Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஏப்ரல் 25th, 2007

Pakistan Govt agrees to hardline demands of madrasa

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 25, 2007

சர்ச்சைக்குரிய மதக் கல்வி நிறுவனங்களை மூட பாக். அரசுக்கு கோரிக்கை

இஸ்லாமாபாத், ஏப். 25: இஸ்லாமிய சட்டத்தை வலியுறுத்தும் மதக் கல்வி நிறுவனங்களை மூடவேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு பாகிஸ்தானில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இத்தகைய கல்வி நிறுவனங்கள் ஷிரியா சட்டம் (முஸ்லிம்கள் பின்பற்றவேண்டிய மதச்சட்டங்கள்) என்ற போர்வையில் பயங்கரவாதத்தை பரப்பி வருவதாகவும் அந்த அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன.

இது தொடர்பாக மகளிர் உரிமை அமைப்புகள், சிவில் சமூக அமைப்பு ஆகியவற்றின் ஆதரவாளர்கள் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் இஸ்லாமாபாதில் திங்கள்கிழமை நடந்த பேரணியில் பங்கேற்றனர். மகளிருக்கான ஜமியா ஹப்சா மதறஸô தீவிரவாதம், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும அதை மூடவேண்டும் என்றும் பேரணியில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தியதாக டான் பத்திரிகை வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.

ஜமியா ஹப்சா மதறஸô மாணவர்கள் சில வாரங்களுக்கு முன் 3 பெண்களை கடத்தியதுடன் விடியோ கடை ஒன்றுக்கும் தீவைத்துள்ளனர். இந்த மாணவர்கள் பொதுச் சொத்துகளையும் சேதப்படுத்துகின்றனர்.

பொது நூலகம் ஒன்றையும் இந்த மதறஸôவைச் சேர்ந்த மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்றும் பேரணியில் பங்கேற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Posted in clerics, Courts, Education, Government, HR, Human Rights, Hussain, Islam, Jamia Hasfa, Judge, Justice, Lal Masjid, Law, madrasa, Maulana Abdul Aziz, Maulana Abdul Rashid Ghazi, Muslim, Muslim League, Muslim League-Q, Order, Pakistan, PML-Q, radical, School, Sharia, Shariat, Shariath, Shia, Sunni, Surveillance | 2 Comments »

Blessed by a U.S. Official, China Will Buy 4 Nuclear Reactors

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 25, 2007

ரூ. 33,600 கோடியில் 4 அணு உலைகளை அமெரிக்காவிலிருந்து வாங்குகிறது சீனா

பெய்ஜிங், ஏப். 25: அமெரிக்காவிலிருந்து ரூ. 33,600 கோடி மதிப்பிலான 4 அதிநவீன அணு உலைகளை சீனா வாங்க உள்ளது.

தற்போது சீனாவில் 1970-ம் ஆண்டுகளில் உருவான அணுஉலைகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றைவிட தொழில் நுட்ப ரீதியிலும் பாதுகாப்பு அம்சங்களிலும், விலை அடிப்படையிலும் அமெரிக்காவிடம் வாங்க உள்ள அணு உலைகள் மேம்பட்டதாக திகழும்.

இதற்காக வெஸ்டிங்ஹவுஸ் எலெக்ட்ரிக் கம்பெனி என்ற நிறுவனத்துடன் சீனா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

இதன்படி அணுஉலைக்கான சாதனங்கள், இதர தேவைகள், தொழில் நுட்ப உதவி உள்பட எல்லா தொழில்நுட்பங்களையும் ஒப்படைக்க உள்ளது அமெரிக்க நிறுவனம். இதற்கான நடைமுறைகள் அனத்தும் மே மாதத்தில் முடிவடையும். தற்போதைய நிலவரப்படி 2013-ம் ஆண்டுக்குள் 4 அணு உலைகளில் முதலாவது தனது மின் உற்பத்தியை தொடங்கிவிடும் என்று சீனா டெய்லி பத்திரிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.

இதனிடையே, தமது அணு மின் சக்தி திட்டங்களுக்கு உள்நாட்டிலேயே தயாரான சொந்த தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் எரிபொருளை 2020 ம் ஆண்டுக்குள் பயன்படுத்த சீனா தீவிரமாக உள்ளது. தற்போது தனது அணு மின்திட்டங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்து சமாளித்து வருகிறது சீனா.

