Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Ministers’

Election 2009 caste vote: Tamilnadu MPs forced to find new constituencies after delimitation

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2009

மறுவரையறை தொகுதிகளால் சோகத்தில் ஆழ்ந்துள்ள அரசியல்வாதிகள்

தொகுதி மறுவரையறைப்படி உருவாக்கப்பட்டுள்ள புதிய தொகுதிகளால் அரசியல்வாதிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

வாக்காளர்களின் எண்ணிக்கை சரிசமமாக இருக்கும் வகையில் சட்டப் பேரவை, நாடாளுமன்றத் தொகுதிகளை தேர்தல் ஆணையம் மறுவரையறை செய்துள்ளது.

இதனால் இதுவரை இருந்த

  1. செங்கல்பட்டு,
  2. திருப்பத்தூர்,
  3. வந்தவாசி,
  4. திண்டிவனம்,
  5. ராசிபுரம்,
  6. திருச்செங்கோடு,
  7. கோபிசெட்டிபாளையம்,
  8. பழனி,
  9. பெரியகுளம்,
  10. புதுக்கோட்டை,
  11. சிவகாசி,
  12. திருச்செந்தூர்,
  13. நாகர்கோவில்

ஆகிய மக்களவைத் தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

  1. திருவள்ளூர்,
  2. காஞ்சிபுரம்,
  3. திருவண்ணாமலை,
  4. ஆரணி,
  5. விழுப்புரம்,
  6. கள்ளக்குறிச்சி,
  7. நாமக்கல்,
  8. ஈரோடு,
  9. திருப்பூர்,
  10. தேனி,
  11. விருதுநகர்,
  12. தூத்துக்குடி,
  13. கன்னியாகுமரி

ஆகிய மக்களவைத் தொகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 7 தனித் தொகுதிகளில்

  1. ஸ்ரீபெரும்புதூர்,
  2. பொள்ளாச்சி,
  3. பெரம்பலூர்,
  4. ராசிபுரம்

ஆகிய தொகுதிகளுக்குப் பதிலாக

  1. திருவள்ளூர்,
  2. காஞ்சிபுரம்,
  3. விழுப்புரம்,
  4. நீலகிரி

ஆகிய தொகுதிகள் புதிதாக தனித் தொகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.

  1. சிதம்பரம்,
  2. நாகை,
  3. தென்காசி

தொகுதிகள் தொடர்ந்து தனித் தொகுதிகளாகவே நீடிக்கின்றன.
இப்படி பல தொகுதிகள் உருமாறியுள்ளதால் தாங்கள் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற தொகுதிகளில் போட்டியிட முடியாத நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பலருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைப்பதே அரிதாகியுள்ளது.

மத்திய அமைச்சர் ஆ. ராசா வெற்றி பெற்ற பெரம்பலூர் தொகுதி தற்போது பொதுத் தொகுதியாக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் நீலகிரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். நீலகிரி தனித் தொகுதியானதால் அங்கு 5 முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர். பிரபு வேறு தொகுதி தேட வேண்டிய நிலையில் உள்ளார்.

  • மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்ற கோபிசெட்டிப்பாளையம்,
  • வைகோவுக்கு சாதகமான சிவகாசி,
  • முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தியின் செங்கல்பட்டு,
  • பாஜக தலைவர் சு. திருநாவுக்கரசருக்குச் சாதகமான புதுக்கோட்டை

ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் இவர்கள் புதிய தொகுதிகளைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பாமகவுக்கு சாதகமான

  1. திருவள்ளூர்,
  2. காஞ்சிபுரம்,
  3. விழுப்புரம்,
  4. சிதம்பரம்

ஆகிய தொகுதிகள் தனித் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளதால் கூட்டணியில் எந்தத் தொகுதியை கேட்டுப் பெறுவது என்று அக்கட்சி தடுமாற்றத்தில் உள்ளது.
புதிதாக வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிகளால் அரசியல்வாதிகளில் பலர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Posted in Govt, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

DMK Women Conference at Cuddalore: Kanimozhi, Azhagiri, MK Stalin – Kumudam Reporter Coverage

Posted by Snapjudge மேல் ஜூன் 20, 2008

22.06.08 ஹாட் டாபிக்

கலக்கலாகவே நடந்து முடிந்திருக்கிறது கடலூர் தி.மு.க. மகளிர் அணியின் முதல் மாநில மாநாடு. ஸ்டாலின் மட்டுமல்ல, அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட மாநாட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்ற ஒரு குறைளைத் தவிர.

