Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஏப்ரல் 1st, 2007

Dadaism, Tamil Nadu, Politics, Rowdy, MLAs, Election Violence – Kalki

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 1, 2007

Kalki 01.04.2007

தாதாக்களின் பிடியில் தமிழ்நாடு

சென்னைக்கு அருகே உள்ளது மதுரவாயல். கடந்த வருடம் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அந்த ஏரியாவில் நடந்த ரவுடித்தனத்தின் காரணமாக, இரண்டு நாட்கள் மக்கள் யாரும் சுதந்திரமாகத் தெருவில் நடமாட முடியவில்லை. கடைகள் மூடப்பட்டு, பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. அந்த அளவுக்கு மக்கள் பயமுறுத்தப்பட்டனர்.

மற்றொரு சம்பவம். சென்னையின் வடக்குப் பகுதியில்
திருவொற்றியூரையொட்டியுள்ள மீனவர் கிராம மக்கள், தேர்தல் முடிந்தவுடன் நடந்த வன்முறை வெறியாட்டத்தில், உயிருக்குப் பயந்து வெளியூர்களுக்கு ஓடினார்கள். ‘‘தி.மு.க. அமைச்சரும் அவரது சகோதரர்களும் எங்களை மிரட்டுகிறார்கள்’’ என்று அந்த ஊர் சார்பாக, வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றக் கதவைத் தட்டினார். அண்மையில் ஆளும் கட்சிப் பிரமுகர்கள் தூத்துக்குடியில் நடத்திய கடை அடைப்பில் வியாபாரிகள் ஆதரவு கொடுக்காததால் கடைகள் உடைக்கப்பட்டன. ரவுடித்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பதினைந்தே நாட்களில் அம்பத்தூர் அ.தி.மு.க. செயலாளர் ரவி என்பவர் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

அடுத்து, திருவள்ளூரில் தே.மு.தி.க.வைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் வெட்டப்பட்டார். தி.மு.க.வைச் சேர்ந்த ஜோதி ராஜேந்திரன் என்பவர் நெய்வேலியில் படுகொலை செய்யப்பட்டார்.

தென்காசியில் இந்து முன்னணிப் பிரமுகர் குமார் பாண்டியன் வெட்டிக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அதே இடத்தில் த.மு.மு.க.
பிரமுகர் மைதீன் சேட் வெட்டப்பட்டார். இப்போது தென்காசி பதற்றமாக ஆகிவிட்டது.

அரசியல் விரோதம் காரணமாக சில கொலைகள் நடந்திருந்தாலும், இந்தக் கொலைகளைச் செய்வதற்கு ரவுடிப் படைகளையே நாடுகிறார்கள்
அரசியல்வாதிகள். இந்த ரவுடிப் படைகளுக்கு அரசியல்வாதிகளின் தயவும் அவ்வப்போது தேவைப்படுவதால், இரு தரப்பினருக்கும் நெருக்கம் உண்டாகி நட்பு ஏற்படுகிறது. இது பல சமூக விரோதச் செயல்களுக்கு வழி வகுக்கிறது. குற்றங்கள் அதிகரிக்கின்றன.

இதுபோன்ற கொலைகள் ஒரு பக்கம் இருக்க, ‘தொழில் போட்டி’ காரணமாக ரவுடிகள் பழிக்குப் பழியில் ஈடுபடுவதால் பல மோதல்கள். அம்பத்தூர் ரவுடி செந்தில்குமார் என்பவர் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். துரைப்பாக்கம் ரவுடி அசோக் வெட்டப்பட்டான். மண்ணிவாக்கம் சுகுமாரைப் போட்டுத் தள்ளிவிட்டார்கள். காவல் துறையும் தன் பங்குக்கு என்கவுண்ட்டர் நடத்தி நாகூர் மீரான், கொர கிருஷ்ணன், உருண்டை ராஜன், பங்க் குமார் போன்ற தாதாக்களைச் சுட்டுத் தள்ளியது.

‘‘தி.மு.க. ஆட்சியில், அதிக அளவில் குற்றங்கள்
கண்டுபிடிக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக நடைபெறும் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீடியாவில் வருவதால், ஏதோ இப்போதுதான் நடந்தது போன்ற தோற்றம் உருவாகிறது. ஜெ. ஆட்சியில் ஸ்டேஷனில் வழக்கே பதிவு செய்யாத நிலைதான் இருந்தது. திருவொற்றியூர் குப்பம் விவகாரத்தில் தி.மு.க. அமைச்சருக்கு எந்தப் பங்கும் இல்லை என்று உயர்நீதிமன்றம் நியமித்த குழு சொல்லியிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வினர் 36 பேர் வன்முறையில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். ஜெ.ஆட்சியில் தி.மு.க. பேரணியின்போது ரவுடிகள் மூலம் தாக்குதல் நடத்தியதை மறக்க முடியுமா?’’ என்று கேட்கிறார் தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன்.

அக்டோபர் உள்ளாட்சித் தேர்தலில் அரங்கேறிய வன்முறைக் காட்சிகள், கலைஞர் அரசுக்கு மிகுந்த அவப்பெயரைக் கொண்டு சேர்த்தது. உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து தமிழகமெங்கும் சங்கிலித் தொடராக வன்முறைகள்.

