விவசாய நிலங்களை கையகப்படுத்தினால் போராட்டம்: ஜெ. எச்சரிக்கை
சென்னை, ஜன. 12: விவசாய பயன்பாட்டில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தினால் அதிமுக போராட்டத்தில் குதிக்கும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திலும் பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்த தீவிரம் காட்டியதும் பாதிக்கப்படப் போகும் மக்களுக்கு ஆதரவாக நான் துணை நிற்பேன் என்றதும் அந்த முடிவில் இருந்து கருணாநிதி பின் வாங்கினார்.
இப்போது கோவை அருகே ஒரு துணை நகரத்தை உருவாக்கப் போகிறேன் என்று வெள்ளலூர் மற்றும் செட்டிப்பாளையம் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி அந்த இடத்தை சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் துணை நகரம் அமைக்கப் போவதாக கருணாநிதி கூறுவது யதேச்சதிகாரமானது.
பயன்பாட்டில் உள்ள இந்த விவசாய நிலங்களையும் தோட்டங்களையும் அரசு கையகப்படுத்தினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும் தங்களது உயிரே போனாலும் இந்தப் பகுதியை விட்டுத்தர மாட்டோம் என்று அப் பகுதி மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிடச் சென்றால் அவர் மக்கள் முன் வர மறுக்கிறார். ஆத்திரம் கொண்ட விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
மைனாரிட்டி திமுக ஆட்சி வந்ததிலிருந்து விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது அபாயகரமானது. தொழில்நுட்பப் பூங்கா என்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்றும் உருவாக்கி, உள்ளூர் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். கட்டாயப்படுத்தி நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
நிலம் கையகப்படுத்தும் முயற்சி நீடித்தால் மக்களின் போராட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி எப்போதும் விவசாயிகளின் பயன்பாட்டில் உள்ள விளை நிலங்களைப் பிற காரணங்களுக்காகக் கையகப்படுத்தும் திட்டத்தை எந்த நிலையிலும் மேற்கொள்ளக் கூடாது என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.
============================================
வர்த்தக நோக்கங்களுக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு அதிக இழப்பீடு வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்
புதுதில்லி, மார்ச் 12: சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட வர்த்தக நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது, அதிக இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொங்கன் ரயில்வேயில் ரோஹா-மங்களூர் இடையே அகல ரயில்பாதைகளை அமைப்பதற்காக 11 ஆயிரத்து 875 சதுர மீட்டர் நிலம் கடந்த 1994-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது.
நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடாக சதுர மீட்டருக்கு ரூ.4 வழங்குவது என மாநில அரசு நிர்ணயித்தது. இதை எதிர்த்து மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் சதுர மீட்டருக்கு ரூ.192 வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், இத் தொகையை ரூ.38 என குறைத்தது.
இதற்கு எதிராக, நிலத்தின் உரிமையாளர் நெல்சன் ஃபெர்னாண்டஸ் மற்றும் பலர், உச்ச நீதிமன்றத்தை நாடினர். இவ்வழக்கை விசாரித்த ஏ.ஆர்.லட்சுமணன், அல்தாமஸ் கபீர் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பு: உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் தொகையைக் குறைக்கும்போது பொத்தாம்பொதுவாக முடிவுசெய்துள்ளதாக கருதுகிறோம். சட்டப்படி இது ஏற்கக்கூடியது அல்ல.
முறையீடு செய்தவர்களுக்கு, நிவாரணம், அதற்கான வட்டி உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருக்கும் மரங்களுக்காக ரூ.59,192 அளிக்க வேண்டும்.
ஒரு சதுர மீட்டருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.250 வீதம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இத்தீர்ப்பின் மூலம், வர்த்தக நோக்கங்களுக்காக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க கையகப்படுத்தும் நிலங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உயரிய அளவில் இழப்பீட்டை நிர்ணயிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், நிலத்தை கையகப்படுத்தும்போது அதற்கான காரணத்துடன், அப்போதைய மார்க்கெட் மதிப்பு, நிலம் அமைந்துள்ள இடம், நிலத்தின் உரிமையாளர் அடையும் இழப்பு உள்ளிட்ட காரணிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.
