ஜெயகாந்தனுடன் எனக்கு முரண்பாடு கிடையாது: முதல்வர்
சென்னையில் முரசொலி அறக்கட்டளையின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விருது பெற்ற சிலம்பொலி செல்லப்பன், ஜெயகாந்தன், மனோரமா, முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் க.அன்பழகன், உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை, ஜன. 24:எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் தனக்கு ஒருபோதும் முரண்பாடு ஏற்பட்டதே கிடையாது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
முரசொலி அறக்கட்டளை சார்பில் கலைஞர் விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
தலா ரூ. 1 லட்சம் பொற்கிழி, பாராட்டுப் பத்திரம், கேடயம் ஆகியவற்றை உள்ளடக்கிய “கலைஞர் விருது’ எழுத்தாளர் ஜெயகாந்தன், சிலம்பொலி செல்லப்பன், நடிகை மனோரமா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவற்றை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசியது:
எனக்கும் ஜெயகாந்தனுக்கும் இருந்த பகை தற்போது ஓடி ஒளிந்துவிட்டது போல பலரும் பேசினர். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்ததே அன்றி முரண்பாடு ஏற்பட்டது கிடையாது. அவருக்கும் எனக்கும் இடையிலான நட்பு பாலும் தண்ணீரும் போன்றது. இரண்டும் சேர்ந்தால் அதைப் பிரிப்பது கடினம். இதுதான் வேறுபாடு. ஆனால் எங்களுக்குள் தண்ணீரும் எண்ணெயும் போல முரண்பாடு ஒருபோதும் ஏற்பட்டதில்லை.
1980-ம் ஆண்டு எனது பிறந்த நாளன்று ஜெயகாந்தன் ஒரு புத்தகத்தை பரிசாக அளித்தார். 1980-ம் ஆண்டிலேயே நண்பர்களாக இருந்தவர்கள், இப்போதா மாறியிருக்கப் போகிறோம். ஜெயகாந்தனின் எழுத்துகளை எந்த நிலையிலும் நேசிப்பவன். இன்னும் ஒருபடி மேலே சொல்வதானால் காதலிப்பவன்.
தற்போது நடைபெறும் சட்டப் பேரவை தொடரிலே, ஆளுநர் உரையில் கூட காலத்துக்கேற்ற வகையில் அரசியல் சாசனத்தில் மாறுதல் செய்ய வேண்டும், தேவைப்பட்டால் முழுமையாக திருத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம்.
இதேகருத்தை ஜெயகாந்தன் தனது நூலான “வாக்குமூலத்தில்’ பல ஆண்டுகளுக்கு முன்னரே வெளிப்படுத்தியுள்ளார்.
“”மத்திய அரசு யாருடைய பிரதிநிதி. மாநிலங்களுக்கு சுய நிர்ணய சாசனம் இல்லாத நிலையில் அது வெறும் அடிமைச் சாசனமே” என்று குறிப்பிட்டுள்ளதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அரசியல் ரீதியாக ஒன்றுபடக்கூடிய எழுத்து மற்றும் கருத்துகளை எப்போதும் ஆணித்தரமாக வெளிப்படுத்தக் கூடியவர் ஜெயகாந்தன்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கியபோது, அதை எதிர்த்து பொதுக்கூட்டங்களில் முழங்கியவர் ஜெயகாந்தன். அப்படிப்பட்டவர் இந்த விருதை ஏற்றுக் கொண்டதிலிருந்தே எங்களுக்கிடையே உள்ள நட்பு புரியும் என்றார் கருணாநிதி.
நிதியமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விருது பெற்ற சிலம்பொலி செல்லப்பன், ஜெயகாந்தன், மனோரமா ஆகியோர் ஏற்புரை வழங்கினர். திராவிடர் கழக பொதுச் செயலர் கி. வீரமணி, எம்.ஜி.ஆர். கழக தலைவர் இராம. வீரப்பன், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் விருது பெற்றவர்களை பாராட்டிப் பேசினர்.