Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for மே 3rd, 2007

Panikkudam – Tamil Magazine Details

Posted by Snapjudge மேல் மே 3, 2007

Thozhi.com

பெண்ணியச் சிந்தனைகளையும் பெண் எழுத்தையும் கலந்து தருகிறது பனிக்குடம் இதழ்

– இளமதி

எண்ணற்ற நாளிதழ்களும் வார, மாத இதழ்களும் வாசிப்புத் தளத்திற்கும் அறிவுத் தளத்திற்கும் வளம் சேர்க்கும் விதமாய்த் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. கலைச் சேவை செய்யப் பிறந்த பத்திரிகைகள்கூட வியாபார ரீதியாக வெற்றி பெறப் பரபரப்பைத் தேடித் தேடி எழுதிக்கொண்டிருக்கின்றன.

இத்தகைய வியாபாரமும் பரபரப்பும் ஒரு புறம். மறுபுறம் உலக இலக்கியத்தைத் தமிழ் மக்களின் இலக்கிய அறிவுக்கு எட்டச் செய்வதற்காகவே தொடங்கப்பட்டு இரண்டு, மூன்று இதழ்களோடு நின்றுபோகும் சிறுபத்திரிகைகள். இவற்றில் சில பத்திரிகைகள் மட்டுமே வியாபாரமயமாகிப்போன இந்தப் பத்திரிகை உலகில் தமது இருப்பை நிலைநிறுத்திக்கொண்டிருக்கின்றன. சில பத்திரிகைகள் படைப்புலகில் நிலைபெறத் தமது நோக்கங்களையும் லட்சியங்களையும் சமரசம் செய்துகொண்டு தொடர்ந்து வெளிவருகின்றன

சிறுபத்திரிகைத் தளத்தில் புதிதாகச் செயல்படும் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை. ஏனென்றால், தனக்கு முன்பாக வந்து நின்றுபோன இதழ்களின் வெற்றியும் தோல்வியும் எந்தத் தயக்கத்தையும் இந்தப் பத்திரிகைக்கு ஏற்படுத்தவில்லை.

இன்றைய சிற்றிதழ்களின் வரிசையில் பனிக்குடம் என்ற காலாண்டிதழ் குறிப்பிடப்பட வேண்டியது. பனிக்குடத்தின் ஆசிரியர், கவிஞர் குட்டி ரேவதி. இது வரை ஆறு இதழ்கள் வெளிவந்திருக்கின்றன.

“பெண் எழுத்தின் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால வடிவங்களைப் பதிப்பிக்கும் முயற்சி”யைப் பனிக்குடம் தொடர்வதாகக் கூறுகிறது இந்த இதழின் ஆசிரியர் குறிப்பு.

பெண் வெளி, பெண்ணியம், பண்போவியம், நேர்காணல், உரையாடல், நூல் அறிமுகம், மதிப்புரை, கவிதை, சிறுகதை, இதழியல் பார்வை, புகைப்படம், ஓவியக் கலைஞர்களின் அறிமுகம் என்று பல்வேறு பகுதிகள் இந்த இதழில் இடம்பெற்றிருக்கின்றன.

புகைப்படம், ஓவியம் என்ற இரண்டு துறைகளிலும் உள்ள பெண் கலைஞர்களைப் பற்றிய அறிமுகப் பக்கம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. இது மேலைநாட்டுக் கலைஞர்களைப் பற்றிய அறிமுகமாக இருக்கிறது. அம்பை, மகாஸ்வேதாதேவி போன்றவர்களுடைய நேர்காணல்களும் குறிப்பிடத்தக்கவை.

இது வரை வந்த இதழ்களில்

 • அம்பை,
 • கமலா தாஸ்,
 • வ. கீதா,
 • க்ருஷாங்கினி,
 • பூரணி,
 • பாமா,
 • சிவகாமி,
 • பிரசன்னா ராமசாமி,
 • கனிமொழி,
 • வெண்ணிலா,
 • சல்மா,
 • உமா மகேஸ்வரி,
 • சுகிர்தராணி,
 • தமிழச்சி,
 • தமிழ்ச் செல்வி,
 • புதிய மாதவி,
 • காயத்திரி காமஸ்,
 • சி.பி. கிருஷ்ணப்பிரியா,
 • குட்டி ரேவதி போன்ற குறிப்பிடத்தக்க படைப்பாளிகள் பங்களித்திருக்கிறார்கள்.

நல்ல நவீன கவிதைகளின் பொருட்செறிவைக் கொண்ட நவீன ஓவியங்களைத் தாங்கிய பனிக்குடத்தின் முன் அட்டைகள் மீண்டும் கவனிக்க வைப்பவை.

பெண் எழுத்தைத் தனது இயக்கக் களமாகக் கொண்டு வெளிவரும் பனிக்குடம் இதழில், ‘இதழியல் பார்வை’ என்னும் பகுதி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் இதழியல் துறையில் (குறிப்பாகத் தமிழ்ப் பத்திரிக்கைகளில்) பங்களித்த பெண் ஆளுமைகள் குறித்த அரிய தகவல்களைத் தருகிறது. நேர்காணல்கள் இடம்பெறும் ‘பண்பாளுமை’ பகுதியில் பெண் படைப்பாளிகள் மற்றும் ஆளுமைகளின் விரிவான வெளிப்பாட்டைக் காண முடிகிறது.

‘பெண்வெளி’ என்ற பகுதியில் சிறப்பான விவாதங்கள், ஆரோக்கியமான உரையாடல்கள் தரப்பட்டிருக்கின்றன. பனிக்குடத்தில் இடம்பெறும் மொழிபெயர்ப்புகளைக் கொண்டு, இந்தப் பத்திரிகை தமிழ்ப் பெண் எழுத்துக்கான வெளியைக் கடந்து பிற மொழி எழுத்துக்குமான வெளியாகவும் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பெண் இலக்கிய உலகிற்குப் பனிக்குடம் குறிப்பிடத் தகுந்த பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கிறது.

பனிக்குடம்
பனிக்குடம் பதிப்பகம்,
பெண்ணிலக்கிய வெளியீட்டாளர்,
137 (54), இரண்டாம் தளம்,
ஜானி ஜான் கான் சாலை,
சென்னை – 14.
விலை: ரூ. 10

Posted in Female, Feminism, Feminist, Journal, Lady, magazine, male, Panikkudam, Panikudam, Read, Tamil, Women, Zine | Leave a Comment »

Understanding & nurturing Kids – Child development

Posted by Snapjudge மேல் மே 3, 2007

Thozhi.com

உங்கள் குழந்தைகளை நன்றாகப் புரிந்துகொள்ள அவர்களின் உணர்வுப் போக்குகளை இனம் காணுங்கள்

– டாக்டர் எஸ். யமுனா

குழந்தை மருத்துவத்தில் குழந்தை வளர்ச்சி என்பது பிரமிப்பூட்டும் ஒரு பிரிவு. அதில் புதிய சிந்தனைகள் வந்தவண்ணம் இருக்கின்றன. உயிரியல், உளவியல், மற்றும் சமூகக் காரணிகளே குழந்தையின் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன என்று சமீப காலங்களில் சொல்லப்படுகிறது.

ஒரு குழந்தையின் வளர்ச்சியின் மீதுள்ள உயிரியல் ரீதியான தாக்கங்களைப் பல காரணிகள் தீர்மானிக்கின்றன. மரபணு உட்பொருள், குரோமோசோம் ஒழுங்குவரிசை, கருவறைக்குள் இருக்கும் சூழல், கர்ப்ப காலத்தின்போது தாய்க்கு ஏற்படும் ஜெர்மன் மீஸில்ஸ் அல்லது ருபெல்லா போன்ற தொற்றுநோய்கள், கர்ப்பத்தால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்; குறைப் பிரசவம், மிகத் துரிதப் பிரசவம் (precipitate labour), நெடுநேரப் பிரசவம் (இதில் குழந்தையின் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவு குறையக்கூடும்) போன்ற நிகழ்வுகள், பிறக்கும்போது குழந்தையின் அழுகை பலவீனமாக இருத்தல் ஆகியவை இந்தக் காரணிகளில் அடங்கும்.

குழந்தைகள், உணர்வுப் போக்குகளுடன் (temperamental traits) பிறக்கின்றன. குழந்தைகள் அன்றாட வாழ்க்கையின் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே இந்த உணர்வுப் போக்குகள். இவை குழந்தைகளுக்குள் ஆழமாகப் பொதிந்திருக்கும். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் குறிப்பிட்ட சில நடத்தைகள் மரபணு அமைப்பினால் வந்தவையே தவிர, தாங்கள் வளர்க்கும் முறையினால் ஏற்பட்டவை அல்ல என்று தெரிந்துகொண்டு ஆறுதல் அடைகிறார்கள்.

பெற்றோர்கள் என்ற முறையில் நமக்கு நம் குழந்தைகளின் உணர்வுப் போக்கைப் பற்றித் தெரிந்திருப்பது அவசியம். உணர்வுப் போக்குகள் ஒன்பது வகைப்பட்டவை.

செயல்பாடு: சில குழந்தைகள் பிறந்ததிலிருந்தே மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் கைகளையும் கால்களையும் வெவ்வேறு விதமாக அசைத்துக்கொண்டிருப்பார்கள். சில குழந்தைகள் பிறந்தது முதல் மிகவும் சோம்பலாக இருக்கிறார்கள்.

