Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Vote’

Election 2009 caste vote: Tamilnadu MPs forced to find new constituencies after delimitation

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2009

மறுவரையறை தொகுதிகளால் சோகத்தில் ஆழ்ந்துள்ள அரசியல்வாதிகள்

தொகுதி மறுவரையறைப்படி உருவாக்கப்பட்டுள்ள புதிய தொகுதிகளால் அரசியல்வாதிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

வாக்காளர்களின் எண்ணிக்கை சரிசமமாக இருக்கும் வகையில் சட்டப் பேரவை, நாடாளுமன்றத் தொகுதிகளை தேர்தல் ஆணையம் மறுவரையறை செய்துள்ளது.

இதனால் இதுவரை இருந்த

  1. செங்கல்பட்டு,
  2. திருப்பத்தூர்,
  3. வந்தவாசி,
  4. திண்டிவனம்,
  5. ராசிபுரம்,
  6. திருச்செங்கோடு,
  7. கோபிசெட்டிபாளையம்,
  8. பழனி,
  9. பெரியகுளம்,
  10. புதுக்கோட்டை,
  11. சிவகாசி,
  12. திருச்செந்தூர்,
  13. நாகர்கோவில்

ஆகிய மக்களவைத் தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

  1. திருவள்ளூர்,
  2. காஞ்சிபுரம்,
  3. திருவண்ணாமலை,
  4. ஆரணி,
  5. விழுப்புரம்,
  6. கள்ளக்குறிச்சி,
  7. நாமக்கல்,
  8. ஈரோடு,
  9. திருப்பூர்,
  10. தேனி,
  11. விருதுநகர்,
  12. தூத்துக்குடி,
  13. கன்னியாகுமரி

ஆகிய மக்களவைத் தொகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 7 தனித் தொகுதிகளில்

  1. ஸ்ரீபெரும்புதூர்,
  2. பொள்ளாச்சி,
  3. பெரம்பலூர்,
  4. ராசிபுரம்

ஆகிய தொகுதிகளுக்குப் பதிலாக

  1. திருவள்ளூர்,
  2. காஞ்சிபுரம்,
  3. விழுப்புரம்,
  4. நீலகிரி

ஆகிய தொகுதிகள் புதிதாக தனித் தொகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.

  1. சிதம்பரம்,
  2. நாகை,
  3. தென்காசி

தொகுதிகள் தொடர்ந்து தனித் தொகுதிகளாகவே நீடிக்கின்றன.
இப்படி பல தொகுதிகள் உருமாறியுள்ளதால் தாங்கள் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற தொகுதிகளில் போட்டியிட முடியாத நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பலருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைப்பதே அரிதாகியுள்ளது.

மத்திய அமைச்சர் ஆ. ராசா வெற்றி பெற்ற பெரம்பலூர் தொகுதி தற்போது பொதுத் தொகுதியாக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் நீலகிரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். நீலகிரி தனித் தொகுதியானதால் அங்கு 5 முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர். பிரபு வேறு தொகுதி தேட வேண்டிய நிலையில் உள்ளார்.

  • மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்ற கோபிசெட்டிப்பாளையம்,
  • வைகோவுக்கு சாதகமான சிவகாசி,
  • முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தியின் செங்கல்பட்டு,
  • பாஜக தலைவர் சு. திருநாவுக்கரசருக்குச் சாதகமான புதுக்கோட்டை

ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் இவர்கள் புதிய தொகுதிகளைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பாமகவுக்கு சாதகமான

  1. திருவள்ளூர்,
  2. காஞ்சிபுரம்,
  3. விழுப்புரம்,
  4. சிதம்பரம்

ஆகிய தொகுதிகள் தனித் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளதால் கூட்டணியில் எந்தத் தொகுதியை கேட்டுப் பெறுவது என்று அக்கட்சி தடுமாற்றத்தில் உள்ளது.
புதிதாக வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிகளால் அரசியல்வாதிகளில் பலர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Posted in Govt, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Pazha Nedumaran: DMK & Tamil Nadu Politics of Alliances – Coalition Government & PMK

Posted by Snapjudge மேல் ஜூன் 25, 2008

மாற்று அணி காலத்தின் கட்டாயம்

பழ. நெடுமாறன்

அண்மையில் தனது கூட்டணியிலிருந்து பா.ம.க.வை தி.மு.க. வெளியேற்றி உள்ளது கொள்கை அடிப்படையிலான முடிவல்ல.