சொந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் எரிபொருள் தொழில்நுட்பத்துக்கு சாதகமாக அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்படும் அணு உலைகள் திகழும்.

இந்த தகவலை ஷாங்காயில் திங்கள்கிழமை நடந்த கருத்தரங்கு ஒன்றில் சீன அணுசக்தி ஆணைய தலைவர் சன் கின் தெரிவித்தார்.

நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதை வெகுவாக குறைக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது. நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல் மின்நிலையங்களால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசடைகிறது. எனவே, 2020க்குள் அணு மின் நிலையங்கள் மூலம் மின்சாரத்தை கணிசமாக உற்பத்தி செய்யவும் (40 மில்லியன் கிலோ வாட்) அது திட்டமிட்டுள்ளது. 2005ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்காகும்.

சீனாவின் முதல் அணு மின்நிலையம் கிழக்கு கடற்கரையில் உள்ள ஷேஜியாங் மாநிலத்தில் 1991ல் நிறுவப்பட்டது.

Posted in America, Atom, Beijing, Bombs, China, China National Nuclear Corp, Electric, Electricity, National Development and Reform Commission, Nuclear, Power, reactors, Technology, Toshiba, Uranium, US, USA, Washington, Westinghouse | Leave a Comment »

Discount carriers – Air India Express to fly direct to Trichy for Rs. 99

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 25, 2007

ரூ.99-ல் திருச்சிக்கு விமானம்: ஏர் இந்தியா சலுகை

சென்னையில் இருந்து திருச்சி மற்றும் மும்பைக்கு செல்லும் விமானங்களின் கட்டணத்தை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிரடியாகக் குறைத்துள்ளது.

இதன்படி சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்ல ரூ.99 கட்டணமாக வசூலிக்கப்படும். வரிகளுடன் சேர்த்து இந்த கட்டணம் ரூ 1099-ஆக இருக்கும்.

இதேபோல், சென்னையில் இருந்து மும்பைக்கு செல்ல கட்டணம் ரூ.299 வரிகளுடன் சேர்த்து ரூ.1299-ஆக கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த சலுகைக் கட்டண விமானம், சென்னையில் இருந்து ஒவ்வொரு வியாழக் கிழமை மதியம் 2.25 மணிக்குப் புறப்பட்டு மாலை 4.25 மணிக்கு மும்பையை சென்றடையும். வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் சென்னையில் இருந்து பகல் 12.10 மணிக்கு மும்பை செல்லும் விமானத்திற்கும் இந்த சலுகைக் கட்டணம் பொருந்தும்.

திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சென்னையில் இருந்து காலை 11.40 மணிக்கு திருச்சிக்கு புறப்படும் ஏர் இந்தியா விமானத்தில், சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு 1412 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம். இதுதவிர www.airindiaexpress.in என்ற இணையதளத்திலும் தகவல்கள் அறியலாம்.

ஏர் இந்தியா பயணச் சீட்டு விற்பனை மேலாளர் ஜே.வி.ஜே. சுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Aeroplanes, Air, Air India, Air India Express, Airlines, Cheap, Discount, Flight, GoAir, IndiGo, Price, Southwest, SpiceJet, Thiruchirappalli, Trichy | Leave a Comment »

Doctors reluctant to accept service in Rural Areas – Solutions, Analysis

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 25, 2007

எங்கே போகிறார்கள்?

கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள்தான் கிராம மக்களுக்கு, குறிப்பாக கிராமப் பெண்களுக்கு, இன்றியமையாத் தேவையாக இருக்கின்றன. மகப்பேறு, குழந்தைகளுக்கான தடுப்பூசி, காய்ச்சல் போன்ற சாதாரண நோய்க்கு மருத்துவம் ஆகிய எல்லாவற்றுக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தையே நம்பியிருக்கின்றனர்.

ஆனால், “”டாக்டர்கள் நகரங்களிலேயே பணியாற்ற விரும்புகின்றனர்; கிராமங்களுக்குச் சென்று பணியாற்ற விரும்புவதில்லை” என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் பேசும்போது குறிப்பிட்டார்.

