Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for மே 1st, 2007

Mooligai Corner: Herbs & Naturotherapy – Gandan Kathiri

Posted by Snapjudge மேல் மே 1, 2007

மூலிகை மூலை: காய்ச்சல் போக்கும் கண்டங்கத்திரி!

விஜயராஜன்

முள்ளுள்ள மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீலநிற மலர்களையும் சிறுகத்திரிக்காய் வடிவிலான காய்களையும் மஞ்சள் நிறப்பழங்களையும் உடைய நேராக உயர்ந்து வளரும் சிறுசெடியின் வகை கண்டங்கத்திரி. இதன் தண்டுப் பகுதி முதல் இலைகள் வரை பூனை முட்கள் செடி முழுவதும் இருக்கும். இது கத்திரியின் வகைகளில் ஒன்றாகும். இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் ஆகியவை மருத்துவ குணமுடையவை. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தரிசு நிலங்களிலும் தானே வளர்கின்றது. கோழை அகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் பயன்படுகின்றது.

வேறு பெயர்கள்: பாப்பார முள்ளி, கண்டம், கண்டு, கபநாசம், கண்டங்காரி துற்பஞ்சா, நிதித்திகா, பிறசோதி, நிராட்டிகா, சிங்கி, நிசப்பிரிய வாணாதாகி, சுவாக்கனி, கண்டநியா.

ஆங்கிலப் பெயர்: Solqnumsuraltense, Burmfi solqnqceae

மருத்துவ குணங்கள்:

கண்டங் கத்திரியின் வேர் ஐந்தும் பூனைக் காலி வேர் ஒன்றும் எடுத்து 200 மில்லி நீரில் போட்டு 50 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து 2 வேளைக்கு 25 மில்லி வீதமாக, அம்மையில் அடிபட்டு தேறிய குழந்தைகளுக்குக் கொடுத்தால் அம்மைக்குப் பிறகு தொடரும் இருமல் குணமாகும்.

கண்டங்கத்திரியின் வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 2 சிட்டிகை, கொத்தமல்லி ஒரு பிடி, ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு 1/2 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 6 முறை வேளைக்கு 100 மில்லி அளவாகக் குடித்து வர சீதளக் காய்ச்சல், சளிக் காய்ச்சல், நுரையீரல் பற்றிய எந்தக் காய்ச்சலும் குணமாகும்.

கண்டங் கத்திரி விதைகளை எடுத்து ஒரு கரண்டியில் கொஞ்சம் நெருப்பை எடுத்து அதில் இந்த விதைகளைக் கொட்டினால் புகை வரும். இந்தப் புகையைப் பல்வலி உள்ளவர்களுக்குக் காட்டினால் புகை உள்ளே சென்று வலி நீங்கும். சொத்தைப் பூச்சிகளும் வெளியேறிவிடும்.

கண்டங்கத்திரி சமூலம் ஒரு பிடி, ஆடாதொடை ஒரு பிடி, விஷ்ணு காந்தி அரை பிடி, பிற்பாடகம் அரை பிடி, சீரகம், சுக்கு வகைக்கு 10 கிராம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 6 முறை 100 மில்லியளவு குடித்து வர புளுக்காய்ச்சல், நிமோனியா காய்ச்சல், மண்டை நீர் ஏற்றக்காய்ச்சல் குணமாகும்.

கண்டங்கத்திரி வேர், ஆடாதொடை வகைக்கு 40 கிராம், அரிசித் திப்பிலி 5 கிராம் சேர்த்து எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி, 4 வேளை 100 மில்லியளவு குடிக்கக் கொடுக்க இரைப்பிருமல் (ஆஸ்துமா) என்புருக்கி (சயம்), ஈளை, இருமல், கப இருமல், பீனிசம் குணமாகும்.

கண்டங் கத்திரி இலைச்சாறு 100 மில்லியளவு எடுத்து அதைக் கொப்பரைத் தேங்காயில் எடுக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் அரை லிட்டருடன் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி, அந்த எண்ணெயை உடலில் தேவையான அளவு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் உடம்பிலுள்ள கற்றாழை நாற்றம் சிலர் உடம்பில் இருந்து காற்றில் மிதந்து வரும் கசண்டு எண்ணெய் நாற்றம் போன்றவை நீங்கும்.

கண்டங் கத்திரிப் பழம், துளசி, வெற்றிலை இவற்றின் சாறு, கஞ்சாகியாழம், நல்லெண்ணெய் வகைக்கு அரை லிட்டர் எடுத்து கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி தலை முழுகி வர இரத்த பீனிசம், சிரேசு பீனிசம் நீங்கும்.

Posted in Burmfi solqnqceae, Gandan Kathiri, Herbs, Kandan Kathiri, Kathiri, Kaththiri, Mooligai, Naturotherapy, Solqnumsuraltense, Unani, Yunaani, Yunani | 2 Comments »

Tips for Banking Customers – Safe Deposit

Posted by Snapjudge மேல் மே 1, 2007

வங்கி வாடிக்கையாளர் கவனத்திற்கு…

இரா. எத்திராஜன்.

*அனைத்து வங்கிகளும் கணினி முறையில் இயங்குவதால் காசோலைகளை வங்கியில் டெபாசிட் செய்யும்போது, காசோலையில் கண்டிப்பாக ஸ்டேப்லர் பின் போடக்கூடாது. அதற்குப் பதிலாக, காசோலையை, வங்கிப் படிவத்துடன் இணைத்து குண்டூசி போடலாம்.

*காசோலையை மற்றவர்களுக்கு வழங்க நேரிடும்போது, காசோலையில், நிறுவனம் அல்லது பெறுபவரின் பெயர், பணத்தின் மதிப்பை எண் மற்றும் எழுத்தாலும் மிகவும் தெளிவாகக் குறிப்பிட வேண்டியது அவசியம்.

*ரூபாய் நோட்டுகளில் உள்ள வெள்ளைப் பகுதியில் எழுதுவது குற்றமாக ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. எனவே ரூபாய் நோட்டுகளில் தங்களின் சொந்தக் குறிப்புகளை எழுதுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

*வங்கி பாஸ் புத்தகத் தகவல்களை நாள்தோறும் சரிபார்க்க கண்டிப்பாக நேரம் ஒதுக்க வேண்டும்.

*வங்கி பாஸ் புத்தகத்தை மடக்கி வைத்தல் கூடாது. ஏனெனில் பாஸ் புத்தகத் தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய நேரிடும்போது, மடக்கப்பட்ட புத்தகம் கம்ப்யூட்டரில் நுழைவது கடினமாக இருக்கும்.

*வங்கி வாடிக்கையாளர்கள் நாள்தோறும் நாளேடுகளில் வங்கிகளைப் பற்றி வெளிவரும் செய்திகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் வங்கித் துறையில் ஏற்படும் புதிய மாற்றங்களை வங்கி கிளையில் அமைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையின் மூலம் தெரிந்துகொள்ளவேண்டும்.

*வங்கி கிளையின் தொலைபேசி எண்ணை குறித்து வைத்துக்கொள்வது நல்லது.

*வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் தொலைபேசி எண் மற்றும் இருப்பிடங்கள் மாற்றத்தின்போது, கண்டிப்பாக கடிதம் மூலம் வங்கி கிளைக்குத் தெரிவிப்பது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நல்லது.

Posted in Accounts, Banking, Banks, Cash, Checking, Checks, Consumer, Current, Customer, Customers, deposit, Money, Rupee, Safe, Savings, service, Tips | Leave a Comment »

Shall we name the next President of India – Neeraja Chowdhry

Posted by Snapjudge மேல் மே 1, 2007

அடுத்த குடியரசுத் தலைவர் யார்?

நீரஜா சௌத்ரி

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னரே அப் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் வேலையை பிரதமர் தொடங்கி விடுவார்.

குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் முடிவடைவதற்கு 9 – 10 மாதங்கள் முன்னதாகவே அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது முடிவு செய்யப்பட்டு, அது ரகசியமாக வைக்கப்படும் காலம் ஒன்று இருந்தது. ஆனால் அந்தக் காலம் மலையேறி விட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு 3 மாதங்களுக்கும் குறைவான அவகாசமே உள்ள நிலையில், ஜூலையில் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கப் போவது யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

கூட்டணி ஆட்சியின் யுகத்தில் முடிவெடுப்பது பிரதமர் மட்டுமல்ல. இன்னும் பலருக்கும் இதில் பங்குண்டு. காங்கிரஸ் கட்சியே கூட வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார் என உறுதியாகக் கூற முடியாது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரிகள் போன்ற கட்சிகளின் ஆதரவும் காங்கிரஸýக்கு தேவை. பஞ்சாப், உத்தரகண்ட்டில் தோல்வியைத் தழுவினாலும் கூட இப்போதைக்கு போட்டியில் முந்துவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான்.

குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இடம்பெறும் 7-ல் ஒரு பங்கு வாக்காளர்களை முடிவு செய்வது உத்தரப் பிரதேசம்தான். எனவே உத்தரப் பிரதேச தேர்தல் நடைமுறைகள் முடிவடையும்வரை எல்லா விவகாரங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் பொருத்தவரையில், கூட்டணியைச் சேர்ந்தவர்களே அணி மாறி வாக்களித்து விடலாம் என்ற பயம், குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பான முடிவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள பைரோன்சிங் ஷெகாவத்தை, குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்தால் போட்டியிடுவதில் அவருக்குத் தயக்கம் இருக்காது என்பது தெரிந்ததுதான்.

ஆனால் கருத்தொருமித்த வேட்பாளராக அவர் உருவாவதற்கான வாய்ப்புகள் மிகவும் மங்கலாகவே உள்ளன.

பாரதீய ஜனதாவைச் சேர்ந்த ஒருவரை ஆதரிக்கும் அளவுக்கு காங்கிரஸ் வளைந்து கொடுக்காது. ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ளவர்களை அணி மாறி வாக்களிக்கச் செய்யும் அளவுக்கு ஷெகாவத்துக்கு தொடர்புகள் உள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சி போன்றவை அவரை ஆதரிக்கக் கூடும் என்ற பேச்சும் அடிபடுகின்றன.

இந்தக் காரணங்களால்தான் அப்துல் கலாமுக்கு மீண்டும் ஒரு முறை குடியரசுத் தலைவராக வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பதில் கருத்தொற்றுமை எட்டப்படாவிட்டால் அது ஒவ்வொருவருக்கும் மானப் பிரச்சினை ஆகிவிடும். தன்னுடைய வேட்பாளர் தோற்கடிக்கப்படுவதை எந்த ஆளுங் கட்சியும் விரும்பாது. அத்தகைய ஆபத்தான முயற்சியில் இறங்கவும் துணியாது.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக தன்னை நிறுத்துவதில் கருத்தொற்றுமை எட்டப்பட்டால் மீண்டும் பதவியில் தொடருவது பற்றிய தன்னுடைய விருப்பத்தை தனிப்பட்ட (அதிகாரபூர்வமற்ற) உரையாடல்களில் தெரிவித்துவிட்டார் அப்துல் கலாம். வாஜபேயி, எல்.கே.அத்வானி மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சில வாரங்களுக்கு முன்னர் தன்னைச் சந்தித்தபோது அதைத் தெளிவாகவே கூறிவிட்டார் கலாம்.

