Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

KV Ramakrishnan’s encounters with Carnatic Vidwans – Dinamani Kathir Music Season Special

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

கே.வி. ராமகிருஷ்ணன்: ஆஹா…அந்த நாட்கள்!
நேர்காணல்}தொகுப்பு: தாடி வாத்தியார்

வீட்டுக்குள் நுழையும் போதே செஸôனும், ரெம்ப்ரேண்டும், வான்கோவும் வரவேற்கின்றனர். புத்தக அலமாரிகளில் நேரு முதல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் வரை. இசைக் களஞ்சியத்தில் ஒலிப்பேழைகளாக அரியக்குடி, செம்பை முதல் ஜி.என்.பி, எம்.எல்.வி வரை. இவை அனைத்தையும் பராமரிக்கிற மகா ரசிகர் கே.வி.ராமகிருஷ்ணனுக்கு வயது 93. மிகச் சிறந்த பத்திரிகையாளர். அந்த

நாளில் ராய்டர் செய்தி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தவர். பெரும் அரசியல் மாற்றங்களைக் கண்டு எழுதியவர். 3 விம்பிள்டன்களைக் கண்டு எழுதிய விளையாட்டு விற்பன்னர்.

மிகச் சிறந்த இசை ரசிகர். மிகச் சிறந்த கலை விமர்சகர். நட்டுவாங்கம் செய்யும் அளவுக்கு லயத்தில் லயித்த மனது. இதெல்லாம் ராமகிருஷ்ணனின் சதாவதானத்தில் சில துளிகள். தனது 93 வயதின் இசை அனுபவங்களை அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

நான் பிறந்தது தாராக்காடு. அப்பா கே.ஏ.வெங்கடேசய்யர், பாலக்காட்டில் லீடிங் லாயர். கொல்லங்கோட்டு மகாராஜாவுக்கெல்லாம் அப்பா லாயராக இருந்தாரென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த நாளில் ராஜாவிடமிருந்து அசிட்டிலின் லாம்ப் எல்லாம் வெச்ச “ஹாச்கிஸ் பாரீஸ்’ கார் ஒன்று அப்பாவை அழைத்துப் போகவரும். என் ஸ்கூல் படிப்பெல்லாம் பாலக்காடு நேடிவ் ஸ்கூலில். 14 வயசில் எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சேன். அப்புறம் பாலக்காடு விக்டோரியா காலேஜில் பி.ஏ. படிச்சேன். பிரின்சிபாலாக பாக்வொர்த், டக்ளஸ் ஆகியோர்கள் இருந்த காலம். எனக்கு ஆறு, ஏழு வயதிருக்கும் போதே மிருதங்கமெல்லாம் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

மிருதங்க வாசிப்பை முறையாகப் படித்தது 16 வயசில்தான் என்றாலும், அதற்கு முன்பாகவே கேள்வி ஞானத்திலேயே பஜனைகளுக்கெல்லாம் வாசிப்பேன். கச்சேரிகளெல்லாம் கேட்பேன். அப்பாவுக்கு பாட்டெல்லாம் ரொம்ப பிடிக்கும். அதனால் பாட்டுக் கேட்கப் போவதற்கெல்லாம் தடை போடமாட்டார். என் சின்ன வயசிலேயே மூன்றரை ரூபாய்க்கு ஒரு மிருதங்கம் வாங்கித் தந்தார். அது தவிர திருச்சி கரூருக்குப் பக்கத்தில் ராம்ஜி அண்ட் கோ தயாரிப்பான கஞ்சிரா ஒன்றையும் அப்பா எனக்கு வாங்கித் தந்திருந்தார்.

கேள்வி ஞானத்திலேயே பஜனைகளுக்கு வாசித்துக் கொண்டிருந்த நான் பதினாறு வயதானதும் சாத்தபுரம் சுப்பையரிடத்தில் முறையாக மிருதங்கம் கற்க ஆரம்பித்தேன். பிற்காலத்தில் நானே நட்டுவாங்கம் செய்கிற அளவுக்கு லய ஞானம் வந்தது.

