Dhandapani Desikar, Ariyakkudi, TS Rajarathnam Pillai, AKC Natarajan – Dinamani Kathir Music Season Special
Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006
ஏ.கே.சி. நடராஜன்: அவர் தந்த ஆசி!
நேர்காணல்}தொகுப்பு: தாடி வாத்தியார்
காவிரிக்கரையில் பயணப்படும்போது தென்னைகளை கவனித்திருப்பீர்கள்! அந்த ஆற்றின் துல்லியமான நீரையும் வண்டலின் மண்சாரத்தையும் மாந்தி மாந்தி உயர்ந்து நிற்கும் தென்னைகள். அவற்றின் அபரிமித வளர்ச்சியும் வடிவும் காவிரியின் மண் சாரத்துக்கு ஒரு சாட்சி. காவிரிக்கரை சார்ந்த மரங்களில் மட்டுமல்ல இச்செழுமை! அது, இந்த நதியோரம் இந்த மண்ணில் வாழ்கிற மனிதர்களின்
கலையிலும் கலாசாரத்திலும் தேங்கிக் கிடக்கிறது. குறிப்பாக காவிரிக் கரையின் சங்கீத கலையிலும் கலைஞர்களிடமும்.
அதன் மேன்மைக்கு நம்மிடையே ஜீவிய சாட்சியமாய் விளங்கும் மிகப் பெரிய கலைஞர் ஏ.கே.சி என ரசிகர்களால் சுருக்கமாக அன்புடன் அழைக்கப்படும் ஏ.கே.சி.நடராஜன். நம் கர்நாடக இசையின் பெருமையை உலகெங்கும் பரப்பிய அரிய கலைஞர்களில் ஒருவர். ஆனால் இந்திய அளவில் பெரிய கலைஞர்களுக்கு அளிக்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷன்கள் இவரை அலங்கரிக்காதது துரதிருஷ்டமே. இவ்வாண்டு இம் மலருக்காக தன் இசை வாழ்வை, அனுபவங்களை வாசகர்கள் முன் வைக்கிறார் ஏ.கே.சி.
அப்பா அந்த நாளின் வித்வான் சின்னி கிருஷ்ண நாயுடு. அந்தக் காலத்தில் நாகசுரம் வாசிச்சு அப்புறம் கிளாரிநெட்டும் வாசிச்சார். நான் ஆலத்தூர் வெங்கடேசய்யரிடம் முதலில் பாட்டுக் கற்றேன். ஆலத்தூர் பிரதர்ஸில் ஆலத்தூர் சுப்பையரின் அப்பா வெங்கடேசய்யர். அவர் மிகப் பெரிய வித்வான். ரொம்ப சுத்தமான பாடாந்தரம். திருச்சி நூற்றுக்கால் மண்டபத்தில் தியாகப்ரம்ம உத்ஸவம் வெங்கடேச ஐயர்வாள் ஆரம்பித்ததுதான். அது அந்த நாளில் ஓஹோ என்று நடக்கும்.
அவரிடம் அந்த நாளில் தொடர்ந்து கற்றுக் கொண்டதோடு ரேடியோவிலும் பாடியிருக்கிறேன். பிறகு நாகசுரம் கத்துக்க ஆரம்பிச்சேன். புகழ் பெற்ற மேதை மலைக்கோட்டை பஞ்சாமி தவில்காரரின் அண்ணன் இலுப்பூர் நடேசப்பிள்ளையிடம் எனக்கு சிட்சை. அவரிடம் கற்றதோடு அவரோடு சேர்ந்து வாசிக்கவும் ஆரம்பித்தேன். நாகசுரத்தையே தொடர்ந்து வாசிக்க எனக்கு ஒரு தயக்கமும் பயமும் வந்துட்டது. இத்தனைக்கும் அவரோடு சேர்ந்து பல நிகழ்ச்சிகளுக்கு வாசித்துக் கொண்டிருந்தேன். கோவில் சேவை உண்டு. அதிலும் ஈடுபட்டிருந்தேன். நான் வாசிக்க ஆரம்பித்த நாள்களில் பெரிய பெரிய ஜாம்பவான்கள்…அதாவது ராஜரத்னம் பிள்ளை, செம்பொனார் கோயில் பிரதர்ஸ், திருவீழிமிழலை பிரதர்ஸ், வீருசாமிப்பிள்ளை இப்பிடி… பெரிய பெரிய மேதைகள் அன்று வாசித்துக் கொண்டிருந்த காலம். இவர்களையெல்லாம் பார்த்து எனக்கு பெரிய பிரமிப்பு. அவங்க சிங்கம் மாதிரி வந்து எறங்கறாங்க. அவங்க வர்ற சைஸýம்…. நிக்கிற சைஸýம் வாசிக்கிற சைஸýம் பார்த்து பயம் வந்திட்டது. இத்தனை பெரிய கலைஞர்கள் நடுவில் நாம வாசித்துப் பிழைக்க முடியுமா? என்று பயந்தேன். அப்படியே வாசிக்க வந்தாலும் ஏதாவது வளைகாப்பு, சீமந்தம்ன்னு வாசிச்சிப் பிழைக்க வேண்டியிருக்கும்.