கிராமங்களில் இந்த நிலைமை என்றால், நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை உள்ளது என்கிறார் சுகாதாரத் துறை செயலர். “”விருப்ப ஓய்வு கேட்கும் மருத்துவர்களையும் இதனால் விடுவிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், விழுப்புரம், தருமபுரி, திருவாரூர் ஆகிய இடங்களில் அரசு தொடங்கவுள்ள 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு 1000 டாக்டர்கள் தேவை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் 29 ஆயிரம் மாணவர்கள் மருத்துவர் பட்டம் பெற்று வெளியே வருகின்றனர். தமிழ்நாட்டில் 14 அரசு மருத்துவக் கல்லூரிகள், 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் மருத்துவர் பட்டம் பெறுகின்றனர். இருப்பினும்கூட, மருத்துவர்கள் கிராமங்களுக்குச் செல்ல மறுக்கிறார்கள். நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. அப்படியானால் பட்டம் பெறும் இளம் டாக்டர்கள் எங்கே போகிறார்கள்?

மேற்படிப்பு, வெளிநாட்டில் வேலை, தனியார் மருத்துவமனையில் வேலை, சொந்தமாக மருத்துவமனை நடத்துவது என இவர்கள் சிதறுண்டு போகிறார்கள். இந்தியாவில் மருத்துவச் சுற்றுலா மூலம் உருவாகியுள்ள மருத்துவ வணிகத்தை முழுஅளவில் பயன்படுத்திக் கொள்ள பல தனியார் மருத்துவமனைகள் ஆர்வம் காட்டுகின்றன. தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

இவர்கள் மருத்துவப் பட்டம் பெறுவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல வழிகளிலும் பெரும் பணத்தைச் செலவழிக்கின்றன. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழைகளிடத்தில்தான் இந்த மாணவர்கள் மருத்துவம் கற்கிறார்கள். ஆனால் அந்த மருத்துவத் திறன் ஏழைகளுக்கு கிடைக்காத சேவையாக மாறிவிடுகிறது.

எம்.பி.பி.எஸ். பட்டம் பெறும் இளம் டாக்டர்கள், தொழில் உரிமம் பெற வேண்டுமானால் அவர்கள் கிராமப்புறங்களில் ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்று 2008-09 ஆம் கல்வியாண்டு முதல் நிபந்தனை விதிக்க மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த நிபந்தனை அமலுக்கு வரும்போது தமிழகத்தின் 1417 ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் ஒரு டாக்டர் கிடைப்பது உறுதியாகிவிடும்.

இதனால் மட்டுமே மருத்துவ சேவை சிறப்பாக மாறும் என்று சொல்லிவிட முடியாது. அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக “கிளினிக்’ நடத்தக்கூடாது என்பதிலும் அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

அரசு மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டே தனியாக மருத்துவ ஆலோசனை அளிக்கும் சில மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகளின் அறுவைச் சிகிச்சைக் கூடத்தை வாடகைக்குப் பயன்படுத்தி, அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கட்டணம் பெற்று சிகிச்சை அளிப்பதாகப் புகார்கள் சொல்லப்படுகின்றன.

அரசு மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை, அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊக்கத்தொகை அளிக்கும் முறையை அமலுக்குக் கொண்டு வந்தால், அரசு மருத்துவர்கள் தனியாகச் செயல்படும் நிலைமையில் மாற்றம் ஏற்படும்.

Compulsory rural service required for Doctor graduation – Medical Education

State of MBBS – Analysis on Medical education

MBBS, BDS merit list released – Details, Statistics, Admission results

It is either MBBS or BE – Decide whether to be a Doctor or Engineer – Ponmudi

Engineering, Medical Professional courses Entrance Exams – Analysis, Options

Posted in Analysis, Anbumani, City, doctors, Health, Healthcare, Hospital, Hospitals, MBBS, MD, medical, Medicine, Nurse, Nurses, Op-Ed, professional, Rural, service, solutions, Suburban, Villages | 2 Comments »