பா.ம.க.வைச் சேர்ந்த ஒருவர் தி.மு.க. தலைமையைத் தரக்குறைவாக விமர்சனம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பா.ம.க.வுடன் உள்ள உறவை தி.மு.க. தன்னிச்சையாகத் துண்டித்துக் கொண்டிருக்கிறது. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கூடி இம் முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கட்சிகளுக்கு இடையே உள்ள உறவுகளை முறித்துக் கொள்வதற்கு இதுபோன்ற குற்றச்சாட்டுகளே போதுமானவை என்றால் தி.மு.க. தலைவரும் அவரது கட்சியைச் சேர்ந்த பிறரும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மீது சேற்றை வாரி இறைக்க ஒருபோதும் தயங்கியது இல்லை. தி.மு.க. தலைமையின் இழிசொல்லுக்கும், பழிக்கும் ஆளாகாத கட்சிகளோ, தலைவர்களோ இல்லை. அந்த அடிப்படையில் தி.மு.க. எந்தக்கட்சிகளோடும் கூட்டுச் சேர முடியாது.

மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் கொள்கை அடிப்படையிலும், குறைந்தபட்ச செயல்திட்ட அடிப்படையிலும் இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்து வருகின்றன. கூட்டணியின் முக்கிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிற இடதுசாரிக் கட்சிகள் அவ்வப்போது விமர்சனம் செய்யாமல் இல்லை. மேற்கு வங்கத்தில் நந்திகிராம் பிரச்னையில் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் அரசை வன்மையாகக் கண்டித்தன. அதைப்போல கேரளத்திலும் கூட்டணியில் உள்ள கட்சிகள் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தாமல் இல்லை. இதற்காகப் பிற கட்சிகளுடன் உள்ள உறவை மார்க்சிஸ்ட் கட்சி முறித்துக் கொண்டதில்லை.

1967ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை தமிழகத்தில் நடைபெற்று இருக்கிற பல்வேறு பொதுத் தேர்தல்களிலும் கொள்கை வழி நின்றோ, குறைந்தபட்சத் திட்ட அடிப்படையிலோ கூட்டணிகள் அமைக்கப்படவில்லை. சந்தர்ப்பவாத அடிப்படையில் பதவிப் பங்கீடு செய்து கொள்வதற்காகக் கூட்டணிகள் உருவாக்கப்பட்டன.

1967ஆம் ஆண்டு ஒருபுறம் சுதந்திரா கட்சியுடனும், மறுபுறம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் கூட்டணி அமைத்தார் அண்ணா. காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகக் கூட்டணி அமைக்கப்பட்டதாகக் கூறினார்.

1971ஆம் ஆண்டு அண்ணாவின் அருமைத் தம்பி கருணாநிதி, அண்ணன் வகுத்த காங்கிரஸ் எதிர்ப்புப் பாதையில் இருந்து மாறி காங்கிரசுடனேயே கூட்டணி வைத்துக் கொண்டார். ஜஸ்டிஸ் கட்சிக் காலம் முதல் தி.மு.க. காலம் வரை காங்கிரஸ் எதிர்ப்பிலேயே ஊறி வளர்ந்த ஒரு கட்சி, காங்கிரசுடன் கைகோர்க்கக் கொஞ்சமும் தயங்கவில்லை. காமராஜரை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இந்திரா – கருணாநிதி கூட்டு உருவானது.

ஆனால், இந்த கூடாத நட்பு நெடுநாள் நீடிக்கவில்லை. 1976ஆம் ஆண்டு அவசர நிலைக்காலத்தில் கருணாநிதியின் ஆட்சியை இந்திரா பதவி நீக்கம் செய்தார். தி.மு.க.வுக்கு எதிராகக் கொடிய அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. கருணாநிதி செய்த ஊழல்களை விசாரிக்க “சர்க்காரியா கமிஷனை’ இந்திரா அமைத்தார்.