ஒழுங்கு: சில குழந்தைகளுக்குப் பசி, தாகம், தூக்கம் எல்லாம் கச்சிதமான ஒழுங்கில் இருக்கும். ஆனால் சில குழந்தைகளுக்கு இந்தத் தேவைகள் வெவ்வேறு நேரங்களில் ஏற்படும்.

அணுகுமுறை: புதிதாக ஒரு பொருள் கொடுக்கப்படும்போது சில குழந்தைகள் உடனே கை நீட்டி வாங்கிக்கொள்கிறார்கள். இன்னும் சில குழந்தைகள் அந்தப் புதிய பொருளை முற்றிலும் தவிர்க்கிறார்கள்.

சூழலுக்கேற்ப மாறும் திறன்: அதே போல, சில குழந்தைகளால் புதிய சுற்றுப்புறத்திற்கு ஏற்ப மாற முடிகிறது. ஆனால் சில குழந்தைகளுக்குப் புதிய இடத்திற்கு ஏற்ப மாற முடிவதில்லை.

எதிர்வினையாற்றுதல்: ஒளி, ஒலி, காற்று, வெப்பம் போன்றவை குழந்தைகளிடம் வெவ்வேறு விதமான எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன. சில குழந்தைகளுக்கு உரத்த ஒலிகள் பிடிக்கும், சில குழந்தைகள் உரத்த ஒலிகளைக் கேட்டால் அலறுகிறார்கள்.

எதிர்வினையின் தீவிரம்: ஊசி போடப்பட்ட பின் சில குழந்தைகள் வெகு நேரம் அழுதுகொண்டிருக்கும். இன்னும் சில குழந்தைகள் சிறிது நேரத்தில் அழுகையை நிறுத்திவிடுகின்றன.

மனநிலையின் தன்மை: சில குழந்தைகள் கலகலப்பாக, உற்சாகமாக, சிநேகமாக இருக்கிறார்கள். ஆனால் சில குழந்தைகள் எப்போதும் ‘உர் என்று’, சோகமாக, உதட்டைப் பிதுக்கியபடி இருக்கிறார்கள்.

கவனம் சிதறும் தன்மை: மின்விசிறி சுற்றும் ஒலி, யாராவது கடந்து செல்வது என்று சுற்றுப்புறத்தில் சிறு சலனம் ஏற்பட்டால்கூட சில குழந்தைகளுக்கு கவனம் சிதறக்கூடும்.

கவனம் நீடிக்கும் காலம்: ஒரு கதையைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது சில குழந்தைகளுக்கு மணிக்கணக்கில் ஆழ்ந்து கேட்க முடிகிறது. ஆனால் சில குழந்தைகளால் எதையும் நீண்ட நேரம் உட்கார்ந்து கேட்க முடிவதில்லை.

குழந்தைகளின் உணர்வு பெற்றோரின் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போனால் இருவருக்கும் இடையிலான மோதல்கள் குறைவாக இருக்கின்றன. இது “Goodness of Fit” எனப்படுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் அதற்கே உரிய உணர்வு என்பதையும் குழந்தைகளை ஒப்பிடக் கூடாது என்பதையும் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

டாக்டர் யமுனா, சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் நல சிறப்பு மருத்துவர். இவரை dryamunapaed@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Posted in Advice, Child, Children, Development, Growth, Kids, Parenting, parents, Tips | Leave a Comment »

Court annuls Turkish presidential elections

Posted by Snapjudge மேல் மே 3, 2007

துருக்கியில் அதிபரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற வாக்கெடுப்பு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு

துருக்கியின் பிரதமர் எர்துவான்
துருக்கியின் பிரதமர் எர்துவான்

துருக்கியில் புதிய அதிபரைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடந்த முதற்சுற்று வாக்கெடுப்பு செல்லுபடியற்றது என்று அரசியல் சட்ட நீதிமன்றம் முடிவானது, ‘’ஜனநாயகத்தின் மீது சுடப்பட்ட ஒரு துப்பாக்கிச் சன்னம்’’ என்று துருக்கியப் பிரதமர் ரெசப் தைப் எர்துவான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

போதுமான அளவுக்கு உறுப்பினர்கள் சமூகமளித்திருக்கவில்லை என்று கூறும் இந்த நீதிமன்றத் தீர்ப்பானது, ஒரு புதிய அதிபரைத் தேர்வு செய்வதை சாத்தியமற்றதாக்கிவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சரான அப்துல்லாஹ் குல் அவர்கள்தான் இந்த தேர்தலின் ஒரேயொரு வேட்பாளராவார். ஆனால் அவர் துருக்கியின் மதசார்பற்ற அரசியலமைப்பை முழுமையாக ஏற்று நடக்கவில்லை என்று கூறும் எதிர்க்கட்சி, இந்த தேர்தலுக்கான முதற் சுற்று வாக்களிப்பை புறக்கணித்திருந்தது.

இந்த முதற்சுற்று வாக்களிப்பு மீண்டும் ஞாயிறன்று நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட, ஜூன் 24 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஆளும் நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சி பிரேரித்துள்ளது.


துருக்கி நாட்டில் அரசியல் சாசனத்தை மாற்ற பிரேரணை

துருக்கி நாடாளுமன்றம்
துருக்கி நாடாளுமன்றம்

துருக்கி நாட்டில் அதிபரை தேர்ந்தெடுப்பதில் உள்ள அரசியல் சிக்கல் நீடிக்கும் நிலையில், அந்த நாட்டின் நாடாளுமன்றம், அதிபரை தேர்தெடுக்க, நாட்டின் அரசியல் சாசனத்தில் திருத்தத்தைக் கொண்டுவர அரசு முன்வைத்துள்ள பிரேரணைகள் குறித்து விவாதித்து வருகிறது.

இந்தப் பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதன் மூலம் அதிபரை தேர்தெடுக்காமல், மக்களே நேரடியாக அதிபரை தேர்தெடுப்பதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலுக்கு அரசின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளாரான அப்துல்லா குல் அவர்கள் இஸ்லாமியத் திட்டங்களைக் கொண்டவர் எனக் குற்றம் கூறி அவர் தேர்வாவதை எதிர்கட்சியினர் தடுத்த பிறகு, அரசு இந்தப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளது.

இவ்வாறாக அரசியல் சாசனத்தை திருத்த, துருக்கியை ஆளும் ஏ கே கட்சிக்கு, இது தொடர்பில் மத்திய வலதுசாரிக் கொள்கையை உடைய சிறிய கட்சியின் ஆதரவு கிடைத்துள்ள போதிலும், தற்போதைய அதிபரின் அனுமதி கிடைப்பதிலோ அல்லது பொதுமக்கள் வாக்கெடுப்பு காரணமாகவோ கால தாமதம் ஏற்படலாம்.


Posted in Court, Elections, Europe, Islam, Muslim, parliament, Party, PM, Politics, Polls, President, Rule, Turkey | 1 Comment »

Warrants of Arrest for the Minister of Humanitarian Affairs of Sudan, and a leader of the Militia/Janjaweed

Posted by Snapjudge மேல் மே 3, 2007

சூடானின் முன்னாள் உள்துறை அமைச்சருக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை

ஜான் ஜாவீத் அமைப்பின் உறுப்பினர் ஒருவர்
ஜான் ஜாவீத் உறுப்பினர் ஒருவர்

சூடானின் டார்பூரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் தி ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதல் தடவையாக பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.

இவற்றில் ஒன்று சூடானின் முன்னாள் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஹரூனுக்கு எதிரானதாகும்.

அவர் மீதான குற்றச்சாட்டின்படி, அவர், ஜன்ஜவீட் தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கினார் என்றும், தனிப்பட்ட முறையில் ஆயுத உதவி செய்தார் என்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்காக அவர்களைத் தூண்டினார் என்று கூறப்படுகிறது.

யுத்த உபாயத்தின் ஒரு பாகமாக பாலியல் வல்லுறவையும் மற்றும் சித்திரவதையையும் வளர்த்ததாகக் கூறப்படும் ஜன்ஜவீட் தளபதிகளில் ஒருவராக வர்ணிக்கப்படும் அலி குசாயிப் அவர்கள் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜன்ஜவீட் அமைப்புடன் தமது அமைச்சர்கள் எவருக்கும் இந்த விதமான தொடர்பும் கிடையாது என்று சூடானிய அரசாங்கம் கூறுகிறது.

இந்த நீதிமன்றத்துக்கு எந்த ஒரு சந்தேக நபரையும் அது கையளிக்காது என்றும் சூடானிய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது


அம்னெஸ்டி அமைப்பின் புகாரை சீனாவும் ரஷியாவும் மறுத்துள்ளன

அம்னெஸ்டி நிறுவனத்தின் சின்னம்
அம்னெஸ்டி நிறுவனத்தின் சின்னம்

சூடானின் டார்பூர், பகுதிக்கு ஆயுதங்களைக் கொடுக்கக் கூடாது என்ற ஐ நாவின் தடையை மீறி, சீனாவும், ரஷ்யாவும் சூடானிய அரசுக்கு ஆயுதங்களை அளித்தன என்று லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக அபயஸ்தாபனமான அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல், கூறியிருந்த புகாரை சீனாவும், ரஷ்யாவும் மறுத்துள்ளன.