‘‘தி.மு.க. ஆட்சியில் அதிகாரத்தில் உள்ளவர்களின் வீட்டு வேலைக்காரர்கள் கூட போலீஸைத் தாக்குகிறார்கள். சமீபத்தில் ‘குடி’மகன் ஒருவரை ராயப்பேட்டை பெண் சப்-இன்ஸ்பெக்டர் பிடித்து ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்றார். ஆனால், அரசியல் தலைவர் ஒருவரின் மகன் வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவர், போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று அந்தப் பெண் சப்-இன்ஸ்பெக்டரை அடித்து, குடிமகனை விடுதலை செய்ய
முயன்றிருக்கிறார்! நிலைமை இப்படி இருக்கும்போது, தி.மு.க.வினர் தமிழ்நாடு முழுவதும் ரவுடித்தனம் செய்வதிலோ அல்லது சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதிலோ என்ன ஆச்சர்யம் இருக்கிறது?’’
என்கிறார் அ.தி.மு.க. பிரமுகரான க.சுப்பு. அம்மா ஆட்சியில் கட்சிக்காரர்கள் காவல் நிலையத்துக்குச் செல்லவே பயந்தார்கள் என்கிறார் இவர்!

தமிழகமெங்கும் கடந்த பத்து மாதங்களில் நடந்த கொலைகள், வன்முறைகள் ஆகியவற்றைப் பட்டியல் போடத் துவங்கினால், அது முடிவற்று நீண்டுகொண்டே போகும்.

சமூக விரோதிகளின் மோதல்களுக்குக் கள்ளச் சாராயமும் ஒரு காரணம். காய்ச்சுதல், விற்பது ஆகியவற்றைப் பொருத்த அளவில், நாட்டிலேயே மூன்றாவது மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது.

ஒரு பக்கம் பாலியல் தொடர்பான குற்றங்களும் பெருகி வருகின்றன. அண்மையில் கன்னட பிரசாத் பிடிபட்டு தினந்தோறும் செய்திகளில் அடிபட்டு வருகிறார். தவிர, தேச விரோதச் செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. விடுதலைப்புலிகளுக்கு இரும்பு உருளைகள் அனுப்ப முயன்றது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.

அம்பத்தூரில் இருந்து ஆந்திர நக்ஸலைட்டுகளுக்கு ராக்கெட் லான்ச்சர்கள் அனுப்பிக் கொண்டிருந்தது அம்பலமானது.

ஏதேனும் ஓர் இடத்தில் ரவுடிகளுக்குள் மோதலோ அல்லது கொலையோ நடக்கும் பட்சத்தில் அந்த ஏரியாவின் அமைதி
பாதிக்கப்படுகிறது. மக்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறார்கள். இவற்றில் தலை நுழைக்கும் ஆளும் கட்சிப் பிரமுகர்களால் மீடியாவுக்கு நல்ல தீனி கிடைக்கிறது! ‘‘ரவுடிகள் முன் கைகட்டி நிற்கிறது காவல்துறை’’ என்று அறிக்கை விடுகிறார் ஜெ.

‘‘காவல்துறை இன்னமும் தொழில் ரீதியாக மாற வேண்டும். அதில் உள்ள கறுப்பு ஆடுகள் வெளியேற்றப்பட வேண்டும். தமிழகம்
ஸ்ரீலங்காவின் அருகிலேயே இருப்பதால் தேச விரோத சக்திகளுக்குத் துணை போகும் நிலையும் இங்கே இருக்கிறது’’ என்று சொல்கிறார் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ்.

தமிழக காவல்துறை இயக்குநரான முகர்ஜி, இதற்கெல்லாம் என்ன
பதில் சொல்கிறார்?

‘‘2005-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2006-ல் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது மட்டுமல்லாமல் கண்டுபிடிப்பதும்
அதிகரித்திருக்கிறது. சில மீடியாக்கள்தான் சின்ன விஷயங்களைக் கூட ஊதிவிடுகின்றன.

2005-ல் 1365 கொலைகள் நடந்தன; 2006-ல் 1274 கொலைகள்தான் நடந்தன. நடந்த குற்றங்களில் கண்டுபிடிப்பு விகிதம் 88 சதவிகிதத்தைத் தொட்டிருக்கிறது. திருட்டு, கொள்ளையில் மீட்ட சொத்துக்களின் விகிதம் 78 சதவிகிதத்திலிருந்து 81 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. 2005-ல் 571 பாலியல் பலாத்காரங்கள்; 2006-ல் 457. இப்படிப் பார்த்தால் பெண்களுக்கெதிரான குற்றங்கள், சிறு திருட்டுக்கள், கொள்ளைகள் ஆகியவையும் குறைந்திருக்கின்றன. ரவுடித்தனம் முழுவதுமாக அடக்கப்பட்டிருக்கிறது. குண்டர்கள் சட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளே போடப்பட்டிருக்கிறார்கள். சமூக உரசலை உசுப்பிவிட்டு, அமைதிக்கு வேட்டு வைக்கும் பல பிரச்னைகளை தமிழக போலீஸ் மிக நுட்பமாகக் கையாண்டு சமாளித்திருக்கிறது. கன்னட பிரசாத் உட்பட பாலியல் ரீதியான குற்றங்களில் தொடர்புள்ள போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்திருக்கிறோம். இஸ்லாமியத் தீவிரவாதமும் கட்டுக்குள் இருக்கிறது. காவல்துறையின் இமேஜை உயர்த்தும் வகையில் அடிமட்டம் வரை உள்ள காவலர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. அரசியல் தலையீடு என்பது கீழ் மட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாமே தவிர, மேல் மட்டங்களில் சிறிதும் கிடையாது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது’’ என்று ஒரேயடியாக மறுக்கிறார் டி.ஜி.பி. முகர்ஜி.

– ப்ரியன்

Posted in booth capturing, Dadaism, Election, Kalki, Law, MLA, MP, Order, Police, Politics, Rowdy, Rowdyism, Tamil Nadu, TN, Violence, voter, Votes | Leave a Comment »