Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for மே 10th, 2007

Actors Activism – Is it for selfish purposes? (Dinakaran Survey)

Posted by Snapjudge மேல் மே 10, 2007

நடிகர்களுக்கு நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை…

சினிமா மீது தமிழர்களுக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு. நடிகர்களுக்காக எதையும் செய்ய பலர் காத்திருக்கிறார்கள். ஆனால் பதிலுக்கு நடிகர்கள்…?

ஆம்… அதை பற்றித்தான் தமிழக மக்களிடம் கேட்கப்பட்டது. நடிகர்களுக்கு, நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை எப்படி என்பதுதான் கேள்வி.

மக்களிடம் நடிகர்கள் அக்கறை கொண்டிருப்பதற்கு காரணம் தங்கள் படம் ஓட வேண்டும் என்பதற்குத்தான் என பெரும்பாலானவர்கள் கருத்துச் சொல்லியுள்ளனர். கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் சரியாக பாதி பேர், அதாவது 50 சதவீதம் பேர் இப்படித்தான் சொல்கிறார்கள்.

  • நடிகர்களின் அக் கறையில், தங்கள் படம் ஓட வேண்டும் என்ற சுயநலம் கலந்து இருக்கிறது என்கின்றனர் மக¢கள்.
  •  Ôஅரசியலுக்கு வருவதற்காகத்தான்Õ மக்கள் மீது நடிகர்கள் அக்கறையை கொட்டுகின்றனர் என்பது 31 சதவீதம் பேரின் கருத்து.
  • நடிகர்களின் அக்கறை `உண்மையானது‘ என்று முழுமையாக நம்புபவர்கள் 14 சதவீதம் பேர் மட்டும்தான்.
  • இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்காதவர்கள¢ 5 சதவீதம் பேர்.

நடிகர்களின் அக்கறையை விளாசித் தள்ளியவர்களில் நாகர்கோவில் மக்களுக்குத்தான் முதலிடம். அங்கு 65 சதவீதம் பேர், படம் ஓடுவதற்காகத்தான் நடிகர்கள் அக்கறையாக இருக்கிறார்கள் என அதிரடியாக கூறி உள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக சென்னைவாசிகள் நடிகர்களை காய்ச¢சி எடுக்கிறார்கள். 58 சதவீத சென்னைவாசிகளுக்கு நடிகர்கள் அக்கறையின் பின்னணி புரிந்திருக்கிறதாம்.

வேலூர் (55 சதவீதம்), சேலம் (52), கோவை (48), திருச்சி (52), மதுரை (51), நெல்லை (43) பகுதிகளிலும் இந்த கருத்துதான் அதிகம் நிலவுகிறது.

புதுவை மக்களில் 30 சதவீதம் பேர் படம் ஓட வேண்டும் என்பதுதான் நடிகர்களின் அக்கறைக்கு காரணம் என கூறியுள்ளனர். 39 சதவீதம் பேர், அவர்களின் அரசியல் ஆசையை காரணம் காட்டுகின்றனர்.

நடிகர்களுக்கு மக்கள் மீது உள்ள அக்கறை Ôஅரசியலுக்கு வருவதற்காகத்தான்‘ என ஒரே போடாக போடுபவர்கள் கொங்கு மண்டலத்தினர்தான். கோவைவாசிகளில் 42 சதவீதம் பேர் இவ்வாறு கூறியுள்ளனர். சென்னையில் இப்படிச் சொன்னவர்கள் 30 சதவீதம் பேர். வேலூர் (37 சதவீதம்), சேலம் (27), திருச்சி (26), மதுரை (30), நெல்லை (30), நாகர்கோவில் (21 சதவீதம்).

நடிகர்கள் அக்கறை நிஜமானதுதான் என அதிகம் நினைப்பவர்கள் நெல்லை சீமையினர்தான். அங்கு 26 சதவீதம் பேர் நடிகர்களின் அக்கறையை பார்த்து நெகிழ்கின்றனர். அதற்கு அடுத்து திருச்சி மக்களில் 18 சதவீதம் பேர் இம்மாதிரி உருகுகின்றனர். நடிகர்கள் அக்கறை உண்மையானது என¢பதில் நம¢பிக்கையில்லாதவர்களாக வேலூர், கோவைவாசிகள் உள்ளனர். இப் பகுதிகளில், 8 சதவீதம் பேர்தான் நடிகர்களின் அக்கறையை நம்புகின்றனர்.

Posted in activism, Actors, Actress, Actresses, Cinema, Dinagaran, Dinakaran, Films, Movies, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Selfish, Society, Stars, Sun, Sun TV, Survey, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, TV, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Welfare | Leave a Comment »

Protecting the farmlands for Food Consumption – Environment, Ethanol, Ethics

Posted by Snapjudge மேல் மே 10, 2007

உணவு தானியத்துக்குப் பாதுகாப்பு

மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. எனவே அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளில் அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உற்பத்திப் பொருளுக்குக் கட்டுபடியாகாத விலை, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, வேலைக்குப் போதிய தொழிலாளர்கள் கிடைக்காமை போன்ற காரணங்களால் குறுகிய கால பயிர் அல்லது செலவை ஈடுகட்டும் அளவுக்காவது வருமானம் அளிக்கும் பணப் பயிர்கள் மீது விவசாயிகளின் நாட்டம் அதிகரித்து வருகிறது. பயிர் செய்துவிட்டு காத்திருந்து இயற்கையுடன் போராடி இறுதியில் போட்ட முதலுக்கு ஆதாயம் கிடைக்குமா என்ற நிச்சயமற்ற நிலை காரணமாக வேளாண் துறையில் நுழைய இளைய சமுதாயம் தயக்கம் காட்டுகிறது. இதனால் இப்போது வேளாண்மையில் ஈடுபட்டுள்ளவர்களை நம்பியே எதிர்கால உணவு உற்பத்தி உள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக தாவரங்களிலிருந்து எரிபொருள் பெறுவதற்கான திட்டத்தை அமல்படுத்த உலகம் முழுவதும் முழுவீச்சில் இயக்கம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன் காரணமாகக் காடுகள் அழிக்கப்படும். சிறு விவசாயிகள் உணவுதானிய சாகுபடியைக் கைவிட்டுவிடுவார்கள். நிலைமையைச் சரியாகக் கையாளவில்லை என்றால் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும், வறுமை தலைதூக்கும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமாயில், மக்காச்சோளம், கரும்பு, சோயா, ஆமணக்கு போன்ற பயிர்கள் மீது விவசாயிகளின் கவனம் திரும்பியுள்ளது.

உலக வெப்ப நிலை மாறுதலால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க எரிபொருளுக்காக இந்தத் தாவரங்கள் பெருமளவு பயிரிடப்பட வேண்டும் என்று பணக்கார நாடுகள் விரும்புகின்றன. அவற்றின் உற்பத்தி கச்சா எண்ணெய் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமன்றி புதிய சந்தையையும் ஏற்படுத்தும். ஏழைகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு நல்ல விலையைப் பெற்றுத் தரும் என்பது அவர்களின் கருத்து. மாற்று எரிபொருள் மூலம் உலக எரிபொருள் தேவையில் 20 ஆண்டுகளில் 25 சதவீதத்தை நிறைவு செய்துவிட முடியும் என்றும் கணித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் பயிரான மக்காச் சோளத்தில் பெருமளவு எரிபொருள் தயாரிக்க அனுப்பப்பட்டது. பிரேசில், சீனா ஆகியன 5 கோடி ஏக்கரில் இப் பயிரைச் சாகுபடி செய்கின்றன. 2020க்குள் மொத்த எரிபொருள் உற்பத்தியில் 10 சதவீதம் தாவரங்களிலிருந்து கிடைப்பதாக இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் குறிப்பிட்டுள்ளது. இது பெட்ரோல், டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும்போது வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையினால் ஏற்படும் பாதிப்புகள் வெகுவாகக் குறையும்.

மேலும் இதன் காரணமாக பெட்ரோலியப் பொருள்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அது ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறப்பட்டாலும் ஏற்கெனவே சமையல் எண்ணெய்க்காக பாமாயில் உற்பத்திக்கு காடுகள் அழிக்கப்படுவதால் பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு அது எதிர்பாராத ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பது சுற்றுச்சூழல் நிபுணர்களின் கருத்தாகும். மேலும் இதனால் வன விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படலாம்.