டார்பூரில் உள்ள பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தத்தக்க ராணுவ விமானங்களை சூடான் அரசுக்கும், பிற ஆயுதங்களை ஆயுதக் குழுக்களுக்கம் இந்நாடுகள் அளித்ததாக அம்னெஸ்ட்டி கூறியுள்ளது.

ஆனால் சீனா மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சுக்கள் இந்தப் பிரச்சனை தொடர்பாக ஐ நா தீர்மானங்களை தத்தம் நாடுகள் கடைபிடிப்பதாக கூறியுள்ளன.

ஐ நாவுக்கான சூடானிய தூதரும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். திரித்துக் கூறுவதையே வரலாராகக் கொண்ட, ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு தவறான அறிக்கை இது என்று அவர் இதை வர்ணித்துள்ளார்.

Posted in africa, AI, Amnesty, Arms, Arrest, Autocracy, autocrat, Berkshire, Blasts, Bombs, China, crimes, Darfur, defence, Destruction, Exports, Fidelity, genocide, ICC, Janjaweed, Law, Leader, Lord of war, Militants, Military, Militia, Order, Police, Regime, Russia, Soviet, Sudan, Supply, support, Terrorism, UN, USSR, War, Warrants, Warren, Weapons | Leave a Comment »

Raj TV’s new Serials – Mega Soaps

Posted by Snapjudge மேல் மே 3, 2007

ராஜ் டி.வி.யின் புதிய தொடர்கள்

ராஜ் டி.வி.யில் வித்தியாசமான கதையமைப்புடன் கூடிய நான்கு புதிய தொடர்கள் மே 7-ம் தேதி முதல் ஒளிபரப்பாகின்றன. அவற்றின் விவரம்:

மஹாநதி: அபிதா, சந்தோஷி இளவரசன், வசந்த் ஆகியோர் நடித்துள்ள இத்தொடரை சபாபதி தெட்சணாமூர்த்தி இயக்குகிறார். ஒளிபரப்பு நேரம் -இரவு 8 மணி.

மீனாட்சி: தாரிகா, டெல்லிகுமார், மீராகிருஷ்ணன், மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்தொடரை இயக்குபவர் சி.பி.சண்முகம். ஒளிபரப்பு நேரம் -இரவு 8.30 மணி.

ஆறு மனமே ஆறு: சீதா, தீபன் சக்கரவர்த்தி, பிருந்தாதாஸ், சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்தொடரை இயக்குபவர் கே.ரஞ்சித்குமார். ஒளிபரப்பு நேரம் -இரவு 9 மணி.

கெüரவம்: வடிவுக்கரசி, கன்யாபாரதி, ராஜ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்தொடரை இயக்குபவர் அர்.வீ.ரமேஷ்ராஜ். ஒளிபரப்பு நேரம் -இரவு 9.30 மணி.

இத்தொடர்களைக் கண்டு மகிழ்வதோடு மட்டுமல்லாமல், சிறந்த முறையில் விமர்சனம் செய்யும் நேயர்களுக்குப் பரிசுகளும் காத்திருக்கின்றன என ராஜ் டி.வி. நிறுவனம் அறிவித்துள்ளது.

Posted in Abitha, Deeban Chakkaravarthy, Deepan, Monica, Programme, Raj TV, Seetha, Serials, Television, Tharika, TV, Vadivukkarasi | 1 Comment »

Fake encounter: Modi may use case to polarise gujarat voters – The Moral Highs of India’s “Cultural Nationalists”

Posted by Snapjudge மேல் மே 3, 2007

வேலியே பயிரை மேய்ந்தால்…

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இப்போது மீண்டும் அனைவராலும் பேசப்படக் காரணம் – போலி என்கவுன்ட்டர்.

என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சோராபுதீன் மனைவி கசூர் பீவி “எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்’ என்று குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியிருப்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.

99 சதவீத என்கவுன்ட்டர்கள் போலியானவை என்பது “சூரியன் உதிக்கும் திசை கிழக்கு’ என்பதைப்போல அனைவருக்கும் தெரிந்த உண்மை. சில சம்பவங்களில் மனித உரிமை அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாலும்- போலி என்கவுன்ட்டர் என்பது நிரூபிக்கப்பட்டதில்லை. கொல்லப்பட்டவர் பலராலும் அறியப்பட்ட ரெüடி என்பதும், அவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார் என்ற உண்மையும் காவல்துறைக்குச் சாதகமானவையாக அமைந்துவிடுகின்றன.

இப்போதும்கூட, போலி என்கவுன்ட்டரில் சோராபுதீன் சுட்டுக்கொல்லப்பட்டது பெரிய அளவில் பேசப்படவில்லை. அவர் மனைவி கசூர் பீவி கொலைதான் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சோராபுதீன் மீது பல குற்றவழக்குகள் உள்ளன. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் பெரும்பணக்காரர்களிடம் மிரட்டிப் பணம் பெற்றதாக இவர் மீது ஆதாரங்களுடன் வழக்குகள் உள்ளன. ஆனால், அவர் ரெüடி என்பதற்காக சுட்டுக் கொல்லப்படவில்லை. குஜராத் முதல்வரை கொலை செய்யும் திட்டம் வைத்திருந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி என்று 2005 நவம்பரில் கைது செய்யப்பட்டு, பிறகு என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.

அவருடன் பயணம் செய்துகொண்டிருந்த மனைவி கசூர் பீவியைக் காணவில்லை என்று தொடுக்கப்பட்ட வழக்கில், தற்போது அவர் கொல்லப்பட்டிருப்பதாக குஜராத் அரசு சொல்கிறது.

இந்த போலி என்கவுன்ட்டர் தொடர்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சில காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது. இந்த வழக்கில் கசூர் பீவி கொல்லப்பட்டது நிரூபிக்கப்படலாம் அல்லது முடியாமலும் போகலாம். ஆனால் சோராபுதீனை என்கவுன்ட்டரில் கொல்லக் காரணம் என்ன? எந்த உண்மையை மூடி மறைக்க இந்த என்கவுன்ட்டர் நடத்தப்பட்டது, இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது பற்றியும் தீர விசாரித்தால், பல உண்மைகள் தெரியவரும்.

கசூர் பீவி போலி என்கவுன்ட்டருக்கு சாட்சியாக இருந்ததால் அவரையும் கொலை செய்திருக்கலாம் என்ற வாதம் மேம்போக்கானது. என்கவுன்ட்டர் தொடர்பான எதிர்வழக்குகளில் யாருமே வெற்றி பெறவில்லை என்பதால், கசூர் பீவியின் சாட்சி காவல்துறைக்குப் பெரிய விஷயமே இல்லை. எந்த ரகசியங்கள் வெளியில் வரக்கூடாது என்பதற்காக என்கவுன்ட்டரில் சோராபுதீன் கொல்லப்பட்டாரோ அந்த ரகசியங்கள் கசூர் பீவிக்கும் தெரிந்திருக்கக் கூடும்.

போலி என்கவுன்ட்டர்களுக்கு காரணம், பிடிபடும் நபர் வாயைத் திறந்தால் வேறு சில “தேவையில்லாத’ உண்மைகள் வெளியே வரும்; அந்த உண்மையின் வெளிச்சத்தில் பல முக்கியப் பிரமுகர்களின் மெய்த்தோற்றம் தெரியவரும் என்பதால் நிரந்தரமாக வாயடைக்கும் வேலைதான் என்கவுன்ட்டர்.

கொல்லப்படுபவர் ஒரு சமூக விரோதியாக இருப்பதால், என்கவுன்ட்டர் ஒரு சூரசம்ஹாரம் என்பதுபோல மாறிவிடுகிறது. போலீஸ் அதிகாரி நாயகனாகி விடுகிறார். அவருக்கு விருதுகள்கூட கிடைக்கின்றன.

மும்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயா நாயக் என்பவர் 83 ரவுடிகளை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றவர். வருவாய்க்கு அதிகமான சொத்து சேர்த்ததாக பணியிடைநீக்கம் செய்யப்பட்ட இவரது வாழ்க்கை, பல திரைப்படங்களாக பல மொழிகளில் வந்துள்ளது.

காக்கிச் சட்டையில் போலீஸôகவும், அதைக் கழற்றினால் ரெüடியாகவும் மாறுவது திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். நிஜ வாழ்க்கையில் நிலை மாறக்கூடாது.

