இந்தோனேசியாவுக்கு இந்திய சமையல் எண்ணெய் நிறுவனங்கள் சங்கம் எச்சரிக்கை
ஜகார்த்தா, ஏப். 5: சுத்திகரிக்கப்படாத ஆயிலுக்குப் பதிலாக சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சித்தால் பாமாயில் உள்பட அனைத்து சமையல் எண்ணெய்களின் இறக்குமதியையும் முற்றிலும் நிறுத்த வலியுறுத்துவோம் என இந்தோனேசியாவுக்கு இந்திய சமையல் எண்ணெய் நிறுவனங்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவுக்கு அதிகப்படியாக சுத்திகரிக்கப்படாத பாமாயிலை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு நிறுவனங்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்ற நோக்கோடு சுத்திகரிக்கப்படாத பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இந் நிலையில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் சுத்திகரிக்கப்படாத பாமாயில் ஏற்றுமதியை குறைத்துவிட்டு, சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலின் ஏற்றுமதியை அதிகரிக்க அந்நாட்டு அரசு முயற்சித்து வருகிறது. இதனால்தான் பாமாயில் இறக்குமதியை முற்றிலும் நிறுத்திவிட வலியுறுத்துவோம் என இந்திய சமையல் எண்ணெய் நிறுவனங்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
“இந்தோனேசியா, மலேசியா ஆகிய இரு நாடுகளும் இந்தியாவுக்கு அதிக அளவிலான பாமாயிலை ஏற்றுமதி செய்து வருகின்றன. மலேசியாவை விட இந்தோனேசியாதான் அதிகம் ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவுக்கு மலேசியா சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை ஏற்றுமதி செய்ய அதிக முனைப்பு காட்டுகிறது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இந்தியாவிற்கு தேவையில்லை’ என இந்திய சமையல் எண்ணெய் நிறுவனங்கள் சங்கம் இயக்குநர் மேத்தா தெரிவித்தார்.