Sabha Awards, Recongnitions & Prizes to Carnatic Sangeetha Performers : Dinamani Kathir Music Season Special
Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006
விருது பெறும் கலைஞர்கள்
தொகுப்பு: ரவிக்குமார்
இவ்வாண்டு இசை விழாவினை ஒட்டி பல்வேறு சபைகள் வழங்கும் விருதுகளை வென்ற இசை மற்றும் நாட்டியக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இங்கே தொகுத்தளிக்கப்படுகின்றன.
சங்கீத கலாநிதி
கர்நாடக இசை உலகில் மிகவும் கெüரவமிக்க விருதான சென்னை சங்கீத வித்வத் சபையின் சங்கீத கலாநிதி விருது இந்தாண்டு டி.என். சேஷகோபாலனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மகாவித்வானாக விளங்கிய ராமநாதபுரம் சங்கரசிவத்தின் சீடரான இவர் ஏராளமான விருதுகளைப் பெற்றவர். உலகெங்கும் தனக்கே உரித்தான ரசிகர்களை ஏராளமாகப் பெற்றவர்.
இசைப் பேரறிஞர்
பாம்பே சிஸ்டர்ஸ்
தமிழிசைச் சங்கம் வழங்கும் உயரிய விருதான இசைப் பேரறிஞர் விருதை இந்த வருடம் பெறுபவர்கள் பாம்பே சகோதரிகள்(சரோஜா, லலிதா). பாம்பே சகோதரிகளின் சிட்சை ஆரம்பத்தில் அவர்களின் மூத்த சகோதரியான திருமதி சேதுமகாதேவனிடமிருந்தே தொடங்கியது. பின்னாளில் செல்லமணி பாகவதரிடம் மெருகேறியது. அதன்பின் சென்னை, இசைக் கல்லூரியில் சேர்ந்து தங்களின் திறமையை மேலும் வளர்த்துக் கொண்டனர். அந்தக் காலக் கட்டத்தில் இசைக்கல்லூரியின் முதல்வராக இருந்தவர் இசை மேதை முசிறி சுப்பிரமணிய ஐயர். பலமான சங்கீத அடித்தளத்துடன் இந்தியா முழுவதும், உலகின் பல நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர் இந்தச் சகோதரிகள். அரசு சார்பாக நடக்கும் முக்கிய விழாக்களில் நிகழ்ச்சி நடத்தும் பெருமை பெற்றவர்கள். தமிழக அரசின் கலைமாமணி, இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது போன்ற மதிப்பு மிக்க விருதுகளை பாம்பே சகோதரிகள் பெற்றிருக்கின்றனர். இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்கள் பெற்றோர்களின் (முக்தாம்பாள்-சிதம்பரம் ஐயர்) பெயர்களை இணைத்து “முக்தாம்பரம் அறக்கட்டளை’யைத் தொடங்கி அதன் மூலம் வளரும் தலைமுறையினருக்கு வழிகாட்டுகின்றனர்.
நிருத்திய சூடாமணி
அனந்தா சங்கர் ஜெயந்த்
ஸ்ரீ கிருஷ்ணகான சபையின் பெருமைக்குரிய நிருத்திய சூடாமணி விருதை இந்தாண்டு பெறுபவர் டாக்டர் அனந்தா சங்கர் ஜெயந்த். கலாஷேத்ராவின் வார்ப்பு இவர். பரதத்தோடு, வீணை வாசிப்பதிலும், நடனக்கோப்புகளை அமைப்பதிலும் வல்லவர். மரபு வழி நடனத்தோடு, நவீன வழி நாட்டியங்களையும் உள்நாட்டு மேடைகளிலும், வெளிநாட்டு மேடைகளிலும் நிகழ்த்தியிருப்பவர். பசுமர்த்தி ராமலிங்க சாஸ்திரியை குருவாகக் கொண்டு குச்சிபுடி நடனத்திலும் தேர்ச்சி பெற்றிருப்பவர். ஸ்ரீ கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும், புத்தம் சரணம் கச்சாமி, பஞ்சதந்திர கதைகளை அடிப்படையாகக் கொண்டு இவர் நிகழ்த்தியிருக்கும் நாட்டிய நிகழ்ச்சிகள், இவரின் நடனக்கோப்பு திறமைக்கு சான்றளிப்பவை. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும், புது தில்லி, ஸ்ரீ சண்முகானந்த சங்கீத சபையின் நாட்டிய இளவரசி விருதையும் வென்றிருப்பவர். சிறந்த நாட்டிய மணியாக மட்டுமில்லாமல், “சங்கரானந்தா கலாúக்ஷத்ரா’ என்னும் நடனப் பள்ளியை ஹைதராபாத்திலும், செகந்திராபாத்திலும் 1979-ம் ஆண்டிலிருந்தே நிறுவி சிறந்த நாட்டிய மணிகளையும் உருவாக்கி வருபவர்.
