Empton Magan – Tamil Cinema Movie Review
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 19, 2006
எம் மகன்: விமர்சனம்
மனோஜ்கிருஷ்ணா
தந்தை -மகன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதையும், தந்தையின் கண்டிப்புக்குப் பின்னால் கரிசனம் இருக்கும் என்பதையும் பாசம், காதல், சென்டிமெண்ட், நகைச்சுவை கலந்து ஆபாசமில்லாமல் கூறியிருக்கும் நல்ல படம்.
நாசர் பலசரக்கு கடை வைத்திருப்பவர். அவருடைய மகன் கல்லூரியில் படிக்கும் பரத். கல்லூரி நேரம் போக மீதி நேரத்தில் கடையில் வேலை பார்க்கிறார். சின்ன சின்ன விஷயங்களைக் கூட பெரிதுபடுத்திப் பார்க்கும் தந்தையிடம் அடிக்கடி அடி வாங்குகிறார். இவ்வாறான சூழ்நிலையில் இருக்கும் பரத்துக்கு ஒரே ஆறுதல்… அவருடைய முறைப் பெண்ணின் நினைவுகளே. அவர் கோபிகா. ஆனால் நாசருக்கும், கோபிகாவின் தந்தைக்கும் நீண்ட கால குடும்பப் பகை. ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு குடும்பங்களும் சந்திக்க நேரிட… அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.
படத்தில் நாசர் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார். அனைவரையும் ஈர்க்கும் அற்புதமான நடிப்பாற்றல்! நாசர் பேசும் இயல்பான வசனங்கள், பாடி லாங்வேஜ் மூலம் அவர் காட்டும் விதவிதமான முக பாவனைகள், அவருடைய ஒப்பனை போன்ற அம்சங்கள் அவரை சிறந்த கலைஞர் என அடையாளம் காட்டுகின்றன.
பரத் நன்றாக நடித்திருக்கிறார். தன்னுடைய வளர்ச்சிக்குக் காரணமாக தந்தையின் உழைப்பை உதாரணமாகக் காட்டும்போதும், கோபிகாவுடனான காதல் காட்சிகளிலும் நல்ல நடிப்பு. நடனக் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் விறுவிறுப்பு காட்டியிருக்கிறார்.
பரத்தின் தாய் மாமனாக வரும் வடிவேலு படத்துக்கு பெரிய பலம். அவர் வரும் அனைத்துக் காட்சிகளிலும் கலகலப்பு. நகைச்சுவையிலும், குணச்சித்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். யதார்த்தமான நடிப்பில் மிளிர்கிறார் சரண்யா. கோபக்கார கணவருக்குத் தெரியாமல் தாய் வீட்டுக்குச் சென்று தன்னுடைய சொந்த பந்தங்களோடு மனம் விட்டுப் பேசும் காட்சிகள், சாமியாட்ட காட்சிகள் போன்றவை சிறப்பு. கோபிகா கிராமத்துப் பெண்களுக்கேயுரிய சுபாவங்களைத் தன்னுடைய நளினமான நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கிறார். பரத்தின் கல்லூரித் தோழியாக வரும் கஜாலாவின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி. தந்தையிடம் தோழமை உணர்வோடு அவர் பேசும் காட்சிகள் சிறப்பு. கோபிகாவின் தந்தையாக வரும் சண்முகராஜன், படத்தில் ஆங்காங்கே தலைகாட்டும் சின்னத் திரை கலைஞர்கள் ஆகிய அனைவரும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
பாஸ்கர் சக்தியின் வசனங்கள் ரசிகர்களைப் படத்தோடு ஒன்றச் செய்கின்றன. வித்யாசாகரின் இசையில் “கோலிகுண்டு’, “வர்றாரு’ பாடல்கள் ரசிகர்களைக் கவரும். பின்னணி இசையும் சிறப்பு.
படத்தை சலிப்பூட்டாமல் விறுவிறுப்போடு இயக்கியிருக்கிறார் “மெட்டி ஒலி’ திருமுருகன். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக உன்னிப்பாகத் தேர்ந்தெடுத்து அனைவரையும் நன்கு பயன்படுத்தியிருக்கிறார். சாவுக்குக் காத்திருக்கும் “என்னத்த’ கன்னையா சம்பந்தப்பட்ட காட்சிகளில் மனம்விட்டு சிரிக்கலாம். பல காட்சிகளில் “திரைக்கதை வித்தகர்’ கே.பாக்யராஜின் சாயல் தெரிகிறது. இடைவேளைக்குப் பிறகு சிறிய தொய்வு. சில பாடல்கள் படத்தின் வேகத்தைக் குறைப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
“எம் மகன்’ பெரிய திரையில் வலம் வருவோம் என்ற கனவோடு உலா வந்துகொண்டிருக்கும் சின்னத் திரை கலைஞர்களுக்கு “நம்மாலும் முடியும்’ என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார் திருமுருகன்.
மறுமொழியொன்றை இடுங்கள்