Polls for six Tamil Nadu Rajya Saba seats on June 15
Posted by Snapjudge மேல் மே 15, 2007
தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, அந்த இடங்களுக்கான தேர்தல் ஜூன் 15-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- அதிமுகவைச் சேர்ந்த ஆர். காமராஜ்,
- எஸ். கோகுல இந்திரா,
- எஸ்.எஸ். சந்திரன்,
- பி.ஜி. நாராயணன்,
- திமுகவைச் சேர்ந்த கே.பி.கே. குமரன்,
- காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.எஸ். ஞானதேசிகன்
ஆகியோரது பதவிக்காலம் முடிவடைகிறது. சட்டப் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில்,
- அதிமுகவுக்கு இரண்டு உறுப்பினர்கள்,
- காங்கிரசுக்கு ஒரு உறுப்பினர்,
- திமுகவுக்கு மூன்று உறுப்பினர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஜூன் 5 கடைசி நாள்.
வாபஸ் பெற கடைசி நாள் ஜூன் 8.
மாநிலங்களவைத் தேர்தல்: 6 பதவிகளுக்கு வேட்பாளர்கள் யார்?: தமிழக கட்சிகளில் பரபரப்பு
மாநிலங்களவையில் மொத்தம் 229 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 18 பேர் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இடம் பெற்றுள்ளனர்.
கட்சிகளின் பலம்:
தற்போது பேரவையில் உள்ள 234 உறுப்பினர்களில் கட்சி வாரியாக பலம்:
- தி.மு.க. – 95;
- அ.தி.மு.க. – 61;
- காங்கிரஸ் – 34;
- பா.ம.க. – 18;
- மார்க்சிஸ்ட் – 9;
- இந்திய கம்யூனிஸ்ட் – 6;
- ம.தி.மு.க. – 6;
- விடுதலைச் சிறுத்தைகள் – 2;
- தே.மு.தி.க. -1;
- சுயேச்சை 1;
- நியமன உறுப்பினர் 1;
- பேரவைத் தலைவர் -1.
(மதுரை மேற்குத் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.வி. சண்முகம் காலமானதால், அத்தொகுதி காலியாக உள்ளது.)
காங்கிரஸில் கிடைக்கக் கூடிய ஓர் இடத்தில் அக்கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட
- பி.எஸ். ஞானதேசிகனே நிறுத்தப்படலாம்.
- அல்லது ஜி.கே. மூப்பனாரின் சகோதரர் ஜி.ஆர். மூப்பனார்,
- முன்னாள் மத்திய அமைச்சர்கள் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்,
- ஜெயந்தி நடராஜன்,
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி போன்றவர்களில் யாராவது ஒருவருக்கு வாய்ப்புத் தரப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
- மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் விரைவில் முடிய உள்ளது. எனவே, அவருக்கோ,
- தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லிக்கோ
கூட இந்த இடத்தை காங்கிரஸ் மேலிடம் அளிக்கலாம்.
தி.மு.க.வைப் பொருத்தவரை, தனக்குக் கிடைக்கும் 3 இடங்களில் ஒன்றை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு அல்லது அக்கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு விட்டுத் தர எண்ணி உள்ளது.
எஞ்சிய 2 இடங்களில்
- அழகிரி அல்லது அவர் சுட்டிக் காட்டும் நபர்,
- கனிமொழி,
- டி.கே.எஸ். இளங்கோவன்,
- திருச்சி சிவா,
- டாக்டர் கே.பி. ராமலிங்கம்,
- தில்லியில் உள்ள தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன்,
- முன்னாள் அமைச்சர்கள் அ. ரகுமான்கான்,
- எஸ்.பி. சற்குணபாண்டியன்,
- இந்திரகுமாரி,
- கோவை மு. ராமநாதன்,
- சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் சரவணன்,
- புகழேந்தி,
- ஜெ. அன்பழகன்,
- தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிபவர்களில் ஒருவரான கே.பி.கே. குமரன்
போன்றவர்களில் யாராவது இருவருக்கு வாய்ப்புத் தரப்படலாம்.