சங்கீத கலா சாரதி
பாரம்பரியப் பெருமையும், பழமையும் வாய்ந்த சென்னை, ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா வழங்கும் இவ்வாண்டுக்கான சங்கீத கலாசாரதி விருதைப் பெறுபவர் சஞ்சய் சுப்பிரமணியம். உள்நாட்டு மேடைகளிலும், வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தி ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் இளம் கலைஞர்.
நாதப் பிரம்மம்
மூர்த்தி
நாரத கான சபையின் இவ்வாண்டுக்கான நாதப் பிரம்மம் விருது மூத்த மிருதங்க வித்வானான டி.கே. மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. தனது எட்டு வயதில் தொடங்கி எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக ராஜவாத்தியமான மிருதங்கம் வாசிப்பில் மிகப் பெரும் கலைஞராக திகழ்பவர் இவர். மிருதங்கத்தைத் தவிர கடம், கஞ்சிரா போன்ற தாள வாத்தியங்கள் வாசிப்பதிலும், கொன்னக்கோலிலும் வல்லவர். மிருதங்க மேதை தஞ்சாவூர் வைத்யநாத ஐயரிடம் சிட்சை பெற்றவர் இவர். இன்றைக்கு 82 வயதாகும் லய மேதை டி.கே. மூர்த்தி, 40 வருடங்கள் இசை மேதை எம்.எஸ். சுப்புலஷ்மியின் நிகழ்ச்சிகளுக்கு மிருதங்கம் வாசித்திருக்கிறார். மேலும், மதுரை சோமு, லால்குடி ஜெயராமன், மாண்டலின் யு. ஸ்ரீனிவாசன், டி.கே. ஜெயராமன், டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா, டி.என். சேஷகோபாலன், குன்னக்குடி வைத்யநாதன் போன்ற பல கலைஞர்களுக்கும் மிருதங்கம் வாசித்துள்ளார்.
மிருதங்க சக்கரவர்த்தி டி.கே. மூர்த்தி, திருவனந்தபுரம் அரண்மனையில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர். உள்நாட்டு மேடைகளிலும், வெளிநாட்டு மேடைகளிலும் லய மழை பொழிந்திருக்கும் டி.கே. மூர்த்திக்கு அரிசோனா நாட்டின் உலகப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கின்றது. மத்திய அரசின் சங்கீத நாடக அகடமி விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, சென்னை, சங்கீத வித்வத் சபையின் சங்கீத கலா நிதி விருது உட்பட பல உயரிய விருதுகளைப் பெற்றவர் டி.கே. மூர்த்தி.
நாரத கான சபையின் மூத்த இசைக் கலைஞருக்கான விருதை அனந்தலஷ்மி சடகோபன் பெற்றார். அனேக மேடைகளில் பாடி, ஏராளமான ரசிகர்களைப் பெற்ற திறமை வாய்ந்த பாடகர் அனந்தலஷ்மி சடகோபன்.
