என்ன தேசமோ?
இரண்டாவது உலகப் போருக்குப் பின் சுதந்திரம் அடைந்த சுமார் 180 நாடுகளில், தொடர்ந்து ஜனநாயக நாடாகவும், சர்வாதிகாரத்தின் நிழல்படியாத நாடாகவும் இந்தியா மட்டுமே தொடர்கிறது என்பது மகிழ்ச்சியான விஷயம். அதேசமயம், நமது ஜனநாயகம் அரசியல் கட்சிகளாலும் அரசியல்வாதிகளாலும் கேலிக்கூத்தாக மாற்றப்படுகிறதே என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.
நடந்து முடிந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கொடுத்திருக்கும் பொதுமக்களைப் பாராட்டுவதா, இல்லை கிரிமினல் குற்றவாளிகள் என்றும் பாராமல் சுமார் 150 பேரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களே என்று வருத்தப்படுவதா? கடந்த சட்டப்பேரவையில் கிரிமினல் குற்றம்சாட்டப்பட்ட 206 உறுப்பினர்கள் இருந்ததுபோக இப்போது அந்த எண்ணிக்கை 155 ஆகக் குறைந்திருக்கிறது என்று சமாதானம் செய்து கொள்வதா?
பகுஜன் சமாஜ் கட்சியின் 206 உறுப்பினர்களில் 70 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. இந்த லட்சணத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதுதான் தனது முதல் கடமை என்கிற முதல்வர் மாயாவதியின் அறிக்கையைப் படித்தால் சிரிப்புதான் வருகிறது.
இது என்னவோ உத்தரப் பிரதேசம் சம்பந்தப்பட்ட விஷயம் என்று நினைத்து ஒதுக்கிவிட முடியாது. தேசிய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி, நாடாளுமன்றத்திற்கும் சட்டப்பேரவைகளுக்கும் போட்டியிடும், வெற்றி பெறும் நபர்களில் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட பலர் இடம் பெறுவது சகஜமாகிவிட்டது.
தற்போதைய நாடாளுமன்றத்தை எடுத்துக்கொண்டால், கிரிமினல் பின்னணி உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 136. இவர்களில் சுமார் 26 பேர் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள். குறிப்பாக தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ராஷ்ட்ரீய லோகதளம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள்தான் இந்தப் பட்டியலில் முக்கியமான அங்கம் வகிக்கிறார்கள்.
இந்திய ஜனநாயகம் பாராட்டுக்குரியது என்பது உண்மை. படிப்பறிவும் பொருளாதார வசதிகளும் இல்லாமல் இருந்தாலும், சராசரி வாக்காளர் அதிபுத்திசாலித்தனமாகவும் தெளிவாகவும் தனது வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதும் உண்மை. ஆனால், நமது அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் குற்றவாளிகளாகவும், கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாகவும் இருந்தால் அந்த புத்திசாலி வாக்காளரால் என்னதான் செய்துவிட முடியும்?
சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத்தில், அரசியல் கட்சிகள் கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்டன. அவர்களிடம் செயல்திட்டங்கள் இருந்தன. தொலைநோக்குப் பார்வை இருந்தது. லட்சியம் இருந்தது. காலப்போக்கில், தேர்தலில் போட்டியிடுவது, வெற்றி பெறுவது, ஆட்சியைப் பிடித்து அதன் மூலம் வசதிகளைப் பெருக்கிக் கொள்வது என்பவை மட்டுமே குறிக்கோளாக மாறிவிட்ட நிலையில், பணபலமும் குண்டர்கள் பலமுமே வெற்றிக்குப் போதுமானது என்று அரசியல் கட்சிகள் நினைக்கும் நிலையில், கிரிமினல்கள் அரசியல் தலைவர்களாக வளைய வருவதில் அதிசயம் இல்லைதான்.
இந்த நிலைமை மேலும் தொடர்ந்தால், கிரிமினல் பின்னணிதான் அரசியல் வெற்றிக்கு அடித்தளம் என்கிற நிலைமை ஏற்பட்டால் அதன் விளைவு விபரீதமாக இருக்கும். பொதுமக்களுக்கு மக்களாட்சித் தத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போகும் என்பது ஒருபுறம். இந்த “அலட்சிய’ அரசியல்வாதிகள் சுயநல சக்திகளிடம் விலைபோய்விடுவார்கள் என்பது மறுபுறம். மொத்தத்தில், தேசம் விலைபேசப்பட்டுவிடும்.
இதற்கு முடிவுதான் என்ன? படித்தவர்கள், விஷயம் தெரிந்தவர்கள், சேவை மனப்பான்மை உடையவர்கள், மொத்தத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்கள் சிந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இது காலத்தின் கட்டாயம்!