மேலும் எரிபொருளுக்காக காடுகளை அழிக்கும்போது அது மண் அரிப்புக்கும் காரணமாகிவிடும். இது தவிர ஏற்றுமதியை மனதில் கொண்டு மண்வளம் மிக்க நிலங்களே பயிர்ச் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படும் என்பதால் சாதாரண நிலங்கள் வைத்துள்ள ஏழைகளுக்கு இதனால் பலன் கிடைக்காது என்பது ஒரு தரப்பினரின் வாதம். எனவே, இது நடைமுறைக்கு வந்த பிறகுதான் இதன் விளைவுகளைத் துல்லியமாக மதிப்பிட முடியும்.

—————————————————————————————————–

புவி வெப்பம்: சிக்கல்களும் தீர்வுகளும்

கொ. பாலகிருஷ்ணன்

உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற பிரச்னைகளில் பூமி வெப்பமடைதல் மிக முக்கியமானதாகும்.

பூமியைச் சுற்றியுள்ள 8 கி.மீ. தொலைவுக்கு கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ûஸடு மற்றும் குளோரோ புளோரா கார்பன் போன்ற வாயுக்களின் அடர்த்தி அதிகமாவதால் வாயு மண்டலம் சூடாகியுள்ளது.

இவ்வாயுக்களை பசுமைக் கூடார வாயுக்கள் என்று அழைக்கின்றனர். இவ்வாயுக்கள் வாயுமண்டலத்தில் நிலைகொண்டு சூரியனின் ஒளிக் கதிர்களை உள்வாங்கி வெப்பமடைந்து வாயுமண்டலத்தை சூடாக்குகிறது. இவ்வாறு பூமி வெப்பமடைவதை பசுமைக் கூடார விளைவு என்று அழைக்கிறோம்.

இதனால் எதிர்காலத்தில் பூமியின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கலாம், மழை குறைந்து குடிநீர்ப் பற்றாக்குறை மற்றும் பஞ்சம் பட்டினி ஏற்படலாம்.

பல நோய்கள் உருவாகலாம். மக்கள்தொகை அதிகரிப்பு, காடுகளை அழித்தல், அதிக அளவில் வாகனங்கள், பெட்ரோலியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துதல், குளிர்சாதன உபகரணங்களைப் பயன்படுத்துதல், வளர்ந்த நாடுகளில் தேவைக்கு அதிகமாக தனிநபர் மின் உபயோகம் மற்றும் வரைமுறை இல்லாத இயற்கை வளங்களை ஆடம்பர வாழ்க்கைக்குப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பசுமைக் கூடார வாயுக்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பூமியின் வெப்ப அதிகரிப்புக்கு பசுமைக் கூடார வாயுக்களே காரணம். இவ்வாயுக்களின் மூலக்கூறுகள் சூரிய ஒளியின் நீள அலைவரிசை ஒளிக்கற்றைகளை ஈர்த்து தன்னகத்தே உள்வாங்கி வெப்பத்தை நீண்ட நேரம் தேக்கி வைப்பதால் வாயுமண்டலம் வெப்பமாகிறது.

கரியமில வாயு பூமியை வெப்பமாக்குவதில் அதிகப் பங்கு வகிக்கிறது. வாயுமண்டலத்தில் கரியமில வாயு இதே அளவில் உயருமானால் 2100-ஆம் ஆண்டில் 540 – 970 பிபிஎம் ஆக உயர வாய்ப்புள்ளது. கரியமிலவாயு உற்பத்தியில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா ஏழாவது இடத்திலும் உள்ளன. நிலக்கரியை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் அனல் மின் நிலையங்கள் மூலமாக அதிக அளவு பசுமைக் கூடார வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. குறிப்பாக இதில் கரியமில வாயுவின் அளவு அதிகம்.

மக்கள்தொகைப் பெருக்கம், தொழில் வளர்ச்சி, காடுகளை அழித்தல், அதிக அளவு பெட்ரோலியம் உபயோகித்தல் போன்ற காரணங்களால் இதன் விளைவு அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.

கரியமில வாயுக்களின் துகள்கள் சூரிய ஒளியின் வெப்பத்தை உட்கொண்டு நீண்ட நேரம் தன்னகத்தே வைத்துக்கொள்ளும் தன்மையுடையது. காற்று மண்டலத்தில் இதன் ஆயுள்காலம், சுமார் 50 – 2000 ஆண்டுகளாகும். இது எளிதில் வெப்பத்தைக் கடத்தாது. எனவே, இவ்வாயுவின் அளவு அதிகரிக்க அதிகரிக்க வெப்பம் உயர்ந்து கொண்டே இருக்கும்.

தற்போது மீத்தேனின் அளவு 1783 பிபிபி – யன்களாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 37 பிபிபி-யன்கள் அதிகம். காற்று மண்டலத்தில் சுமார் 10 ஆண்டுகள் வரை தங்கி வெப்பத்தை உண்டாக்கக் கூடியது. வெப்பத்தை உண்டாக்குவதில் கரியமில வாயுவைவிட இருமடங்கு சக்தி அதிகம்.

60 சதவீத மீத்தேன் பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி உபயோகிப்பதாலும் நெல் வயலிலிருந்தும் கால்நடைகளின் கழிவுகளிலிருந்தும் உற்பத்தியாகின்றது. மீதமுள்ள 40 சதவீதம் சதுப்பு நிலம், தண்ணீர் தேங்கி ஈரமான நிலங்களிலும் மற்றும் கரையான்கள் மூலமாகவும் உற்பத்தி செய்கின்றது.

குளோராபுளோரோ கார்பன் என்பது ஒரு சாதாரண ரசாயனப் பொருள். இதில் பல வகை உண்டு. இருப்பினும் இஊஇ 11 மற்றும் இஊஇ 12 ஆகியவை குறிப்பிடத்தக்கவை. குளிர்சாதனம் மற்றும் இதன் சார்புடைய சாதனங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. காற்று மண்டலத்தில் இதன் ஆயுள்காலம் 65 – 130 ஆண்டுகள். அதாவது காற்று மண்டலத்தில் பல ஆண்டுகள் தங்கி வெப்பத்தை உண்டாக்கக்கூடியது. இது கரியமில வாயுவைவிட 10 ஆயிரம் மடங்கு வெப்பத்தை உருவாக்கும் சக்தி படைத்தது. மேலும் இது ஓசோன் படத்தை அழித்து புற ஊதாக் கதிர்களைப் பூமியில் விழச் செய்து பாதிப்பை உண்டாக்குகின்றது.

நைட்ரஸ் ஆக்ûஸடு காற்று மண்டலத்தில் உள்ள அளவு 318.6 பிபிபி (டடக்ஷ) யன்களாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டை விட 8 பிபிபி – யன்கள் அதிகம். இது கரியமில வாயுவைக் காட்டிலும் 200 மடங்கு வெப்பத்தை உண்டாக்கும் தன்மையுடையது. வாயுமண்டலத்தில் இதன் ஆயுள்காலம் சுமார் 150 ஆண்டுகள்.

ஓசோன் அளவு சராசரியாக 30 முதல் 50 பிபிஎம் (டடங) வரை இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் இது 50 – 100 பிபிஎம் வரை இருக்கும். 40 – 70 பிபிஎம் அதிகமாகும்போது பயிர்களில் மகசூல் குறையும்.

பூமியிலிருந்து 8 கிலோமீட்டர் வரை உள்ள வாயுமண்டலப் பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளில் 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. கடந்த 1000 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதிகபட்ச வெப்பம் கடந்த ஆண்டுகளில் அதிகமாக உயர்ந்துள்ளது.

புவி வெப்பம் அதிகரிப்பால் தண்ணீர்ப் பற்றாக்குறையும், அதனால் வேளாண்மை உற்பத்தியில் பாதிப்பும் அதிகமாக இருக்கும். ஏழை நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படலாம்.

புவி வெப்பத்தால் துருவப் பனிப்பாறைகள் 13 ஆயிரம் ச.கிலோமீட்டர் உருகியுள்ளது. 1970-ல் இருந்ததைவிட தற்போது 40 மடங்கு குறைந்துவிட்டது. மேலும், இது 2070-ல் பனிப்பாறைகள் முற்றிலும் உருக வாய்ப்புள்ளன. உலகில் கடல் மட்டம் உயரும்போது வங்கதேசம் மற்றும் மோரிஷஸ் நாடுகளில் அபாயம் ஏற்படலாம், இந்தியா உள்ள 27 நாடுகள் அதிகம் பாதிக்கப்படலாம்.