`கனிமொழிக்காகத்தான் இந்த மாநாடு நடக்கப் போகிறது என்ற எண்ணத்தில், இந்த மாநாட்டை எப்படியாவது நடக்கவிடாமல் செய்ய வேண்டும் என ஸ்டாலின் நினைத்தார். இரண்டுமுறை தேதி தள்ளிப் போனதே தவிர, மாநாட்டை அவரால் நிறுத்த முடியவில்லை’ என்றெல்லாம் பேச்சுகள் இருந்தன. இந்த நிலையில் இரண்டுநாள் மாநாட்டில் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திலாவது வந்து பேசுவார் என்ற எதிர்பார்ப்பு கடைசிவரை நிலவியது. ஆனால் தப்பித்தவறிக் கூட அது நடக்காமல் போய்விட்டது.

மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக, 14-ம்தேதி காலையில், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கொடியேற்று விழா நடந்தபோது, அதில் எதிர்பார்த்த அளவு கூட்டமில்லை. அய்யோ! அவ்வளவுதான்! மாலையில் நடக்கப்போகும் பேரணியும் அழுதுவடியப் போகிறது என்று அங்கலாய்த்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. பீச் ரோட்டில் மாலை நான்கு மணிக்குத் தொடங்கிய பேரணியில் நல்ல கூட்டம். ஆறு மணி நேரம் வரை நீடித்த பேரணி, முடிந்தபோது இரவு பத்து மணி.

பேரணியைத் தொடங்கி வைத்த கனிமொழி, ஒன்றரை கி.மீ. தூரம் நடந்தே வந்தார். பேரணியைப் பார்வையிட தனிமேடையில் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள், அழகிரியின் மகள் கயல்விழி ஆகியோர் புடைசூழ அமர்ந்திருந்தார் கருணாநிதி. அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு மாநாட்டுப் பந்தலை நோக்கி நடந்தார் கனிமொழி. அவரை வழிமறித்த அமைச்சர் எம்.ஆர்.கே, பன்னீர்செல்வம், கலைஞர் இருந்த மேடையில் ஏறச் சொன்னபோது, அதை மறுத்துவிட்ட கனிமொழி, அமைச்சர்கள் ஏறியிருந்த மற்றொரு மேடையில் ஏறி நின்று பேரணியில் வந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார்.

பேரணி தொடங்கிய இடத்திலிருந்து குத்தாட்டம் போட்டுக் கலக்கியபடி வந்த ஒரு குழு, கலைஞர் இருந்த மேடை அருகே வந்ததும் நல்ல பிள்ளைகளாக மாறி, அவருக்கு பவ்யமாக மரியாதை செலுத்தி விட்டுக் கடந்தது ரசிக்கும்படியாக இருந்தது. பேரணி முடிய நேரமானதால் அன்று பேச இருந்த கனிமொழி மறுநாள் பேசுவார் என அறிவிக்கப்பட்டது.

மறுநாள் 15-ம்தேதி காலை பத்து மணிக்கே மாநாட்டு மேடைக்கு வந்து விட்டார் கலைஞர். அன்று பெரியார் படத்தைத் திறந்து வைத்துப் பேசிய கனிமொழி, “கருணாநிதிக்கு மார்க் போட யாரும் பிறக்கவில்லை. இனி பிறக்கவும் முடியாது. ஜெயலலிதா போன்றவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் குஜராத்தாகி விடும்” என்பது போன்ற பல பஞ்ச் களுடன் பேசி முடித்தார். கனி மொழி பேசி முடித்ததும் அவருக் குக் கை கொடுத்துப் பாராட் டினார் அமைச்சர் துரைமுருகன். அழகிரி மகள் கயல்விழி அவரது கன்னிப்பேச்சைத் தொடங்குமுன் கருணாநிதியின் கால்களில் விழுந்து வணங்கிவிட்டு, ஏதோ பேச்சுப் போட்டிக்கு வந்த பள்ளி மாணவி போல படபடவென பொரிந்து தள்ளினார். அவர் பேசி முடித்தபோது அழகிரி மட்டுமல்ல; மாநாட்டுக்கு வந்திருந்த அத்தனை பேரும் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

