ஐ நா வின் மனித உரிமை கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டும் என ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.
ஐநாமன்றத்தின் மனித உரிமை கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டியதன் தேவை தற்போது மேலும் அதிகரித்திருப்பதாக அமெரிக்காவில் இருந்து செயல்படும் மனித உரிமை அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகுவதாக அறிவித்திருப்பதை தொடர்ந்து, நார்வே தலைமையிலான போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினரின் பணி, ஜனவரி 16ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்று கணக்கிடப்படுகிறது.
ஏற்கெனவே, இந்த கண்காணிப்பாளர்கள் தங்களின் பணியிடங்களிலிருந்தும், பணிகளிலிருந்தும், படிப்படியாக பின்வாங்கத் துவங்கியிருப்பதாகவும், இன்னமும் சில நாட்களில் இது முழுமையடையும் என்றும், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் சார்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்ததாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பின்னணியில், ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பைச் சேர்ந்த எலைன் பியர்சன் அவர்கள், ஐநா மன்றத்தின் மனித உரிமை கண்காணிப்பாளர்களின் பணி இலங்கையில் உடனடியாக தேவைப்படுவதாக கூறியுள்ளார்.
போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு என்பது பெருமளவு குறைபாடுகளுடைய அமைப்பாக இருந்தாலும், பொதுமக்களின் மனித உரிமை மீறல்களை குறைப்பதில் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் கண்காணிப்பாளர்கள் பெருமளவு உதவியதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அவர்களின் பணிகள் முடிவுக்கு வரும் சூழலில், ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களின் பணி என்பது இலங்கையில் முன் எப்போதையும் விட மேலதிகமாக தேவைப்படுவதாக எலைன் பியர்சன் அவர்கள் கூறியிருக்கிறார்.
நார்வேயின் பணிகள் மீள்வரையறை செய்யப்படும் என்கிறது இலங்கை அரசு
![]() |
![]() |
அமைச்சர் ரோஹித போகல்லாகம |
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து ஒருதலைபட்சமாக விலகிக் கொண்ட இலங்கை அரசு, இலங்கை சமாதான முயற்சிகளில் இதுவரை அனுசரணையாளர்களாக பணியாற்றி வந்த நார்வே அரசின் பணியை மீள்வரையறை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
யுத்த நிறுத்த உடன்படிக்கைகியிலிருந்து அரசு விலகுவது தொடர்பாக கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கு இன்று இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகம விளக்கினார்.
நார்வே அரசைப் பொறுத்த வரையில் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு முயற்சியில் இதுவரை ஒரு கட்டமைப்புக்கு உட்பட்ட பணிகளையே செய்து வந்தனர் எனவும், தற்போது யுத்த நிறுத்த உடன்படிக்கை என்பது இல்லை என்கிற நிலையில், அவர்களுக்கான புதிய வரையறைகளை தெரிவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் ரோஹித போகல்லாகம தெரிவித்துள்ளார்.
எனினும் புதிய வரைமுறைகள் என்ன என்பது இன்னமும் முடிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளிடம் அரசின் நிலைப்பாடு குறித்து தாம் விளக்கியபோது, அரசின் இவ்வாறான நிலைப்பாடு குறித்து யாரும் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை எனவும் இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் கூறினார்.
இவ்வாறான ஒரு நிலையில் அரசின் நிலைப்பாட்டை, சர்வதேச சமூகம் நன்கு உணரக்கூடிய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். அவரது கருத்துக்களை உள்ளடக்கிய செய்திக் குறிப்பை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது: இந்தியா கருத்து
![]() |
![]() |
இந்திய அரசின் பேச்சாளர் நவ்தேஜ் சர்னா |
இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது என்று உறுதியாக நம்புவதாக இந்தியா கருத்துத் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியா முதல் முறையாக வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவித்திருக்கிறது.
இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இலங்கையில் நடைபெறும் வன்முறைகளையும், மனித சமுதாயம் படும் வேதனைகளையும் குறைப்பதற்கு எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் இந்தியா வரவேற்கிறது. துரதிர்ஷ்டவசமாக, சமீபகாலமாக இலங்கையில் வன்முறையும், பதற்றமும் மோதல்களும் அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில், ஒன்றுபட்ட இலங்கைக்குள், அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, அரசியல், சட்டம் மற்றும் பிற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.