======================================================
கையகப்படுத்திய நிலம் அரசின் சொத்து ஆகும்: சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
புதுடெல்லி, மார்ச்.19-
ஒரு நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தி விட்டால், பிறகு அது அரசின் தனிப்பட்ட சொத்து ஆகி விடும் என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறி உள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1978-ம் ஆண்டு சென்னையை அடுத்த பாடியில் 43 பேரிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தியது.
அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்காக இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது. இருப்பினும் 21 ஆண்டுகள் கழிந்த பின்னரும் அடுக்குமாடி திட்டம் வரவில்லை.
இதையடுத்து சம்பந்தப்பட்ட 43 பேரும் தமிழக அரசிடம் தனித்தனியாக மனு கொடுத்தனர். அதில் கையகப்படுத்திய நிலங்களை தங்களுக்கே மீண்டும் திருப்பி கொடுக்கும்படி கோரிக்கை விடப்பட்டு இருந்தது. ஆனால் அரசாங்கம் இந்த மனுக்களை நிராகரித்து விட்டது.
உடனே 43 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அம்மனுவை விசாரித்த நீதிபதிகள், வீட்டு வசதி வாரியத்தின் கருத்தை கேட்காமல், பொது நோக்கத்துடன் கையகப்படுத்திய நிலங்களை மனுதாரர்களிடம் திருப்பி ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர்.
மேலும் இந்த உத்தரவை எதிர்த்து வீட்டு வசதி வாரியம் தாக்கல் செய்த 2 அப்பீல் மனுக்களையும் நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து வீட்டு வசதி வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், எங்கள் கருத்தை சொல்ல சென்னை ஐகோர்ட்டு வாய்ப்பு தரவில்லை. குறிப்பிட்ட வீடு கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், அந்த திட்டம் கைவிடப்படவில்லை என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த அப்பீல் மனுவை நீதிபதிகள் சி.கே.தாக்கர், பி.கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்சு நேற்று விசாரித்தது. பின்னர் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. நீதிபதிகளின் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ், அரசு ஒரு நிலத்தை கையகப்படுத்தி விட்டால், பிறகு அது அரசாங்கத்தின் தனிப்பட்ட சொத்தாகி விடும். அதன்பிறகு நிலத்தை கையகப்படுத்தியதற்கான நோக்கம் நிறைவேறாவிட்டாலும், அந்த நிலத்தை மார்க்கெட் விலைக்கு யாருக்கு வேண்டுமானாலும் அரசு வழங்கலாம்.
இவ்வழக்கில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மனுவை தள்ளுபடி செய்யும் முன், அதற்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி இருக்க வேண்டும். இதுதவிர மறு ஆய்வு மூலம் தன்னுடைய தவறை சரி செய்து கொள்ள டிவிஷன் பெஞ்சுக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவில்லை.
குறிப்பிட்ட திட்டத்தை செயல்படுத்துவதற்கு நிலம் மிகவும் அவசியமானது. அந்த திட்டம் கைவிடப்படவில்லை என்று வீட்டு வசதி வாரியம் கூறியதை ஐகோர்ட்டு கவனத்தில் கொள்ள தவறி விட்டது. இதன்மூலம் இந்த வழக்கின் விசாரணையில் ஐகோர்ட்டு தவறு செய்து உள்ளது.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
———————————————————————————————–
தேவை புதிய விமானநிலையம்
Dinamani op-ed
July 14, 2007
விமானக் கட்டணக் குறைப்பு, அதிகரித்திருக்கும் விமான நிறுவனங்கள், பெருகி வரும் விமானப் போக்குவரத்து என்று ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை இந்தியா சமீபகாலங்களில் காண நேரிட்டு வருகிறது. சாதாரண மனிதர்கள்கூட விமானத்தில் பறக்க முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.