கடல் மட்டம் உயர்வு சென்ற நூற்றாண்டுகளுக்கு ஒப்பிடும்போது 2 – 6 மடங்கு இந்த நூற்றாண்டில் அதிகரித்துள்ளது. கடல் நீர் உட்புகுவதால் விளைநிலங்கள் பாதிக்கப்படலாம்.

தொடர்ந்து உயரும் கரியமில வாயுவின் அடர்த்தியின் காரணமாக ஒளிச் சேர்க்கையும் பாதிக்கப்படுகிறது. வாயு மண்டலத்தில் கரியமில வாயு அதிகரிக்கும்போது பயிர்களில் இலைத் துளைகள் சிறுத்து வாயுக்களைக் கடத்தும் தன்மை குறைகிறது. இதனால் இலைகளிலிருந்து வெளிவரும் நீராவி குறைகிறது.

மேலும் அளவுக்கு அதிகமாக கரியமில வாயு அதிகரிக்கும்போது இலைத்துளைகள் மூடிக் கொள்ளும். இதனால் இலைகளின் வெப்பம் அதிகமாகி பயிர்களின் நீர்த்தேவையும் அதிகரிக்கிறது.

புவி வெப்பம் 2 – 4 டிகிரி செல்சியஸ் உயரும்போது வெப்பமண்டலப் பயிர்களின் மகசூல் பாதிக்கப்படக்கூடும். பகலில் அதிக வெப்பத்தால் ஒளிச் சுவாசம் அதிகமாகி ஒளிச்சேர்க்கை குறையும். இரவில் இரவுச் சுவாசம் அதிகரித்து பயிர்களின் உலர் எடை அதிகரிக்காது. இதனால் மகசூல் குறையும்.

புவி வெப்பம் அதிகரிப்பதால் நெல் உற்பத்தி பாதிக்கப்படலாம் என பிலிப்பின்ஸில் உள்ள உலக நெல் ஆராய்ச்சி நிலையம் கூறுகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் புவி வெப்பம் அதிகரிப்பதால் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு பல லட்சம் மக்கள் உயிர் இழக்க நேரிடலாம்.

கரியமில வாயுவைக் கிரகிக்க அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும். மேலும் காடுகளைப் பாதுகாக்க வேண்டும்.

நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதைவிட இயற்கை வாயுவிலிருந்து மின்சாரம் தயாரிப்பதால் கரியமில வாயுவின் உற்பத்தியைக் குறைக்க முடியும்.

மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காற்றிலிருந்தும் கடலிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.

குறைந்த எரிசக்தியில் அதிக தூரம் செல்லக்கூடிய வாகனங்களை உருவாக்க வேண்டும். போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

உயிர்எரிசக்திக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், கரும்பு மற்றும் சர்க்கரைக் கிழங்கு உற்பத்தி செய்வதன் எத்தனாலை மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தலாம். காட்டாமணக்கிலிருந்து பயோடீசல் தயாரிக்க முன்னுரிமை அளிக்கலாம்.

மீத்தேனை ஆக்ஸிடேசன் மூலம் அளிக்கக்கூடிய வேர்களைக் கொண்ட புதிய நெல் ரகங்களை உருவாக்க வேண்டும்.

மக்கள்தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

வளர்ந்த நாடுகள் தனது ஆடம்பர வாழ்க்கையில் சிறிது தியாகம் செய்து கரியமில வாயு உற்பத்தியைக் குறைத்து ஏழை நாடுகளைப் பாதுகாக்க வேண்டும்.

மரபுவழி இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

புவி வெப்பமாவதை முற்றிலும் தடுக்க முடியாது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பசுமைக் கூடார வாயுக்களின் உற்பத்தியைக் குறைத்து / இவ்வாயுக்களின் அளவைக் கட்டுப்படுத்தி இவ்வுலகை வருங்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

(கட்டுரையாளர்: பேராசிரியர், வேளாண்மைக் கல்லூரி, மதுரை.)

Posted in Agriculture, Alternate, Analysis, Backgrounders, Cash, CFC, Consumption, Corn, Crops, Employment, Environment, ethanol, Farming, Food, Fuel, Gas, Gloabal Warming, Grains, Growth, Hunger, Industry, Jobs, Manufacturing, oil, Op-Ed, Paddy, Petrol, Pollution, Poor, Population, Price, rice, Rich, solutions, Swaminathan, Warming, Wealthy, Wheat, workers | 1 Comment »

Tamil nadu Government’s Kalaimamani Award Recipients – Announcement (2007-08)

Posted by Snapjudge மேல் மே 10, 2007

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள்: பாலகுமாரன், இயக்குநர் பாலா, சிம்பு, த்ரிஷா உள்பட 60 பேருக்கு விருது அறிவிப்பு

சென்னை, மே 11: தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் பாலகுமாரன், இயக்குநர் பாலா, நடிகர் சிம்பு, நடிகை த்ரிஷா உள்பட 60 பேர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  1. கோவைத் தம்பி-திரைப்படத் தயாரிப்பாளர்
  2. சீமான்-திரைப்பட இயக்குநர்
  3. சிம்பு-திரைப்பட நடிகர்
  4. “ஜெயம்’ ரவி-திரைப்பட நடிகர்
  5. ஜீவா-திரைப்பட நடிகர்
  6. விஷால்-திரைப்பட நடிகர்
  7. த்ரிஷா-திரைப்பட நடிகை
  8. நவ்யா நாயர்-திரைப்பட நடிகை
  9. கஞ்சா கருப்பு-நகைச்சுவை நடிகர்
  10. ஆர்த்தி-நகைச்சுவை நடிகை
  11. வினித்-குணசித்திர நடிகர்
  12. பாலகுமாரன்-இயற்றமிழ் கலைஞர்
  13. வண்ணதாசன்-இயற்றமிழ் கலைஞர்
  14. கவிஞர் கலாப்பிரியா-இயற்றமிழ் கலைஞர்
  15. சுப.வீரபாண்டியன்-இலக்கியப் பேச்சாளர்
  16. மரபின் மைந்தன் முத்தையா-இலக்கியப் பேச்சாளர்
  17. கீதா ராஜசேகர்-இசை ஆசிரியர்
  18. சஞ்சய் சுப்ரமணியம்-குரலிசைக் கலைஞர்
  19. ஸ்ரீவத்சவா-மிருதங்கக் கலைஞர்
  20. சரஸ்வதி ராஜகோபாலன்-வீணைக் கலைஞர்
  21. டாக்டர் இரா.செல்வகணபதி-சமயச் சொற்பொழிவாளர்
  22. இறையன்பன் குத்தூஸ்-இறையருட்பாடகர்
  23. இஞ்சிக்குடி சுப்ரமணியன்-நாதஸ்வர கலைஞர்
  24. மலைக்கோட்டை எஸ்.சுப்ரமணியன்-தவில் கலைஞர்
  25. கிரிஜா பக்கிரிசாமி-பரதநாட்டிய ஆசிரியர்
  26. திவ்யா கஸ்தூரி-பரதநாட்டிய கலைஞர்
  27. சிந்தூரி-பரதநாட்டிய கலைஞர்
  28. திருநங்கை நர்த்தகி நடராஜ்-நாட்டிய நாடகக் கலைஞர்
  29. ஆர்.முத்தரசி-நாட்டிய நாடகக் கலைஞர்
  30. கவிஞர் இன்குலாப்-நாடக ஆசிரியர்
  31. பேராசிரியர் இரா.ராஜு-நவீன நாடக இயக்குநர்
  32. தங்கராஜ் என்ற எம்எல்ஏ தங்கராஜ்-நாடக நடிகர்
  33. வி.மூர்த்தி-நாடக நடிகர்
  34. தேவிப்பிரியா என்ற ரமணதேவி-நாடக நடிகை
  35. வி.ஆர்.திலகம்-பழம்பெரும் நாடக நடிகை
  36. சி.ஐ.டி.சகுந்தலா-பழம்பெரும் திரைப்பட நடிகை
  37. பா.விஜய்-திரைப்பட பாடலாசிரியர்
  38. நா.முத்துக்குமார்-திரைப்பட பாடலாசிரியர்
  39. கபிலன்-திரைப்பட பாடலாசிரியர்
  40. இயக்குநர் பாலா-திரைப்பட கதாசிரியர்
  41. வித்யாசாகர்-திரைப்பட இசையமைப்பாளர்
  42. மது பாலகிருஷ்ணன்-திரைப்பட பின்னணி பாடகர்
  43. திப்பு-திரைப்பட பின்னணி பாடகர்
  44. பாம்பே ஜெயஸ்ரீ-திரைப்பட பின்னணி பாடகி
  45. எம்.வி.பன்னீர்செல்வம்-திரைப்பட ஒளிப்பதிவாளர்
  46. விட்டல்-திரைப்பட எடிட்டர்
  47. நேஷனல் செல்லையா-திரைப்பட புகைப்படக் கலைஞர்
  48. அதிவீர பாண்டியன்-திரைப்பட பத்திரிகை ஆசிரியர்
  49. கே.அம்மச்சி விராமதி-நாட்டுப்புற இசைக் கலைஞர்
  50. ஆக்காட்டி ஆறுமுகம்-நாட்டுப்புற இசைக் கலைஞர்
  51. டாக்டர் கே.ஏ.குணசேகரன்-நாட்டுப்புற இசை ஆய்வாளர்
  52. டிராட்ஸ்கி மருது-ஓவியக் கலைஞர்
  53. சி.ஜெ.பாஸ்கர்-சின்னத்திரை இயக்குநர்
  54. விடுதலை-சின்னத்திரை கதை வசனகர்த்தா
  55. வேணு அரவிந்த்-சின்னத்திரை நடிகர்
  56. போஸ் வெங்கட்-சின்னத்திரை நடிகர்
  57. மௌனிகா-சின்னத்திரை நடிகை
  58. தீபா வெங்கட்-சின்னத்திரை குணச்சித்திர நடிகை
  59. டி.ஜி.தியாகராஜன்-சின்னத்திரை தயாரிப்பாளர்
  60. அலெக்ஸ்-தந்திரக்காட்சி கலைஞர்