அப்படிப்பட்ட தீர்வின் மூலம்தான், வன்முறையால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியும். இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாக அமையாது என்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா தெரிவித்திருக்கிறார்.
அதே நேரத்தில், இந்தியாவில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியான பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள் ஆரம்பம்
![]() |
![]() |
வேட்பு மனு தாக்கல் தொடக்கம் |
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெறாத 9 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்த அரசு தீர்மானித்துள்ள நிலையில், அதற்கான வேட்புமனுக்கள் இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபைக்கும், 8 பிரதேச சபைகளுக்கும் நடைபெறவிருக்கும் இத்தேர்தலில் இரண்டு லட்சத்து எழுபதாயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக உதவி தேர்தல் ஆணையர் கிருஷ்ணானந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு வசதியாக கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் குறிப்பிட்ட சபைகளுக்கான தேர்தல்கள் இப்போதுதான் நடைபெறவுள்ளன.
இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பாதுகாப்பு ஆய்வாளரின் கருத்து
![]() |
![]() |
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையில் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு விலகிவிட்ட நிலையில், உடனடியாகப் போர் வருமா என்பதை தன்னால் உறுதியாகக் கூற முடியவில்லை என்று தெரிவித்த இலங்கை பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ், அதே நேரம் விடுதலைப் புலிகள் பலம் இழந்து விட்டார்கள் என்று செய்யப்படும் பிரசாரத்தை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் கூறினார்.
இலங்கையில் போர்களத்தில் நடக்கும் சம்பவங்களை அப்படியே எழுத முடியாத சூழல் ஊடகங்கள் மத்தியில் இருப்பதன் காரணமாக போரில் இலங்கை அரசு படைகளின் கை ஒங்குவது போன்ற எண்ணம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைப் பாதுகாப்பு பகுப்பாய்வாளர் இக்பால் அத்தாஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் தினந்தோறும் பெரிய அளவில் இழப்புக்களை சந்திப்பதாக அரசு வெளியிடும் புள்ளி விபரங்களின் நம்பகத்தன்மை குறித்த கருத்து வெளியிட்ட இக்பால் அத்தாஸ், இலங்கையின் தற்போதைய அரசு மட்டுமல்லாமல், முந்தைய அரசுகள் வெளியிட்ட இத்தகைய புள்ளி விபரங்களை கணக்கிட்டால் இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூட தற்போது இருக்க மாட்டார்கள் என்று இக்பால் அத்தாஸ் தெரிவித்தார்.
திருகோணமலைக்கும் யாழ் குடாநாட்டிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம்
![]() |
![]() |
கிரீன் ஒசியானிக் கப்பல் |
திருகோணமலைக்கும் யாழ் குடாநாட்டுக்குமான பயணிகள் கப்பல் சேவையினை தற்காலிகமாக இடைநிறுத்தும் நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருகோணமலை பட்டணமும் சூழலுக்குமான பிரதேச செயலாளர் சசிகலா ஜலதீபன் தெரிவித்திருக்கின்றார்.
கப்பல் பயணசேவை முகவர் நிலையம் இதனை அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இத்தகைய நடவடிக்கையின் விளைவாக திருகோணமலைக்கும் யாழ் குடாநாட்டுக்கும் இடையே கடந்த பதினோரு மாத காலமாக இடம்பெற்று வந்த கடற்பயண சேவைகள் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் திருத்த வேலைகளுக்கென கொழும்புக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் பத்து தினங்களில் மீண்டும் சேவைக்கு விடப்படும் எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்திருக்கின்றார்.
விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரம் அடந்த நிலையில், ஏ ஒன்பது வீதி மூடப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ஏழாம் திகதி திருகோணமலைக்கும் யாழ் குடாநாட்டின் காங்கேசன்துறைக்கும் இடையே கிரீன் ஓசியானிக் என்ற பயணிகள் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.
இந்தக் கப்பல் திருகோணமலைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் தனது சேவையினை மேற்கொண்டு வந்த நிலையிலேயே இந்த சேவை திருத்த வேலைகளுக்கென இடைநிறுத்தப்படவுள்ளது.