ஒரு கோடியே இருபத்தெட்டு லட்சம் பயணிகள் மட்டுமே 2003-ல் விமானப்பயணம் மேற்கொண்ட நிலைமை மாறி, சுமார் இரண்டரைக் கோடி பேர் விமானப் பயணம் செய்யும் நிலைமை 2006-ல் ஏற்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஏறத்தாழ 20 சதவிகிதம் அதிகரிப்பு. மாணவர்கள், இளைஞர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் என்று விமானத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளும் அதிகரித்து வரும்போக்கு இந்தியா முழுவதும் காணப்படுகிறது.
அதிகரித்திருக்கும் விமான நிறுவனங்களில் விமானங்களுக்கு இடவசதி செய்து தரவும், கூடுதலான பயணிகளின் தேவைகளை எதிர்கொள்ளும் அளவுக்கு விமான நிலையங்களின் வசதிகளைப் பெருக்கவும் அரசு என்ன செய்திருக்கிறது என்று பார்த்தால், ஏமாற்றம்தான் அதிகரிக்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப விமானநிலைய விரிவாக்கம் ஈடுகொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.
சிறு சிறு நகரங்களில்கூட விமானநிலையம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வருகிறது. பூணே, கோவா போன்ற சிறு நகரங்களில் விமானநிலையம் அமைப்பதைப் பற்றி அந்தந்த மாநில அரசுகள் யோசிக்கத் தொடங்கி இருக்கின்றன. இப்போது ராணுவ விமானநிலையங்களின் மூலமாக விமான சேவை நடைபெறுகிறது என்றாலும், பொதுமக்களின் தேவைக்காகப் புதிய விமானநிலையம் தேவை என்று கோரிக்கைகள் எழுகின்றன.
இந்திய விமானநிலைய ஆணையம் (Airports Authority of India) இந்த விஷயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறது. பெருகிவரும் தேவைக்கு எப்படி ஈடுகொடுப்பது என்று விமானப் போக்குவரத்து அமைச்சகமும், இந்திய விமானநிலைய ஆணையமும் மூளையைக் கசக்குவதில் அதிசயம் ஒன்றுமில்லை. அரசின் திட்டம் செயல்படுமேயானால், இந்திய விமானநிலைய ஆணையமும் தனியார் விமானநிலையங்களுமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் விமானநிலையங்களை அமைப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் சுமார் 36,000 கோடி ரூபாய் செலவிட இருக்கின்றன.
நிலைமை இப்படி இருக்கையில், தமிழகத்தைப் பொருத்தவரை, விமான நிலையங்கள் அமைக்க இன்னமும் இடங்கள் கையகப்படுத்தியாகவில்லை. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவண்ணம், அதேநேரத்தில் சென்னையிலிருந்து அதிக தூரத்தில் அமையாமல் விமானநிலையத்துக்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் இவ்வளவு தாமதம் ஏன் ஏற்பட வேண்டும் என்று புரியவில்லை.
நாம் முந்திக் கொள்ளாவிட்டால், விமானநிலைய வளர்ச்சிக்கான ஒதுக்கீடு மற்ற மாநிலங்களுக்குப் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் புதிய விமான நிலையம் நிறுவப்படுவது மட்டுமல்லாமல், மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் உள்ள விமானநிலையங்களைப் புதுப்பித்து அதிகரித்துவரும் விமானப் போக்குவரத்தை எதிர்நோக்கும் அளவுக்கு நவீனப்படுத்தியாக வேண்டும்.
பொதுமக்களும், அப்பாவி விவசாயிகளும் பாதிக்கப்படாத வகையில், புதிய விமான நிலையம் அமைக்கும் பணி விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாத விமானநிலைய விரிவாக்கப்பணி அரசியலாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு ஒரே வழி – எல்லா கட்சியினரையும் அழைத்துப் பேசி, விரைவிலேயே புதிய விமானநிலையம் அமைக்கும் பணியைத் தொடங்குவதுதான்!
——————————————————————————————————————————–
விமான நிலைய விரிவாக்கத் திட்டம்: மணப்பாக்கம், தரப்பாக்கம் மக்கள் நிலை என்ன?
