Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Police Force & Human Rights: Gujarat & Tamil Nadu’s Law Enforcement – Kalki Editorial

Posted by Snapjudge மேல் மே 9, 2007

குஜராத்: சாம்பலான மனித நேயம்

தமிழகக் காவல்துறை மண்டல ஐ.எ. ஒருவர், ஒரு யுக்தியைக் கையாண்டிருக்கிறார். பல்வேறு காவல் நிலையங்களுக்கு, அப்பகுதியைச் சாராத காவல் துறை ஊழியர்களை மாறுவேடத்தில் அனுப்பியிருக்கிறார். அந்த ஊழியர்கள் சில புகார்களை (புனைந்துதான்) அந் நிலையங்களில் பதிவு செய்ய முற்பட்டிருக்கிறார்கள். மூன்று நாட்களில் திரும்பி வந்த அவர்கள், தங்கள் கண்ணீர்க் கதையைத்தான் விவரிக்க வேண்டியிருந்தது! புகார் தர முயன்ற சிலருக்கு வசவு, வேறு பலருக்கு அடி உதை! கடைசியில், பரிசோதனைக்கு உட்பட்ட அத்தனை போலீஸ்காரர்களும் ஆடிப் போய், தாங்கள் இனி ஒருபோதும் அதிகார துஷ்பிரயோகம் செய்வதில்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!

– இந்த விவரத்தை தமிழக டி.ஜி.பி. முகர்ஜி, தேசிய மனித உரிமைக் கழகம் நடத்திய ஒரு முக்கிய பயிற்சித் திட்டத்தின்போது பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

காக்கி உடுப்பணிந்து, கையில் லத்திக்கட்டையைத் தூக்கிவிட்டாலே ஆணவமும் முரட்டுத்தனமும் வந்துவிடுகின்றன என்பதை நாம் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறோம். இந் நிலையில், காவல் துறையினருடைய தோரணையில் மாற்றங்களைப் புகுத்தத் தமிழகக் காவல்துறை உயர் அதிகாரிகள் எடுத்துவரும் முயற்சிகளையும் பரிசோதனைகளையும் நாம் மனமார வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இதற்கு நேர்மாறான போக்கு குஜராத்தில் காணப்படுகிறது!

ஷொராபுத்தீன் ஷேக் மற்றும் அவர் மனைவி கௌசர் பீ ஆகியோர் காவல் துறையினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். கௌசர் கொல்லப்பட்டதுடன், அவர் உடல் எரிக்கப்பட்டு, சாம்பல் வயல்வெளிகளில் தூவப்பட்டிருக்கிறது! இத்தகைய அசுரத்தனமான செயல்களைச் செய்ததோடல்லாமல், கொலை செய்யப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என்றும் அவர்கள் என்கவுன்டரில் இறந்து போயினர் என்றும் கதை கட்டியிருக்கிறது போலீஸ்! அதனால் கிடைத்த மீடியா கவனத்தாலும் விளம்பரத்தாலும் மக்கள் மத்தியில் “ஹீரோ’க்களாக இந்தப் போலீஸார் சித்தரிக்கப்பட்டும் இருக்கின்றனர்.

இந் நிலையில்தான், மாண்டுபோன ஷொராபுத்தீன் ஷேக்குடைய சகோதரர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். வழக்கு மீண்டும் திறக்கப்பட்டு, நம்ப முடியாத உண்மைகள் வெளிவந்திருக்கின்றன!

குஜராத் சம்பவம் வெறும் அதிகார துஷ்பிரயோகம் அல்ல; அது திட்டமிட்ட கொலை என்பது தெரிய வந்துள்ளது. சிறுபான்மை இனத்தவர் பேரில் அம் மாநிலக் காவல்துறை காட்டிவரும் ஆழ்ந்த துவேஷத்தின் வெளிப்பாடாக நடந்த இச் சம்பவம் குறித்து இப்போது சி.பி.ஐ விசாரணை கோரப்பட்டு வருகிறது.

