நூலகரில்லா நூலகங்கள்!
எம். முத்துச்சாமி
“”நூலகரில்லா நூலகங்கள் பூசாரியில்லாத கோயில்கள்”.
ஒரு துப்புரவுப் பணியாளரால் எப்படி ஒரு கோயிலைச் சிறப்பாக முறைப்படி பூசைகள் செய்து பராமரிக்க முடியாதோ, அதேபோல நூலகர்கள் இல்லாமல், ஒரு நூலகத்தை, தாற்காலிகமாகத் தினக்கூலிப் பணியாளர்கள் மூலம் செம்மையாக நிர்வகித்து நடத்த முடியாது.
இன்று நூல்களுக்குத் தரப்படும் முன்னுரிமை நூலகர்களுக்குத் தரப்படுவதில்லை. ஆனால், இன்று தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஐந்து பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும், தொலைதூரக்கல்வி முறை மூலம் ஆயிரக்கணக்கான நூலகப் பட்டதாரிகளை (பி.எல்.ஐ.எஸ்; எம்.எல்.ஐ.எஸ்; எம்.பில்;) போட்டி போட்டுக் கொண்டு உருவாக்கி வேலை வாய்ப்பில்லாத பட்டதாரிகளின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன. கல்வியில் சிறந்த நமது தமிழ்நாட்டில் எட்டு பல்கலைக்கழகங்களில், “பல்கலைக்கழக நூலகர்’ பதவி பல்லாண்டுகளாகவே நிரப்பப்படாமல் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. 150 ஆண்டுகள் புகழ்பெற்ற “”அன்னைப் பல்கலைக்கழகமாம்” சென்னைப் பல்கலைக்கழகத்தில், 12 பல்கலைக்கழக உதவி நூலகர்கள் பதவி பல்லாண்டுகளாகவே காலியாகவே வைக்கப்பட்டுள்ளன.
50-க்கும் மேற்பட்ட நமது அரசு கலைக்கல்லூரிகளில் பல்லாண்டுகளாகவே “நூலகர் பதவி’ காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. இதைப்பற்றி புதுதில்லியிலுள்ள பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவிடம் (யு.ஜி.சி.) கேட்டால் – நாங்கள் விதிகளைத் தருவோம், நிதியினைத் தருவோம் – ஆனால் காலியாக வைக்கப்பட்டிருக்கும் நூலகர்கள் பதவி பற்றி கேட்கும் உரிமை எங்களுக்கு இல்லை என்று கூறுகிறார்களாம். ஆனால் யு.ஜி.சி.யின் கீழ் இயங்கும் “பல்கலை, கல்லூரி தர நிர்ணயக்குழு’ (நாக்) அவ்வப்போது வந்து, நூலகர் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் நூலகங்கள் இருந்தால்கூட நமது பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் “நட்சத்திரங்களை’ வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தன்னாட்சி உரிமையையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்த நிலைமை? இந்த நிலை மாற யாரிடம் முறையிட வேண்டும்?
நமது தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் நூலகம் உண்டு. ஆனால் நூலகர் நியமனம் இல்லை. நமது அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகியவற்றில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளில் நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நமது மாநிலத்தில் தனியார் பள்ளிகளில் மட்டும் நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நூலகவியல் துறையில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமான நமது தமிழ்நாடு, நூலகர் நியமனத்தில் மட்டும் ஏன் மிகவும் பின்தங்கி இருக்கிறது?
பொது நூலகத்துறை கிளை நூலகங்களிலும் – முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலை நூலகர் பதவிகள் பெரும்பாலும் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நூலகங்களில் மிகக்குறைந்த தினக்கூலி முறையில் தாற்காலிகப் பணியாளர்கள்தான் கிளை நூலகங்களை நிர்வகித்து வருகின்றனர். சுற்றுப்புறச்சூழல் சரியாக அமையாத, போதிய காற்று, வெளிச்சம், இருக்கைகள் இல்லாத நிலையிலேயே பெரும்பாலான கிளை நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
நூலகத் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதன் பெருமுயற்சியால், நிறைவேற்றப்பட்ட 1948-ம் ஆண்டு பொது நூலகச் சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் வீட்டுவரி செலுத்தும் அனைவரும் 10 விழுக்காடு நூலக வரி செலுத்துகிறோம். நம்மிடம் நூலக வரி வசூலிக்கும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் ஆண்டுதோறும் வசூலிக்கும் தொகையை அந்த ஆண்டே பொது நூலகத்துறைக்குத் தாமதமின்றி செலுத்துகிறார்களா? அப்படி ஒழுங்காகச் செலுத்தாதவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? அதற்கு அரசு என்ன விதிமுறைகளை வகுத்துள்ளது?
சென்னை மாநகராட்சி மேயர் தெரிவித்தபடி சென்ற ஆண்டு சொத்துவரி வசூல் ரூ. 238 கோடியாகும். இதில் 10 விழுக்காடு நூலக வரி என்றால், கிடைத்திருக்கும் தொகை ரூ. 24 கோடியாகும். இந்தத் தொகையைக் கொண்டு, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிளை நூலகங்களுக்குத் தேவையான நூலகர்களை நியமனம் செய்வதோடு, வேண்டிய கட்டட வசதிகள், இருக்கை வசதிகள் செய்து தர இயலாதா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. இன்றைய உடனடித் தேவை, நல்ல திட்டங்களும், சிறந்த நிர்வாகமுமேயாகும்!
சென்னை நகரில், உலகத்தரம் வாய்ந்த ஒரு நூலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பு, உள்ளூர் கிளை நூலகங்கள், கல்லூரி நூலகங்களைச் செம்மைப்படுத்த நாம் என்ன செய்யப் போகிறோம்?
(கட்டுரையாளர்: செயலாளர், தமிழ்நாடு நூலகச் சங்கம்).