1977ஆம் ஆண்டு காங்கிரசை எதிர்க்க ஜனதா கட்சியுடன் கருணாநிதி கரம் கோர்த்தார்.

1978ஆம் ஆண்டு அக்டோபரில் மதுரைக்கு இந்திராகாந்தி வந்தபோது அவருக்கு எதிரான கொலை வெறித்தாக்குதல் நடத்த தி.மு.க. தயங்கவில்லை.

ஆனால், மறு ஆண்டே நிலைமை மாறியது. 1979 இறுதியில் அதே இந்திராவின் தலைமையில் உள்ள காங்கிரசுடன் கருணாநிதி கூட்டுச் சேர்ந்தார். “”நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!” என முழங்கினார். 1984ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது. 1989ஆம் ஆண்டு வி.பி. சிங் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய தி.மு.க. ஆதரவு அளித்தது. 1991இல் காங்கிரசுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது. 1998இல் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது. 1999இல் பா.ஜ.க.வுடன் தி.மு.க. கைகோர்த்தது. 2003ஆம் ஆண்டில் மீண்டும் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது.

மத்தியில் ஆளும் கட்சி எதுவோ அதனுடன் கூட்டுச் சேர இரு கழகங்களும் தமக்குள் போட்டியிட்டன. 1979இல் சரண்சிங் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் இரு அ.தி.மு.க.வினர் அமைச்சரானார்கள். 1989இல் வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகித்தது. 1998ஆம் ஆண்டு பா.ஜ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க. அங்கம் வகித்தது. 1999ஆம் ஆண்டு பா.ஜ.க. அமைச்சரவையில் தி.மு.க. அமைச்சர்கள் பங்கேற்றனர். மீண்டும் 2003ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பதவியேற்றனர்.

தில்லியில் ஆளுங்கட்சி எதுவோ அதனுடன் கூட்டுச் சேர்ந்து தமிழகத்தில் தாங்கள் நடத்தும் ஊழல் ஆட்சிக்குப் பாதுகாப்புத் தேடிக்கொள்ளவே இரு கழகங்களும் இவ்வாறு செய்தன. ஆனால் மத்திய ஆட்சிகளில் அங்கம் வகித்தும் காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்ற ஆற்று நீர்ப் பிரச்னைகள் சேதுகால்வாய்த் திட்டம் எதனையும் தீர்க்க இரு கழகங்களாலும் முடியவில்லை.

தமிழ்நாட்டில் தற்போது தி.மு.க. அரசு சிறுபான்மை அரசே ஆகும். பலமான கூட்டணி அமைக்கப்பட்டிருந்தும் தி.மு.க.வுக்கு தனித்த பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சி நடத்துகிறது. ஆனாலும் தனது ஏதேச்சாதிகாரப்போக்கை அது கைவிட மறுக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல்களில் தோழமைக் கட்சி வேட்பாளர்கள் கூட ஆளும் கட்சியினரின் வன்முறைத் தாக்குதல்களுக்கு இரையானார்கள். தேர்தல் முறைகேடுகள் பகிரங்கமாக நடத்தப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியிலும் இவ்வாறே நடத்தப்பட்டன.

இரு கழகங்களின் ஆட்சியிலும் மணல் கொள்ளை வெளிப்படையாகவே தொடர்கிறது. கள்ளச்சாராயம் ஆறாகப் பெருகி ஓடுகிறது.

இரு கழக ஆட்சியிலேயும் காவல்துறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மோதல் சாவுகள், காவல் நிலையப் படுகொலைகள், தங்கு தடையின்றித் தொடர்ந்தன.

ஜனநாயக உரிமைகள் அப்பட்டமாகப் பறிக்கப்பட்டன. எதிர்க்கருத்துகளை நசுக்கும் முயற்சி தொடர்ந்தது.

இரு கழகங்களின் ஆட்சியிலேயும் சாதி மத மோதல்கள் தடுக்கப்படவில்லை.

எல்லையற்ற ஊழலும், லஞ்சமும், நிர்வாகச் சீர்கேடுகளும் தலைவிரித்து ஆடின. ஆடுகின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சருக்கு மிக நெருக்கமான குடும்பத்தின் தலையீடு நிர்வாகத்தில் இருந்தது.

