Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Karunanidhi vs MGR – RM Veerappan Birthday Politics

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 10, 2006

திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிவதை தவிர்க்கத் தயாராக இருந்தேன்: ஆர்.எம்.வீ. பிறந்தநாள் விழாவில் கருணாநிதி பேச்சு

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம். வீரப்பனின் 81-வது பிறந்த நாளையொட்டி, 5 தமிழறிஞர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் (அமர்ந்திருப்பவர்களில் இடமிருந்து) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் தா. பாண்டியன், தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி, மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், முதல்வர் மு. கருணாநிதி, ஆர்.எம். வீரப்பன், அவரது துணைவியார் ராஜம்மாள், ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனத் தலைவர் ஜெகத்ரட்சகன். (பரிசு பெற்றவர்கள் இடமிருந்து) சாமி பழனியப்பன், நாராயணசாமி, விக்கிரமன், நன்னன், திருநாவுக்கரசு.

சென்னை, செப்.10: திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரியும் சூழ்நிலையைத் தவிர்க்க தயாராக இருந்தபோதிலும், அப்போதிருந்த சூழ்நிலைகள் அதை அனுமதிக்கவில்லை என்றார் முதல்வர் மு. கருணாநிதி.

எம்.ஜி.ஆர். கழகம் கட்சியின் நிறுவனர் ஆர்.எம். வீரப்பனின் 81-வது பிறந்த நாள் விழா சென்னையில் சனிக்கிழமை நடந்தது. இந்த விழாவில் 5 தமிழறிஞர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுகளை வழங்கி அவர் பேசினார்.

முதல்வர் பேசியதாவது:

1972-ல் எம்.ஜி.ஆர். பிரியும் சூழ்நிலை ஏற்பட்டபோது, என் வீட்டுக்கு வந்த வீரப்பன், கட்சியைக் காப்பாற்றுமாறு என் கையைப் பிடித்துக் கேட்டார்.

அதற்கு நானும் தயாராகத் தான் இருந்தேன். ஆனால், அங்கு இருந்தவர்கள் என்னையும், வீரப்பனையும் காப்பாற்றும் வகையில் இல்லை. வீரப்பனை கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக அங்கிருந்து வெளியே போகச் செய்தனர்.

அப்போது வீரப்பனை யார் கடுமையாகப் பேசினாரோ அவரே அடுத்த 3 மாதங்களில் எம்.ஜி.ஆரிடம் போய் சேர்ந்துவிட்டார் என்பது தான் வேடிக்கை.

திராவிட இயக்கம் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர் ஆர்.எம். வீரப்பன். அதனால் தான் இப்போதும் அவருடைய எம்.ஜி.ஆர். கழகம் கட்சி திமுகவுடன் நட்பு கொண்டுள்ளது.

தன்னுடைய கொள்கையில் எப்போதும் உறுதியாக இருந்தவர் வீரப்பன் என்றார் முதல்வர்.

“”யாரை நாம் நேசிக்கிறோமோ அவர்களுக்கு நம்பிக்கை உள்ளவர்களாக நாம் வாழ வேண்டும்” என்று ஆர்.எம். வீரப்பன் பேசும்போது கூறினார்.

ஆழ்வார் ஆராய்ச்சி மையத்தை ஒரு நிறுவனமாக உருவாக்க ரூ.1 கோடி வைப்பு நிதி ஏற்படுத்தும் வகையில் ரூ.10 லட்சம் நன்கொடையை தன்னுடைய பிறந்த நாளில் அளிப்பதாக வீரப்பன் அறிவித்து, காசோலையை முதல்வர் மூலமாக, ஆய்வு மையத்தின் நிறுவனச் செயலாளர் சா. ஜெகத்ரட்சகனிடம் வழங்கினார்.

ஆர்.எம். வீரப்பன் போன்ற மூத்த அரசியல் தலைவர்கள் தங்களுடைய காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளையும், வாழ்வியல் முன்னேற்றங்களையும் “வாய்மொழி வரலாறாக’ பதிவு செய்தால், எதிர்கால இளைய சமுதாயத்தினருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் யோசனை தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர் தா. பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.

தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி தலைமை உரை நிகழ்த்தினார்.

ஜெகத்ரட்சகன் வரவேற்றார்.

பரிசுகள்: தமிழறிஞர்கள் நன்னன், நாராயணசாமி, விக்கிரமன், சாமி பழனியப்பன், திருநாவுக்கரசு ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுகளை முதல்வர் வழங்கினார்.

ஒரு பதில் to “Karunanidhi vs MGR – RM Veerappan Birthday Politics”

  1. bsubra said

    ஆர்.எம்.வீரப்பனுக்கு மக்கள் கவிஞர் விருது

    அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 77-வது பிறந்த நாள் விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    இவ் விழாவில், முன்னாள் அமைச்சர் இராம. வீரப்பனுக்கு மக்கள் கவிஞர் விருது வழங்கினார் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ. குழந்தைசாமி.

    மெ. ரூஸ்வெல்ட், நீதிபதி டி.என். வள்ளிநாயகம், கம்பன் கழக துணைத் தலைவர் க. ராசாராம், எழுத்தாளர் விக்கிரமன்.

பின்னூட்டமொன்றை இடுக