Annie Raja – International Federation of Women

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 25, 2007

சர்வதேச மகளிர் சம்மேளன துணைத் தலைவராக இந்தியப் பெண் தேர்வு

புது தில்லி, ஏப். 25: சர்வதேச ஜனநாயக மகளிர் சம்மேளனத்தின் துணைத் தலைவர்களில் ஒருவராக, இந்திய தேசிய மகளிர் சம்மேளனத்தின் பொதுச் செயலர் ஆன்னி ராஜா (படம்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச சம்மேளனத்தின் 14-வது மாநாடு, வெனிசூலா தலைநகர் காரகாஸில் சமீபத்தில் நடைபெற்றது. அதில், இந்திய சம்மேளனத்தின் தலைவர் சாரதாமணி, ஆன்னி ராஜா, கிருஷ்ணா மஜும்தார், பி.வி. விஜயலட்சுமி, ஆந்திரத்தின் பஸ்யா பத்மா, கேரளத்தின் கமலா சதானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும், ஏழை மக்களைப் பாதிக்கும் தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவும் இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சர்வதேச சம்மேளனத்தின் தலைவராக பிரேசில் நாட்டைச் சேர்ந்த மர்கியா கேம்போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் ஆன்னி ராஜாவுடன், பாலஸ்தீனம், அங்கோலா, ஆர்ஜென்டீனா, சைப்ரஸ் நாடுகளின் பிரதிநிதிகள் துணைத் தலைவர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

Posted in activism, Angola, Annie Raja, Argentina, Brazil, Caracas, Chavez, Cyprus, Female, Feminism, Kamala Sathanathan, Krishna Mazumdar, Lady, Majumdar, Majumdhar, National Federation for Indian Women, Palestine, Pasya Padma, Sadhanandhan, Sadhananthan, Sarada mani, Saradha mani, Saradhamani, Sarathamani, Sathanandhan, Sathananthan, Vijayalakshmi, Vijayalakshmy, Women | Leave a Comment »

Amputee athlete aims for Olympics

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 25, 2007

உடல் ஊனமுற்றவர் உலக சாதனை படைத்துள்ளார்

பிறக்கும் போதே இரண்டு கால்களும் இல்லாமல் பிறந்த தென்ஆப்பிரிக்காவின்

ஆஸ்கர் பிஸ்டோரியஸ்
ஆஸ்கர் பிஸ்டோரியஸ்

ஆஸ்கர் பிஸ்டோரியஸ், உடல் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.

உடல் ஊனமுற்றோர் பிரிவில் 3 உலக சாதனை புரிந்துள்ள இவர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள வழக்கமான ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி எடுத்து வருகிறார். ஆனால் செயற்கைகால் பொறுத்திய ஒருவருக்கு பிற போட்டியாளர்களை விட அனுகூலங்கள் அதிகம் கிடைக்கிறது ஆகவே அவரை ஒலிம்பிக்சில் பங்கேற்க அனுமதிக்க கூடாது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

பிறந்த போதே முழங்காலுக்கு கீழ் இவருக்கு எலும்புகள் இல்லை. ஒரு வயதில் இவரது கால்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. ஆனால் இவர் தளரவில்லை கம்பிகள் பொறுத்தப்பட்ட நவீன செயற்கைக் கால்களைப் பொறுத்திக் கொண்டு களம் இறங்கினார்.

உடல் ஊனமுற்றோருக்கான பிரிவில் தற்போது மூன்று உலக சாதனைகளை இவர் படைத்துள்ளார். இது மட்டுமல்லாது, கடந்த மாதம் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா தேசிய போட்டிகளில் இவர் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

செயற்கை கால் பொறுத்தப்பட்டதன் காரணமாக, வீரரின் உயரம் அதிகமாகும், எனவே ஒடும் போதும் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொறு அடியும் சராசரியை விட அதிக நீளமாக இருகக்க் கூடும் என்று கூறப்படுவதை ஆஸ்கர் மறுக்கிறார். இவரது பயிற்சியாளரோ, ஆஸ்கர் பிறப்பிலேயே திறமைகள் அமையப் பெற்ற சேம்பியன் என்றார்.

உடல் ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக்சில் தங்கம் வென்ற இவர் அடுத்த ஆண்டு ஒலிம்பிக்சில் பதக்கம் பெற வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளார்.

ஆனால் இவர் ஓடும் விதம் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள சர்வதேச தடகள போட்டியாளர் சங்கம் இவர் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை தடை செய்யவதற்கான நடவடிக்கைகளில் தற்போது இறங்கியுள்ளது.

Posted in athlete, athletics, Gold, Olympics, Oscar, Paralympic, Pistorius, prosthetics, South Africa, World Cup | Leave a Comment »

Irama Subramanian – Anjali Notes

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 25, 2007

காலமானார் இராம. சுப்பிரமணியன்

சென்னை, ஏப். 25: தொல்காப்பிய எழுத்துப் படலத்துக்குப் புத்துரை நல்கிய இலக்கணக் கடல் பேராசிரியர் இராம. சுப்பிரமணியன் (80) சென்னையில் ஏப். 23-ம் தேதி காலமானார். அன்று மாலையே அவரது இறுதிச் சடங்கும் நடைபெற்றது.

அவருக்கு மனைவி, மகள், 3 மகன்கள் உள்ளனர்.

சென்னைத் தமிழ் வளர்ச்சி மன்றச் செயலர் நு.ர.ஆறுமுகம் உள்பட நூற்றுக்கணக்கான தமிழ்ப் புலவர்களை உருவாக்கியவர் அவர்.

Posted in Anjali, Biosketch, Faces, Grammar, Literature, Memoir, people, Scholar, Tamil, Tholkappiyam | Leave a Comment »

Interview with Narthaki Nataraj – Kalki

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 25, 2007

நர்த்தகி நடராஜ் உடனான சென்ற வார சந்திப்பின் தொடர்ச்சி…

‘‘லண்டன் பி.பி.ஸி.யில், ஒரு பரதக் கலைஞர் என்கிற முறையில், என்னைப் பேட்டி காண அழைத்தார்கள். எல்லாக் கேள்விகளுக்கும் எனக்குத் தெரிந்த ஓட்டை ஆங்கிலத்தில் சமாளித்துப் பதில் சொன்னேன். கடைசியாக ஒரு கேள்வி கேட்டார் அந்த நிருபர் : ‘நீங்கள் பரத நாட்டியக் கலைஞராகியிராவிட்டால் என்ன ஆகியிருப்பீர்கள்?’

பேட்டி காணப்படும் பலரிடம் கேட்கப்படக் கூடிய சராசரிக் கேள்விதான் இது. ஆனால் என் பதில் மட்டும் சராசரியானதல்ல…

‘பரதக் கலைஞராக உயர்ந்திராவிட்டால் மும்பை அல்லது கொல்கத்தாவில் விலைமாதாக இருந்திருப்பேன்’ என்று சொன்னேன். உண்மையும் அதுதான்!’’

பால் திரிபுக்குள்ளாகும் அனேகம் குழந்தைகளைப் போல் நர்த்தகியும் பெற்ற தாயால் வீட்டை விட்டு விரப்பட்டு வெளியேறியவர்தான். சிறிய வயதிலேயே சக்தி துணையாக வாய்த்ததால் இருவரும் சேர்ந்தே குடும்பம் ஏற்படுத்திய காயங்களையும் பள்ளிச் சூழல் இழைத்த அநீதிகளையும் தாங்கி வளர்ந்திருக்கிறார்கள். தங்களுக்குள் நிகழ்வது என்ன என்று புரிவதற்குள் இரக்கமற்ற, உயிர் உறிஞ்சும் வெளி உலகில் வந்து விழுந்து, திருநங்கைக் கூட்டத்தில் இணைந்து, அந்த வாழ்க்கை முறை தவறு என்ற விவேகம் இயல்பிலேயே இருந்ததால் அதிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். கலை ஆர்வம் இவர்களை தஞ்சையில் கிட்டப்பா பிள்ளையிடம் அழைத்துச் சென்றிருக்கிறது. கடுமையான சோதனைக்குப் பிறகே அவரும் இவர்களை சிஷ்யைகளாக ஏற்றிருக் கிறார். வெளியே தங்குவது நித்திய சோதனையாக இருக்கவே, வீட்டிலேயே அடைக்கலம் கேட்டு இந்த மாணவிகள் இறைஞ்ச, அவரும் ஏற்றுப் பாதுகாப்புத் தர, அதுவே அவர்களுடைய குருகுலவாச மாக இன்று அறியப்படுகிறது.

