District Collectors: Sales Tax vs Income Tax – Loopholes, Corruption, Kickbacks in Local Administration
Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2008
புன்னகைக்கும் பொய் ரசீதுகள்
இரா. சோமசுந்தரம்
சில நாள்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா அலுவலகம் சென்றபோது, அங்கே ஒரு வட்டாட்சியரிடம் ஒருவர் கடுமையான கோபத்தில் திட்டிக் கொண்டிருந்தார்.
ஆனால் அந்த வட்டாட்சியரோ, “”ஒண்ணும் ஆயிடாதுங்க” என்று சமாதானம் செய்து, பேசுபவரின் குரலை மட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
இருந்தும்கூட, அடக்கமுடியாத கோபமும் அச்சமுமாக தொடர்ந்து கொட்டித் தீர்த்த அந்த நபர், “”இன்னும் எந்தெந்த டிபார்ட்மென்ட்லிருந்து எனக்கு என்கொயரி வருமோ? என் ரசீது புஸ்தகத்தை கொடுங்கய்யா” என்று கேட்டும் கிடைக்காததால், மறுபடியும் திட்டிக்கொண்டே வெளியேறினார்.
சுமார் அரைமணி நேரத்துக்கு அந்த அலுவலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இச்சம்பவம் குறித்து விசாரித்ததில் தெரியவந்தது இதுதான்:
2006-ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது, இந்த தாலுகா அலுவலகம் சில படிவங்களை அச்சிட்டதாக சுமார் ரூ.80 ஆயிரத்துக்கு ரசீதுகள் செலவுக் கணக்கில் காட்டப்பட்டுள்ளன.
உள்ளாட்சித் தணிக்கைத் துறை அலுவலர்கள் இதனைத் தணிக்கை செய்தபோது, யாரோ ஒரு நேர்மையான அலுவலர், இந்த செலவுக்கு ஆட்சேபக் குறிப்பை எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் – “”எல்லா படிவங்களும் தேர்தல் ஆணையம் அச்சிட்டுத் தரும்போது, தாலுகா அளவில் எத்தகைய படிவம் அச்சிடப்பட்டது என்பதற்கான சான்றுகள் அளிக்கப்படவில்லை. வாக்காளர்களுக்கு அறிவுரை என்ற நோட்டீஸ் அச்சிடப்பட்டதாக கூறப்பட்டபோதிலும், அதற்கு ரூ.2000-க்கு மேல் செலவாகியிருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே இந்தச் செலவினத்தை ஆட்சேபிக்கிறேன்” என்று அந்தக் குறிப்பில் அவர் எழுதியுள்ளார்.
உள்ளாட்சித் தணிக்கைத் துறையின் அறிக்கைகள் வழக்கமாக உயர்அதிகாரிகளுக்கும் அரசுக்கும் அனுப்பப்படும் என்பதோடு, தலைமை கணக்கு தணிக்கை (ஏ.ஜி.) அலுவலகத்துக்கும் ஒரு நகல் அனுப்பப்பட வேண்டும்.
அப்படி அனுப்பப்பட்ட இந்த ஆட்சேபக் குறிப்பை கண்ட, தலைமை கணக்கு தணிக்கை அலுவலக அதிகாரி ஒருவர், “”சுமார் 15 நாள்களில் ரூ.80 ஆயிரத்துக்கு அச்சிடும் இத்தகைய அச்சகம், ஓராண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கக்கூடும்! இந்த அச்சகம் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளதா என்பதை ஆய்வு செய்யலாம்” என்று மற்றொரு குறிப்புடன் வருமான வரித்துறைக்கு அனுப்பிவிட்டார்.
வருமான வரித்துறை இத்தனை விஷயங்களையும் குறிப்பிட்டு, மொத்தக் கணக்குகளுடன் நேரில் வரவும் என்று அச்சக உரிமையாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
வட்டாட்சியரிடம் கடும் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தவர் அச்சகத்தின் உரிமையாளர். அந்த அச்சகமோ அந்த நகரத்திலேயே மிகச் சிறிய அச்சு இயந்திரத்தை வைத்து, கல்யாணப் பத்திரிகை அச்சடித்து வருவாய் ஈட்டும் மிகச் சிறிய அச்சுக்கூடம். வருமானத்துக்கே திண்டாடும் அவருக்கு வருமான வரித்துறையின் நோட்டீஸ் வந்தால் எப்படி இருக்கும்?
இச்சம்பவம் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சியைத் தந்தது. நியாயம் செத்துப்போவதில்லை. உண்மைகள் கொஞ்ச காலம் உறங்கலாம். ஆனால் அது ஒரு நாள் விழிக்கவே செய்கிறது. “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகிறது’. ஆனால் அப்போதே, உடனே அல்ல. சரி, வாழ்க்கையொன்றும் திரைப்படம் அல்லவே, உச்சக் காட்சியில் நொடியில் தர்மம் வெற்றிபெற!
இது குறித்து மேலும் விசாரித்தபோது இன்னொரு தகவலும் தெரியவந்தது. இத்தகைய ரசீதுகள் தொடர்பான ஆட்சேபக் குறிப்புகளை, விற்பனை வரிப்பிரிவினர்தான் முதலில் கையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் வருமான வரித்துறை கையில் எடுத்திருப்பதைப் பார்க்கும்போது, மாநில அரசு, விழிப்புடன் இல்லை என்றாகிறது.
இத்தகைய போலி ரசீதுகள் உள்ளாட்சி முழுவதிலும் அதிக அளவில் இருக்கின்றன. விற்பனை வரித் துறை அதிகாரிகள் விசாரித்தால், பல பூதங்கள் வெளிக்கிளம்பும் என்கிறார்கள்.
உள்ளாட்சித் துறைகளில் ரசீதுகள் மூலம் பல கோடி ரூபாய் திசைமாறுகிறது. இதற்கு அடிப்படையான காரணம் மாவட்ட ஆட்சியர் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட விலைப்பட்டியல்தான்.
அரசுக்குத் தேவையான பொருள்கள் வாங்கும்போது கூட்டுறவுத் துறை நிறுவனங்கள் நீங்கலாக அங்கீகரிக்கப்பட்ட பிற நிறுவனங்கள் எவை, அவற்றில் எந்தெந்த பொருள்களுக்கு என்ன விலை என்று மாவட்ட ஆட்சியர் அங்கீகரிக்கும் இந்த விலைப்பட்டியலை ஆதாரமாக வைத்துத்தான் தணிக்கை செய்யப்படுகிறது.
நிறுவனம் பட்டியலில் உள்ளதா, விலை சரியா என்பதை மட்டுமே தணிக்கை அலுவலர்கள் சரிபார்க்க முடியும். இந்த நிறுவனம் வெறும் “”ரசீது நிறுவனமா” என்பதை ஆய்வு செய்ய இயலாது.
பொதுச்சந்தையில் ஒரு பொருள் விற்கப்படும் விலையைக் காட்டிலும் குறைந்தது 10 சதவீதம் கூடுதல் விலையே இந்த அங்கீகரிக்கப்பட்ட விலைப் பட்டியலில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இதில் சந்தேகம் இருக்குமானால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரூ.10 செலுத்தி, அந்தப் பட்டியலை வாங்கிப் பார்த்தால் நிறுவனங்களும் விலைகளும் வெளிச்சமாகிவிடும் என்கிறார்கள்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத்தான் போறேன். வர்றீங்களா?
மறுமொழியொன்றை இடுங்கள்