SC’s nod to Maharashtra for barrage across Godavari
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007
கோதாவரி ஆற்றுக்கு குறுக்கே மகாராஷ்டிரம் பாப்லி அணை கட்ட உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
புதுதில்லி, ஏப். 27: கோதாவரி ஆற்றுக்கு குறுக்கே பாப்லி அணை கட்டும் திட்டத்தை மகாராஷ்டிர அரசு தொடரலாம் என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த அணை கட்டுமானத் திட்டத்துக்கு ஆந்திர மாநிலம் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத் தக்கது.
கோதாவரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் வறட்சியால் வாடும் தெலங்கானா பகுதியில் குறைந்தது 5 கிராமங்களாவது பாதிக்கப்படும் என்று கூறி, கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ஆந்திர மாநிலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், டி.கே.ஜெயின் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், அணை கட்டும் பணியை மகாராஷ்டிரம் தொடரலாம் என இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால் அடுத்த உத்தரவு வரும் வரை அணையின் மதகை திறக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆந்திர மாநில அரசு தவிர, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல எம்.பி.கள் மகாராஷ்டிர அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
————————————————————————————–
சுற்றுச் சூழல் சீர்கேட்டால் நீர்மட்டம் பாதியாக குறைந்த நர்மதா நதி
ஓம்காரேஷ்வர், (ம.பி) ஜூன் 8: சுற்றுச் சூழல் சீர்கேட்டினாலும், காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதினாலும் நர்மதா நதியின் நீர்மட்டம் 50 சதவீதம் குறைந்துள்ளது.
“”நர்மதா நதியின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என மத்திய நிலத்தடி நீர் அமைப்பு எச்சரித்துள்ளதாக மத்தியப் பிரதேச பாஜக துணைத் தலைவர் அனில் தாவே நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
மலைகள் மற்றும் காடுகளினால் ஆண்டு தோறும் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வந்தது. ஆனால், தற்போது காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதால் மழையளவு மட்டுமின்றி நதியின் நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது.
1213கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த நதியில் 41 உபநதிகள் கலந்தாலும் வளர்ந்து வரும் சுற்றுச் சூழல் சீர்கேடானது, உயிரினங்கள் வாழ தகுதியில்லாத இடமாக மாற்றி விடக்கூடும்.
புண்ணிய நதியாக நர்மதா நதியை மக்கள் போற்றி வருகின்றனர். ஆனால், தினமும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களின் அன்றாட தேவைகளான குளியல், துவைத்தல் போன்ற பணிகளுக்கு இந்த நதியைப் பயன்படுத்துகின்றனர்.
நதியை அசுத்தமாக்காமலும், அதே சமயம் சுற்றுச் சூழல் சீர்கேடு அடையாமலும் நீரைப் பயன்படுத்தும்படி மக்களை கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
bsubra said
கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர்…
பழ. நெடுமாறன்
கடந்த 30ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுவின் கூட்டத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி கீழ்க்கண்ட கருத்தை வலியுறுத்திப் பேசினார்.
“மாநிலங்களுக்கிடையிலான நதிகளை நிர்வகிப்பதற்கான தற்போதைய நிறுவன நடைமுறை செயலிழந்து விட்டது. புதிய நிறுவன நடைமுறையை ஏற்படுத்தாவிடில் நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை என்பது தேசிய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடக்கூடும்’.
“எனவே நதிகளை தேசியமயமாக்குவது மட்டுமே இச் சிக்கலுக்கு நீண்டகாலத் தீர்வாக அமையும். மேலும் தென்னக நதிகளில் இருந்து தொடங்கி நதிநீர் இணைப்புகளுக்கான திட்டத்தை காலதாமதம் இன்றி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்’ என வலியுறுத்தினார்.
ஜூன் 3-ம் தேதி அவருடைய பிறந்தநாளையொட்டிய செய்தியிலும் நதிகளின் இணைப்புத் திட்டத்தை வலியுறுத்தியிருக்கிறார்.
இந்தியாவிலுள்ள நதிகளை இணைப்பது குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள நதிகளை இணைப்பதால் மிகப்பெரிய அளவுக்கு வேளாண்மைத் துறையில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி என்பது விரைவாக இருக்கும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால் நதிகள் இணைப்புப் பற்றிய கடந்த கால வரலாறு என்பது நமக்கு நம்பிக்கை அளிப்பதாக அறவேயில்லை.
இந்தியாவிலுள்ள நதிகளை இணைப்பது குறித்து கடந்த 163 ஆண்டுகாலமாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் 1834 ஆம் ஆண்டு இதற்கான திட்டம் ஏட்டளவில் உருவாக்கப்பட்டது. எனவே இத்திட்டம் செயல்வடிவம் பெறவேயில்லை.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இதற்கான திட்டவட்டமான முழுமையான முயற்சி என்பது 1971 – 72 ஆம் ஆண்டு மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த கே.எல். ராவ் காலத்தில் செயல்திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவருடைய பதவிக் காலத்தில் இத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்கான அறிகுறியே இல்லாமல் போயிற்று.