மேல் லெவல்ல பெரிய கலைஞனா நம்மால வரமுடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதனால இதை நிறுத்திட்டு வேற ஏதாவது வாத்தியம் வாசிச்சுத்தான் பெரிசா வரணும்னு நினைச்சேன். அதுக்கு ஏதாவது யோசனை பண்ணுவோம்னு நினைச்சப்ப கிளாரிநெட்தான் ஞாபகம் வந்திச்சு. அந்தக் காலங்களில நாகசுரத்துக்கு அடுத்தாப்புல கிளாரிநெட்தான். அதுக்குக் காரணம் என்னன்னா அது பரத நாட்டியத்துக்காகவே வந்த வாத்தியம். தஞ்சாவூரில் மகாராஜா காலத்திலிருந்து பரத நாட்டியத்துக்கு இது இருக்கு. இது இல்லாத பரத நாட்டியமே அன்னிக்குக் கிடையாது. அது இல்லாம தேவாரத்துக்குக் கிளாரிநெட் அவசியம் இருக்கும். அந்த மாதிரி இதுக்கு ஒரு மரியாதை. எல்லாத் தேவார கோஷ்டியிலும் பரதநாட்டிய கோஷ்டியிலும் கிளாரிநெட் இருக்கும்.
டி.எஸ்.ராஜரத்தினம் பிள்ளை
பரதநாட்டியத்தில் கமலா, அப்புறம் லலிதா, பத்மினி, சாய் சுப்புலட்சுமி காலம் வரை கிளாரிநெட் இருந்திருக்கு. இவங்க காலங்களுக்குப் பிறகுதான் மீதி வாத்தியமெல்லாம் பரதத்துக்கு வருது. அது தவிர ஆல் இந்தியா ரேடியோவில் நிலைய வாத்திய கோஷ்டியில் கிளாரிநெட் நிச்சயம் இருக்கும். அது தவிர நாகசுரத்துக்கு அடுத்தாற்போல கல்யாணம், சுவாமி ஊர்வலங்களில் கிளாரிநெட்டுக்கு இடம் உண்டு. அதனால கிளாரிநெட்டை வாசித்து பெரிய இடத்தைப் பிடிக்கலாமே என்று ஒரு குறுக்கு யோசனை செய்தேன். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் எனக்கு வாய்ப்பாட்டுப் பயிற்சியும் அத்தோடு நாகசுரப் பயிற்சியும் இருந்தது. இந்த இரண்டு அம்சங்களும் தந்த உறுதியான பலத்தில் கிளாரிநெட்டைக் கற்று அசுர சாதகம் செய்தேன். அதன் விளைவாக அந்த வாத்தியத்தில் நாகசுரம் போல நினைத்தைப் பேச வைக்கிற வித்தையை இறைவன் தந்தான். வாய்ப்பாட்டு அம்சங்களையும், நாகசுர வாசிப்பின் அம்சங்களையும் நாம் அறியாதவனாக இருந்திருந்தால் பத்தோடு பதினொன்றாக நானும் கிளாரிநெட் வாசித்துக் கொண்டு இருந்திருப்பேன்.