இத்தகைய துவேஷமும், சக உயிர்களைத் துச்சமாக எண்ணும் குரூரமும், ஆட்சியாளர்களின் மௌன அங்கீகாரமின்றி வளர்வதும் வெளிப்படுவதும் சாத்தியமில்லை.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மத துவேஷம் காரணமாக நிகழ்ந்த பல கொடூரக் குற்றங்களைக் கண்டு நாடே நடுங்கியது.

இன்று அதே வகையான குற்றங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் காவல்துறையினரின் பங்கேற்பு அல்லது ஆதரவுடன் விமரிசையாக நடக்கின்றன.

நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத் பொருளாதார ரீதியில் பாய்ந்து முன்னேறியிருக்கலாம்; ஆனால், மனித நேய அடிப்படையில் பார்த்தால் சுடுகாடாகத்தான் இருக்கிறது. மோடி அரசு, சி.பி.ஐ. விசாரணை வேண்டாம் என்று வாதாடுவது, “அப்பன் குதிருக்குள் இல்லை’ என்று சொல்வதுபோல் இருக்கிறது.

இந்த நிலை மாற வேண்டுமானால், பாரதிய ஜனதா கட்சி தனது தீவிர ஹிந்து அடிப்படைவாதத்தைக் கைவிட வேண்டும். பிற மத துவேஷத்தை வளர்க்கிற பஜ்ரங் தள், வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளிடமிருந்து விடுபட்டு, சுதந்திர அரசியல் இயக்கமாகி, சமதர்ம சமுதாயம் என்ற உயர் இலக்கை நோக்கி பயணம் செய்ய வேண்டும்.

இல்லாவிடில், அக் கட்சி மெள்ள அழிவதுடன் “”வேற்றுமையில் ஒற்றுமை” என்னும் இந்தியாவின் ஜீவ கொள்கையின் மீது ரணகாயங்களையும் ஆறாத வடுக்களையும் விட்டுச் செல்லும்.

———————————————————————————————

மனித உரிமைக் கல்வியின் அவசியம்…?

என். சுரேஷ்குமார்

இந்தியாவில் மனித உரிமைக் கல்வியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை கடந்த ஆண்டு ஒரு குழுவை அமைத்தது.

அக்குழுவினர் தற்போது மனித உரிமை கல்விக்கான கல்லூரி, பள்ளிகளுக்கான மாதிரி பாடத் திட்டம், அந்த பாடத்தை ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை ஆகியவற்றை வெளியிட்டு, மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை தீர்மானித்திருக்கிறது.

வளர்ந்து வரும் எந்தச் சமுதாயத்திலும் மனித உரிமை மீறல் என்பது எதிர்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பிரச்னை. மனித உரிமை மதிக்கப்படும்போதுதான் எந்தவொரு சமுதாயமும் முழுமையான நாகரிகத்தை எட்டியிருக்கிறது என்று சொல்ல முடியும். இந்த வகையில் மனித இனம் இன்னும் கடக்க வேண்டிய தடைகள், செய்ய வேண்டிய மாற்றங்கள், ஏராளம், ஏராளம். மனித உரிமை மீறலைத் தடுப்பது அதன் முக்கியமான முதல் கட்டம்!

மகாராஷ்டிர மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் உள்ள மிகச் சிறிய கிராமம் கயர்லாஞ்சி. இந்த கிராமத்தில் பய்யாலால் போட்மாங்கே என்ற விவசாயியின் குடும்பத்தின் மீது அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க ஜாதியினருக்கு ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியினால் பய்யாலாலின் மனைவி சுரேகா, மகள் பிரியங்காவை ஊருக்கு நடுவில் பய்யாலாலின் மகன்கள் ரோஷன் மற்றும் சுதிரைக் கொண்டு மானபங்கம் செய்ய வலியுறுத்தியதும் அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளாததால் இருவரையும் படுகொலை செய்ததோடு சுரேகாவையும், பிரியங்காவையும் கிராமத்து ஆண்களால் மானபங்கம் செய்ததோடு கொன்றும் வீசினர்.