இசைப் பேரொளி
மல்லாடி சகோதரர்கள்
கார்த்திக் பைன் ஆர்ட்ஸின் இவ்வாண்டுக்கான இசைப் பேரொளி விருது, மல்லாடி சகோதரர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழிசை வேந்தர் விருதைப் பெறுபவர் இசை மேதை டி.கே.பட்டம்மாள். இச்சபையின் நடன மாமணி விருதைப் பெற்றிருப்பவர் பார்கவி கோபாலன். கே.ஜே. சரசாவிடம் நாட்டியம் பயின்ற இவர் தனது ஒன்பதாவது வயதிலேயே, சென்னை, பாரதிய வித்யா பவனில் நாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்தியிருப்பவர். இந்தியாவில் அனேக சபாக்களில் தனது நிகழ்ச்சியை நிகழ்த்தியிருக்கும் இவர், தொலைக்காட்சி நிலையத்தின் முதல் தரச் சான்றிதழ் பெற்ற கலைஞர். நாட்டிய கலா சிரோமணி, யுவகலா பாரதி, நாட்டியத் தாரகை, நாட்டிய பைரவி உள்பட பல விருதுகளை வென்றுள்ள இளம் கலைஞர் இவர்.
கார்த்திக் பைன் ஆர்ட்ஸின் இசைச் சுடர் விருதைப் பெற்றிருக்கிறார் கே. காயத்ரி. கலைமாமணி சுகுணா புருஷோத்தமனிடம் இசைப் பயிற்சி எடுத்துக்கொண்டவர். சிறந்த இசைத் துறை மாணவிகளுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் உதவித் தொகையைப் பெற்றிருப்பவர். வானொலி நிலையத்தின் முதல் தரத் தகுதி பெற்ற கலைஞர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தற்போது இசைத்துறையில் எம்.ஃபில்., படித்துக்கொண்டிருக்கிறார்.
நாட்டியச் சுடர் விருதைப் பெற்றிருப்பவர் அஸ்வினி விஸ்வநாதன். ஜெயந்தி சுப்பிரமணியத்திடம் பரதநாட்டியத்தையும், கோபிகா வர்மாவிடம் மோகினியாட்டத்தையும் பயின்றிருப்பவர். உள்நாட்டு மேடைகளிலும், வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கும் இளம் கலைஞர்.
சங்கீத கலா சிரோமணி
டி.வி.எஸ். என்று இசை ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் டி.வி. சங்கரநாராயணன், இவ்வாண்டுக்கான நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாதெமியின் சங்கீத கலா சிரோமணி விருதைப் பெறுகிறார். தஞ்சாவூர் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தவர் டி.வி. சங்கரநாராயணன். அவரை முதல் குருவாக இருந்து வழிநடத்தியவர் அவரது அன்னை கோமதி வேம்பு ஐயர். இவரின் சகோதரர்தான் மதுரை மணி ஐயர். சங்கீத கலாநிதி இசைப் பேரறிஞர் மதுரை மணி ஐயர் டி.வி. சங்கரநாராயணனுக்கு தாய்மாமன். அன்னை வழங்கிய பலமான அடித்தளத்துடனும், மதுரை மணி ஐயர் வழங்கிய நுணுக்கங்களுடனும் டி.வி.எஸ். உள்நாட்டு மேடைகளிலும், வெளிநாட்டு மேடைகளிலும் எழுப்பியிருக்கும் ராக மாளிகைகளுக்கு அளவே இல்லை. மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது, பத்ம பூஷன், சங்கீத கலாநிதி போன்ற நாட்டின் உயரிய விருதுகள் பலவற்றையும் வென்றிருப்பவர் டி.வி.எஸ்.
இச்சபையின் நிருத்திய கலா சிரோமணி விருதை வென்றிருப்பவர், குச்சிபுடி ஆர்ட்ஸ் அகாதெமியைத் தோற்றுவித்த மூத்த குச்சிபுடி நடனக் கலைஞர் வேம்பட்டி சின்னசத்யம்.
நாடகக் கலா சிரோமணி விருதைப் பெறுபவர் மூத்த நாடகக் கலைஞர் ஏ.ஆர். சீனிவாசன்.
நிருத்ய கலா நிபுணா
மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸின் இவ்வாண்டுக்கான நிருத்ய கலா நிபுணா விருதைப் பெறுபவர் சித்ரா விஸ்வேஸ்வரன். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏராளமான நாட்டிய நிகழ்ச்சிகளை அளித்திருக்கும் சித்ரா விஸ்வேஸ்வரன், சிறந்த நடனமணி மட்டுமல்ல, இந்தத் துறையில் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களை உருவாக்கி வரும் சிறந்த நடன ஆசிரியரும் ஆவார்.