கிட்டப்பா பிள்ளை வஞ்சனையில்லாமல் வழங்கிய கலைக் கொடையும் நர்த்தகி, சக்தியிடம் இயல்பாகவே அமைந்திருந்த பக்தியும் அவர்களைச் சமூகத்தின் களைகளாக மாறாமல் காப்பாற்றியதுடன் மிக உயர்ந்த கலைஞர்கள் என்ற நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. நர்த்தகி மட்டுமே நடனக் கலைஞராக அங்கீகாரம் பெற்றாலும் சக்தி அவரது ஒப்பனை, அலங்காரம் வழிகாட்டல், விமர்சனம் அனைத்திலும் கலந்து நிற்கும் துணையாக விளங்குகிறார். மீடியா இன்று நர்த்தகியைக் கலைஞர் என்ற முறையிலேயே வெளிச்சப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால்…

‘’இன்னமும் எங்களுக்கு வாடகைக்கு ஒரு வீடு தர யாருமே யோசிக்கிறார்கள். கற்பகாம்பாள் அருகே, கலை மையங்கள் சூழ மயிலாப்பூரில் வசிக்கவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் நன்கு தெரிந்தவர்கள்கூட வீடு தர நாசூக்காக மறுக்கிறார்கள்- பொய்க் காரணங்கள் சொல்கிறார்கள். சமுதாய அங்கீகாரமும் மத்திய-மாநில அரசுகளின் அங்கீகாரமும் பெற்ற எங்களுக்கே இந்த கதி என்றால் திருநங்கைக் கூட்டத்தின் இதர சகோதரிகளுடைய கதி என்ன…?

பசியின் கொடுமைதான் அவர்களை அலங்கோலத்தில் தள்ளுகிறது என்பதை சமுதாயம் மறந்துவிடுகிறது. சிறு வயதில் உணர்வுரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதுகாப்புக் கிடைத்தால் அவர்கள் ஏன் இப்படிப்பட்டக் கூட்டத்தில் போய் விழப்போகிறார்கள்? புறக்கணிக்கப்பட்டு, காயப்படுத்தப்பட்டவர்கள் ஒன்று திரண்டால் நிகழக்கூடிய விபரீதம்தான் திருநங்கைக் கூட்டத்தினருக்கு மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் நடத்தையை நான் நியாயப்படுத்த முற்படவில்லை. ஆனால் இனியேனும் அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள் என்று கேட்கிறேன்.

தீராநோயின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி மட்டும் திருநங்கைகள் மீது அரசும் என்.ஜி.ஓ.க் களும் கவனம் செலுத்தினால் போதாது. இந்தக் கவனம், வளர்ந்து விபசார வலைக்குள் சிக்கிவிட்டவர்கள் மீது மட்டுமே விழும்.

விவரம் புரியாத வயதில் தனக்குள் நடக்கும் வினோதத்தையும், புரிந்துகொள்ள முடியாமல், பெற்ற தாய் உள்பட அனைவரின் புறக்கணிப்பையும் சமாளிக்க முடியாமல் உடைந்து சிதறும் இளம் திருநங்கைகளுக்கு என்ன செய்யப் போகிறோம்..?

முதலில் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஊட்டுங்கள். இந்தக் குழந்தைகளும் இறைவனின், இயற்கையின் சிருஷ்டி என்கிற உணர்வு பலத்தைக் கொடுங்கள். பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுங்கள். இப்படிப்பட்ட குழந்தைகளைப் பெரும்பாலும் அவர்கள்தான் முதலில் அடையாளம் காண்பார்கள். பெற்ற தாய் கூட ஆண் பிள்ளை என்பதாகவே கொண்டு, பெண்குழந்தைக்குத் தரக்கூடிய கவனத்தைத் தரமாட்டாள். ஆனால், அந்தப் பருவத்தில் திருநங்கைகளுக்குப் பெண்மையின் அரவணைப்பும் பாதுகாப்புமே ரொம்ப தேவைப்படுகின்றன. ஆண் உலகம் அவர்களை அச்சுறுத்தி சீண்டுகிறது.

இதெல்லாம் எப்போது, எப்படி மாறும் என்று யோசித்து மலைத்துப் போய் விடக்கூடாது. அரசு ஜி.ஓ.க்களும் விதிகளும் வெறும் புள்ளிகள்தான். அவற்றைப் பயன்படுத்தித் தப்பில்லாமல் கோலம் போட வேண்டியது சமுதாயம்தான். பொதுவாக எந்த மாற்றமும் அடிமட்ட மனிதர்களிடையே நிகழவேண்டும் என்பார்கள். ஆனால், இந்த விஷயத்தில் மட்டும் மனமாற்றம் மேல்தட்டு மக்களிடமிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். செல்வச் சீமான்கள் வீட்டுத் திருநங்கைகளுக்குக்கூட இன்று ஏழைகளின் குடிசைகளில்தான் இடமும் அங்கீகாரமும் கிடைக்கின்றன. அந்த அங்கீகாரம் ஆரோக்கியமானதாக எப்போதும் இருப்பதில்லை என்பதுதான் கொடுமை. ஆனால் அருவருப்போடு அடித்துவிரட்டாத இடத்தில் தானே திருநங்கைகள் அடைக்கலம் தேட முடியும்… இதை மாற்றுவதும் திருநங்கைகளை உயர்த்துவதும் சமுதாயத்தின் கையில்தான் இருக்கிறது.’’

திருத்தமாகப் பேசி முடிகிறார் நர்த்தகி. அவர் நாட்டியத்தின் அசைவுகளிலும் கை முத்திரைகளிலும் காணக்கூடிய திருத்தம் அவர் சிந்தனையில் பளிச்சிடுகிறது. நடனத்தின்போது அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளின் சத்திய ஒளி அவர் சொற்களிலும் வீசுகிறது.

– சீதா ரவி, சுகந்தி ஜி.பாரதி
படங்கள் : ஸ்ரீஹரி

– சஞ்சயன்

————————————————————————————–

From Thozhi.com


திருநங்கையர் நர்த்தகி நடராஜன், சக்தி பாஸ்கர் பங்கேற்ற இந்த நிகழ்வு திருநங்கையரின் உலகை அறிமுகப்படுத்தியது

– ந. கவிதா

கோவையில் மாதந்தோறும் காலச்சுவடு அறக்கட்டளை நடத்திவந்த ‘அற்றைத்திங்கள்’ நிகழ்ச்சி இந்த மாதத்திலிருந்து சென்னையில் நடைபெறுகிறது. 29.04.07 அன்று இந்நிகழ்வின் முதல் கூட்டம் புக்பாயிண்டில் தொடங்கியது. இதில் திருநங்கையர் நர்த்தகி நடராஜும் சக்தி பாஸ்கரும் கலந்துகொண்டு உரையாடினர்.

தமக்குள் உணர்ந்த பெண்மையை உன்னதமெனக் கொண்டாடி, அந்தப் பெண்மையை வெளிப்படுத்தும் வடிகாலாக நடனத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட திருநங்கையர் இவர்கள்.

பால்திரிபு நிலை, சமூகத்தின் ஏளனத்தையும் குடும்பத்தின் புறக்கணிப்பையும் தந்த நிலையிலும் துயரங்களைக் கடந்து லட்சியப் பயணத்தை மேற்கொண்ட இத்திருநங்கையரின் உரையாடல் அவர்களது வேதனைகளைவிட அவர்கள் அடைந்துவிட்ட இலக்கின் மனநிறைவை வெளிப்படுத்துவதாக இருந்தது.

ஆளற்ற மைதானமும் மரங்கள் சூழ்ந்த கண்மாய்க் கரையும், பழைய கோயில் மண்டபங்களும் இவர்களின் நடனத்தையும் அற்புதமான கனவுலகத்தையும் கண்டுகொள்ளும் அரங்குகளாக இருந்தன. கீற்றுக் கொட்டகையில் கடைசி ஆட்டம் சினிமா பார்த்துவிட்டுத் திண்ணையில் உறங்கிப்போவதை வழக்கமாகக் கொண்டிருந்த இவர்களின் ஆதர்ச நாட்டியக்காரர்களாக பத்மினியும் வைஜெயந்தி மாலாவும் இருந்தனர்.

விளையாட்டிலும் வீட்டிலும் புறக்கணிக்கப்பட்ட நர்த்தகிக்கு, அவரைப் போலவே புறக்கணிப்பிற்குள்ளான சக்தி தோழியாகக் கிடைத்தார். இவர்கள் இருவரும் சஞ்சரிக்கும் தனி உலகில், பாகுபாடு காட்டாத மனிதர்களும் பசித்தவர்களு்கு எப்போதும் உணவு கொடுத்துக்கொண்டே இருந்த இவர்களது வளமிக்க வீடும் இருந்தன.

