3 Rs – Read, wRite & liteRacy: Basic Education is a must
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2007
முன்னேற்றத்தின் முதற்படி எழுத்தறிவு!
உதயை மு. வீரையன்
“”இருட்டைக் கண்டு குழந்தை பயப்படுகிறது; அதை மன்னித்து விடலாம். ஆனால் வெளிச்சத்தைக் கண்டு பயப்படும் மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை எப்படி மன்னிப்பது?” என்று கேட்டார்~ பிளேட்டோ! அறியாமை இருளை ஓட்டி, எழுத்தறிவு என்னும் வெளிச்சத்தை அடைவதற்கு எவ்வளவு காலம், எத்தனை போராட்டங்கள்! இந்த வெளிச்சத்தை ஏற்றும் விளக்குகளாக இருப்பவர்கள் ஆசிரியர்கள்.
கல்வியானது அறியாமை இருளை அகற்றுவது; சிந்தனைத் திரியைத் தூண்டி விடுவது; வளர்ச்சிக்கு வாசல் திறப்பது.
மனித சமுதாயத்தையே மாற்றியமைக்கும் ஆற்றல் அதற்கு மட்டுமே உண்டு என்பதால்தான் கடந்த காலங்களில் கல்வி பலருக்கு மறுக்கப்பட்டது. சிலருக்கு மட்டுமே சொந்தமானது. இந்த நிலை இனியும் தொடர்வதைத் தவிர்க்கவே, விடுதலை பெற்ற நாடு, “”அனைவருக்கும் கல்வி” என்பதைச் சட்டமாக தீட்டியது. இந்திய மக்கள்தொகை 2015-ல் 1224 மில்லியன் ஆகவும், 2030-ல் 1398 மில்லியனாகவும் பெருகும் என பொருளியல் அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். 26 சதவிகித மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளனர்.
மத்திய திட்டக்குழு, 8 சதவிகித வளர்ச்சி இலக்கினை எட்ட, சமுதாய – பொருளாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது கண்காணிக்கத் தகுந்த சில இலக்குகளை நிர்ணயித்துள்ளது. அதில், பள்ளி செல்லும் வயதில் உள்ள அனைத்து குழந்தைகளும் 2003-ஆம் ஆண்டுக்குள் கட்டாயம் பள்ளி செல்ல வேண்டும்; 2007-ஆம் ஆண்டிற்குள் 5 ஆண்டுகளாவது குழந்தைகள் பள்ளிப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக் காலங்களில் எழுத்தறிவு 75 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
உலகின் மக்கள்தொகை 630 கோடி. இதில் எழுத்தறிவே இல்லாத மக்கள் 100 கோடி பேர். கல்வியில் பயன்படுத்தப்படாத மொழிகளைப் பேசுவோர் 138 கோடி என்பதால், தாய்மொழிவழிக் கல்வி மறுக்கப்பட்டோரே உலகில் எழுத்தறிவில்லாத மக்களில் பெரும்பாலோராக இருப்பது தெரிகிறது. எனவே கல்லாமை அல்லது எழுத்தறிவின்மை இன்னும் இருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம், கல்வியில் தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்படாதது எனக் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
ஐ.நா. குழந்தைகள் நிதியம் – “யுனிசெப்’ 1999-ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கை, “”மாணவ மாணவிகளுக்கு முதன்முதலாக அவர்களின் தாய்மொழியில் கற்பிக்கும்போதுதான், அவர்கள் விரைவாகக் கற்றுக் கொள்கின்றனர். கல்வித் திறமைகளை விரைவாகப் பெறுவதும், தாய்மொழி மூலம்தான் என்பதை ஏராளமான ஆராய்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன…” எனக் கூறியுள்ளது.
இது, இந்தியாவில் – குறிப்பாகத் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தாய்மொழி படிக்காமலேயேகூட பட்டம் வாங்கும் நிலை இன்னும் தொடர்கிறது. இதுபற்றி அரசும், கல்வி நிறுவனங்களும் சீரிய அக்கறை காட்டவில்லை.
அத்துடன் தொடக்கக் கல்வி முதல் தொழிற்கல்வி வரை இலவசக் கல்வி என்பது இல்லாமல் போய், கல்வியே லாபகரமான வணிகமாகிவிட்டது. இதனால் “அனைவருக்கும் கல்வி’ என்பது மறுக்கப்படுகிறது.
கல்வியளிப்பது அரசாங்கத்தின் கடமையாக இருந்தபோதும், அதற்கு உற்ற துணையாக இருக்க வேண்டியது பெற்றோரும் ஆசிரியருமே! ஆனால் கிராமப்புறங்களில் இருக்கும் பல பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமையால் மாணவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. தொடக்க நிலையில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:20 ஆக இருந்ததை, அரசு படிப்படியாக அதிகரித்து தற்போது இது 1:50 என்ற நிலையை எட்டச் செய்துள்ளது.