அப்துல் கலாமை பாஜக ஆதரிக்கும் என்பதை ராஜ்நாத் சிங் கோடிட்டுக் காட்டி விட்டார். 2002-ல் குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்துல் கலாம் பெயரை முதன் முதலில் முன்மொழிந்த முலாயம் சிங்கும் அவரை ஆதரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக தொடருவதில் பிரதமருக்கும் கூட விருப்பம்தான் என கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் வட்டாரத்தில் அரசல் புரசலாக அடிபடுவதை நம்பலாம் என்றால், சோனியா காந்தியின் கருத்து வேறுவிதமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக சோனியா காந்தியின் முதல் தேர்வு சுஷில்குமார் ஷிண்டே. ஷெகாவத்தைப் போல் அல்லாமல், ஷிண்டே தாகூர் சாதியினரின் வாக்குகளைக் கவரக் கூடியவர். ஆனால் மற்ற கட்சிகளில் இருந்து தலித் வாக்குகளை அவரால் கவர முடியாமல் போகலாம்.

கலாம் வேண்டாம் என நினைப்பவர்கள் மத்தியில் “”இன்னொரு கலாமை” கண்டறியும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இன்போசிஸ் நாராயணமூர்த்தி (ஏற்கெனவே இவரது பெயர் அடிபட்டது), எம்.எஸ். சுவாமிநாதன், நோபல் பரிசு பெற்ற அமர்த்திய சென் போன்றோர் “”இன்னொரு சாத்தியமான கலாம்”கள். இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள அமர்த்திய சென்னுக்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவிக்கலாம். ஆனால் பாஜக-வின் கருத்து வேறுவிதமாக இருக்கும்.

அரசியல் சார்ந்தவர்கள் பட்டியலில், காங்கிரஸில் கரண்சிங் இருக்கிறார். இவருக்கு பரவலாக தொடர்புகள் உள்ளதுடன், “இந்து-சார்பு’ முகம் கொண்டவரும் கூட. மக்களவைத் தலைவராக உள்ள சோம்நாத் சட்டர்ஜி போன்றவர்களை குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தும்போது, முலாயம் போன்றவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவிப்பது கடினம். ஆனால் சட்டர்ஜியை குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்துவதற்கு இடதுசாரி மற்றும் காங்கிரஸýக்குள்ளேயே தடை இருக்கிறது. பாஜகவும் ஏற்றுக்கொள்ளாது. இது போட்டிக்கு வழிவகுப்பதுடன் அணி மாறி வாக்களிப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தி விடும்.

இந்த நிலைமையை மேலும் சிக்கலாக்கக் கூடிய இரண்டு சூழ்நிலைகள் உண்டு. ஒன்று, பாஜக ஆதரவுடன் மாயாவதி ஆட்சி அமைக்கும் சூழல். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 3 முக்கிய அணிகளை -பகுஜன் சமாஜ் கட்சி, பாரதீய ஜனதா கட்சி மற்றும் சமாஜவாதி கட்சி ஆகிய 3 கட்சிகளை -ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிர்வரிசையில் நிறுத்திவிடும். மற்றொன்று, உத்தரப் பிரதேசத்தில் எந்த 2 கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைக்க முடியாமல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் சூழ்நிலை.

2002-ல் நடந்ததுபோல், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்காமலேயே பேரவைக்கு உயிர்கொடுப்பது ஒத்திவைக்கப்பட்டால், ஜூலையில் நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் அந்த எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க முடியுமா? இது அவ்வளவாக தெளிவில்லாத “மங்கலான பகுதி’ எனக் கூறப்படுகிறது.

அரசியல் அவநம்பிக்கையாளர்கள் இத்தகைய சூழ்நிலையை முன்னிறுத்தி விளையாட நினைக்கலாம். ஆனால் அரசியல் நிர்பந்தங்கள் அப்படித் தூண்டினாலும் கூட நல்ல நோக்கம் வெற்றி பெறும் என நம்பலாம்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவராக பதவி வகிக்கப் போகிறவர் யார் என்பதைத் தீர்மானிக்கும் நிலையில் இருப்பது உ.பி. தேர்தல் முடிவுகள்தான். இப்போதைக்கு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதை நோக்கியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் விருப்பத்துக்கு குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதை நோக்கியும் அரசியல் சூழ்நிலை சென்று கொண்டிருக்கிறது.

தமிழில்: ப.ரகுமான்.

Posted in Advani, Amartya, Amartya Sen, Assembly, BJP, BSP, Chatterjee, Communist, Congress, Dalit, Election, India, Infosys, Kalam, Karan Singh, Kashmir, Lok Saba, Lok Sabha, Manmohan, Marxist, Mayawathi, MS Swaminadhan, MS Swaminathan, Narayanamoorthy, Narayanamurthy, Neeraja, Neeraja Chowdhry, Party, Politics, President, Punjab, selection, Shinde, Somnath, Sonia, Sushilkumar Shinde, Swaminadhan, Swaminathan, UP, Vajpayee, Vote | 1 Comment »

Dinamani Kathir Weekly Variety: A Performance before President Kalam

Posted by Snapjudge மேல் மே 1, 2007

மேடை: கலாமைத் தலையாட்ட வைத்த இஞ்சிக்குடி!

பா. கிருஷ்ணன்

கடந்த ஏப்ரல் முதல் தேதி. தில்லியில் சார்க் உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

தில்லி வந்திருந்த சார்க் தலைவர்கள் குடியரசுத் தலைவரையும் பிரதமர், அமைச்சர்களையும் மாறி மாறிச் சந்தித்தனர். குடியரசுத் தலைவர் மாளிகையும் பரபரப்பாக இருந்தது.

அவரைச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்க வந்த பலர் பல மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது. அவரிடம் அப்பாயின்ட்மென்ட் பெற்றவர்களும் காத்திருந்தனர்.

இந்தச் சூழ்நிலையில், தில்லி உத்தர சுவாமிமலை ஆலயத்தில் பங்குனி உத்தரத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதை ஒட்டி மார்ச் 31-ம் தேதி இரவு முருகன் திருவீதியுலாவிலும், மறுநாள் ஏப்ரல் 1-ம் தேதி காலை அபிஷேகத்தின்போதும் நாகஸ்வர இசை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த இஞ்சிக்குடி இ.பி. கணேசனுக்கு ஓர் அதிர்ச்சி, அதே தினம் மாலையில் காத்திருந்தது.

பங்குனி உத்தரத் திருவிழாவின் நிறைவில் ஏப்ரல் 1-ம் தேதி மாலையில் அவரது கச்சேரிக்கு வந்திருந்த குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரி சுவாமிநாதன் கச்சேரி முடிந்ததும் அவரிடம் கேட்டது, ஆயிரம் தவில்களை வாசிப்பது போன்ற இனிய அதிர்ச்சியை அளித்தது.

“”நீங்க நாளைக்கு குடியரசுத் தலைவர் முன்னால் நாகஸ்வரம் வாசிப்பீர்களா? அதற்கு ஏற்பாடு செய்கிறோம்” இதுதான் சுவாமிநாதன் கேட்ட கேள்வி.

மறுநாள் அவரது செல்போனில் அழைப்பு வந்தது, மாலை 6 மணி அளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் கச்சேரி நடத்தவேண்டும் என்று.

மாலை 5 மணிக்கே நாகஸ்வரம், தவில், சுருதிப் பெட்டி சகிதம் இ.பி. கணேசன் பார்ட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆஜர் ஆனது.

அங்கு, மிக முக்கியமான நபர்கள் மட்டுமே பங்கு பெறும் சிறிய அரங்கு உள்ளது. அங்கே கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். 5 மணியளவில் 60 பேர் அங்கே நிறைந்துவிட்டனர்.

ஐந்திலிருந்து ஆறுமணி வரை அரங்கில் பதிவுசெய்யப்பட்ட மெலிதான இசை அரங்கில் தவழ்ந்து கொண்டிருந்தது.

அதேநேரத்தில் தனது அலுவலகத்தில் விஞ்ஞானிகள், பொருளாதார வல்லுநர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களிடம் கேட்டார்:

“”எங்கள் ஊரில் மங்கலமான நிகழ்ச்சிகளில் நாகஸ்வரம் என்ற அற்புதமான கருவியை இசைப்பது உண்டு. அதன் இசையைக் கேட்க விருப்பமா?” என்றார்.

உற்சாகத்துடன் அவர்கள் தலையை அசைக்க, சரியாக மாலை 6 மணிக்கு விஞ்ஞானிகள், பொருளாதார வல்லுநர்கள் சகிதம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அரங்குக்குள் நுழைந்தார் கலாம்.

முதல் வரிசையில் விசேஷமாக அமைக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்து, கச்சேரியைத் தாளம் போட்டு, தலை அசைத்து ரசித்தார். நாகஸ்வர இசைக் கச்சேரிக்கு 20 நிமிஷம்தான் ஒதுக்கப்பட்டது. ஆனால், கலாம் ரசித்ததோ சுமார் 50 நிமிஷம்.

முதலில் ஹம்சத்வனியில் “ரகுநாயகா’ என்ற தியாகையரின் கீர்த்தனை. அடுத்து, பஞ்சரத்தின கீர்த்தனையில் இடம்பெற்ற “எந்தரோமஹானுபாவுலு’; மூன்றாவதாக, பைரவி ஆலாபனையுடன் கூடிய ராகமாலிகை என்று முழு நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசித்தார் கலாம்.

அத்துடன் நிற்கவில்லை. நிகழ்ச்சியை வழங்கிய இஞ்சிக்குடி கணேசனுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் மரியாதை செய்தபோது, “”மிகக் குறுகிய நேரத்தில் உங்களது இசைத் திறமையை அழகாக வெளிப்படுத்திவிட்டீர்கள். உங்களது தந்தை பிச்சக்கண்ணுப் பிள்ளையின் வாசிப்பைக் கேட்டிருக்கிறேன். அதே கலை உங்களிடமும் உள்ளது, பாராட்டுகள்” என்றார் அப்துல் கலாம்.

ஓர் உண்மையான கலைஞரால்தானே இன்னொரு உண்மையான கலைஞரின் திறமையை முழுமையாகப் பாராட்டமுடியும்! அப்துல் கலாம் விஞ்ஞானி, கவிஞர் என்பது மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த வீணை இசைக் கலைஞரும் ஆவார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?!

Posted in Carnatic, Delhi, EB Ganesan, EP Ganesan, Gadam, Injikkudi, Kadam, Kalam, Kathir, music, Nadhasvaram, Nadhaswaram, Nathaswaram, Pancharathna, Thavil | Leave a Comment »

Are sparrows extinct from Chennai? – Is it due to Global Warming?

Posted by Snapjudge மேல் மே 1, 2007

விழிப்புணர்வு: எங்கே…எங்கே…சிட்டுக்குருவிகள்?!

