பிரான்ஸ் மக்கள் அனைவருக்காகவும் பாடுபடுவேன்: புதிய அதிபர் உறுதி
பாரீஸில் உள்ள கன்கார்டு சதுக்கத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றுகிறார், பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள (இடமிருந்து 2-வது) நிகோலஸ் சர்கோசி. உடன் (இடமிருந்து) பாதுகாப்புத் துறை அமைச்சர் மிச்செலா எலியட் மேரி, சர்கோசியின் மனைவி செசிலியா மற்றும் அவரது ஆலோசகர் பிரங்காய்ஸ் ஃபில்லன் (வலது ஓரம்).
பாரீஸ், மே 5: பிரான்ஸ் மக்கள் அனைவருக்காகவும் பாடுபடுவேன் என்று கூறியுள்ளார் பிரான்ஸின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வலதுசாரித் தலைவர் நிகோலஸ் சர்கோசி (52).
அமெரிக்க அதிபர் புஷ், பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், ஜெர்மன் பிரதமர் (சான்சலர்) மெர்க்கரா ஏஞ்சல் மற்றும் பல ஐரோப்பியத் தலைவர்கள் சர்கோசிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
தற்போது பிரான்ஸின் அதிபராக உள்ள ஜேக்கஸ் சிராக்கும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பாரீஸிலும் பிற நகரங்களிலும் நூற்றுக்கணக்கில் திரண்ட சர்கோசி எதிர்ப்பாளர்களை போலீஸôர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், நீரைப் பீய்ச்சியடித்தும் கலைத்து விரட்டினர்.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் நிகோலஸ் சர்கோசி, 53 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. வலதுசாரி (பழமைவாத) தலைவரான இவர், பிரான்ஸில் அடிப்படைவாதச் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என குரல் கொடுத்து வருபவராவார். இவரது கருத்துகளுக்கு பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் உள்ளன.
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் கட்சித் தலைமையகத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய சர்கோசி, “”எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்காகவும் குரல் கொடுப்பேன்” என்றார்.
“”என்னைப் பொருத்த வரையில், நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் பிரான்ஸ் தேசம் என்பது அதையெல்லாம் தாண்டி ஒன்றுதான். பிரெஞ்சு மக்கள் அனைவருக்குமான அதிபராக நான் இருப்பேன். அவர்கள் அனைவருக்காகவும் பாடுபடுவேன்” என்று கூறியுள்ளார் சர்கோசி.
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சேஷலிஸ்டு கட்சி வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தத்திற்கு தயாராகிறது பிரான்ஸ்
 |
 |
பிரான்சின் புதிய அதிபர் நிகோலோ சர்கோசி |
பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக வலதுசாரி அரசியல்வாதியான நிக்கோலோ சர்கோசி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். 53 சதவீத வாக்குகளைப் பெற்று சோஷலிசக் கட்சியின் வேட்பாளாரான செகொலீன் ரோயேலை அவர் வெற்றி கொண்டுள்ளார்.
அவரது வெற்றியை தலைநகர் பாரிஸில் அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அவரது வெற்றியின் மூலம் பிரான்ஸ் ஒரு அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தத்த காலத்திற்கு தயாராகி வருகிறது.
இம்மாதம் 16 ஆம் தேதியன்று பதவியேற்கவுள்ள அவர், பதவி விலகும் அதிபர் ஜாக் சிராக் அவர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்த கொள்கைகளால் ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்யவுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக அடுத்த மாதம் பிரான்ஸில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றியை கைப்பற்ற அவர் முயற்சிகளை மேற்கொள்வார் என செய்தியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
மாறுதல் வரும்!
பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் பிரான்ஸýக்கு எடுத்த காரியத்தை முடிக்கும் ஆளுமை உள்ள தலைவர் அவசியத் தேவை. நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் சர்கோசி அத்தகைய ஆளுமை உள்ள மனிதர்தான்.
அவருக்கு வாக்களித்த மக்கள் பலரும் அவரை ஒரு செயல்வீரராகக் கருதுகிறார்கள். “சர்கோசி எப்போதும் நினைத்ததைச் சாதிக்காமல் ஓயமாட்டார். எப்போதும் ஓர் அடி முன்னால் இருப்பவர்’ என்கின்றனர். அவரை எதிர்ப்பவர்கள் பயப்படுவதற்குக் காரணமும் இந்த அதிவேகம்தான்.