நான் 1948-ஆம் ஆண்டிலேயே ஆல் இண்டியா ரேடியோ புரோகிராமில் வாசித்துவிட்டேன். அத்தோடு 49-இல் கள்ளிக்கோட்டை ஆல் இண்டியா வானொலி நிலையத்தின் வாத்தியக் கலைஞராகப் பதவி பெற்றேன். 1950-51-இல் தில்லி ரேடியோவுக்கு ஸ்டாஃப் ஆர்ட்டிஸ்டாகக் கூப்பிட்டார்கள். அங்கு நேஷனல் ஆர்கெஸ்ட்ராவின் வயலின் வித்வான் டி.கே.ஜெயராமனின் தலைமையில் இயங்கியபோது வட இந்திய கலைஞரும் சிதார்மேதையுமான ரவிசங்கர் நான் வாசிப்பதைக் கவனித்து தனது வாத்திய கோஷ்டிக்கு என்னைத் தரும்படி ஜெயராமனிடம் கேட்டார். ஜெயராமனும் ஒப்புக் கொள்ளவே ரவிசங்கரின் வாத்யகோஷ்டியில் சேர்ந்தேன். சிறந்த இசை மேதையான அவர் என் கையை ஒடித்து விட்டார். அப்படிக் கடுமையாக உழைத்ததன் பலன் நான் பெரிய வித்வான்கள் நடுவில் தன்னம்பிக்கையோடு நிற்க முடிந்தது. இந்தச் சமயத்தில் ஊரில் என் சகோதரி காலமானார். நான் பதறிப்போய் லீவு கேட்டேன். லீவு தரமாட்டேன் என்றார்கள். உடனே ராஜிநாமா கொடுத்துவிட்டு ஊருக்கு வந்து சேர்ந்தேன். ஊர் வந்த பிறகு எனக்கு நல்லநேரம்.
கொஞ்சம் கொஞ்சமாக பெரிய நாகசுரக்காரர்களோடு எனக்கும் சமமாக வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அவர்களும் என்னை அன்போடு அரவணைத்துக் கொண்டார்கள். இவன் என்னவோ புதுமையா செய்யிறானே…அப்பிடின்னு அவங்களுக்குப் பிடிச்சுப் போச்சு. அதே சமயம் எதிர்ப்புகளும் இல்லாமல் இல்லை. அவங்க ஏதோ என்னைப்போட்டி மாறி நினைச்சிட்டாங்க. சில எதிர்ப்புகள். சில அழைப்புகள் என்று ரெண்டு மாதிரியும் இருந்தது.
முதல் முதலில் சென்னை எழும்பூர் ஜகன்நாத பக்தஜன சபாவில் என் கச்சேரி. அப்போது அந்தச் சபையின் தலைவர் அரியக்குடி ராமானுஜய்யங்கார். அங்குதான் நான் முதல் கச்சேரி வாசிச்சேன். தொடர்ந்து என் வாசிப்பு பிரபலமாயிற்று. தொழில்ரீதியாக எனக்கு ரொம்ப நல்ல வளர்ச்சி. பெரிய வித்வான்களே என் வாத்தியத்தை ஒத்துக் கொண்ட சமயம் அது.
அரியக்குடி
அந்த நாட்களில் மியூசிக் அகாதெமியில் மத்தியானக் கச்சேரிகள் பாடுபவர்களைத் தேர்வு செய்ய அந்தந்தக் குருகுலங்களுக்குத் தபால் எழுதுவார்கள். அதாவது ஜி.என்.பி., மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் போன்ற பெரியவித்வான்களுக்கு அவர்கள் தபால் போட்டு உங்கள் சிஷ்யர்களுக்குள் நன்றாகப் பாடக் கூடியவர்கள் இருந்தால் அகாதெமி மத்தியானக் கச்சேரியில் பாட அனுப்புங்கள் என்று கேட்பார்கள். அதன்படி குருமார்களும் அனுப்பி வைப்பார்கள். இப்படி ஒரு லெட்டர் என் குருநாதர் ஆலத்தூர் வெங்கடேசய்யர்வாளுக்கு வந்தது. நான் எப்போதும் போல அவரிடம் பாட்டுக் கற்கப் போயிருந்தேன். என்னைப் பார்த்ததும் அவர் “”ஏண்டா…. நீ அகாதெமிக்குப் போறியாடா? என்று கேட்டார். எனக்குக் கிடைக்கணுமேங்க….என்று சொல்லி ஒத்துக்கிட்டேன். ஆனா மத்தியானக் கச்சேரிக்குப் பதிலாக முக்கியத்துவம் வாய்ந்த ராத்திரி கச்சேரியை செய்யும் படி ஆனது. அது எப்படி என்று விளக்கமாகச் சொல்லுகிறேன்.
