Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Mushraf puts war clouds to distract Media from Baluchisthan

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 8, 2006

பாக். துருப்புகள் நடமாட்டம்

உள் நாட்டில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுவிட்டால் மக்களின் கவனத்தைத் திசை திருப்ப புதுப்புது உத்திகளைக் கையாள்வது சில நாடுகளின் வழக்கமாக உள்ளது. இந்திய எல்லையில் பாகிஸ்தான் துருப்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்ற தகவல் இதைத்தான் உறுதிப்படுத்துகிறது.

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பழங்குடி இனத் தலைவரும் காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவின் நிலைக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தவருமான அக்பர் பக்டி மர்மமான முறையில் கொல்லப்பட்டது உள்நாட்டில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆப்கன் எல்லையில் தலிபான்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில்தான் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் துருப்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் சகோடி பகுதியில், அதாவது இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் உள்ள நெüஷா நகரை ஒட்டியுள்ள எல்லையில் கணிசமாகத் துருப்புகள் நடமாட்டம் காணப்படுகிறது. இதை ராணுவ அதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் இதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என்றும் பதிலடியாக நமது துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஏற்கெனவே 2 முக்கிய போர்களிலும், கார்கில் பகுதியில் ஊடுருவியபோதும் கிடைத்த அனுபவத்தை பாகிஸ்தான் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. எனவே தாக்குதல் திட்டம் இல்லையென்றாலும் வழக்கம்போல் காஷ்மீரில் குழப்பம் ஏற்படுத்தி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் மக்களிடையே தமக்கு அனுதாபத்தைத் தேட முஷாரப் முற்படலாம் என்று கணிக்கப்படுகிறது.

இந் நிலையில் விரைவில் கியூபாவில் நடைபெறவுள்ள அணி சாரா நாடுகளின் தலைவர்கள் கூட்டத்துக்குச் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங் அங்கு வரும் பாகிஸ்தான் அதிபர் முஷாரபைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார். பயங்கரவாதிகள் ஊடுருவல் பிரச்சினையை அவர் அப்போது எழுப்பக்கூடும். இது தொடர்பாகப் பிரதமரைச் சந்தித்த இடதுசாரித் தலைவர்கள், பாகிஸ்தானிலிருந்து மேற்கொள்ளப்படும் பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளுமாறு அதிபர் முஷாரபிடம் வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

இரு நாடுகளின் வெளியுறவுச் செயலர்கள் இடையே ஜூலையில் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து நின்றுபோனது. அதை மீண்டும் தொடங்கி, அதையே இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக வைத்துக் கொள்ளலாம் என்றும் பிரதமரிடம் யோசனை கூறியுள்ளனர்.

மும்பைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஒருவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தாம் பாகிஸ்தான் ராணுவத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்து விலகி, பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பாகிஸ்தானில் பயிற்சி பெற்று இந்தியாவுக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கான பயிற்சி முகாம் உள்ளதா என்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று முஷாரப் தொடர்ந்து கூறி வருவது ஏற்புடையதாக இல்லை.

பாகிஸ்தானுடன் உறவுகளை வளர்த்துக்கொள்ள பஸ், ரயில் போக்குவரத்துகள் உள்ளிட்ட பல்வேறு நல்லெண்ண முயற்சிகளை இந்தியா மேற்கொண்டும், அற்பக் காரணங்களைக் கூறி இந்தியத் தூதரக அதிகாரியை வெளியேற்றியது பாகிஸ்தான். இத்தகைய நடவடிக்கைகள்தான் நல்லுறவுக்குத் தடையாக இருப்பவை என்பதை உணர்ந்து ஆக்கபூர்வ பேச்சுவார்த்தைக்கு முஷாரப் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பின்னூட்டமொன்றை இடுக