Posted in abuse, Ayodhya, CD, communal, Court, Cultural, Encounter, Fake, fascist, Gujarat, Hindu, Islam, Law, Modi, Moral, Mosque, Muslim, Nationalist, Nationalists, NDA, Op-Ed, Opinion, Order, Police, Religion, Right, Right-wing, RSS, Society, UP, UPA, Uttar Pradesh, Vote, voters | 2 Comments »

How to stop Corruption using Law and Order – Formation of higher level Committees

Posted by Snapjudge மேல் மே 3, 2007

ஊழலை ஒழிக்க உயர்நிலை அமைப்புகள்

கே.வீ. ராமராஜ்

ஐக்கிய நாடுகள் சபையின் ஊழல் எதிர்ப்பு ஒப்பந்தமானது கடந்த 2005 டிசம்பர் 5 அன்று நடைமுறைக்கு வந்தது. இதற்கு இந்தியாவும் ஒப்புதல் அளித்தது. எனவே ஊழல் ஒழிப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியது இந்தியாவின் முக்கியக் கடமையாகும்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த குழு இந்தியாவில் “லோக்பால்’, “லோக் ஆயுக்தா’ அமைப்புகளை உருவாக்கப் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 • திட்டமிட்ட, உள்நோக்கத்துடன் ஒருவர் தனது பதவி அல்லது தகுதி ஆதாரங்களை நேரடியாகவோ அல்லது
 • மறைமுகமாகவோ சுய லாபத்திற்குத் தவறாகப் பயன்படுத்துவதே ஊழலாகும் என வரையறுக்கப்படுகிறது.
 1. பதவி அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்துதல்,
 2. விதிகள் – சட்டங்கள் – நியதிகள் முதலானவற்றை மீறுதல்,
 3. நடவடிக்கை எடுக்க வேண்டிய பணிகளில் செயல்படாமல் இருத்தல்,
 4. சுயநல நோக்கத்துடன் ஆதாரங்களைத் தேடுதல்,
 5. ஒரு செயலைச் செய்வதற்கு அல்லது செய்யாமல் இருப்பதற்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ பெறுதல்,
 6. பொது நலனுக்கு ஊறு விளைவித்தல் போன்ற வகைகளில் ஊழல் நடைபெறுகிறது.

இத்தருணத்தில் “லோக்பால்’ அமைப்பைக் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதும் அலசி ஆராய்வதும் அவசியமாகும். “லோக்பால்’ அமைப்பானது முதல்முதலாக 1809 ஆம் ஆண்டு ஸ்வீடனில் ஏற்படுத்தப்பட்டது. இம்முறையானது இன்று எல்லா நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பல நாடுகளில் தீவிரமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமை வகித்த நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் 1966 ஆம் ஆண்டு தமது அறிக்கையில் தேசிய அளவில் “லோக்பால்’, மாநில அளவில் “லோக்ஆயுக்தா’ என்ற இரு வகையான லஞ்சத்தை களையும் அமைப்புகளை ஏற்படுத்துவதற்கு நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டுமெனப் பரிந்துரை செய்தது.

இதற்கான மசோதா 1968, 1971, 1977, 1985, 1989, 1996, 1998 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் இன்னும் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் மாநில அளவில்

 • கர்நாடகம்,
 • மத்தியப் பிரதேசம்,
 • ராஜஸ்தான்,
 • பஞ்சாப்,
 • அசாம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் “லோக்ஆயுக்தாக்களை’ ஏற்படுத்தியுள்ளன.

மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையர் அலுவலகமும் பல மாநிலங்களில் “லோக்ஆயுக்தா’ அமைப்பு முறையும் சில மாநிலங்களில் மாநில லஞ்ச ஒழிப்புத் துறைகளும் இயங்கி வருகின்றபோதிலும் இவற்றின் அமைப்பு முறைகளிலும் நடைமுறைகளிலும் அதிகாரங்களிலும் ஒருமித்த தன்மை இல்லை.

இதனால் தேசிய அளவிலும் மாநிலங்களிடையேயும் ஒத்துழைப்பும் தகவல் தொடர்பும் மிக்கதாக உள்ள வகையில் “லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ என்ற இரண்டடுக்கு முறையை நாடாளுமன்றச் சட்டம் மூலம் உருவாக்க வேண்டிய காலம் இதுவாகும். இவ்வமைப்பு முறையை உருவாக்கத் தேவைப்பட்டால் அரசியல்சாசன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளலாமென அரசியல்சாசன மறு ஆய்வு குழு தெரிவித்துள்ளது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

“லோக்பால்’ மூலம் பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசின் உயர் பதவி வகிப்பவர்கள் உள்ளிட்டோர் மீதான லஞ்சக் குற்றச்சாட்டுகளையும் “லோக்ஆயுக்தா’ மூலம் முதல்வர், மாநில அமைச்சர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க வழி செய்வதன் மூலமாக நாடு முழுவதும் லஞ்சத்தை ஒழிப்பதற்கான ஒருமித்த அமைப்பு முறை உருவாகும். இத்தகைய அமைப்பு முறையை உருவாக்க 40 ஆண்டுகளுக்கு முன்பே நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் பரிந்துரைத்தபோதிலும் மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் முழுமையான ஆதரவு இல்லாததால்தான் இம் மசோதா நிறைவேறவில்லையென மாநில “லோக்ஆயுக்தா’ அமைப்புகளின் ஏழாவது மாநாட்டில் மத்தியப் பிரதேச “லோக்ஆயுக்தா’ அமைப்பு தெரிவித்துள்ளது.

“லோக்பால்’ பதவியில் நியமனம் செய்யப்படுபவர் உச்ச நீதிமன்ற நீதிபதி நிலைக்கும் “லோக்ஆயுக்தா’ பதவியில் நியமனம் செய்யப்படுபவர் உயர் நீதிமன்ற நீதிபதி நிலைக்கும் குறையாத தகுதி படைத்தவர்களாக இருக்க வேண்டும்.

தேவைக்கேற்ப மத்தியிலும் மாநிலத்திலும் “உப லோக்பால்’, “உபலோக் ஆயுக்தா’ அமைப்புகளை நியமிக்கலாம். இவர்களை குடியரசுத் தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய குழு நியமனம் செய்ய வேண்டும். இப்பதவிகளில் காலியிடம் ஏற்படும்போது நீண்ட காலம் யாரும் பணியில் அமர்த்தப்படாமல் இருப்பதைத் தடுக்கும் வகையில் காலக்கெடுவும் மாற்றுத் திட்டமும் சட்டத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும். இவர்கள் மீது குற்றம் சுமத்தப்படும் சூழ்நிலை ஏற்படுமானால், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால் கையாளும் விசாரணை முறையைப் பின்பற்றலாம்.

“லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ அமைப்புகள் தன்னாட்சி பெற்றவைகளாக விளங்குவதோடு இவற்றின் நியமனங்களில் அரசியல் தலையீடுகளும் செயல்பாடுகளில் நீதிமன்றக் குறுக்கீடுகளும் இல்லாமல் இருக்க வேண்டும். இவ்வமைப்புகளுக்குத் தக்க அதிகாரங்களும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். இப் பதவியிலிருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு எத்தகைய அரசுப் பணியும் வழங்கப்படக் கூடாது.

மாநிலங்களில் தற்போது உள்ள “லோக்ஆயுக்தா’ அமைப்புகள் தம்மிடம் சமர்ப்பிக்கப்படும் புகார்களின் மீது விசாரணை நடத்தி தமது பரிந்துரைகளை மாநில அரசுக்குத் தெரிவிக்கின்றனர். ஆனால் இப்பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசிடமே எஞ்சியுள்ளது. இதைப்போல உத்தேசிக்கப்பட்டுள்ள “லோக்பால்’ அமைப்புகள் செயல்படக் கூடாது. மாறாக “லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு நீதிமன்றத் தீர்ப்புகளைப் போன்ற சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும். இப் பரிந்துரைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அல்லது உயர் நீதிமன்றத்தில் மட்டுமே மேல் முறையீடு செய்யும் வகையில் புதிய சட்டம் இருக்க வேண்டும். தம்மிடம் தாக்கல் செய்யப்படும் முறையீடுகள் மீது ஓராண்டுக்குள் தீர்வு காண சட்டத்தில் கால நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது மத்திய அரசின் கடமையாகும்.

வேலியே பயிரை மேய்வதுபோல அரசு மற்றும் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் சிலர் கடமையைச் செய்யாமல் இருப்பதாலும் பிறர் கடமைகளில் குறுக்கிடுவதாலும் அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்துவதாலும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. நேர்மையான அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும் தவறு செய்பவர்களை இனம் காண உதவ வேண்டும்.

லஞ்சத்தைக் களைய வேண்டுமாயின் லஞ்சம் கொடுப்பதை நிறுத்தினாலே போதுமானது. நாடு தன்னிறைவு அடையவும் வல்லரசாக மாறவும் நாம் கனவு காணும்போது லஞ்சத்தை ஒழிக்க “லோக்பால்’ போன்ற அமைப்புகளை நம் நாட்டில் இன்னும் உருவாக்காமல் காலதாமதம் செய்வது சரியல்ல. மேலும் லஞ்ச லாவண்யமற்ற அரசைப் பெறும் உரிமை நாட்டின் குடிமக்களுக்கு உண்டு என்றால் மிகையல்ல.

சரியான பணிகளை முடிப்பதில்கூட அரசு அலுவலகங்களில் ஏற்படும் கால தாமதம் ஊழலுக்கு வழி வகுக்கிறது. ஆட்சி நிர்வாக அமைப்பில் எந்தவொரு நிலையிலும் ஊழல் என்ற பேச்சுக்கே இடம் இருக்கக்கூடாது என்பதே நல்லாட்சித் தத்துவம்.

முதலாவது நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரையை போலவே இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த குழுவின் பரிந்துரையை மத்திய அரசு கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பொதுமக்களும் தன்னார்வ அமைப்புகளும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.

(கட்டுரையாளர்: ஒசூர் நகர வழக்கறிஞர்.)