Posted in Actor, Actress, Affiliation, Alex, Announcement, Arasi, Arts, Authors, Award, Awards, Bala, Balakumaran, Balu Mahendira, Balu mahendra, Bombat Jayashree, Bombat Jayashri, Bombat Jayasree, Bombat Jayasri, Bombat Jeyashree, Bombat Jeyashri, Bose Venkat, Campaign, Cinema, CJ Baskar, CJ Bhaskar, Comedian, Culture, Devipriya, Director, DMK, Dratski, Dratsky Maruthu, Financier, Government, Govt, Inquilab, Jayam, Jeeva, Jeyam, Kabilan, Kalaimamani, Kalapriya, Madhu Balakrishnan, Magician, Marudhu, Marudu, Maruthu, Maunika, Movies, music, MV Paneerselvam, Na Muthukumar, Nandha, Narthaki, Narthaki Nataraj, Narthaki Natraj, National Chellaia, National Chellaiah, Navya, Navya Nayar, Pa Vijai, Pa Vijay, Paa Vijai, Paa Vijay, Party, Pithamagan, Pithamakan, Poet, Producer, Radhika, Ravi, Recipients, Recognition, Sanjai Subramaniam, Sanjay Subramaniam, Seeman, Selvi, Serial, Sethu, Silambarasan, Simbu, Soaps, Stars, Suba Veerapandiyan, SubaVee, SubaVeerapandiyan, SubaVi, Sun TV, Tamil Nadu, Television, TG Thiagarajan, TG Thiakarajan, TG Thyagarajan, TG Thyakarajan, Thrisha, Tippu, Tratski, Tratsky, Trisha, TV, Vannadasan, Vannadhasan, Venu Aravind, Venu Aravindh, Venu Aravinth, Vidhyasagar, Vidyasagar, Vineet, Vineeth, Vishaal, Vishal, Vittal, VR Thilagam, Writer | Leave a Comment »

Tuberculosis – Symptoms, Transmission, Diagnosis & Treatment

Posted by Snapjudge மேல் மே 10, 2007

காசநோயும் கட்டுப்பாடும்

எஸ். முருகன்

காசநோய் எளிதில் பரவக் கூடிய தொற்றுநோய். நீள்தண்டு வடிவ பாக்டீரியாக்கள் மைக்கோபாக்டீரியத்தால் ஏற்படும் இந்த நோய் உடலின் எப்பகுதியிலும் ஊடுருவவல்லது. குறிப்பாக நுரையீரல் மிக எளிதில் வசப்படும் பகுதி. பாதிக்கப்பட்ட மனிதரிலிருந்து காற்றின்வழி மூக்கு, தொண்டைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் பரவுகிறது.

காசநோய் உள்ளோர் இருமும்போதும் தும்மும்போதும் பாடும்போதும் பேசும்போதும் வெளியேறி காற்றில் பரவும் கிருமிகள், பிறர் சுவாசிக்கும்போது தொற்றுகிறது. மேலும் காசநோய் உள்ளவர்களுடன் தொடர்ந்து பழகும்போதும் நோய் தொற்றுகிறது.

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பெரிய பிரச்சினையான காசநோய் பரவ எய்ட்ஸýம் ஒரு காரணம். இந்தியாவில் நிமிஷத்துக்கு ஒருவர் காசநோயால் இறப்பதாக ஒரு தகவல்.

ஊட்டச்சத்து குறைவாக உள்ளோர் காசநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால், உயிரிழப்போர் வளரும் நாடுகளில்தான் அதிகம். எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ள மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளை விரைவில், அதிக அளவில் பாதிக்கிறது இந்நோய்.

பெருமளவில் 15-லிருந்து 24 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு நோய் தொற்றுகிறது. இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களில் பாதிப் பேர் 15 முதல் 44 வயதுக்கு உள்பட்டவர்கள் என மதிப்பிடப்படுகிறது.

இந்தியாவில் மட்டும் சுமார் 3 லட்சத்திற்கும் மேலான குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து இந்நோயைப் பெற்றிருக்கின்றனர்.

தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், புதுப்பிக்கப்பட்ட தேசிய காசநோய்த் தடுப்புத் திட்டத்திற்கு சுமார் ரூ. 1,156 கோடி உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தி வருகின்றன.

நேரடியாக உட்கிரகித்தல் சிகிச்சை முறையின் ஐந்து கூறுகள்:

  • அரசு ஆதரவு- தொடர்ச்சியான நிதியுதவி,
  • தரமான பரிசோதனைகள் மூலம் புதிய நோயாளிகளைக் கண்டறிதல்,
  • தக்க மேற்பார்வையின் கீழ் தரமான சிகிச்சை முறை -நோயாளிகளுக்கு ஆதரவு,
  • மருந்து அளிப்பதில் முறையான மேலாண்மை,
  • கண்காணிப்பு மற்றும் மதிப்பிடும் முறை, அதன் விளைவுகளை அளவெடுத்தல் ஆகியவை.

நோய்க் குறிகள்:

  • தொடர்ச்சியான இருமல்,
  • கோழையுடன் கூடிய இருமல்,
  • எப்போதும் சோர்வு,
  • எடை இழப்பு,
  • காய்ச்சல்,
  • ரத்தத்துடன் கூடிய சளி,
  • இரவில் வியர்த்தல்,
  • பசியின்மை ஆகியவை.

நோய் உருவாக்கம்: பல ஆண்டுகளாகக் காசநோய் ஒருவரைத் தாக்கியிருந்தாலும் அவர் நலமாகவே இருப்பார். திடீரென உடல்நலன் பாதிக்கப்படும்; அல்லது மாற்றங்கள் ஏற்படும். காரணம், மற்ற நோயான எய்ட்ஸ் அல்லது நீரிழிவு நோய்த் தாக்குதலாக இருக்கலாம் அல்லது போதை மாத்திரைகள், குடிப்பழக்கம் போன்றவற்றாலும் மாற்றம் அல்லது குறை ஏற்படுகிறது.

காசநோய் வந்தால் உடலானது அதனுடைய நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து குறைந்து பாதிக்கப்படுகிறது. கிருமிகள் ஒரு வாரத்திற்குள் வளர்ந்து உடலைப் பாதிக்கின்றன.