ஞாயிறு

‘காணவில்லை… கண்டுபிடித்துக் கொடுங்கள்’ என்று காவல்நிலையங்களை சென்னைவாசிகள் முற்றுகைதான் இடவில்லை! மற்றபடி எல்லாவகையிலும் அழுது புலம்புகிறார்கள் ஏதோ தங்கள் பிள்ளைகளைத் தொலைத்துவிட்டது போல்! இப்போது சென்னைவாசிகள் தொலைத்து நிற்பது சிட்டுகளை.. தேன் சிட்டுகளை!

எல்லாப் பறவைகளும் மரங்களிலும் பாறைகளிலும் கூடு கட்டி வசிக்கிறது என்றால் சிட்டுக்குருவி மட்டும் மனிதரின் “நெஞ்சாங்கூட்டில்’ அல்லவா வசிக்கிறது!

சாமி போட்டோக்களுக்குப் பின்புறம் கூடு அமைத்துக் கொண்டு “சிடுக் சிடுக்’கெனப் பறந்து வலம் வரும் சிட்டுக்குருவியை சாமியாகவே பாவித்தவர்கள் உண்டு.

மின் விசிறிகளில் அடிபட்டு இறந்த சிட்டுக்குருவிக்காக கண்ணீர்விட்டு அழுது இரண்டொரு நாள் சாப்பிடாமல் இருந்தவர்கள் உண்டு.

“ஏ… குருவி; சிட்டுக்குருவி; உன் ஜோடி எங்கே… அத கூட்டிக்கிட்டு; இந்த வீட்டுக்குள்ள வந்து கூடு கட்டு; பொல்லாத வீடு; கட்டு பொன்னான கூடு; இப்ப பொண்டாட்டி இல்ல; வந்து எங்கூட பாடு…’ என்று சிட்டுக்குருவியைப் பார்த்துப் பாடி மனைவியைக் கேலி செய்யும் கணவர்கள் உண்டு. இப்படி எல்லாவகையிலும் ஒவ்வொரு குடும்பத்தோடும் இரண்டறக் கலந்துவிட்ட சிட்டுகளுக்கு என்ன கோபம்? ஏன் எல்லாச் சிட்டுகளும் சென்னையை விட்டு சென்றுவிட்டன? பூமி பராமரிப்பு (இஹழ்ங் உஹழ்ற்ட்) அமைப்பின் இயக்குநர் ரஞ்சித் டேனியல்ஸ் சொல்கிறார்:

“”சிட்டுக்குருவிகள் அழிந்து போய்விட்டன என்பது தவறான தகவல். இடம்மாறி சென்றுவிட்டன என்பதுதான் உண்மையான தகவல். சென்னை போன்ற நகரங்களில் சிட்டுக்குருவிகள் இல்லை என்பது உண்மைதான். அதேசமயம் சென்னையை ஒட்டிய பகுதிகளில் சிட்டுக்குருவிகள் இருக்கின்றன. வேளச்சேரியை ஒட்டிய பகுதிகளில்கூட சிட்டுக்குருவிகள் காணப்படுகின்றன.

சிட்டுக்குருவியில் பலவகைகள் இருக்கின்றன.

இந்தியாவில் மொத்தம் ஆறுவகை சிட்டுக் குருவிகள் இருக்கின்றன. இதில் நாம் பார்ப்பது மக்கள் வசிப்பிடங்களைச் சார்ந்து வாழும் சிட்டுக்குருவிகள். நாய், பூனை போன்றவை வீட்டு விலங்குகளாக எப்படி இருக்கின்றனவோ அப்படித்தான் இந்தச் சிட்டுக்குருவிகளும்.

பொதுவாக குளிர்பிரதேசங்களில் வசிக்கக்கூடிய வகையைச் சேர்ந்தது சிட்டுக்குருவிகள். ஐரோப்பியாவில்தான் அதிகமாகக் காணப்படுகின்றன. இங்கு பிரிட்டிஷார் வந்தபோது சாலையோரங்களில் இருந்த மரங்களில் பூச்சடித்துப்போய் இருப்பதைப் பார்த்தார்கள். இந்தப் பூச்சிகளை அழிப்பதற்காகத்தான் சிட்டுக்குருவிகளை இங்கு கொண்டு வந்து மரங்களில் விட்டார்கள். இது அப்படியே பல்கிப் பெருகிவிட்டது. இன்று ஒவ்வொரு வீட்டின் உறுப்பினராகவும் ஆகிவிட்டது.

சென்னையை விட்டு சிட்டுக்குருவிகள் எல்லாம் திடீரெனச் சென்றுவிடவில்லை. கடந்த பதினைந்து ஆண்டுகளாகவே கொஞ்சம் கொஞ்சமாக சிட்டுக்குருவிகள் இடமாறி வருகின்றன. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

சென்னையில் நிலவும் வெப்பம் முக்கியக் காரணம். வாகனங்களில் இருந்து வரும் புகையின் காரணமாக சென்னை அதிக உஷ்ணப் பகுதியாக இருக்கிறது. குளிர்பிரதேசப் பறவைகளான சிட்டுக்குருவிகளுக்கு இது ஆகாது. அதனால் சிட்டுக்குருவிகள் சென்னையை விட்டுச் செல்லலாம். இரண்டாவது இங்கு சிட்டுக்குருவிகள் வசிப்பதற்கு போதுமான வசதி வாய்ப்புகள் இல்லை. பறவைகளில் துறவி என்றால் சிட்டுக்குருவியைச் சொல்லலாம். எளிய வாழ்க்கைதான் வாழும். வைக்கோல் கொண்டு ஓட்டு வீட்டு தூண், வீட்டுக்கூரை, மீட்டர் பெட்டி, சாமி போட்டோக்களுக்குப் பின்புறம் கூடு கட்டும். உள்அறை வரை வந்து உலா போகும். சிந்திக் கிடக்கும் தானியங்களைத் கொத்திப்போகும். இதுபோன்ற வசதி வாய்ப்புகள் இப்போது இல்லை. சென்னையில் பெரியபெரிய கட்டடங்கள் உருவெடுத்துவிட்டன. அதுவும் குளிர்சாதன அறைகளாகிவிட்டன. இதனால் அவை கூடு கட்டி வாழ முடியவில்லை. புறாக்கள் வசிப்பதற்குத்தான் சென்னை சாதகமாக இருக்கிறது.

இதனால் சென்னையில் புறாக்கள்தான் அதிகமாக இருக்கின்றன. பெரும்பாலும் புறாக்கள் கற்பாறைகளில்தான் வசிக்கும். இங்கிருக்கக்கூடிய பெரிய பெரிய கட்டடங்கள் புறாக்களுக்கு கற்பாறைகளாகத் தெரிகின்றன. இதனால் எந்தக் கவலையும் இல்லாமல் புறாக்கள் இங்கு சுகவாழ்க்கை வாழ்கின்றன. இதைப்போல காகம், அணில், எலி போன்றவையும் அதிகளவில் வசிக்கின்றன.

இந்தப் புறா, காகம், அணில், எலி போன்றவற்றாலும் சிட்டுக்குருவிகள் ஆபத்துக்கு உள்ளாகின்றன. காகங்கள் பெரியஅளவில் சிட்டுக்குருவியின் குஞ்சுகளை வேட்டையாடுகின்றன. ஒருவகையில் காகங்கள்தான் சிட்டுக்குருவிகளுக்குப் பருந்து எனவும் கூறலாம்.

முன்பு வீடுகளுக்குள் கூடு கட்டியதுபோல் இப்போது அவற்றால் கட்டமுடியவில்லை. வெளியில் கூடு கட்டி முட்டையிடுகிறபோது அதைக் காகம், அணில், எலி போன்றவை எளிதில் தாக்கி முட்டையைக் குடித்துச் சென்றுவிடுகின்றன. இதுபோன்ற காரணங்களால்தான் சிட்டுகள் சென்னையை விட்டுச் சென்றுவிட்டன. இது சென்னையில் மட்டும் நிகழ்ந்துவிட்ட ஒன்றல்ல. பெரு நகரங்கள் எல்லாவற்றிலும் இதேநிலைதான்.

“லேகியத்திற்காக சிட்டுக் குருவிகள் பிடித்துக் கொல்லப்படுகின்றன. அதனால் சிட்டுக்குருவிகள் அழிந்து போகின்றன’ என்பதை என்னால் நம்பமுடியவில்லை. பறவையைச் சுட்டால் தண்டனை கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. இதனால் சுட்டுக் கொல்லமாட்டார்கள் என்று கருதுகிறேன். நான் சுட்டுக் கொன்றதைப் பார்த்ததும் இல்லை. உண்மையில் சிட்டுக்குருவி லேகியம் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்பதெல்லாம் பொய்யான விஷயம். டைகர் பாம் என்று விற்கிறார்கள். அது என்ன உண்மையில் டைகரில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒன்றா? இதைப்போலத்தான் சிட்டுக்குருவி லேகியமும் ஒரு ஏமாற்று வேலைதான்.

சிட்டுக்குருவிகள் அழியாவிட்டாலும், பரவலாகப் பறவை இனங்கள் அழிகிறது என்பது உண்மைதான். உயிரினங்கள் மொத்தமாக 80 லட்சத்திலிருந்து ஒரு கோடிக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் பத்து சதவிதம்கூட நமக்குத் தெரியாது. நமக்குத் தெரிந்து அழிந்தது என்று பார்த்தால் சிறுத்தைப்புலியைத்தான் சொல்லவேண்டும். சிறுத்தைப்புலிகள் இந்தியாவில் அதிகமாக இருந்தன. திருநெல்வேலி போன்ற பகுதிகளில்கூட இருந்தது. அதி வேகமாக ஓடும் விலங்கு இதுதான். இன்று இந்தியாவில் சிறுத்தைப்புலிகளே இல்லை. ஆப்பிரிக்கக் காடுகளில்தான் காணப்படுகின்றன. அந்தக் காலத்தில் ராஜாக்கள் சிறுத்தைப்புலிகளைப் பிடித்து வந்து பழக்கப்படுத்தி வேட்டைகளுக்காகப் பயன்படுத்தினர். ஒவ்வொரு ராஜாவிடமும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுத்தைப்புலிகள் இருக்கும். இதை அவர்கள் சொத்தாகவே கருதினார்கள். இப்படிப் பிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டு சிறுத்தைப்புலிகள் இருந்ததால் இனப்பெருக்கம் படிப்படியாகக் குறைந்து இன்று இந்தியாவில் சிறுத்தைப்புலிகளே இல்லாமல் போய்விட்டன.