இவற்றுக்கெல்லாம் மேலாகப் பாலக்காடு மணி ஐயர், செம்பை, முசிறி, ஜி.என்.பி போன்ற சங்கீத மேதாவிகளுடன் ஒட்டி உறவாடிப் பழகும் பாக்கியமும் கிடைத்தது. குறிப்பாக லயமேதை பாலக்காட்டு மணியுடனான என் நட்பு மறக்கமுடியாதது. எனக்கும் மணிஐயருக்கும் 3 வயசு வித்யாசம். மணி ஐயர் 1912-ஜூன். நான் 1915- ஜூலை. அவரைப் பத்தி நான் சொல்லக்கூடிய விஷயங்கள் இன்றைக்கு யாருக்கும் தெரிந்திருக்காது. அத்தனை தூரம் நான் அவரோடு பழகியிருக்கேன்.

முதல் முதலில் அவரை நான் பார்த்தது 1922-ஆம் வருஷம் ஒரு கல்யாணக் கச்சேரியின் போது. அப்போது அவருக்கு பத்து வயது. எனக்கு வயது 7. பாலக்காட்டில் எங்கள் சொந்தக்காரரான பெரிய டாக்டரோட தம்பிக்குக் கல்யாணம். ரொம்பப் பெரிய கல்யாணம்.

ஒரு பக்கம் ஸ்பெஷலா ஜாங்கிரி. இன்னொரு பக்கம் வெள்ளைக்காராளுக்குத் தேவையான டிரிங்ஸ் எல்லாம். அதோடு அந்தக் கல்யாணத்தில் ராமபாகவதர் கச்சேரி. அந்த நாளில் ராமபாகவதர் கச்சேரின்னா எப்பிடிக் கூட்டம் வரும் தெரியுமா? இன்னைக்கு மாதிரி இல்லை. அந்த நாளில் கல்யாணக் கச்சேரிக்குக் கூப்பிடாமலேயே ஜனங்கள் வருவா. வந்தவாள் அத்தனை பேருக்கும் சாப்பாடு உண்டு. ராமபாகவதருக்கு ஒரு சின்ன பையன் மிருதங்கம் வாசிக்கிறான் என்று சொன்னார்கள். அந்தப் பையன்தான் மணி ஐயர். அதுக்கு முன்னாடியே அவர் பெயர் பிரபலமாகிவிட்டது.
ஆனால் அவரை அந்தக் கல்யாணத்தில்தான் முதலில் பார்த்தேன். அப்பளாக்குடுமி. நீளநீளமாக் கோடு போட்ட ஒரு சட்டை. கையில் காப்பு. இதுதான் மணி ஐயரோட கோலம். அப்போ அவருக்கும் சின்ன வயசு. எனக்கும் சின்ன வயசு. அதனால் அவர் என்ன வாசிச்சார்னு பின்னாடி எங்க ரெண்டு பேருக்குமே நினைவில்லை. ஆனால் அவர் முதல் கச்சேரி அதற்கு முன்னாலேயே நடந்து விட்டது. அதுவும் ஒரு கல்யாணக் கச்சேரிதான். அதுக்கு அவருக்கு 1 ரூவா கொடுத்தார்கள். “அது ஆகி வந்த ரூபாய்’ என்பார் பின்னாளில் மணி ஐயர்.

மணி ஐயர் 1925-26 இல் செம்பைக்கு வாசித்து விட்டார். அந்த நாளில் செம்பை குரலில் அசாத்திய ஸ்பீடு பேசும். அன்று அவர் கொடுத்த ஒருமையுடன் நினது திருமலரடி ரெகார்ட் கேட்டிருக்கிறீர்களா? அன்னிக்கு செம்பை ரெகார்ட்களும் முசிறியின் விரித்த செஞ்சடை, நகுமோமு ரெகார்ட்களும் சூப்பர் சேல்ஸ். செம்பை சும்மா இல்லை. சரியா வேலை வாங்கி பக்கவாத்தியத்தின் கையை ஒடிச்சுடுவார். அப்பவே மணி ஐயர், செம்பைக்கு வாசிச்சுட்டாரென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதோடு இல்லை. 1930ல் அதாவது 18 வயசில் ஒரு கச்சேரிக்கு 100 ரூவா வாங்கினார். அப்பவே இன்கம்டாக்ஸ் கொடுத்தார். எப்படிப்பட்ட வித்வானுக்கும் ஈடு கொடுத்து வாசிப்பது மிகச் சின்ன வயசிலேயே வந்துவிட்டது. பல்லவியில் பல்லைப் பிடித்துப் பார்க்கும் வித்வான்களை அவர் அலட்சியமாகச் சமாளித்த சம்பவங்கள் உண்டு.

