கணவர் குறித்து கேள்வி எழுப்பியதும் கண் கலங்கினார் ராதிகா செல்வி
புதுதில்லி, மே 19: மத்திய இணை அமைச்சராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற ராதிகா செல்வியின் கணவரைப் பற்றி ஹிந்தி தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியதை அடுத்து அவர் கண் கலங்கினார்.
வெள்ளிக்கிழமை காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் ராதிகா செல்விக்காக மட்டும் பதவியேற்பு விழா நடந்தது. தனக்காக பிரதமர், முக்கிய அமைச்சர்கள், எம்.பி.க்கள், அதிகாரிகள் என விழா நடப்பதைக் கண்டு அவருக்கு இனம் புரியாத ஓர் உணர்வு உண்டானது.
அவர் பதவியேற்பதைக் காண, தந்தை, தாய், இரண்டு மூத்த சகோதரிகள், அவர்களது குழந்தைகளுடன், ராதிகாவின் மூன்று வயது மகன் ரக்ஷனும் காத்திருந்தார்.
ராதிகாவின் சகோதரியின் மடியில் அமர்ந்திருந்த அவன், தனது தாய் குடியரசுத் தலைவர் அருகில் நின்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும்போது, அவரைப் பார்த்துக் கையைக்காட்டி ஏதோ சொல்ல முயன்றான்.
பதவியேற்பு விழா முடிந்தவுடன் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருடன் நின்று சம்பிரதாய முறைப்படி புகைப்படம் எடுத்துக் கொண்டார் ராதிகா. அதையடுத்து, தேநீர் விருந்து நடக்கும் அரங்கிற்குச் செல்லும்போது, குடியரசுத் தலைவருடன் பேசிக்கொண்டு சென்றார் ராதிகா.
காலை 9.30-க்கு பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அவர், 10.30 மணிக்கு, நார்த் பிளாக் கட்டடத்தில் உள்ள உள்துறை அமைச்சகத்துக்கு வந்தார்.
அங்கு தனது இருக்கையில் அமர்ந்து, பொறுப்பேற்றுக் கொள்வதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். பின்னர், அதே இருக்கையில் அமர்ந்தவாறு தனது மகனையும் மடியில் அமர வைத்து ஆனந்தப்பட்டார். அதைக்கண்டு அவரது பெற்றோர் பெரும் ஆனந்தமடைந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் மரியாதை நிமித்தமாக ராதிகா செல்வி பேசினார். ராதிகாவின் பேட்டியை முடித்துக் கொண்டு வெளியே சென்ற ஹிந்தி தொலைக்காட்சி நிருபர் ஒருவர், மீண்டும் கேமராவுடன் திரும்பி வந்து மைக்கை நீட்டினார்.
“”மேடம், உங்கள் கணவரைப் பற்றி பத்திரிகைகளில் செய்தி வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்று அந்த நிருபர் கேட்டார்.
“”என் கணவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும். அவர் கிரிமினல் என்று எப்படி நீங்கள் சொல்ல முடியும்? எதை வைத்துச் சொல்கிறீர்கள். அவர் அப்படிப்பட்டவராக இருந்திருந்தால் எனது தலைவர் எனக்கு எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்திருப்பாரா? இப்போது என்னை அமைச்சராக்கியிருப்பாரா?” என்று அடுக்கடுக்காக அந்த நிருபரைப் பார்த்துக் கேள்வி எழுப்பிய அவரது கண்கள் குளமாயின.
பட்டப்படிப்பு படித்தவர்
மத்திய உள்துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ராதிகா செல்வியின் சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை.
போலீஸôரால் சுடப்பட்டு இறந்த வெங்கடேஷ் பண்ணையாரின் மனைவி இவர்.
ராதிகா செல்வியின் தந்தை மோகன் ஆறுமுகம், சென்னையில் தனியார் மருத்துவமனையில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். தாயார் தங்கபுஷ்பம். இவர்களது சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டி கிராமம் ஆகும்.
தற்போது சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வரும் ராதிகா செல்வி, பட்டப்படிப்பு படித்தவர்.
வெங்கடேஷ் பண்ணையார் இறந்த பின்பு அரசியலுக்கு வந்த ராதிகா செல்வி, முதன்முறையாக கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ராதிகா செல்விக்கு ரக்ஷன் என்ற 3 வயது மகன் உள்ளார்.
—————————————————————————————–
மத்திய அமைச்சரானார் ராதிகா செல்வி
புதுதில்லி, மே 19: திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.பி. ராதிகா செல்வி, மத்திய இணை அமைச்சராக வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் ராதிகா செல்வி. பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், நிதியமைச்சர் ப. சிதம்பரம், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், எஸ். ரகுபதி, வெங்கடபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.வேலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு, குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் ராதிகா செல்விக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
திமுக எம்.பி.க்கள் குப்புசாமி, கிருஷ்ணசாமி, சுகவனம் உள்ளிட்டோரும், ராதிகா செல்வி குடும்பத்தாரும் கலந்துகொண்டனர். தனது தாய் அமைச்சராகப் பொறுப்பேற்பதை, ராதிகா செல்வியின் மூன்று வயது மகன் ரக்ஷனும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
பொறுப்பேற்பு
காலை 9.30 மணிக்குப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ராதிகா செல்வி, 10.30 மணிக்கு உள்துறை இணை அமைச்சராக, தனது அமைச்சகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா செல்வி, தனக்கு அமைச்சர் பதவி கிடைத்தது எதிர்பாராத சந்தோஷம் என்றும், அந்த வாய்ப்பைக் கொடுத்த முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.