சிகிச்சை முறைகள்: காசநோயால் தாக்கப்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கைத் தடுப்பு சிகிச்சை அளிக்கப்படும். இதன் நோக்கம், நோய்க்கிருமிகளைக் கொல்வது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை கிருமிகள் உடனடியாக ஒன்றும் செய்யாது. சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் பின்னர் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களை அணுகி தினமும் அவர்களது ஆலோசனைப்படி, அளவாக ஐசோநியாசிட் எடுத்துக்கொள்ள வேண்டும். இது விலை குறைவான மருந்து. பாதிக்கப்பட்ட நபர் ஆறு மாதம் முதல் ஒன்பது மாதம் வரை, சிலருக்கு ஓர் ஆண்டு ஐசஏ மருந்தைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வர்.

குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனைகளை மேற்கொண்டு தொடர்ந்து இம் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டுமா? என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

காசநோய் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி மார்பு எக்ஸ்-ரே எடுக்க வேண்டும்.

நீண்ட நாள்களாக காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களைத் தனித்துப் பல மாதங்களுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டும். சிலருக்கு பல ஆண்டுகள் கூட ஆகலாம். அறுவைச் சிகிச்சை கூட மேற்கொள்ள வேண்டி வரும்.

இந்த நோயை சக்திவாய்ந்த மாத்திரைகளினால் குணப்படுத்த முடியும். இவ்வாறு சிகிச்சை பெற்றவர்கள் வீட்டிலேயே சிகிச்சையைத் தொடரலாம்.

சிகிச்சை முறைகளில் மாற்றம் மற்றும் மாற்று நடவடிக்கைகள் எனப் பல வந்தாலும் இன்னமும் இந் நோயை எதிர்த்து நிற்க முடியவில்லை.

காசநோயைப் போக்கப் பல சிகிச்சைகள் இருந்தாலும் நோயாளிகளின் முழு ஒத்துழைப்பால்தான் சிகிச்சையை முழுமையாக முடிக்க முடியும். நோய்க்குத் தக்க மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

எனவே, நோயாளிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இச் சிகிச்சைக்கு உண்மையான வெற்றி என்பது கிடையாது.

(கட்டுரையாளர்: பேராசிரியர், டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை.)

Posted in AIDS, airborne, Bacteria, Communicable, cure, diagnosis, Disease, Doctor, drug, Evolution, Health, Healthcare, History, Infectious, Malnutrition, Medicine, Nutrition, Pathogenesis, Prevention, References, Symptoms, TB, Transmission, Treatment, Tuberculosis, Vaccines, Virus, Waterborne | 3 Comments »

Katcha Theevu – Issue & History: Indian Naval Strategy

Posted by Snapjudge மேல் மே 10, 2007

கச்சத்தீவைக் கை கழுவியதால்…?

தி. இராசகோபாலன்

காஷ்மீர், பாரதத் தாயின் முகமென்றால், கச்சத்தீவு கால்விரல் மெட்டி எனலாம்.

கச்சத்தீவின் நீளம் ஒரு கல்; அகலம் அரை கல். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ., ராமேசுவரத்திலிருந்து 18 கி.மீ. கச்சத்தீவில் “டார்குயின்’ எனும் பச்சை ஆமைகள் அதிகம். கச்சம் என்றால் ஆமை என்பர். எனவே பச்சைத் தீவு நாளடைவில் கச்சத்தீவு ஆயிற்று. 1882ஆம் ஆண்டிலிருந்து எட்டுத் தீவுகளும் 69 கடற்கரை ஊர்களும் ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் கச்சத்தீவும் ஒன்று.

கிழக்கிந்திய கம்பெனியினர் ராமநாதபுரம் சேதுபதியிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில், குத்தகை நிலமாக கச்சத்தீவைப் பெற்றனர். இலங்கையின் அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரிஸ், “விக்டோரியா மகாராணியின் அரசறிக்கைப்படி கச்சத்தீவு இலங்கையைச் சேர்ந்ததன்று; அது ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தம்” என உறுதிப்படுத்தினார். என்றாலும், இலங்கை அரசு 1955, 56-ல் தன்னுடைய கடற்படைப் பயிற்சிக்குத் தகுந்த இடமாகக் கச்சத்தீவைத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய பணியையும் அங்கு தொடங்கியது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் அத்துமீறலை நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது, இந்த விவகாரம் பற்றிப் போதிய தகவல்கள் இல்லை… இந்தச் சிறு தீவுக்காக இரு நாடுகளும் போராடும் என்ற கேள்விக்கு இடமில்லை.

இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் தன்மானம் கலக்கவில்லை; அதுவும் நம் பக்கத்து நாடான இலங்கையுடன்” எனப் பிரதமராக இருந்த நேரு பதிலுரைத்தார். காஷ்மீர் என்ற முகத்தில் ஒரு சிறு கவலை ரேகை படர்ந்தாலும், அலறித் துடிக்கின்ற மைய அரசு, கச்சத்தீவு என்ற கால்விரல் மெட்டியை இலங்கை அரசு கழற்றியபொழுது கண்டுகொள்ளவே இல்லை. இது முதற் கோணல்.

பின்னர், ஜே.வி.பி. என்ற சிங்கள தீவிரவாத இயக்கம், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடர்ந்து இலங்கையில் பரப்பி வந்தது. அதைக் குறைப்பதற்காக கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்கக் கொள்கையளவில் இந்திய அரசு முடிவு செய்தது.

பின்னர் 1974ஆம் ஆண்டு இந்தியா அணுகுண்டை வெடித்தது. அதனால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் மீது கண்டனக் கணைகள் வீசப்பட்டன.

ஐ.நா. அவையில் இருந்த 15 உறுப்பினர்களைக் கொண்ட தாற்காலிகக் குழு மூலமாக, இந்தியாவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற பாகிஸ்தான் முயன்றது. அப்போது அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்த இலங்கையின் ஆதரவோடு, இந்தியா அந்த முயற்சியை முறியடித்தது. இச் சூழ்நிலையில் இலங்கை அரசு கேட்டவுடன், நன்றிக்கடனாக இந்தியா கச்சத்தீவைக் கை கழுவ இசைந்தது.

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முன் வந்த இந்திய அரசு, எட்டு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் ஐந்தாவது விதி: “”இந்திய மீனவர்களும் வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு இதுநாள் வரை வந்துபோனதுபோல் வந்து போவதற்கும், கச்சத்தீவைப் பயன்படுத்தவும் முழு உரிமை உடையவர்கள். இதற்காகச் சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை.”

ஆனால், இந்த ஒப்பந்தம் நிறைவேறிய நாளிலிருந்து ராமேசுவரம் மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படை வீரர்களுக்கும் தகராறு நடக்காத நாளே இல்லை. கச்சத்தீவை வழங்கியதால், ராமேசுவரத்து மீனவர்கள் வடிக்கும் கண்ணீரும் கடலைப்போல.

மைய அரசு, மேற்கு வங்கத்திற்குச் சொந்தமான “டின்பிகா’ எனும் தீவை, வங்கதேசத்திற்குக் குத்தகைக்குத் தரும்போது எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கையையும் அக்கறையையும் ஏன் கச்சத்தீவில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான், நமது வருத்தம். டின்பிகாவை வங்க தேசத்திற்குக் குத்தகைக்குத் தந்தாலும், அதன் இறையாண்மை அல்லது ஆட்சியுரிமை இந்தியாவிடம்தான் இருக்கும். மேலும், எந்தக் காரணத்தைக் கொண்டும், அத்தீவை ராணுவத் தளமாகப் பயன்படுத்தக் கூடாது. “டின்பிகா’ ஒப்பந்தத்தில் கடைப்பிடித்த அணுகுமுறையைக் கச்சத்தீவில் கையாளாதது ஏன்?

கச்சத்தீவினால் ஏற்படக்கூடிய நன்மைகளைச் சிந்தித்துப் பார்த்தால், நாம் செய்த வரலாற்றுப் பிழை தெரியும். கச்சத்தீவின் நடுவிலுள்ள கல்லுமலை அருகேயுள்ள ஆழ்கிணற்றின் குடிநீரால், ராமேசுவரத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கலாம். சித்தமருத்துவத்திற்குத் தேவையான “உமிரி’ போன்ற மூலிகைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. கச்சத்தீவுக் கடலில் கிடைக்கும் இறால் மீன்கள் உலகத்தரம் வாய்ந்தவை.

கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நூறாண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம் இருப்பதாக சோவியத் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர். கச்சத்தீவு – குமரிமுனைக்கு இடைப்பட்ட கடலுக்கடியில் யுரேனியம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த கனிமக்கூறுகள் கிடைப்பதாக நிலத்தடி ஆய்வாளர்கள் அறிக்கை தந்துள்ளனர். தாற்காலிகமாக இவற்றையெல்லாம் இழந்து நிற்கும் நாம், நிரந்தரமாகவே இழக்க வேண்டுமா? நீர்மூழ்கிக் கப்பல்களையும் போர்ப்படகுகளையும் செப்பனிடும் தளம் அமைப்பதற்கும், நீர்மூழ்கிக் கப்பல் படையினருக்குப் பயிற்சிக்களம் அமைப்பதற்கும், தகுதி வாய்ந்த இடமாகக் கச்சத்தீவு விளங்குகின்றது.

அணுப்படைத்தளம் அமைப்பதற்கேற்ற சூழலைக் கொண்டதாகவும், போர் விமானங்கள் தாற்காலிகமாக இறங்குவதற்குரிய திட்டாகவும் கச்சத்தீவு இருக்கிறது. ஏவுகணைத் தளமாகவும் இத்தீவைப் பயன்படுத்தலாம்.

கடலின் எச்சரிப்புக் கருவிகளாகப் பயன்படும் மிதவைகளுக்கு இங்கொரு மையம் அமைக்கலாம். ராணுவத்திற்குத் தேவையான தகவல்-தொடர்பு மையங்களையும், “ராடார்’ போன்றவற்றையும் நிர்மாணிக்கலாம். பாக் சந்தி, மன்னார் வளைகுடா ஆகியவற்றில் கப்பற்படை அரண் அமையும்போது கச்சத்தீவும் அதன் மையங்களில் ஒன்றாக அமையலாம்.

பிலிப்பின்ஸ் நாட்டின் எல்லையிலுள்ள “பால்மஸ் மியான்ஜஸ்’ எனும் தீவு, நெதர்லாந்து மக்களுக்குச் சொந்தமானது. ஆனால், நெதர்லாந்து மக்கள் நீண்டகாலம் புழங்காமல் இருந்த காரணத்தால், அந்தத் தீவை ஸ்பெயின் கைப்பற்றியது. பின்னர், அதனைப் பிரெஞ்சுக்காரருக்குத் தாரை வார்த்தது. ஆனால், நெதர்லாந்து மக்கள் உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இழந்த உரிமையை மீண்டும் பெற்றனர். அதுபோல, கச்சத்தீவில் உரிமையை ஏன் இந்தியா மீண்டும் பெறக் கூடாது?

ராமேசுவரத்தைச் சுற்றி வாழ்கின்ற மீனவர்களுக்கு அது மண் மட்டுமன்று; கண்ணும்கூட. கச்சத்தீவை நாம் கழற்றிவிட்டது முதற்கோணல்; முற்றிலும் கோணல் ஆகாமல் காக்க வேண்டியது, மானுடம் பேசுகின்றவர்களுடைய மகத்தான கடமை.

(கட்டுரையாளர்: தாகூர் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர்).

————————————————————————————————————
கடலுக்குள் செயற்கைப் பவளப் பாறை

பா. ஜெகதீசன்

சென்னை, ஆக. 8: தமிழகக் கடல் பகுதிகளில் மீன் வளத்தைப் பெருக்குவதற்காக “செயற்கைப் பவளப் பாறைகள்’ உருவாக்கப்பட்டு, கடலுக்கு அடியில் நிறுவப்படுகின்றன.

சென்னைக்கு அருகே உள்ள பழவேற்காடு கடல் பகுதியில் மீனவர்களின் பங்கேற்புடன் முதல்முறையாக இந்த செயற்கைப் பவளப் பாறைகளை நிறுவும் பணி அடுத்த சில நாள்களில் தொடங்குகிறது.

பருவமழை தவறிப் பெய்வது, 2004-ல் சுனாமி தாக்கியது, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகள் கலப்பது உள்ளிட்ட காரணங்களால், தமிழகக் கடல் பகுதிகளில் மீன் வளம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

மிகச் சிறிய மீன்களைக் கூட பிடித்து விடும் திறன் படைத்த வலைகளை மீனவர்களில் ஒரு தரப்பினர் பயன்படுத்துகின்றனர். வளர்ந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் உள்ள சிறிய மீன்கள், மீன் குஞ்சுகள், சிறிய இறால்கள் போன்றவை அத்தகைய வலைகளில் சிக்கி விடுகின்றன. இதனால் படிப்படியாக மீன் வளம் அந்தக் குறிப்பிட்ட பகுதிகளில் சுரண்டப்பட்டு, அடியோடு குன்றி விடுகிறது. இந்த நிலையை மாற்ற கடலுக்கு அடியில் செயற்கைப் பவளப் பாறைகளை உருவாக்க உத்தேசிக்கப்பட்டது.

வழி காட்டிய முல்லம்: பவளப் பாறைகள் அதிகம் இல்லாத பகுதிகளில் பழங்காலத்தில் மீன்களைத் தாற்காலிகமாகக் கவர்ந்து இழுக்க “முல்லம்’ என்கிற அமைப்பை மீனவர்கள் பயன்படுத்தினர்.

பனை ஓலையால் சுற்றப்பட்ட பனை வெல்லம், புன்னை மரம், வாகை மரத் துண்டுகள், தென்னங்கீற்றுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்த “முல்லம்’ அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு, பழைய முல்லம் அமைப்புகளைப் பயன்படுத்த முடியாது. அதற்குப் பிறகு, புதிய முல்லம் அமைப்புகளைத் தயாரித்து பயன்படுத்த வேண்டும்.

பழங்கால முல்லம் அமைப்பை முன் மாதிரியாகக் கொண்டு, தற்போது செயற்கைப் பவளப் பாறைகள் உருவாக்கப்படுகின்றன. கான்கிரீட்டால் ஆன இந்த செயற்கைப் பவளப் பாறைகள் மூன்று வெவ்வேறு வகையான தோற்றங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்படுகின்றன.

தலா ஒரு டன் எடை: மூன்று அல்லது நான்கு பெரிய வளையங்கள் ஒன்றோடொன்று இணைந்ததைப் போன்ற வடிவத்திலும், முக்கோண வடிவிலான கூண்டில் 6 பெரிய குழாய்கள் பொருத்தப்பட்ட தோற்றத்திலும், ஏராளமான துளைகள் போடப்பட்ட பெரிய செவ்வகக் கூண்டு வடிவமைப்பிலுமாக 3 வகைகளில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் உருவாக்கப்படுகின்றன.

இப்படி உருவாக்கப்படும் செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் தலா ஒரு டன் எடை கொண்டவையாக இருக்கும். அந்த அளவுக்கு எடை இருந்தால் தான் கடல் நீரோட்டச் சக்தியைத் தாங்கும் திறன் இருக்கும். இந்த அமைப்புகள் சுற்றுச் சூழலைப் பாதிக்காதவையாகவும் இருக்கும்.

இவற்றைக் கடற்கரையில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் கடலுக்கு அடியில் 20 அடி ஆழத்தில் ஆங்காங்கே போட்டு விடுவார்கள். முதலில் கடல் வாழ் நுண்ணுயிரிகளும், பாசிகளும் இந்த அமைப்புகளின் மீது படர்ந்து வளரும்.

இந்தப் பாசியை உண்ண இந்த அமைப்புகளை மீன்கள் நாடி வரும். இந்த மீன்கள் இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகளில் கூட்டம், கூட்டமாகத் தங்கி, இளைப்பாறி, முட்டையிட்டு, இனப் பெருக்கம் செய்யும்.

மீன்களின் உறைவிடங்கள்: சிறிதுகாலத்தில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் மீன் உற்பத்தி தளமாகவும், மீன்களின் உறைவிடங்களாகவும் மாறி விடும்.