1982 ஆம் ஆண்டு தேசிய நீர்வள மேம்பாட்டு ஆய்வு நிறுவனம் என்ற பெயரில் இந்திய அரசு ஓர் அமைப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் உள்ள பல்வேறு நதிகளை இணைப்பதற்கான வரைவுத் திட்டத்தை இந்த அமைப்பு தீவிர ஆய்வுக்குப் பின் உருவாக்கியது.
மகாநதி – கோதாவரி இணைப்பு; பார் – தப்தி இணைப்பு; கேன் – பேட்லா இணைப்பு; கோதாவரி – கிருஷ்ணா இணைப்பு; மேற்கு நதிகள் – கிழக்கு நதிகள் இணைப்பு என்று திட்டங்கள் தயாரிக்கப்பட்டனவே தவிர அத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான எத்தகைய முயற்சியையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.
1980 ஆம் ஆண்டுவாக்கில் கங்கை – காவிரி இணைப்புத் திட்டத்திற்கு சுமார் ரூ.60 ஆயிரம் கோடி செலவு ஆகும் என்று மதிப்பிடப்பட்டது. இப்போது இந்த மதிப்பீடு இரு மடங்குக்கு மேல் உயர்ந்துவிட்டது. இத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரம் இல்லை என்று கூறுவதைவிட அதற்கான மனோதிடம் மத்திய அரசுக்கு இல்லை என்றுதான் கூற வேண்டும்.
நீர் வளம் நிறைந்த மாநிலங்கள் தங்களின் உபரிநீரை நீர்ப்பற்றாக்குறை மாநிலங்களுக்குப் பகிர்ந்து கொடுக்க முன்வர மறுக்கின்றன. நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு இந்த மனப்போக்கு பெரும் எதிராக உள்ளது.
பல்வேறு மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகளின் நீரில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அத்தனைக்கும் உரிமை உண்டு. குறிப்பாக அந் நதிகளின் கீழ்ப்பகுதியில் உள்ள மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் உண்டு என்கிற இயற்கை நியதியையோ அல்லது சர்வதேச நடைமுறைகளையோ ஏற்றுக்கொள்வதற்கு இந்த மாநிலங்கள் கொஞ்சமும் தயாராக இல்லை.
தண்ணீர்ப் பற்றாக்குறை மாநிலமான தமிழகத்தில் ஓடிவரும் நதிகளான காவிரி, பாலாறு போன்றவை தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் உற்பத்தியாகின்றன. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓடும் வைகை, கேரளத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி உள்ளது.
காவிரி நதிநீர்ப் பிரச்னை 40 ஆண்டுகாலமாக நீடிக்கிறது. உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளை மதித்து நிறைவேற்றுவதற்கு கர்நாடகம் பிடிவாதமாக மறுக்கிறது.
இந்தியாவின் பிரதமராக ஜவாஹர்லால் நேரு இருந்தபோது பல மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகளின் நீரைப் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்படலாம் என்பதை உணர்ந்து 1956 ஆம் ஆண்டு நதிநீர் தாவா சட்டம் மற்றும் நதிநீர் வாரியச் சட்டம் என இரண்டு சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்.
மாநிலங்களுக்கிடையே எழும் நதிநீர்ப் பிரச்னைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்ப்பதற்கு முடியாமல் போனால் நடுவர் மன்றத்தை அமைத்து அதன் தீர்ப்பைப் பெறுவதற்கு நதிநீர் தாவா சட்டம் வழிசெய்கிறது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மதிக்கப்படாமல் போனால் சம்பந்தப்பட்ட நதிநீரை ஆளுமை செய்வதற்காக நதிவாரியம் அமைப்பதற்கு இரண்டாவது சட்டம் வழிவகுக்கிறது.
இந்திய அரசியல் சட்டத்தின் 262-வது பிரிவுக்கு இணங்க இந்த நதிநீர் வாரியச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச் சட்டத்தின் கீழ் பிரச்னைக்குரிய நதிநீர் நிர்வாகத்தை ஏற்று நடத்த நதிநீர் வாரியம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
ஆனால் இந்தச் சட்டத்தின் கீழ் கடந்த 51 ஆண்டுகாலமாக எந்த நதிநீர் பிரச்னையிலும் நதிநீர் வாரியம் அமைக்கப்படவில்லை. இதுவரை பதவியில் இருந்த மத்திய அரசுகள் எதுவும் இச் சட்டப்பிரிவை பயன்படுத்தத் துணியவில்லை.