அது 1955 ஆம் வருஷம். அந்த வருஷம் தான் திருவீழிமிழலை சுப்பிரமணியப் பிள்ளைக்கு சங்கீத கலாநிதி கொடுத்தார்கள். அந்த வருஷம் டிசம்பர் 25-ஆம் தேதியன்று அகாதெமியில் டி.என்.ராஜரத்தினம் பிள்ளைக்கு கச்சேரி. அடுத்த நாளே அவருக்கு தமிழிசை சங்கத்தில் புரோகிராம். ஆனால் நாகசுர சக்ரவர்த்தியான அவர் டிசம்பர் 12-ஆம் தேதி அமரர் ஆகிவிட்டார். 25-ம் தேதி அவர் செய்ய வேண்டிய கச்சேரியை நான்செய்யும் படி அகாதெமியில் கேட்டுக் கொண்டனர். அமரரான அவர் என் மீது வைத்திருந்த பேரன்பை நான் அறிவேன். அவரது ஆசீர்வாதம் காரணமாகவே அவர் கச்சேரியை வாசிக்க எனக்கு அழைப்பு வந்தது என்று உறுதியாக நம்புகிறேன். அதே போல அவரது அன்புக்குப் பாத்திரமான காருகுறிச்சி அருணாசலம் தமிழிசை சங்கத்தில் அவர் வாசிக்க வேண்டிய நாளன்று வாசித்தார். எப்படி நடந்துள்ளது பாருங்கள். மத்தியானக் கச்சேரிக்கு அகாதெமியில் பாட வேண்டிய நான் பிரதான நேரமான இரவுக் கச்சேரியில் நேரடியாக வாசிக்கிற தகுதியை அடைந்தேன். டி.என்.ஆரின் அனுக்கிரகத்தைத் தவிர வேறு எந்த காரணத்தையும் சொல்லத் தெரியவில்லை.
25-ம் தேதி இரவு ராத்திரி 9 மணிக்குத் தொடங்கிய என் கச்சேரி இரவு ஒன்றேமுக்கால் வரைக்கும் லைவ் புரோகிராமாக ரிலே ஆயிற்று. அன்று கச்சேரி முடிந்து என்.எஸ்.கிருஷ்ணன் வீட்டில்தான் தங்கியிருந்தேன். தமிழிசை சங்கத்தில் அருணாசலம் வாசித்த கச்சேரியும் ரொம்ப நன்றாக அமைந்துவிட்டது. அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸில் ராஜரத்னம் பிள்ளை இறந்து போய்விட்டாரே என்று வருத்தப்பட வேண்டியதில்லை. அவர் மிகச் சிறந்த இரண்டு சிஷ்யர்களை விட்டுச் சென்றிருக்கிறார் என்று எழுதி ராஜரத்தினம் பிள்ளையை ஆலமரமாகவும் எங்களை விழுதுகளாகவும் வருணித்துக் கார்ட்டூனும் வரைந்திருந்தார்கள்.
ராஜரத்தினம் பிள்ளையோடு எனக்கு இருந்த பழக்கங்களைச் சொல்லுகிறேன். எத்தனையோ முறை அவர் வாசிப்பைப் பக்கத்தில் இருந்து அனுபவித்திருக்கிறேன். மாரியம்மன்கோயில் தெப்ப உத்ஸவத்தில் அவர் தெப்பத்தில் உட்கார்ந்து வாசிக்கிறார். தெப்பத்தில் நான்.அருணாசலம் எல்லாம் உட்கார்ந்து போனோம். அந்த போட்டோ கூட பின்னர் வெளியாயிற்று. அவரோடு நடந்த முக்கியமான சம்பவத்தை உங்களுக்குச் சொல்கிறேன். 1953 ஆம் வருஷம் கல்லிடைக்குறிச்சியில் தொழிலதிபர் சங்கரலிங்கையர் வீட்டில் கல்யாணம்.
தண்டபாணி தேசிகர்
லேனா செட்டியார், என்.எஸ்.கே. இந்தியன் பாங்க் கோபாலய்யர் ஆகியோரெல்லாம் முன்னால் இருந்து கல்யாணத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். கல்யாணத்தில் ஊர்வலத்துக்கு வந்து வாசிக்கும்படி எனக்கு அழைப்பு வர நானும் கல்லிடைக்குறிச்சி போய்ச் சேர்ந்தேன். நேராகப் போய் பிள்ளைவாளைப் பார்த்து வணங்கினேன். “”ஏண்டா நாங்க இங்க 5 நாளைக்கு வாசிக்கிறோம்….நீ என்ன அதிகப்படி மேளமாடா….”என்றார் குறும்புச் சிரிப்புடன். உடனே அங்கிருந்த பெரிய அண்ணி….பாவம் அவன் உங்களைப் பாக்க வந்திருக்கான். (பெரிய அண்ணி என்றது பிள்ளைவாளின் முதல் மனைவியார்) அவனைப் போய் கிண்டல் பண்றீங்களே…என்று எனக்குப் பரிந்து பேசினார். இப்படி வேடிக்கையாக பேச்சு நடந்தது. தொழிலதிபர் சங்கரலிங்கையர் என்னைக் கூப்பிட்டார்.