தி.மு.க. ஆட்சியிலும் முதலமைச்சரின் சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அதிகார மையங்களின் தலையீடு அரசின் சகல மட்டங்களிலும் இருக்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் பன்னாட்டுத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்கள் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்படுவது இரு கழக ஆட்சிகளிலும் தொடர்ந்தது.

முக்கியமான பிரச்னைகளில்கூட கூட்டணிக் கட்சிகளை இரு கழகத் தலைமைகளும் ஒருபோதும் கலந்து ஆலோசிப்பது கிடையாது.

அரசின் தவறான நடவடிக்கை குறித்து கூட்டணிக் கட்சிகள் விமர்சிக்கவோ, எதிர்ப்புத் தெரிவிக்கவோ கூடாது. அவ்வாறு எதிர்க்கத் துணிந்த பிற கட்சித் தலைவர்களை முதலமைச்சரும், அக்கட்சியைச் சார்ந்த பலரும் பண்பாடற்ற முறையில் திட்டித் தீர்ப்பார்கள். கூட்டணிக் கட்சிகள் என்றால் கொத்தடிமைக் கட்சிகளாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இரு கழகத் தலைமையிடமும் இப்போதும் நீடிக்கிறது.

ஆட்சி அரியாசனத்தில் அமர்வதற்காகத் தங்களுக்குப் பல்லக்குத் தூக்கிகளாகக் கூட்டணிக் கட்சிகள் இருக்க வேண்டும் என இரு கழகத் தலைமைகளும் எதிர்பார்க்கின்றன.

1967ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்கள் எல்லாவற்றிலும் கூட்டணிக் கட்சிகளின் உதவியின்றி இரு கழகங்களும் வெற்றி பெற்றதே இல்லை. தனித்துநின்று வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையும் இரு கழகங்களுக்கும் எப்போதும் இருந்ததில்லை. ஆனால் தங்களின் தயவினால்தான் கூட்டணிக் கட்சிகளுக்குச் சில பதவிகள் கிடைக்கின்றன. தங்களின் கடைக்கண் பார்வை இல்லாமல் போனால் கூட்டணிக் கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என இரு கழகத் தலைமைகளும் இறுமாப்புடன் நினைக்கின்றன.

கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு பலமான கூட்டணி இருந்தும்கூட தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 90 இடங்களே கிடைத்தன.

அ.தி.மு.க.வுக்கு 60 இடங்களுக்கு மேல் கிடைக்கவில்லை. இரு கழகங்களும் தனித்துப் போட்டியிட்டு இருக்குமானால் 10 முதல் 20 இடங்களுக்கு மேல் கிடைத்திருக்காது என்பது திண்ணம்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகப் பொதுவாழ்விலும் – சமுதாயப் பண்பாட்டுத் தளங்களிலும் மிகப்பெரிய சீரழிவை இரு கழகங்களும் ஏற்படுத்திவிட்டன.

இவற்றிலிருந்து தமிழகத்தை மீட்கும்பணி இமாலயப் பணியாகும். தாழ்ந்து கிடக்கும் தமிழகத்தைத் தூக்கி நிறுத்த வேண்டிய மகத்தான கடமை இன்று நம்முன் நிற்கிறது. அந்தக் கடமையைச் செய்ய முன்வருமாறு ஜனநாயகக் கட்சிகளை வேண்டிக் கொள்கிறேன்.

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற ஆற்றுநீர்ப் பிரச்னைகளிலும் நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கும் சேதுக்கால்வாய் பிரச்னையிலும் தமிழகத்தின் நியாயமான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டுமானால் உறுதியுடன் போராடும் துணிவுகொண்ட மாற்று அணியால்தான் முடியும்.

ஜனநாயக நெறிமுறைகளை நிலைநிறுத்துவதிலும், ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்துவதிலும், பாசிச சர்வாதிகாரத்தை எதிர்த்து வீழ்த்துவதிலும் நம்பிக்கை கொண்ட கட்சிகள் தமக்குள் ஒன்றுபட்டு குறைந்தபட்ச திட்ட அடிப்படையில் மாற்று அணி உருவாக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் ஆகும்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இதற்கான தேவை அதிகரித்துள்ளது. மக்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறினால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது.

Posted in DMK, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | Leave a Comment »