ஒரு சமுதாயத்தின் முன்னேற்றம் தொடக்கக் கல்வியிலிருந்துதான் தொடங்குகிறது. உறுதியான அடித்தளமில்லாத மாளிகை உருக்குலைந்து போகும். உண்மையான கல்வி தரப்படாத தேசமும் அப்படித்தான். கிராமம், நகரம் என்றும், வளமை, வறுமை என்றும் பிரிந்து கிடப்பது ஆரம்பக் கல்வியை அழித்துவிடும்.
தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வி முறையே பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. நர்சரி – மெட்ரிகுலேஷன் என்றும், ஆங்கிலோ இந்தியன் என்றும், ஓரியண்டல் என்றும், மாநில வாரியம் என்றும் ஒரே கல்வித்துறையின்கீழ் வேறுபட்டுக் கிடப்பதுதான் வேடிக்கை! இதனால்தான் சமச்சீர் கல்விமுறை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சமச்சீர் கல்விமுறை வலியுறுத்தப்படுவதன் நோக்கமே, பல பிரிவுகளால் ஏற்படும் சமச்சீரின்மையைப் போக்குவதாகும்!
பாடச்சுமையைப் பற்றிப் பரிந்துரைக்க நியமிக்கப்பட்ட யஷ்பால் குழு, தமது 1993 ஆம் ஆண்டு அறிக்கையில், “மத்திய அரசு நேரடியாக நடத்தும் கேந்திரிய வித்யாலயம் மற்றும் நவோதயா பள்ளிகளில் மட்டும் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் இருக்க வேண்டும். மற்ற எல்லாப் பள்ளிகளும் மாநில அரசின் பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளது.
எனவே தமிழக அரசு இதனைப் பற்றிப் பரிசீலிப்பதற்காக முத்துக்குமரன் தலைமையில் ஓர் உயர்நிலைக் குழுவை அமைத்தது. இந்தக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆசிரியர், பெற்றோர், கல்வியாளர்களைச் சந்தித்து, அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவது பற்றிய தமது அறிக்கையை தமிழக முதல்வரிடம் அளித்துள்ளது.
இந்நிலையில் “செயல்வழிக் கற்றல்’ என்ற புதிய பாடமுறையை அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட இயக்குநர் அறிமுகப்படுத்தியுள்ளார். அதுவும் எல்லாப் பள்ளிகளுக்கும் என்றில்லாமல் ஒன்றியத்திற்கு 10 பள்ளிகளுக்கு எனத் தேர்ந்தெடுத்து இவ்வாண்டு முதல் நான்கு வகுப்புகளுக்கு மட்டும் நடைமுறைப்படுத்துவது தமிழகக் கல்வியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தாதா என்ற கேள்வி எழுகிறது.
சமச்சீரான கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டிய காலகட்டத்தில், இப்போது இருக்கும் பாடத்திட்டத்தையும் பாடப்புத்தகத்தையும் விட்டுவிட்டு அட்டையை மட்டும் வைத்துக்கொண்டு கற்பிப்பது தரமான பள்ளிகளோடு போட்டி போடுவதற்குத் தடையாக இருக்காதா? இது, அரசு மற்றும் ஒன்றியப் பள்ளி மாணவர்களை மற்ற தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கே பெற்றோர்களைத் தூண்டிவிடும்.
“ஆசிரியர், மாணவர், பெற்றோர், கல்வியாளர்’ என்னும் தூண்களே கல்வி மாளிகையைத் தாங்குகின்றன. இவர்களுடைய கருத்தறியாமல் செயல்படும் கல்வி சென்று சேர வேண்டிய இலக்கினை அடைய இயலாது.
ஆசிரியர்களிடம் சமுதாயம் அதிகம் எதிர்பார்க்கிறது. காரணம், நமது கல்வியின் ஆரம்பம் குருகுலவாசமாக இருந்ததுதான். ஆசிரியர்களில் சிலர் தங்களை அப் பணிக்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டாலும் பலர் அவ்வாறு இல்லாதது கவலை தரும் போக்காகும். அவர்களது முழுமையான சேவையை நாடும், நாமும் எதிர்பார்ப்பது நியாயமே!
ஒவ்வொருவரும் முன்னேற பல படிகள் இருக்கின்றன. ஆனால் எழுத்தறிவே முன்னேற்றத்தின் முதற்படி. இதனை நினைவில் நிறுத்துவது இக்காலத்துக்கு மட்டுமல்ல, எக்காலத்துக்கும் நல்லது.
(இன்று சர்வதேச எழுத்தறிவு தினம்).
மறுமொழியொன்றை இடுங்கள்