பிள்ளைவாளுடன் நான் உடன் இருந்து செய்ய வேண்டிய ஒரு புதிய பொறுப்பைக் கொடுத்தார். அந்த கல்யாணத்தில் பிள்ளைவாள் வாசிக்க என்றே 5 இடங்களில் மேடை அமைத்திருந்தனர். ஒரு மேடையில் வாசித்து முடித்ததும் அவரை ஒரு இடத்திலிருந்து மறு இடத்துக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு என்னுடையது. மேடை அமைந்திருந்த நான்காவது இடம் கல்லிடைக்குறிச்சி அக்ரகாரம். அங்கு வாசித்த அவர் அடுத்த இடத்துக்குக் கிளம்ப நான் ஏற்பாடு செய்தபோது இங்கே உக்காந்து நீ வாசிடா என்றார். நான் பதறிப் போய் ஐயா….உங்க முன்னாடி நான் வாசிக்கிறதா என்று அலறினேன். நான் சொன்னபடி வாசிடா என்று கட்டளை போட்டு விட்டு எதிர்திண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டார் சக்ரவர்த்தி உத்தரவு போட்டுவிட்டால் மீற முடியுமா. வாசித்தேன். அவர் திண்ணையில் வெற்றிலை போட்ட படியே நான் வாசிப்பதைக் கேட்டார். அத்தனை ஜனங்களுக்கும் ஆச்சரியம். அட….ராஜரத்தினம் பிள்ளையே இவன் கச்சேரியை உக்காந்து கேட்கிறாரே…என்று அவர்கள் வியந்தனர். இப்படி ஒரு நிமிஷத்தில் மக்கள் நடுவே என் மதிப்பை உயர்த்திய மேதை அவர்.
நாகப்பட்டினத்துல நீலாயதாட்சி கோயில்ல 1953-ல் எனக்கு அவருதானே கிளாரிநெட் எவரெஸ்ட் பட்டம் கொடுத்தாரு. அதை மறக்கமுடியுமா? அங்க அவர் மேளம் இருந்தது. அவர் ரொம்ப நாள் கழிச்சு நாகப்பட்டினம் வந்து வாசிக்கிறாரு. அதுக்கு பத்து வருஷம் முன்னாடி ஒரு சம்பவம் நடந்தது.
அதாவது நாகப்பட்டினத்தில ஒரு செட்டியார் வீட்டுக் கல்யாணம். சாயங்காலம் எம்.எஸ்.அம்மா கச்சேரி. ராத்திரி ஊர்வலத்துக்கு இவர் வாசிக்கிறதா இருந்தது. அம்மா கச்சேரி முடிந்ததும் ஊர்வலத்துக்கு வாசிக்க இவரைக் கூப்பிட்டாங்க. மேடையில கொஞ்ச நேரம் வாசிச்சிட்டுத்தான் ஊர்வலத்துல வாசிப்பேன்னு சொன்னாரு. அவங்க ஒத்துக்கல. பேச்சு வளர்ந்து இவர் திட்டிப்பிட்டாரு. அவங்க அடிச்சிப்பிட்டாங்க. அவ்வளவுதான் அதிலிருந்து ஒரு பெரிய நாகசுர வித்வானும் நாகப்பட்டினத்துல வாசிக்கிறதில்லைன்னு புறக்கணிச்சிட்டாங்க. இப்படியே 10 வருசம் போச்சு. நாகப்பட்டினத்தில இருந்த பெரியவங்கள்ளாம் சேர்ந்து இப்பிடியே போனா எப்பிடி ஆவுறது? எத்தனை நாளைக்கு இவங்க வாசிப்பு இல்லாம இருக்கிறதுன்னு சொல்லி அவரைப் பார்க்க வந்தாங்க.