முதல் தடவை அவர் மகாராஜபுரத்துக்கு வாசித்தது சுவாரஸ்யமான சம்பவம். அதைச் சொல்லுகிறேன்.

திருவனந்தபுரத்தில் பிச்சுமணி ஐயங்கார் என்று ஒருவர் இருந்தார். பெரிய போலீஸ் ஆபீசர். சங்கீதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர். இசைப் புரவலர். ஒரு சங்கீத சபாவை திருவனந்தபுரத்தில் ஆரம்பித்து நடத்தினார். பிச்சுமணி ஐயங்காரின் பிள்ளை நாராயணன் என்பவர் என் நண்பர். அவர்தான் இந்தச் சம்பவத்தை என்னிடம் சொன்னார். பிச்சு மணி ஐயங்கார் வீட்டில் மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. யார் மிருதங்கம் என்று மகாராஜபுரம் கேட்டார். ஒரு குட்டி வாசிக்கிறான். அவன் பெரிய பாட்டுக்கெல்லாம் வாசித்தவன் என்றார்கள். மலையாளப் பிரதேசத்தில் சிறு பையன்களை குட்டி என்று சொல்வார்கள். மகாராஜபுரத்தைப் பற்றித்தான் தெரியுமே? அவருக்கே உரித்தான சோழதேசத்துக் கிண்டலும் கேலியும் தனி ரகமல்லவா? சின்னப் பையனாக மேடையில் மணி ஐயரைப் பார்த்ததும் மகாராஜபுரம் “” இவன்தான் குட்டியா…ஏ குட்டி….நான் பல்லவியெல்லாம் பாடுவேன் தெரியுமா உனக்கு….” என்றார். குட்டி மணி ஐயர் மிருதங்கத்தைச் சுருதி சேர்த்தபடியே பளீரென்று “”நீர் எதை வேணா பாடுமய்யா” என்றாரே பார்க்கலாம். அதோடு அவர் பல்லவியை நிர்வகித்து வாசித்ததைப் பார்த்து அசந்து போன மகாராஜபுரம் “”ஓ….இது சாதாரண குட்டி இல்லை போலிருக்கு” என்றார். மணி ஐயரின் தன்னம்பிக்கை எல்லை இல்லாதது.


பழனி சுப்புடு

அவர் வாசிப்பின் விசேஷம் என்னவென்று சொல்கிறேன். அவர் லயத்தில் ஒரு பிறவி மேதை என்பதால் மிக சிக்கலான லய விஷயங்களையெல்லாம் சர்வசாதாரணமாகப் புரிந்து கொண்டு அலட்சியமாக வாசித்துவிடுவார். இதற்கெல்லாம் உட்கார்ந்து தியரிடிகலாகப் படித்ததெல்லாம் கிடையாது. ஃபெüலர் இங்கிலீஷ் கிராமரைப் படித்து யாராவது இங்கிலீஷ் பேச முடியுமா? அவர் லயத்தின் நுட்பங்களையெல்லாம் உள்ளுணர்விலேயே மிக எளிதாக அறிந்து கொண்டார். ஒரு தடவை நான் அவருக்கு தாள சமுத்திரம் என்ற புத்தகத்தைத் தந்தேன். அப்போது அவர் என்ன சொன்னார் தெரியுமா? ராமகிருஷ்ணையர்….இந்தச் சமுத்திரத்தில் யார் முழுகுவது…என்று சொன்னார். தியரிடிகலான விஷயங்களையெல்லாம் அவர் உள்ளுணர்விலேயே உணர்ந்து வாசித்துவிடுவார்.

அதனால்தான் ஆலத்தூர் பிரதர்ஸýக்கு வாசிக்கும் போது லயச் சிக்கலான பல்லவிகளை ஆதிதாளம் வாசிப்பது போல கஷ்டமேபடாமல் அலட்சியமாக வாசித்தார். அப்புறம் அவர் பாட்டுக்கு வாசிக்கும் அழகைச் சொல்ல வேண்டும். பாட்டுக்கு வாசிப்பது என்பது தனிகலை. அதற்கு வல்லின மெல்லினம் தெரியணும். பத கர்ப்பம் தெரியணும். இதெல்லாம் அவருக்கு ரத்தத்திலேயே ஊறியிருந்தது. அதனால்தான் பெரிய பெரிய லய சிம்மங்களையெல்லாம் தன் மேதாவிலாசத்தால் பிரமிக்க வைக்க முடிந்தது.