சங்கீத கலா சிகாமணி
இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸின் இந்தாண்டுக்கான சங்கீத கலா சிகாமணி விருதைப் பெறுபவர்கள், பாம்பே சகோதரிகள். சபையின் நாட்டிய கலா சிகாமணி விருதைப் பெறுபவர் மூத்த பரதநாட்டியக் கலைஞர் ரேவதி ராமச்சந்திரன்.
வாணி கலா சுதாகர
தியாகப்ரம்ம கான சபை வழங்கும் இவ்வாண்டுக்கான வாணி கலா சுதாகர விருதைப் பெறுபவர் டாக்டர் கே.ஜே. யேசுதாஸ். இசை மேதை செம்பை வைத்யநாத பாகவதரின் சீடரான யேசுதாஸ், கொரவ டாக்டர் பட்டம், கலைமாமணி உட்பட பெருமைக்குரிய சபைகளின் அனேக விருதுகளை வென்றவர். உள்நாட்டிலும், பல வெளிநாடுகளிலும் கான மழை பொழிந்து வருபவர்.
மூத்த இசைக் கலைஞர், வயலின் மேதை எம். சந்திரசேகரன், மிருதங்க வித்வான் குருவாயூர் துரை, பரதநாட்டியக் கலைஞர் சைலஜா ராம்ஜி, நாடகக் கலைஞர் கே.எஸ். நாகராஜன் ஆகியோரும் சபையின் இந்தாண்டுக்கான வாணி கலா சுதாகர விருதைப் பெறுகின்றனர்.
விஸ்வ கலா பாரதி
காயத்ரி
பாரத் கலாசாரின் ஞான கலா பாரதி விருது டாக்டர் வைஜயந்திமாலா பாலி மற்றும் பாம்பே சகோதரிகளுக்கு வழங்கப்பட்டது. (சங்கீத கலா சிகாமணி விருதையும், இசைப் பேரறிஞர் விருதையும் பாம்பே சகோதரிகள் இவ்வாண்டு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.)
விஸ்வ கலா பாரதி விருதை மூத்த பரதநாட்டியக் கலைஞர் சுதாராணி ரகுபதி மற்றும் வி.பி. தனஞ்செயன்-சாந்தா தம்பதிகள் பெற்றனர்.
சபையின் இந்தாண்டுக்கான ஆச்சார்ய கலா பாரதி விருதைப் பெற்றவர் மூத்த நாட்டியக் கலைஞர் கே.ஜே. சரசா. நாட்டிய கலாதர் விருதை செüகார் ஜானகி மற்றும் பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் பெற்றனர். கலா சேவா பாரதி விருதை ராம்ஜி மற்றும் ரோஜா கண்ணன் ஆகியோர் பெற்றனர். நாடகக் கலாதர் விருதை “வியட்நாம் வீடு’ சுந்தரம் மற்றும் டைப்பிஸ்ட் கோபு ஆகியோர் பெற்றனர்.
யுவகலா பாரதி விருது பெற்ற கலைஞர்கள்
வாய்ப்பாட்டு
எம். பாலமுரளி கிருஷ்ணா
சின்மயா சகோதரிகள்(உமா, ராதிகா)
நடனம்
லாவண்யா அனந்த்
ஆர். வினித்
நித்யா ஜெகன்னாதன்
அன்வேஷா தாஸ்
திவ்ய சேனா
வாத்தியக் கலைஞர்கள்
ஜி. ரமேஷ்(நாகசுரம்)
நாகமணி ராஜு(மாண்டலின்)
செர்த்தளை சிவக்குமார்(வயலின்)
கே.வி. கோபாலகிருஷ்ணன்(மிருதங்கம்)
பெங்களூர் என். அம்ரீத்(கஞ்சிரா)
நாடகக் கலைஞர்: நாகலஷ்மி
தொகுப்பு: ரவிக்குமார்
Margazhi Music Festival - December Season Kutchery: Charukesi « Tamil News said
[…] 8. Sabha Awards, Recongnitions & Prizes to Carnatic Sangeetha Performers : Dinamani Kathir Music Se… […]