—————————————————————————————-

நிர்வாகத்தில் பொறுப்புணர்வு!

கே. ராமமூர்த்தி
“”நிர்வாகத்தில் பொறுப்புணர்வு” என்பது இப்போது பரவலாகப் பேசப்படும் விஷயம். அரசு நிர்வாகத்தின் மீது இப்போது பொதுவாகவே எல்லோருக்கும் அதிருப்தி நிலவுகிறது; அத்துடன் ஜனநாயக உரிமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருப்பதால் இந்த விஷயம் முக்கியத்துவம் பெறுகிறது.

“மேலை நாட்டவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் பொறுப்புணர்வு; அலுவலகத்திலோ, நிர்வாகத்திலோ உங்களுடைய நிலை எதுவாக இருந்தாலும் உங்களுடைய வேலைக்கு நீங்கள்தான் பொறுப்பு. இந்தியாவிலோ, உயர் பதவியில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு பொறுப்பு குறைவு!

மத்திய அரசில் முக்கிய பதவியில் இருந்த மூத்த அமைச்சர் ஒருவர் வெளிப்படையாகக் கூறினார், “”வருமான வரி செலுத்த வேண்டும் என்பதையே நான் தொடர்ந்து 10 ஆண்டுகளாக மறந்துவிட்டேன்” என்று. அதற்குப் பிறகும் தண்டனை, நடவடிக்கை ஏதும் இல்லாமல் அவர்பாட்டுக்கு செயல்பட்டு வந்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட அரசுத்துறை நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும், ஒரு தலைமை நிர்வாகிமீது கூட இங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதே இல்லை!

அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதாலேயே, அரசியல் சட்டத்தில் அதற்கு உரிய ஏற்பாடுகளை நமது முன்னோர் செய்துள்ளனர்.

நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்ட அரசாங்கம் என்பதே அதிகபட்ச திறமை, அதிகபட்ச பொறுப்புணர்வு ஆகியவற்றுடன் நிர்வாகத்தை நடத்தவேண்டும் என்பதற்காகத்தான். அரசின் வரவு, செலவுகளை ஆராய்ந்து நாட்டு மக்களுக்கும் தெரிவித்து, அரசையும் தட்டிக்கேட்கத்தான், “”தலைமைக் கணக்கு – தணிக்கையாளர்” என்ற உயர் கண்காணிப்புப் பதவி அரசியல் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றம் என்பது பொதுக்கணக்குக்குழு என்ற அமைப்பைக் கொண்டு இதே பணியைச் செய்கிறது. அதற்கு தலைமைக் கணக்கு தணிக்கையாளர் நண்பனாய், நல்லாசிரியனாய், வழிகாட்டியாய் செயல்படுகிறது.

“நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் செலவுகள் முறையாகச் செய்யப்படுகின்றனவா, திட்டங்கள் ஒழுங்காக நிறைவேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க பொதுக் கணக்குக்குழுவுடன், மதிப்பீட்டுக் குழு, அரசின் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும் குழு போன்றவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அரசுத்துறை நிறுவனங்களின் பொறுப்புணர்வை உறுதி செய்ய, கம்பெனிகள் சட்டத்தில் 1956-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. உள்ளாட்சி மன்றங்களைப் பொருத்தவரை சிறப்பு தணிக்கை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நிர்வாகமே தனது ஊழியர்களின் பொறுப்புணர்வைச் சோதிக்கவும், மேம்படுத்தவும் அக அமைப்புகளையும் வழி முறைகளையும் கொண்டுள்ளது. புற ஏற்பாடாக, பொதுமக்களுடன் தினமும் குறிப்பிட்ட நேரங்களில் சந்திப்பு, புகார்-ஆலோசனைகளைப் பெறுவதற்கான நேரடி சந்திப்புக் கூட்டங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது.

அரசு நிர்வாகத்தின் உள்ளேயும் வெளியேயும் இத்தனை ஏற்பாடுகள் இருந்தபோதும், அரசுத்துறையிலும் அரசு நிறுவனங்களிலும் யாருமே பொறுப்பானவர்கள் இல்லை என்ற எண்ணம்தான் மக்களிடம் வலுத்திருக்கிறது.

ஒரு வேலையை எடுத்தால் குறிப்பிட்ட நேரத்துக்குள் அதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற உணர்வு ராணுவத்தில்தான் அதிகமாக இருக்கிறது; நீதித்துறையில்தான் அது மிகமிகக் குறைவாக இருக்கிறது. இதில் அதிகாரக் கட்டமைப்பு மட்டும் இந்த வேறுபாட்டுக்குக் காரணம் அல்ல, அமைப்பு ரீதியாகவே செய்துள்ள ஏற்பாடும், நிர்வாக நடைமுறைகளும்தான் இதற்கு முக்கியக் காரணம்.

நிர்வாகத்தைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் உள்ள ஏற்பாடுகள் அனைத்தும் “”பெயரளவுக்குத்தான்” செயல்படுகின்றன என்றே மக்கள் கருதுகின்றனர். தவறுகளையும் தாமதத்தையும் தண்டிக்கவோ, கண்டிக்கவோ, திருத்தவோ நிர்வாகத்தில் எந்தவித ஏற்பாடும் இல்லை என்பதே அவர்களுடைய மனக்குமுறல்.

நிர்வாகத்தைக் கண்காணிக்கும் அமைப்புகளின் செயல்பாட்டில் பளிச்செனத் தெரியும் அம்சங்கள் இரண்டு.

பொறுப்பாக்குவதும் தணிக்கை செய்வதும், சம்பவம் நடந்து முடிந்த பிறகு தரும் ஆய்வறிக்கையாகவே இருக்கின்றன. எனவே, தவறு நடந்துவிடுகிறது அல்லது உரிய காலத்தில் நடைபெறாமல் மிகவும் தாமதமாக நடக்கிறது. இதற்குக் காரணமானவர்களை அல்லது தவறு செய்தவர்களை அடையாளம் கண்டு தண்டிப்பதற்குக்கூட நீண்ட காலம் பிடிக்கிறது.

ஒரு செயலுக்கு யார் பொறுப்பு என்பதை அறிய, மறைமுகமாக கேள்விகளைக் கேட்பதும், அதையும் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களைக் கேட்காமல் -அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்களைக் கேட்பதாகவும் இருக்கிறது.

இந்தியாவில் பொது நிர்வாகத்தின் மீது நாடாளுமன்றத்துக்கு உள்ள கட்டுப்பாடு குறித்து 1952-1966 வரை மேற்கொண்ட ஆய்விலிருந்து பெறப்பட்ட தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

“”அரசியல்சட்டப்படி, அரசு நிர்வாகத்தின்மீது நாடாளுமன்றத்துக்கு முழு கட்டுப்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. நடைமுறையில் அப்படி ஏதும் இல்லை. அப்படியே அதற்கு அதிகாரம் இருந்தாலும் அதை அமல் செய்யும் உள்ள உறுதி அதனிடம் இல்லை.

இதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. நிர்வாகத்தை முழுமையாக ஆராய்ந்து, தவறுகளைக் கண்டுபிடித்து, உரிய திருத்த நடவடிக்கைகளையோ, தண்டனை நடவடிக்கைகளையோ எடுக்க நாடாளுமன்றத்துக்கு அவகாசம் இல்லை. நீண்ட நேரம் அமர்ந்து பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை ஆராயவோ, விவாதிக்கவோ அவை உறுப்பினர்களுக்கு ஆர்வம் இல்லை. அவையின் கூட்ட நேரத்தை அதிகப்படுத்த அரசுக்கும் விருப்பம் இல்லை. அவை நடவடிக்கைகளில் உறுப்பினர்களுக்கு ஆர்வம் குறைவு; இதனாலேயே பல நேரங்களில் அவையில் குறைந்தபட்ச (மொத்த உறுப்பினர்களில் 10 சதவீதம்) “”கோரம்” கூட இல்லை என்று மணி அடிக்கப்படுகிறது. பெரும்பாலான உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பயிற்சியோ, அரசியல் விழிப்புணர்வோ, நிர்வாகத்தை நாடாளுமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஆர்வமோ கிடையாது.

நிர்வாகத்தின் நெளிவுசுளிவுகளைத் தெரிந்துகொண்டு அதன் செயல்களை ஆராய்ந்து குறைகளைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பலருக்குக் கிடையாது. நிர்வாகத்தின் பிரச்னைகள், அமைப்புமுறை, நிர்வாக நடைமுறை போன்றவை பெரும்பாலான உறுப்பினர்களுக்குத் தெரியாது. பெரும்பாலானவர்களுக்கு சுயேச்சையான சிந்தனை உணர்வும் கிடையாது. இந்த அறிக்கை வந்து 40 ஆண்டுகள் ஆனபிறகும் கூட, நிலைமை பெருமளவுக்கு மாறிவிடவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல்படி செய்யப்படும் தொகுதி வளர்ச்சி நிதி என்ற செலவினத்தை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். 1993-ல் தலா ரூ.5 லட்சம் என்று மொத்தம் ரூ.37.5 கோடி ஒதுக்கப்பட்டது. 1994-ல் தலா ரூ.1 கோடி என்று உயர்த்தப்பட்டு ரூ.790 கோடியானது. பிறகு அதுவே ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டு ரூ.1,500 கோடியானது. இதே திட்டம் சட்டமன்றங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு ரூ.1,500 கோடியானது. இந்த திட்டங்களிலும் இறுதிப்பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டதில் 25% தான் போய்ச் சேருகிறது என்று தெரியவருகிறது.