பறவைகள் மற்றும் பல உயிரினங்கள் அழிந்துபோவது உலக அழிவின் முன்னோடி என்று சொல்லமுடியாது. இது

குறித்து வெவ்வேறு விதமான கருத்துகள் இருக்கிறது. பூமியினுடைய வெப்பம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் உலகம் முழுவதும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு  வருகின்றன. இதனால் உலகம் அழிந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது. சிட்டுக்குருவிகள் உட்பட எல்லா உயிர்களையும் அழிவிலிருந்து காப்பதற்கு காடு வளர்ப்பு ஒன்றுதான் சரியான தீர்வாக இருக்கும். காடு வளர்ப்பு என்றதும் புதிய இடங்களில் காடு வளர்ப்பது என்பது சரியான ஒன்றல்ல. காடு இருந்த இடங்களில்தான் காடு வளர்க்க வேண்டும். காடு இல்லா இடங்களில் புதிதாக காடுகளை அமைத்தால் அங்கிருக்கிற நீர்நிலைகளை மரங்கள் உறிஞ்சிவிடும். இது வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

பறவைகள் உட்பட எல்லா உயிரினங்களுமே அததற்கு உரிய சீதோஷ்ண நிலையில்தான் வாழும். அதைக் கெடுத்துவிடக் கூடாது. வயல், முள் மரங்கள் நிறைந்த வெட்டவெளி வெப்பப் பகுதிகளில்தான் காடை, கெüதாரி போன்றவை இருக்கும். இந்த இடத்தில் மரங்கள் அடர்ந்து இருந்து நிழல் போர்த்தியிருந்தால் அங்கு எப்படிக் காடையும், கெüதாரியும் வாழும்?

இயற்கை பராமரிப்பு ஒழுங்காக இருந்தால் எந்தப் பிரச்சினையும் உயிர்களுக்கு இல்லை. காற்றுமண்டலத்தில் நைட்ரஜன்தான் அதிகமாக இருக்கிறது. இரண்டாவது கார்பன் டை ஆக்ûஸடு, மூன்றாவது இடத்தில் ஆக்ஸிஜன். இந்த ஆக்ஸிஜன் இல்லாவிட்டால் மனிதர்களுடைய கதி? தாவரங்களிலிருந்துதான் ஆக்ஸிஜன் நமக்குக் கிடைக்கிறது. எனவே எல்லா உயிரினங்கள் அததனுடைய பணியை ஒழுங்காகச் செய்வதுடன், மற்ற உயிரினங்களின் பணியையும் ஒழுங்காகச் செய்யவிட்டால் பூமி எப்போதும் மூச்சை நிறுத்தாது” என்கிறார் ரஞ்சித் டேனியல்ஸ்.

Posted in Birds, Chennai, Crow, Environment, Extinct, Madras, Myna, Mynah, Pigeon, Pollution, Rat, Sparrow, Squirrel, Warming | Leave a Comment »

Don’t drink Carbonated or Vitamin Water – How to survive hot sunny weather

Posted by Snapjudge மேல் மே 1, 2007

ஆரோக்கியம்: கூல்டிரிங்ஸ் குடித்தால் உடம்புக்குக் கெடுதி!

ந.ஜீவா

”என்ன வெயில்…என்ன வெயில்…அப்பா… வெயில் மண்டையைப் பிளக்குதே” என்றபடி நிழல் தேடி ஒதுங்கி, “அதைக் குடிக்க மாட்டோமா? இதைக் குடிக்க மாட்டோமா?’ என்று பரபரக்கிறவர்கள் அதிகம். கூல்டிரிங்ஸ், இளநீர், மோர், லஸ்ஸி என்று திரவ வடிவில் கிடைப்பதையெல்லாம் குடித்துவிட்டு அதன்பின்னும் தாகம் தணியாமல் தவிப்பவர்கள் பலர். “வெயில் இந்தக் கொளுத்து கொளுத்துதே, ரெண்டு மழை பேஞ்சா எவ்வளவோ நல்லா இருக்கும்’ என்று கோடை

மழைக்காகக் கனவு காண்பவர்கள் ஏராளம்.

கொளுத்தும் வெயிலைச் சமாளிக்க என்ன செய்வது? என்று மண்டை காய்ந்து நாம் ஒதுங்கிய இடம் சென்னை செயின்ட் தாமஸ் மருத்துவமனை. அங்கு சிறுநீரகவியல் துறை நிபுணரான டாக்டர் பழனி.ரவிச்சந்திரனைச் சந்தித்து நமது கேள்விகளை அள்ளி வீசினோம். அதற்கு அவர் அளித்த பதிலை இங்கே தருகிறோம்.

டாக்டர் பழனி.ரவிச்சந்திரன் மருத்துவம் எவ்வாறு வணிகமயமாகிவிட்டது என்பதை எளிய முறையில் விளக்கும் “பணநல மருத்துவம்’ என்ற நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“”மனித உடல் அடிப்படையில் காரத்தன்மை உள்ளது. அமிலத் தன்மை என்பது இதற்கு நேர்எதிரானது. நமது ரத்தத்தில் காரத் தன்மை இருக்கும். அதில் அமிலத் தன்மை அதிகரிக்கக் கூடாது. நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஜீரணம் ஆகும் போது ரத்தத்தில் அமிலத் தன்மை அதிகரிக்கும். இந்த அமிலத் தன்மையைக் குறைக்க நமது உடல் மூன்று விதங்களில் செயல்படுகிறது. மூச்சு விடுதலின் மூலமாக ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தி அமிலத் தன்மையைக் குறைக்கலாம். இதற்கு ஆக்சிஜன் நிறைந்த நல்ல காற்று அவசியம். இரண்டாவதாக சிறுநீரின் மூலம் உடலில் சேர்ந்துள்ள அமிலத்தை வெளியேற்றலாம். மூன்றாவதாக வியர்வை மூலமாக அமிலத் தன்மையைக் குறைக்கலாம்.

நல்ல காற்று இப்போது அரிதான பொருளாகிவிட்டது. வாகனங்கள், தொழிற்சாலை புகைகள், கழிவுகளை எரிப்பது போன்றவற்றால் காற்றில் ஆக்சிஜன் அளவு குறைந்துவிட்டது. நாம் மரங்களை வெட்டிவிட்டு அந்த இடங்களில் வீடுகளைக் கட்டிக்

குடிவந்துவிட்டோம். ஒரு மரம் என்பது ஒரு நுரையீரல் போல. மரங்கள் குறைந்து காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிடுவதும் குறைந்து விட்டதால் காற்று கெட்டுப் போய் விட்டது.

அடுத்து சிறுநீரிலும், வியர்வையிலும் அமிலம் வெளியாக வேண்டும் என்றால் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். முதலில் எல்லாம் நமது முன்னோர்கள் “சொம்பிலும் லோட்டாவிலும்’ தண்ணீர் குடித்தார்கள். நாம் டம்ளரிலும், அதைவிடச் சிறிய கப்பிலும் தண்ணீர் குடிக்கிறோம்.

வெயில் நேரத்தில் தாகத்தைத் தணித்துக் கொள்ள கூல்டிரிங்ஸ் குடிக்கிறோம். இந்த கூல்டிரிங்ஸில் அமிலத்தன்மை அதிகமாக உள்ளது. உங்கள் பாத்ரூமில் ஒரு பாட்டில் கூல்டிரிங்ûஸக் கொட்டிவிட்டு ஐந்து நிமிடம் கழித்துச் சுத்தம் செய்தால் ஆசிட் ஊற்றிக் கழுவியது போல நன்றாகச் சுத்தமாகிவிடும். இது மிகைப்படுத்திக் கூறப்படுவது அல்ல. எனவே பலரும் குடிப்பதுபோல வெயில் நேரத்தில் கூல்டிரிங்ஸ் குடிப்பதால் தாகம் தணியாது. மேலும் உடலுக்கும் கெடுதி.

மினரல் வாட்டரிலும் அமிலத்தன்மை இருக்கவே செய்கிறது. எனவே தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆற வைத்து அதில் நமது முன்னோர் செய்தது போல நன்னாரி வேரைப் போட்டு ஊறவைத்து அருந்தலாம். சீரகத் தண்ணீரை அருந்தலாம். புளிப்பில்லாத மோர், இளநீர், பதநீர் போன்றவை வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்றவை.

அடுத்து எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கேட்பார்கள். அதிகமாகத் தண்ணீர் குடித்தால் சிறுநீரகத்துக்கு அதிக வேலை தருவதாக ஆகாதா? என்று சந்தேகத்தைக் கிளப்புவார்கள். நமது சிறுநீரகங்கள் நாளொன்றுக்கு 30 லிட்டர் தண்ணீர் குடித்தாலும் ப்ராசஸ் பண்ணும் திறன் படைத்தவை. எனவே இதய நோய், சிறுநீரக நோய் போன்ற குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் இல்லாதவர்கள் அவர்களால் குடிக்க முடிந்தவரை தண்ணீர் குடிக்கலாம். இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.

தண்ணீர் குறைவாகக் குடித்தால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். இது ரத்தத்தில் அமிலத்தின் அளவு அதிகரித்துவிட்டதைக் காட்டுகிறது.

அமிலத்தன்மை அதிகரித்தால் உடலில் கால்சியம் கரைந்து வெளியேறும். இதனால் கைகால் வலி, முதுகுவலி, உடல் வலி ஏற்படும்.

அமிலம் வெளியேறுவதற்கு இன்னொரு வழி, வியர்வை. உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் குறைந்துவிட்ட நாளில் வியர்ப்பது குறைவு. இப்போது பல அலுவலகங்களில், வீடுகளில் ஏஸியைப் பயன்படுத்துகிறார்கள். ஏஸி ரூமில் இருக்கும்போது வியர்க்காது. எனவே உடலிலிருந்து அமிலம் வெளியேறுவது குறையும். போதிய தண்ணீர் குடிக்கவில்லையென்றால் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு

அதிகரிக்கும். பித்தபையில் கல், சிறுநீரகக் கற்கள், உடம்புவலி, முகத்தில் கறுப்பாக ஆதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

நீர்ச்சத்துள்ள பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல நிறமுள்ள பழங்கள், காய்கறிகள் உடலுக்கு நல்லது. ஏனெனில் அவற்றில் தாது உப்புகள் அதிகம். மிளகாய் காரத்தன்மை உள்ளதால் உடலுக்கு நல்லது. ஆனால் அதை நேரடியாகச் சாப்பிட முடியாது. மோர் மிளகாய் செய்து சாப்பிடலாம். மாங்காய் புளிப்பு. அமிலத்தன்மை உள்ளது. எனவே மாங்காயை கோடைக்காலத்தில் சாப்பிடக் கூடாது. மாங்காயை அதிலுள்ள புளிப்புப் போகும்படி பதப்படுத்திச் சாப்பிடலாம். ஆனால் மாம்பழத்தைச் சாப்பிடலாம். அதில் வைட்டமின்கள் அதிகம். ஆரஞ்சு, பப்பாளி போன்றவற்றைச் சாப்பிடலாம்.

உடைகளைப் பொறுத்தவரையில் தொளதொளப்பான பருத்தி ஆடைகள் சிறந்தவை. ஜீன்ஸ் அணிந்தால் வியர்வை அதிகமாகி பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புண்டு.

