உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் ‘சன் நெட்வொர்க்’ நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன். முன்னதாக, முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில் கலாநிதி சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. தொலைக்காட்சி, கேபிள் டி.வி. ஆகியவற்றால் முதல்வர் குடும்பத்துக்கும், மாறன் குடும்பத்துக்கும் இடையே உள்ள பிரச்னைகளைத் தணிக்கும் முயற்சியாக, கலாநிதி மாறன் இந்தச் சந்திப்பை மேற்கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
தி.மு.க.வில் ஸ்டாலின்-மு.க. அழகிரி ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு ‘தினகரன்’ பத்திரிகை வெளியிட்ட கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து, கருணாநிதி குடும்பத்துக்கும் மாறன் குடும்பத்துக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. இந்தப் பிளவால், தங்களின் செய்தி டி.வி.க்களில் எந்த விதத்திலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு விடக் கூடாது என நினைத்தது திமுக தரப்பு. இதனால், ‘கலைஞர் தொலைக்காட்சி’ என்கிற பெயரில் தங்களுக்கென புதிய சேனலைத் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, கேபிள் டி.வி.யில் ஏகபோகம் செலுத்தி வரும் ‘சுமங்கலி கேபிள் டிவி’ நிறுவனத்தை முடக்க தமிழக அரசு களத்தில் இறங்கியது. அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனையும் தொடங்கியது. இந்த நிலையில், சுமங்கலியால் முடக்கப்பட்ட ‘ஹாத்வே’ நிறுவனத்தை மீண்டும் தட்டியெழுப்ப கருணாநிதியின் மகன் அழகிரியின் ஆசியோடு, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘ஹாத்வே’ நிறுவனத்துக்குள் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அனைவரும் வந்து விட்டால், சுமங்கலி தானாகவே முடங்கும் என்பது அழகிரி தரப்பின் கணக்கு.
கேபிள் டி.வி. ஆபரேட்டர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் ஆளுங்கட்சியின் செயலை எதிர்த்து சிலிர்த்தெழுந்தார் தயாநிதி. தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்களைப் போலீஸôர் மிரட்டுவதாக, சென்னை போலீஸ் ஆணையரிடம் புகார் அளித்தார் தயாநிதி. தொடர்ந்து ஆளும் தரப்பு மீது அதிருப்தி காட்டி வந்த தயாநிதி, அ.தி.மு.க.வில் சேரப் போவதாகவும் செய்திகள் பரவின. செய்திகள் வந்த மறுநாளே, அவற்றை மறுத்தார் தயாநிதி.
திடீர் திருப்பம்: குடும்பத்துக்குள் நிலவி வந்த பிரச்னைகளுக்கு, தீர்வு காணும் விதமாக அமைச்சர் ஸ்டாலினை அவரது பிறந்த நாளின்போது தயாநிதி மாறன் சந்தித்துப் பேசுவார் என செய்திகள் வெளியாயின.
ஆனால் திடீர் திருப்பமாக தயாநிதியின் சகோதரரும், ‘சன் நெட்வொர்க்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான கலாநிதி மாறன், ஸ்டாலினை அவரது இல்லமான குறிஞ்சியில் சனிக்கிழமை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தார். ஸ்டாலின் மகன் உதயநிதி வாசல் வரை வந்து, கலாநிதியை வழியனுப்பி வைத்தார்.
முன்னதாக, முதல்வரும், தனது தாத்தாவுமான கருணாநிதியை அவரது இல்லத்தில் கலாநிதி சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. மாறன் சகோதரர்கள் அமைச்சர் ஸ்டாலினுடன் நெருக்கம் காட்டி வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
‘கலைஞர்’ டி.வி. அழகிரியின் பக்கம் திரும்பி இருப்பதால், தனது அரசியல் எதிர்காலத்துக்கும், வளர்ச்சிக்கும் வலுவான மீடியா துணை வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். அதற்கு, மாறன் சகோதரர்களின் ஆதரவு நிச்சயம் அவசியம் என்கிற கருத்து அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நிலவுகிறது.
இதை மெய்ப்பிக்கும் வகையில், ஸ்டாலின் பிறந்த நாள் செய்தியை தலைப்புச் செய்திகளிலேயே சொல்லி அசத்தியது ‘சன்’ நியூஸ் சேனல்.
சோனியா தலையீடு? ஸ்டாலினை கலாநிதி சந்தித்ததும், முதல்வரை சந்தித்ததாகக் கூறப்படும் செய்தியிலும் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் தலையீடு இருக்கக் கூடும் என தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க தில்லி சென்ற தயாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியாவைச் சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வீரப்ப மொய்லி முதல்வர் கருணாநிதியை, சென்னையில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். மாறன் குடும்பத்துடன் சமரசமாகச் செல்வது குறித்து சோனியா காந்தி சார்பில் கருணாநிதியிடம் மொய்லி வலியுறுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நன்றி: தினமணி
தொடர்புள்ள செய்தி: Veerappa Moily meets Karunanidhi: “‘தயாநிதி’: கருணாநிதியுடன் மொய்லி சந்திப்பு!!”