இந்த நிலைமாற பின்வரும் பரிந்துரைகளைப் பரிசீலிக்கலாம்:

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இதற்கு முரணாக உள்ள, அரசு ரகசியங்கள் காப்புச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். பொதுமக்கள் தகவல் அறியும் சட்டம் வலுப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும். ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்ட உடனேயே அது உருவான விதம், அதற்காக முதலில் மதிப்பிடப்பட்ட தொகை, செலவழிக்கப்பட்ட தொகை, அடைந்த பயன், திட்டம் தோல்வியா, வெற்றியா, சாதகம் அதிகமா பாதகம் அதிகமா என்பதைத் தொகுத்து மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

நிர்வாக நடுவர் மன்றம் போன்றவை வலுப்படுத்தப்பட்டு, விரைவாக நீதி வழங்கப்பட வேண்டும். மனித வள மேம்பாட்டை அளக்கும் வழிமுறையைப் பின்பற்றி, ஒவ்வொரு சமூக நலத் திட்டத்தின் வளர்ச்சியையும் அளக்க வேண்டும். அரசு என்ற அமைப்புக்குப் பதிலாக, சமூகம் என்பதை ஊக்குவித்து அவர்களின் நன்மைக்கான திட்டங்களை அவர்களைக் கொண்டே அமல்படுத்தும் நவீன முறையைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.

காலாவதியாகிவிட்ட திட்டங்களையும் நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவர தனிச்சட்டம் இயற்ற வேண்டும். ஆம்புட்ஸ்மேன், லோக்பால் என்பது வெறும் புகார்களைப்பெறும் அமைப்பாக நின்றுவிடாமல், நிர்வாகத்தினரைப் பதில்சொல்ல வைக்கும் அமைப்பாகச் செயல்பட வலுப்படுத்தப்பட வேண்டும். பொறுப்பாக்குதல் என்ற பெயரில் அரசு நிர்வாகப்பணியாளர்களின் செயல்பாட்டுச் சுதந்திரம், திறமை, நேர்மை, நியாயமான அணுகுமுறை ஆகியவற்றை நசுக்கும்படியான கட்டுப்பாடுகளைத் திணித்துவிடக்கூடாது.

(கட்டுரையாளர்: உறுப்பினர் – மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம்.)

———————————————————————————————-

ஊழல், திறமையின்மை, நிர்வாகச் சீர்கேட்டை சகித்துக் கொள்ளும் மனப்பான்மை: ப.சிதம்பரம் வேதனை

திண்டுக்கல், ஜூலை 10: ஊழல், திறமையின்மை, நிர்வாகச் சீர்கேடுகள் ஆகியவற்றை சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டதுதான் நம்முடைய மிகப் பெரிய தோல்வி என மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வேதனை தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் 25-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் திங்கள்கிழமை அவர் ஆற்றிய உரை:

கடந்த 3 ஆண்டுகளாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.5 சதவிகிதத்துக்கும் கூடுதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பொருளாதாரம் குறித்து உலக நாடுகள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளன. ஆனால், நமது மக்களிடம் எப்படி இந்த நம்பிக்கையை ஏற்படுத்துவது என்பதுதான் அனைவரிடமும் உள்ள முக்கியக் கேள்வி.

உலகமயமாக்குதலின் பயன்கள் கிராமப்புற இந்தியாவையும் சென்று அடைந்திருப்பது தெளிவு. பல்வேறு நிறுவனங்கள் நடத்தியுள்ள கருத்துக் கணிப்புகளில் இந்தியாவின் ஏழ்மை விகிதம் கிராமப்புறங்களில் 37.3 சதவிகிதத்தில் இருந்து 28.3 சதவிகிதமாகக் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதேபோன்று வேலைவாய்ப்பும், குறிப்பாக மகளிர் வேலைவாய்ப்பு கிராமப்புறங்களில் அதிகரித்து இருப்பதும் புள்ளிவிவரங்கள் மூலம் தெளிவாகி உள்ளது.

கிராமப்புறங்களில் வளர்ச்சி இருந்தாலும், அது உணரும்படியாக இல்லாததற்குக் காரணம் மாற்றம் மிக மெதுவாக நடைபெற்று வருவதுதான். வளர்ச்சியை வேகப்படுத்துவதுதான் நம்முன் இருக்கும் சவாலாகும். இதற்கு முக்கியமாக கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள், நல்ல கல்வி, கூடுதலான வருவாய் ஆகியவை வழங்கப்பட வேண்டும்.

இந்திய கிராமங்களில் குறைவான தொழில் முதலீடு, குறைந்த தொழில்நுட்ப வசதி, சந்தையை தொடர்பு கொள்வதில் உள்ள சிரமங்கள் ஆகியவைதான் தடைக்கற்களாக உள்ளன.

ஒதுக்கப்பட்ட கோடிகள் எங்கே?

 • கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 7 லட்சம் கிராமங்களுக்காக ரூ. 1.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ. 88 ஆயிரம் கோடியும்,
 • குடிநீர் வசதிக்காக ரூ. 21 ஆயிரம் கோடியும்,
 • தரிசு நில மேம்பாட்டுக்காக ரூ. 5 ஆயிரம் கோடியும்,
 • பின்தங்கிய பகுதிகளை முன்னேற்றுவதற்காக ரூ. 6,700 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சராசரியாக இதன் மூலம் 7 லட்சம் கிராமங்களுக்கும் தலா ரூ. 17 லட்சம் கிடைத்திருக்க வேண்டும். இதன் மூலம் பள்ளி, குடிநீர் வசதி, கிராமச் சாலைகள் எளிதாக ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், உண்மையில் அவ்வாறு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் என்ன? பதில் கிடைக்க வேண்டும்.

கிராமப்புற இந்தியாவுக்கு முக்கியத்துவம் வழங்கி பாரத் நிர்மாண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 1.74 லட்சம் கோடி செலவில் 2009-ம் ஆண்டுக்குள் இத் திட்டத்தின் இலக்குகளை நிறைவேற்றப் பாடுபடுவோம்.

இத் திட்டத்தின் மூலம் கூடுதலாக நீர்ப்பாசன வசதியுடன் ஒரு கோடி ஹெக்டேர் பயிர் நிலத்தை உருவாக்கவும், 1,000 பேருக்கு மேல் வசிக்கும் கிராமங்களுக்கு இணைப்புச் சாலை வழங்கவும், 60 லட்சம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரவும் இன்னும் குடிநீர் வசதி பெறாத 74 ஆயிரம் குடியிருப்புகளுக்குக் குடிநீர் வசதி செய்து தரவும், மின் இணைப்பு இல்லாத 2.3 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கவும், தொலைபேசி வசதி இல்லாத 66,822 கிராமங்களுக்குத் தொலைபேசி வசதி செய்து தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நமது தவறுகள்

சாலைகளைப் போடுகிறோம். ஆனால், அவற்றைப் பராமரிக்க நிதி ஒதுக்குவதில்லை. மின்சாரத்தை வழங்குகிறோம். ஆனால், மின் திருட்டைத் தடுக்கவோ, மின்சாரக் கட்டணத்தை வசூலிக்கவோ தவறுகிறோம். வீடுகளைக் கட்டித் தருகிறோம். ஆனால், அவை குடியிருப்பதற்கு தகுதியில்லாத அளவுக்குக் கட்டப்படுகின்றன.

நீர்ப் பாசனத் திட்டங்களை உருவாக்குகிறோம். ஆனால், அதில் மக்கள் பங்களிப்பு இல்லை.

எல்லாவற்றையும்விட நாம் ஒதுக்கும் நிதியை தவறாக செலவிடுபவர்கள் மற்றும் முறைகேடு செய்பவர்களைக் தண்டிப்பதில்லை. அதோடு ஊழல், நிர்வாகச் சீர்கேடு மற்றும் திறமையின்மை ஆகியவற்றை சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டோம்.

புதிய நிர்வாக முû

மாநில அரசு என்பது மிகப் பெரிய நிர்வாகம் ஆகவும், ஊராட்சி மிகச் சிறிய நிர்வாகமாகவும் இருப்பதால் இடைப்பட்ட ஒரு நிர்வாகம் தேவை. எனவே ஒவ்வொரு 10 லட்சம் மக்கள்தொகைக்கும் ஒரு மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். இதற்கான 10 உறுப்பினர்களை மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். கல்வி, சுகாதாரம், சாலைகள், குடிநீர் போன்ற அனைத்துத் துறைகளையும் மாவட்ட நிர்வாகம் கவனிக்கும். தேவைப்படும் நிதியை அரசு ஒதுக்கும். இதை நடைமுறைப்படுத்த அரசியல் சட்டத் திருத்தம் தேவையில்லை.

மத்திய, மாநில அரசுகள் தங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள முன்வந்தால் போதும் என்றார் அமைச்சர் ப. சிதம்பரம்.