2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்தப் படுகொலை மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நிகழ்ச்சி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? எத்தனை பேருக்கு ஞாபகமிருக்கிறது என்று கேட்டால் – ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.

இந்த அறியாமைக்குக் காரணம் என்ன என்று பார்க்கும்போது ஒன்று – மனித உரிமை மீறல் குறித்த கல்வியறிவு இல்லாதது. இரண்டாவது – இம்மாதிரியான செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்காததும், சுட்டிக்காட்டத் தவறியதுமே.

மனித உரிமை குறித்த கல்வி ஒவ்வொரு மனிதனுக்கும் மிகமிக இன்றியமையாதது. இதன்மூலம் மட்டுமே சுதந்திரம், ஜனநாயகம் காக்கப்படும்.

மனித உரிமைக் கல்வியை ஊக்குவிக்க யுனெஸ்கோ 1974-ம் ஆண்டு உலகநாடுகள் அனைத்துக்கும் பரிந்துரை செய்தது. இது தொடர்பாக, மனித உரிமைகளைப் பயிற்றுவிப்பதற்கான முதலாவது சர்வதேச மாநாடு வியன்னாவில் 1979-ம் ஆண்டு நடைபெற்றது.

அந்த மாநாட்டில் மனித உரிமைக் கல்வி குறித்தும் அதைப் பயிற்றுவிப்பது குறித்தும், மனித உரிமைக் கல்வி குறித்து தனி நபர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இரண்டாவது மாநாடு 1987-ம் ஆண்டு மால்டாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மனித உரிமைக் கல்வி மற்றும் கற்பித்தலை பொது நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் விரிவான பங்கேற்புடன் உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தப்பட்டது.

மூன்றாவது மாநாடு 1993 மார்ச் மாதம் கனடாவில் உள்ள மாண்ட்ரியல் நகரில் நடைபெற்றது. இந்த மாநாடு ஜனநாயகத்திற்கான கல்வி என்பது, மனித உரிமைகள் கல்வியின் ஒருங்கிணைந்த பகுதி என்று அறிவித்தது. மேலும், மனித உரிமைக் கல்வி, ஜனநாயகம் மற்றும் சமூக நீதியை மெய்யாக்க ஓர் அடிப்படை தேவை என்பதையும் இம்மாநாடு வலியுறுத்தியது.

மனித உரிமைகள் கல்வியின் அவசியம் 1993-ம் ஆண்டு 171 நாடுகள் பங்கேற்ற மனித உரிமைகளுக்கான உலக மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த மாநாடு மனித உரிமைகள் மீதான மரியாதையையும் அது ஒரு மெய்யான ஜனநாயகத்தின் பிரிக்கமுடியாத அங்கம் என்பதையும் ஆதரித்தது. இதைத்தொடர்ந்து ஐநா சபை மனித உரிமைகள் கல்விக்கான தீர்மானத்தை 1994-ம் ஆண்டு கொண்டுவந்தது. இந்தத் திட்ட அமல் மற்றும் ஒருங்கிணைப்பு பொறுப்பை ஐநா மனித உரிமைகளுக்கான ஹைகமிஷனிடம் ஒப்படைத்தது.

மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான முழுமையான கல்வியை அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கச் செய்வது யுனெஸ்கோவின் நீண்டநாள் நோக்கமாகும். முறையான கல்வித் திட்டத்துடன், பள்ளிசாரா வயது வந்தோர் கல்வித் திட்டத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் யுனெஸ்கோ வலியுறுத்தியது.

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகப் பண்பாட்டை கட்டமைக்க கல்வியாளர்கள், ஊடகங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையாலேயே முடியும்.

மனித உரிமைகள் கல்விக்கான திட்டத்தை 1995-ம் ஆண்டுவரை 125 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டமொன்றை இடுக