இறுதியாகப் பேசிய முதல்வர் கருணாநிதி, “பா.ம.க., தொடர்பாக நாங்கள் நான்கு பேர் இங்கே கூடிப்பேசி முடிவெடுக்க முடியாது. 17-ம்தேதி அறிவாலயத்தில் நடக்கும் உயர்நிலை குழுக் கூட்டத்தில் கூடி விவாதித்து தான் முடிவெடுக்கப்படும். யாரோ அவசரப்படுகிறார்கள் என்பதற்காக நானும் அவசரப்பட்டுவிட முடியாது” என்று கூறி பா.ம.க.வுக்கு ஒரு பஞ்ச் வைத்தார். “ஒரு சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு மட்டும் சிலிண்டர் ஒன்றுக்கு முப்பது ரூபாய் குறைக்கப்படும். இதற்கான தொகையை தமிழக அரசே எண்ணெய் நிறுவனங்களுக்குச் செலுத்திவிடும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு நூறுகோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இந்த மாநாட்டால் தமிழக அரசுக்கு நூறுகோடி நஷ்டம். இதை நான் இஷ்டப்பட்டு ஏற்றுக்கொள்கிறேன்” என்று நகைச்சுவையாகப் பேசி முடித்தார் அவர்.

மாநாட்டுக்கு ஸ்டாலின் வராததால் பத்திரிகைகளில் அந்த விஷயம் ஹைலைட்டாகி விடும் என்பதால், அதை மாற்றிக்காட்டும் விதத்தில் இந்த காஸ் சிலிண்டர் விலைக் குறைப்பை மாநாட்டில் முதல்வர் அறிவித்ததாக தி.மு.க. தொண்டர்கள் பலர் பேசிக் கொண்டனர்.

மாநாட்டுக்கு ஸ்டாலின் வரவில்லை என்றாலும் அவரது பேனர்கள், கட்அவுட்டுகளுக்கு அங்கே குறையிருக்கவில்லை. மாநாட்டின் முதல் நாளன்று அழகிரி அவரது மகள் கயல்விழி ஆகியோருக்கு மருந்துக்குக் கூட பேனர், கட்அவுட்டுகள் இல்லை. ஆனால் இரண்டாம் நாள் திடீர்திடீரென பல இடங்களில் இருவரது பேனர்களும் முளைத்திருந்தன. கடலூர் மாவட்ட நிர்வாகிகள் பெயரில் அந்த பேனர்கள் இருந்தன.

`இதுநாள்வரை தென்மாவட்டங்களில் மட்டும் கோலோச்சிக்கொண்டிருந்த அழகிரிக்கு வட மாவட்டங்களில் அவ்வளவாக ஆதரவாளர்கள் இல்லை. இந்த நிலையில், ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான பொன்முடி, கடலூர் மாவட்டத்திலும் மூக்கை நுழைத்து தொடர்ந்து தொல்லை தந்ததால், கடுப்பாகி இருந்த பன்னீர்செல்வத்தை அழகிரி சமயம் பார்த்துத் தன்பக்கம் இழுத்துவிட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு பவர்ஃபுல் இலாகாவான சுகாதாரத் துறையை வாங்கிக்கொடுத்ததே அழகிரிதான். அதற்கு நன்றிக்கடனாகத் தான் பன்னீர்செல்வம் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்டி இருக்கிறார். இதன்மூலம் அழகிரியின் அரசியல் பரப்பளவு தற்போது வடதமிழகம் வரை விரிந்திருக்கிறது. அழகிரியின் வடமாவட்டத் தளபதியாக பன்னீர்செல்வம் தன்னை முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார்’ என்றெல்லாம் மாநாட்டில் அங்கங்கே தொண்டர்கள் பேசிக் கொண்டதை நம்மால் கேட்க முடிந்தது.

`ஸ்டாலினுக்கு எதிராக அழகிரியும், கனிமொழியும் கரம்கோத்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டிவிட்டார்கள். இதற்கு ஸ்டாலின் எப்படி பதிலடி கொடுக்கப்போகிறார் என்பது போகப்போகத்தான் தெரியும்’ என்றும் சிலர் பேசிக்கொண்டனர். ஸீ

ஸீ எஸ்.கலைவாணன்

19.06.08 ஹாட் டாபிக்

கடலூரில் நடக்க இருக்கும் தி.மு.க.வின் முதல் மகளிரணி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தடபுடலாகத் தொடங்கியுள்ளன. கனிமொழியை முன்னிலைப்படுத்த இருக்கும் இந்த மாநாட்டுக்கான கட்அவுட்,பேனர் என எல்லாவற்றிலும் கனிமொழிக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.இதனால் ஸ்டாலின் ஆதரவாளர்கள் மாநாட்டில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் எட்ட நின்று வேடிக்கை பார்க்கின்றனர்.