1956 என்று நினைவு. தில்லியில் ஒரு மியூசிக் செமினார். அதை ஒட்டி ரவீந்திர பவனில் ஆலத்தூர் கச்சேரி. மணி ஐயர் மிருதங்கம். அதைக் கேட்க வந்தவர்களுள் அன்றைய ஹிந்துஸ்தானி இசை உலகின் லய வாத்திய மாஸ்டரான அகமத்கான் த்ராக்வாவும் ஒருவர். அவர் பெயர் அகமத்ஜான் என்பதுதான். த்ராக்வா என்ற பெயர் அவர் தபலாவில் த்ராக்,த்ராக் என்று வாசிப்பதால் வந்த பெயர். வாசிப்பில் நல்ல நாதம் உள்ள கலைஞர் அவர். அந்த நாளில் மிகப் பெரிய கலைஞரான பாலசந்தர்வாவுக்கு அகமத்கான்தான் வாசிப்பாரென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அன்று அவர் மணி ஐயர் வாசிப்பைப் பார்த்துவிட்டு மலைத்துப் போய் அப்படியே மேடைக்குக் கிட்டே போய் ஆகாகாரம் செய்கிறார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கீத நாடக அகாதெமியின் நிர்மலா ஜோஷி என்னிடம் மேலும் ஒரு தனி ஆவர்த்தனம் வாசிக்கும்படி மணி ஐயரிடம் கேட்கச் சொன்னார். நான் போய் மணி ஐயர் காதில் சொன்னேன். மணி ஐயர் பேசவில்லை. தன் மூன்று விரலை நீட்டினார். மேலே ஒரு 300 ரூபாய் வேண்டும் என்று அர்த்தம். அது உடனே ஒப்புக் கொள்ளப்பட்டு இன்னொரு தனி ஆவர்த்தனமும் வாசித்தார் அவர்.

மணி ஐயர் காசு விஷயத்தில் சரியாக இருப்பார். தன் காசையும் விடமாட்டார். அதே சமயம் பிறத்தியார் காசுக்கும் ஆசைப்பட மாட்டார். ஒரு கச்சேரியில் கூடுதலாகக் காசு கொடுத்துவிட்டார்கள். அதை உடனடியாகத் திருப்பித் தந்துவிட்டார். அவர்கள் வற்புறுத்தியும் வாங்கமாட்டேனென்று சொல்லிவிட்டார். இந்த விஷயத்தில் திருவாலங்காடு சுந்தரேசையரும் அப்படித்தான். ஒரு தடவை கச்சேரி முடிந்ததும் அவருக்கு வைத்திருந்த கவரில் 75 ரூபாய் இருந்தது. அவர் கச்சேரி ஏற்பாடு செய்தவர்களைக் கூப்பிட்டு என் ரேட் 45 ரூபாய்தான் என்று மீதியைத் திருப்பிக் கொடுத்தார். “இன்று நீங்கள் கொடுக்கிறீர்கள் என்று வாங்கினால், இன்னொரு இடத்துக்குப் போனாலும் இதையே எதிர்பார்க்கிற புத்தி வந்துவிடும். வேண்டாம் கூடுதல் ரூபாயைத் திருப்பி எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டார் அவர். அப்படிப்பட்ட வித்வான்களும் இருந்தார்கள்.



புஷ்பவனம்

அத்தோடு மிருதங்கத்துக்கு என்று தனி கெüரவத்தை வாங்கிக் கொடுத்தது மணி ஐயர்தான். அவர் வீட்டில் சபாக்காரர்கள் வந்து தவம் கிடந்ததைப் பார்த்திருக்கிறேன். தனக்கு என்று சில கொள்கைகள் வைத்திருந்தார். அவார்டெல்லாம்….அவர் சொல்கிற மாதிரி “எவார்டெல்லாம்’ அவருக்கு லட்சியமோ பொருட்டோ அல்ல. சங்கீத நாடக அகாதெமி விருது தந்தார்களே….அதை வாங்க அவர் போகவேயில்லை.