இவை அமைந்துள்ள பகுதிகளில் மீன் வளம் அதிகரிக்கும். “முல்லம்’ போன்று தாற்காலிக அமைப்பாக இல்லாமல், பல ஆண்டுகளுக்கு இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் நீடித்து உழைக்கும்.

இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் இடம் பெற்றுள்ள கடல் பகுதிகளில் மற்ற இடங்களில் மீன் பிடிப்பதைப் போல, வலைகளை வீசக் கூடாது. மாறாக, தூண்டில் முறையைப் பயன்படுத்தி தான் மீன்களைப் பிடிக்க வேண்டும்.

தொண்டு நிறுவனத்தின் முயற்சி: சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு கடல் பகுதியில் இத்தகைய செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் அடுத்த சில நாள்களில் நிறுவப்பட உள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரத்தில் உள்ள “பிளான்ட்’ தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. மீனவர்கள், நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு உதவும் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் பெரிய படகுகளின் மூலம் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் கடலுக்குக் எடுத்துச் சென்று நிறுவப்படும். எந்தெந்தப் பகுதிகளில் இவற்றைக் கடலில் நிறுவ வேண்டும் என்பது தொடர்பாக மீனவர்கள், வல்லுநர்கள் உள்ளிட்டவர்களுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

முதல் நாளில் பழவேற்காடு பகுதியில் 30 இடங்களில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் கடலுக்குள் நிறுவப்படும். பிறகு, படிப்படியாக மேலும் 70 அல்லது 80 செயற்கைப் பவளப் பாறைகள் அதே பகுதியில் வெவ்வேறு இடங்களில் கடலுக்குள் நிறுவப்படும். இதற்கு கிடைக்கும் பலனைப் பொருத்து, பிற மாவட்டங்களின் கடல் பகுதிகளிலும் இத்தகைய அமைப்புகளை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு plant@plantindia.org என்கிற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

Posted in Army, Artificial, Batticaloa, Border, Boundary, Ceylon, defence, Defense, DK, DMK, Eelam, Eezham, Environment, ethnic, Extremism, Extremists, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishery, Gandhi, global, History, Indira, Indra, Industry, Jade, Jaffna, Jayalalitha, JVP, KACCHA THEEVU, Katcha Theevu, Liberation Tamil Tigers of Eelam, maritime, MDMK, Nature, Naval, Navy, Nehru, Ocean, Palk Straits, Plant, plantindia, Premadasa, Rain, Ramanad, Ramanadhapuram, Ramanathapuram, Rameswaram, Ramnad, Ramnadhapuram, Refugees, Sea, Sirimavo, Sri lanka, Srilanka, Strategy, Terrorism, Terrorists, TN, Tsunami, UN, VaiGo, VaiKo, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Violence, Vituthalai Puli, Vituthalai Pulikal, Waters | 8 Comments »

The increasing cost of Property Appreciation – Practices, Investments, Discrepancies

Posted by Snapjudge மேல் மே 10, 2007

உயரும் நில மதிப்பு

தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அதிகம் வருவதால் நன்மைகள் அதிகம் உள்ளன. நிறைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது. ஆயிரக்கணக்கில் ஊதியம் கிடைக்கிறது. இருப்பினும் சில இடையூறுகளும் உடன் வருகின்றன.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும் அப் பகுதியில் நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்துவிடுவது (அல்லது உயர்த்தப்படுகிறது?) இயல்பான நிகழ்வாகிவிட்டது. சாதாரண தொழிற்சாலை வந்தாலும் நிலத்தின் மதிப்பு உயரும்தான். ஆனால் தகவல் தொழில்நுட்பத் துறை என்றால் நிலத்தின் மதிப்பு பல மடங்காக உயர்ந்து விடுகிறது.

சென்னை, கோவை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் திடீரென நிலத்தின் விலை பல கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளதற்கு இதுதான் முக்கியக் காரணம்.

இதனால், சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெருநகரங்களில் காலிமனைகளை வளைத்துப்போடுவது அல்லது குறைந்த விலைக்கு மிரட்டி வாங்குவது, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகியன அதிகரித்துள்ளன. அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள், கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான இடங்களை விற்கும் நிலையை உருவாக்கி, அதை கூட்டணி அமைத்து ஏலத்தில் எடுக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன.

சென்னை நகரில் இதுபோன்ற ரியல் எஸ்டேட் முறைகேடுகள் பற்றிய புகார்கள் ஆயிரத்துக்கும் மேலாக உள்ளன. தமிழகத்தின் பிற நகரங்களிலும் இதேபோன்ற முறைகேடுகள் வேகமாக நடைபெற்று வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

இதற்குப் பின்புலமாகவும், பலமான ஆதரவாகவும் இருப்பவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகள்தான். இப்படி வாங்கப்படும் மனை, நிலம் ஆகியவற்றின் “உயர்த்தப்பட்ட’ மதிப்பு இவர்களாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.

சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெருநகரங்களில் இத்தகைய ரியல் எஸ்டேட் முறைகேடுகளை விசாரிக்க காவல்துறையில் தனிப்பிரிவுகள் உள்ளன. என்றாலும், யாரும் தண்டனை பெறவில்லை. இந்த முறைகேடுகளும் கட்டுப்படுத்தப்படவில்லை.

இதில் அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை மேற்கொண்டால் முறைகேடுகளைத் தடுக்கவும், நிலத்தின் போலியான உயர் மதிப்பீட்டைக் கட்டுப்படுத்தவும் முடியும். இல்லையெனில், நகரின் மையப்பகுதிகளில் வசிக்கும் “எதிர்ப்பு சக்தி’ இல்லாத சாதாரண மக்கள் உயிருக்குப் பயந்து தங்களுக்குக் கொடுக்கப்படும் பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியேறும் நிகழ்வுகள் தவிர்க்க முடியாததாக மாறும்.

தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்கள் நினைத்தால் இத்தகைய நிலமதிப்பு உயர்வைத் தடுக்க முடியும். இந்நிறுவனங்களைக் காட்டிலும், அதில் பணிபுரியும் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மனது வைத்தால் அந்தந்த நகரின் அடிப்படை வாழ்க்கைச் செலவு உயர்வதைத் தடுக்க முடியும்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோர் மாதம்தோறும் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் ஊதியம் பெறுகின்றனர். இவர்களது செலவிடும் திறன் சாதாரண மக்களைக் காட்டிலும் மிக அதிகம்.

ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வீட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் வாடகை கொடுப்பது அவருக்குச் சிரமமில்லை. ஆனால் அவரை அறியாமலேயே அப்பகுதியின் வாடகையை உயர்த்துகிறார். அவரால் குறைந்தபட்ச தூரத்துக்கு ஆட்டோவில் செல்ல ரூ.30-ஐ வீசிவிட முடியும். அப்பகுதியில் ஆட்டோ கட்டணம் உயர அவர் காரணமாகிறார். அதைவிட மோசமாக. அவரால் ரூ.10 லட்சம் பெறுமானமுள்ள ஒரு குடியிருப்பை ரூ.15 லட்சத்துக்குக் கண்ணை மூடிக்கொண்டு வாங்க முடியும். ஆனால், சம்பளத்தைத் தவிர “வேறு வருமானம்’ எதையும் பார்க்க முடியாத நடுத்தர மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் விலை கூடுதல் என்றாலும் அது பெரும் சுமை. சொந்த வீடு எனும் கனவை மண்ணுக்குள் அழுத்துகிற சுமை.

Posted in Apartments, Appreciation, Asset, Bangalore, Bid, Biotech, Boom, Bust, Chennai, Compensation, Construction, CRR, Deflation, Delhi, Discrepancy, Economy, Employment, Estate, Exports, Finance, Flats, Hyderabad, India, Industry, Inflation, InfoTech, Interest, Investment, IT, Jobs, Labor, Land, Madras, Manufacturing, Plots, Poor, Property, Real Estate, Recession, REIT, Rich, Salary, Sale, SEZ, Stagflation, Telecom, workers | Leave a Comment »

The Rich, The Filthy Rich, The Politicians – Justice, Education, Electorate

Posted by Snapjudge மேல் மே 10, 2007

மாம்பழக்கூடையும் அரசியல் பீடையும்!

க.ப. அறவாணன்

இப்போது மாம்பழக் காலம்.