கடலூரில் ஒரு மாதத்துக்கு முன்பே நடந்து முடிந்திருக்க வேண்டிய மாநாடு இது.என்ன காரணமோ தெரியவில்லை?பலமுறை தள்ளிவைக்கப்பட்டபின், கடைசியில் ஒரு வழியாக இம்மாதம் 14, 15-ம்தேதிகளில் கடலூரில் இந்த மாநாட்டை நடத்த முடிவானது.

பொதுவாக மாநில மாநாடு என்றால் நகருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பெரிய மைதானத்தைத் தேர்வு செய்து அங்குதான் நடத்துவார்கள். ஆனால், கடலூர் தி.மு.க. மகளிர் அணி மாநாட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், கடலூர் நகரின் நடுவில் உள்ள மஞ்சக்குப்பம் மைதானம். பொதுவாக அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் மட்டுமே நடத்தக்கூடிய இந்த மைதானத்தில்,மகளிர் மாநில மாநாடு நடக்கப்போவது பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

ஆரம்பத்தில் நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடியில் -ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களைத்தான்,மகளிர் மாநாட்டுக்காக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் முதல்கட்டமாகத் தேர்வு செய்திருக்கிறார். ஆனால் `அந்த இடங்கள் எதுவும் வேண்டாம். மஞ்சக்குப்பம் மைதானத்தில்தான் மாநாட்டை நடத்தியாக வேண்டும்’ என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி வற்புறுத்தியதால், மஞ்சக்குப்பம்தேர்வாகியிருக்கிறது.

இப்படி இந்த மைதானத்தை ஆற்காட்டார் தேர்வு செய்ததன் பின்னணியில் ஒரு சென்டிமெண்ட் காரணம் இருக்கிறது என்கிறார்கள் சிலர். ஜெயலலிதா அ.தி.மு.க.வில் அடியெடுத்து வைத்த காலத்தில் கடலூரில் இந்த மைதானத்தில் நடந்த மாநாட்டில்தான் எம்.ஜி.ஆர். அவருக்கு `கொள்கை பரப்புச் செயலாளர்’ பதவி கொடுத்து அழகு பார்த்தார். அதன்பிறகு ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பி.யாகி,கடைசியில் முதல்வராகவும்ஆகிவிட்டார். அதேபோல், தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் கனிமொழிக்கும் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் ராசியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்த இடத்தை தி.மு.க. தலைமை தேர்வு செய்திருக்கலாம் என்கிறார்கள் சிலர். இந்த மாநாட்டில் கனிமொழிக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பை கருணாநிதி அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் தொண்டர்களிடையே நிலவுகிறது.

மாநாட்டுக்கான எல்லா ஏற்பாடுகளையும் இழுத்துப் போட்டுச் செய்து வருகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அவருடன் கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான ஐயப்பன்,சபா ராஜேந்திரன் ஆகியோரும் போட்டி போட்டுக் கொண்டுஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

மாநாட்டுத் திடலுக்குள் ஐயப்பன், சபா ராஜேந்திரன் ஆகியோர் அவரவர் பெயரில் கட்அவுட் வைத்திருந்தனர். அமைச்சர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அவற்றை அகற்றச் சொன்னதால், அந்த கட்அவுட்கள் அகற்றப்பட்டன. `தனிப்பட்ட முறையில் யார் பெயரிலும் கட்அவுட், பேனர் வைக்கக் கூடாது. கடலூர் மாவட்ட தி.மு.க. என்றுதான் வைக்க வேண்டும்’ என்று அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ள நிலையிலும், மாநாட்டுத் திடலுக்கு வெளியே ஐயப்பன், சபா ராஜேந்திரன் ஆகியோர் பெயர்களில் கட்அவுட், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், பேனர் வைப்பது தொடர்பாக ஐயப்பனுக்கும், அமைச்சரின் ஆதரவாளரான நகராட்சி சேர்மன் தங்கராசுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் சூழ்நிலைகூட உருவானது. ஒருபக்கம் மாநாட்டு ஏற்பாடுகள் அமளிதுமளிப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான பொன்முடி தரப்பினர் மட்டும் ஒதுங்கியே நிற்கின்றனர்.

உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி ஒருமுறைகூட மாநாட்டுத் திடலை வந்து எட்டிப் பார்க்கவில்லை. பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் பொன்முடி ஒதுங்கியே இருக்கிறார். அதுபோல, கடலூர் எம்.பி.யான மத்திய இணை அமைச்சர் வேங்கடபதியும்மாநாட்டுத் திடல் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை. நான்கு முறை கடலூரின் எம்.எல்.ஏ.வாக இருந்த மாநில மாணவர் அணிச் செயலாளர்இள. புகழேந்தியின் கதையும் இதுதான். இவரும் மாநாட்டு ஏற்பாடுகளில் அவ்வளவாக அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் இவரது புதுவீடு மாநாடு நடக்கும் இடத்துக்கு அருகில்தான் இருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சுகாதாரத்துறை அமைச்சர் என்ற பெரும் பொறுப்பை கருணாநிதி அளித்தார். அதற்கு நன்றிக்கடனாக மகளிர் அணி மாநாட்டை சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் பம்பரமாகச் சுழன்று வருகிறார். மாநாட்டுக்காக மூன்று லட்சம் சதுர அடி பரப்பில் மாநாட்டுப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் தங்குவதற்காக ஐம்பது திருமண மண்டபங்கள் மற்றும் தனியார் பள்ளிகள் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன. அதிநவீன வசதிகளுடன் முந்நூறு கழிவறைகள் மாநாட்டுத் திடலைச் சுற்றி கட்டப்பட்டுள்ளன. பத்து படுக்கைகள் கொண்ட அவசர முதலுதவி மருந்தகமும் அமைக்கப்பட்டுள்ளது. முதல் நாள் நடக்கும் பேரணிக்கு தமிழகம் முழுவதிலுமிருந்து வரும் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால், மாநாட்டுத் திடலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சில்வர் பீச்சில் பதினைந்து ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மாநாடு நடக்கப்போகும் மஞ்சக்குப்பம் மைதானம், கடலூர் நகரின் மையப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கலெக்டர் அலுவலகம்,எஸ்.பி. அலுவலகம் அருகே இருப்பதால், இரண்டு நாள் மாநாட்டின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஏகப்பட்ட சிக்கல்களை பொதுமக்கள் எதிர்கொள்ள நேரும் என்ற பயம் உள்ளது.

மாநாடு, பொதுக்கூட்டம், பேரணி நடத்தும்போது தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு எந்தவித இடைஞ்சலும் தரக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருப்பதால், இதையே காரணம் காட்டி அ.தி.மு.க.வினர் மாநாட்டுக்குத் தடை வாங்கிவிடப் போகிறார்கள் என்பதால், தேசிய நெடுஞ்சாலையில் பேரணி நடத்தாமல் கடற்கரைப் பகுதியில் பேரணி நடத்த முடிவாகி உள்ளது.

மகளிர் அணி மாநாடு என்பதால் மாநிலம் முழுவதும் செயல்வீரர்கள் கூட்டம் போட்டு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்த சற்குணபாண்டியன், சங்கரிநாராயணன் ஆகியோரது பெயர்கள் எந்த இடத்திலும் முன்னிலைப்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை.முழுக்க முழுக்க கனிமொழிக்கு மட்டுமே இந்த மாநாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இது ஒருபுறமிருக்க, கருணாநிதி குடும்பத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ள இந்த மாநாட்டுக்கு ஸ்டாலின் வருவார் என்றும், வரமாட்டார் என்றும் இரண்டு விதமாக தொண்டர்கள் பகடை உருட்டி வருகிறார்கள். வெளிநாடு சென்றுள்ள ஸ்டாலின் வருவாரா? மாட்டாரா? என்பது மாநாட்டின் போதுதான் தெரியும். ஸீ

ஸீ எஸ். கலைவாணன்

Posted in DMK, Govt, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Report on The Government of Tamil Nadu: Public Administration: Accountant General’s Office: IAAS – Indian Audit and Accounts Service