ரொம்ப பேருக்குத் தெரியாத சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன். ஒரு தடவை ரேடியோ ஸ்டேஷனுக்கு வாசிக்கப் போய்விட்டு வாசிக்காமலேயே திரும்பி வந்துவிட்டார். அப்போ ரேடியோ ஸ்டேஷனில் மணி ஐயருக்கு 150 ரூபாய் தருவார்கள். அங்கு உயரதிகாரியாக இருந்த ஒரு பெண் மூணு தனி ஆவர்த்தனம் வாசிக்கணும் என்று கேட்டார். மணி ஐயர் உடனே “”அப்படியானால் ஒவ்வொரு தனிக்கும் 150 ரூபாய் தர காண்ட்ராக்ட் எழுதணும்” என்றார். “”ஐயோ….கவர்ன்மென்ட் ரூல்ஸ் அலெü பண்ணாதே….” என்றார் அந்தப் பெண்மணி. உடனே மணி ஐயர், “”என்னோட கவர்ன்மென்ட் ரூல் 150 ரூபாய்க்கு மூணு தனி வாசிக்க அலெü பண்ணாது…” என்று சொல்லி உடனே மூட்டையைக் கட்டிவிட்டார். சில விதிமுறைகளை அவர் தனக்கென வைத்திருந்தார். அதில் அவர் விட்டுத் தரவே மாட்டார்.

அவர்கூடப் பழகியதில் எத்தனையோ மறக்கமுடியாத சம்பவங்கள். அதில் அவர் தில்லியிலிருந்து பம்பாய்க்கு ப்ளேனில் போன கூத்து இருக்கிறதே….அது மறக்கமுடியாதது. வேடிக்கையான சம்பவம் அது. அது 1948. நான் தில்லியில் அப்போது நாராயணய்யர் ஹோட்டலில் ரூமில் தங்கியிருக்கிறேன். நாராயணய்யர் சங்கீத வித்வான்களிடத்து அபிமானம் உள்ளவர். செம்பைக்கு அவர் சொந்தம். கிளம்பும்போதே லேட். “”நான் புத்தம் புதிய ஷேவர்லே வாங்கியிருக்கேன். பத்து நிமிஷத்துல கொண்டு தள்ளிப்பிடுவேன்” என்றார் நாராயணன். அவர்கள் பாலம் ஏர்போர்ட்டுக்குப் போவதற்குப் பதிலாக மிலிடரி ஏர் போர்ட்டுக்குப் போய் விஷயம் தெரிந்து சரியான ஏர்போர்டுக்கு வருவதற்குள் ப்ளேன் கிளம்பி ரன்வேயில் நகர ஆரம்பித்தாகிவிட்டது. எனக்கு டாட்டாவைத் தெரியுமாக்கும் அவனைத் தெரியுமாக்கும் இவனைத் தெரியுமாக்கும் என்றார் நாராயணய்யர். ப்ளேன் கிளம்பிப் போயே போச்சு. ஐநூத்தி இருவத்தஞ்சு ரூபாய் போச்சு என்றார் மணிஐயர். அன்று நாராயணய்யர் கார் ஓட்டிய வேகத்தைப் பார்த்து நாம் தீர்ந்தோம் என்று நினைத்தேன். எப்படியோ தப்பினோம். மறுநாள் ஐயர் அண்ட் சன்ஸ் டிராவல் ஏஜென்சியைப் பிடித்து ஒரு வழியாக மணி ஐயரையும் கிருஷ்ணனையும் அந்தப் ப்ளேனில் திணித்து பம்பாய்க்கு அனுப்பிவைத்தோம்.

காசு விஷயத்தில் கறார் என்றாலும் மணி ஐயர் நட்பைப் போற்றுபவர். நூறு ரூபாய்க்கு நண்பர்களிடையே கணக்குப் பார்க்கக் கூடாது என்பார். எனக்குத் தெரிந்த வித்வான்களில் ஜி.என்.பி., எம்.எல்.வி. இருவருமே மிக தாராளமான மனசு உடையவர்கள். வித்வான்களில் இரண்டு விதமானவர்களும் இருந்தார்கள்.

பெயரைச் சொல்லவில்லை. அந்த நாளில் ரொம்ப சீனியரான ஒரு பெரிய வித்வான். அவருக்கு திருச்சியில் பரம ரசிகர் ஒருவர். அவர் பெரிய பணக்காரரும் கூட. ஒரு தடவை வித்வானைப் பார்க்க வந்தபோது சில்க் ஜிப்பாவில் வைர பொத்தான்கள் வைத்துப் போட்டுக் கொண்டு வந்தார். அவ்வளவு ப்ளூஜாகர். அதைப் பார்த்தவுடனே ஆசைப்பட்டார் வித்வான். உடனே ரசிகர் பட்டுச் சட்டையைக் கழற்றி வித்வானுக்குக் கொடுத்துவிட்டார். அப்படிப்பட்ட ரசிகர் பிற்காலத்தில் செத்துப்போனபோது துக்கம் கேட்கக் கூடப் போகவில்லை அந்த சீனியர் வித்வான். இப்படியும் மனிதர்கள் இருந்தார்கள் என்பதற்காய்ச் சொல்கிறேன் இதை.

மிருதங்கம் என்னும் போது மணி ஐயர் மாதிரியே என்னைப் பரவசப்படுத்திய இன்னொரு லய வித்வான் பழனி சுப்பிரமணியப் பிள்ளை. அவரோடும் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. லயத்தில் என் ஈடுபாட்டைப் பார்த்து எனக்கு ஒரு மிருதங்கமும் ரெண்டு கஞ்சிராவும் தந்தார் பழனி. மணி ஐயர் இது போல எனக்கு வெவ்வேறு சந்தர்ப்பத்தில் தந்தவை 5 மிருதங்கங்கள்.

பழனியின் மிருதங்கத்தில் தொப்பி நாதம் ஒரு புறா கூவுவது போல இருக்கும். உங்களுக்குத் தெரியுமோ? சுப்பிரமணியப் பிள்ளை ரொம்ப நன்றாகப் பாடுவார். மிகப் பெரிய தவில் வித்வானாக விளங்கிய மலைக் கோட்டை பஞ்சாமி வாய்ப்பாட்டு மிக நன்றாகப் பாடுவார். அவரிடம்தான் பழனி வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டார். திருப்புகழெல்லாம் மிக நன்றாகப் பாடுவார்.

நல்ல மிருதங்க வித்வான்களை ஊக்குவிப்பதில் அன்று செம்பைக்கு இணை செம்பையேதான். பாலக்காட்டில் ராமபாகவதர், சிவராம பாகவதருக்கெல்லாம் வாசித்துக் கொண்டிருந்த மணி ஐயரை பல கச்சேரிகளில் தன்னுடன் வாசிக்க வைத்தவர் செம்பை. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் பழனி சுப்பிரமணியப் பிள்ளையை இப்படி ஊக்கப்படுத்திய விஷயம் நினைவுக்கு வந்தது. ஒரு சமயம் 1942 என்று நினைவு. பழனிக்குத் தொழிலில் கொஞ்சம் தொய்வு வந்தது. மனத்தளவிலும் அவர் தளர்ந்து போயிருந்தார். காரணம் அன்றைய மூத்த வித்வான் ஒருத்தர் கச்சேரிக்குப் பழனியை அழைத்துவிட்டு தனி ஆவர்த்தனமே கொடுக்காமல் அவமதித்து விட்டார். இது பிள்ளைவாள் மனத்தைப் புண்ணாக்கியிருந்த சமயம் அது. அதை அறிந்த செம்பை அவரை உற்சாகப்படுத்துவதற்கென்றே தன்னோடு வாசிக்கச் செய்தார். பழனி சுப்புடுவின் மேதமையை ரசிகர்கள் உலகம் அறியும்படி செய்தார் செம்பை. ஒரு கச்சேரியில் பழனிக்கு அவர் கொடுத்த தனி ஆவர்த்தனங்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? 5 தனிகள். அவ்வளவையும் பழனி அமர்க்களமாக வாசித்துவிட்டார். மறுநாள் அவரைப் பார்க்க நான் போகிறேன். ரூமில் நன்றாக நீட்டிப் படுத்திருக்கிறார் அவர். என்னைப் பார்த்தாரோ இல்லையோ…ஐயா…ராமகிருஷ்ணன்….. நேத்து வாசிச்சது இன்னும் எழுந்துக்க முடியலைய்யா…என்றார்.

இது போலவே ராமநாதபுரம் முருகபூபதியின் வாசிப்பையும் பெரிய அளவுக்குப் பரப்ப நிறைய கச்சேரிகளில் தன்னோடு வாசிக்க வைத்தார் செம்பை.

