Legislative & Rural Village Libraries – Status
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2006
படிப்போர் இருந்தும் பயன்படா நிலையில் 10 லட்சம் புத்தகங்கள்: தமிழகத்தில் காணாமல் போன 12,700 நூலகங்கள்!
வீர.ஜீவா பிரபாகரன்
மதுரை, செப்.1: தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நூலகங்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் ரூ.6.5 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட 12,700 நூலகங்களைத் தற்போது காணவில்லை.
புத்தகம் படிக்கும் ஆர்வத்தைக் கிராமப்புற மக்களிடம் வளர்க்க 2000-ம் ஆண்டில் திருவள்ளுவர் தினமான ஜனவரி 16-ம் தேதி 12,787 கிராமங்களில் அய்யன் திருவள்ளுவர் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இவ்வாறு, ஒரே நாளில் பல ஆயிரக்கணக்கான நூலகங்களைத் திறந்த தமிழக அரசின் சாதனையைப் புத்தக விரும்பிகள் அனைவரும் உலக சாதனையாகப் பாராட்டி மகிழ்ந்தனர்.
இந்த நூல் நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 75 நூல்கள் வீதம் 10 லட்சம் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
அய்யன் திருவள்ளுவர் நூல் நிலையங்கள் ஊராட்சி அலுவலங்களின் ஒரு பகுதியில் செயல்படும் என அரசு அறிவித்தது. மேலும் இங்கு வரும் வாசகர்கள் அமர்ந்து படித்து செல்ல மேஜை, நாற்காலிகளும் வழங்கப்பட்டன. பல ஊராட்சிகளில் புத்தகங்களை வைக்க போதிய கட்டடம் இல்லை.
தொடக்க காலத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் குறிப்பிட்ட நேரங்களில் பொதுமக்கள் நேரில் வந்து புத்தகங்கள் படிப்பதற்கும், எடுத்துச் செல்வதற்கும் உரிய வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது.
பின்னர் ஊராட்சித் தலைவர்கள் எப்போது வருவார்களோ அப்போது மட்டும் இந்த நூலகங்கள் செயல்படும் நிலை ஏற்பட்டது. இதனால், நூலகத்துக்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது.
இதையடுத்து, நூலகத்திற்கு வழங்கப்பட்ட மேஜை, நாற்காலிகள் ஊராட்சி நிர்வாகப் பணிக்கு பயன்படுத்தப்பட்டன.
நூல்கள் அனைத்தையும் சாக்கில் கட்டிவைத்துவிட்டு, புத்தகங்கள் வைக்கும் “ரேக்’கை, அலுவலக கோப்புகள் வைப்பதற்கே பெரும்பாலான ஊராட்சிகள் பயன்படுத்தி வருகின்றன.
தற்போது மாவட்டத்திற்கு ஒரு சில ஊராட்சிகளில் மட்டும் அறிவொளி இயக்கத்தினர், தன்னார்வ அமைப்பினர், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மூலம் இந்த நூல் நிலையங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான ஊராட்சிகளில் இந்த நூல் நிலையங்கள் காணாமல் போய்விட்டன.
ஊராட்சித் தலைவர்கள் சிலரிடம் இது குறித்து கேட்டபோது:
“அய்யன் திருவள்ளுவர் நூல் நிலையத்தை நிர்வகிக்க ஊராட்சியில் தனியாக ஆள் இல்லை. மேலும், ஒரு முறை நூல்கள் கொடுத்ததுடன் சரி, அதைத் தொடர்ந்து நடத்துவதற்கான நடைமுறைகளை அரசு மேற்கொள்ளவில்லை. ஆண்டுக்கு 50 நூல்கள் வீதம் அளித்திருந்தால்கூட, இந்த நூல்நிலையங்கள் தொடர்ந்து செயல்பட்டிருக்கும்’ என குறிப்பிட்டனர்.
கிராமப்புற இளைஞர்கள் பலரிடம் பேசியபோது,” நல்ல புத்தகங்களைப் பேசும் தெய்வம் என்று வாசகர்கள் கருதுவது உண்டு. அவ்வாறு, நற்சிந்தனை அளிக்கும் புத்தகங்களையும், பொது அறிவு புத்தகங்களையும் அய்யன் திருவள்ளுவர் நூல்நிலையங்களுக்குத் தொடர்ந்து அளிக்க அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று நூலகம் இல்லா கிராமம் தமிழகத்தில் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கும்’ என்றனர்.
குறைபாடுகள் இருப்பினும் இந்தக் கிராமப்புற நூல் நிலையங்கள் முழுமையாக மலரத் துடிக்கும் வாச மலர்களாகவே உள்ளன. இவை மலருமா ? என்பதை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.
மறுமொழியொன்றை இடுங்கள்