Posted by Snapjudge மேல் மே 20, 2008

மு.க.ஸ்டாலின் துறையில் பல கோடி ரூபாய் முறைகேடு

தமிழக அரசுத் துறைகளில் ரூ. 32 கோடி அளவுக்கு தேவையற்ற மற்றும் முறைகேடான செலவுகள் செய்யப் பட்டுள்ளதாகவும், இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறையில் மட்டும் ரூ.13 கோடி அளவுக்கு முறைகேடான செலவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2006-07ம் ஆண்டிற்கான மத்திய தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தணிக்கை விவரங்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டு சென்னையில் உள்ள இந்திய தணிக்கை துறை தலைவர் முருகையா பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஆண்டுதோறும் மாநில அரசின் கணக்கு வழக்குகளை மத்திய தணிக்கை துறை தணிக்கை செய்து மாநில ஆளுநரிடம் சமர்ப்பிக்கும். இந்த அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு பொதுக் கணக்கு குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த அறிக்கையில் உள்ளவற்றை இந்தக் குழு ஆய்வு செய்து அதன்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைசெய்யும். இதன் பேரில் அரசு நடவடிக்கை எடுக்கும்.

  • 2006-07 ஆம் ஆண்டு மாநில அரசின் வருவாய் முந்தைய ஆண்டை விட 20.5 சதவிகிதம் உயர்ந்து 40 ஆயிரத்து 913 கோடியாக உள்ளது.
  • வருவாய் செலவினம் 19.5 சதவிகிதம் உயர்ந்து 38 ஆயிரத்து 265 கோடியாக உள்ளது.
  • கடன் அல்லாத மூலதன வருவாய் 710 கோடி ரூபாயாகவும்,
  • மூலதன செலவு மற்றும் கடன்கள் வழங்கியவை முறையே 1898 கோடி மற்றும் 1214 கோடி ரூபாயாக அதிகரித்ததாலும்
  • இந்த ஆண்டில் வருவாய் பற்றாக்குறை 1705 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டில் அரசின் நிதி பொறுப்பு வருவாயை விட 1.62 மடங்குகூடுதலாக ரூ.66 ஆயிரத்து 320 கோடியாக உள்ளது. நபார்டு வங்கி ஒப்புதல் அளித்த 269 பாசன திட்டங்களில் 251 திட்டங்கள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. பாசனத்துறை ஒப்புதல் பெறாத திட்டங்களில் 2.47 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. கூடுதல் திறன் கொண்ட கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை வடிவமைப்பதில் கூடுதலாக 5.77 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.

வணிகவரித்துறையில் இலவசமாக கிடைக்கும் மென்பொருளை தனியாரிடமிருந்து வாங்கியதால் 80 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 14 கோடி ரூபாய் செலவு செய்தும் கணினிமயமாக்கும் பணிகள் முற்றுப் பெறவில்லை.

கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் 415 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்று எந்தவித கட்டணமும் செலுத்தாமல் அனுபவித்து வருகிறது. பல்வேறு வரிகள் வசூலிப்பதில் சுணக்கம் காரணமாக பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத்தில் எந்தவித இடர்பாடுகளும் இல்லாத நிலையிலும் 25 திட்டங்களில் 23 திட்டங்கள் நிறைவு செய்யப்படவில்லை.

பாக்கித் தொகை செலுத்துவதில் தமிழ்நாடு மின்சார வாரியம் நிபந்தனைகளை பின்பற்ற தவறியதால் 24.63 கோடி ரூபாய் ஊக்கத் தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது. பொது விநியோக முறையின் கீழ் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செலவு தொகையை திரும்ப பெற சமர்ப்பித்த தவறான கோரிக்கையின் விளைவாக ரூ.3.99 கோடி முடங்கிப் போயுள்ளது.

இத்துடன் அரசின் பல்வேறு துறைகள் மற்றும் கள அலுவலகங்களில் சோதனை செய்ததில் வீணான செலவினம் மற்றும் இதர முறைகேடுகள் காரணமாக 31.89 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவற்றில் மு.க.ஸ்டாலின் கீழ் உள்ள துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் தேவையற்ற மற்றும் பலன் அளிக்காத செலவு 9.63 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது. தவிர்த்திருக்கக் கூடிய செலவுகள் 3.30 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது.

இதே போல் பல துறைகளில் பல கோடி ரூபாய்க்கு தேவையற்ற மற்றும் முறைகேடான செலவுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Posted in DMK, Economy, Finance, Govt, India, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »