Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

U Nirmala Rani: Women Rights – Perspectives, Timeline, Information

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

“இரும்புத் தாடை தேவதைகள்’

வழக்கறிஞர் உ . நிர்மலா ராணி

இன்று சர்வதேச பெண்கள் தினம். 1908ம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள் நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கான பஞ்சாலை பெண் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை கோரி நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தை நினைவு கூறும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்தப் போராட்டத்தின் இரண்டாவது முக்கிய கோரிக்கை தான் பெண்களுக்கு வாக்குரிமை!

அந்தக் காலத்தில் வாக்குரிமை என்பது வசதி படைத்தவர்கள் அதிலும் ஆண்களுக்குத்தான் ஓட்டுரிமை. சொத்து வைத்திருக்காத ஆண்கள், வேலையாட்கள், கிரிமினல்கள் இந்த வரிசையில் இறுதியாகப் பெண்கள். இவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை மறுக்கப்பட்டது.

பெண்களுக்கு வாக்குரிமை கோரி நடந்த ஒரு நூற்றாண்டுப் போராட்டம்கூட வரலாற்றில் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் மறைக்கப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த சமூகப் போராளி எலிசபெத் கேண்டி ஸ்டாண்டன், லண்டனில் நடந்த அடிமை முறை எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றபோது, பெண்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அடிமை எதிர்ப்பு மாநாட்டிலேயே பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவது கண்டு ஆத்திரமுற்ற எலிசபெத், 1848-ல் செனிகா ஃபால்ஸ் என்ற இடத்தில் பெண்களைத் திரட்டி கோரிக்கைப் பிரகடனத்தை வெளியிட்டார். அது தான் அமெரிக்காவில் பெண்கள் வாக்குரிமைக்கான போராட்டத்தின் முதல் வித்து!

ஆரம்பத்தில் வாக்குரிமை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சாத்வீகமான போராட்ட வடிவங்களைக் கையாண்ட பெண்கள், கறுப்பின மக்களுக்கு சம உரிமையளித்த “”சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்று விளம்பும் 14, 15 சட்ட திருத்தங்களிலிருந்து பெண்கள் மட்டும் விலக்கப்பட்டபோது பொங்கி எழுந்தனர்.

அமெரிக்காவில் எலிசபெத் கேண்டி ஸ்டாண்டன், சூஸன் பி ஆண்டனி, ஆலிஸ் பால் ஆகியோரும், இங்கிலாந்தில் எம்மலின் பாங்கர்ஸ்ட் மற்றும் அவரது 2 புதல்விகள் கிறிஸ்டபெல் மற்றும் சில்வியா ஆகியோரும் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தினர். நாடாளுமன்றமும் அரசு அலுவலகங்களும் முற்றுகையிடப்பட்டன. வாயில்களில் வாக்குரிமை கேட்டு பேனர் பிடித்தபடி நாள்கணக்கில் நின்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரி உமிழ்ந்தனர்.

கோபமடைந்த பெண்கள் அரசு அலுவலகக் கண்ணாடிக் கதவுகளை சரசரவென்று கல்லெறிந்து உடைத்து நொறுக்கினர். தந்தி வயர்களை வெட்டினர். அதிகாரிகளின் கார் கண்ணாடிகளைத் தூளாக்கினர். எரி குண்டுகளை வீசி அரசு அலுவலகங்களைத் தாக்கினர். கைதாகினர். சிறை சென்றனர். உண்ணாவிரதமிருந்தனர். சிறை அதிகாரிகள் வன்முறையை உபயோகித்த போதும் வாய் வழியாக அவர்களுக்கு உணவூட்ட இயலவில்லை. எனவே தான் இந்தப் பெண் போராளிகளுக்கு “இரும்புத் தாடை தேவதைகள்’ என்ற செல்லப்பெயர் சூட்டப்பட்டது. எனவே சிறை அதிகாரிகள் அவர்களைக் கட்டாயப்படுத்தி மூக்கின் வழியாக, குழாய் மூலமாக உணவைச் செலுத்தினர்.

உச்சகட்டமாக 1913 ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் எமிலி வைல்டிங் டேவிஸன் என்ற பெண்மணி பெண்களின் ஓட்டுரிமைக்காக யாரும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்தார். புகழ்பெற்ற குதிரைப் பந்தய மைதானமான டெர்பியில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் குதிரையான ஆன்மர், புயல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது கையில் வாக்குரிமை கோரும் அட்டையுடன் குறுக்கே பாய்ந்தார் எமிலி! குதிரையின் கால்களில் மிதிபட்டு சின்னாபின்னமானார். வாக்குரிமைக்காக உயிர்த்தியாகம் செய்த ஒரே பெண் என்ற புகழையும் பெற்றார்.

இதையடுத்து இங்கிலாந்தில் 1918-ல் நிபந்தனையுடன் கூடிய வாக்குரிமையும், 1928-ல் முழுமையான வாக்குரிமையும் வழங்கப்பட்டது.

அமெரிக்காவிலும், 1919-ல் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் மசோதா, 19-வது சட்டத் திருத்தமாக நிறைவேற்றப்பட்டாலும் அமெரிக்க சட்ட விதிகளின்படி இந்தத் திருத்தம் சட்டரீதியாக்கப்பட வேண்டுமென்றால், 4-ல் 3 பங்கு மாகாணங்கள் அதாவது 36 மாகாண நாடாளுமன்றங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாகாண நாடாளுமன்றத்திலும் மசோதா நிறைவேற பெண்கள் போராட வேண்டியிருந்தது. மசோதா எதிர்ப்பாளர்கள் அதைத் தோல்வியடையச் செய்யும் பொருட்டு குறைந்தபட்ச கூட்ட வருகையை (கோரம்) தவிர்க்க இரவோடு இரவாக நாட்டை விட்டுப் பறந்தனர். கூட்டங்கள் நடத்த விடாமல் வெளிநடப்புச் செய்தனர். 35 மாகாணங்கள் அங்கீகரித்துவிட, கடைசி மாகாணமான டென்னிஸீயில் மசோதாவைத் தோற்கடிக்க போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்ப்பாளர்கள் தேற்றி வைத்திருந்தனர். மசோதா ஆதரவாளர்கள் மஞ்சள் ரோஜாவையும் எதிர்ப்பாளர்கள் சிவப்பு ரோஜாவையும் அணிந்திருந்தனர். இதைக் கணக்கெடுத்துப் பார்த்தபோது மஞ்சள் ரோஜாவை அணிந்தவர்கள் 47 பேர் எனவும் சிவப்பு ரோஜாவை அணிந்தவர்கள் 49 பேர் எனவும் தெரியவந்தது.

வாக்கெடுப்பின் முதல் சுற்றில் குடியரசுக் கட்சியை சார்ந்த பேங்க் டர்னர், தான் அணிந்திருந்த சிவப்பு ரோஜாவைத் தூக்கியெறிந்துவிட்டு தடாலடியாக அணி தாவினர். இதனால் இரண்டாவது சுற்றில் ஆதரவும், எதிர்ப்பும் 48 – 48 என்று சம நிலையிலிருந்தது.

3-வது சுற்றில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் அமெரிக்க பெண்களின் தலையெழுத்தையே மாற்றியது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 24 வயதான ஹாரிபர்ன் மசோதாவுக்கு எதிர்ப்பாளர். அவர் வாக்களிக்கப் போகும் இறுதி நொடியில் ஒரு துண்டுச் சீட்டு அவருக்கு வந்தது. அதைக் கண்ணால் ஸ்கேன் செய்த ஹாரிபர்ன் மசோதாவுக்கு ஆதரவாக கையைத் தூக்கி விட்டார். மசோதா நிறைவேற்றப்பட்டது. துண்டுச் சீட்டை அனுப்பியது அவருடைய தாயார் ஃபெப் என்ஸ்மிங்கர் பர்ன். அதில் “”நல்ல பையனாக நடந்து கொள்! பெண்கள் வாக்குரிமைக்கு ஆதரவாக ஓட்டுப்போடு” என்றிருந்தது. தாய் – தனயன் சென்டிமென்ட்தான் கடைசியில் அமெரிக்கப் பெண்களுக்கும் கைகொடுத்தது.

ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பதற்கான முதல் படியை பெண்கள் வெற்றிகரமாகக் கடந்த பிறகும் கூட தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து மந்திரியாக நியமிக்கப்படுவது, அவர்களுக்கு வழங்கப்படும் துறைகள் வரை பெண்கள் இன்றும் பாரபட்சங்களை அனுபவித்து வருகிறார்கள். இதற்கு காரணம் பெண்களின் இடம் என்பது வீட்டின் மூலையில் ஒரு சமையலறையே தவிர நாடாளுமன்றம் அல்ல என்ற ஐயாயிரம் ஆண்டு மனப்போக்கு இன்னமும் மாறவில்லை.

பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து (1893). சமீபத்திய நாடு குவைத் (1995). இன்றும் வாக்குரிமை அளிக்க மறுப்பது சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளும்தான்!

உலகத்தின் முதல் பெண் மந்திரி 1917ல் ரஷியாவில் போல்ஷ்விக் கட்சியால் காபினெட் மந்திரியாக நியமிக்கப்பட்ட அலெக்ஸôண்டர் கோலந்தாய். இங்கிலாந்தில் கூட முதன்முறையாக 2006ல் தான் பரோனஸ் ஹேமேன் என்ற பெண்மணி சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

இண்டர் பார்லிமெண்டரி யூனியன் (ஐடம) என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி சர்வதேச அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 85 சதவீதம் ஆண்கள்தான்! உலக அளவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகம் கொண்டவை (40 சதவீதம்) நார்வே, ஸ்வீடன், டென்மார்க் எனும் ஸ்காண்டிநேவிய நாடுகள்தான். இதில் இந்தியாவின் நிலைதான் மிக மோசம்.

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் பெண் உறுப்பினர்கள் 8.3 சதவீதம்தான். இதை சரிசெய்ய 1996ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடஒதுக்கீடு மசோதா இன்னமும் வெளிச்சத்தை காணவில்லை.

2002 – 2004ல் 20 சட்டமன்றங்களுக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட 2432 வேட்பாளர்களில் பெண்கள் 1525 பேர். அதாவது பாதிக்கு மேல்! ஆனால் ஜெயித்தது 137 பெண்கள்தான். இது 5.6 சதவீதம், 33 சதவீதம் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்திருந்தால் இன்று 811 பெண் உறுப்பினர்கள் சட்டமன்றங்களில் இருந்திருப்பார்கள்.

பெண் போராளி úஸô ஹைட் – 1916-ல் கனடாவின் நாடாளுமன்றத்தில் வாக்குரிமை மனுவைத் தாக்கல் செய்து பேசியபோது “”கணவான்களே! வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள் பட்டியலில் பெண்கள் சேர்க்கப்படுவதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம். நாங்கள் முட்டாள்களும் அல்ல! முடியாதவர்களும் அல்ல! நாங்கள் பெண்கள்! வாக்குரிமையில் நாங்கள் சமத்துவம் கேட்பது சலுகையின் அடிப்படையில் அல்ல! நியாயத்தின் அடிப்படையில்” என்று முழங்கினார்.

இந்தியப் பெண்களாகிய நாங்களும் கேட்கிறோம்! நாடாளுமன்றவாதிகளே! தயவுசெய்து பாலின சமத்துவ நீதியின் மொழியிலே பேசுங்கள்! 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுங்கள்! இந்திய நாட்டில் சமத்துவத்தை விரும்பும் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதை உலகிற்கு உணர்த்துங்கள்!

பின்னூட்டமொன்றை இடுக