நல்ல சங்கீத சூழல் இருந்ததால் எனக்குப் பல சங்கீதவித்வான்களின் சங்கீதத்தை சின்ன வயசிலிருந்து கேட்கிற வாய்ப்பு கிடைத்தது. மதுரைமணி, ஜி.என்.பி., மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் பாட்டிலெல்லாம் ஆத்மார்த்தமான ஈடுபாடு உண்டு. அதுவும் அந்த நாளைய சீனியர் வித்வான் ஒருத்தர் ஆரபியை தேவகாந்தாரியாகப் பாடிக் கொண்டிருப்பார். மகாராஜபுரம்தான் ஆரபியை அடிச்சுப் பாடி ஜமாய்ப்பார். அந்த சீனியர் வித்வான்…… அவர் யார் என்கிற வித்வான் பெயரெல்லாம் வேண்டாம்….அவர் ஒரு தடவை அந்த நாளைய சபாவான எழும்பூர் ஜகன்நாத பக்த சபாவில் நடந்த கச்சேரியில் எவரனி பாடும்போது அக்கவுண்ட் ஜெனரலாயிருந்த ராகவய்யர் என்பவர் வந்திருந்தார். அவருக்கெல்லாம் தேட்டையான சங்கீத ஞானம் உண்டு. சீனியர் வித்வான் பாடியதைக் கேட்டு “”நீர் ராகத்தைப் பாடாதேயும்….நீர் பாடினது கரகரப்ரியா…. தேவாமிர்தவர்ஷிணி இல்லை..”என்றார்.

எதற்குச் சொல்கிறேன் என்றால் மகாராஜபுரத்திடம் இது போன்ற விவகாரங்களையெல்லாம் பார்க்க முடியாது. “”விஸ்வநாதய்யர் பாட ஆரம்பித்தால் அவுட் வாணம் விட்டது மாதிரி அற்புதமான சங்கதிகளெல்லாம் வரும்” என்பார் டைகர் வரதாச்சாரியார். அது முற்றிலும் உண்மை.

விஸ்வநாதய்யர் போலவே மதுரை மணி. அவர் “மதுராபுரி நிலையே மணிவலையே….’என்னும் போது குரலில் பேசும் அனுஸ்வரம் நம் உடம்பைச் சிலிர்க்க வைக்கும். ரொம்ப பாவப்பூர்வமான சங்கீதம். அந்த நாளில் மாஸ்டர் சுப்பிரமணியம் என்ற பெயரில் அவர் கச்சேரி செய்ததையே நான் கேட்டிருக்கிறேன். குடுமி வைத்துக் கொண்டு பார்க்க ரொம்ப அழகாக இருப்பார். எங்கள் ஊரில் அகோரமய்யர் என்பவர் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்து பாடினார் மதுரை மணி. செம்பைதான் பாடுவதாக இருந்தது. 300 ரூபாய் கேட்டார் என்பதால் வேண்டாமென்று சொல்லி மதுரை மணியைப் பாடவைத்தார்கள். அந்தப் பாட்டைக் கேட்டு விட்டு பாலக்காடு லோக்கல் இங்கிலீஷ் பேப்பரில் “செüத் இண்டியன் பிராடிஜி’ என்று அவரைப் பற்றி எழுதினார்கள். அப்படி ரொம்ப நன்றாகப் பாடுவார். அப்போது 6 கட்டை சாரீரம். எந்த நாளிலும் அவர் சாரீரம் ஸ்ருதியோடு அப்படி இழையும். மதுரை புஷ்பவனத்தின் அண்ணன் பிள்ளைதானே இவர். அந்த நாளில் புஷ்பவனத்தின் “க்ஷீர சாகர சயன’ கிருதியைக் கேட்கவே கூட்டமான கூட்டம் வரும் என்பார்கள். பின்னாடி மதுரை மணிக்கு அந்த வயசில் வரும் மகரக் கட்டு வந்து கஷ்டப்பட்டு ஒரு வழியாக சாரீரத்தை காப்பாற்றிக் கொண்டார். இதனால் கச்சேரி குறைந்த போது குறைந்த சம்பாதனையில் தானும் தன் தாயாரும் வாழ்ந்ததை அவர் சொல்லியிருக்கிறார். ரொம்ப நல்ல பாட்டு அவருடையது.

அது மாதிரி ஜி.என்.பி. அவரும் பிறவி மேதை. இல்லாவிட்டால் அப்படிப் பாடமுடியாது. என்ன சாரீரம்…என்ன பாட்டு.