“”ராஜரத்தினம்….ஏதோ நடந்தது நடந்து போச்சு. நீ அதையெல்லாம் இனிமேலும் மனசில வச்சிக்கிட்டு ஊர்ல நல்ல நாயனம் இல்லாம செஞ்சிராதே. அந்தப் பாவம் உனக்கு வேணாம். அவசியம் ஊருக்கு வந்து வாசிக்கணும்”னு வயசில் ரொம்ப பெரியவங்களெல்லாம் கேட்டாங்க. உடனே இவர் சரின்னு சொல்லி பத்து நாள் அங்க வந்து தங்கிட்டாரு. பத்து வருசத்துக்கப்புறம் அங்க போயி வாசிக்கிறாரு. அவரு வாசிக்கிறார்னவுடனே குழிக்கரை பிச்சையப்பா, திருவெண்காட்டார், வீருசாமிப் பிள்ளை உள்பட பெரிய வித்வான்களெல்லாமும் வந்து பத்து நாளும் வாசிச்சாங்க. கடைசி நாளைக்கு நான் வாசிச்சேன். தெற்கு முக்கில நான் வாசிச்சபோது உக்காந்து கேட்டுக்கிட்டிருந்தாரு. வாசிச்சு முடிச்சதும் என்னைக் கிட்ட வாடான்னு கூப்பிட்டாரு. உடனே போனேன். “”டேய்….நல்லா வாசிக்கிறேடா… எனக்கு இந்த ஊர்லதான் நாகசுர எவரெஸ்டுனு பட்டம் கொடுத்தாங்க. நான் உனக்கு அதே எவரெஸ்ட் பட்டம் தர்றேன்டா”ன்னு சொல்லி அந்தப் பட்டத்தை அவர் தந்தார். பெரிய பாக்கியம். அதுதான் இப்ப என்னோட ஒட்டிக்கிட்டிருக்கு. அப்படி எங்கிட்ட அவருக்கு ஒரு ஒட்டுதல். அந்த அன்புதான் அவரு புரோகிராம் பின்னால எனக்குக் கிடைச்சுது. அருணாசலத்துக்கும் எனக்கும்தான் அந்த அன்பு கிடைச்சது.
இதற்குப் பிறகுதான் முதலில் சொன்னேனே….அவர் வாசிப்பதாக இருந்த மியூசிக் அகாதெமி கச்சேரிக்கு வாசித்தேன். அப்புறம் எத்தனையோ சபாக்கள்,விழாக்கள், ஊர்கள் என்று ஏராளமாக வாசித்தேன். அத்தோடு திருவாவடுதுறை ஆதீன வித்வானாக ராஜரத்னம் பிள்ளைக்கான பூஜை மேளத்தை வாசிக்கிற பாக்கியம் எனக்குக் கிடைத்ததைச் சொல்லவேண்டும். குழிக்கரை பிச்சையப்பாவும் நானும் இப்படி சுமார் 20 வருஷம் சேர்ந்து வாசித்தோம். அந்த நாளில் குழிக்கரை பிச்சையப்பாவுக்கு கச்சேரிகள் கிடைக்காத நிலை. காரணம் அவர் உறுதியான தி.மு.க.அனுதாபியாக இருந்ததுதான். அந்த நாளில் தி.மு.க. வளர்ந்து வரும் நிலையில் இருந்தது. அப்போது பல சோதனைகளை அது சந்தித்தது. தி.மு.க.என்றால் நெல்லை போன்ற பகுதிகளில் உள்ள கோயில்கள் உள்பட எந்த இடத்திலும் கச்சேரிகள் தரமாட்டார்கள். காரணம் தி.மு.க.காரர்கள் எல்லாரும் நாத்திகர்கள். அவர்களுக்குக் கச்சேரியெல்லாம் தரக்கூடாது என்று நினைத்தார்கள். அப்படி ஒரு காலம் இருந்தது. அதனால் உறுதியான தி.மு.க அனுதாபியாக இருந்த பிச்சையப்பா கஷ்டப்படவேண்டியதாயிற்று. மிகப் பெரிய கலைஞரான அவர் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது ஆதினத்தில் நானே பிச்சையப்பாவுக்கு ஆதரவாகப் பேசி நான் போய் அவரை ஆதீனத்தில் வாசிக்க வைத்தேன். பிச்சையப்பா மிகவும் சந்தோஷப்பட்டார்.