வெயில் காலத்தில் பூசுவதற்கென்று நிறைய சன்ஸ்கிரீன் லோஷன்கள், கிரீம்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள். அவற்றில் ஸிங்க் ஆக்ûஸடு, டைட்டானிக் ஆக்ûஸடு போன்றவை உள்ளதா எனப் பார்த்து வாங்கிப் பயன்படுத்தினால் கெடுதியில்லை. மெழுகு உள்ள கிரீம்கள்தாம் அதிகம் விற்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தினால் வியர்வை தடைசெய்யப்படும். எனவே மெழுகு உள்ள கிரீம்களைத் தவிர்க்க வேண்டும். சில லோஷன்களில், கிரீம்களில் கற்றாழை சேர்க்கப்படுவதாக விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் அவற்றில் கலக்கப்படும் கற்றாழையின் அளவு 1 சதவீதம்தான். எனவே அவற்றால் பெரிய அளவுக்குப் பயன்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்குப் பதிலாக நமது முன்னோர்கள் பயன்படுத்திய சந்தனத்தைப் பூசிக் கொள்ளலாம். சந்தனத்தைப் பூசிக் கொண்டு வெளியில் செல்ல முடியாது என்பவர்கள், வெளியில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் குளித்துவிட்டு சந்தனத்தைப் பூசிக் கொள்ளலாம்.

மனிதர்கள் ஒரு லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். எத்தனையோ கோடைக் காலங்களை அவர்கள் பார்த்தவர்கள். ஆனால் அவர்கள் இயற்கையைச் சேதப்படுத்தாமல் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்கள். நாம் பின்பற்றுவது மேற்கத்திய வாழ்க்கைமுறை. எல்லாம் வணிகமயமாகிவிட்டதால் லாபத்திற்காக மக்களுக்குத் தீங்குதரும் பலவற்றைத் தயாரித்து நன்றாக விளம்பரம் செய்து விற்கிறார்கள். அதன் கெடுதிகளை அனுபவிப்பது மக்கள்தான்”

Posted in Aerated, Air, Carbonated, Cloud, Cool drinks, CoolD, Drink, Environment, Fertilizer, Gloabl Warming, Hot, Mineral, Natural, Nitrates, organic, Oxygen, Phosphates, Poison, Pollution, Pure, Rain, River, Scarcity, Source, Sun, Water, Weather | Leave a Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series

Posted by Snapjudge மேல் மே 1, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கத்தி, நெருப்பு, விஷம் போல் மருந்து!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

என் மனைவிக்கு 56 வயதாகிறது. கடந்த டிசம்பர் மாதம் மூன்று நாட்கள் காய்ச்சல் இருந்தது. காய்ச்சல் குணமான பிறகு, அவள் கால் பாதங்கள் வீங்கி வலிக்கிறது என்கிறாள். மூன்று மாதங்களாக டாக்டரிடம் காட்டி மருந்து, ஊசி போட்டும் குணமாகவில்லை. நடக்க முடியாமல் வேதனைப்படுகிறாள். அவள் நல்ல உடல் நலம் பெற்று சுகத்தோடு இருக்க ஆலோசனை கூறவும்?

ஆர். வாசன், சிவகாசி.

காய்ச்சலை உடனடியாகக் குறைக்க உங்கள் மனைவி சாப்பிட்ட மருந்துகளின் செயலால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம். நோயைத் தீர்ப்பதற்காக உள்ளே செலுத்தப்பட்ட மருந்து நோயாளியின் நோய்க்கு ஒத்ததாயிருந்தாலும், தேக வாகுக்கு ஒவ்வாததாயிருக்கலாம். அதுபோன்ற மருந்தின் சேர்க்கையை எதிர்க்கும் உடலின் சக்தி போதுமானதாக இல்லாதிருந்தால் அம்மருந்தே வேறு ஒரு நோய்க்குக் காரணமாகலாம். தன் வேலை முடிந்ததும் வெளியேறவேண்டிய அம்மருந்து உடலின் உள்ளே தங்கினால் அதன் விளைவாக உள்ளே நிகழும் ரஸôயன பௌதிக மாறுதல்கள் பயங்கர விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

மருந்து கத்திபோல், நெருப்பு போல், விஷம் போல் அறிந்து உபயோகிக்கப்பெற அமிருதமாக உதவும். அறியாமையால் முறை தவறி உபயோகிக்கப் பெற தீங்குகள் விளையும்.

காய்ச்சல் உள்ள நாட்களில் வயிற்றில் ஏற்படும் மப்பு நிலை, அஜீரண நிலையை உதாசீனப்படுத்தி இன்று பலரும் ப்ரட் டோஸ்ட், இட்லி, சட்னி என்றெல்லாம் சாப்பிடுகின்றனர். மருந்து காய்ச்சலை குறைத்துவிடும். பத்திய நிலை தேவையில்லை என்பது அவர்கள் எண்ணம். இதனால் சீற்றம் பெறும் வாயு கப தோஷங்கள் காலில் வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.

தங்களுடைய மனைவியின் விஷயத்தில் சாப்பிட்ட மருந்தின் கழிவுகளையும் குடல் தூய்மையை மாசுபடுத்திய தவறான உணவின் சேர்க்கையையும் வெளியேற்ற வேண்டிய நிலை தற்சமயம் ஏற்பட்டுள்ளது. இவ்விரு வேளைகளைச் செய்வதில் ஆயுர்வேத மருந்தாகிய சிலாஜது எனும் கண்மத பஸ்மமும், திரிபலா சூரணமும் உதவிடக் கூடும். திரிபலா சூரணம் 10 கிராம், 800 மிலி கஷாயத்துடன் 1 கேப்ஸ்யூல் கண்மதம் பஸ்மமும், மாலையில் இதுபோலவே கஷாயமும் கேப்ஸ்யூலும் வெறும் வயிற்றில் தொடர்ந்து 1 வாரம் சாப்பிட வீக்கம் வற்றி விட வாய்ப்பிருக்கிறது. இந்நாட்களில் பத்திய உணவாக புழுங்கலரிசியை சிறிது சிவப்பு காணும் வரை லேசாக வறுத்து 1 பங்கு, 20 பங்கு தண்ணீர் சேர்த்து, கால் பங்கு சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ளவும். பருக்கை நீக்கி, தெளிவாக சிறிது உப்பு கலந்து காலை, மாலை வெதுவெதுப்பாகக் குடிக்கவேண்டும். 5 கிராம் சுக்கு 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, வடிகட்டி குடிக்கப் பயன்படுத்தவேண்டும். அதிகநேரம் நின்று கொண்டு வேலை செய்யாமல், நிறைய ஓய்வு எடுக்கவேண்டும்.

இதுபோன்ற பத்திய உணவினால் நாக்கில் ருசியும், வயிற்றில் பசியும் மேம்படும். மருந்துகள் உடலின் உட்புறக் கழிவுகளை வெளியேற்றும். குடல் பகுதி தூய்மையான பிறகு ஆயுர்வேத மருந்தாகிய தசமூலஹரீதகீ எனும் லேஹ்யத்தை காலை, மாலை வயிற்றில் 10 கிராம் அளவு நக்கிச் சாப்பிட வீக்கம், வலி குறையும். சாப்பிடும் உணவு சூடாகவும், சரியான நேரத்திலும் சாப்பிடவேண்டும். தயிர், புளிப்புச் சுவை கொண்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். புனர்நவாஸவம் எனும் மருந்தை 30 மிலி காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடலாம். இந்நாட்களில் நெருஞ்சி முள்ளைத் தூளாக்கி, சமம் கொள்ளு வறுத்துப் பொடித்துக் கலந்து துணியில் முடிந்து சட்டியில் சூடாக்கி, கால் வீக்கம் , வலி உள்ள பகுதிகளில் காலை, இரவு உணவிற்கு முன்பாக 1/2 மணி நேரம் ஒத்தடம் கொடுக்கலாம்.

காய்ச்சலின் சீற்றத்தை அடக்க, சாப்பிடப்பட்ட

மருந்துகளால் ஜீவாணுக்கள்,கிருமிகள் போன்ற ஜீவனுள்ள பொருள்களை அழிக்கும் மருந்து உடலில் ஜீவ இயக்கத்திற்காகத் திசுக்களில் தோன்றும் பாதுகாப்பான ஜீவாணுக்களையும் அழித்திருக்கக் கூடும். அதை ஈடுகட்ட புனர்நவாதி மண்டூரம் எனும் மாத்திரையை தங்கள் மனைவி மோர்சாதத்துடன் கலந்து சுமார் 14 முதல் 21 நாட்கள் வரை சாப்பிட வேண்டும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Cleansing, Cold, Doctor, Fever, Food, Health, Healthcare, Medicine, Nutrition | 2 Comments »

May Day – Labour Holiday – Workers, Socialism

Posted by Snapjudge மேல் மே 1, 2007

உலகம் போற்றும் உழைப்பின் திருநாள்

உதயை மு. வீரையன்

அமைதியான உலகம், அன்பான உறவுகள், ஆனந்தமான வாழ்க்கை – இதுதான் பெரியோர்களின் கனவு; ஞானிகளின் ஆசை; முனிவர்களின் தவம். இது ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ சமுதாயத்தில்தான் சாத்தியம்.

“எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வம் எய்தலாலே இல்லாரும் இல்லை உடையாரும் இல்லை மாதோ’ என்றார் கம்பர். ஏழை, செல்வர் என்ற வேறுபாடு இல்லாத நாட்டை அவர் அப்படி கற்பனை செய்து பார்க்கிறார்; பாடுகிறார். அதைவிடவும் பெரிதாக வளர்ந்து நிற்கும் சாதி, சமய வேறுபாடுகளை அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

ஏற்றத் தாழ்வுகள் விரிவடைந்து போவதால் புரட்சி வெடிக்கிறது. பிரெஞ்சுப் புரட்சி இப்படி ஏற்பட்டதுதான். “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்னும் தாரக மந்திரங்கள் பிறந்ததும் அப்போதுதான்.

ஆமைகளாய் – ஊமைகளாய் அடங்கிக் கிடக்கும் மக்கள் எத்தனை காலம்தான் இப்படி இருக்க முடியும்? எல்லாவற்றுக்கும் எல்லையுண்டு. “சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பது பழமொழி. பொங்கி எழும் மக்களின் எழுச்சியே புதிய சமுதாயத்தின் வளர்ச்சி; புதிய உலகத்தின் முன்னேற்றம்; புதிய மனிதனின் பிறப்பு.

தனிமனிதனாக இருந்தாலும் சரி, ஊராக தேசமாக – உலகமாக இருந்தாலும் சரி, உழைக்காமல் உயர்வு கிடையாது. “உழைத்தால் உயர்வடையலாம்; சரி, யார் உழைத்தால் யார் உயர்வடையலாம்?’ இப்படி ஒரு கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. அறிவு உழைப்பாயினும் சரி, உடல் உழைப்பாயினும் சரி, அவை சுரண்டப்படுகின்றன. அதனால் போராட்டம், கலகம், வன்முறை என இது தொடர்கிறது.

1820}30களில் அமெரிக்க முதலாளிகள் தொழிலாளர்களை வாட்டி வதைத்து ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் வேலை வாங்கினர். துயர் தாங்கொணாத சிகாகோ நகரின் ரொட்டித் தொழிலாளர்கள், 1834}ம் ஆண்டு ஒன்றுகூடி, ஒரு நாளைக்குப் பத்து மணி நேர வேலைக்குக் குரல் கொடுத்தனர். போராட்டத்தின் கடுமை தாளாமல், 1837}ல் பத்து மணி நேர வேலையென்பதை அப்போதைய அமெரிக்க அதிபர் அறிவித்தார்.