கூடை நிறைய மாம்பழங்கள் கிடைக்கின்றன. அவை அனைத்தும் நிறைந்த சுவை தருபவை. மாம்பழ வியாபாரி, கூடையிலுள்ள மாம்பழம் ஒவ்வொன்றையும் எடுத்துத் துடைத்து அக்கூடையிலேயே வைக்கிறார்.

நடுவே, ஒரு மாம்பழம் சிறிதாக அழுகத் தொடங்கி இருக்கிறது. அழுகல் வாடையும், மூக்கைத் தொடத் தொடங்கி விட்டது. நன்கு துடைத்துக் கூடையின் நடுவேயே வைத்து மேலும், கீழுமாக ஏனைய நல்ல மாம்பழங்களை அடுக்கிக் கூடையோடு அப்படியே விற்றுவிடலாம் அல்லது அழுகத் தொடங்கிய மாம்பழத்தை அகற்றி வீசி வெளியே எறிந்துவிட்டு, புதிய நல்ல மாம்பழமொன்றைக் கூடைக்குள் வைத்து விற்று விடலாம்.

நல்ல வியாபாரி இரண்டாவதையே செய்கிறார். காரணம், அழுகிய ஒரு மாம்பழம், ஓரிரு நாளில், தானும் முழுமையாக அழுகிக் கெடுவதுடன் ஏனைய மாம்பழங்களையும் அழுக வைத்துவிடும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். எனவேதான் அழுகிய மாம்பழம் என்று அறிந்தவுடனேயே அதனை மறைக்காமல் எடுத்து எறிந்துவிடுகிறார்.

இப்படித்தான் நாமும் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யத் தவறியதால் கூடை மாம்பழங்களே அழுகத் தொடங்கிவிட்டன. நாற்றம் மூக்கைத் துளைக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் மூன்று தூண்கள் என்று வர்ணிக்கப்படும் நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை என்பனவற்றுள் நாடாளுமன்ற அரசியல் அழுகத் தொடங்கிவிட்டது. அதனை மறைத்தோம். பொருள்படுத்தவில்லை. காலப்போக்கில் சரியாகிவிடும் என்று நம்பினோம். ஆனால் நடந்தது என்ன?

நாடாளுமன்ற அரசியலைத் தொடர்ந்து நிர்வாகமும், அழுகத் தொடங்கிவிட்டது. அதனைத் தொடர்ந்து நீதித்துறையும் அழுகத் தொடங்கிவிட்டது. இன்று இந்தியாவின் மெய்யான நிலை இதுதான்.

நம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் முப்பது சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் குற்றவாளிகள் (கிரிமினல்கள்) என்பது வேதனைக்குரிய விஷயம்.

உ.பி., சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நாற்பது சதவீதம் பேர் குற்றவாளிகள் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எந்த இடம் தூய்மையாக இருக்க வேண்டுமோ, அந்த இடம் தூய்மைக்கேடாக இருக்கிறது. மூன்றில் ஒரு பங்கு மாம்பழங்கள் அழுகிவிட்டால், ஏனைய மாம்பழங்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே வேண்டாம்.

நம் நாட்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நிர்வாக முறை பற்றி நிறைய வெளிச்சத்திற்கு வராத செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன. அரசு நிர்வாகப் பணிக்கு நியமிக்கப்பட்ட பின்பு ஓய்வுபெறும் வயதுவரை தன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது – இடம் மாற்றம் தவிர! என்று அறிந்துகொண்ட நம் அதிகாரிகள் பதவிக்காலத்தில் தங்களுடைய வசதிகளைப் பெருக்கிக் கொள்வதிலும், சாதிச்சங்கத்தை அமைப்பதிலும், பதவியில் உள்ள கட்சியினருடன் ஒட்டிக் கொள்வதிலும் இன்ன பிறவற்றிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களைப் பற்றி நாடு முழுக்க வழக்குகள் உள்ளன.

கடந்த அறுபது ஆண்டுகளில் இந்திய நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது என்பதை விவாதிக்க வேண்டியதே இல்லை. அது வெளிப்படையானது. ஏழை ஒருவன் விண்ணப்பம் போட்டால் அந்த மனு எத்தனை மேசைக்கு ஆமைபோல் ஊர்ந்துசென்று அடைய வேண்டிய இடத்தை அடைய முடியாமல் தவிக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம். ஆனால் இதை வெளிப்படையாக தெரிவிக்காதவர்களே மிகுதி என்பதுதான் உண்மை. வெளியே சொல்லிப் புலம்ப முடியாத அளவிற்கு நம் அதிகாரவர்க்க முறையும், சிவப்புநாடா முறையும் கடந்த அறுபது ஆண்டுகளில் கோப்புக் கோபுரமாகத் தடித்து விட்டன. அரசு நிர்வாகம் அனைத்தும் ஒருவழிப்பாதை என்பதால் நியாயத்தை ஒருவர் பெறவே முடியாது.

வெளிப்படை சட்டம் வந்துவிட்டாலும், எல்லாராலும் வழக்கு மன்றத்திற்குச் செல்ல முடியுமா? படிக்காதவர்கள் மிகுந்த நாட்டில், பணமும் செல்வாக்கும் இல்லாத ஏழை நாட்டில்!

இங்கேதான் நம் நீதிமன்றங்கள் வருகின்றன. வழக்கறிஞர் என்பவர் ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர் என்று வேறுபாடு பாராமல் பணம் பிடுங்குபவராகச் செயல்படுகிறார். ரிட் மனு, ஜாமீன், தள்ளிவைப்பு (வாய்தா), மேல்முறையீடு என்பனவற்றின் பெயரால் நீதி நிலைநாட்டப் பெறுகிறதா, நீட்டப்படுகிறதா என்பது இந்திய நீதித்துறை சட்டதிட்டத்தை வகுத்த அரசியல் சாசன அமைப்பாளருக்கே வெளிச்சம். ஏறத்தாழ நானூறு கோடி வழக்குகள் நிலுவையில் ஆண்டுக்கணக்கில் தூங்குகின்றனவாம்.

அரசியல்வாதிகள், துணிந்து தவறு செய்கிறார்கள். அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் தவறிழைக்கிறார்கள். அவர்களைப் பற்றி முறையீடு செய்து நீதி பெற வேண்டிய ஒரே இடம் நீதித்துறை. அந் நீதித்துறையும் நெறி மாறிவிட்டால் யாரிடம் சென்று முறையிடுவது என்று கதறுகிறோம். சிலர், ஊழல் சகஜம்தான், லஞ்சம் சகஜம்தான், அனுசரித்துப் போக வேண்டியதுதான் என்ற நிலைமைக்கு வந்துவிட்டார்கள். இந்தச் சிலரும், பலராகி விட்டார்கள்.

மாணவர்கள் சேர்க்கை, அரசுப் பணிகளில் நியமனம், இடமாற்றம், உரிமம், பர்மிட் போன்ற அனைத்திற்கும் இத்தனை ஆயிரம், இத்தனை லட்சம் என்று பட்டியல் போடாததுதான் பாக்கி. ஆனால், இப்படிப் பட்டியல் நீர்மேல் எழுத்தாகவும், வான்மேல் கல்வெட்டாகவும் இடைத்தரகர்கள் நாவில் கையெழுத்து இடாத தாளில் நாளும் நடமாடுகிறது. இந்நாட்டை இனி யார் காப்பாற்றுவார்? ஒவ்வொன்றுக்கும் காசு தர முடியாத ஏழை, தம் பிள்ளைகளை எப்படிப் படிக்க வைக்கப் போகிறார்? தன் பிள்ளைகளுக்கு எப்படி வேலை வாங்கப் போகிறார்? அவரிடம் ஆயிரக்கணக்கிலோ, லட்சக்கணக்கிலோ கொடுக்கப் பணமில்லையே. அவர் அன்றாடங்காய்ச்சி.

இந்த நிலைமை இப்படியே தொடர வேண்டியதுதானா? இதற்கு முடிவே இல்லையா?

(கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.)

Posted in abuse, Admin, Assembly, Attorney, candidates, Citizen, Convicts, Corruption, Courts, Criminals, EC, Election, Govt, Judge, Jury, Justice, kickbacks, Law, Lawyer, Mango, MLA, MLAs, MP, MPs, Order, Politics, Polls, Poor, Power, Rich, Seller, Students, UP, Vote, voter | Leave a Comment »