இருப்பினும் இன்றைய அதிரடி நடவடிக்கைகள்தான் பிரான்ஸ் பொருளாதாரத்தை மீண்டும் தூக்கி நிறுத்த முடியும்.
பிரான்ஸில் வேலையில்லாத் திண்டாட்டம் 9 சதவீதமாக உள்ளது. 24 வயதுக்குள்பட்ட இளைஞர்களில் 25 சதவீதம் பேருக்கு வேலை இல்லை. வேலை அளிக்கப்படும் முறையும் பணிப்பாதுகாப்பு அளிப்பதாக இல்லை. இதனால் பிரான்ஸில் இளைஞர்கள் வீதியில் இறங்கி, போராட்டங்களையும் வன்முறைகளையும் நடத்தினர்.
அனைவருக்கும் வேலைவாய்ப்பைத் தரும் வகையில் பிரான்ஸ் அரசு கொண்டுவந்த “வாரத்துக்கு 35 மணி நேர வேலைத் திட்டம்’ பணியாளர்களுக்கும் பயனளிக்கவில்லை; நிறுவனங்களுக்கும் பயனளிக்கவில்லை. கொடுத்த சம்பளத்துக்கு வேலை வாங்க இயலாத நிலை ஏற்பட்டதால் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.
பணியாளர்களுக்கு சம்பளம் உயராத நிலையில் பொருள்களின் விலை மட்டும் உயர்ந்து கொண்டே இருப்பதும் மற்றொரு பிரச்சினை. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த பிரெஞ்சு அரசால் முடியவில்லை. பிரெஞ்சு நாணயத்தைக் கொடுத்து ஐரோப்பிய நாணயமாக மாற்றுவதில் ஒவ்வொரு நாளும் சிக்கல். தீர்மானிக்க இயலாதபடி விலைஉயர்வில் ஏற்றத் தாழ்வுகள்.
சர்கோசின் தேர்தல் முழக்கமே அதிகபட்சம் 35 மணிநேர வேலை உறுதி என்பதை குறைந்தபட்சம் 35 மணி நேர வேலை உறுதி என்று மாற்றுவேன் என்பதுதான். பிரெஞ்சு மக்களுக்கான வேலைவாய்ப்புகள் வேறு நாடுகளுக்குப் போவதைத் தடுப்பேன் என்றும் அவர் உறுதி கூறியுள்ளதால் நல்ல மாற்றத்தை எதிர்நோக்கலாம்.
மத அடையாளச் சின்னங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவது தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வருவதும் சீக்கிய மாணவர்கள் தலைப்பாகை அணிந்து வருவதும் பிரச்சினைக்குரியதாக மாறின. வெற்றி உரையாற்றியபோது “பர்தா அணியும் பெண்களை விட்டுவிடமாட்டோம்’ என்று கூறியிருப்பதன் மூலம் புதிய மாற்றங்கள் வரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரான்ஸில் வசிக்கும் 20 சதவீதம் பேர், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்த பிரெஞ்சு காலனிகளிலிருந்து வந்தவர்கள். இவர்கள் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள். என்றாலும் இன்றைய பொருளாதார நெருக்கடிகளும், வேலையில்லாத் திண்டாட்டமும் பிரெஞ்சு “மண்ணின் மைந்தர்களிடம்’ புதிய மனநிலையை உருவாக்கியுள்ளன. பிரெஞ்சு காலனியிலிருந்து வந்தவர்களையும் குடிபெயர்ந்தவர்களாகவே கருதும் நிலை உருவாகியுள்ளது. இவர்களுக்காக அரசு செலவிடும் தொகை வீணானது அல்லது அளவுக்கு அதிகமானது என்ற கருத்து உள்ளது.
உதாரணமாக, இந்தியாவில் புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் சுமார் 6 ஆயிரம் பேர் இருக்கின்றனர். இவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்களிப்பதோடு சரி. ஆனால் பிரெஞ்சு மக்களுக்கு அளிக்கப்படும் அத்தனை சலுகைகளும் இவர்களுக்கு உண்டு. விசா இல்லாமல் பிரான்ஸýக்கு செல்லலாம். மாதம்தோறும் உதவித்தொகைகளும் வந்து கொண்டிருக்கின்றன.
அதிபர் சர்கோசி முறையற்ற குடிபெயர்வுக்கு எதிரான மனிதர். இதனால் புதுச்சேரியில் சர்கோசிக்கு எதிர்ப்பு அதிகம். அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் அவர் படங்கள் கிழித்தெறியப்பட்டன.