய ஒவ்வொரு தேவையையும் அவர்களால் சுயமாக அடைய முடிகிறது. இயற்கையோடான அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்வது.

“ஊர்’ அனுபவம் எப்படி?

தமிழின் உன்னதங்கள் உறைந்திருக்கும் 88 இடங்களுக்கு அந்தப் படத்துக்காகச் சென்றோம். உண்மையாகவே சொல்கிறேன். நம்மைவிடவும் மோசமான ஒரு சமூகம் இருக்க முடியாது. உலகளவில் போற்றத்தக்க எத்தனையோ கலைகள், கலைப் படைப்புகள் நம்மிடம் இருக்கின்றன. அவை அனைத்தையும் சாகடித்துக் கொண்டிருக்கிறோம் நாம். நம்முடைய மோசமான செயல்பாட்டுக்கு கோயில்களின் இன்றைய நிலை ஓர் உதாரணம்.

கோயில்கள் அழிந்து கொண்டிருக்கின்றனவா?

ஆமாம். நம்முடைய வாழ்க்கை முறையே கோயில் சார்ந்ததாகத்தான் இருந்திருக்கிறது. கோயில்கள்தான் எல்லாமும். கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் கூடிய அங்குதான் எல்லா கலைகளும் வாழ்ந்திருக்கின்றன.

கலையும் அறிவியலும் ஒன்றுகூடிய இடம் கோயில். இன்றைய நிலையோ வேறு. மதம் சார்ந்த விஷயமாக மட்டுமே கோயில் அணுகப்படுகிறது. உன்னதமான சிற்பங்களும் சுவரோவியங்களும் அழிந்து கொண்டிருக்கின்றன. கோயில் சார்ந்த கலை மரபுகள் வழக்கொழிந்து வருகின்றன. கலைஞர்கள் அருகி வருகிறார்கள். கலையின் அழிவும் கலைஞர்களின் அழிவும் ஒரு சமூகத்தினுடைய அடையாளத்தின் அழிவு.

நம் மரபுகளை அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுத்துச் செல்வது?

நிறைய பணிகள் இருக்கின்றன. முக்கியமாகத் திணிப்பு கூடாது. குழந்தைகளை குழந்தைகளாக இருக்க அனுமதிக்க வேண்டும். குழந்தைகளுக்கான கதைகள், இசை, கலை என எதையும் நாம் சிந்திப்பதே இல்லை. அவர்களை, பணம் பண்ணும் இயந்திரமாக்க நாம் துடித்துக்கொண்டிருக்கிறோம். நம் குழந்தைகளை முதலில் வீடுகளைவிட்டு வெளியே அழைத்து வர வேண்டும்; எந்தவித நோக்கமும் இல்லாமல். அதாவது, ஊர் சுற்றுவதுபோல்.

வாசிக்கும் பழக்கமும் ஊர் சுற்றும் பழக்கமும் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும். வாழ்க்கை கொண்டாட்டத்துக்குரியது. கொண்டாட்டங்களின் – கேளிக்கைகளின் ஒரு வடிவம்தான் கலை. நம்முடைய கலை, கலாசார ஆதாரங்களை அடுத்தத் தலைமுறைக்கு எப்படியேனும் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ் சமூகம் எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய சவால் அதுதான்.

Posted in Ads, Advertisements, Advt, Archeology, Arts, Bhaskar, Castes, Cinema, Community, Culture, Documentary, Films, Heritage, Hindu, Hinduism, History, Movies, MV Bhaskar, MV Bhaskhar, Paintings, Raamanujan, Raamanujar, Ramanujan, Ramanujar, SC, Science, ST, Temples, Tribes, Vaishnavism, Vaishnavite | Leave a Comment »

Analysis of Himachal Pradesh Assembly 2007 Election Results

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

அபாய எச்சரிக்கை

“வெற்றிக்குச் சொந்தம் கொண்டாட நூறாயிரம் பேர்; ஆனால், தோல்வியின் பழியைச் சுமக்க ஆளேயில்லை’ என்பார்கள். இமாசலப் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு என்ன காரணம் என்று யாராவது கேட்டால், அதற்கு சரியான பதில் இதுதான்~கடந்த முறை பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு என்ன காரணமோ அதேதான் காரணம்!

பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் குஜராத்தைத் தொடர்ந்து இப்போது இமாசலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருப்பது, அந்தக் கட்சிக்குப் பெருகிவரும் ஆதரவைக் காட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இமாசலப் பிரதேச வெற்றிக்கு முக்கியமான காரணம் பாஜக ஆதரவு அலை என்பதைவிட காங்கிரஸ் எதிர்ப்பு அலை என்பதை மறந்துவிட முடியாது.