—————————————————————————————————————————

ஊழல் விசாரணை பணிகளுக்கும் “அவுட் சோர்சிங்’ மகாராஷ்டிராவில் புரட்சி

மும்பை: நிறுவனங்கள், வங்கிகள் உட்பட பல நிறுவனங்களும், தங்கள் பணிகளில் சிலவற்றை இன்னொரு நிறுவனத்திடம், ஒப்படைத்து, “அவுட் சோர்சிங்’ முறையில் செய்து கொள்வதை பார்த்திருக்கிறோம்; ஆனால், அரசு ஊழியர் நடத்தை, ஊழல் குறித்து விசாரிக்கும் பொறுப்பை, “அவுட் சோர்சிங்’ முறையில் செய்து கொள்வது பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம், இப்படி ஒரு புரட்சியை செய்துள்ளது மகாராஷ்டிர அரசு.

இதனால், ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை கொந்தளித்துள்ளனர். இந்த அமைப்பு, முழு சுதந்திரமாக இயங்கும். ஓய்வு பெற்ற துணை கலெக்டர் தலைமையில் இயங்கும். அவருக்கு உதவ, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் நியமிக்கப்படுவர். அவர்களுக்கு சம்பளம் தரப்படும். இந்த அமைப்பிடம், எல்லா துறையைச் சேர்ந்த ஊழியர்களின் விவகாரங்களும் ஒப்படைக்கப்படும். அதை விசாரித்து, அரசின் ஊழியர் நலத்துறைக்கு அறிக்கையை அனுப்பிவிடும். அதன் பேரில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த அமைப்பு உருவாக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை, ஊழியர் நலத்துறை வெளியிட்டவுடன், ஊழியர்கள் பலரும் கொதித்தனர். “அரசுக்கு தொடர்பே இல்லாத மாஜி அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தினால், நியாயம் கிடைக்காது. மேலும், ஊழல் தான் அதிகரிக்கும்’ என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், ஊழியர்கள் சொல்வதை ஏற்க அரசு தயாரில்லை. பல துறைகளில் உள்ள விசாரணை பிரிவுகளை அரசு கலைத்துவிட்டது. “ஊழியர்கள் பற்றிய எந்த ஒரு விசாரணையும் புதிய அமைப்பிடம் தான் ஒப்படைக்க வேண்டும்’ என்று துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

——————————————————————————————————-
தூய்மையாகுமா பொதுவாழ்க்கை?

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

“”முறையற்ற செயல்களை மேற்கொண்டு குடிமக்களை வருத்தும் அரசன் கொலைகாரர்களைவிட கொடியவன்.” – என்ற குறட்பாவின்படி ஆட்சியாளர்களுடைய நேர்மையின் கீழ்தான் நாடு நலம் பெறும்.

ஆளவந்தவர்களும் நிர்வாகத்தில் இருப்போரும் மக்களுக்குப் புகார் அற்ற தூய்மையான ஆட்சியை வழங்க வேண்டும்.

இன்றைக்கு பொது வாழ்க்கையில் ஆரோக்கியமற்ற சூழல் நிலவுகிறது. ஆட்சிக்கு வந்தவர்கள் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றும் தங்களால், தங்களுக்காக ஆளப்படுகின்ற ஆட்சி என்ற நோக்கிலும் அரசை நடத்துகின்றனர்.

இந்த அவலப்போக்கை மாற்ற லோக்பால் மசோதா 1968, 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்ட வடிவம் ஆகாமல் நின்றுபோனது. ஆனால் ஒப்புக்கு நாடாளுமன்றத்தில் பலமுறை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊழலின் ஊற்றுக்கண்ணாக மேல்தட்டில் இருக்கின்றவர்களையும் தட்டிக் கேட்கின்ற மசோதா இன்றைய சூழலில் அவசியம் தேவை. பொது வாழ்வில் தூய்மையை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான அரசியல் வளரவும் இம்மசோதா வழிசெய்யும்.

பங்குபேர ஊழல், சர்க்கரைப்பேர ஊழல், டெலிகாம் ஒப்பந்த ஊழல், ஹவாலா ஊழல் என்று தொடங்கி இந்தியாவில் சர்வநிலையிலும் புரையோடிவிட்டது.

பிகாரில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது கூறப்பட்ட ரூ. 950 கோடி தீவன ஊழல் இந்தியாவையே ஆட்டி வைத்தது.

முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் மருமகளுக்கு சட்டத்திற்குப் புறம்பாக பெட்ரோல் விற்பனை நிலையங்களை சதீஷ் சர்மா ஒதுக்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு நீதிமன்றம் மூலம் உண்மை எனத் தெரியவந்தது. இன்று சரத்பவார் மீது கோதுமை இறக்குமதி ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்திய வரலாற்றில் ஊழல்கள் தொடர் கதையாக இருக்கின்றன. பஞ்சாப் மாநில அன்றைய முதல்வர் பிரதாப் சிங் கைரான் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நேரு பிரதமராக இருந்தபோது அதுபற்றி விசாரிக்க எஸ்.ஆர். தாஸ் கமிஷன் அமைக்கப்பட்டது.

1958-ஆம் ஆண்டு பெரோஸ் காந்தி மக்களவையில் முந்திரா ஊழல் பிரச்னையை கிளப்பினார். ரூ. 1.25 கோடி மதிப்புள்ள பங்குகளை ஆயுள் காப்பீட்டுக் கழகம் முறைகேடாக விற்பனை செய்தது சம்பந்தமாக ஊழல் குற்றச்சாட்டை பெரோஸ் காந்தி பேசினார். இது சம்பந்தமாக ஆவணங்களை மக்களவையில் வைக்கும்படி வேண்டி அன்றைய மக்களவைத் தலைவர் அனந்தசயன அய்யங்காரிடம் கோரினார். ரகசியக் கோப்புகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அய்யங்கார் முந்திரா ஊழல் சம்பந்தமான ரகசியக் கோப்புகள் அனைத்தையும் அவையில் வைக்கும்படி தீர்ப்பு வழங்கினார்.

இதன் பின்பு, பண்டித நேரு ஆணையின் பேரில் அன்றைய பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம்.சி. சுக்லா இதுகுறித்து விசாரணை நடத்தினார். இறுதியில் பங்கு பேர ஊழலில் முந்திரா சம்பந்தப்பட்டுள்ளார் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக அன்றைய நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி பதவியில் இருந்து விலகினார். அம்மாதிரி கிருஷ்ணமேனன் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பிரதாப் சிங் கைரோனுக்குப் பிறகு பக்ஷி குலாம் முகமது மீதும், 1957-ல் கேரளத்தை ஆண்ட கம்யூனிஸ்ட் அரசு, ஆந்திரத்திலிருந்து அரிசி வாங்கப்பட்ட ஊழல் முதல் இன்றைக்கு ஆட்சியில் உள்ளவர்கள் வரை செய்த ஊழல்களை ஒரு நீண்ட பட்டியலாக இடலாம்.

புகழ்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வி. காமத் மூன்றாவது மக்களவையில் சி.பி.ஐ. அறிக்கையின் அடிப்படையில் சீராஜின் ஊழலை அம்பலப்படுத்தினார். ஐந்தாவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய வணிகத் துறை அமைச்சர் எல்.என். மிஸ்ரா ஏற்றுமதி உரிமம் வழங்கியதில் ஊழல் செய்துள்ளார் என்ற பிரச்னை எழுப்பப்பட்டது. அன்றைய மக்களவைத் தலைவர் ஜி.எஸ். தில்லான், இது சம்பந்தமான ரகசிய ஆவணங்களைப் பார்வையிட அனுமதி வழங்கினார். இறுதியில், இந்தப் பிரச்னையில் ஊழல் நடந்தது என்று நாடாளுமன்றம் உறுதிபட கூறியது.

பாரத ஸ்டேட் வங்கியில் நடந்த நகர்வாலா ஊழலை அனைவரும் அறிவார்கள். ரூ. 60 லட்சம் தில்லி நாடாளுமன்றத் தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு வேண்டப்பட்டவர் என்ற காரணத்தினால் அந்த வங்கியின் அதிகாரி மல்கோத்ரா மூலம் வழங்கப்பட்டது என்ற பிரச்னை நாடு முழுவதும் எதிரொலித்தது.

இந்தச் சூழலில் நகர்வாலா மர்மமாக இறந்துவிட்டார். இந்தக் கிரிமினல் வழக்கு 32 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. யார் குற்றவாளி என்று இதுவரை நீதிமன்றம் தீர்ப்பு தரவில்லை என்பது வேதனையான செய்தி ஆகும். அந்தப் பணம் கொடுத்த வங்கி அதிகாரி மல்கோத்ரா கைது செய்யப்பட்டு பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சஞ்சய் காந்தியின் மாருதி கார் தொழிற்சாலையில் பணியில் அமர்த்தப்பட்டார்.

ஐந்தாவது மக்களவையில் மாருதி கார் ஊழல் சம்பந்தமாக பல சட்ட விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டது என நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இந்தப் பிரச்னை சம்பந்தமான விவரங்களைத் தொழில் அமைச்சகம் மக்களவையில் வைக்கவிடாமல் தடுத்தது என்ற குற்றச்சாட்டு அன்றைய இந்திரா காந்தி மீது சுமத்தப்பட்டது. அவசர நிலை காலத்தில் ஊழல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்கு ஷா கமிஷன் அமைக்கப்பட்டது.

