Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Rajini & PMK’s Interests in Kelambakkam – Dropping of Satellite City

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

சேர்த்து வைத்த துணைநகரம்  :: கைகொடுத்த பா.ம.க… கண்சிமிட்டும் ரஜினி! 

– எஸ்.சரவணகுமார்    
பத்து நாட்களாகப் பரபரப்பைக் கிளப்பிய ‘துணைநகர’த் திட்டம் எதிர்பாராத வகையில் வாபஸ் ஆகிவிட்டது. அதுபோலவே, கடந்த ஐந்து ஆண்டுகளாக முறைத்துக் கொண்டிருந்த இரண்டு பெரும் சக்திகளையும் இந்தப் பிரச்னை எதிர்பாராத வகையில் நேசப் பார்வை பார்க்க வைத்திருக்கிறது.

அந்த இரு சக்திகளில் ஒன்று பா.ம.க., மற்றொன்று ரஜினி!

‘பாபா’ படம் ரிலீஸ் ஆனபோது சூப்பர் ஸ்டாருக்கும், பா.ம.க&வுக்கும் முதன்முதலாக முட்டல்மோதல் ஏற்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இரு தரப்பினருமே நேரடியாகவே மோதிக் கொண்டார்கள். இப்படி கீரியும் பாம்பும் போல இவர்களுக்குள் இருந்த பகை, இப்போது கேளம்பாக்கம் துணைநகர விவகாரத்தால் இளகத் தொடங்கிவிட்டதாக, ரஜினிக்கு நெருங்கியவர்கள் சொல்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலின்போது ரஜினிக்கும், பா.ம.க&வுக்கும் பாலமாக செயல்பட நினைத்துத் தோற்றுப்போன சில சினிமா வி.ஐ.பி&க்கள் இதுபற்றி நம்மிடம் பேசியபோது,

‘‘வண்டலூர், கேளம்பாக்கம் சாலையின் தெற்குப் பகுதியில் உள்ள நிலங்களைத் துணைநகரம் அமைக்க அரசு தேர்வு செய்தது. இதில் ரஜினிக்குச் சொந்தமாக இருக்கும் கேளம்பாக்கம் பண்ணையும் ஆபத்துக்குள்ளானது. இந்தப் பண்ணையின் மொத்த பரப்பளவு, சுமார் நாற்பது ஏக்கர். சென்னையில் கட்டிய வீட்டுக்குப் பிறகு அவர் வாங்கிய முதல் சொத்து இந்தப் பண்ணைதான். ஆன்மிக மையம் ஒன்றை நிறுவத்தான் இந்தத் தோட்டத்தை வாங்கிப்போட்டார். அதற்குப் பிறகு விவசாயத்தில் நாட்டம் பிறக்க, தென்னந்தோப்பு அமைத்தார். பிறகு சிறிய வீடொன்றைக் கட்டியதுடன் அந்தத் தோப்பின் ஓர் ஓரத்தில் அழகான தியான மண்டபத்தைக் கட்டினார். ஓர் உடற்பயிற்சிக் கூடத்தையும் அமைத்தார்.

1996&ம் ஆண்டு அந்த நிலத்தில் ஒரு ஏக்கரை தலா ஒரு கிரவுண்ட் வீதம் பிரித்துத் தன்னிடம் பலகாலமாக வேலைபார்த்து வரும் சுமார் முப்பது பேருக்கு எழுதிக் கொடுத்தார் ரஜினி. துணைநகரத் திட்டம் அறிவிக்கப்பட்டதும், தான் பண்ணையாட்களுக்குக் கொடுத்த நிலங்களுக்கு ஆபத்து வருமே என அவர் கவலைப்பட்டார்.

இந்நிலையில் ‘சிவாஜி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் கேளம்பாக்கத்தை அடுத்த திருப்போரூர் கோயில் முன்பும், பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் பையனூருக்கு அருகிலும் நடந்தது. இந்த சமயத்தில் தனது பண்ணை ஊழியர்களைச் சந்தித்தார் ரஜினி. அப்போது அவரிடம், ‘நிலத்தை அரசு எடுக்கக் கூடாதுன்னு பா.ம.க. போராடிக்கிட்டிருக்கு. அநேகமா அவங்க துணைநகரத்தை வர விடமாட்டாங்க போலிருக்கு. அதுவே எங்களுக்கு ஆறுதலா இருக்கு சார்’ என்று சொன்ன ஊழியர்கள் தொடர்ந்து, ‘ஊரப்பாக்கத்துல ஒரு கல்யாண மண்ட பத்துல டாக்டர் ராமதாஸ் இந்தப்பகுதி மக்களைசந்திச்சு துணை நகரம் அமைப் பதில் என்னவெல்லாம் சிக்கல் இருக்குன்னும், விவசாயம் எப்படியெல்லாம் பாதிக்கும்னும் கேட்டுத் தெரிஞ்சுக்கப் போறாராம். அந்தக் கூட்டத்துக்குப் போகலாமா?’ என்று கேட்டிருக்கிறார்கள். ‘தாராளமா கலந்துக்கங்க. இந்தத் தடவை அவங்க நல்ல விஷயத்துக்காகப் போராடறாங்க. நீங்க கண்டிப்பா அந்தக் கூட்டத்துக்குப் போங்க’ என்று பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் ரஜினி. இதனையடுத்து அந்த ஊழியர்கள், பா.ம.க. ஏற்பாடு செய்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டனர். ஆனால், ரஜினி தங்கள் போராட்டத்துக்குத் துணையாக இருக்கப்போகிறார் என்ற விவரம் எதுவும் பா.ம.க&வுக்குத் தெரியாது. ஒருசிலர் செங்கல்பட்டு எம்.பி&யான மூர்த்தியிடம் ‘நாம் போராடறதுல ரஜினியோட நிலமும் சேர்ந்திருக்கு. நம்மால அவரு நிலம் தப்பிச்சிடும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘நல்ல விஷயத்துக்காகப் போராடறோம். இதுல எல்லோரும் பலனடைஞ்சா நல்லதுதானே’ என்று அவர் பதில் சொல்லியிருக்கிறார்.