இதுவும் தொழிலாளர்களைத் திருப்தி செய்யப் போதுமானதாக இல்லாததால் 1886 மே முதல் நாளன்று அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பின் வேண்டுகோளான எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தங்கள் பெரும் எழுச்சியோடு தொடங்கின.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, லூயிஸ்வேலி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதில் 1200-க்கும் மேற்பட்ட சங்கங்கள் கலந்து கொண்டன.

சிகாகோ நகரில் “ஹேமார்க்கெட்’ சதுக்கத்தில் நடந்த கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் எவ்வளவுபேர் கொல்லப்பட்டனர் என்பது இதுவரை வெளிவராத ரகசியக் கணக்கு. தொழிலாளர் ரத்தத்தால் “ஹேமார்க்கெட்’ சதுக்கமே குருதிக் குளமானது.

1887 நவம்பர் 11 அன்று தொழிலாளர் சங்கத் தலைவர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிஸ்ஸர் ஆகிய நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்கள் தூக்கிலிடுவதற்கு ஒருநாள் முன்னதாக 21 வயதேயான இளைஞர் லூயிஸ் லிங் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சி உலகத்தையே குலுக்கியது.

அமெரிக்கத் தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமுமே இன்றைக்கு மேதினமாக – உழைப்பாளர் திருநாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டத்தோடு இணைந்ததாக தொழிலாளர் போராட்டங்கள் அமைந்தன.

கப்பலோட்டிய தமிழன் வ.உ . சிதம்பரனார் இதில் பெரும் பங்கு கொண்டார். 1908 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற “கோரல் மில்’ தொழிலாளர்களின் போராட்டம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தது.

1918 ஏப்ரல் 27 அன்று “மெட்ராஸ் லேபர் யூனியன்’ என்ற தொழிற்சங்கம் சென்னையில் உருவானது. இதுவே தமிழ்நாட்டில் அமைப்பு முறையில் தொடங்கப் பெற்ற முதல் தொழிற்சங்கமாகும்.

இதன் தலைவராக வாடியாவும், செயலாளராக செல்வபதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவியாக திரு.வி.க., சர்க்கரைச் செட்டியார் மற்றும் சிங்கார வேலர் ஆகியோர் செயல்பட்டனர்.

1923 மே முதல்நாள் – இந்தியாவிலேயே முதன்முதலில் மேதினத்தைக் கொண்டாடிய பெருமை சிங்காரவேலரையே சேரும். உயர் நீதிமன்றத்திற்கு எதிரேயுள்ள கடற்கரையில் இவர் தலைமையிலும், திருவல்லிக்கேணி கடற்கரையில் கிருஷ்ணசாமி சர்மா தலைமையிலும் மேதினக் கூட்டங்கள் நடைபெற்றன.

இதுவே உழைப்பாளர் வெற்றி பெற்ற உழைப்பின் வரலாறு. “உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?’ என்ற கேள்விக்கு “இல்லை’ என்பதே எக்காலத்தும் விடையாகும்.

(இன்று மேதினம்)

Posted in Analysis, Backgrounder, History, Information, Labor, Labour, Socialism, Worker, workers | Leave a Comment »

Is it the treatment meted out to a 84 Year octogenarian – Mu Karunanidhi

Posted by Snapjudge மேல் மே 1, 2007

84 வயதில் எனக்கு இது தேவையா? கண்ணீர் விட்ட கருணாநிதி-கலங்கிய சட்டசபை

சென்னை: பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அண்ணா ஆகியோருடன் பழகி அரசியல் நடத்தி விட்டு, ஜெயலலிதாவைப் போன்றவர்களுடன் அரசியல் நடத்தும் அளவுக்கு வந்து விட்டதே, 84 வயதில் எனக்கு இது தேவையா என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் கண் கலங்கிக் கூறியதால் சபையில் சில நிமிடம் பரபரப்பு நிலவியது.

சட்டசபையில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆளுநர் பர்னாலா, மத்திய அரசு, காவல்துறை, ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோரை கடுமையாக விமர்ச்சித்து அறிக்கை விட்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சி்களின் உறுப்பினர்களின் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசினர். பின்னர் முதல்வர் கருணாநிதி பேசுகையில், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார்.

கருணாநிதி பேசுகையில், தோழை கட்சிகளின் கருத்தோடு என் கருத்தையும் இணைத்து கூறுகிறேன். காவல்துறையில் எல்லோரும் நல்லவர்களும் அல்ல, தீயவர்களும் அல்ல. இதில் கருங்காலிகளும் உள்ளனர்.

அதற்காக காவல்துறையே வேண்டாம் என முடிவு செய்ய கூடாது. ஒரு ஆட்சி செம்மையாக இருந்தால்தான் எல்லா துறையும் சீராக செயல்படும். இதை பொறுத்து கொள்ள முடியாமல் எரிச்சலடையும் புகைச்சலாகத்தான் ஜெயலலிதாவின் அறிக்கை உள்ளது.

இதற்காகத்தான் நீங்கள் சட்டசபையில் எனக்கு பொன்விழா நடத்த வேண்டும் என்ற போது நான் வேண்டாம் என மறுத்தேன். பிடிவாதமாக சம்மதிக்க வைத்தீர்கள்.

என்றைக்காவது 50 ஆண்டு காலத்தில் எந்த விழாவாவது இந்த அவையில் நடந்ததுண்டா. நான் தம்பி என்று கருதிக் கொண்டிருந்தவரும் கூட அறிக்கை விட்டிருக்கிறார். ஏனென்றால் அவர்களால் எல்லாம் இவற்றைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, இந்த அவையில் எம்ஜிஆர் படம் திறக்கப்பட்ட போது என்னை அழைக்கவில்லை. அப்போது, சபாநாயகர் இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார், நாங்கள் அமர்ந்த இடத்தில் சசிகலா அமர்ந்திருந்தார். இந்த அவை ஒரு தர்பார் போல காட்சியளித்தது.

நீங்கள் எல்லாம் பார்த்து ஏதோ, ஐம்பதாண்டு காலம் இருந்தானே, எங்கேயோ பிறந்தவன், சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவன், இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறானே என்று என்னையும் சிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் கருதியதை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள்தான் இன்றைக்கு இதையெல்லாம் செய்கிறார்கள்.

இதில் டிஜிபியும், கவர்னரும் என்ன செய்வார்கள், அவர்களை பற்றி அறிக்கை வெளியிடுகிறார்கள். உலக மகா பொய்யர் கருணாநிதி என்று கூறியுள்ளார். என்னெல்லாம் பேசியிருக்கிறார்.

நடமாடும் பொம்மையாக டிஜிபி இருக்கிறார் என்கிறார். காவல்துறையைப் பற்றி உருக்குலைந்து போன, செயல் திறன் இழந்து விட்ட, சர்வ நாசமாகி விட்ட அமைப்பு என்று கூறியுள்ளார். துர்வாச முனிவரால் கூட இப்படி திட்ட முடியாது.

ஆளுநரைப் பார்த்து நபர் என்கிறார். நாம் பதிலுக்குப் பதில் பெண்களைப் பற்றிப் பேசக் கூடாது. நாம் பெண்களை பற்றி பேசக்கூடாது, பெண்களும் இப்படி பேசக்கூடாது.

நாம் புராணங்களை நம்புவதில்லை, கட்டுகதைகளையும் நம்புவதில்லை. ஆனால் இதையெல்லாம் பார்க்கும்போது அல்லி ராணிகள் இருக்கத்தான் செய்தார்கள் என எண்ண வேண்டியுள்ளது.

முதலில் நரசிம்மராவ், வாஜ்பாய், அத்வானி, ராஜீவ் காந்தி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சந்திரபாபு நாயுடு எல்லோரையும் குறை கூறிவிட்டு, இப்போது உ.பி சென்று அவர் கையை பிடித்துள்ளார்.

வாஜ்பாயைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா. தமிழ் நாட்டு மக்களுக்கு இவரை யார் என்றே தெரியாது. நான்தான் பட்டி தொட்டிகளுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினேன் என்றார். அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா என்றார்.

இரவு 10 மணிக்கு ராஜீவ் காந்திக்குப் போன் செய்தேன். அவர் தூங்கப் போய் விட்டார் என்றார்கள். ஒரு நாட்டின் பிரதமர் இவ்வளவு சீக்கிரம் தூங்கினால் நாடு உருப்படுமா என்றும் கூறினார்.

ஆளுநர் சென்னாரெட்டியை சந்திக்கச் சென்றபோது அவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்றார். சந்திரபாபு நாயுடுவை மோசடிப் பேர்வழி என்றார்.

எம்.ஜி.ஆர். என்னை விட்டு, திமுகவை விட்டுப் பிரிந்து சென்றார். அப்படி இருந்தும் என் மீது மரியாதையாக இருந்தார். நட்பு பட்டுப் போய் விடவில்லை. அவருடைய காரிலே ஒரு நண்பர், இப்போதும் அவர் சென்னையிலே பெரிய புள்ளியாக உள்ளார்.

டிரைவர் என்று கூறக் கூடிய அளவுக்கு எம்.ஜி.ஆரிடத்திலே நெருக்கமாக இருந்தவர் அவர். ஒருமுறை காரில் எம்.ஜி.ஆருடன் சென்றபோது தவறிப் போய் எனது பெயரைக் குறிப்பிட்டு, கருணாநிதி என்று கூறி விட்டார்.

உடனே காரை நிறுத்தச் சொன்ன எம்.ஜி.ஆர்.அவரை நடந்தே வீட்டுக்கு வருமாறு உத்தரவிட்டார். ஏன் என்று அவர் கேட்டபோது, நானே கருணாநிதி என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. நீ எப்படிக் கூப்பிடலாம் என்றாராம். இதை அந்த நண்பர் பின்னர் ஒருமுறை என்னிடம் சொல்லி கண் கலங்கியிருக்கிறார்.

அப்படி, ஒரு கட்சி பிரிந்த பிறகும் கூட அந்த உணர்வுகள் அப்படியேதான் இருந்தன. நான் காமராஜரைப் பற்றிப் பேசாத பேச்சா. காமராஜர் என்னைப் பற்றியோ, கழகத்தைப் பற்றியோ பேசாத பேச்சா. பக்தவச்சலம் என்னைப் பற்றி பேசாத பேச்சா, நான் அவரைப் பற்றிப் பேசாத பேச்சா. அப்படி இருந்தாலும், என்னுடைய தாயின் பெயரில் திருக்குவளையில் தாய் சேய் நல விடுதியைத் திறக்க வேண்டும் என கேட்டபோது பக்தவச்சலம் உடனடியாக ஒத்துக் கொண்டார்.