இப்போ என் கதைக்கு வருகிறேன். நான் பல ஹரிகதைகள் உள்பட நிகழ்ச்சிகளுக்கு வாசித்திருக்கிறேன். அவற்றில் மறக்கமுடியாதது ரெவரெண்ட் பாப்ளி செய்த கதாகாலட்சேபத்துக்கு வாசித்தது. ரெவரண்ட் பாப்ளி ஐரோப்பிய பாதிரி. தமிழ், தமிழிசை இவற்றைப் பற்றியெல்லாம் ஆழ்ந்த படிப்புள்ளவர். கிறிஸ்தவ மதப் போதகரான அவர் கிறிஸ்து கதையை நமது கதாகாலட்சேப மரபில் செய்ய முன் வந்தார். அது 1949 என்று நினைவு. நிகழ்ச்சி தில்லி ஒய்.எம்.சி.ஏ,வில் நடந்தது. நான் அங்குதான் தங்கியிருந்தேன். அவரது கதாகாலட்சேபத்துக்கு நான் மிருதங்கம். வித்வான் ரவிகிரண் இருக்கிறாரே அவரது சின்னத் தாத்தா கிருஷ்ணசாமி இந்த நிகழ்ச்சிக்கு வயலின். (அப்போது இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் எப்.ஜி.நடேசன். அவர் கிறிஸ்தவராக மதம் மாறியவர். பின்னர் மீண்டும் ஹிந்து மதத்துக்கே வந்துவிட்டார்.)

பாப்ளி பாதிரியார் அந்த நாளில் ஹிந்து மத மரபில் உள்ள உத்திகளைக் கொண்டே கிறிஸ்தவத்தைப் பரப்பும் முயற்சியில் இருந்தார். அன்று கிறிஸ்து கதையில் அவர் சொன்ன உபகதைகளெல்லாம் கூட ஹிந்து மத உபன்யாசகர்கள் கூறுவதுதான். அதையெல்லாம் கவனித்து அவர் பயன்படுத்தியது வியப்பாகவும் மறுபுறம் வேடிக்கையாகவும் இருந்தது. வேடிக்கையாக இருந்ததற்குக் காரணம் ஐரோப்பியரான அவரது தமிழ் உச்சரிப்பு. அந்த நாளில் கரகரப்பிரியாவில் பாடும் விடமுசேய ராதா மாதிரியே கிறிஸ்தவப் பாட்டு ஒன்றை அவர் பாடினார். பாழும்கிணற்றில் விழுந்த ஒருவர் கதையை ஹிந்து உபன்யாசகர்கள் சொல்வார்கள்.

கிணற்றில் விழுந்து ஓர் ஆலம் விழுதைப் பற்றித் தொங்குவான். விழுதை எலி கடிக்க அது நைந்து போக ஆரம்பிக்கும். கீழே கிணற்றில் ஒரு நாகம் அவனைக் கொத்தத் தயாராக இருக்கும் . கிணற்றுக்கு மேலே ஒரு மதயானை இருக்கும். இதன் நடுவில் மரத்திலிருக்கும் தேனடையிலிருந்து சொட்டிய தேன் அவன் வாயில் விழும். மனிதன் அந்தச் சுகத்தை அனுபவிப்பான். உலக சுகம் இப்படிப்பட்டதுதான் என்பதை விளக்கும் கதை இது. அதையே பாப்ளியும் சொன்னார் “மேலே மட்யானே…..கீளே நாக்பாம்பு…..’ என்று ஐரோப்பியத் தமிழில் சொன்னபோது எனக்கும் கிருஷ்ணசாமிக்கும் சிரிப்பு தாங்கவில்லை.

இன்று வயது எனக்கு 93. இன்னும் கச்சேரிகளுக்குப் போய்க் கொண்டு நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன். மணி ஐயரைப் பற்றி முழுமையான பயாக்ரபி ஒன்றை எழுத வேண்டும் என்பது என் ஆசை. காலம் ரொம்ப குறுகிவிட்டது. இப்போதெல்லாம் மறதி அதிகமாகி வருகிறது. சீக்கிரம் எழுதவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்புறம் ஈஸ்வரக் கிருபை.

நேர்காணல்}தொகுப்பு: தாடி வாத்தியார்

ஒரு பதில் to “KV Ramakrishnan’s encounters with Carnatic Vidwans – Dinamani Kathir Music Season Special”

  1. erode nagaraj said

    ramakrishnan mama has attended my concerts, i still remember the day i played at bvb hall for an intricate pallavi, and mama praised me after the concert was over and also blessed me…..

பின்னூட்டமொன்றை இடுக