தேர்தலுக்குத் தேர்தல் ஆளும் கட்சியை மாற்றுவது என்கிற வழிமுறையை இந்தியாவின் பல மாநிலங்களில் வாக்காளர்கள் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டனர் என்று தோன்றுகிறது. இதற்குக் காரணம், எந்த ஆட்சியாலும் மக்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்ட முடியாமல் இருப்பதா அல்லது வேறு வழியில்லாததால் ஆட்சியை மாற்றி மக்கள் தங்களது கோபத்தைக் காட்டுகிறார்களா என்று தெரியவில்லை.

தேர்தலுக்குத் தேர்தல் ஆட்சி மாறுகிறதே தவிர காட்சிகள் மாறவில்லை என்பதுதான் உண்மை. சென்ற தடவை பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு என்னென்ன காரணங்கள் கூறப்பட்டனவோ, அதே ஊழல், நிர்வாகத் திறமையின்மை, உள்கட்சிப் பூசல்கள் போன்ற குற்றச்சாட்டுகள்தான் இப்போது ஆளும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.

இன்றைய இமாசலப் பிரதேசத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் டாக்டர் ஒய்.எஸ். பர்மார். சுமார் 17 ஆண்டுகள் தொடர்ந்து இமாசலப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர். அவர்மீது மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பது மட்டுமல்ல, அவருக்குப் பிறகு கடந்த 30 ஆண்டுகளாக அமைந்த எந்த அரசுமே, அவரது ஆட்சியால் பெற முடிந்த மக்களின் ஆதரவைப் பெற முடியவில்லை. அதற்குக் காரணம், அவரது கறைபடியாத கரங்களும், தன்னலமற்ற மக்கள்தொண்டும்தான்.

தேர்தலுக்குத் தேர்தல் மக்கள் ஆட்சியை மாற்றும்போது, வெற்றி பெற்றுவிட்டோம் என்கிற களிப்பு ஏற்படுவது சகஜம். ஆனால், எந்த அரசியல் கட்சியும் தோல்வி அடைந்த கட்சியின் செயல்பாடுகளிலிருந்து பாடம் படிப்பதில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். இந்த விஷயத்தில், காங்கிரஸýம் சரி, பாஜகவும் சரி, மற்ற மாநிலக் கட்சிகளும் சரி, கொஞ்சமும் மாறுபாடே இல்லாமல் காட்சி அளிக்கின்றன.

இமாசலப் பிரதேசத்திலும், குஜராத்திலும் பாரதிய ஜனதா கட்சி அடைந்திருக்கும் வெற்றி இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்துகிறது. பாரதிய ஜனதா ஒரு மதவாத சக்தி என்று மேடைக்கு மேடை முழங்குவதால் காங்கிரஸ் கட்சி பலமடைந்துவிடாது என்பதுதான் அது. மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கட்சியைத் தேடுகிறார்கள். தங்களது தேவைகளைப் புரிந்துகொண்ட, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆட்சியை விரும்புகிறார்கள். அதைத் தர முடியாத வரையில், மதவாத கோஷம் வெற்றியைத் தேடித் தராது என்பதை காங்கிரஸ் தலைமை புரிந்துகொள்ள வேண்டும்.

நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி அடைந்திருக்கும் வெற்றி, மக்களவைத் தேர்தலில் மத்திய ஆட்சியைப் பிடிக்க உத்தரவாதம் அளிக்குமா என்று கேட்டால், உதட்டைப் பிதுக்குவதைத் தவிர வழியில்லை. அதேநேரத்தில், மாநிலங்களில் காணப்படும் ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி, மத்திய அரசின் மீதும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? விவசாயிகளின் மனக்குமுறலும், விலைவாசி உயர்வும், பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டமும் மத்திய அரசின் மீதான மக்கள் நம்பிக்கையை சிதைத்து வருகின்றன என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

பல தொகுதிகளில் போட்டியிட்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 7 சதவிகித வாக்குகளைப் பெற்று காங்கிரஸின் வெற்றி வாய்ப்பைத் தடுத்திருக்கிறது என்பதையும், பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சி உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், இமாசலம் என்று அதிகரித்து வருவதையும் இத்தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸின் இமாசலப் பிரதேசத் தோல்வி, அடுத்து தேர்தல் நடக்க இருக்கும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்குமே ஓர் அபாய எச்சரிக்கை என்றுதான் கூற வேண்டும்.

Posted in 2007, Alliance, Analysis, Bahujan Samaj Party, Bharatiya Janata Party, BJP, BSP, Campaign, Citizen, Coalition, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dhumal, election commission, Elections, Gujarat, Himachal Pradesh, Himachal Vikas Party, HP, HVC, HVP, Polls, Prem Kumar Dhumal, PremKumar Dhumal, Results, Sonia, Sukh Ram, SukhRam, Uthar Pradesh, Utharakand, Utharakhand, Utharanchal, Utharkhand, Utharpradesh, Uttar Pradesh, Uttarakand, Uttarakhand, Uttarakhand Kranti Dal, Uttaranchal, Uttarkand, Uttarkhand, UttarPradesh, Vijai Singh Mankotia, Vote, voters | Leave a Comment »