அதேபோல நான் அவருக்கு மணிமண்டபம் கட்டியபோது அவர் இந்தியைக் கொண்டு வந்தார், உங்களை பாளையங்கோட்டை சிறையில் போட்டார். அவருக்கு மணி மண்டபா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அது வேறு, இது வேறு. மனித நாகரீகம் இது, தடுக்காதீர்கள் என்றேன்.

பெருந்தலைவர் காமராஜரை நான் எவ்வளவு தூரம் விமர்சித்திருப்பேன். எனது தாயார் இறந்தபோது நான் சவத்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தேன். எனது வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார். எனது தாயாருக்கு முதல் மரியாதை செலுத்தி விட்டு வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார்.

அரசியலில் மற்றவர்களை தாக்கி பேசும்போது அவர்களை மீண்டும் சந்திக்க வேண்டி வரும் என்பதை மறந்து விடக்கூடாது. ஜெயலலிதா அந்த நாகரீகத்தை கற்றவர் அல்ல, காப்பாற்றுபவரும் அல்ல. மனித இதயத்தோடு தொடர்பு இல்லாமல் அரசியல் நடத்துகிறார்.

இதையெல்லாம் தாங்கிகொண்டுதான் ஆக வேண்டும். இந்த அளவிற்கு நாகரீகமற்ற, பண்பாடற்ற அரசியல் வந்துவிட்டதே என வருத்தப்பட வேண்டியுள்ளது.

84 வயது, 84 வயது என்று சொல்கிறீர்களே, இவ்வளவு நாள் இருந்ததால் அல்லவா, தமிழ்நாட்டிலே காமராஜரைப் போன்ற, பெரியாரைப் போன்ற, பகத்வச்சலத்தைப் போன்ற, அண்ணாவைப் போன்ற பெரிய மனிதர்களுன் பழகி விட்டு, இன்றைக்கு யார் யாரோடெல்லாம் அரசியல் நடத்திய வேண்டிய நிலை வந்து விட்டது.

இப்படியெல்லாம் 84 வயது வரை வாழ வேண்டுமா என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன் என்று கூறியபோது முதல்வரின் கண்கள் பணித்தன, குரல் தழுதழுத்தது. அவையே பெரும் அமைதியில் உறைந்து போனது.

முதல்வர் கண் கலங்குவதைப் பார்த்த அமைச்சர்கள் கீதா ஜீவன், பூங்கோதை, தமிழரசி, பாமக தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் கண்கலங்கினர்.

————————————————————————————————

சாதனைகள் :
– ப்ரியன்
* தமிழகம் இதுவரை 13 சட்டமன்றப் பொதுத் தேர்தல்களைச்
சந்தித்துள்ளது. இவற்றில் தாம் போட்டியிட்ட 11 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பவர் இந்தியாவில் கலைஞர் மட்டுமே!

* அன்றிலிருந்து இன்று வரை, சட்டமன்றத்தில் எரிமலையாகப்
பேசினாலும், எந்தக் கட்டத்திலும், சபைக் குறிப்புகளிலிருந்து நீக்கப்படும் அளவுக்கு, கலைஞருடைய பேச்சு அமையவில்லை.

* சென்னை மாநகராட்சியை தி.மு.க. முதன் முறையாகப் பிடித்ததற்கு முக்கியமான காரணம் அவரது திட்டமிடுதலும் உழைப்பும்.

* இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்றது.

* கை ரிக்ஷாக்களை ஒழித்தது. பேருந்துகளை தேசிய மயமாக்கியது போன்ற திட்டங்கள்.

* நிலச் சீர்திருத்தச் சட்டங்களை அறிமுகப்படுத்தியது.

* தமிழ்நாடு அரசின் கீழ் பல பொதுத்துறை நிறுவனங்கள் வரக் காரணமாக இருந்தவர். சிப்காட் தொழிற் பேட்டைகள் தமிழகத்தில் உருவாகக் காரணமாக இருந்தவர்.

* சேலம் உருக்காலை மற்றும் தூத்துக்குடி துறைமுகம் ஆகியவை வரக்காரணமாக இருந்தவர்.

* மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் பெற, நீதிபதி ராஜ மன்னார் கமிஷனை அமைத்தது.

* தமிழ்மொழி, ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வகை செய்யும் விதத்தில் முனைந்து பணியாற்றி வருகிறார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் இவரது முயற்சியால் வந்ததுதான். தமிழுக்குச் செம்மொழி பெற முனைந்தது.

* குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை உண்டாக்கியவர்.

* பெண்களுக்குச் சொத்தில் பங்கு உண்டு என்கிற புரட்சிகரமான சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர். பெண்களுக்குத் திருமண உதவித்திட்டம், பேறுகால உதவி போன்றவையும் அமுல்படுத்தியவர்.

* காவிரி நடுவர் மன்றம் நியமிக்க முழு மூச்சாகச் செயலாற்றினார்.

* பெரியார் சமத்துவபுரம், உழவர் சந்தை ஆகியவை இவரது
திட்டங்களே.

* சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தியது.

* கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்குப் விநியோகித்தது.

* சுதந்திரப் போராட்ட வீரர்கள், மற்றும் மறைந்த தலைவர்களுக்கு
நினைவில்லங்கள், மணி மண்டபங்கள் கட்டியது.

பின்னடைவுகள்:

* 1983-ல் இலங்கைத்தமிழர்கள் பிரச்னையில் ராஜினாமா செய்த
பின்னரும் மற்றும் 1986-ல் எம்.ஜி.ஆர். மேலவையைக் கலைத்துவிட்ட பின்னரும் கிட்டத்தட்ட நான்கு வருட காலம், சட்டமன்றத்திலோ மேலவையிலோ உறுப்பினராக இல்லாமல் இருந்திருக்கிறார் கலைஞர்.

* 1991-ல் துறைமுகம் தொகுதியில் வென்றபோதும், தி.மு.க.வின் தோல்வியை ஏற்றுக்கொண்டு ராஜினாமா செய்து விட்டார்.

* 2001-ல் சேப்பாக்கத்தில் வெற்றி பெற்றாலும், அவைக்குச் சென்று ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் இருந்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது.

* எமர்ஜென்சியைத் தொடர்ந்து, இவர் மீது போடப்பட்ட

  • வீராணம்,
  • பூச்சி மருந்து,
  • கோதுமை பேரம் ஆகிய ஊழல் வழக்குகளை பின்னர் மத்திய அரசு வாபஸ் பெற்றுக் கொண்டாலும், இவை கரும்புள்ளிகளாக அமைந்துவிட்டன.

* எம்.ஜி.ஆர்.கட்சியை விட்டு விலகியதைத் தொடர்ந்து, சட்டசபையை இரு சபாநாயகர்கள் நடத்தும் சூழல் உருவானது இந்தக் காலகட்டத்தில்தான்.

* சட்டசபையில் இவரது கையில் இருந்த பட்ஜெட் புத்தகத்தை
ஜெயலலிதா பறிக்க முயன்றபோது துரைமுருகன் ஜெயலலிதாவை மிக அநாகரிகமான முறையில் தாக்கியது களங்கமாய் அமைந்துவிட்டது.

* 1996-ல் இவர் ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் தென்
மாவட்டங்களில் ஜாதிமோதல்கள் நடந்தன.

* மூதறிஞர் ராஜாஜி, கலைஞர் வீட்டுக்குச் சென்று கேட்டுக் கொண்டதையும் பொருட்படுத்தாமல் ஒரு தலைமுறைக்கு
அறிமுகமில்லாத கள், சாராயத்தை தமிழகத்தில் கொண்டு வந்து அந்த அவலம் இன்று வரை தொடர்வதற்குக் காரணமானவர்.

* அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தபோது, மாணவர்கள் மீது போலீஸ் தாக்கியதில் உதயகுமார் என்ற மாணவர் இறந்து விட்டார். பின்னர் விடப்பட்ட மிரட்டல்கள் காரணமாக, உதயகுமாரின் தந்தையே பெற்ற மகனை “தன் மகன் இல்லை” என்று சொல்ல நேர்ந்த கொடுமை.

* திருச்சி மற்றும் பாளையங்கோட்டையில் மாணவர்கள் மீது நடந்த தாக்குதல்.

* காவிரி பிரச்னை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு போட்ட வழக்கை வாபஸ் வாங்கியது இன்று வரை தொடர்
பிரச்னைகளுக்குக் காரணமாக இருந்து வருகிறது.

* தி.மு.க. ஆட்சியில் சென்னையில் ஈழப் போராளி பத்மநாபா மற்றும் அவர் தோழர்களைக் கொன்ற புலிகள், கோடியக்கரை வழியாக
தப்பிச் சென்றது.

* மின்சாரக் கட்டண உயர்வுக்காகப் போராடிய விவசாயிகள் காவல் துறையால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம்.

* 1972-ல் கச்சத்தீவை விட்டுக் கொடுத்தது.

* மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் தினகரன் அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்கியதில் மூன்று ஊழியர்கள் இறந்தது.

– ப்ரியன்

Posted in 50, 84, ADMK, Advani, AIADMK, Allegations, Anna, Annadurai, Assembly, Backgrounder, Barnala, Biography, Biosketch, Chandrababu, Chandrababu Naidu, Communist, Congress, DMK, EVR, Faces, Gandhi, History, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, Kamaraj, kamarajar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Lament, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, MGR, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Naidu, Narasimha Rao, Narasimharao, Nayudu, Party, people, Periyaar, Periyar, PMK, Politics, Rajeev, Rajiv, Speech, Statistics, Vajpayee, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Vituthalai Chiruthaigal | Leave a Comment »

Misuse of power by TN Speaker – Justification of exploitation & abuse by Electricity Minister N Veerasamy

Posted by Snapjudge மேல் மே 1, 2007

வீராசாமியின் வாதமும் கதாரா விவகாரமும்! – Kalki Editorial

சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பனுடைய உதவியாளர் எழுதிய சிபாரிசுக் கடிதத்துக்கும் பா.ஜ.க. எம்.பி பாபுபாய் கதாரா விவகாரத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று சொன்னால், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாகவே தோன்றும்.

ஆனால், ஆவுடையப்பனின் உதவியாளர் இழைத்தது போன்ற சிறு சிறு அதிகார துஷ்பிரயோகங்கள்தான் ஆரம்பப் படிகள். அதிகார துஷ்பிரயோகத்திலிருந்து ஊழல், அதிலிருந்து இலஞ்சம், அதிலிருந்து கிரிமினல் குற்றங்கள் என்று சங்கிலித் தொடரான தப்புக் காரியங்களுக்கு வழி வகுக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் ஆதாயங்கள் கிட்டும் வகையில் அதிகார துஷ்பிரயோகங்கள் செய்வதுதான் இன்றைய அரசியல் நடைமுறை. பெரும்பாலான அரசியல்வாதிகள் இதனைத் தங்கள் உரிமையாகவே கருத ஆரம்பித்து விட்டார்கள்!