அந்தக் கருத்தரங்கில் ராமதாஸ் பேசியதையும், துணைநகரம் விஷயத்தில் பொதுமக்கள் பா.ம.க. மீது கொண் டிருக்கும் நம்பிக்கை யையும், ரஜினியின் ஊழியர்கள் அப்படியே ரஜினியிடம் சொல்லி இருக்கிறார்கள். அதன் பிறகு ரஜினிக்குப் பா.ம.க. மீது இன்னும் கூடுதலான மரியாதை ஏற்பட்டு விட்டது’’ என விஷயத்தை முடித்தார்கள், அந்த வி.ஐ.பி&க்கள்.

பா.ம.க. மீதான ரஜினி யின் இந்தக் கனிவு பற்றி அக்கட்சியின் செங்கல்பட்டு நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.கே.மூர்த்தியிடம் பேசினோம். ‘‘நீங்க சொல்றது எனக்குப் புதுசா இருக்கு. துணைநகரம் அமைக்க ரகசியமான சில திட்டங்களை அரசாங்கம் தீட்டுதுனு முதல்ல எனக்குச் சொன்னது, அந்தப் பகுதி பொதுமக்கள்தான். ஒருநாள் ராத்திரி ஒரு மணியிருக்கும்… என் செல்போன் அடிச்சுது. எடுத்துப் பேசினேன். ‘என்னண்ணே, தூங்கறீங்களா?’னு தொகுதிவாசி ஒருத்தர் கேட்டார். ‘ஆமாம்பா, இந்த நேரத்துல எல்லோருமே தூங்கு வாங்க’னு நானும் சாதாரணமா சிரிச்சேன். அதுக்கு, ‘சரிண்ணே, உங்களுக்கு ஓட்டுப் போட்டோம். நீங்களும் ஜெயிச்சீங்க. நீங்க தூங்கலாம். ஆனா, நாங்க தூங்க முடியாதுண்ணே. ஒரேயடியா இப்போ குடும்பத்தோட தூங்கிடப் போறோம். காலையில நீங்க வந்து மாலை போட்டுட்டுப் போயிடுங்கண்ணே’னு மறுமுனையில் பதில் வந்ததும் ஒன்றும் புரியாமல், ‘என்ன விஷயம்!’ என்று கேட்டேன். அப்போதுதான் அவர், அரசு துணைநகரம் அமைக்கப்போகும் விஷயத்தையும், அதனால் ஏற்படப் போகும் பாதிப்பையும் சொல்லிவிட்டு போனை வெச்சுட்டார். அப்புறம்தான் பதறிப்போய் நானும், எங்க ஐயாவும் இந்த விஷயத்துல தீவிரம் காட்டுனோம். எங்க போராட்டத்துல ரஜினியோட ஆளுங்களும் பயன்பெற்றிருந்தா சந்தோஷம்தான். நாங்க யாரையும் பிரிச்சுப் பார்க்கறது கிடையாது’’ என்றார். அஜீத் நிலமும் தப்பியது!

துணைநகரம் கைவிடப்பட்டதில் ரஜினியைப் போல நடிகர் அஜீத்குமாரும், நடிகர் விஜயகுமாரும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். ‘சிட்டிசன்’ படம் நடித்துக் கொண்டிருந்தபோது இந்த ஏரியாவுக்கு வந்த அஜீத்குமார், விவசாயம் செய்யும் திட்டத்துடன் சில ஏக்கர்களை இங்கே வாங்கிப் போட்டிருக்கிறார். அதேபோல் விஜயகுமாருக்கும் இங்கு நிலம் உள்ளதாம். இவர்கள் தவிர பரபரப்புப் பிரமுகரான சிவசங்கர்பாபா பல ஏக்கர் பரப்பளவில் பள்ளி, அநாத ஆஸ்ரமம், ஆன்மிக மையம், முதியோர் விடுதி என தனது சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கிறார். ரஜினியின் பண்ணைக்கு அடுத்திருக்கும் சிவசங்கர் பாபாவின் ஆஸ்ரமத்துக்கு அவ்வப்போது ரஜினி போவாராம். ‘நீங்கள் நினைத்தால் முதல்வரிடம் பேசி ஒரு தீர்வை ஏற்படுத்தலாம்’ என்று பாபாவும் ரஜினியிடம் போனில் பேசியதாகச் சொல்கிறார்கள்.

& எஸ்.சரவணகுமார்   

பின்னூட்டமொன்றை இடுக