மறுவரையறை தொகுதிகளால் சோகத்தில் ஆழ்ந்துள்ள அரசியல்வாதிகள்
தொகுதி மறுவரையறைப்படி உருவாக்கப்பட்டுள்ள புதிய தொகுதிகளால் அரசியல்வாதிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
வாக்காளர்களின் எண்ணிக்கை சரிசமமாக இருக்கும் வகையில் சட்டப் பேரவை, நாடாளுமன்றத் தொகுதிகளை தேர்தல் ஆணையம் மறுவரையறை செய்துள்ளது.
இதனால் இதுவரை இருந்த
- செங்கல்பட்டு,
- திருப்பத்தூர்,
- வந்தவாசி,
- திண்டிவனம்,
- ராசிபுரம்,
- திருச்செங்கோடு,
- கோபிசெட்டிபாளையம்,
- பழனி,
- பெரியகுளம்,
- புதுக்கோட்டை,
- சிவகாசி,
- திருச்செந்தூர்,
- நாகர்கோவில்
ஆகிய மக்களவைத் தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.
- திருவள்ளூர்,
- காஞ்சிபுரம்,
- திருவண்ணாமலை,
- ஆரணி,
- விழுப்புரம்,
- கள்ளக்குறிச்சி,
- நாமக்கல்,
- ஈரோடு,
- திருப்பூர்,
- தேனி,
- விருதுநகர்,
- தூத்துக்குடி,
- கன்னியாகுமரி
ஆகிய மக்களவைத் தொகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 7 தனித் தொகுதிகளில்
- ஸ்ரீபெரும்புதூர்,
- பொள்ளாச்சி,
- பெரம்பலூர்,
- ராசிபுரம்
ஆகிய தொகுதிகளுக்குப் பதிலாக
- திருவள்ளூர்,
- காஞ்சிபுரம்,
- விழுப்புரம்,
- நீலகிரி
ஆகிய தொகுதிகள் புதிதாக தனித் தொகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.
- சிதம்பரம்,
- நாகை,
- தென்காசி
தொகுதிகள் தொடர்ந்து தனித் தொகுதிகளாகவே நீடிக்கின்றன.
இப்படி பல தொகுதிகள் உருமாறியுள்ளதால் தாங்கள் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற தொகுதிகளில் போட்டியிட முடியாத நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பலருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைப்பதே அரிதாகியுள்ளது.
மத்திய அமைச்சர் ஆ. ராசா வெற்றி பெற்ற பெரம்பலூர் தொகுதி தற்போது பொதுத் தொகுதியாக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் நீலகிரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். நீலகிரி தனித் தொகுதியானதால் அங்கு 5 முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர். பிரபு வேறு தொகுதி தேட வேண்டிய நிலையில் உள்ளார்.
- மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்ற கோபிசெட்டிப்பாளையம்,
- வைகோவுக்கு சாதகமான சிவகாசி,
- முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தியின் செங்கல்பட்டு,
- பாஜக தலைவர் சு. திருநாவுக்கரசருக்குச் சாதகமான புதுக்கோட்டை
ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் இவர்கள் புதிய தொகுதிகளைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பாமகவுக்கு சாதகமான
- திருவள்ளூர்,
- காஞ்சிபுரம்,
- விழுப்புரம்,
- சிதம்பரம்
ஆகிய தொகுதிகள் தனித் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளதால் கூட்டணியில் எந்தத் தொகுதியை கேட்டுப் பெறுவது என்று அக்கட்சி தடுமாற்றத்தில் உள்ளது.
புதிதாக வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிகளால் அரசியல்வாதிகளில் பலர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.