உயர்தனிச் செம்மொழியின் இனிய வருங்காலம்
மலையமான்
உலகில் ஒரு சில மொழிகளுக்கு எழுத்து வடிவமே இல்லை. அவை பேச்சு நிலையில் மட்டுமே உள்ளன. பல மொழிகள் இலக்கிய வளத்துடன் திகழ்கின்றன. இவற்றுள் ஆறு மொழிகள் மட்டுமே உயர்தனிச் செம்மொழி என்று போற்றப்படுகின்றன. இதில் தமிழும் ஒன்று.
காலத்தொன்மை, இலக்கிய வளமை என்ற இரண்டும் செம்மொழியின் அடித்தளப் பண்புகள் ஆகும். இவற்றைத் தவிர, உயர்ந்த கருத்துடமை, மரபுடைமை, உலகப் பொதுமைத்தன்மை உடைமை, எளிமை உடைமை, தெளிவுடைமை, நிலைபேறான பண்புடைமை, ஆழ்ந்த பொருளுடைமை முதலிய இயல்புகளைக் கொண்ட இலக்கியங்களை அம்மொழி பெற்றிருக்கும்.
செம்மொழியின் இலக்கணம் என்பதற்குரிய தன்மைகள் இதுவரை வரையறுக்கப்படவில்லை. எனவே வல்லவர்கள் பல்வேறு தகுதிகளைக் கூறுகிறார்கள்.
செவ்வியல் மொழி என்றும் சொல்லப்படுகின்ற – உயர்தனிச் செம்மொழியான – தமிழின் இனிய வருங்காலம் பற்றி எண்ணித் திட்டமிடுவது சரியான முறையாகும். உலக அளவிலும் இந்திய நாட்டின் அளவிலும் தமிழ்நாட்டின் அளவிலும் இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பல செயல்திட்டங்கள் உள்ளன.
பிரிட்டானியா, அமெரிக்கானா, காலியர் முதலிய கலைக் களஞ்சியங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவை கிரேக்கம், லத்தீன் என்ற இரண்டு மொழிகளை மட்டுமே உயர் தனிச் செம்மொழிகளாகக் கருதுகின்றன. இனி இத்தகைய உலகப் புகழ் கலைக் களஞ்சியங்களில் “தமிழ் – உயர் தனிச் செம்மொழி’ என்ற தலைப்பில் கட்டுரை இடம்பெறுமாறு செய்ய வேண்டும். தமிழ் ஆட்சிமொழியாக உள்ள இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் தமிழர்கள் வாழும் மலேசியா, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளிலும் தமிழை உயர் தனிச் செம்மொழியாக அறிவிக்கும்படி தூண்டப்பட வேண்டும். இதன் விளைவாக பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு மன்றம் (யுனெஸ்கோ) தமிழைச் செம்மொழியாக ஏற்றுக் கொள்ளும். அதன் வளர்ச்சிக்கு நிதி உதவி நல்கும்.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள தகுதியான பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை புதிதாகத் திறக்கப்படுவதற்கு ஆவன செய்ய வேண்டும். தமிழைக் கற்க விரும்பும் அயல்நாட்டு மாணவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.
இந்திய அரசு சமஸ்கிருதத்தைச் செம்மொழியாக ஏற்கெனவே ஏற்றுக் கொண்டுள்ளது. அது தமிழைச் சமஸ்கிருதத்திற்கு இணையாகக் கருத வேண்டும். 2004-ல், இந்திய அரசு சமஸ்கிருதத்திற்கு நேரடியாக நாற்பது கோடி ரூபாயும், அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் நூறு கோடி ரூபாயும் ஒதுக்கி, அம் மொழியின் வளர்ச்சிக்கு உதவியது. இந்நிலை தமிழுக்கும் அமைய வேண்டும்.
தற்போது மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ், செம்மொழித் தமிழ் உள்ளது. இது கல்வித் துறையின் கீழிருக்கும் நிலைமை உருவாக வேண்டும். அப்போதுதான், பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு, இந்தியப் பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைவதற்கு உதவ முடியும்.
சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்கள் என்று அறிஞர்களால் போற்றப்படுகின்றன. இந்த இலக்கியங்கள் நம் நாட்டின் முக்கிய மொழிகளில் பெயர்க்கப்பட வேண்டும். (இவை ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய உலக மொழிகளிலும் முழுமையாக மொழி பெயர்க்கப்பட வேண்டும்).
புனேயிலுள்ள முதுநிலைக் கல்வி ஆராய்ச்சிக் கல்லூரி, 60 தொகுதிகளைக் கொண்ட சமஸ்கிருத – ஆங்கில அகரமுதலி ஒன்றைத் தயாரிக்கும் பெரும்பணியில் ஈடுபட்டுள்ளது. இதேமுறையில் தமிழ்ப் பேரகராதி, பல துறைத் தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் போன்ற பார்வை நூல்கள் உருவாவதற்கும் இந்திய அரசு ஆதரவு புரிய வேண்டும்.
இந்தியப் பண்பாட்டுக்குத் தமிழ்ப் பண்பாடே அடித்தளம் என்பது அயல்நாட்டு அறிஞர்களின் கருத்து. இதுபற்றிய முறையான – முழுமையான – ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.
காஞ்சிபுரம் தமிழகத்தின் பண்பாட்டுத் தலைநகரம் எனலாம். காஞ்சிபுரத்திலும், பழைமை சான்ற மாமல்லபுரத்திலும், சங்ககாலத்திற்குரிய செங்கத்திலும், இத்தகைய பழைமை மிக்க ஊர்களிலும், அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அரிய கட்டடக் கலை – சிற்பக் கலை ஆகியவை பற்றியும் ஆராய்ச்சி நடைபெற வேண்டும்.
தமிழகத்தின் மையப் பகுதியில் மாபெரும் நூலகம் உருவாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் இதுவரை வெளிவந்த அத்தனை நூல்களும் திரட்டப்பட்டு, குறுந்தகடு வடிவில், அங்கு அவை பாதுகாக்கப்பட வேண்டும்.
கீழ்த்திசைச் சுவடி நூலகம், சரசுவதி மகால் நூலகம் முதலியவற்றிலுள்ள, அச்சு வடிவம் பெறாத தமிழ் நூல்களை அச்சிடல் வேண்டும். தமிழ்க் கலை, பண்பாடு ஆகியவற்றை உணர்த்தும் வகையில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். (சிங்கப்பூரில் இத்தகைய அருங்காட்சியகம் இருக்கிறது).
தமிழுடன் தொடர்புடைய சித்த மருத்துவமும் தமிழிசையும் தழைத்தோங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
மேற்சொன்னவற்றை நிறைவேற்றப் பெருமளவு நிதி தேவைப்படும். ஆனால் முறைப்படி திட்டமிட்டு, சரியான வழியில் படிப்படியாக, இவற்றைச் செய்து முடிக்க முடியும். இதனால் செவ்வியல் தமிழ் வருங்காலத்தில் இனிதோங்கும். அதன் வாழ்வும் சிறக்கும்!