தமிழக போலீஸ் சட்டம் -“பரம ரகசியம்’
ஏ. தங்கவேல்
புதுதில்லி, மே 1: இந்தியாவில், தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டம் பிரபலமடைந்துவரும் இந்தக் காலகட்டத்தில், தமிழக அரசு உருவாக்கி வருவதாகக் கூறப்படும் போலீஸ் சட்டம், மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது!
தமிழக அரசு அதிகாரிகளைக் கேட்டால் இப்படித்தான் சொல்கிறார்கள்.
தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் மனித உரிமை அமைப்பின் மாநாட்டில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டபோது, மாநாட்டின் பிரதிநிதிகள் ஆச்சரியமடைந்தனர்.
ஓய்வு பெற்ற இரு காவல் துறை தலைவர்கள் பிரகாஷ் சிங் மற்றும் என்.கே. சிங் கடந்த 1996-ல் தாக்கல் செய்த பொதுநல மனுவின் அடிப்படையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உச்சநீதிமன்றம் ஓர் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, போலீஸ் அதிகாரிகளின் திறமையான செயல்பாட்டுக்காக மாநில பாதுகாப்பு கமிஷனை உருவாக்குதல், தகுதி அடிப்படையில் மாநில காவல் துறை தலைவர் உள்பட முக்கிய காவல் துறை அதிகாரிகளை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு பதவியில் நியமித்தல் உள்ளிட்ட ஏழு உத்தரவுகளை நீதிமன்றம் வெளியிட்டது.
அந்த உத்தரவுகளை நிறைவேற்ற இந்த ஆண்டு மார்ச் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. தமிழகம், ஆந்திரம் உள்பட பத்து மாநிலங்கள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பட்டியலில் உள்ளன.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், போலீஸ் சீர்திருத்தம் தொடர்பான உத்தரவுகள், மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளது. மேலும், புதிய போலீஸ் சட்டத்தை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந் நிலையில், தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் மனித உரிமை மாநாட்டில் போலீஸ் சீர்திருத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காவல் துறைத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழக காவல் துறையிலிருந்து யாரும் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.
தமிழகத்திலிருந்து, கோவை மனித உரிமை அமைப்பின் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான வி.பி. சாரதி கலந்துகொண்டார். தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ள புதிய போலீஸ் சட்டம் தொடர்பான தகவல்களைப் பெற, சென்னை தலைமைச் செயலகத்துக்குச் சென்றபோது தனக்கு நேர்ந்த அனுபவங்களை அவர் விவரித்தார்.
“”தமிழக அரசின் புதிய போலீஸ் சட்ட வரைவு நகலைப் பெறுவதற்காக மார்ச் 16-ம் தேதி சட்ட அமைச்சரை (துரைமுருகன்) அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். இந்தத் துறைக்குப் பொறுப்பேற்று ஒரு மாதம்தான் ஆகிறது என்று கூறிய அவர், மூத்த உதவியாளரை அழைத்து, எனது கோரிக்கை பற்றி கவனிக்குமாறு கூறினார்.
அந்த உதவியாளரோ, இது உள்துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட விஷயம் என்றார். “சட்ட வரைவு உங்கள் துறை தொடர்பானதுதானே’ என்று சுட்டிக்காட்டிய போது, “இந்த விஷயம் முதல்வரின் நேரடிப் பார்வையில் உள்ளது’ என்று சொல்லி கையை விரித்துவிட்டார்.
அடுத்து, சட்ட அமைச்சகத்தின் உதவிச் செயலரைச் சந்தித்தேன். போலீஸ் வரைவுச் சட்டம் “மிகவும் ரகசியமானது’ என்று கூறி, தகவல் தர மறுத்துவிட்டார். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்பதாகச் சொன்னபோது “முயற்சி செய்து பாருங்கள்’ என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்.
அவர்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் சொன்னபடி அவர்கள் புதிய போலீஸ் சட்டத்தைத் தயார் செய்திருக்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது” என்றார் சாரதி.
இந்தப் பிரச்சினையில், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாகவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு இயக்கம் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் சாரதி தெரிவித்தார்.