அரசியல்வாதிகள் சார்பாக, ஆர்க்காடு வீராசாமியிடமிருந்து இதற்கு ஒப்புதல் வாக்குமூலமே கிடைத்துவிட்டது! தமிழக சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பனின் உதவியாளர் எழுதிய சிபாரிசுக் கடிதம் குறித்து, சமீபத்தில் தமிழக சட்ட சபையில் விவாதம் எழுந்திருக்கிறது. அதையட்டி, தம்மைப் போன்ற அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தினமும் கண்ணை மூடிக்கொண்டு சிபாரிசுக் கடிதங்களில் கையெழுத்துப் போடுவதாகப் பேசியிருக்கிறார் ஆர்க்காட்டார். ‘‘இப்படியே போனால், உங்களுக்கே தெரியாமல் உங்கள் ராஜினாமா கடிதத்தில் ஒரு நாள் கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் கையெழுத்துப் போட நேரும்’’ என்று தயாநிதிமாறன் எச்சரித்ததாகவும் வீராசாமி வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.

ஒரு மூத்த அமைச்சர், எந்த தைரியத்தில் இதைப் பெருமைக்குரிய விஷயமாகவோ அல்லது சர்வ சாதாரண விஷயமாகவோ பறைசாற்றுகிறார் என்பதுதான் நமது வேதனைமிக்க கேள்வி! அதிலும் சக கட்சிக்காரர் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கும் முகமாக இவ்வாறு பேசியிருப்பது அதிர்ச்சியுடன் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்துகிறது-இந்த நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை!

ஆவுடையப்பனின் தனி உதவியாளர், ‘பார்’ நடத்த ஒப்பந்தத்துக்கு விண்ணப்பித்த ஒருவரைச் சிபாரிசு செய்து, சபாநாயகரின் லெட்டர்ஹெட்டைப் பயன்படுத்திக் கடிதம் அனுப்பியதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். அதுகுறித்துச் சபாநாயகரின் விளக்கத்தையும் கோரியிருக்கிறார். ‘‘சபாநாயகர் பேரில் குற்றமில்லை; அவரது உதவியாளர் கடிதம் அனுப்பியதற்கு அவர் பொறுப்பாக முடியாது; மேலும், அந்தக் கடிதம் சிபாரிசு செய்த நபருக்கு ஒப்பந்தம் அளிக்கப்படவுமில்லை’’ என்பது வீராசாமியின் வாதம்! சபாநாயகரின் உதவியாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கு விளக்கம் இல்லை.

அப்படியானால், யாருக்கு வேண்டுமானாலும் சிபாரிசுக் கடிதம் தருவது பதவியிலிருப்பவர்களின் உரிமை என்றல்லவா ஆகிறது! இது அதிகார துஷ்பிரயோகம் அல்லாது வேறென்ன?!

யாருக்கேனும் அநீதி நடந்தால், அதைச் சீர்செய்ய மட்டுமே பதவியில் உள்ளவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தலாம். அத்தகைய சிபாரிசுகள் நியாயமானவை; பாராட்டுக்குரியவை.

தகுதியற்றவர்களுக்கு முறைகேடாக வாய்ப்புகள் கிடைக்க சிபாரிசு செய்வது அதிகார துஷ்பிரயோகம் மட்டும் அல்ல; சமுதாயத்தின் வளர்ச்சியையும் வளத்தையும் முடக்கும் பாபச் செயல். இதனை உணரும் நல்லறிவுகூட இல்லாத நிலைக்கு நம் அரசியலும் அரசியல்வாதிகளும் தாழ்ந்து போயிருப்பது கொடுமையிலும் கொடுமை!

Posted in Aavudaiappan, Aavudaiyappan, Aavudayappan, abuse, ADMK, AIADMK, Arcot Veerasami, Arcot Veerasamy, Assembly, Avudaiappan, Avudaiyappan, Avudayappan, BJP, Corruption, Court, Dayanidhi, Dayanithi, Dhayanidhi, DMK, functionary, Govt, Influence, Kani Annavi, Karunanidhi, Katara, Khader Mohideen, kickbacks, Law, Maran, Order, Power, Rafiq Khader Mohideen, Sengottaiyan, Speaker, TASMAC, tender, Thayanidhi, Thayanidhy, Thayanithi, Thayanithy, Tirunelveli, Veerasami, Veerasamy, youth wing | Leave a Comment »

To all young short story writers & aspirants – A letter from Editor Kalki

Posted by Snapjudge மேல் மே 1, 2007

இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு வார்த்தை – கல்கி

சிறுகதை எழுதும் துறையில் இளம் எழுத்தாளர்கள் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். புதிய எழுத்தாளரின் தொகை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இது மகிழ்ச்சிக்குரியது.

புதிய எழுத்தாளர்கள் தாங்கள் மிகப் பிரயத்தனப்பட்டு எழுதிய சிறுகதைகளை மாதப் பத்திரிகைகளுக்கும் வாரப் பத்திரிகைகளுக்கும் அனுப்புகிறார்கள். அவற்றில் சில பிரசுரிக்கப்படுகின்றன. சில கதைகள் ஆசிரியரின் வந்தனத்துடன் திருப்பி அனுப்பப்படுகின்றன.

கதைகளைத் திரும்பப் பெற்றவர்கள் மனத்தில் அதிருப்தி ஏற்படுகிறது. அவர்கள் பத்திரிகை ஆசிரியர்களிடம் குறைபடுகிறார்கள். பத்திரிகை ஆசிரியர்கள் இளம் எழுத்தாளர்களை ஆதரிப்பதில்லை என்றும், அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதில்லை என்றும், மீண்டும் மீண்டும் ஒரு சில எழுத்தாளர்களின் கதைகளையே வெளியிடுகிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ஒரு சில ஆரம்ப எழுத்தாளர்கள் வேறு பத்திரிகைகளில் வெளியான கதைகளை, கதாபாத்திரங்களின் பெயர்களை மட்டும் மாற்றிப் புதிதாகத் தாங்கள் எழுதியதுபோல் அனுப்பி விடுகிறார்கள். இன்னும் சிலர் முன்னம் வெளியான கதைகளில் சிற்சில நிகழ்ச்சிகளை மட்டும் மாற்றி எழுதி அனுப்பிவிடுகிறார்கள். அத்தகைய கதையைத் திருத்தம் செய்து வெளியிட்டால், கதை அந்த எழுத்தாளர் ஏற்கெனவே பார்த்து எழுதிய மூலக் கதையின் உருவத்தைப் பெற்று விடுகிறது.

பல பத்திரிகைகளைப் படிக்கும் வாசக நேயர்கள் ‘இந்தக் கதை இன்ன தேதியில், இன்ன பெயரில், இந்தப் பத்திரிகையில் வெளியானது’ என்று கடிதம் எழுத ஆரம்பித்துவிடுகிறார்கள்.

பத்திரிகைகளில் கதைகள் வெளியிடுவதற்கு உதவி ஆசிரியர்கள் கதைகளைப் பொறுக்கி எடுக்கிறார்கள். ஏற்கெனவே வெளியான கதை என்பது வாசக நேயர்களுக்குத் தெரியும்போது, உதவி ஆசிரியர்களுக்குத் தெரியாமலா போய்விடும் என்ற கேள்வி எழுகிறது.

ஆம்; உதவி ஆசிரியர்களுக்குச் சில சமயம் தெரியாமல்தான் போய் விடுகிறது. அதற்குத் தகுந்த காரணம் இருக்கிறது. சற்றுப் பிரபலம் அடைந்த பத்திரிகைகளுக்கு நூற்றுக்கணக்கான சிறுகதைகள் புதிய இளம் எழுத்தாளர்களிடமிருந்தும் வழக்கமாக எழுதும் பழைய எழுத்தாளர்களிடமிருந்தும் வாரந்தோறும் வருகின்றன. இவ்வளவையும் உதவி ஆசிரியர்கள் படித்து, வெளியிடத் தகுதியானவற்றைப் பொறுக்கி எடுக்க வேண்டி வருகிறது.

வருஷக்கணக்கில் பார்க்கும்போது இவ்வாறு உதவி ஆசிரியர்கள் படிக்கும் கதைகள் ஆயிரக்கணக்கில் போய் விடுகின்றன.

இவற்றுடன் வேறு பத்திரிகைகளில் வெளியாகும் கதைகளையும் உதவி ஆசிரியர்கள் படிக்க வேண்டியிருக்கிறது.

ஆகவே, எந்தக் கதையைப் படித்தாலும், ‘‘முன்னே எங்கேயோ படித்த மாதிரி இருக்கிறதே!’’ என்று தோன்றுகிறது. சமூகக் கதைகள், குடும்பக் கதைகள், கிராம வாழ்க்கைக் கதைகள் எல்லாவற்றிலும் சில நிகழ்ச்சிகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. சில சமயம் கதைப் போக்கும் ஒன்று போல இருக்கும். எழுதும் முறையிலேதான் வித்தியாசம் இருக்கும்.

வாசக நேயர்களுக்குக் கையெழுத்துப் பிரதிகளைப் படிக்கும் கடமை இல்லை. பத்திரிகைகளிலே அச்சிட்டு வெளியாகும் கதைகளை மட்டும் படிக்கிறார்கள். ஆகையால், அவர்களில் சிலருக்கு இந்தக் கதை, இந்தப் பத்திரிகையில் முன்னமே வந்தது என்பதைத் திட்டமாக உடனே கண்டுபிடிக்க முடிகிறது. உதவி ஆசிரியர்களுக்கு இந்தச் சௌகரியம் கிடையாது.

ஆகையால், கதை எழுதி அனுப்புகிறவர்கள் எல்லாம் சொந்தக் கற்பனையினால் எழுதுகிறார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படை பேரில்தான் அவர்கள் கதைகளைப் பரிசீலனை செய்து பொறுக்க வேண்டியிருக்கிறது.

இந்த நிலைமையில், இரண்டொரு எழுத்தாளர்கள் பழைய கதைகளைப் பெயர்த்து எழுதி அனுப்பி, அவை பிரசுரிக்கப்பட்டுவிட்டால் பத்திரிகையின் நல்ல பெயர் பாதிக்கப்படுகிறது.

இம்மாதிரி நேரிடாமல் தடுக்க ஒரு வழி உண்டு. நன்றாகப் பழக்கமான பழைய எழுத்தாளர்களின் கதைகளையே பிரசுரிப்பது என்று வைத்துக்கொண்டால், வேறு பத்திரிகைகளில் வெளியான பழைய கதைகளையே மீண்டும் பிரசுரிக்கும்படியான நிலைமை ஏற்படாது. ஆகையினாலேதான் சில பத்திரிகைளில் வழக்கமாக எழுதும் எழுத்தாளர்களின் கதைகளே வெளியாகின்றன. இவ்வாறு இரண்டொருவர் செய்யும் முறையற்ற வேலைகள், புதிதாகக் கதை எழுதத் தொடங் கும் இளம் எழுத்தாளர்கள் அனைவரையும் பாதிப்பதாக இருக்கின்றன.

– ஜனவரி 31, 1954 கல்கி இதழிலிருந்து

Posted in blog, Contest, Editor, Fiction, Growing, Kalki, magazine, Notes, Publish, Publisher, Reader, Story, Tips, Tricks, Write, Writers, Youth | Leave a Comment »