பிச்சையப்பாவைப் பார்த்து அவர் செய்கிற நுட்பங்களையெல்லாம் கற்று அப்படியே பிரிண்ட் எடுத்தாற்போல வாசித்துக் கொண்டிருந்தவன் நான். அவரது பாணியே அலாதியானது. அதில் உள்ள ஒரு நுட்பம் நம் கைக்கு வர மாதக் கணக்கில் உழைக்க வேண்டும். அவ்வளவு கடினமான வழி அது. அவருக்கு நன்றிக் கடன்பட்டது போல இந்த உதவியை அவருக்கு நான் செய்தேன்.
குழிக்கரையார் வாசிப்பெல்லாம் எப்படியிருக்கும் தெரியுமா? அவர் மட்டுமல்ல….அன்றும் அதற்கு முந்தைய தலைமுறைகளிலும் வாசித்த நாகசுர மேதைகள் அத்தனை பேருக்கும் இன்றைய சங்கீத உலகம் கடமைப்பட்டுள்ளது. காரணம் அவர்கள்தான் ராகசங்கீதத்தை வளர்த்தவர்கள். செம்மங்குடி மாதிரி பெரிய பெரிய வித்வான்களெல்லாம் நாகசுரமே ராகசங்கீதத்தின் அடிப்படை என்று சொல்வதன் காரணம் இதுதான். அன்று இருந்த நம் கோயில் மரபுகள், நம் சங்கீதத்துக்கான குறிப்பாக ராக சங்கீதத்துக்கான அடிப்படையாக நின்றவை. கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் ராக சங்கீதம் உருவான பின்னணியைப் புரிந்து கொள்ள இயலும்.
அந்த நாளில் கோயில்களில் ஸ்வாமி புறப்பாடு ஆயிற்று என்றால் வீதிகளிலெல்லாம் வலம் வந்து அந்த ஊர்வலம் திரும்பி கோவிலுக்குள் வர விடிந்துவிடும். அதோடு மட்டுமல்ல, கோயிலுக்குள் தட்டுச் சுத்துகிறது என்கிற சம்பிரதாயம் உண்டு. அதாவது சுவாமி பிராகாரத்தில் 3 சுற்று வரவேண்டும். அதற்கே 3 மணி நேரம் ஆகும். இப்படி ராத்திரி ஆரம்பித்த வாசிப்பு சுமார் 10 மணிநேரத்துக்கும் மேலே போகும். அப்படியானால் கீர்த்தனைகளாக வாசிக்க முடியுமா. ஒரு கீர்த்தனத்தை எடுத்தால் ஐந்து பத்து நிமிஷத்தில் முடிந்து போகுமே. ஆகவே நாகசுர வித்வான்கள் ராகங்களையே எடுத்துக் கொண்டு விஸ்தாரமாக ஆலாபனை செய்வார்கள். அது ஒரு பெரிய அற்புதம். ராகத்தின் வடிவத்தில் தேங்கிக் கிடக்கிற அத்தனை அழகையும் அவரவர் கற்பனைக்கேற்ப வெளியே கொண்டு வருவார்கள். அதில்தான் வாசிக்கிறவன் எவ்வளவு பெரிய கலைஞன் என்பது தெரிந்துவிடும்.
இப்படி ஒவ்வொரு ராகத்தையும் விரிவாக்கி வாசிக்க வாசிக்க அதன் நாத எல்லைகளெல்லாம் புதிய புதிய முகங்களெல்லாம் தெரியவருகிறது. இப்படித்தான் பெரிய கலைஞர்களின் கற்பனையால் ராகங்கள் விருத்தி அடைகின்றன. வாசிக்க வாசிக்க ராகங்களே தங்கள் அழகைக் காண்பிக்கத் துவங்குகின்றன. இப்படித்தான் ராகசங்கீதம் என்பது விருத்தி அடைந்தது. அதற்கு நாகசுர கலைஞர்களே காரணமாயிருந்தனர்.
நான் கிளாரிநெட்டில் நாகசுரத்தின் அத்தனை குழைவையும், அழகையும் தொடமுடிந்ததால்தான் பெரிய கலைஞர்களும் என்னை அரவணைத்துக் கொண்டனர். அன்று இதற்கு ரொம்ப மவுசு ஏற்பட்டது.