சென்னை, ஜூலை 22: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காக மணப்பாக்கம், தரப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை வருவாய்த் துறையினர் தொடங்கி உள்ளனர்.
இந்த கிராமங்களில புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு தடைவிதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பகுதி மக்களுக்கான இழப்பீடு மற்றும் மாற்று இடம் வழங்குவது குறித்து அரசு தெளிவாக அறிவிக்காதது இந்த பகுதி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காக விமான நிலையத்துக்கு அருகில் உள்ள மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய கிராமங்களில் இருந்து 1069 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் 2005 ஏப்ரலில் அறிவித்தபடி மணப்பாக்கம், தரப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் விமான நிலைய விரிவாக்கம் செய்ய தற்போதைய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இங்கு புதிய விமான ஓடுதளம் அமைக்க தேவையான நிலத்தை கையகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
குழப்பம்:
நிலம் கையகப்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அரசு நிர்வாகம், இவர்களுக்கான மாற்று இடம் குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.
2005 ஏப்ரலில் அறிவித்ததுக்கு மாறாக 2005 டிசம்பரில் வெளியிடப்பட்ட அரசாணையை காரணமாகக் காட்டி மணப்பாக்கம், தரப்பாக்கத்தில் பெருமளவு நில விற்பனை நடந்துள்ளது.
இவ்வாறு கிடைத்த குறைந்த நேரத்தை பயன்படுத்தி இங்கு விமான நிலையம் வராது என்று கூறி புதிய குடியிருப்புகளை 2 பெரிய நிறுவனங்கள் விற்பனை செய்துள்ளன.
இவ்வாறு இங்கு விமான நிலையம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிந்தும் குடியிருப்புகளை விற்பனை செய்தவர்கள் மீது அரசின் நடவடிக்கை என்ன என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.
இங்கு புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) அனுமதி அளித்தது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அரசு விசாரிக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
நிவாரணம் எப்போது?
சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக 1991-ல் கவுல்பஜார் பகுதியில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
இவர்களுக்கான இழப்பீடு நிர்ணயிப்பது தொடர்பான பிரச்னை இன்னமும் முடிவடையாத நிலையில், தற்போது கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய முறையில் இழப்பீடு கிடைக்குமா என்பதே இந்த மக்களிடம் எழுந்துள்ள கேள்வி.
———————————————————————————————————————–
சென்னை விமான நிலைய விரிவாக்க பணி: ஜனவரியில் தொடக்கம்
சென்னை, செப். 3:சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்று இந்திய விமானத் துறை செயலர் கே.என். ஸ்ரீவாத்ஸவா தெரிவித்தார்.
ரூ. 2,700 கோடி மதிப்பிலான இத்திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த ஆண்டு தொடங்கும். விமான ஓடுபாதை (ரன்வே) மற்றும் டாக்ஸி வே மற்றும் ஒருங்கிணைந்த விமான நிலைய கட்டடம் ஆகியன புதிதாக கட்டப்பட உள்ளது. 2016-ம் ஆண்டு வரையில் பெருகி வரும் விமானப் பயணிகள் மற்றும் அதிகரித்து வரும் விமானங்களைக் கையாளும் வகையில் விரிவாக்க நடவடிக்கைகள் அமையும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
இத்திட்டப் பணிகள் 2010-ம் ஆண்டு முடிவடையும். புதிதாக அமையும் விமான ஓடுபாதை ரூ. 1,700 கோடியில் அமைக்கப்படும். விமான நிலைய கட்டடங்கள் ரூ. 1,000 கோடியில் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இரண்டாவது விமான நிலையம் (கிரீன்ஃபீல்ட் ஏர்போர்ட்) அமைப்பது குறித்த அனைத்து பூர்வாங்க பணிகளும் பூர்த்தியடைந்துள்ளன. விமான நிலையத்துக்குத் தேவையான நிலம் குறித்த விவரம் ஒரு மாதத்திற்கு முன்பே காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலைக்கு எதிர்ப்புறம் புதிய விமான நிலையம் அமையும் என்றார் ஸ்ரீவாத்ஸவா.