அ.தி.மு.க.வைப் பொருத்தவரை
- சசிகலா அல்லது அவர் சுட்டிக் காட்டும் ஒருவர்,
- கட்சியின் அவைத் தலைவர் இ. மதுசூதனன்,
- முன்னாள் அமைச்சர்கள் டி.எம். செல்வகணபதி,
- எஸ். முத்துசாமி,
- நயினார் நாகேந்திரன்,
- தளவாய் சுந்தரம்,
- கட்சி நிர்வாகி ஆதிராஜாராம்
உள்ளிட்டோரில் யாராவது இருவர் நிறுத்தப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
====================================================
காங்கிரஸில் மீண்டும் கோஷ்டிப் பூசல்
பா. ஜெகதீசன்
சென்னை, மே 17: கடலில் அலைகள் ஓயாது; அதைப் போல, தமிழ்நாடு காங்கிரஸில் கோஷ்டிப்பூசல் தீரவே தீராது.
இதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், தற்போதைய மாநிலங்களவைத் தேர்தல் அறிவிப்பு காங்கிரஸில் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இத்தேர்தலில் காங்கிரஸýக்குக் கிடைக்கக் கூடிய ஒரே ஓர் இடத்தில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் அக்கட்சியினர் இரு அணிகளாகப் பிளவுபட்டு நிற்கின்றனர்.
பழைய த.மா.கா. அணியினரில் யார் நிறுத்தப்பட்டாலும், அவர்களை எதிர்ப்போம் என்று “தொடர்ந்து காங்கிரஸிலேயே இருந்து வரும் அணி’யைச் சேர்ந்தவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
தங்களது எதிர் அணியைச் சேர்ந்தவர்கள் நிறுத்தப்பட்டால், தாங்கள் எதிர்க்கப் போவதாக பழைய த.மா.கா. அணியினர் பதிலுக்குக் கூறி உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 பேரைத் தேர்ந்தெடுக்க ஜூன் 15-ல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவை உறுப்பினர்கள் வாக்களித்து இந்த 6 பேரைத் தேர்ந்தெடுப்பார்கள்.
தற்போது பேரவையில் காங்கிரஸýக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் நிச்சயம் ஒரு பதவி அக்கட்சிக்கு கிடைக்கும்.
வாய்ப்பு கேட்பவர்கள்: அந்த இடத்தில் மீண்டும் போட்டியிட தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடியும் நிலையில் உள்ள பி.எஸ். ஞானதேசிகனுக்கே வாய்ப்பு தர வேண்டும் என்று பழைய த.மா.கா.வினர் கட்சி மேலிடத்திடம் கேட்டுள்ளனர்.
ஜி.கே. மூப்பனாரின் சகோதரர் ஜி.ரங்கசாமி மூப்பனார், சட்டப் பேரவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் போன்றவர்களுக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனை இத்தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று கட்சியின் ஒரு பிரிவினர் மேலிடத்திடம் கேட்டுள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமிக்கு இப்பதவி தரப்பட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரியுள்ளனர்.
இரு அணிகளின் மோதல்: ஏற்கெனவே, சட்டப் பேரவையில் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் டி. சுதர்சனத்தின் தலைமையில் பழைய த.மா.கா.வினரும், மூத்த நிர்வாகி போளூர் வரதனின் தலைமையில் “தொடர்ந்து காங்கிரஸிலேயே இருந்து வருபவர்களும்’ இரு அணிகளாகப் பிரிந்து நின்று, ஒருவருக்கு ஒருவர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். பேரவையின் பட்ஜெட் தொடர் கூட்டம் நிறைவடைந்த திங்கள்கிழமை கூட இரு அணியினரும் மோதிக் கொண்டனர். பேரவைக் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக சுதர்சனம் எடுத்த நிலையை வரதன் எதிர்த்தார். வரதனுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் சில விளக்கங்களை சுதர்சனம் அளித்தார்.