1971 ஆம் ஆண்டு முதல் மத்திய ஆட்சியில் எந்தக் கட்சி பதவியில் இருந்தாலும் அந்தக் கட்சியுடன் தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ தொடர்ந்து கூட்டணி வைத்துள்ளன. 1987ஆம் ஆண்டுக்குப்பிறகு மத்திய ஆட்சியில் தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வின் பிரதிநிதிகள் தொடர்ந்து அமைச்சர்களாகப் பதவி வகித்து வந்துள்ளனர். ஆனாலும் 1956ஆம் ஆண்டு நதிநீர் வாரிய சட்டத்தைப் பயன்படுத்தி காவிரிப் பிரச்னையில் நதிநீர் வாரியம் அமைக்க வேண்டும் என்று வற்புறுத்திப் பெற இரு கழகங்களும் முற்றிலுமாகத் தவறிவிட்டன.
முல்லைப் பெரியாறு பிரச்னையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க கேரளம் மறுத்தபோது, அதை மத்திய அரசு கண்டிக்கவோ அல்லது வேறு நடவடிக்கை எடுக்கவோ முன்வரவில்லை. பாலாற்றில் சட்டவிரோதமான முறையிலும் தமிழகத்தின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் அணை கட்டுவதற்கு ஆந்திர அரசு செய்யும் முயற்சிகளைத் தடுக்க மத்திய அரசு முன்வரவில்லை.
மேலே கண்ட மூன்று நதிநீர்ப் பிரச்னைகளும் தமிழகத்தின் எதிர்காலத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்போகும் பிரச்னைகளாகும். இதற்காக மத்திய அரசை வற்புறுத்தியோ அல்லது போராடியோ நமது உரிமைகளை நிலைநாட்டவேண்டி தமிழக அரசு பிரச்னையைத் திசை திருப்பும் வகையில் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது.
நதிகள் இணைப்புத் திட்டத்தை உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அண்மையில் தில்லி சென்ற தமிழக முதல்வர், பிரதமரிடம் வலியுறுத்தி இருக்கிறார். முற்றிலும் பொருத்தமற்ற வேளையில், பொருத்தமற்ற கோரிக்கையை வலியுறுத்துவது திட்டமிட்டுப் பிரச்னையைத் திசை திருப்புவதாகும்.
நதிகள் இணைப்பு என்பது 163 ஆண்டுகாலமாகத் தொடர்ந்து பேசப்பட்டு வரும் ஒரு பிரச்னையாகும். இது நிறைவேறுவதற்கான அறிகுறி நமது கண்களில் தென்படவேயில்லை. இன்னும் 100 ஆண்டுகள் கழித்தாலும் இத் திட்டம் நிறைவேறுமா என்பது ஐயத்திற்குரியது. அப்படியே நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்யப்பட்டாலும் அதற்குத் தேவையான நிதி வசதியோ ஒருமைப்பாட்டுணர்வோ நம்மிடம் இல்லை. சரி. அது வருகிறபோது வரட்டும்.
இப்போது நமது உடனடித் தேவை காவிரி, பாலாறு, முல்லைப்பெரியாறு பிரச்னைகளுக்கு உரிய தீர்வு விரைவில் காணப்பட வேண்டும் என்பதுதான். அதை வலியுறுத்தாமல் நதிகள் இணைப்பை தமிழக முதல்வர் வலியுறுத்தியிருப்பது இயலாமையின் வெளிப்பாடே ஆகும்.
காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு பிரச்னைகள் இப்போது தமிழகத்தின் முன் உள்ள தலையாய பிரச்னைகள் ஆகும். தமிழகத்தில் உள்ள மூன்றில் இரு பங்கு மாவட்டங்கள் அதாவது 20 மாவட்டங்கள் இந்த மூன்று ஆறுகளின் மூலம் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆறுகளின் பிரச்னை உடனடியாகத் தீர்க்கப்படாவிட்டால் இந்த மாவட்டங்கள் வறட்சிப் பகுதிகளாக மாறும் அபாயம் உள்ளது.
நீருக்காகப் பிற மாநிலங்களை எதிர்பார்த்து நிற்கும் தமிழகம் உணவுக்காகவும் பிற மாநிலங்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய அவல நிலை உருவாகும்.
உடனடியாகத் தீர்க்க வேண்டிய ஆற்று நீர்ப் பிரச்னைகளைத் தீர்க்க முடியாமல் போகுமானால் பெரும் நெருக்கடியை தமிழகம் சந்திக்க நேரிடும். ஆனால் இதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தமிழக முதல்வர் கருணாநிதி, நதிகளின் இணைப்பு பற்றிய கனவுத் திட்டத்தைப் பற்றிப் பேசித் தனது பொறுப்பைத் தட்டிக் கழித்திருக்கிறார்.
கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர் வானத்தைக் கீறி வைகுந்தத்துக்கு வழிகாட்ட புறப்பட்டிருக்கிறார்.