ஏ.ஆர். அந்துலே, “”இந்திராகாந்தி அறக்கட்டளை அமைப்புக்கு’ பணம் வசூல் செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இது சம்பந்தமான ஆவணங்கள் மக்களவையில் வைக்கப்பட்டது. இறுதியாக நீதிபதி லின்டன் தீர்ப்பின்படி மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து அந்துலே விலகினார்.

பரபரப்பான போபர்ஸ் ஊழல் நாடாளுமன்றத்தில் பிரதிபலித்தது. இதனால் ராஜீவ் காந்தி தலைமையில் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசை மக்கள் அகற்றினார்கள். இந்த பேரத்தில் அவர் ரூ. 64 கோடி கமிஷனாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. ஒன்பதாவது மக்களவையில் தேசிய முன்னணி அரசு ஆட்சியில் இருந்தபோது போபர்ஸ் சம்பந்தமான முதல் தகவல் அறிக்கை வழங்கப்பட்டது.

போபர்ஸ் ஊழல் விசாரணை முடிவுறாத நிலையில் இன்றைக்கும் நிலுவையில் உள்ளது. குவாத்ரோச்சியை ஆட்சியில் உள்ளவர்கள் தற்போது பாதுகாக்கின்ற நிலை.

செயிண்ட் கிட்ஸ் பிரச்னை, வீட்டு வசதி ஊழல், ஜெ.எம்.எம். ஊழல், யூரியா இறக்குமதி ஊழல், ஹெக்டே மீது கர்நாடகத்தில் நில மோசடி குற்றச்சாட்டு என ஊழல்கள் பட்டியலும் நீண்டு கொண்டுள்ளன.

10-வது மக்களவையில் பங்கு வியாபாரி ஹர்ஷத் மேத்தா நேரிடையாக பல அரசியல் தலைவர்களிடம் பணம் கொடுத்தேன் என்று கூறினார். இறுதியாக, இது சம்பந்தமாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு விடப்பட்டது. இப் பிரச்னை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

சர்க்கரை பேர ஊழல், டெலிகாம் ஊழல் விவகாரம் போன்றவை கடுமையாக நாடாளுமன்றத்தில் பேசப்பட்டன. இது சம்பந்தமாக, அன்றைய அமைச்சர் சுக்ராம் டெண்டர்களை கடைசி நிமிடத்தில் மாற்றி ஊழல் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அரசுக்கு ரூ. 20,000 கோடி இழப்பு ஏற்பட்டது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து பெரும் புள்ளிகளும், தொழிலதிபர்களும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களாக 5729 நபர்கள் அடங்கிய பட்டியல் இருக்கிறது. இன்றும் அந்த ரகசியப் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தவறு செய்யும் ஆட்சியாளர்களை விசாரிக்க “லோக்பால்’ போன்ற அமைப்பு தேவை என வலியுறுத்தப்பட்டது. 1960-ம் ஆண்டு கே. சந்தானம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஊழல்கள் அதிகமாகிப் பரவி வருவதைப்பற்றியும் அதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் அரசுக்குப் பரிந்துரை செய்தது.

அதனடிப்படையில் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தக் குழுக்கள் அனுமந்தையா, வெல்லோடு உன்னிநாதன், மாத்துர் போன்றோர் தலைமையில் அமைக்கப்பட்டன. 1966-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தக் குழுவும் மக்கள் தெரிவிக்கும் ஆட்சியாளர்களின் ஊழல், தவறுகளைப் பற்றிய புகார்களை ஆராய ஓர் அமைப்பு தேவையென வலியுறுத்தியது.

“லோக்பால்’ போன்ற அமைப்பு செயல்படாமல் இருப்பதற்குக் காரணம் மக்கள் பிரதிநிதிகள் இதயசுத்தியோடு அணுகவில்லை என்பதே ஆகும்.

மக்கள் மத்தியில் லோக்பால் பற்றி பல்வேறு உறுதிமொழிகள் அளிக்கப்பட்டும் நடைமுறைக்கு வராத அளவில் அணை போடப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம்தான் வலுத்துள்ளது.

“”இதோ புலி வருகிறது…” என்பது போன்று லோக்பால் மசோதாவின் கதையும் உள்ளது. லோக்பாலுக்கு எப்போது விடிவுகாலம் வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

Posted in abuse, Chidhambaram, Collector, Commissioner, Corruption, Court, Democracy, Economy, Education, Election, Employment, Finance, Gandhi, GDP, Governor, Govt, Growth, Honesty, IAS, Improvements, Inflation, Influence, infrastructure, IPS, Jobs, Judge, Jury, Justice, kickbacks, Law, Lecture, Lok Ayuktha, Lokpal, Metro, Money, Officer, Order, Party, Planning, Police, Politics, Poor, Poverty, Power, Public, Ramamurthy, Ramaraj, Recession, Republic, responsibility, revenue, Rich, Rural, service, Suburban, Wealthy | Leave a Comment »

Vijay TV – What to watch at 8:30?

Posted by Snapjudge மேல் மே 3, 2007

எட்டரை மணிக்கு என்ன பார்க்கலாம்?

விஜய் டி.வி. அறிமுகப்படுத்தியுள்ள புதிய நிகழ்ச்சியின் பெயர்தான் “8.30 மணிக்கு என்ன பார்க்கலாம்?’. இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் வரை நான்கு நாள்களுக்கு ஒரு கதை ஒளிபரப்பாகும். ஆறு வாரங்கள் கழித்து எந்தக் கதைக்கு அதிக எதிர்பார்ப்பும், ஆதரவும் உள்ளதோ அந்தக் கதை, மெகா தொடராக விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும். அதே சமயம், இந்த கதைகளைப் பற்றி வெவ்வேறு பார்வையாளர்களுடன் நடிகை சுஹாசினி விவாதிக்கும் பகுதியும் ஒளிபரப்பாகிறது. அத்துடன் பிரபல இயக்குநர்கள் பாலுமகேந்திரா, அமீர், வசந்தபாலன், ராதாமோகன், வசந்த், எழில் ஆகியோரும் நேயர்களுடன் தொடர் பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

ஒளிபரப்பாகும் தொடர்கள்:

 1. ஆயிரம் ஜன்னல் வீடு (01),
 2. மீண்டும் ஒரு காதல் கதை (02),
 3. சொல்லத்தான் நினைக்கிறேன் (03),
 4. மதுரை (04),
 5. தேவர் கோயில் ரோஜா (05) ,
 6. மென்பொருள் (06) .

வாக்களிக்கும் முறை: நேயர்கள் தங்களுக்குப் பிடித்த தொடருக்கு எஸ்.எம்.எஸ்., டெலிவோட்டிங் மற்றும் இணையதளம் மூலம் வாக்களிக்கலாம். தொடர் எண் “ஒன்று’ பிடித்திருந்தால் உங01 என்றும், “மூன்று’ பிடித்திருந்தால் உங03 என்றும் டைப் செய்து 7827 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.

இணையதளத்தில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய விரும்புவோர் http://www.indya.com க்கு சென்று வாக்களிக்கலாம். டெலிவோட்டிங் செய்ய விரும்புபவர்கள் 505782727 மற்றும் 12782727 என்ற எண்களுக்குத் தங்கள் மொபைல் மூலம் தொடர்புகொள்ளலாம்.

Posted in Ameer, Balu mahendra, Ezhil, Indya, Program, Programmes, Radhamohan, Serial, SMS, Star, Suhasini, Tamil TV, Television, TV, Vasanth, Vasanthabalan, Vijai, Vijay, Vijay TV, Watch | Leave a Comment »

Trisha Fan clubs step towards Politics?

Posted by Snapjudge மேல் மே 3, 2007

புதிய அமைப்பு தொடங்குகிறார் த்ரிஷா

சென்னை, மே 3 தனது பிறந்த நாளையொட்டி புதிய அமைப்பு ஒன்றை நடிகை த்ரிஷா தொடங்குகிறார்.

இதுகுறித்த விவரம்:

கடந்த ஆண்டு “தென்னிந்திய கனவு தேவதை’ என்ற பெயரில் த்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. மன்றம் மூலம் முக்கிய பண்டிகை நாள்களில் ஆதரவற்றவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வந்தன.

வரும் வெள்ளிக்கிழமை (மே 4) தனது பிறந்த நாளை முன்னிட்டு “த்ரிஷா பவுண்டேஷன்’ என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்குகிறார் த்ரிஷா. இதற்கான துவக்க விழா நிகழ்ச்சி அடையாறு பகுதியில் உள்ள பெட்ரீஷியன் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

விழாவின்போது த்ரிஷா ரசிகர் மன்றம் சார்பில் ரத்த தான முகாமும் நடைபெறுகிறது. அதன்பிறகு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுகிறார் த்ரிஷா. குழந்தைகளை மகிழ்விப்பதற்காக விஜய்யுடன் நடித்த “கில்லி’ படத்தை அங்கு திரையிடவும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

இதே நிகழ்ச்சியில் மன்றத்தின் உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டைகளும், புதிய உறுப்பினராக சேருபவர்களுக்கு விண்ணப்ப படிவங்களும் வழங்கப்படுகின்றன.

Posted in Actress, Fan, Fan Club, Fans, Heroine, Kisukisu, Kollywood, Politics, Rumor, Rumour, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theatres, Telugu, Tollywood, Trisha, Vambu | 1 Comment »