இறுதியில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் கடிதத்தை சுதர்சனத்திடம் வரதன் அளித்தார். அக்கடிதத்தில் 16 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு எக்காரணம் கொண்டும் பழைய த.மா.கா.வினரை நிறுத்தக் கூடாது என்பதைக் கட்சியின் அகில இந்திய மேலிடத்திடம் வலியுறுத்துவோம். அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கி விட்டோம். விரைவில் மேலிடத்தைச் சந்திப்போம் என்று “தொடர்ந்து காங்கிரஸிலேயே இருந்து வரும் அணி’யினர் தெரிவித்தனர்.
==========================================================
மாநிலங்களவை இந்திய கம்யூ. வேட்பாளர் து.ராஜா?
கோவை, மே 17: மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் ஓர் இடத்தில் அக்கட்சியின் தேசியச் செயலர் து.ராஜா (50) நிறுத்தப்பட உள்ளார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பொதுத் தேர்தலின்போது நாகப்பட்டினம் தொகுதியை இவருக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டது. திமுக வெற்றி பெற்ற தொகுதி என்பதால், திமுக தக்கவைத்துக் கொண்டது. இதனால், போட்டியிடும் வாய்ப்பு ராஜாவுக்குக் கடந்த முறை கிடைக்கவில்லை.
சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை விடக் கூடுதல் தொகுதிகள் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டன. இதனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட மன வருத்தத்தைப் போக்க, மாநிலங்களவையில் காலியாகும் இடத்தில் ஒன்றை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்க திமுக முன்வந்தது. இந்நிலையில், அக் கட்சியின் தேசியச் செயலர் ராஜா வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது. ராஜாவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
கட்சியில் அகில இந்தியப் பொதுச்செயலர் ஏ.பி.பரதனுக்கு அடுத்த நிலையில் உள்ளவர் ராஜா. காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருப்பவர்.
தமிழகத்தைச் சேர்ந்த ராஜா தேசிய அரசியலில் இருப்பதால், அவரை கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு அனுப்புவது அவசியம் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கருத்து நிலவுகிறது.
கட்சியினர் விரும்பிக் கேட்டுக் கொண்டபோதும் வயது, உடல்நிலையைக் கருத்தில்கொண்டு கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட ஆர்.நல்லகண்ணு ஒப்புக் கொள்ளவில்லை. இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என அவர் தெரிவித்ததால், கே.சுப்பராயன் கோவை மக்களவைத் தொகுதியில் நிறுத்தப்பட்டார்.
தமிழக வரலாற்றில் கல்யாணசுந்தரத்துக்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
bsubra said
மாநிலங்களவைத் தேர்தல்: யார் “கை’ ஓங்கும்?
சென்னை, மே 19: மாநிலங்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து தங்கள் கட்சிக்குக் கிடைக்கக் கூடிய ஓர் இடத்தைக் கைப்பற்றுவதற்கான உச்சக்கட்ட பலப் பரீட்சையில் காங்கிரஸில் உள்ள அணிகள் ஈடுபட்டுள்ளன.
மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தலைமையிலான பழைய த.மா.கா. அணியினரும், தொடர்ந்து காங்கிரஸிலேயே இருந்து வரும் அணியினரும் இதற்காக தில்லியில் முகாமிட்டு, கட்சியின் மேலிடத் தலைவர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு ஆறு பேரைத் தேர்ந்தெடுக்க ஜூன் 15-ல் தேர்தல் நடைபெறுகிறது. சட்டப் பேரவை உறுப்பினர்கள் வாக்களித்து இந்த ஆறு பேரைத் தேர்ந்தெடுப்பார்கள்.
தற்போது பேரவையில் காங்கிரஸýக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் நிச்சயம் ஓர் இடம் அந்தக் கட்சிக்கு கிடைக்கும்.
அனல் கக்கும் எதிர்ப்பு: இந்தத் தேர்தலில் பழைய த.மா.கா. அணியைச் சேர்ந்தவர் நிறுத்தப்பட்டால், அவரை நிச்சயம் எதிர்ப்போம்; தோற்கடிப்போம் என்று “தொடர்ந்து காங்கிரஸிலேயே இருந்து வரும் அணி’யைச் சேர்ந்தவர்கள் போளூர் வரதனின் தலைமையில் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
வரும் ஜூலையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிய உள்ள பி.எஸ்.ஞானதேசிகனையே மீண்டும் வேட்பாளராக நிறுத்துவதற்கான முயற்சியை பழைய த.மா.கா. அணியினர் மேற்கொண்டுள்ளனர்.