முகபாவத்திலும் ஒப்பனை செய்யும் ஆர்வத்திலும் நடனத்திலும் இவர்களுக்கு இருந்த அளவில்லாக் காதல், குடும்பத்தினரின் வெறுப்பிற்கு இவர்களை ஆளாக்கியது. இது நர்த்தகியை வீட்டைவிட்டு வெளியேறச் செய்தபோது, வசதியான வீட்டில் வாழ்ந்த சக்தியும் அவருக்காக ஊரைவிட்டு வெளியேறினார். பல விதமான துயரங்களுக்குப் பிறகு, வைஜெயந்தி மாலாவிற்கு நடனம் கற்றுக்கொடுத்த கிட்டப்பா பிள்ளையிடம் நடனம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்தது.

பால்திரிபையும் வறுமையையும் பொருட்படுத்தாமல், வைரங்களைக் கொட்டித் தரும் மாணவிகளைப் போலவே இவர்களையும் பயிற்றுவித்த தஞ்சாவூர் கிட்டப்பா பிள்ளை, தஞ்சை நால்வரின் மார்க்கங்களைக் கற்றுத் தந்தார். நர்த்தகி ஒரே ஆண்டில் ஆறு வருடங்களில் முடிக்க வேண்டிய நடன மார்க்கங்களைக் கற்று, சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் தனது முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்.

‘எல்லா வேதனைகளின்போதும் ஏமாற்றங்களின்போதும் தாயாக, தோழியாக என்னை வழிநடத்திக்கொண்டிருக்கும் சக்தி பாஸ்கர்தான் காதலிலும் காமத்திலும் நான் சிக்கிவிடாதபடி வழிகாட்டி இன்றைய என் சாதனையை எட்டச் செய்தவள்’ என்றார் நர்த்தகி. சக்திதான் தனக்கு எல்லா சக்தியும் என்று தன் தோழியைப் பற்றிப் பெருமிதப்படுகிறார் அவர்.

நர்த்தகி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நடனத் துறையில் நான்கு ஆண்டுகள் விரிவுரையாளர், மத்திய அரசின் மானியத்தை இருமுறை பெற்றவர். தற்போது இவர் தமிழ்த் திரைப்படங்களில் நாட்டியம் குறித்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்.

சக்தி பாஸ்கர் இந்த உரையாடலில் மிகக் குறைவாகவே பேசினார். இருந்தாலும் சில வார்த்தைகளில் அரவாணிகளின் வாழ்வியல் துயரைப் புரியவைத்தார். அரவாணிகளைப் பொறுத்தவரை காதல் ஏமாற்றம் தரும் விஷயம் என்றார் அவர். பிச்சையெடுப்பதும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும்தான் பெரும்பான்மையினரின் வாழ்க்கையாக இருக்கும் சூழலில், லட்சியங்களை அடைய, அளவற்ற சுதந்திரமுள்ள அரவாணிகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வும் மனோதிடமும் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த உரையாடலுக்கு முன்பாக, பீஷ்மரைக் கொல்ல சிகண்டியாக உருவெடுத்த அம்பையின் கதையை நடன வடிவமைத்திருந்த நர்த்தகியின் அந்த நடனக் காட்சிகள் திரையிடப்பட்டன. அவரது நடனத்தில் எழுச்சியும் உணர்வுகளும் மிக்க முகபாவங்கள் அழகுற அமைந்திருந்தன.

சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடும் நடன வகைகளுள் ‘வீழ்ந்தாடல்’ எனும் வகை ‘பேடியாட’லைக் குறிப்பதுதான் என்று சொன்ன நர்த்தகியின் பேச்சு மிகுந்த புலமையோடு வெளிப்பட்டது. இறப்பதற்குள் ஒரு அரவாணியைத் தனக்குப் பின் உருவாக்குவதே தன் ஆசை என்றார் நர்த்தகி. நிகழ்விற்கு நூறு பேர்தான் வந்திருப்பார்கள் என்றாலும் அரங்கம் அவரது உரையில் கட்டுண்டிருந்தது என்று சொல்லலாம்.

பிறகு நர்த்தகி, பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் சிறப்பாகப் பதிலளித்தார். இறுதியாக எழுத்தாளர் தேவிபாரதி நன்றி கூறினார்.

Posted in Ali, Aravaani, Aravani, Artist, Arts, Biosketch, Classic, Classical, dancer, Faces, Interview, Kaalachuvadu, Kalachuvadu, Kalki, Narthaki, Nataraj, people, profile, Sakthi Baskar, Sakthi Bhaskar, Shakthi Baskar, Shakthi Bhaskar, Sigandi, Sikandi, Transgender | 1 Comment »