அன்று என் வாசிப்புக்கு ஏராளமான ரசிகர்கள். அப்படி ஒரு ரசிகராக இருந்தார் சுசீந்திரம் கோயில் கமிஷனர் ராமசாமிஐயர். அவர் என்னை கேரளத்திலுள்ள கோட்டயம் கோயிலில் கச்சேரிக்கு வாசிக்க அழைத்துப் போனார். அங்கு போனால் அங்குள்ள கோவில்காரர்களும் ஊர்க்காரர்களும் கோவிலில் என்னை வாசிக்கக் கூடாதென்று சொல்லிவிட்டார்கள். காரணம், நான் வாசிக்கும் கிளாரிநெட் கிறிஸ்தவ வாத்தியம் என்றார்கள். ஐயர் அவர்களிடம் “”ஏம்பா…வாத்தியத்தில் கிறிஸ்தவ வாத்தியமாயிருந்தா என்ன….அவன் வாசிப்பு எப்படி இருக்குன்னு கொஞ்ச நேரம் உக்காந்து கேளு. அதுக்கப்புறம் உனக்கு பிடிக்கலைன்னு சொன்னா உடனே அவனை இங்கிருந்து அழைச்சிட்டுப் போயிடுறேன்” என்றார். முரண்டு பிடித்தார்கள். அப்புறம் அவர் சொல்லுக்கு மரியாதை கொடுத்து அரை மனத்தோடு கொஞ்ச நேரம் வாசிக்கச் சொன்னார்கள். வாசிச்சேன். அரை மணி நேரம் ஆச்சு. ஒரு மணி நேரம் ஆச்சு. 3 மணி நேரமும் ஆச்சு. நான் வாசிச்சு நிறுத்திய போது…..மலையாளத்தில் அவர்கள் பாகவதர் வாசிக்கட்டும்….வாசிக்கட்டும்…என்று ஊக்குவித்தார்கள். அது மட்டுமல்ல….ஒவ்வொரு வருஷமும் எனக்கு அழைப்பு அனுப்பினார்கள்.
இப்படி ஒரு நிலையை அடைய ரொம்பப் பாடுபட்டேன் என்பதையும் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். அந்த நாளில் பிச்சையப்பா, திருப்பாம்புரம் சுவாமிநாதபிள்ளை. திருப்பாம்புரம் சிவசுப்பிரமணியப் பிள்ளை, டி.எம்.தியாகராஜன், செம்மங்குடி, தண்டபாணி தேசிகர் ஆகியோரிடமெல்லாம் சென்று புது உருப்படிகளைத் தெரிந்து கொள்வார். அவருக்குப் பின்னாடியே நானும் போய் பாடம்பண்ணி வாசிப்பேன். அவர் ஆச்சரியப்பட்டு….”எங்கடா போயிட்டுவந்தே’…என்பார். நீங்க போன இடத்துக்குத்தான் போனேன் என்று நான் சொல்வேன். ரெண்டு பேரும் சிரிப்போம்.
அதுவும் தேசிகர்கிட்ட நிறைய உருப்படி பாடம் பண்ணியிருக்கேன். எம்.எஸ்.அம்மாவின் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அப்படி ஒரு துளி சேதாரம் இல்லாத பாடாந்திரத்தைக் கேட்பது அரிது. அவங்க வீட்டுக்குப் போய் உருப்படி பாடம் பண்ணியது உண்டு. எங்க வந்தீங்க தம்பின்னு விசாரிச்சு கேட்டதைச் சொல்லிக் குடுத்திருக்காங்க. இப்படியெல்லாம் உழைச்சதால சாதாரண ஜனங்களில் தொடங்கி எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் வரையில் பலர் என் வாசிப்பை நேசித்தனர். கிட்டத்தட்ட பத்து வருஷம் எம்.ஜி.ஆர். தன் இல்லத்தில் நடத்தி வந்த பொங்கல் விழாவில் வாசித்திருக்கிறேன். ஊருக்கே தன் பிளைமெüத்தை அனுப்பி என்னை வரவழைப்பார். கச்சேரி முடிந்ததும் நடராஜன்….உங்களுக்கு என்ன வேண்டும் என்பார். ஒண்ணும் வேண்டாம்ணே….உங்க தயவு இருந்தால் போதும் என்பேன். அப்படியே கடைசி வரை அவரிடம் தேவைகள் எதையும் சாதித்துக் கொள்ளாமல் இருந்து விட்டேன். எது கிடைச்சாலும் கிடைக்கலைன்னாலும் ரசிகர்கள் மனசில் இன்னிக்கும் எனக்கு தனி இடம் இருக்கிறதை நினைச்சா இதெல்லாம் பெரிசாத் தெரியறதில்லை.
நேர்காணல்}தொகுப்பு: தாடி வாத்தியார்
மெளலி said
அருமையான பதிவு, நன்றி…