சட்டப் பேரவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பாரமலை போன்றவர்கள் தங்ளுக்கு அந்த வாய்ப்பைத் தர வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளனர்.
தில்லியில் காங்கிரஸ் அலுவலகம், சோனியாவின் இல்லம் ஆகிய இடங்களில் உண்ணாவிரதம் இருக்காத குறையாக எஸ்.ஆர்.பி. தவம் இருக்கிறார்.
கிருஷ்ணசாமியா? ஜெயந்தியா?: அகில இந்திய அளவில் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் உள்ளார்.
தனக்கு இந்த முறை எப்படியும் இப்பதவி கிடைத்தே தீர வேண்டும் என்று கடந்த ஓராண்டாகவே காங்கிரஸ் தலைமையை அவர் வலியுறுத்தி வருகிறார். கட்சிப் பொருளாளர் மோதிலால் வோராவின் பரிபூரண ஆசி அவருக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரப்பட வேண்டும். அப்படித் தரப்பட்டால், கட்சிக்காக இன்னும் சிறப்பாக அவர் பணியாற்ற முடியும். கட்சிக்கும் உரிய கெüரவம் கிடைக்கும் என்று கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்களும், தொடர்ந்து காங்கிரஸிலேயே இருந்து வரும் அணியினரும் கூறுகின்றனர்.
அதேநேரத்தில், கிருஷ்ணசாமியை எதிர்க்கும் அணியினரோ, “மகனுக்கு எம்.எல்.ஏ. பதவி, தந்தைக்கு எம்.பி. பதவியா? கிருஷ்ணசாமி சார்ந்துள்ள சமுதாயத்தில் அவரை விட்டால், வேறு யாருமே இல்லையா? கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட காலங்களில் அவர் புரிந்த சாதனை என்ன? இந்திரா காந்தியை எதிர்த்து அர்ஸ் காங்கிரஸýக்குப் போனவர் தானே இவர்?’ என அவரது எதிர்க் கோஷ்டியினர் கேட்கின்றனர்.
ஜெயந்தி நடராஜன் ஏற்கெனவே பதவிகளை வகித்தவர். இவர்களைப் போன்ற பழைய தலைவர்களை விட்டால் கட்சியில் யாருமே இல்லையா? இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புத் தரப்படக் கூடாதா என்கிற எதிர்ப்புக் கேள்வியும் காங்கிரஸ் வட்டாரங்களில் எழுப்பப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தில்லியில் முகாமிட்டு, கட்சியின் மேலிடத் தலைவர்களான ஆஸ்கர் பெர்னாண்டஸ், மார்கரெட் ஆல்வா, சோனியாவின் செயலர் ஜார்ஜ் போன்றவர்களிடம் தனக்கு ஆதரவைத் திரட்டி வருகிறார்.
கட்சியில் எத்தகைய வாய்ப்பும் தரப்படாமல் உள்ள கட்சியின் இலக்கிய அணித் தலைவர் எஸ்.எம். இதாயத்துல்லா போன்ற சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தற்போது வாய்ப்புத் தரலாம் என சிறுபான்மைச் சமுதாயத்தினர் யோசனை தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை கிருஷ்ணசாமிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்குமானால், தனக்கு கட்சியின் மாநிலத் தலைவர் பதவியைப் பெறுவதற்கான முயற்சியில் சுதர்சன நாச்சியப்பன் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் தில்லியில் காங்கிரஸின் நிர்வாகம் முழுக்க முழுக்க அகமது படேலின் கையில் உள்ளது. கட்சித் தலைமையின் நம்பிக்கைக்கு உரியவராகவும் அவர் உள்ளார். இந்தப் பின்னணியில் பார்த்தால், வாசனின் தலைமையிலான பழைய த.மா.கா. அணியினருக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதாகக் கட்சியின் அகில இந்திய வட்டாரங்கள் தெரிவித்தன.